சீட்டு மாளிகை
பரபரப்பான நாளாக இருக்கப்போவதற்கான எந்த அறிகுறியும் பொழுது விடியும்போது தெரியவில்லை. அதே அலாரம் சத்தம். அதே ஐந்து நிமிட வாய்தா. காபியின் முகத்தில் விடிந்த பொழுது. "இந்த பெட் காபி வழக்கத்தை என்னிக்குத்தான் விட்டொழிக்கப்போறீங்களோ" அவள் அடுக்களைக்குள் சென்றுவிட்டாள், குரல் மட்டும் இன்னும் இங்கேயே ரீங்காரம் அடிக்கிறது.
காபி குடித்துக்கொண்டே எழுந்து ஜன்னல் வழியாக நோட்டம் விட்டேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கார்களின் அணிவகுப்பு. சொல்லி வைத்தாற்போல எல்லாரும் ஒரே நேரத்தில் கார் எடுப்பார்களா? ராத்திரி ரவியை விமானத்தில் ஏற்றிவிட்டுத் திரும்ப 2 மணி நேரம் ஆனது. அவனே ஊர் போய்ச் சேர்ந்திருப்பான். எனக்கு இன்னும் தூக்கம்கூட கலையவில்லை.
டிவியைப்போட்டேன். தமிழ் மாலை உருண்டுவந்து நான் ஷேவ் செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டதை அறிவித்தது.
"எழுந்தவுடனே ஏன் இப்படி டிவிய அலறவிடறீங்க?"
"அது இருந்தாத்தாண்டி டைம் தெரியுது"
"ஆமா.. நேத்து டைம் பாத்து வாட்சை அட்ஜஸ்ட் பண்ணினேன். இன்னிக்கு அஞ்சு நிமிஷம் ஃபாஸ்டா இருக்கு. அந்த டைமே பொய்யின்னு நீங்களே சொன்னதில்ல?"
"இருந்தாலும் ஒரு ரெபர்ன்ஸுக்கு உழ்ஹஹ்ழஜ்ஹ்9அ" பல்குச்சி வாயுள்ளே குழப்பி நல்லவேளையாக விவாதத்தை ஆரம்பிக்கும் முன்பே நிறுத்தியது.
தலைப்புச் செய்திகள்.. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தொழில்முனைவர்கள் ஆர்வம்.. "ஆமாண்டா.. ஒரு மாசத்துல சொர்க்கமாக்கீட்டீங்க"
துபாயிலிருந்து மும்பைக்கு வந்த விமானம் நொறுங்கி 200 பேர் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.. ரேஸர் நழுவி கன்னத்தில் கீறல் விழுந்தது.
அவசரமாக ஹாலுக்குள் ஓடிவந்தேன்.
செய்தி ஒன்றும் தெளிவாக இல்லை. "இன்றுகாலை ஐந்து மணியளவில் மும்பை வந்து சேரவேண்டிய ஓமன் ஏர் விமானம், நடுக்கடலில் விழுந்துவிட்டது. அதில் பயணம் செய்த 200 இந்தியர்களும் உயிரிழந்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது." ரவி இதில்தான் பயணம் செய்தான்.
அதற்குள் அவளும் வந்தாள். "ரவி ஓமன் ஏர்லே போனாரா, எமிரேட்ஸிலே போனாரா?"
"ஓமன் ஏர்தான். நான் தானே நேத்து ஏத்திவிட்டேன்" என் குரல் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
"அப்போ அவரு" அவள் கண்ணில் அதற்குள் நீர்.
"தெரியலே. அவனுக்கு ஒரு போன் பண்ணிப்பாக்கிறேன்"
"இனாரா கமல் விபாக் அல்லதி.."என்றது ரெக்கார்டட் குரல். தொடர்பு எல்லையில் இல்லையாம். எனக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை.
"ஊருக்கு போன் செஞ்சு பாக்கறீங்களா?"
"பைத்தியமா உனக்கு? அவன் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு வீட்டுக்குக் கூட சொல்லாம கிளம்பியிருக்கான். அவன் வைஃபுக்கு அவன் வர்றதே தெரியாது. அவளுக்கு இன்னும் ரெண்டு நாள்லே டேட்டு. முழுசா விவரம் தெரியாம குழப்பவேணாம்" என்ன செய்யலாம்?
