சர்வேசன் கூப்பிட்டிருந்தார், அப்புறம்
தேவ் அண்ணா,
உஷா அக்கா எல்லாம் கூப்பிட்டாங்க. யாராச்சும் கூப்பிட மாட்டாங்களா, ஜூஸ் குடிச்சு உண்ணாவிரதத்தை (பதிவு போடா விரதத்தை) முடிச்சுக்க மாட்டோமா என்று காத்துக்கொண்டிருந்த நான், இதாண்டா சமயம்னு உள்ளே நுழைஞ்சுட்டேன்.
எட்டு சாதனைகளைப் போடணுமாமே..எதையெல்லாம் சாதனைன்னு சொல்லி அடிவாங்கறதுன்னு யோசிக்கும்போதுதான் கொத்ஸ் தெளிவுபடுத்தினார். சாதனையே வேண்டாமாம், ரேண்டம் ஃபேக்ட்ஸ் போதும் என்று.
எனவே, என் வாழ்வில், படிக்கச் சுவையான சில நிகழ்வுகளைச் சொல்கிறேன்.
1. ரயில் பயணங்களில் - வாழ்க்கையின் ஒரு வருடத்துக்கும் மேலாக (ஏறத்தாழ 500 இரவுகள்) ரயிலில் செலவழித்த பாக்கியவான் நான். டிக்கட் ரிஸர்வ் செய்வதற்கு எப்போதுமே அவகாசம் இல்லாமல், டி டி ஆரின் வால்பிடித்தே சென்று, ஹிந்தி தெலுங்கு கொஞ்சம் ஒரியா, பெங்காலி போஜ்புரி எல்லாம் கலந்து கெஞ்சிய அனுபவங்கள் ஏராளம்.
குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் ஒரு முறை கோரக்பூர் கொச்சின் எக்ஸ்பிரஸில் நாக்பூரிலிருந்து சென்னை திரும்புகையில் ராமகுண்டத்தில் வண்டி நிற்க, அடுத்த ட்ரேக்கில் ஜி டி எக்ஸ்பிரஸ்ஸைப் பார்த்தேன்.
கட்டினவனுக்கு ஒரு வீடு, கட்டாதவனுக்கு பல வீடு! இதிலும் பெர்த் இல்லை, அதிலும் பெர்த் இல்லை! ஆனால் ஜிடி சென்னையை விரைவாய் அடைந்து 2 மணிநேரம் மிச்சமாகும் என்று அவசர அவசரமாக மூடைகட்டி, ட்ரேக்கில் குதித்து ஓடி அசையத் தொடங்கிவிட்ட ஜிடியைப் பிடித்தபிறகுதான் தெரிந்தது, அது எதிர்த்திசையில் அசைவது :-)
2. இன்னொரு ரயில்பயணத்தின் போது, வண்டி கிளம்பியவுடன் 5 சிறுவர்கள் முகமூடி அணிந்து, வரிசையாக கம்பார்ட்மெண்டில் இருந்த அனைவரையும் துப்பாக்கி காட்டி மிரட்டி, ஆளுக்கு ஒரு அடிபோட்டு, இருப்பதையெல்லாம் கொள்ளை அடித்துக்கொண்டு சென்றது!
கையில் 5000 ரூபாய் இருந்தது - ஆனால், இப்படிப்பட்ட கொள்ளைகளை எதிர்பார்த்ததால் கால் சாக்ஸுக்கு அடியில் வைத்திருந்ததால், 100 ரூபாயும், கட்டியிருந்த வாட்சும் மட்டுமே பறிபோனது.
கொள்ளைக்காரர்களின் உளவியல் அணுகுமுறை என்னை ஆச்சர்யப்படவைத்த ஒன்று. வண்டிகிளம்பியவுடன் செயலில் இறங்கியது (பயணிகளுக்கிடையே நட்பு துளிர்க்க ஆரம்பிக்கும் முன்பே!), முதலில் அடி, பின்பு கொள்ளை என எதிர்ப்பை முளையிலேயே கிள்ளியது, சரியான இடம் வந்ததும் செயினைப்பிடித்து இழுத்து இறங்கி ஓடியது, ஓடும்முன் ஒரு ஒரு நாட்டு வெடிகுண்டை இருப்புப்பாதைக்கு அருகில் சிதறவிட்டு துரத்தாமல் செய்தது -- நல்ல ப்ளானிங் :-)
பிறகு ரயிலில் புலம்பத்தொடங்கியவர்கள் "நாம் ஒன்று சேர்ந்திருந்தால் அவர்களை கிழித்திருக்கலாம்" என்றது வெத்துக் கோஷமாகத்தான் பட்டது!
