Showing posts with label இல்லறத்தியல். Show all posts
Showing posts with label இல்லறத்தியல். Show all posts

Dec 19, 2007

Wifeology - பைனல் எக்ஸாம்!

இவ்வளவு நாள் இல்லறத்தியலைப் படித்து மகிழ்ந்த இனிய மாணாக்க்ர்களே, நம் இல்லறத்தியல் பாடத்தை "பசுமை நிறைந்த நினைவுகளே" என்று பாடி மூட்டை கட்டுவதற்கு முன்* தேர்வு ஒன்று வைக்கவேண்டாமா?

மாதிரி வினாத்தாள், விடைகளுடன் உங்களுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. கேள்விகளையும் விடைகளையும் பார்த்து, இல்லறத்தியல் பட்டம் வாங்க நிர்வாகம் வாழ்த்துகின்றது.


மாதிரி வினாத்தாள்
பாடம்: இல்லறத்தியல்


நேரம்: 3 மணி மொத்த மதிப்பெண் - 100


I. கோடிட்ட இடங்களை நிரப்புக: (5x1 = 5)

1. எல்லா வாக்குவாதங்களிலும் சரியான கட்சி _______________ உடையதே. (மனைவி)

2. தொலைக்காட்சிப் பெட்டியில் பார்க்கக் கூடாதவை ___________ (விளையாட்டு நிகழ்ச்சிகள்)

3. இல்லற வாழ்க்கை இனிதே அமைய, தவறென்றால் ஒத்துக்கொள், சரி என்றால்? _________________________ (பொத்திக்கொள்)

4. ______________ வந்திட _______ பறந்து போம். (இல்லாள், இன்பம்)

5. சம்பளம் வரும் பின்னே, __________ வரும் முன்னே (ஷாப்பிங்)



II. ஒரு வரியில் விடையளி: (5 x 2 = 10)

1. வெற்றி பெற்ற எல்லா ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள். எப்படி?

பதில்: ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு

2. ஏன்?

பதில்: நம்மை மீறி எப்படி?

3. அபாய நண்பர்கள் யார் யார்?

பதில்: சந்தர்ப்பம் தெரியாத அரிச்சந்திரர்கள்

4. குடும்பத்தில் குண்டு வைப்பவர்கள் யார்?

பதில்: திட்டம் தீட்டியே உண்மை பேசும் தீவிரவாதிகள்.

5. தனிமையிலும் உஷாராக இருக்கவேண்டிய இடங்கள் யாவை?

பதில்: மனைவியின் நண்பர்கள் உலாவும் இடங்கள் அனைத்தும்.

III. சரியா தவறா கூறுக: 5 x 3 = 15

1. தாய்க்கும் தங்கமணிக்கும் கருத்து வேற்றுமை ஏற்படும்போது உண்மையின் பக்கம் நிற்கவேண்டும். தவறு. உண்மையா? அப்படி என்றால் என்ன?

2. உலகத்திலேயே மிகக்கஷ்டமான கேள்வி - "இந்த ட்ரெஸ்லே நான் எப்படி இருக்கேன்?" என்பதுதான். சரி. சாதா சரி இல்லை, 150% சரி.

3. நண்பர்களுடன் பார்ட்டி - மனைவியின் முழுச் சம்மதத்துடன் மட்டுமே செல்லவேண்டும். தவறு.. அய்யோடா - உங்களுக்கு என்ன வயசு? குட்டீஸ் எல்லாம் இல்லறத்தியல் படிக்க வரக்கூடாது..

4. 10 பந்தில் 10 ரன் அடித்தார்களா என்பதைவிட, அபிக்கு ஆதியால் இன்று என்ன தொந்தரவு வந்தது என்பதே முக்கியம். சரி. வேற வழி?

5. ஐந்து நிமிட ரங்கமணி மின்னரட்டை, 3 மணிநேர தங்கமணி போன் அரட்டையை விட அதிக நேர விரயம். சரி. பண்ணிப்பாருங்க சார் தெரியும்.


