Jun 29, 2006

அந்தக்காலம்.. சொர்க்கமா?

Nostalgia விற்கு நனவிடைத் தோய்தல் என்ற அழகான தமிழ்ப்பெயர் வைத்த புண்ணியவான் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.

நாம் அவ்வப்போது நனவிடைத் தோய்ந்தாலும், மற்றவர்களின் அந்தக்கால நினைவுகளைக் கேட்க நம்மில் பெரும்பாலோருக்கு பொறுமை இல்லை.

எனக்கு முதலில் இந்த "அந்தக்காலம்" என்பதை எப்படி வரையறை செய்கிறார்கள் என்பதே புரியவில்லை.

பொன்னியின் செல்வன் படித்திருப்பீர்கள், ஆதித்த கரிகாலனும், பார்த்திபேந்திர பல்லவனும் மாமல்லபுரக் கடற்கரையில் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள், தாத்தா மலையமான் கூத்துக்கேட்டுவிட்டு தாமதமாக வருகிறார். நண்பர்கள் உரையாடல் இப்படிப்போகிறது:

"எப்படித்தான் அவருக்கு உடம்பு தாங்குகிறதோ?"

"என்ன இருந்தாலும் அந்தக்கால உடம்பல்லவா"

இதைப்படித்து எனக்கு சிரிப்பு அடங்க பல நிமிடங்களாயின. ஆதித்த கரிகாலனே ஆயிரம் ஆண்டுக்கும் முன் வாழ்ந்தவன்.. அவனுக்கும் "அந்தக்கால உடம்பு" மேல் பொறாமை இருப்பது, இது நாம், இன்று மட்டும் சந்திக்கும் சூழல் இல்லை என உணர்த்தியது.

காலம் மாற மாற, அந்தக்காலமும், அது கொடுத்த நல்ல விஷயங்களும் மட்டுமே ஞாபகம் இருந்து, அந்தக்காலத்தின் தீமைகள் வசதியாக மறந்து போகின்றன. இளமைத் துள்ளலோடு படம் எடுக்கும் 60+ இயக்குநர்களின் படங்களில், நிஜமான இளைஞர்களின் படத்தைக்காட்டிலும் ஆபாசம் அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம். பஸ்ஸில் ஏறும் பெண்கள் இளைஞர்களை விட முன்னாள் இளைஞர்களுக்கே அதிகம் பயப்ப்டுவார்கள் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன்.

என் "அந்தக்காலம்" என்பது 1950 - 70 எனக்கொண்டால், அதைப்பற்றிய இனிப்பு தடவிய நினைவுகளே எனக்குப் புகட்டப்பட்டிருக்கிறது.

துக்ளக்கில் வெளிவரும் துர்வாசரின் புதிய தொடர் "அதனால என்ன பரவாயில்லை" - யாராவது படிக்கிறீர்களா?.

ரைட் ஹானரபிள் வாத்தியார்களும், பிரசவத்துக்குப் பத்தியம் பார்த்த மாமியார்களும், கண்டிப்பான மேலதிகாரிகளும் உலாவரும் தொடரில் அந்தக்காலத்தில் இருந்த சுத்தபத்தமான வாழ்க்கை முறை, மனிதநேயம், உயர்வான விழுமியங்கள் எதுவும் இந்தக்காலத்தில் இல்லாமல் போனது, அவசர உலகத்தின் பணத்துரத்தல்களில் பலியான நுன்னுணர்வுகள் எனப் பலவாறாகவும் கதை அடிக்கிறார். வாராவாரம் வெறுப்பேற்றுகிறார்..

அன்று அவ்வளவு அருமையாக இருந்த சமூகத்தை இன்று கெடுத்து வைத்திருப்பதில் என் பங்கு குற்ற உணர்ச்சியைத் தூண்டும் விதமாய் இருந்தாலும், அப்படிப்பட்ட நல்ல உலகத்தில் வாழ்ந்த நீங்கள், எங்களுக்கு ஏன் மோசமான உலகத்தை விட்டுச்சென்றீர்கள் என்பது போன்ற கேள்விகள் எழும், வயதிற்கு மரியாதையால் தடை செய்யப்பட்டு வெளிவராமல் போகும்.

அந்தக்காலத்தில் வாழ்ந்தவர்கள் எல்லாம் ரத்தமும் சதையும் ஆன மனிதர்கள்தானா? அல்லது கொள்கைக்காக கோபதாபங்களைத் துறந்து, எந்நேரமும் பெரியவர்கள் பேச்சைக்கேட்டு வாழ்ந்த முனிவர்களா? என்றெல்லாமும் சில நேரங்களில் கேள்வி எழும். எப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் இவர்கள் என்று அறிய ஆசைப்பட்டாலும், தெளிவாய் அறிய வழிகள் ஊடகங்கள் குறைவு காரணமாய் மிகக்குறைவே.

இயல்பாக அந்தக்கால வாழ்க்கையை, அதன் சுகதுக்கங்களோடு, உயர்வு தாழ்வுகளோடு பதிவு செய்த புத்தகங்களில் நான் படித்தவை மிகக்குறைவே.

அந்த வகையில் ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்"உம், "காகித மலர்கள்"உம் முக்கியமானவையாகத் தோன்றுகிறது.

எஞ்சினியரிங் கல்லூரிக்குள் நுழையும் காஸனோவாவை முக்கியக்கதாபாத்திரமாகக்கொண்ட "என் பெயர் ராமசேஷன்", தன்னிலை ஒருமையிலேயே நகர்கிறது. மாதம் நூறு ரூபாய் கையில் கிடைக்கும் என்ற ஒரே காரணத்துக்காக எஞ்சினியரிங் படிக்க ஒப்புக்கொண்ட ராமசேஷன், ராவுடன் அறையைப்பகிர்ந்துகொள்கிறான். ராவின் குடும்பம் ராமசேஷனின் ஆர்வங்களையும் உணர்ச்சிகளையும் தூண்டும் அளவுக்கு விசித்திரமானது.- "எதைப்பற்றியும் கவலைப்படாத" தங்கை, "கலை" ஆர்வம் கொண்ட தாய், பணம் கொட்டும் தந்தை, ஏறத்தாழ அடிமைபோல ஒரு தோழன்.. தன் குடும்பத்தில் உள்ள சம்பிரதாயமான போலித் தனங்களை உணர்ந்திருக்கும் ராமசேஷனுக்கு, இந்த அமைப்பு, புதிய போலித்தனங்களை அறிமுகப்படுத்துகிறது - புதிய அனுபவங்களையும் அவமானங்களையும் அளிக்கிறது. வேறு வேறு வட்டங்களில் சுழன்றாலும், கடைசியில் வரையறுக்கப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்புகிறான்.

"காகித மலர்கள்" இன்னும் அதிகமான கதாபாத்திரங்கள், முரண்பாடுகள் - ஸ்டெனோகிராபராக இருந்து சாம தான பேத தண்டங்களைப் பிரயோகித்து முன்னேறிய உணவுத்துறை செயலாளர், அவருடைய "நவீனயுக" மனைவி, விஸ்கான்சின் பல்கலையில் Ecology ஆராய்ச்சி செய்யும் ஒரு மகன், எல்லாக்கட்டுகளையும் உடைக்கத்துடிக்கும் இன்னொரு மகன், தன்னம்பிக்கை குறைவான மூன்றாம் மகன், அவர்கள் காதலிகள், நண்பர்கள் -- எல்லோரின் வாழ்க்கையிலும் சில சம்பவங்களைத் தொட்டுச் செல்கிறது.

இரண்டு புத்தகங்களுக்குமே இந்தச் சுருக்கம் அநியாயமானதுதான். ஆனால், முழுக்கப்படித்தால்தான் ரசித்து அனுபவிக்க முடியும் என்பதால், எந்தச் சுருக்கமும் அநியாயமாகத்தான் முடியும்.

நான் கொஞ்சம் வேகமாகக் கதை படிப்பவன். உரையாடல்களே மூன்று பக்கத்துக்கு இல்லாமல் கதை நகர்ந்தால், அந்த மூன்று பக்கத்தையும் விட்டுவிட்டு நான்காவது பக்கத்துக்கு நேரடியாகத் திருப்பிவிடுவேன். இந்தக்கதையை அப்படிப்படித்திருந்தால் நான்கைந்து பக்கங்களுக்கு மேல் வாசித்திருக்க முடியாது. என் போன்ற பொறுமையற்ற வாசகனையே முழுமையாகப்படிக்க வைக்கும் அளவிற்கு இயல்பான எழுத்துநடை ஆதவனுடையது.

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அப்போதைய சிந்தனையை முழுமையாகப் பதிவு செய்வதில் வெற்றி அடைந்திருக்கிறார் ஆதவன். . எல்லா கதாபாத்திரங்களின் உண்மை எண்ணங்களையும் போட்டுக்கொள்ளும் முகமூடிகளையும், அணியும் வேஷங்களையும், split-personalityகளையும் அபாரமாக எழுத்தில் வடித்திருக்கிறார். ஒரு தொண்டைக் கனைப்புக்குப் பின்னால் கூட "நான் ஒரு பெரிய விஷயம் சொல்லப்போகிறேன், கேட்கத் தயாராகுங்கள்" என்ற குறியீடு அடங்கியிருப்பதாகச் சொல்லும் அளவிற்கு சில இடங்களில் அதீதமாய்ப் போனாலும், சுவாரஸ்யம் குறைவதில்லை.

பெரும்பாலும் ஆதவன் கதைகள் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக எழுதப்பட்டவை எனச் சொல்லப்பட்டுக் கேள்விப்பட்டிருக்கிறேன். "அந்தக்காலத்தை" தாண்டி விட்டதாலோ என்னவோ எனக்கு எந்த அதிர்ச்சியையும் இந்தப்பாத்திரங்களும் கதையும் அளித்துவிடவில்லை. வெளிவந்த நேரத்தில் இருந்த சமூகத்துக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். தங்கள் குறைகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுக்கும் வாசகர்களும் இந்தக்கதைகளில் தங்களை அடையாளம் கண்டுகொள்வதாலும், அவை வெளிப்படுதல் விரும்பாத காரணத்தாலும் இக்கதைகள் வெகுஜன அங்கீகரத்தை இழந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

என்ன சொன்னாலும், நான் படித்த புத்தகங்களில் சிறந்தவையாக இந்த இரண்டையும் வகைப்படுத்துவதிலும், பரிந்துரைப்பதிலும் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

நன்றி - தமிழோவியம்

கொஞ்ச நாளா எதுவும் எழுத மேட்டர் இல்லாத காரணத்தால் மீள்பதிவு:-)

Jun 26, 2006

ஆறாத ஆறு

எனக்கு இந்த பட்டியல் போடுவது பிடித்த விஷயமில்லை. இருந்தாலும் சிலர் அழைத்துவிட்டார்களே (தற்செயலாக அண்மைப்பின்னூட்டப் பதிவுகளிலிருந்து எடுத்த கப்பி பய உள்பட இதுவரை நாலைந்து பேர் ஆகிவிட்டது.); சங்கிலித் தொடரை அறுத்த பாவம் என்னை வந்து சேரக்கூடாதே என்று இந்த ஆறுப்பதிவை வலையுலகுக்குச் சமர்ப்பிக்கிறேன். யாருக்கும் பிடிக்க முடியாத ஆறு வரைவதே நோக்கம் என்றாலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் தப்பித் தவறி யாருக்காவது பிடித்திருந்தால் சண்டைக்கு வரவேண்டாம்.