3. இது ஒரு மரணம் தொட்ட கணம்! இன்றளவும் இந்தக் கோ-இன்ஸிடன்ஸை என்னால் நம்பமுடியவில்லை! நல்ல மழைக்காலத்தில், தனியாக எஞ்சின் ஸ்டார்ட் ஆகாத லாரியைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தேன்.
கேபினில் வயர்களை எல்லாம் பிரித்துப்போட்டுவிட்டு, எஞ்சினின் பேனைத் தொட்டு, சுழற்றிப் பார்த்து, வேறு இடங்களையெல்லாம் செக் செய்துகொண்டிருந்தால் திடீரென எஞ்சின் ஸ்டார்ட் ஆனது. யாருமில்லாமல் எப்படி ஸ்டார்ட் ஆனது என்பது புரியாமல் வெளியே குதித்தேன். ஒரு மில்லி செகண்ட் முன்பாக ஸ்டார்ட் ஆகியிருந்தால் பேன் சுழற்சியோடு நானும் சுழன்றிருப்பேன்! (1000 HP எஞ்சின்!)
பிறகுதான் தெரிந்தது ஸ்டார்ட் ஆன ரகசியம் - மழைத்தண்ணீர் சொட்டி, வயர்களிடையே தொடர்பை ஏற்படுத்தி இருந்திருக்கிறது!
4. கலவரங்களைக் கண்முன்னே பார்த்ததும் என் மனதில் நீங்காத அனுபவம்.
கதையாக எழுதியதும் நான் நேரில் பார்த்ததுதான் என்றாலும், நினைத்தால் இன்றும் குலைசிலிர்க்கும் அனுபவம் இன்னொரு ரயில் பயணம்தான்.
கம்பெனியின் ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு சில உபகரணங்களை அவசரமாக எடுத்துச் செல்லவேண்டியிருந்தது. ரயில் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்தது. முழு கம்பார்ட்மெண்டில், நானும் டிடிஆரும் மட்டும்தான். டிடிஆரிடம் பேச்சுக்கொடுக்கும் அளவுக்கு இந்தி அப்போது கைவந்திருக்கவில்லை.
எதுவும் ஆகாமல் இறங்கி, அடுத்த கிளையின் நண்பர்களைச் சந்தித்ததும்தான் தெரிந்தது, எதுவும் ஆகாதது வெறும் அதிர்ஷ்டம் மட்டும்தான் என்பது.
ஏனென்றால், அன்றைய தேதி - டிசம்பர் 7! பாபர் மசூதி இடிக்கப்பட்ட மறுதினம். ரயில் சென்ற பாதை - ராஞ்சி - வாரணாசி - கலவரங்கள் உச்சகட்டத்தில் நடந்துகொண்டிருந்த இடங்கள்! இப்போதுதான் ரயிலின் அசாதாரண அமைதிக்கும், அங்கங்கே எரிந்துகொண்டு இருந்த குடிசைகளுக்கும், இரவில் ரயில் ஓட்டத்திலும் கேட்ட கூக்குரல்களுக்கும் அர்த்தம்!
5. இது இன்னொரு அனுபவம்! கடுமையாக வேலை செய்துவிட்டு, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, பணியிடத்திலிருந்து இருப்பிடத்துக்கு நடந்து கொண்டிருக்கையில், ஆற்றில் தண்ணீர் ஓடுவதைப்பார்த்தேன்.
நான் ஒரு தண்ணீர்ப்பைத்தியம். தாமோதர் ஆறு என்னை வாவா என்று அழைத்தது. உடனே உடைகளைக்களைந்து ஆசை தீரக் குளித்தேன். ஆசியாவிலேயே மிக அசுத்தமான ஆறு தாமோதர் என்பதைப் பிறகுதான் தெரிந்துகொண்டேன்.