IV. கீழ்க்காணும் பத்தியைப் படித்து, வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும். 5 x 4 = 20

தங்கமணி, ரங்கமணிக்கு குட்டி, கெட்டி என்று இரு குழந்தைகள். ஒரு திங்கட்கிழமை மாலை, குட்டியின் பள்ளியிலிருந்து ஆசிரியை அழைத்து, குட்டி ரொம்ப சுட்டித்தனம் செய்வதாகவும், கூட இருக்கும் பிள்ளைகளை வம்புக்கு இழுப்பதாகவும் புகார் கூறினார். அதே நாளில், கெட்டியின் ஆசிரியை, கெட்டி பாடத்தில் முதலாவதாக வந்ததாகக்கூறினார். அலுவலகத்தில் இருந்து திரும்பிய ரங்கமணியிடம் தங்கமணி இவற்றை விளக்கினார்.

அவ்வாறு விளக்குகையில்,

1. உங்கள் பிள்ளை என்று கூறப்படுபவர் யார்? (குட்டி)

2. என்னோட தங்கம் என்று அழைக்கப்படுவது யார்? (கெட்டி)

3. யாருக்கு ரங்கமணியின் குடும்ப குணங்கள் வம்சாவழியில் கலந்திருக்கின்றன? (குட்டி)

4. குட்டி செய்த குறும்புகளுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? (ரங்கமணி)

5. கெட்டி நன்றாகப் படிப்பதற்கு யார் காரணம்? (தங்கமணி)

V விரிவான விடையளி - 5 x 10 = 50

1. ராஜ்கிரண் தங்கமணிகளைப் பற்றி விவரித்தது எங்ஙனம்?

"எல்லா மனுசனும் சந்தோசமா மட்டும் இருந்திரக்கூடாதுன்னுதான் ஆண்டவன் ஆபீஸைப் படைச்சான். ஆபீஸ் பாஸ் பண்ற தொல்லைலே அவன் சந்தோசத்தை மறப்பான்.. ஆனா எல்லா நேரமும் ஆபீஸ்லேயே இருந்திற முடியாதுன்னுதான் தங்கமணியப் படைச்சான்..

பாடல் தொடர்கிறது.. தெய்வம் அது தாய்க்கும் கீழேதான் ரேஞ்சில் ..


"கொடுமை அது ஆபீஸு வேலைதான்..

என், தங்கமணியும் பாஸுக்கு மேலதான்.."

2. இடம் சுட்டி பொருள் விளக்குக : "நீங்க சொல்றதுதாங்க சரி"

இடம்: மனைவி, கணவனிடம் சொல்கிறாள்.

பொருள்: கணவன், மனைவியின் ஆசையை பூடகமாக (நூறு முறை சொன்னதன் பின்) அறிந்து, அவள் ஆசையைத் தன் ஆசை போல வெளியிட்டதால், மனைவி, பெருந்தன்மையுடன் கணவன் முடிவுக்குக் கட்டுப்படுகிறாள்.

3. தங்கமணிக்கள் எப்போது குறை சொல்லாமல் இருப்பார்கள்?

தங்கமணிக்கள் எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்பது ஒரு தவறான பொதுமைப்படுத்தலே ஆம். ஒவ்வொரு நாளும் சுமார் 8 மணி நேரம் தூங்கும் போதும், 8 மணிநேரம் வேறு பணிகளில் தங்கமணி ரங்கமணி சந்திக்காமல் இருக்கும்போதும் எந்தத் தங்கமணியும் குறை கூறுவதே இல்லை. மீதி உள்ள சிறிது நேரத்தில் பேசுவது, காலத்தால் சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிதாகத் தோற்றமளிக்கிறது அவ்வளவே.

4. குறள் விளக்கம் கூறுக:

செல்லாவிடத்துச் சினம் தீது, செல்லிடத்தும் இல்லை அதனின் தீய பிற.

வள்ளுவர் கூறுகிறார், நம் கோபம் செல்லுபடியாகாத மனைவிகள் இடத்தில் கோபப்பட்டால் அதன் விளைவுகள் விபரீதமாக வீக்கமாக தீப்புண்ணாக முடியும் அபாயம் இருக்கிறது, எனவே அங்கே கோபப்படக்கூடாது. அதே நேரத்தில், அக்கோபத்தை "செல்" இடத்தில் காட்டினால், செல்போன் உடைந்து தூள்தூளாகி பெரும் பணச்செலவு வைக்கும், எனவே "செல்" இடத்தும், இல்லை அதனின் தீய பிற.

5. பழமொழி விளக்குக: மனைவி சொல்லே மந்திரம்.