நான் புழங்கிய, புழங்கும் இடங்களில் எனக்குப் பிடிக்காத ஆறை எழுதியிருக்கிறேன். இவை தவிர அத்தனையும் எனக்குப் பிடித்ததே என்பதால் தவிர்த்திருக்கிறேன்.

சென்னையில் பிடிக்காத ஆறு:

1. சென்னைக்கு இகழ் சேர்க்கும் கூவத்தின் மணம்
2. மழைக்காலத்தில் ஈருருளி எங்கே உருளும் எனச்சொல்லமுடியாத பாதைகள்
3. எட்டு மணிக்கு மூடப்போகும் ரயில்வே கவுண்டரில் நிற்கும் 100 பேர் வரிசை.
4. எண்ணூர் தாண்டியவுடன் ரயிலிலிருந்து தென்படும் காலைக்கடன் கழிப்பாளர்கள்
5. ஆளைப்பார்த்து ஐம்பதா ஐந்நூறா என முடிவு செய்யும் ஆட்டோ அன்பர்கள்
6. அடுத்தவனைத் திட்டியே நம்மை பயமுறுத்தும் பர்மா பஜார் வியாபாரிகள்

பீஹாரில் பிடிக்காத ஆறு
1. கூவத்துக்கு மாசில் சற்றும் குறையாத தாமோதர்
2. தலைக்குமேலே நிலக்கரிச்சாம்பலைக்கொட்டும் அனல்மின் நிலையங்கள்
3. கோடையில் தூசு, மழையில் சேறு என்று எப்போதும் வெள்ளை உடைக்குப் பகையான சாலைகள்
4. துளியும் விவரமறியாதவனை சிரித்துப்பேசியே ஆக்கிரமிக்கும் படித்தவர்கள்
5. ராமநவமி - பக்ரீத் என்று மத வேறுபாடின்றி நடக்கும் கலவரங்கள்
6. பாராட்ட, திட்ட எல்லாவற்றுக்குமே ஜாதி பார்க்கும் சிந்தனையாளர்கள்.


அமீரகத்தில் பிடிக்காத ஆறு:

1. வாழ்க்கை முறையாகவே மாறிவிட்ட சாலை நெரிசல்
2. பத்துநாள் முன் உண்டதையும் வாந்தியெடுக்க வைக்கவல்ல குப்பைத் தொட்டி மணம்
3. உரிமம் வாங்கும்வரை கண்டிப்பு, அதற்குப்பிறகு எப்படியும் ஓட்டலாம் என்ற விசித்திர சிந்தனையுடன் நடத்தப்படும் ஓட்டுநர் உரிமத் தேர்வுகள்
4. சுத்தம் செய்த ஐந்தாம் நிமிடம் தெருவின் நடுவில் நூற்றுக்கணக்கான சிகரெட் பில்டர்கள்
5. யாருக்குமே நல்ல சகுனம் அமையவிடாமல் சுற்றும் தெருப்பூனைகள்
6. நாளொரு மேனியும் பொழுதொர்ரு வண்ணமுமாய் வளரும் வீட்டுவாடகை - ரியல் எஸ்டேட் தொந்தரவுகள்..


வலைப்பதிவுலகில் பிடிக்காத ஆறு:

1. விவாதத்தை திசைதிருப்பும் என்று தெரிந்தே போடப்படும் பின்னூட்டங்கள்
2. அடுத்தவர் வழிமுறைகளை ஏளனம் செய்யவென்றே இடப்படும் பதிவுகள்
3. "அன்று நீ இதைச்சொன்னாயே" என்று Historicalஆக செய்யப்ப்டும் விமர்சனங்கள்
4. போலி செய்ததும் சரி என்று வாதிடும் வழக்கறிஞர்கள்
5. முன்முடிவோடு எடுக்கப்படும் தீர்மானங்கள், கட்டம் கட்டல்கள்
6. குழுவுக்கும் தனிநபருக்கும் வைக்கப்படும் இரட்டை அளவுகோல்கள்

அடுத்து நான் அழைப்பது?

எல்லாரும் ஏற்கனவே அழைக்கப்பட்டுவிட்டனர். தாமதமாக அழைக்கப்பட்டவர்கள் தங்கள் ஆறு பேரை எங்கே தேடுவார்கள் என்ற கவலையும் இருக்கிறது. எனவே, யாரேனும் விடப்பட்டிருந்தால் இதைத் திறந்த அழைப்பாக எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Jun 21, 2006

வளர் சிதை மாற்றம் - ஆக்கங்கள் அறிமுகம் -Thenkoodu June Contest

ஜூன் மாதப் போட்டி சூடு பிடித்துவிட்டது என்றெல்லாம் சொன்னால் அது நிச்சயம் Understatementதான். 34 படைப்புகள், பழகிய, புதிய எழுத்தாளர்கள், கதைகள், கவிதைகள்,அனுபவங்கள், கட்டுரைகள் என படைப்பிலக்கியத்தின் எல்லாக்கூறுகளில் இருந்தும் ஆக்கங்கள் கொட்டியதில் எனக்கு தனிப்பட்ட முறையில் பற்பல உணர்ச்சிகள்!

போட்டியில் பங்குகொள்ளவேண்டாம் என்று எடுத்திருந்த முடிவை பல முறை மறுபரிசீலனை செய்யவேண்டியிருந்தது. The temptation was irresistable. அதே நேரத்தில், இப்படிப்பட்ட படைப்புகளுக்கு நடுவில் உன் பினாத்தலுக்கு என்ன மரியாதை கிடைத்துவிடும் என்ற பயமும். போட்டியின் தலைப்பைக் கொடுத்தவன் என்ற முறையில் அனைத்துப் படைப்புகளும் ஏதோ ஒருவகையில் எனக்குச் சொந்தமானவை என்ற ஒரு உணர்வும் அடித்தளத்தில்..

போட்டி பலம்தான். என் கணிப்பில் முதல் பத்து இடங்களைப் பிடிக்கும் படைப்புகளுக்கு இடையே 5% இடைவெளி கூட இருக்காது என்றே நம்புகிறேன். என் தேர்வுகளைக் கண்டுபிடிக்க எனக்கு மூன்று நாள் பிடித்தது.

எல்லாப்படைப்புகளையும் பற்றி ஒரு சிறு அறிமுகம் மற்றும் எனக்குப் பிடித்த வரிகளை இந்த இடுகையில் இடுகிறேன், முடிவெடுத்தலில் உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்.


1.ஓ போட்டு ஆரம்பித்து வைத்தார்
சுதர்சன்.கோபால்.அடிப்பம்பில் தண்ணியடிக்கக் கஷ்டப்படும் போது "ஐயோ..பாவம்" என்று ஒரு குடம் அடித்துக் கொடுத்தவனும்,வழக்கமாய்ச் செல்லும் பேருந்தில் சில்லறையின்றித் தவிக்கும் போது "உங்களுக்கும் சேர்த்து டிக்கட் வாங்கிட்டேன்" என்று உதவிக்குரல் கொடுத்தவளும் அதைக் காதல் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளுவதுண்டு..


காமம் என்பதன் இடக்கரடக்கல்தான் காதல் என்பதை அவர் உணர்ந்த அனுபவங்களைக் கதை போல சொல்லி இருக்கிறார். வாதத்திறத்தோடு அடலசண்ட் காதல்கள் அம்பேல் ஆவதின் ரகசியங்களைப் புட்டுப்புட்டு வைக்கிறார். ஆமாம், யாரு சார் அந்த அனிதா?

படிக்க வாக்களிக்க

2.
வவ்வால் கவிதை எழுதறார்..முகம் தேவை இல்லை உணர
மூச்சுக் காற்றே போதும்
உன் வரவை எனக்கு சொல்ல!

கவிஞனானதையே வளர் சிதை மாற்றமாக கவிதையாய் வடித்திருக்கிறார் வவ்வால். வார்த்தைப் பிரயோகங்கள் வலிமையாகவும் அதே நேரத்தில் எளிமையாகவும்.


படிக்க வாக்களிக்க

3.
குலவுசனப்பிரியன் தன் அனுபவங்களை எழுதறார்..

ஆனால் பிராயச்சித்தம் செய்யமுடியாத சில விசயங்கள் இன்னும் உருத்திக்கிட்டே இருக்கு

பின்னாடி ஒரு பைசா சம்பாதிக்க பாடாதபாடுபடுறப்ப உரெச்சி என்ன பிரயோசனம்.

செய்த தவறுகளைப் பட்டியலிட்டு, பிராயச்சித்தத்துக்கு ஆன தாமதம் நம்மையும் உறுத்தும் அளவிற்கு வட்டார நடையில் இயல்பாக..

படிக்க வாக்களிக்க

4. வளர் இளமைக்காலம் - சிதைவு என்ற எதிர்மறை வார்த்தையை ஒதுக்கி மாற்றம் ஏற்படுத்தும் மாற்றங்களை அலசி இருக்கிறார்
பச்சோந்தி.ஆக்ரோஷம், வன்முறை அதிகம் கொண்டவர்களா அல்லது அஹிம்சை, மெளனம் அதிகம் கொண்டவர்களா என்று தம்மை உலகிற்கு அறிவிக்கவும் இம்மாற்றம் மனிதர்களுக்கு உதவுகிறது.


விடலைப்பருவம் விடைபெறும் தருணத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் எப்படி வாழ்க்கையையே புரட்டிவிடக்கூடியவை, எதிர்மறை நிகழ்வுகளைத் தவிர்க்கச் செய்ய வேண்டியவை பற்றிய ஆலோசனைகள் - முதிர்ந்த சிந்தனையுடன்..


படிக்க வாக்களிக்க


5.
மோகன் தாஸ் முற்றுப்புள்ளியில் தொடங்கிக் கதை எழுதியிருக்கிறார். முதலிரவன்று யோக்கியமான கணவனும், விடலைத் தவறுகள் செய்த மனைவியும் சந்தித்தால்இப்படி நடக்குறது கொஞ்சம் கஷ்டமாயிருந்தாலும் இது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறதுதாண்டா, அந்த வயசில நடக்கலைன்னா தான் தப்பு


எளிமையான நடையில் கதை சொல்கிறார், அளவான பாத்திரங்கள், இயல்பான உரையாடல்கள்.