எக்ஸ்சேஞ்சை அழைத்து ஓமன் ஏர் நம்பர் வாங்கி போன் செய்தால் எங்கேஜ்டாகவே தொடர்ந்தது. பத்து இருபது முயற்சிகளுக்குப் பிறகு,
"ஓமன் ஏர் ரிஸர்வேஷன்ஸ்"
"ஹல்லோ, இன்றைய விபத்து உண்மையான செய்திதானா?"
"ஆம், செய்தி உண்மைதான். ஆனால் ஓரிருவர் பிழைத்திருக்கிறார்கள்"
"என் நண்பன் ஒருவன் பயணம் செய்தான், ரவி என்று பெயர்"
"மன்னிக்கவும். பிழைத்த இருவருமே கேபின் ஸ்டாஃப்"
"இப்போது என்ன நிலவரம்?"
"இது ரிஸர்வேஷன் அலுவலகம் மட்டும்தான். நீங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு.."
"அந்த எண் கிடைப்பதில் பிரச்சினை இருக்கிறது.. உங்களுக்குத் தெரிந்ததைக்கூறுங்களேன்.."
"ஸ்கேவஞ்சிங் குழு தயாராகிவிட்டது. அருகாமையிலிருந்த ஒரு கப்பலும் விபத்து ஸ்தலத்துக்குத் திருப்பப்பட்டுவிட்டது. அங்கிருந்து தகவல் வந்ததும் உறவினர்களுக்குத் தெரியப்படுத்துவோம்"
"என் பெயரை அவன் கொடுத்திருக்க மாட்டான். என் எண்ணுக்குத் தொடர்புகொண்டு சொல்ல முடியுமா?"
"நீங்கள் வாடிக்கையாளர் சேவைக்குத் தொடர்பு கொள்ளுங்களேன்"
"இப்போதே இன்னொரு இணைப்பில் முயற்சித்துக்கொண்டுதான் இருக்கிறேன், இதுவரை கிடைக்கவில்லை"
"அப்படியானால் நீங்கள் டெய்ராவில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு நேராகவாருங்கள்"
போனை வைத்துவிட்டுப்பார்த்தால் இவள் அழுது கொண்டு நிற்கிறாள். "பாஆவங்க.. இப்படி ஆயிருக்கவேணாம்"
எனக்கும் ரவிக்கும் துபாய் ஒரேநாளில்தான் அறிமுகமானது. எங்கள் இருவரின் பணியும் தொடர்புடையது என்பதால் அதற்கும் முன்னரே கூட அறிமுகம் இருந்தது. இங்கும் வெவ்வேறு அலுவலகங்கள் என்றாலும், வீடு அருகருகே என்பதாலும், மனைவிகள் நண்பிகள் ஆகிவிட்டதாலும், ஒரே வயதுக்குழந்தைகள் என்பதாலும் குடும்ப நட்பாக வலுப்பெற்றிருந்தது. இரண்டாவது குழந்தை பெற மனைவியும் முதல் குழந்தையுடன் முன்பே இந்தியா சென்றுவிட, இவன் வரமாட்டேன் என்று சொல்லி இருந்தவன் அலுவலகத்தில் யாருக்கோ சோப்புப்போட்டு லீவு பெற்றுக்கிளம்பினான். ஏன் கிளம்பினான்?
"துர்காவுக்கு சொல்லிடலாமா?"
"என்னன்னு சொல்லுவே? அவள் இருக்கிற நிலைமையிலே இப்போ எதுவும் சொல்ல வேணாம்"
"அவங்க அம்மா அப்பாகிட்டேயாவது?"
"அவங்க பால்பாயசம் வச்சுக்குடிப்பாங்க. என் சாபம் பலிச்சிடுச்சின்னு கும்மி அடிப்பாங்க"
ரவியுடையது காதல் திருமணம். பெரும் எதிர்ப்பில் நடந்தது. மூன்று ஆண்டுகள் ஆகியும் இரண்டாவது குழந்தை வரை வந்தும் கோபம் கொஞ்சமும் தணியாத கோபக்காரர்கள். இப்போதும் அவன் மனைவி பிரசவத்துக்காக நண்பர்கள் வீட்டில்தான் இருக்கிறாள்.