கோவிலில், பூஜைகளின் போது சொல்லப்படும் மந்திரங்கள் பெரும்பாலும் நமக்குப் புரிவதில்லை. யாரைத் திட்டுகிறார்கள் யாரை வாழ்த்துகிறார்கள் என்பனவெல்லாம், பின்னாள் விளைவுகள் அல்லது விளக்கங்கள் படித்தபின்னே ஓரளவு புரிந்ததுபோல தோற்றமளிக்கும். அதேபோல், மனைவி பேசும்போதும், முதலில் நமக்கு எதுவும் புரியாது. ஆனால், அந்தச் சொல்பேச்சு கேளாமல் விட்டால் முதலில் விளக்கங்களும், அதையும் மீறினால் விளைவுகளும் வரும். இந்த ஒற்றுமையினாலேயே மனைவி சொல்லே மந்திரம் என்று சொல்லப்படுகிறது.
*************************************************************

விடைகளைக் கொடுக்காமல் தனியாகத் தரலாம் என்றுதான் நினைத்தேன். ஆனா இது என்ன தங்கமலை ரகசியமா? எல்லாருக்கும்ம் தெரிஞ்சதுதானே அப்படின்னு போட்டே விட்டேன்.

* குறிப்பு = யாரு கண் பட்டுதோ, எங்கே இருந்து போன் கால் வந்ததோ தெரியல.. தங்கமணி இதைப் படிக்க ஆரம்பிச்சு, அன்பான கட்டளையில் ஆரம்பித்து, மென்மையான மிரட்டல், விபரீதமான வேண்டுகோள் என பரிணாம வளர்ச்சி பெறத் தொடங்கும் முன், நல்லோர்க்கு அழகு சொல்லாமல் செய்தல் என்ற வாக்கின்படி, இந்தத் தொடர் முடிக்கப்படுகிறது.


Dec 12, 2007

பாடம் 7: மனைவியின் எதிரில் போன் பேசுவது எப்படி? Wifeology

"ஹலோ! ராக்கி பேசறேன்"

"சொல்லுடா நான் தான் விக்கி. மிஸ்டு கால் கொடுத்திருந்தியே?"

"அப்புறம் என்னடா திடீர்னு போன் எல்லாம்? பண்ணவே மாட்டியே?"

"நீதானடா மிஸ்டு கால் கொடுத்து என்னைப் பேச வச்சே?"

"என்னவோ போப்பா, பெரிய மனுசன் ஆயிட்டாலும் ஞாபகம் வச்சுருந்தா சரி"

"என்னடா பேசறே? நேத்துதானே பேசினோம்? குழப்பறயே"

"அவளா, நல்லா இருக்கா. இங்கதான் இருக்கா.. பேசறியா?"

"ஓ.. தங்கமணி பக்கத்துல இருக்காங்களா, அதான் பம்முறியோ?"

"அப்புறம் பேசறியா.. சரி என்ன மேட்டர்?"

"ஆனாலும் ரொம்பத்தாண்டா பயப்படறே"

"வீட்டுக்கு வீடு வாசப்படி! இங்கேயும் அப்படியேதான் ஓடுது."

"சரி. என்ன மேட்டர் சொல்லு?"

"போன வாரம் போன் பண்ணேனே எடுக்கவே இல்ல?"

"எங்க எடுக்கறது? சத்தம் கூட கேக்காம எல்லாரும் மேட்ச் பாத்துகிட்டு இருந்தோம்"

"என்ன ஆச்சு?"

"காலைல மூணு மணிவரைக்கும் ஓடிச்சு! கடைசிலே பனாதைப் பசங்க 10 ரன்லே விட்டானுங்க!"

"இந்த மேட்ச் எல்லாம் பாக்கறதே வேஸ்ட்டு! என்னை மாதிரி நிறுத்தித் தொலைங்கடா!"

"சரி அண்ணே உங்க அட்வைஸுக்கு ரொம்ப தாங்க்ஸ்"

"அடுத்த சனிக்கிழமையா? நான் வரமாட்டேன்பா"

"யாரு? எங்க கூப்பிட்டாங்க?"

"நீ என்னதான் சொன்னாலும், சனிக்கிழமை என்னால வரமுடியாது"

"எங்கடா?"

"கோபியப் பாரு! திருந்திட்டான். அவனாட்டம் ஆவணும்னு எனக்கு ஆசை இருக்காதா?"