படிக்க வாக்களிக்க


6. பதின்ம வயதின் ஆரம்பங்களில் இருந்த சிக்கலில்லாத வாழ்க்கையையும், விடலைப்பருவத்தின் வலி உண்டாக்கும் முடிவெடுக்கவேண்டிய தருணங்களையும் அலசி இருக்கிறார்
ஐகாரஸ் பிரகாஷ் - தன் வழக்கமான
நகைச்சுவையோடு.பதின்ம வயதில் தோன்றும் எதிர்பாலர் மீதான இனம்புரியா கவர்ச்சியை, கவிஞர்கள், தேனில் குளிப்பாட்டிய, மலர்கள் தூவிய வார்த்தைகளால், காதல் என்றும், அறிவியல் படித்தவர்கள், ஹார்மோன்களின் சிலுமிஷம் என்றும், அறிவியல் படித்திருந்தாலும், பெற்றோராக வாய்க்கப்பட்டவர்கள், 'தொடப்பக்கட்டை' என்றும் வர்ணிப்பார்கள்.


போட்டித் தலைப்பு யாருக்கு செலவு வைத்ததோ தெரியாது, ஐகாரஸ் பிரகாஷுக்கு இரண்டு போத்தல் பியர் நிச்சயம் செலவு:-)

படிக்க வாக்களிக்க

7. பெரிய ஆள் ஆயிட்டோம்னு அப்பப்ப தோணினாலும், அது என்ன நிஜமாவே அவசியம்தானான்னு கேக்குறாரு
கொங்கு ராசா.'அது ஒரு அழகிய நிலாக்காலம்' னு எல்லாம் என்னால வானத்தை பார்த்துட்டு பாட முடியாதுங்க.. கூடவே வச்சுகிட்டு வாழ்ந்திடறதுன்னு பார்க்கிறேன் so, NO bye-bye adolescence .. i dont want to cross it.. :).


பகலிலே பிகர்கள் பாராமல், இருட்டிலே கண்ணடித்து என்ன பயன்னு கேக்குறாரு, நகைச்சுவையா, தனக்கே உரிய வட்டார வழக்கிலே!

படிக்க வாக்களிக்க

8. குஜால் புஸ்தகத்தை மறைக்க வழி தெரியாம மாட்டிக்கிட்டவன் கதையைச் சொல்றாரு
நெல்லை சிவா .அதெல்லாம் கூடாதுன்னு சொல்ல வரலை, ஆனா, உன்னுடைய எதிர்காலக் கனவ நினைச்சி, இதயெல்லாம் தள்ளிப்போடு. 'உத்தியோகம்தான் புருஷ லட்
சணம்', அது நல்ல அமைஞ்சாதான், மற்ற உன் கனவெல்லாம் நனவாகும்.

நியூக்கிளியர் வேஸ்ட் போல புஸ்தகத்தை எங்கே வைக்கிறது, எப்படி வைக்கிறதுன்னு தெரியாம கஷ்டப்பட்டவங்க அத்தனை பேருக்கும் கொசுவத்திய சுழல விட்டிருக்காரு.

படிக்க வாக்களிக்க


9. இரண்டு ஸ்க்ரோலுக்குள் நூறு ஆண்டுக் கதை சொல்லியிருக்கார்
ராமச்சந்திரன் உஷா . பெண்ணின் மாற்றத்தைப்பற்றி அதிக பயம் அந்தப்பெண்ணைவிட தாய்க்குதான் அதிகம் என்பதால் தாயின் பார்வையில் சொல்லி இருக்கிறார்.


1."காலம் மாறிண்டு இருக்குன்னு சொல்லத்தான் சொல்லரா. ஆனா, கல்யாணம் ஆறதுக்குள்ள பொண்ணு தெரண்டுட்டா?"
2. "நாளைக்கு கட்டிக் கொடுக்க வேண்டிய பொண்ணு, கண்ட பொஸ்தகத்த வாசிக்கிறதும்"
3."ஒரு வயசுக்கு மேலே ஆம்பளைங்களும். பொட்ட பசங்களும் சேர்ந்து படிச்சா நல்லாவா இருக்கும்?"
4. "நான் கூட அந்த காலத்துல கோ எட்ல படிச்சேன். பாய்ஸ்கூட பேசவே மாட்டோம்."
5."எக்கேடோ கெட்டுப் போகட்டும். ஆனால் படிப்பைவிடாதே"

கவலைப்படும் விஷய்ங்கள் மாறினாலும் தாயின் கவலை மட்டும் மாறுவதில்லை என்கிறார். பேச்சு, எண்ணங்கள் எல்லாவற்றிலும் காலத்துக்கேற்ற வித்தியாசத்தை திறம்பட காட்டியிருக்கிறார்.

படிக்க வாக்களிக்க


10. நிலா நிழல் வாசனையுடன், கிரிக்கெட், பேச்சுப்போட்டி என்று தமிழ் வாத்தியார் பெண்ணை இம்ப்ரஸ் செய்ய விரும்பும் விடலையின் பழைய டயரியை எடுக்கிறார்
டுபுக்கு.


அவ மட்டும் என்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டால் பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டிக்கொண்டிருக்கிறேன். உனக்கு கல்யாணம் ஆகலங்கிற வருத்ததில என்னோட மேட்டர கவுத்திராத பிள்ளையாரப்பா!

விடலைக்காதல் வளர்ச்சியை நாட்குறிப்பில் அழகாக வடித்திருக்கிறார். கதை கவிதை என்று இன்று எழுதிக்கொண்டிருப்பதற்கு தமிழ் வாத்தியாரா காரணம்??

படிக்க வாக்களிக்க


11. என்று இந்த விடலைப்பருவம் என்னை விட்டு விலகியது என சந்தக்கவிதை படைத்திருக்கிறார்
SK.


எதுவென்று எண்ணி எண்ணி புரியாமல் நிற்கையிலே
பட்டென்று பொறியில் தட்டியது ஒரு நினைவு!
பெற்றவளின் அருகமர்ந்து அவள் மடியில் தலை சாய்த்து
அவள் கையை வருடியபடி 'அவளைப்' பற்றி சொன்ன நாள்!


என்று ஒரு முடிவுக்கும் வந்திருக்கிறார். சந்தங்கள் அழகாக அமைந்த இனிமையான கவிதை.

படிக்க வாக்களிக்க

12. விடலைப்பருவத்து நிகழ்வுகளை மீண்டும் யோசித்துப் பதிந்திருக்கிறார்
லக்கிலுக்.


வாழ்க்கையைப் பற்றிய பயம் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கியிருந்தது... எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து சிந்தித்தே கொஞ்சம் முடி கொட்டியது....


இமேஜ் பற்றிக்கவலைப்படாத நேரமையான நோஸ்டால்ஜியா.படிக்க வாக்களிக்க13. எதுகைகளும் மோனையும் கைகொடுக்க, ரசாயன மாற்றம் நடந்த நாளைப்பற்றி யோசித்திருக்கிறார் கோவிகண்ணன், எஸ்கேவுக்கு பின்னூட்டமாகத் தொடங்கி, போட்டிக்கு ஆக்கம் அனுப்பியிருக்கிறார்.கிளர்ந்துவிட்ட என் குறும்பால், பொறுக்காமல்,
வளர்ந்துவிட்ட என்னை ஒருநாள் கைநீட்டியதற்கு,
தளர்ந்துவிட்ட என்தந்தை மனம்நொந்த வேளையில்
உளர்ந்துவிட்ட என்னுள் நிகழ்ந்தது மாற்றம்.
மாற்றம் ஏற்படுத்திய சம்பவங்களை, காதுக்கு இனிய சந்தங்களால் விவரித்திருக்கிறார்.படிக்க வாக்களிக்க14. "போலீஸ் புள்ள பொறுக்கி"ன்னு கதை சொல்லி இருக்காரு இளவஞ்சி.

அடி வாங்கறது பெரிசில்லை! வாங்கற ஒவ்வொரு அடிக்கும் அர்த்தம் இருக்கனும். அப்பத்தான் அதை நாளைக்கு நீங்க நல்ல நெலமைக்கு வந்தா நெனைச்சுப் பெருமைப்பட்டுக்க முடியும்... இல்லைன்னா அது என்னைக்கும் உறுத்திக்கிட்டே இருக்கும்.விடலைப்பருவக் குற்றங்களையும், அவற்றைத் திருத்த Bigger Picture-ஐக்காட்டும் தந்தையின் சக ஊழியரின் அறிவுரை மட்டுமில்லாமல் இளவஞ்சி டச் உள்ள டயலாக்குகளுடன்..படிக்க வாக்களிக்க

15. மாறுதல்களைத் தடுத்துவிடவா முடியும்? அசை போடத்தான் முடியும் என்கிறார் நாமக்கல் சிபி

மனதில்
அசை போட்டபடியே
நிகழ் காலம்
அனுபவிப்போம்!

வாழ்க்கை
கொஞ்சங் கொஞ்சமாய்
நகரத்தான்
வேண்டும்!


நகரத்தான் வேண்டும் - நினைவுகளை மட்டும் சுமப்போம் என எளிய கவிதையில் சொல்கிறார்.

படிக்க வாக்களிக்க

16. காதலின் ஆரம்ப அம்சங்கள் தென்படத் தொடங்கிவிட்டவனை எல்லாரும் "பொடிப்பையா" என்று அழைத்தால்?
ஆசாத் அவன் உணர்வுகளைக் கதையாக வடித்திருக்கிறார்.


ஏதாவது பாட்டுப்போட்டிக்காக பட்டறையின் ஓரத்தில் நஃபீஸாவை உட்காரவைத்து, 'சாவன் கா மஹீனா, பவனு கரே சோரு' என்றல்லாம் பாடவே முடியாதா? ஏதாவது ஒரு ஃபரிஷ்தா (தேவதை) வந்து தன்னைப் பெரியவனாக்கி விடாதா?

பொடிப்பையன் பட்டத்தை அவளே சொன்னபோது ஏற்படுகிறது அவன் வளர்சிதை மாற்றம் என்பதை எளிமையான அழகான நடையில் கதை சொல்கிறார்.

படிக்க வாக்களிக்க

17. நாவல் படித்தால் மட்டும் அறிவு வந்துவிடுமா என்று கதையாகக் கேட்கிறார்
நிலா .


'பாவம் அம்மா, எனக்கு ஒரு கஷ்டம்னா எப்படி தவிச்சுப்போறாங்க! அவங்க எனக்கு நல்லதைத்தானே நினைப்பாங்க! அவங்க சொல்றபடி கேட்டா என்ன தப்பு?'

என்று மனம் மாறுவதற்கான காரணங்களை எளிய சம்பவங்கள் மூலம் கூறுகிறார். பின்னூட்டத்துல சண்டையும் மறக்காம படிங்க:-)

படிக்க வாக்களிக்க

18. அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையே வளர் சிதை மாற்றத்தால் ஏற்படும் உறவு மாறுபாடுகளை எழுதியிருக்கிறார்
பொன்ஸ்.


"உனக்கு ஒண்ணும் ஆகாதாம்.. சித்ரா சொல்றா எல்லாம் கேர்ல்ஸுக்குத் தான்னு.. உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லையாம்"

என்று பேசிக்கொண்டிருந்த தங்கை"போடா, என்னதான் அண்ணனா இருந்தாலும் நீ ஆம்பிளை தானே.. எப்படி சொல்றது.. வெட்கமா இருக்காது?"