சாப்பிட்டது முழுக்க வாந்தியெடுத்தேன், களைப்பின் உச்சத்தில் ரோட்டில் நிற்கையில் யார் லிப்ட் கொடுத்தார் என்பதுகூடத் தெரியாமல் இருப்பிடத்துக்குத் தனியாக வந்து விழுந்தேன்.. கண்கள் பஞ்சடைந்து, குரல்கொடுக்கக்கூட தெம்பில்லாமல் போனபிறகும் வாந்திவரும் அறிகுறி! யாரோ வந்தார், எப்படியோ தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரி சென்றவுடன் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது - நம்பினால் நம்புங்கள்! ரத்த அழுத்தம் 60/20!
தூக்கிக் கொண்டு சென்ற புண்ணியவான் அரை மணிநேரம் தாமதித்திருந்தால் - இதை எழுதியிருக்கமாட்டேன்!
ரொம்ப கிலி கிளப்பிவிட்டேன், இல்லையா? எனவே மிச்சம் மூன்றும் கொஞ்சம் சுயபிரதாபம்.
6. படிப்பில் கொஞ்சம் சுட்டியாகத்தான் இருந்தேன். மற்ற பெயர்பெற்ற பள்ளிக்கூடங்களில் இடம் கிடைக்காத ரிஜக்ட் கும்பலில்தான் நானும் இருந்தேன் என்றாலும், இந்தக்கும்பலிடையே அடுத்தவன் நெருங்கமுடியாத முதலிடத்தில் இருந்தேன். பொதுத் தேர்வில், என் போட்டி என் பள்ளியில் உள்ளவர்களிடையே இல்லாமல் என்னைச் சேர்க்கமறுத்த மற்ற பள்ளிகளின் முதலிடத்தோடுதான் இருந்தது, அதில் வெற்றியும் பெற்றது மனதுக்கு நிறைவாய் இருந்தது!
7. கணினி சம்மந்தமாய் எதுவுமே படித்திருக்கவில்லை, கல்லூரியி பேசிக் போர்ட்ரான், சார்லஸ் பேபேஜ் கதைகளைத் தவிர. இருந்தாலும், கணினி கையில் கிடைத்தவுடன் கேம்ஸ் ஆடித் தீர்த்தேன். கேம்ஸை ஐடியாவின் ஆரம்பப்புள்ளியாக வைத்து சில மென்பொருள்கள் (ரிவர்ஸ் எஞ்சினியரிங் செய்தே!) உருவாக்கி அவை பெற்ற ஆதரவும் அதனால் பெற்ற உற்சாகமும் அளவிடமுடியாதவை.
8. ட்ரெயினிங் வேலையில் பெற்ற அனுபவங்கள் சில சுலபமாய் யாருக்கும் வாய்க்காதவை.
நடுக்கடலில் ஹெலிகாப்டரில் சென்று, ஆயில் ரிக்கின் ஹெலிபேட்டில் இறங்க, ஒருகையில் லேப்டாப், மறுகையில் என் பை.. பிடிக்க எதுவும் இல்லாமல், வேகமாக அடிக்கும் காற்று இருபுறமும் தள்ள, விழுந்தால் 200 அடிக்குக்கீழ் கடல்! 20 அடிதான் நடக்கவேண்டியிருந்தது. ஆனால் அந்த 20 அடிதான் என்வாழ்க்கையின் மிக நீண்ட பயணம்!
நடுக்கடல் மட்டுமின்றி, பாலைவனத்தின் Sand Dunes நடுவில், பனிப்பாறை சூழ்ந்த இடத்துக்கு நடுவில், மற்றும் சாதாரணமான இடங்களில் என்று, போனவாரம்தான் 1000 நாட்கள் ட்ரெயினிங்கில் முடித்தேன்!
இப்போதைக்கு இவை போதும், பிற்கு 108, 1008 என்று வரும்போது மிச்சத்தை எழுதுகிறேன்.
இவர்களை அழைக்கிறேன் - இவர்கள் எட்டை இன்னும் பார்க்கவில்லை என்பதால்!
1. இராமநாதன்
2. குழலி
3. கைப்புள்ள
4. கானாபிரபா
5. ஆசீப் அண்ணாச்சி
6. குமரன்
7. மஞ்சூர் ராசா
8. யோசிப்பவர்
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்