"கோபியும்தானட அன்னிக்கு மேட்ச் பாத்து கூத்தடிச்சுகிட்டிருந்தான்?"

"அதைத்தாண்டா நானும் சொல்றேன். சனிக்கிழமை என்னால வரமுடியாது!"

"ஓஹோ அப்படிப்போவுதா மேட்டரு.. ஆனா சனிக்கிழமை மேட்சே கிடையாதேடா! திங்கள், புதன், வெள்ளிதான் 3 ஒன் டே ..என்னிக்கு வரே?"

"என்ன லோகுவுக்கா?"

"லோகுவுக்கு என்ன?"

"என்ன ஆச்சாம்?"

"என்ன என்ன ஆச்சாம்?"

"எந்த ஹாஸ்பிடல்?"

"ஹாஸ்பிடல் வரைக்குமே போயிட்டயா?"

"ஆமாம். நாம போயி பாத்துட்டுதான் வரணும்"

"எங்க?"

"சனிக்கிழமை வேணாம். என் வைஃப்பை கூட்டிகிட்டு ஷாப்பிங் போறதா ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்"

"மறுபடி வந்தாண்டா சனிக்கிழமைக்கு"

"வீக் டேஸ்லே போயிட்டு வந்துடலாம்"

"வீக் டேஸ்லேயேவா? சொல்லு.. திங்களா, புதனா வெள்ளியா? எதுவாயிருந்தாலும் ஓக்கே.. தங்கமணி வர இன்னும் ரெண்டு வாரம் இருக்கு"

"நீ சொல்றதும் சரிதான். அவ்வளவு தூரம் நைட்லே பைக் ஓட்ட முடியாது"

"ஓ, சரி அப்ப என் வீட்டிலேயே தூங்கிடு"

"அப்ப நாளைக்கு கடைக்குப்போயி தேவையானது எல்லாம் வாங்கிடறயா?"

"என்ன தேவையானது?"

"என்ன முட்டாள்தனமா கேக்கற.. நாம போற இடத்துக்கு என்ன தேவை? இப்ப ஹாஸ்பிடல் போறதுன்னா ரெண்டு பழம், ஜூஸ் வாங்கமாட்டியா?"

"சரக்கைச் சொல்றியா?"

"அப்பாடா புரிஞ்சிகிட்டயே"

"எனக்காடா மவனே அல்வா கொடுக்கற?"

"சரி அப்ப புதன்கிழமை போயிட்டு வந்துடலாமா?"

"புதன்கிழமையா? ஓக்கே"

"அப்பதான் வியாழக்கிழமை சாயங்காலம் என் வைப்பை ராகவேந்திரர் கோயிலுக்குக் கூட்டிப்போக முடியும்"

"ஜித்தன் டா நீ! இதுல ஆன்மீகம் வேறயா?"

"சரிடா. ரொம்ப நேரம் போன்ல பேசினா என் வைஃப்புக்கு பிடிக்காது. வச்சுடட்டுமா?"

******

சிவப்பு கருப்பின் தாத்பர்யத்தையெல்லாம் உணர்த்த வேண்டிய அளவுக்கு வாசகர்களைக் குறைவாக மதிப்பிட மாட்டேன்.

இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, நாம் என்ன பேசறோம்ன்றது நமக்குத் தெளிவாத் தெரியணும். கோட்டை விட்டுடக்கூடாது.

வீட்டுப்பாடம்:

ஒருவேளை மனைவியும் வலைப்பதிவுகள் படிப்பவர்களாக இருந்துவிட்டால், எப்படிப்பதிவு எழுதவேண்டும் என்பதற்கு உதாரணம் இந்தப்பதிவு. அனுபவிங்க, ரொம்ப ஆராயாதீங்க!