என்று மாறிய மாற்றத்தை எழுத்தில் வடித்திருக்கிறார் - இயல்பான உரையாடல்களோடு.

படிக்க வாக்களிக்க

19. கூடப்பழகிய, நட்பு, பாசம் எல்லாம் காட்டிய ஒருவரைத் தீவைத்ததாகக் கருதப்படும் கணவரிடம் நேசத்துடன் பழக முடியுமா? விடலையைத் தொலைத்தால் முடியும் என்கிறார்
வெளிகண்டநாதர்.


'சரி விடுங்க பாவா, அக்காதான் பைத்தியக்காரத்தனமா செஞ்சுக்கிச்சு' என்று அவரிடம் சொல்லாமல் சொல்லுவதை போல நினைத்து, "பாவா, இந்த காப்பியாவது சாப்பிடுங்க, ரெண்டு நாளா நீங்க வாயே நனைக்கலே"

சம்பவங்களின் தொகுப்பாக வேகமாகக் கதையை நகர்த்திச் செல்கிறார்.

படிக்க வாக்களிக்க

20. சாங்கோ பாங்கமாக தன் தற்கொலை முயற்சியை முழுப்பின்னணியுடன் விளக்குகிறார்
சுரேஷ் கண்ணன்.


எந்த வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உன்னை வளர்த்தவர்களை ஒரு கணமேனும் சிரிக்கச் செய்; நிம்மதி அடையச் செய். காதல் என்பதெல்லாம் அந்த நேர அபத்தம்தான்.


என்பது போன்ற உபதேசங்களும் உண்டு

அவள் இயல்பாக கேட்ட சில நிமிட உரையாடலைக்கூட "மச்சி! ஒரு மணி நேரம் பேசினதுல டைம் போனதே தெரியலைடா" என்று நண்பர்களிடம் அளக்க ஆரம்பித்தேன்

என்பது போன்ற நகைச்சுவையும் உண்டு.

படிக்க வாக்களிக்க

21. ஆண்களுக்கு மட்டும்தான் விடலைக்காதல் இருக்கலாமா? பெண்களுக்கு இருக்கக்கூடாதான்னு கேக்கறாங்க
பொன்.சிதம்பரகுமாரி.


அது வரைக்கும் லூசா தெரிஞ்ச பையன், ஒரு புது வெளிச்சதுல,சகலகலா வல்லவன் கமல் மாதிரி மோட்டர் பைக்கை அனாயசமா என் மனசுக்குள்ள ஓட்டிட்டு வந்துட்டான்.

குமரி பிரமோஷன் கிடைச்சபிறகு அழகுச்சாதனங்கள் உபயோகப்படுத்தறதுல இவ்வளோ அவஸ்தை இருக்கா?

படிக்க வாக்களிக்க

22. தன் இரண்டாவது கதையில் ஆண்களின் குழப்பம் விலகுவதை விவரிக்கிறார்
நிலா.


அவளின் ஸ்பரிஸம், இறுக்கம், முத்தம் எல்லாமாய் சில விநாடிகளே நிலைத்திருந்தாலும் யுகயுகமாய் நீடித்ததான பரிச்சயம். வெறும் உடம்பின் கிளர்ச்சியாய் இருந்தால் இது எப்படி சாத்தியமாகும்?

அப்பா அம்மாவையே வெறுக்கும் அளவுக்குப்போன சாமியார் எப்படி திருந்தி நல்வழிப்படுகிறார் என்று கதை சொல்கிறார்.

படிக்க வாக்களிக்க

23. கல்லூரி நண்பர்களோடு சேர்ந்திருந்த நாட்களையும் புரட்டிப்போட்ட காலத்தின் கோலத்தையும் எண்ணி இதற்குள் எங்கோதான் நான் விடலைப்பருவத்தைத் தொலைத்திருப்பேன் என்கிறார்
தேவ்.என் விடலைப் பருவம் என்கிட்டே இருந்துப் போயிடுச்சா இல்ல இன்னும் இருக்கான்னு தெரியல்ல ஆனா..பாலாஜியை அந்த அழுக்கு டவுசர்ல்லப் பார்த்தப்போவும் சிவா செத்தப் போவும்.. எனக்குள்ளே எனக்கே தெரியாம என்னவெல்லாமோ நடந்துப் போனது உண்மை.

அவர்கள் நண்பர்களுடன் நாமும் இருப்பது போன்ற நடை.

படிக்க வாக்களிக்க

24. ரயில் பயணங்கள் தோற்றுவிக்கும் பிம்பங்களையும் எண்ணங்களையும் நிரந்தரமாக சுமக்க முடியாது. ஆனால் ஒரு சரித்திர சம்பவத்துக்குப் பின் நடைபெறும் பயணத்தை?
ஹரன் பிரசன்னாவின் இரவு ரயில் அனுபவம் சுவாரஸ்யம்.

நானாக ஏற்படுத்திக்கொள்ளும் லயிப்பிலிருந்து என்னை நான் காப்பாற்றிக்கொள்ளமுடியும் என்று நம்பி வாசித்தேன். இதுபோன்ற குழப்பமான நிலையில் புத்தகம் வாசித்தல் நல்லதொரு பழக்கம் என நினைத்துக்கொண்டேன். அப்போதுதான் புரிந்தது, இப்படியே நினைத்துக்கொண்டிருக்கிறேனே ஒழிய, இன்னும் வாசிக்கத் துவங்கவில்லை என்று.

தேர்ந்த கவனித்தலுடன் நுட்பமான நினைவுகளை வடித்திருக்கிறார், நம் ரயில் பயணங்களோடு ஒப்பிட வைக்கிறார்.

படிக்க வாக்களிக்க


25. வெளிவாழ்வைப் பார்க்கையில் நம் அனுபவம் கூடுகிறது, அறிவு விசாலமடைகிறது, விடலை விடைபெறுகிறது என்று கதையாய்ச் சொல்கிறார்
உமா கதிர்.


அறுபது வயசுக்கிழவன் இவ்வளவு தூரம் வந்து உழைக்கவேண்டிய அவசியம் இல்லாதிருந்தபோதிலும் உழைக்கிறார். இருபது வயசுப்பையன் பந்தாவுக்காக வண்டியில பறக்கிறோமே என்ற எண்ணம் ஓடியது. அதேநேரம் நம் அப்பா இந்த வெய்யிலில் அலுவலகத்திற்கு சென்று வர மறுபடி சைக்கிளுக்கே திரும்ப வைத்ததை நினைத்து வேதனைப்பட்டேன்.பார்வை மாற்றத்தை பதிவு செய்திருக்கிறார்.

படிக்க வாக்களிக்க

26. அப்பாபோல ஆக ஆசைப்படும் விடலையின் நினைவுகளைப் பதிந்திருக்கிறார்
மணியன்.


சீச்சீ, நான் ரொம்பக் கெட்ட பையன். கடவுளே, எனக்கு இந்த கெட்ட புத்தியை மாத்திக் கொடு, நான் நல்ல 'அப்பா'வாக இருக்க வேண்டும். இராத்திரி வேட்டியெல்லாம் கறையாகி விடுகிறதே, அம்மா கவனித்திருப்பாளோ


குழப்பமான இளைஞனின் எண்ண ஓட்ட்ங்களை இயல்பாக எழுதியிருக்கிறார்.


படிக்க வாக்களிக்க27. தலைமுறைகள் மாறினாலும் தாய் கவலை மாறாது என்று உஷா சொல்லியிருந்தார். அதே போலத்தான் தகப்பன் கவலையும் என்கிறார் பாலா.

எனக்கு வளர்சிதை மாற்றம் ஏற்பட்டதோ இல்லையோ, எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் வளர்ந்து, சிதைந்து (மாறிப் ) போய் தான் இருக்கிறேன். எனக்கு வேண்டியதை என் அப்பா தீர்மானித்தார். தனக்கு வேண்டியதை என் மகன் தீர்மானிக்கிறான். என் வளர்ச்சியில் என் பங்கு என்ன?

பேங்க் உத்தியோகம், யூ எஸ் மேல்படிப்பு என்று குறிக்கோள்கள் மட்டுமே மாறுகிறது, ஆதார உணர்ச்சிகளில் மாற்றமில்லை என்கிறார்.
28. சேர்ந்திருந்தால் எப்போதும் சண்டை என் இருந்தாலும், பிரிவில் ஏற்படும் மாறுதல், பெரிய மனுஷனாக்கிவிடும் என்கிறார் அருள் குமார்.
நானே எதிர்பார்க்காமல் என் கால் கட்டைவிரல் லேசாக அவள் மீது பட்டுவிட்டது. அதை உறுதிசெய்யும் வகையில் அவளைப்பார்த்து பழிப்பு காட்டினேன். 'ட்ரெஸ்லதான் பட்டுச்சு. போடா...' என்று அவசரமாய் அழுகையை நிறுத்திச் சொன்னாள்


சண்டை, பாசம் எல்லாவற்றையுமே இயல்பாகச் சொல்லியிருக்கிறார்.
29. வேலை கிடைத்து, கல்யாணம் ஆகிவிட்டது போன்ற அற்பக்காரணங்களுக்காக விடலைப்பருவத்துக்கு பை பை சொல்லவே முடியாது என்று அடம் பிடிக்கிறார் Pranni.
He : அட ஆண்டவா. என்ன தான் வளர்ந்தாலும், சில விசயங்களுக்கு bye-bye சொல்ல முடியாதுன்னு இந்த பொண்ணுகளுக்கு புரிய வைக்க மாட்டியா? அதான் சொன்னனே புள்ள. அவங்கள நிறுத்தச்சொல்லு நான் நிறுத்தறேன்.
She : நான் எதுக்கு அவங்கள நிறுத்தச்சொல்லனும்? நான் நிறுத்த வேண்டியத நிறுத்திக்குறேன். அப்பறம் பார்போம்.
" பெண்கள் கணவன் மாறிவிடுவான் என எதிர்பார்த்து திருமணம் செய்கிறார்கள், மாறுவதில்லை என்பதுதான் சோகம்" என்று ஒரு ஜோக் உண்டு, அதைக் கதைபோல சொல்லியிருக்கிறார்.
30. மாற்றங்கள்தான் வளர்ச்சிக்கு வகை செய்கின்றன என்கிறார் கலை அரசன்.
பயணத்தில் பாதை மாறலாம்
பயணிக்கும் வாகனமும் மாறலாம்
இலக்குகள் ஒன்றே.
பருகும் பானங்கள் மாறலாம்
பாத்திறமும் மாறலாம்
தாகம் ஒன்றே.எளிய வார்த்தைகளில் எழுதிய கவிதை.


படிக்க வாக்களிக்க


31. அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள் - அவன் நண்பனை - அவன் உணர்ச்சிகளை கதையாகச் சொல்லியிருக்கிறார் செல்வராஜ் - அழகான பொருத்தமான புகைப்படத்தோடு.