"நான் துர்காவோட அம்மா அப்பாவைச் சொல்லலீங்க. ரவியோட அம்மா அப்பாகிட்டே"
"அவங்க நம்பர் கூட என்கிட்டே கிடையாது."
"என்னதான் பண்றது?"
"ஓமன் ஏர் ஆபீஸுக்குப் போயிடலாம். விவரம் தெரிஞ்சவுடனே யோசிக்கலாம்"
யோசிப்பதைத் தள்ளிப்போட விரும்பினேன். தொண்டை அடைக்கும் துக்கத்தோடு, பழக்கமில்லாத சூழல், பொறுப்புக்குப் பழக்கப்படாமல் வளர்ந்துவிட்டிருந்தேன். கிளம்பும்போது தானும் வருவதாகச் சொன்னாள்.
"நீ வேற அங்கே எதுக்கு?"
"என் ஆபீஸிலெ லீவு சொல்லிக்கலாம். நீங்க டென்ஷன் பார்ட்டி, உங்களை இப்படி தனியா விடமாட்டேன்."
காரைக்கிளப்பி துபாய் செல்லும் ஜோதியில் ஐக்கியமாக்கினேன், என் அவசரம் தெரியாமல் ஊர்கிறது வண்டிகள்.
"துர்காவோட அப்பா அம்மாகிட்டே சொல்லியே ஆகணுங்க"
"..."
"என்னதான் கோபம் இருந்தாலும் இப்படிப்பட்ட சோகம் அதை இளக்கிடும். துர்காகிட்டே நீங்களோ நானோ நேரடியா சொல்ல முடியுமா? அவங்க கிட்டே சொன்னா பதமா சொல்லிடுவாங்க"
"..."
"அதுவும் தவிர குழந்தைகளை யார் பாத்துக்குவாங்க?"
"..."
"என்ன அமைதியா வரீங்க?"
"என்ன சொல்லச் சொல்றே? நீ அவங்களைப் பாத்தது இல்ல. என்னவோ ஊர் உலகத்தில இல்லாத பணம் அவங்ககிட்டதான் இருக்குன்ற நினப்பு அவங்களுக்கு. ரவி என்னவோ அவங்களைக்கொள்ளை அடிக்க வந்தவன்ற மாதிரிதான் பார்த்தாங்க."
"என்னதான் பண்னப்போறீங்க?"
"அப்பாவுக்கு போன் போடு" செல்லை எடுத்து அவள்கையில் திணித்தேன்.
"அப்பா, நான் தான்"
"சொல்லுப்பா"
"ஒரு முக்கியமான விஷயம்பா. அம்மாவும் நீயும் மெட்ராஸ் போகணும். முடியுமா?"
"நேத்துதானப்பா திரும்பி வந்தேன்.. என்ன விஷயம் சொல்லு"
"எங்க பக்கத்து பிளாட் துர்கா மெட்ராஸ்லேதான் இருக்கா. அவளுக்கு நாளைக்கு டெலிவரி ட்யூ. கொஞ்சம் அவ கூட அம்மா இருந்தா தேவலைன்னு பட்டுது"
"என்ன திடீர்னு? அவங்க பிரெண்ட்ஸ் இருக்காங்கன்னு சொன்னியே"
"இது வேற ஒரு மேட்டர்பா. எதாவது எதிர்பாராத நியூஸ் வந்துதுன்னா கொஞ்சம் தெரிஞ்சவங்க பக்கத்திலே இருக்கறது நல்லதுன்னு நெனைக்கிறேன்"
"என்ன நீ பேசறது புரியலியே"
"விவரமா மத்தியானம் பேசறேன். செல்லை எடுத்துகிட்டு போ."
கட் செய்து அவளிடம் கொடுத்தேன்.
"வயசான காலத்துலே அவங்களை ஏன் அலைக்கழிக்கறீங்க"
"எனக்கு வேற வழி தெரியல. அப்பா அம்மா அவ பக்கத்துலே இருந்தா கொஞ்சம் கம்பர்டபிளா நான் இருப்பேன்"
சாலை துளியும் கருணை காண்பிக்காமல் பிடிவாதமாக ஊர்ந்தது.
என் போன் மணியடித்தது, "யாருன்னு பாரு"
"அய்யோ.. துர்காதான்! தெரிஞ்சிட்டிருக்குமா?"