Dec 3, 2007

6. How to say NO! (Wifeology)

இன்னிக்கு நாம பாக்கப்போறது, மனைவி கேக்கறதை மறுக்கறது எப்படின்றது..
இல்லைன்னு சொல்றது சுலபமான வேலைன்னு சிலரும் முடியவே முடியாத மேட்டர்னு சிலரும் நினைச்சிருப்பாங்க.. அவங்கவங்க அனுபவம் அப்படி. விஞ்ஞானத்தை உபயோகப்படுத்தாம அஞ்ஞானமா அலையறவங்க மறுத்தா மரண அடிதான்.
தங்கமணிங்களை இன்னொசெண்ட்னு மட்டும் நினைச்சுறாதீங்க.. உங்க ஆபீஸ்லே எப்ப போனஸ், எப்ப எதிர்பாராத (அதாவது நீங்க எதிர்பாராதம் அவங்க எதிர்பார்க்கிற) பணம் எல்லாம் வரும்னு கரெக்டா தெரிஞ்சு வச்சுகிட்டு அதுக்கும் ஒரு பட்ஜெட் போட்டு வைக்கறதுல கில்லாடிங்க. என்ன, அந்த பட்ஜெட் எல்லாம் அவங்களோட புடைவை நகைன்னு அப்போர்ஷன் ஆகும்.. நம்ம அல்ப ஆசைகளுக்கு சங்கூதிட்டு அவங்க தன்னுதை நடத்திக்கற ஸ்டைலே தனி..
இப்ப நாம பாக்கப்போற உதாரணத்துல, தலைவருக்கு எதிர்பாராத பணம் வருது, அதிலே தங்கமணி நகை கேக்கறாங்க.
சூழல் 1 : இதுவா வெற்றி?
"என்னங்க அந்தப் பணத்தை என்ன பண்ணப்போறீங்க?"
"கிரிக்கெட் 20-20 சீரிஸ் வருதே, அதை பெரிய ஸ்கிரீன் LCD TV லே பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை, அதான் வாங்கப்போறேன்"
"பிரின்ஸுக்கு போகலாம்னு பாத்தேன்"
"ஆமா, அங்கதான் போகணும்.. எதிர்த்தாப்பலதான் வஸந்த & கோ?"
முறைப்பையும் மீறி வாங்கியே விட்டான் LCD..
சில நாட்களுக்குப் பிறகு..
"யெப்பா இன்னிக்கு கிரிக்கெட் மேட்ச்! எங்கேயும் போகப் போறதில்லை! அய்யா ஹவுஸ் அரெஸ்ட்"
"தாராளமா பாருங்களேன். குழந்தைக்கு சாதம் ஊட்டிட்டு அப்புறமா!"
"சரி ஹாலுக்கு போயிடறோம்"
"அய்யோ.. அவன் ஹாலெல்லாம் இரைப்பான். அப்புறம் யாரு க்ளீன் பண்றது? இங்கேயே.. என்ன ஒரு பத்து நிமிஷம்"
முதல் பத்து ஓவர் காலி.
"ஒரு நிமிஷம்.. துவரம்பருப்பு சுத்தமா தீந்து போச்சு.. கடைக்கு போயிட்டு வந்துடறீங்களா?"
"மேட்ச் போகுதே!"
"ஆமாம்.. பொல்லாத மேட்சு.. நீங்க பிடிவாதம் பிடிச்சு வாங்கினீங்களே அப்ப நான் எதாச்சும் சொன்னேனா? ஒரு நிமிஷம் கடைக்குப் போக
இவ்ளோ யோசிக்கிறீங்களே!"
அடுத்த 10 ஓவர் காலி.. முதல் இன்னிங்ஸ் முடிஞ்சுது.
திரும்பி வந்து அமர்ந்தால் டிவியில் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது.
"அய்யோ அத மாத்தாதீங்க.. கல்பனாவும் அவ புருஷனும் பேசறதை நாத்தனார் ஒட்டுக்கேட்டுட்டா கடன்காரி.. மாமியார்கிட்ட போயி வத்தி வைக்கப்போறா.. முக்கியமான சீன். இது முடிஞ்சதும் நியூஸ்தானே அப்ப மாத்திக்கங்க"
அண்ணன் ப்ரெசண்டேஷன் செரிமனி மட்டும்தான் பார்த்தார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
***************
சூழல் 2 - விளைவுகள் அறிந்தவன்!
"என்னங்க அந்தப் பணத்தை என்ன பண்ணப்போறீங்க?"
"கிரிக்கெட் 20-20 சீரிஸ் வருதே, அதை பெரிய ஸ்கிரீன் LCD TV லே பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை, அதான் வாங்கப்போறேன்"
"பிரின்ஸுக்கு போகலாம்னு பாத்தேன்"
"சரி டிவி அடுத்த போனஸ்லே வாங்கிக்கலாம்.நீ கேட்டா நியாயம் இருக்கும்! "
நகைதான் வாங்கினாங்க.
சில நாட்களுக்குப் பிறகு..
"கிரிக்கெட் 20-20 சீரிஸ் வந்திருக்கு. இந்த டொக்கு டிவியிலே பாக்கணும்னு நெனச்சாலே எரியுது"
"வாங்கிக்க வேண்டியதுதானே.. நானா வேண்டாம்னு சொன்னேன்?"
பதில் பேசுவதாவது.. நம்மாளுதான் அறிவாளியாச்சே..
******************
சூழல் 3: இவன்தாண்டா பிஎச்டி!