மனமுருகிக் கதவில் சாய்ந்து கொள்ளலாம். வெறும் அறையில் தனியாகச் சிரித்துக் கொள்ளலாம். பக்கம் பக்கமாய்க் கவிதை எழுதிக் கிழித்துப் போடலாம். வேறு எந்தத் தளைகளும் இல்லை. ஆனால், இந்த நிலை மாறி அவளும் என்னிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட்டால்? அது பிறகு ஒருவழிப் பாதையாகி விடுமே. திரும்ப இயலாத அந்தப் பயணத்திற்கு நான் தயாரா?


கோட்டொழுக்கான அழகிய நடை,இயல்பான யதார்த்தமான நிலைமாற்றம் - இதக்கதைக்கு வலுசேர்க்கின்றன.


படிக்க வாக்களிக்க


32. இணைக்குறள் ஆசிரியப்பா எழுதியிருக்கிறார் ஓகை நடராஜன், அவர் சொன்னதால்தான் தெரிகிறது - மரபுக்காக வார்த்தைகளை உடைத்துப்போட்டு கஷ்டப்படுத்தாததால்.


சிந்தை வளர்ந்தும் சிதைந்தும் மாறிய
விந்தைப் பருவமிதும் விடையும் பெறுகிறது.
முழுதாய் இன்றி மிச்சங்கள் வைத்தே
செழித்த இப்பருவம் செல்வது நடக்கிறது.


மொழியாளுமை மிகவும் இருந்தால்தான் இவ்வளவு எளிமையாக ஒரு மரபுக்கவிதை எழுத முடியும்.


படிக்க வாக்களிக்க


33. விடலைப்பருவத்துக்கு வெற்றிகரமாக விடை கொடுத்துவிட்டால்? சந்தக்கவிதையில் சிந்தித்திருக்கிறார் இப்னு ஹம்துன்.


போற்றிடும் இலக்கை நோக்கும்
பொறுமையால் வெற்றி சேர்க்கும்
ஆற்றலுயர் இளையர் கூட்டம்
அவனியிலே ஒளியைக் கூட்டும்.

Positive-ஆக வளர்சிதை மாற்றத்தை அணுகியிருக்கிறார்.

படிக்க வாக்களிக்க

34. பெண்களின் விடலை மாறுதல்கள் வீட்டில் ஏற்படுத்தும் தளைகளை எதிர்த்துக் கவி பாடுகிறார் தாணு.

அப்பா பக்கத்தில் படுத்துக் கதை பேசத் தடை

அண்ணா தம்பிகளைத் தொட்டுப் பேசத் தடை

அடுத்த வீட்டு ஆண்களையோ பார்க்கவே தடை!

அடக்குமுறைகளும் எதிர்ப்பு இயக்கங்களும்

அடுக்களை தொடங்கி தெருப்படி வரை தொடர்ந்தது

அம்மா பிள்ளை சண்டைகள் தினமும் ஆர்ப்பரித்தன

இவையெல்லாம் சீக்கிரம் ஒழிய bye-bye adolocense என்கிறார்.

படிக்க வாக்களிக்க

அனைத்தையும் படித்து மறக்காமல் வாக்களியுங்கள்.

Jun 20, 2006

டா கில்லி கோட் - பாகம் 8

 
அத்தியாயம் 21
 
"இப்போ என்னன்னு தேடுவே? எப்படித்தான் கண்டுபிடிப்பே இன்னும் ரெண்டு லைனையும்? முதல்ல மூணு வரியே டுபாக்கூரோன்னு ஒரு டவுட்டு எனக்கு" என்றாள் கருப்பாயி.
 
"இல்லை - அதிலெல்லாம் எனக்கு சந்தேகமே இல்லை. சரி வா சூடா ஒரு மொளகா பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே யோசிக்கலாம்"
 
"ரெண்டு மொளகா பஜ்ஜி கொடும்மா" என்றான் பஜ்ஜி விற்பவளைப்பார்த்து.
 
"இரு சார், தண்ணி கொணார்றதுக்கு போயிருக்கான், வந்தவுன்னே சூடா போட்டுத்தாரேன்"
 
ஐந்து நிமிடங்கள் கழித்துத்தான் தண்ணீர் கொண்டுவரப்போனவன் வந்தான்.
 
"ஏண்டா சாவுகிராக்கி, கஸ்மாலம் - கஸ்டமருங்க வெயிட் பண்ணிகினு இருக்காங்க, ஏண்டா லேட்டு? உன் தம்பி அண்ணாதுரை மட்டும் இருந்தா இன்னேரம் கில்லி மாரி பாஸ்டா வந்துருப்பான்"
 
"அதை ஏன் கங்கம்மா கேக்கறே? தண்ணி கொண்டுவரப்போன டின்லே ஓட்டை."
 
"பாத்து வைடா, எண்ணையிலே கொட்டிடப்போறே!"
 
ராமசாமிக்கு எல்லாம் புரிந்துவிட்டது.
 
"உங்க பேரு கங்கம்மாவா?"
 
"ஆமா, அது என்னாத்துக்கு இப்ப?"
 
கருப்பாயியை அர்த்தபுஷ்டியாகப்பார்த்தான் ராமசாமி.
 
"எண்ணெயில்லாம வெளக்கு எரியுமா.. கண்ணே கங்கம்மா! - லாலாக்கு டோல் டப்பி மாவோட அடுத்த வரி!
அண்ணாதுரை எப்படி வந்திருப்பான்? கில்லி மாதிரி.. எல்லா வரிக்கும் அர்த்தம் தெரிஞ்சுபோச்சு கருப்பாயி, இங்கேதான் ரகசியம் இருக்குது!"
 
"யோவ்" பல்லைக்கடித்தாள் கருப்பாயி.
 
"ஏன்மா உன் பேரு கருப்பாயியா?" என்றாள் கங்கம்மா.
 
"எதுக்கு கேக்கறே?"
 
"உங்க தாத்தா கூடத்தானே இருக்கறே? அவர் பேர நான் சொல்ல முடியாதே"
 
"ஏன் சொல்ல முடியாது? வாய் கோணிக்குமா?"
 
"என் புருசன் தான் அந்த ரங்கன்றத என் வாயால எப்படிம்மா சொல்வேன்?"
 
"இப்போ சொன்னியே அதே மாதிரிதான்"
 
"நான் உனக்கு பாட்டிம்மா, நீயும் இதோ வரானே அண்ணாதுரை, ரெண்டுபேரும் கிள்ளிவளவன் வம்சம். இது யாருக்கும் தெரியக்கூடாதுன்னுதான் உன்னையும் உன் தம்பியையும் தனித்தனியா வளத்தோம்"
 
"மொளகா பஜ்ஜியிலே வந்து முடிஞ்சுது பார் கதை!"
 
"எங்கயாச்சும் முடிச்சுதானே ஆகணும்? ஏற்கனவே பினாத்தல் கஷ்டப்படறான்"
 
"சரி எங்க அந்த புனித கில்லி?" ராமசாமி மறக்காமல் கேட்டான்.
 
"அது இருக்க வேண்டிய இடத்துல இருக்கு. கில்லி சங்கத்தை கலைச்சுட்டு, ரங்கன் அதை சேர வேண்டிய இடத்துல சேர்த்துட்டுதான் செத்துபோனாரு"
 
"அப்ப இவ்ளோ கஷ்டப்பட்டு தேடின எனக்கு ஆப்பா?"
 
"தோடா.. வந்துட்டாருடா சீமத்துர.. கிரிக்கெட்ட ஒழிக்கறதுக்கு - போ போ போய் கில்லி ஆடு"
 
"அப்போ கருப்பாயிக்கும் எனக்கும் கல்யாணம்?"
 
"உனக்கே இது நியாயமா யோசிச்சுப்பாரு.. நீ அவ தாத்தா வயசு. ஏன் இப்படி வக்கிரம் பிடிச்சு அலையறே?"
 
சோகமாகத் திரும்பினான் ராமசாமி.
 
முற்றும்.
 
பின்னுரை (Epilogueங்க!)
 
சேப்பாக்கத்தில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஒருநாள் போட்டி. ஆஸ்திரேலியா முதலில் ஆடி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன் இருக்கையில் மழை கொட்டத்துவங்கியது.
 
"மேட்ச் அவ்ளோதானா?"
 
"இருப்பா, மழை விட்டுரும்"
 
"ராமசாமி - மழை விட்டுடுச்சி பாரு. நீ பசங்களை கூட்டிகிட்டு போயி கிரவுண்ட துடைச்சிட்டு வா."
 
ராமசாமி தன் மாணவர்களுடன் கிரவுண்டுக்குள் நுழைந்தான். கில்லி டீமைக் கலைத்துவிட்டு கிரிக்கெட் கோச்சிங் ஆரம்பித்து விட்டிருந்தான்.
 
"டேய் அவுட்பீல்டெல்லாம் சரியா துடைங்கடா.. அந்த டப்பவா எடுத்து அதுலே தண்ணி பிழிஞ்சுவிடு.."
 
"இங்கே எவ்வளோ துடைச்சாலும் தண்ணி போகலே சார் - ஊத்து இருக்கு போல இருக்கு கொஞ்சம் மண்ணைக்கொட்டிடலாம்"
 
ராமசாமியின் அடிமனதில் ஒருகுரல் - "தொட்டனைத்தூறும் மணற்கேணி"
 
"டேய் அந்த டப்பாவைத் தூக்கிபோடுடா - சரியான டோல்டப்பியா இருக்கு"
 
ராமசாமிக்கு மறுபடியும் குரல் - "லாலாக்கு டோல்டப்பி மா"
 
"சரி நீங்க பிட்சுல வாலாஜா ரோட் சைடைத் தொடைங்க - நாங்க அண்ணா பெவிலியன் சைடைத் தொடைக்கிறோம்"
 
"அண்ணா நாமம் வாழ்க"
 
"டேய் அந்த மார்க்கிங்க எடுக்காதடா, அது நம்ம ஸ்டார் பவுலரோட ஸ்டார்ட்-அப் மார்க்"
 
"ட்வின்க்கிள் ட்வின்க்கிள் லிட்டில் ஸ்டார்"
 
"ஆமாம், சூப்பரா போட்டாரில்ல? கில்கிறிஸ்டுக்கு கில்லி எகிறிடுச்சி"
 
"சீறி அடிச்சா கில்லி பறக்கும்"
 
மெதுவாக பிட்சின் மையத்தை நோக்கி நகர்ந்தான் ராமசாமி. ஸ்டம்புகள் மத்தியில் இருந்த பெயில்ஸை எடுத்துப் பார்த்தான். ஓரமாகக் கண்ணுக்குத் தெரியாமல் கிறுக்கியிருந்தது -
 
"கில்லி ராஜாவுக்கு அடிமை மந்திரியின் சமர்ப்பணம்"
 
நிஜமாவே முற்றும்.
 