"தெரியலையே. இப்போ வேணா பேசாம கட் செஞ்சிடலாமா?"
"இல்லைங்க, பேசிடுங்க"
"ஏன் நீ பேசேன்"
"நான் அழுது காட்டிக்கொடுத்துடுவேன்.. வேணாம். நீங்களே பேசுங்க"
"சொல்லும்மா"
"அண்ணா எப்படி இருக்கீங்க? மஞ்சு நல்லா இருக்காளா?" இன்னும் அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
"நீ சொல்லு. என்ன திடீர்னு போன்? எல்லாம் நல்லபடியாத்தானே இருக்கு?"
"எல்லாம் நல்லாத்தான் இருக்கு. டாக்டர் இன்னிக்கு அட்மிட் ஆகச்சொல்லிட்டா. அவருக்கு போன் பண்ணா அவுட் ஆப் கவரேஜ் ஏரியான்னே வருது, எங்கே போயிட்டார்?" சொல்லிவிடலாமா? என்னால் இந்த உரையாடலைத் தொடர முடியாது.
"குழந்தை எப்படி இருக்கா?"பேச்சை மாற்றினேன்.
"அவளுக்கு என்ன குறைச்சல், எந்நேரமும் எஞ்சாய்தான்"
"சரிம்மா. எங்க அப்பா அம்மாவ அங்கே வரச்சொல்லியிருக்கேன்"
"எதுக்குண்ணா அவங்களுக்கு வீண் அலைச்சல். குழந்தை புறந்தவுடனே போன் செஞ்சு வந்தா போதாதா?"
"இதுலே என்ன அலைச்சல்? சரி நான் அப்புறம் போன் செய்றேன். ட்ரைவ் பண்ணிகிட்டிருக்கேன்"
"அவர்கிட்டே சொல்லிடுங்க"என்று அவள் சொன்னதை கேட்காதவன் போல கட் செய்தேன்.
"போறவன் போயிட்டான். இருக்கறவன் பாடுதான் கஷ்டம். இப்போ பாரு அவகிட்டே எதையும் சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம!"
"ரவி ஆபீஸுக்கு போட்டுப் பாக்கட்டுமா?"
"என்ன பிரயோஜனம், அவன் ஆபீஸ் அட்ரஸ் போன் நம்பர் எதையும் டிக்கட் புக் பண்ரப்ப கொடுத்திருக்கமாட்டான்."
ஓமன் ஏர் அலுவலகம் மக்களால் மொய்க்கப்பட்டிருந்தது. கார் பார்க்கிங்கிற்கு இடம் அப்புறம் தேடிக்கொள்ளலாம். "நீ வண்டியிலேயே இரு." என்று டபுள் பார்க் செய்துவிட்டு உள்ளே ஓடினேன்.கவலை தோய்ந்த முகங்கள். 200 பயணிகளின் விதி அறிய 500 பேராவது கூடியிருந்தார்கள். அழுகைச்சத்தம் இடக்கரடக்கி விசும்பல்களாய். ஒரு பிணம்கூட இல்லாத இந்தச்சூழலில் இழவு வீட்டைவிட அதிக மரணவாடை அடித்தது. யாரை என்ன கேட்பது என்றே புரியவில்லை.
நான்கைந்து பேர் கூடியிருந்த இடத்தில் மையமாக "எதாவது தெரிஞ்சதா?" என்றேன்.
"நாளைக்குள்ள மும்பைக்கு கப்பலை அனுப்பிடுவாங்களாம். அதுவரைக்கும் கிடைக்கிற பாடிங்களையும் சேத்து"
"பேர் எல்லாம் சொல்லிட்டாங்களா?"
"அதை ஸ்கேவஞ்சிங் டீம் சொல்ல முடியாதே.. யாரும் பொழைக்கல.. அவ்வளவுதான்"
"என் பிரண்டு சென்னைக்கு போகணும்னு இந்த பிளைட்ட பிடிச்சான், என்ன பண்ரதுன்னே புரியலே."
"யாராவது தெரிஞ்சவங்களை மும்பைக்கு வந்து அடையாளம் காட்டச்சொல்லுவாங்க"
என் மனைவியிடம் திரும்பி வந்தேன்.
"அக்கவுண்ட்லே எவ்வளோ காசு இருக்கும்?"