ஆராய்ச்சியில் உறுதுணை:
 
சின்னான், மோகன்ராஜ், ரமேஷ், காட்டான், சகாதேவன், சாரதி - என் கில்லித் தோழர்கள்
ரவி சாஸ்திரி, ஹர்ஷா போக்ளே, ஜெஃப் பாய்காட் - கிரிக்கெட் வர்ணனையாளர்கள்
 
ஆதாரங்கள்:
 
தரணி, பார்த்திபன், அசுதோஷ் கோவாரிகர் - எடுத்த திரைப்படங்கள்
விஸ்டன் கிரிக்கின்போ.காம்
 
தயாரிப்பில் உறுதுணை
 
தமிழ் வலைப்பதிவு வாசகர்கள்
 
இது ஒரு பெனாத்தல் சுரேஷ் தயாரிப்பு
 
 
 

டா கில்லி கோட் - பாகம் 7

 
அத்தியாயம் 18
 
"உன்னை அறிவாளின்னு நெனச்சு உன்கிட்டே வந்தேனே.. என்னைச் சொல்லணும். ஹெலிகாப்டர்ல இருந்து பாத்தா கட்டுமரத்தை கடல்ல இறக்கறது தெரியாதா?" ராமசாமிக்கே சந்தேகம் வரும் அளவிற்கு சீனிவாசனின் ஐடியா இருந்தது.
 
"ராமசாமி, சும்மாவே கதை நடுவுலே கேள்வி கேக்கக் கூடாது. அதுவும் கிளைமாக்ஸில - மூச்சு விடக்கூடாது. நாம பின் வாசல் வழியாப் போயிடலாம் - நான் போயி கட்டுமரத்தை தயார் பண்ணிட்டு வந்து உங்களைக் கூப்பிடறேன்"
 
***
"குருவே சரணம்"
 
"அவங்க கட்டுமரத்துலே போறாங்க. நீ நேரா மெரினா பீச்சுக்கு வந்து காத்துக்கிட்டு இரு. அவங்க இன்னும் ரெண்டு வரிக்கு அர்த்தம் சொன்ன உடனே அமுக்கிடலாம்"
 
"உங்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்?"
 
"அதைக்கேக்காதே.. இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கே விளங்கிடும்"
 
***
"ஹலோ சூப்பர் வில்லனா?"
 
"சீக்கிரம் சொல்லுங்க ஐ சி சி சேர்மன், நான் வேலையா இருக்கேன்"
 
"அவங்கள விட்டுடுங்க. புனித கில்லிய கண்டுபிடிச்சா கண்டுபிடிச்சுட்டு போகட்டும். என்ன ICC ய ICGன்னு மாத்த வேண்டியிருக்கும், அவ்வளவுதான். நாங்க கொலையில எல்லாம் இன்வால்வ் ஆக விரும்பல"
 
"என்ன திடீர்னு?"
 
"ஆமா, கதைய படிச்சுட்டு ஐ சி சி பெனாத்தல் மேல கேஸ் எதாவது போட்டுட்டா? அதனால ஐ சி சிய கெட்டவங்களா காமிக்க வேணாம்னு முடிவு பண்ணிட்டோம்"
 
"அப்போ எனக்கு யார் பணம் தருவாங்க?"
 
"யாராச்சும் லோக்கல் கிரிக்கெட் கிளப்னு மாத்திறலாம்"
 
"அப்போ நான் கண்டின்யூ பண்றேன் - யாராவது பணம் கொடுத்தா சரி!"
***
வீட்டுக்குள்ளே அவசரமாக உள்ளே நுழைந்த சீனிவாசன், "கிளம்புங்க, எல்லாம் ரெடி" என்றார்.
 
கட்டுமரம் மெதுவாக  நீலாங்கரையை விட்டுக்கிளம்பியது.
 
அத்தியாயம் 19
 
வீராச்சாமி கோபமாக இருந்தார்.
 
"ஹெலிகாப்டர் எல்லாம் எடுத்துப்போயும் பிரயோஜனம் இல்லை! எங்கே போயிட்டாங்க இப்போ? ரோட் எல்லாம் பிளாக் பண்ணித்தானே இருக்குது?"
 
"ஆமாம் சார். அவங்க கடல் வழியாத்தான் தப்பிச்சிருக்கணும்"
 
"இப்போ எனக்கு புரிஞ்சு போச்சு. சூப்பர் வில்லன் யாருன்னு"
 
அத்தியாயம் 20
 
"ராமசாமி - அந்த மிச்சம் ரெண்டு வரிக்கும் அர்த்தம் கண்டு பிடிச்சயா?"
 
"இன்னும் இல்ல சீனிவாசன். பீச்சுக்குப் போயி தேடினா எதாவது தட்டுப்படும். அதோ கரை தெரியுதே"
 
"அது வரைக்கும் உன்னை உயிரோட விட்டுவைப்பனா நான்?"
 
"சீனிவாசன் என்ன பண்றீங்க"
 
"என்னத்துக்கு இப்போ அனாவசியமா ஆச்சரியப்படறே? நான் தான் சூப்பர் வில்லன்னு உனக்குத் தெரியாதா? ஒன்னு ரெண்டு சீன்ல போலீஸ்தான் வில்லன்னு நெனைக்க வைக்கும்போதே நீ ஊகிச்சுருக்க வேணாமா? மிச்சம் இருக்க ஒரே கேரக்டர் நான் தான் -வேஸ்டுடா நீ.."
 
"உங்களுக்கு எதுக்கு சார் புனித கில்லி?"
 
"அதை வச்சு காசு பாக்கத்தான் - ICC யிலிருந்து மயிலாப்பூர் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் வரைக்கும் யார்கிட்டயாவது காசு கறந்துருவேன் - நீ உன் கடைசி ஆசை என்னன்னு சொல்லு"
 
"உங்க கடைசி ஆசையச் சொல்லுங்க - போலீஸ் மெரினாவில் வலை வீசி வைச்சுருக்காங்க - அங்கே பாருங்க!"
 
"வர வர யார்தான் மெரினாவில வலை வீசறதுன்னு இல்லாம போச்சு. மீனவர்ங்களுக்கு போலீஸும் காம்படிஷனா?"
 
அவர்கள் கட்டுமரத்தில் இருந்து இறங்கியதும் காத்திருந்த வீராச்சாமி
சீனிவாசனைக் கைது செய்தார்.
 
"எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?"
 
"எப்படியோ கண்டு பிடிச்சேன், இன்னும் எவ்வளவுதான் இந்த டுபாக்கூர் கதைய வளர்த்தறது? சரி நீ போய் மிச்சம் ரெண்டு வரிய ஆராய்ச்சி செய்."
 
அடுத்த பாகத்தில் முடியும்.. 

Jun 19, 2006

டா கில்லி கோட் - பாகம் 6

முந்தைய பாகங்கள்: பாகம் 1,  பாகம் 2, பாகம் 3 , பாகம் 4, பாகம் 5
 
அத்தியாயம் 15
 
இன்ஸ்பெக்டர் வீராச்சாமி ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தார். எதிரே வந்த சப் இன்ஸ்பெக்டர், "அய்யா, அவங்கள நீலாங்கரை ரோட்லே இருந்து பாத்ததா தகவல் வந்திருக்குது"
 
"அப்போ உடனடியா ஹெலிகாப்டர் தயார் பண்ணுங்க - வளைச்சுடலாம்"
 
"அய்யா, உங்க வயிறு ஹெலிகாப்டர் பயணத்தைத் தாங்குமா?"
 
"அதையெல்லாம் பாத்தா முடியாது. கடமைதான் முதல்லே. அதுவும் தவிர, கிளைமாக்ஸ் வந்திடுச்சின்னு எப்படி வாசகர்களுக்குத் தெரியப்படுத்தறதாம்?"
 
"சரி அய்யா, ஏற்பாடு பண்ணிடறேன்"
 
அத்தியாயம் 16
 
"குருவே சரணம்"
 
"சிஷ்யா, போலீஸ்காரங்க ஹெலிகாப்டர்ல நீலாங்கரைக்கு வந்துகிட்டிருக்காங்க"
 
"உங்களுக்கு எப்படித் தெரியும் குருவே, நீங்கதான் போலீஸா?"
 
"அப்படி ஒரு டவுட் இருக்கறதும் நல்லதுக்குதான். அதுக்குதானே இந்த பில்ட்-அப்பே!"
 
"சரி அவங்க இருக்கிற வீட்டு வாசல்லே இருந்துதான் நான் பேசறேன். உள்ளே பூந்து தூக்கிடவா?"
 
"வேணாம். அவங்க நாம தேடற பொருளை நெருங்கிட்டாங்க. கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்"
 
ரட்ட டட்ட ரட்ட டட்ட என்று சத்தம் கேட்டது.
 
"ஹெலிகாப்டர் நெருங்கிடுச்சி போல இருக்கு. அலெர்ட்டா இரு"
 
அத்தியாயம் 17
 
ராமசாமிக்கும் கருப்பாயிக்கும் காபி கொண்டு வந்துகொண்டே "உனக்குத் தெரியுமா? எப்படித் தெரியும்?" என்றார் சீனிவாசன்.
 
"எல்லாம் என் சொந்த மூளையை உபயோகப்படுத்தி, ரங்கனோட கோடை உடைச்சேன்."
 
"என்ன கோட் அது? எப்படி உடைச்சே?"
 
தொட்டனைத்தூறும் மணற்கேணி
ட்வின்கிள் ட்வின்கிள் லிட்டில் ஸ்டார்
சீறி அடிச்சா கில்லி பறக்கும்
லாலாக்கு டோல்டப்பி மா
அண்ணா நாமம் வாழ்க!
"இதுதான் கோடு! - இதுலே இருந்துதான் கண்டுபிடிச்சேன்."
 
"கிளம்பிட்டான்யா.. இப்போ பாருங்க எவனுக்கும் புரியாத ஒரு விளக்கம் கொடுக்கப்போறான் விளக்கெண்ணை!" கருப்பாயி வெறுத்துப்போயிருந்தாள்.
 
"சும்மா இரு கருப்பாயி. என்ன கண்டுபிடிச்சே சொல்லு?"
 
"தொட்டனைத்தூறும் மணற்கேணின்னா என்ன? இன்னி டேட்டுக்கு தமிழ்நாட்டுல எங்கயாவது தொட்டவுன்னே தண்ணி வருமா?"
 
"ஏன் குழாய் டேப்பில வருமே"
 
"அதுலே எங்க மண்ணு இருக்கு?"
 
"அதனாலே?"
 
"மெரினா பீச்சிலே ஊத்து தோண்டி தண்ணி விப்பாங்களே - கவனிச்சதில்லையா?"
 
"இதுதானா? நல்ல வேளை - நீ சல்பேட்டா ஊறல் பத்திதான் சொல்லப்போறேன்னு பயந்து போயிருந்தேன்"
 
"அது கூட யோசிச்சேன். ஆனா லாஸ்ட் லைன் பாருங்க - அண்ணா நாமம் வாழ்க! அதுக்கு என்ன அர்த்தம் - அண்ணா சமாதிக்குப் பக்கத்திலன்னுதானே அர்த்தம்?"
 
"சரி ட்வின்க்கிள் ட்வின்க்கிள் லிட்டில் ஸ்டாருன்னா?"
 
"அதே பீச்சுதான். இந்தியால இருக்க எல்லா லிட்டில், மீடியம், சூப்பர் ஸ்டார் கட் அவுட்ட வச்சு போட்டோ எடுக்கற ஸ்டூடியோ பீச்சுலே பாத்ததில்ல?"
 
"எப்படியோ இழுத்து கொண்டுவந்துட்டான்யா! மத்த ரெண்டு வரிக்கு என்ன அர்த்தம்?"
 
"அது இன்னும் சரியாப் புரியல! மெரினா பீச்சுக்குப் போயி தேடினா கண்டுபிடிச்சிடலாம்."
 
அப்போதுதான் அவர்களுக்கும் ஹெலிகாப்டர் சத்தம் கேட்கத் தொடங்கியது.
 
"போச்சுடா. போலீஸ் வந்துட்டாங்க. இனிமே எப்படி மெரினா பீச்சுக்குப் போறது"
 
சீனிவாசன் சிரித்தார்.
 
"கவலைப்படாதே, என்கிட்டே ஒரு கட்டுமரம் இருக்கு. அதைக் கடல்லே இறக்கி கடல் வழியாவே மெரினா பீச்சுக்குப் போயிறலாம்"
 
தொடரும்..

டா கில்லி கோட் பாகம் 5

முந்தைய பாகங்கள்: பாகம் 1,  பாகம் 2, பாகம் 3 , பாகம் 4
 
அத்தியாயம் 13
 
"குருவே சரணம்"
 
"போதுண்டா உங்க கோட் வேர்டு தொல்லை. விஷயத்த சொல்லு"
 
"ராமசாமியும் கருப்பாயியும் கிளம்பிட்டாங்க, நீலாங்கரை பக்கம் போறாங்க."
 
"உடனே பாலோ பண்ணு,"
 
B4 போலீஸ் நிலையத்தில்
 
"சப் இன்ஸ்பெக்டர் வந்தாரா?"
 
"இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துருவார் சார்"
 
"அவர நீலாங்கரைக்கு போகச்சொல்லு. கல்பிரிட்டுங்க அங்கே போறதா இன்பர்மேசன்"
 
"சரி சார்"
 
அத்தியாயம் 14
 
சீனிவாசனுக்கு போன் செய்துவிட்டதால் வாசலுக்கே வந்துவிட்டிருந்தார்.
 
"என்ன ராமசாமி, எப்படி இருக்கீங்க?"
 
"எதோ பொழப்பு ஓடுது சார். கில்லி டோர்னமெண்ட் எல்லாம் இப்போ நடக்கறதில்ல. கிரிக்கெட் காரங்க எங்களை வாழ விடறதில்ல; ஒரு போலீஸ்காரன் வேற, கிரிக்கெட் ரசிகன், கில்லிக்கு எதிர்ப்பு, துரத்தறான். என்ன பண்ரது சொல்லுங்க!"
 
"எல்லாரும் என்ன மாதிரியா இருப்பாங்க? யாரு இது?"
 
"இது சேப்பாக்கம் கிரவுண்டு க்யூரேட்டர் ரங்கனோட பேத்தி, கருப்பாயி"
 
"ரங்கன் நல்ல ஆளாச்சே, கில்லி பத்திப் பேசினா இன்னிக்கெல்லாம் பேசுவானே. அவனைக்கூட்டிகிட்டு வரலையா?"
 
"சரிதான். நீயும் தமிழ்மணம் வாசகர் போலதானா? ஒழுங்கா படிக்கலையா? ரங்கன் செத்துட்டான்"
 
"அடப்பாவமே. இந்தப்பொண்ணுக்கு கில்லி - கிரிக்கெட் பத்தியெல்லாம் தெரியுமா?"
 
"தெரியாது. சொல்றதுக்குதான் கூட்டிகிட்டு வந்தேன்"
 
"ஆமாங்க, எனக்கு ஆர்வமா இருக்கு சொல்லுங்க - இல்லாட்டி மட்டும் சொல்லாமலா விட்டுடப் போறீங்க?"
 
"கில்லியிலிருந்துதான் கிரிக்கெட் வந்துதுன்னு நெறய பேருக்குத் தெரியாது. ஆனா கொஞ்சம் கண்ணத் திறந்துகிட்டு பாத்தா அதுக்கான ஆதாரம் கோடிக்கணக்குல இருக்கு."
 
"என்ன ஆதாரம் சொல்லுங்க"
 
"கில்லியில தண்டா இல்லை தாண்டல்னு சொல்றதத் தான் கிரிக்கெட்லே பேட்னு சொல்றாங்க. கில்லியத்தான் Ball ஆ மாத்தியிருக்காங்க.
 
இதோ பாரு:
 
^v  - இது கில்லி. () இது கில்லியோட மாறுபட்ட வடிவம். 0 - இந்த மாதிரி காலப்போக்கில மாறி, பின்னால O இப்படி ஆயிடுச்சி.
 
கில்லியிலே எத்தனை பேரு ஆடலாம்?"
 
"ஏன் ரெண்டு பேர் மட்டும் கூட ஆடலாமே?"
 
"கிரிக்கெட்லே?"
 
"11 பேர்னு நெனைக்கிரேன்"
 
"ஒண்ணையும் ஒண்ணையும் கூட்டினா என்ன வருது?"
 
"ரெண்டு"
 
"இப்போ புரிஞ்சுதா? கில்லியிலிருந்துதான் கிரிக்கெட் வந்ததுன்னு? - அது மட்டும் இல்ல. கில்லி ஆடும்போது உடம்புலே பட்டா கந்துன்னு சொல்வாங்க,. கிரிக்கெட்ல? LBW!  நெறய ஆதாரம் இதுமாதிரி இருக்கு"
 
"இது - ஆதாரம்? யாராவது கேனையன் இருப்பான் அவன்கிட்டே போய் சொல்லு"
 
"போதாதா? எல்லாம் இவ்ளோ ஆதாரம் போதும்! 12 ஆம் நூற்றாண்டு சோழ ராஜா கிள்ளிவளவனைத் தெரியுமா உனக்கு?"
 
"யாரு அவன்?"
 
"அவன் தான் கில்லியைக் கண்டுபிடிச்சவன். உண்மையா அவன் பேரு கில்லிவளவன் தான், பின்னாலே வந்த கிரிக்கெட் வெறியர்கள்தான் அவன் பேரை மாத்திட்டாங்க!"
 
"அவனுக்கு என்ன?"
 
"அவன் ஆரம்பிச்ச கில்லி விளையாட்டுலே இருந்த ரூல்ஸையெல்லாம் இப்போ கிரிக்கெட்லே அப்படியே பாக்கலாம். எல்லாத்தையும் அவன் செப்பேட்டுலையும் கல்வெட்டுலேயும் பொறிச்சு வச்சிருந்தான். இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி (13 ஆம் நூற்றாண்டு) கில்லியால பாதிக்கப்பட்டதால, அவன் செப்பேட்டையெல்லாம் உருக்கறதுக்கும், கல்வெட்டையெல்லாம் உடைக்கிறதுக்கும் ஆர்டர் போட்டான்."
 
"எல்லாம் போச்சா?"
 
"எல்லாம் போயிருந்தா எப்படி இந்தக்கதை எழுத முடியும்? அப்போதான் கில்லி சங்கம் உருவாச்சு."
 
"கில்லி சங்கமா?"
 
"ஆமாம். அவங்களோட முக்கியமான நோக்கமே அந்த செப்பேடு, கல்வெட்டு எல்லாத்தையும் பாதுகாக்கறதுதான். எல்லாத்தையும் விட முக்கியமா, கிள்ளி வளவன் விளையாடுன புனித கில்லியையும், கிள்ளி வளவன் வம்சத்தையும் பாதுகாக்கணும்றது அவங்க நோக்கம்.
 
15 ஆம் நூற்றண்டுல பொற்கிள்ளின்றவர், 17ஆம் நூற்றாண்டுல நலங்கிள்ளி இவங்க எல்லாம் அந்த சங்கத்து தலைவர்கள்.
 
சரியான சந்தர்ப்பத்துல அந்த புனித கில்லி, செப்பேடு எல்லாத்தையும் மக்களுக்குத் தெரிவிச்சு, கிரிக்கெட் விளையாட்டத் தடைசெய்து, கில்லி வேர்ல்ட் கப் கொண்டு வர்றதுதான் இந்த கில்லி சங்கத்தோட நோக்கம்."
 
"அந்த புனித கில்லி இப்போ எங்கே இருக்கு?"
 
"எனக்குத் தெரியும்" என்றான் ராமசாமி புன்னகையுடன்.
 
தொடரும்..

டா கில்லி கோட் பாகம் -4

முந்தைய பாகங்கள்: பாகம் 1,  பாகம் 2, பாகம் 3
 
அத்தியாயம் 9
 
இன்ஸ்பெக்டர் வீராச்சாமி மஃப்டியில் வீட்டு மொட்டை மாடியில் போன் பேசிக்கொண்டிருக்கிறார்.
 
"அந்தக் கருப்பாயிய எங்க பாத்தாலும் விடாதீங்க. எனக்கே பேதி மாத்திரை கொடுக்கறான்னா எவ்வளவு கொழுப்பு இருக்கும்? அப்புறம் அந்த ராமசாமி. அமுக்குணி மாதிரி இருக்கான். அவன் தான் நமக்கேத்த ஆளு. எல்லா ஸ்டேஷனுக்கும் அலர்ட் அனுப்பிடுங்க.. இன்னும் ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு கால் பண்ரீங்களா?"
 
மறுபடியும் அவசரமாக டாய்லெட்டை நோக்கி ஓடினார்.
 
திரும்பி வரும்போது அவர் மனைவி மகனைத் திட்டிக்கொண்டிருந்தாள்.
 
"எங்கே போனான்னே தெரியல. நானும் பாக்கறேன், கோச்சிங் கிளாஸுக்கு லேட்டாவுதேன்னு பயமே இல்லாம தெருவில விளையாடறான். அவனக் கொஞ்சம் கண்டிச்சு வையுங்க."
 
"அப்படி என்ன விளையாடறான்?"
"அதுவா, தெருப்பசங்க கூடச் சேர்ந்து கில்லி விளையாடறான்."
 
வீராச்சாமிக்கு கோபம் தலைக்கேறியது.
 
"எவ்வளவு திமிர் இருந்தா நான் அத்தனை முறை சொல்லியும் கில்லி விளையாடுவான்? பணத்தைக் கொட்டி கிரிக்கெட் கோச்சிங் கிளாஸ்லே சேத்து இருக்கேன். அதை வேஸ்ட் பண்றதும் இல்லாம?"
 
வீராச்சாமியின் இளம்பருவத்தில் கில்லியால் அடிபட்டவர். அதில் இருந்தே அவருக்கு கில்லி சம்மந்தப்ப்ட்ட விஷயங்கள் எல்லாவற்றின் மேலும் வெறுப்பு. ஆனால் தீவிர கிரிக்கெட் ரசிகர். கில்லி ராமசாமி ஞாபகம் மறுபடியும் வந்து போனை எடுத்தார்.
 
B4ல் சப் இன்ஸ்பெக்டர் இல்லை.
 