"ஒண்ணும் பெரிசா இருக்காது.. முந்தாநாள்தானே ரவிக்கு டிக்கட் வாங்க துடைச்சு எடுத்தீங்க?"
"சரி அப்போ க்ரெடிட் கார்டுதான் தேய்க்கணும். இன்னிக்கு நைட் நான் மும்பை போறேன்."
"எதுக்கு?"
"அங்க போயி பாடிய அடையாளம் காட்ட யாராவது வரணுமாம். யாரு வருவாங்க? நானே போறேன். இன்னிக்கு ஈவனிங் ஓமன் ஏர்லே"
"ஓமன் ஏர்லயா? வேணாங்க"
"இதுவரைக்கும் எந்த ப்ளைட்டுமே ரெண்டு நாள் அடுத்தடுத்து ஆக்ஸிடெண்ட் ஆனதில்ல. வேற வழி இல்ல"
வழக்கமான நேரத்தில் இதற்கு அரை மணி சண்டை பிடித்திருப்பாள். இப்போது அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை.
டிக்கெட்டை சண்டை பிடித்து வாங்கி வந்தேன். பலருக்கு இதே காரணத்தால் மும்பை செல்ல வேண்டி இருந்தது.
"நீங்க போன பிறகு இன்னும் ஒரு நாளஞ்சு முறை அவர் நம்பர் ட்ரை பண்ணேன். அதே அவுட் ஆப் ரீச்தான். சரி மும்பை போயிட்டு சென்னையும் போவீங்களா?"
"பின்னே?"
தொடர்ந்த அலைச்சல்களில் துக்கம் சற்றுத்தணிந்திருந்தது, சாயங்காலம் வரை நேரம் இருப்பதில் அதிகமாகி விட்டது. காலையில் இருந்து சாப்பிடாமல் இருப்பதும் நினைவுக்கு வந்தது. அலுவலகத்துக்குச் சென்று கொஞ்சம் பணம் கடன் வாங்க வேண்டும். எவன் தருவான்? சரி அது அடுத்த கவலை.
திரும்ப அதே ஊர்வலத்தில் கிளம்பி வீட்டுக்கு. பாதி தூரம் கடந்ததும் செல் மணியடித்தது. தெரியாத நம்பர்.
"யாரு?"
"மாப்பு, நான் தான் ரவி பேசறேன்"
அதிர்ச்சியில் அடித்த பிரேக்கிற்கு பின்னால் இருந்தவன் ஹாஆஆஆரன் அடித்தான்.
"என்னடா ஆச்சு?....."எனக்கு வார்த்தை வரவில்லை.
"நேத்து ஓமன் ஏர்லே டிக்கட் புக் பண்ணியிருந்தேனா, போயி போர்டிங் பாஸ் எடுக்கறப்போ டிக்கட் இன்வாலிட்னு வந்தது. புளுத்திங்க - அவசரமா டிக்கட் கேட்டதிலே நாளை மாத்தி புக் பண்ணியிருக்கானுங்க. செவெண்டீந்த் நைட்னு சொன்னேன். அவ எர்லி மார்னிங் பிளைட், எயிட்டீண்த்தானேன்னு கன்ப்யூஸ் பண்ணதிலே, இன்னிக்கு நைட்டுக்கு புக் பண்ணியிருக்கா! வீட்டுக்கு திரும்பி வர வழியிலே செல்போனை எவனோ லவட்டிட்டான்.. போலீஸ்கிட்டே கம்பிளெயின் பண்ணிட்டு ரூமுக்கு வந்து படுக்கவே நாலு மணி ஆயிடிச்சி. இப்பதான் எழுந்தேன். நேரமே சரியில்லடா"
"நாயே! எனக்கு வர வெறியிலே இப்போ நேரா வந்து உன்னைக் கொல்லப்போறேன்"
"ஏண்டா? எனக்குதானே பேட் டே?"
எனக்கு இப்போது உள்ள உணர்ச்சி நிம்மதியா, கலக்கமா, இல்லை அவன் பிழைத்ததில் ஏமாற்றமா எனச் சரியாகத் தெரியவில்லை.
_______________________________________
தேன்கூடு தமிழோவியம் ஜூலை மாதப்போட்டிக்கென எழுதியது.