"யோவ் ரைட்டர், சப் இன்ஸ்பெக்டர் வந்தா உடனே கால் பண்ணச்சொல்லு. இப்போதான் தெரியுது, 3 X டூஸ்கொயர்னா 12 - 12 ஆம் நம்பர் சாராயக்கடையிலே விசாரிக்கச்சொல்லு - எங்கே போனாலும் அந்த ராமசாமியையும் கருப்பாயியையும் ரவுண்ட் பண்ணைடச்சொல்லு."
 
அத்தியாயம் 10
 
"இப்போ எதுக்கு கிரிக்கெட் சீனிவாசன் வீட்டுக்கு போவணும்?" என்றாள் கருப்பாயி.
 
"என்ன விளையாடறியா? ஏற்கனவே கதையிலே விறுவிறுப்பு இல்லேன்றாங்க. ரெண்டு கேரக்டர் அதிகமானாத்தானே யார் வில்லன்னு சஸ்பென்ஸ் அதிகமாகும்?"
 
"சரி புனித கில்லின்னா என்ன?"
 
"அதை சீனிவாசனும் நானும் சேந்து சொல்றோம். அதையே ஏன் திரும்பத் திரும்பக் கேக்கறே?
 
"இல்லன்னா படிக்கறவங்க மறந்துற மாட்டங்களா?"
 
"முதல்லே, உங்க தாத்தா வீட்டுக்குப் போயி, எதாவது க்ளூ வச்சிருக்காரா பாத்துடலாம்"
 
"நான் வரலைய்யா இந்த விளையாட்டுக்கு. எதோ ஒரு புதிர்னு சொல்லுவே, அதுக்கு யாருக்கும் புரியாத ஒரு வியாக்கியானம் கொடுப்பே - இப்படியே கதைய இழு இழுன்னு இழுப்பே - அதானே உன் ஐடியா?"
 
"அத்த விடு. நீ உங்க தாத்தா கில்லி விளையாடனதப் பாத்தேன்னு சொன்னியே, அப்போ அவர் பேண்ட் போட்டிருந்தாரா, லுங்கி கட்டி இருந்தாரா?"
 
"ரெண்டுமே இல்ல"
 
"ரெண்டுமே இல்லையா? அய்யோ, அசிங்கமாவா?"
 
"புத்தி போவுது பாரு! பட்டாபட்டி அண்டிராயர் போட்டிருந்தாரு"
 
"என்ன பட்டா பட்டி அண்டிராயரா? பச்சைக்கோடு போட்டதா? சிவப்புக்கோடு போட்டதா?"
 
"சிவப்புக்கோடுதான், ஏன்?"
 
"அப்போ கன்பார்ம். உங்க தாத்தாதான் கில்லி சங்கத்தோட இப்பத்திய தலைவன்! - கிளம்பு அவர் வீட்டுக்கு போலாம்"
 
ஓடத் தொடங்கினார்கள் - பின்னால் சைரன் ஒலிக்கத் தொடங்கியது.
 
அத்தியாயம் 11
 
"குருவே சரணம்"
 
"சிஷ்யனே சரணம்"
 
"அய்யா, நான் ஏஜண்ட் 144. ராமசாமியையும் கருப்பாயியையும் பாத்துட்டேன். ரங்கன் வீட்டுக்குதான் போறாங்க."
 
"சரி. அவங்களையே பாலோ பண்ணித் தகவல் கொடு"
 
"ரங்கனைப் போட்டுத் தள்ளின மாதிரி இவங்களையும் தீத்துடலாமா?"
 
"முட்டாள் - ரங்கனை என்ன பண்ணிடா கொன்னே? அவன் என்ன என்னவோ எழுதி வச்சுட்டு செத்துப் போயிருக்கான். சுறுசுறுப்பா கொலை பண்ணத் தெரியாத எல் போர்டெல்லாம் எனக்கு சிஷ்யன்! தூ!"
 
"மன்னிச்சுக்குங்க குரு. இவங்களை என்ன பண்ணலாம்?"
 
"நான் சரியான நேரம் சொல்றேன், அப்ப தீத்துக்கட்டிடலாம்!"
 
"சரி குரு. ஓவர் அண்ட் அவுட்"
 
"இது என்னடா புதுசா?"
 
"ஒரு இங்கிலீஷ் சினிமாலே பாத்தேன் குரு. அதான் சொல்லிப்பாத்தேன்!"
 
அத்தியாயம் 12
 
ரங்கன் வீட்டில் பழைய குப்பை, லாட்டரி டிக்கெட்டுகள், ரேஸ் புத்தகங்கள் இறந்து கிடந்தன. கருப்பாயி அவசர அவசரமாக அதை ஒரு துணி போட்டு மூடினாள்.
 
"ஏன் இதயெல்லாம் மூடறே?"
 
"பின்னே, எங்க தாத்தா பூட்டான் லாட்டரி வாங்கியிருப்பாரு. நீ எதையோ புரிஞ்சுகினு, கிளம்பு பூட்டானுக்கு, ரகசியம் அங்கேதான் இருக்குன்னுவே. தேவையா எனக்கு?"
 
"ஆ-- இதோ ஒரு 40 பேஜ் நோட்டு"
 
"அது எங்க அப்பா அம்மா கல்யாணத்துக்கு வந்த மொய் நோட்டுய்யா"
 
"சொல்ல முடியாது - அதுலே கூட க்ளூ இருக்கலாம்"
 
அந்த் நோட்டின் பின் பக்கத்தில் எழுதியிருந்தது.
 
தொட்டனைத்தூறும் மணற்கேணி
ட்வின்கிள் ட்வின்கிள் லிட்டில் ஸ்டார்
சீறி அடிச்சா கில்லி பறக்கும்
லாலாக்கு டோல்டப்பி மா
அண்ணா நாமம் வாழ்க!
 
"இதுலேதான் க்ளூ இருக்கு. உடனே இத எடுத்துக்க. போலீஸ் வரதுக்குள்ளே ஓடிடணும்"
 
"ஆமா, போலீஸ் வரவா போவுது? முன்னால கூட ஒரு சைரனப்பாத்து பயந்த அது ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ்"
 
சரி சீனிவாசன் வீட்டுக்கு ஓடலாம் வா"
 
தொடரும்..
 
 
 
 
 
 
 

Jun 18, 2006

டா கில்லி கோட் - பாகம் 3

 
அத்தியாயம் 6
 
துபாயில் விமான நிலையத்தில் ஐ சி சி தலைவரும் அவர் உதவியாளரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
 
"அந்த ராமசாமி போலீஸ் கிட்டே இருந்து தப்பிச்சுட்டானாமே"
 
"வுடுங்க சார். அவன் எப்படியும் மாட்டிக்குவான்"
 
"விஷயம் புரியாம உளராதே. அவன் என்னதான் இருந்தாலும் இந்தக்கதைக்கு ஹீரோ. அவன் தோக்க மாட்டான். நாம வில்லன் கோஷ்டிதான். பை டீபால்ட், நாம தோத்துத்தான் ஆகணும்."
 
"அப்புறம் ஏன் கவலைப்படறீங்க? எப்படியும் ஆப்பு நிச்சயம்"
 
"அந்தப் புனித கில்லி மட்டும் அவன் கையிலே கிடைச்சுடுச்சுன்னா! கிரிக்கெட் விளையாடற அத்தனை பேரும் கில்லிக்கு மாறிடுவாங்க. யோசிச்சுப் பாரு. லாரா கில்லீஸ் அடிக்கற மாதிரியும் சச்சின் தூதாண்டிக்கோல் சொல்ற மாதிரியும்தான் ராத்திரியெல்லாம் கனவு வருது!"
 
"அப்படி என்ன ரகசியம் சார் அது?"
 
"சொல்றேன்"
 
அத்தியாயம் 7
 
"இதுலெ என்னா எழுதியிருக்கு?"
 
"MCCன்னு இங்கிலீஷ்லே எழுதியிருக்கு"
 
"இதுலெ என்னா புரிஞ்சுது உனக்கு?"
 
"உங்க தாத்தா இங்கிலிஷ் காரன் மேலே பழியப்போடறாரு"
 
"அடங்க மாட்டே நீ? யார் என்ன கிறுக்கி இருந்தாலும் அதுக்கு நாலு அர்த்தம் போட்டு, உனக்குப் பிடிச்ச அர்த்தம் எடுத்துக்குவே போல இருக்கு!"
 
"சும்மா பேசாதே. MCCனா மாதவரம் கில்லி கிளப்னு அர்த்தம்."
 
"யோவ், நானும் அஞ்சு கிளாஸ் படிச்சவதான். கில்லிக்கு G தானே வடும், C எப்படி வரும்?"
 
"12ஆம் நூற்றாண்டுலே, கில்லி Cilliன்னுதான் எழுதினாங்க. அப்புறம், 13 ஆம் நூற்றாண்டுலேதான் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி வந்து Gilliன்னு மாத்தினான். ரோட்லே போகும்போது ஒரு கில்லி வந்து அவன் கண்ணுல அடிச்சது. இவ்வளோ ஸ்ட்ராங்கா இருக்கே, இதை ஏன் C போட்டு சொல்றாங்க, அழுத்தி G போட்டு சொல்லட்டும்னு ஒரு சட்டம் போட்டான். அப்படிப்பாத்தா இது 12 ஆம் நூற்றாண்டு கில்லி"
 
"அப்புறம் ஏதோ புனித கில்லின்னு சொன்னியே?"
 
"அது இது இல்லை. வா போலீஸ் துரத்துது. கிரிக்கெட் விளையாடுவாரே சீனிவாசன், அவர் வீட்டுக்குப் போயி ஒழிஞ்சுக்கலாம்"
 
அத்தியாயம் 8
 
"ஹலோ ஐ சி சி தலைவரா?"
 
"ஆமாம், நீங்க யாரு?"
 
"நான் யாருன்னு உங்களுக்கு தெரியும். அனாவசியமா என்னை சொல்ல வச்சு சஸ்பென்ஸை உடைக்காதீங்க!"
 
"ஓ, சூப்பர் வில்லனா? சொல்லுங்க, ராமசாமி என்ன பண்ராரு?"
 
"போலீஸ்கிட்டே இருந்து தப்பி ஓடிட்டான். நீங்க கவலைப்படாதீங்க. நான் எப்படியும் அவனைப்பிடிச்சு புனித கில்லிய வாங்கி உங்ககிட்டே ஒப்படைக்கிறேன்"
 
"அப்புறம்"
 
"அப்புறம் என்ன வழக்கம் போல கதைய முடிச்சுடவேண்டியதுதான்"
 
"அவனைக்கொல்லப்போறீங்களா?"
 
"யோவ் - நீ வேற.. நான் இந்தக்கதைய முடிக்கறதைப்பத்திச் சொன்னேன்யா! உட்டா சீரியல் கில்லர் ஆக்கிடுவே போல இருக்கே!"
 
தொடரும்..
 
என்ன ஆச்சுன்னே தெரியலே. இன்னிக்கு கலப்பைய பிடிச்சா கதை அதுவா கொட்டுது.. ஒரே நாள்லே மூணு பதிவு இன்னிக்குதான் முதல் முறை!
 

 

blogger templates | Make Money Online