"என்னங்க அந்தப் பணத்தை என்ன பண்ணப்போறீங்க?"

"என்ன பண்ணலாம் நீயே சொல்லு!"

"பிரின்ஸுக்கு போகலாம்னு பாத்தேன்"

"நகையா, வாங்கிட்டா போச்சு.. நான்கூட சொல்லணும்னு இருந்தேன். அன்னிக்கு ஜுவல்லரி ஷோகேஸ்லே பாத்து நல்லா இருக்குன்னு சொன்னியே, அந்த பேட்டர்ன்லேயே வாங்கிடலாமா?."

நகைக்கடையில்..

"ஆமாங்க.. அப்படி ஒரு பேட்டர்ன் தான் வேணும்.. மேலே மயில் மாதிரி டிஸைன், கீழே ஒரு கல்லு - சிகப்புமில்லாம, மஞ்சளும் இல்லாத ஒரு
கலர்"

"கிடைக்கறதை வாங்கிக்கலாமேங்க"

"நீ சும்மா இரு. அந்தக் கல்லு கலர்தான் என் கண்ணுமுன்னாலேயே நிக்குது. உனக்கு என்ன கல்லு ராசின்னும் பாத்துட்டேன், அதுல
காம்ப்ரமைஸே கிடையாது!"

"அப்ப்டி ஒரு கல்லு இங்கே இல்லைங்க"

"ஆர்டர் கொடுத்தா கிடைக்குமா?"

"கிடைக்கிறது கஷ்டம்ங்க"

"எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை! அந்தக் கல்லு கிடைச்ச உடனே இந்த நம்பருக்கு காண்டாக்ட் பண்ணுங்க!"

"ரெண்டு மாசமாவது ஆகும்"

"அதனால என்ன? இவ்ளோ நாள் பொறுத்தாச்சு.. இன்னும் ஒரு ரெண்டு மாசம் பொறுக்க முடியாதா? ராசி மேட்டர்! கண்ட கல்லைப்போட்டா ரிஸ்கு? கல்லு விஷயத்துல நோ காம்ப்ரமைஸ்!"

"சரி நீ ஆசைப்பட்ட நகைதான் இல்லைன்னு ஆகிப் போச்சு. வேற என்ன செய்யலாம்? எதுத்தாப்புலதானே வசந்த அண்ட் கோ இருக்கு
ஒரு நுழை நுழைஞ்சு பார்ப்போம் அங்க உனக்கு எதாவது பிடிச்சு இருக்கான்னு பாரேன்"

நேராக டீவி செக்ஷன் போய்விடக்கூடாது.., தங்கமணிக்கு இண்டரெஸ்ட் இல்லாத பொருட்கள் இருக்குமிடயாய் நடந்து சென்று கொஞ்சம் கேப் விட்டு டிவி ஏரியாவுக்குள் நுழைய வேண்டும்.

"யேய், இங்க பாரேன், இந்த டீவி சேல் போட்டு இருக்கான்.என் கஸின் அருண் வீட்டில் வாங்கி இருக்கிறதாச் சொன்னேனே. உன் தங்கை லதா கூட சூப்பரா இருக்கிறதா சொன்னாளே! அருண் கூட சொல்லிக்கிட்டு இருந்தான், அவன் வீட்டுக்கு நம்மளை கூப்பிடச் சொல்லி அவன் மனைவி சொல்லிக்கிட்டு இருந்தாளாம்.. வேறெதுக்கு.. எல்லாம் இந்த டீவி பெருமை அடிச்சுக்கத்தான்"

"அவங்க நம்மளைக் கேட்கறதுக்கு முன்னாடி நாமளும் ஒண்ணு வாங்க வேண்டியதுதான்"

"ஆமாம்.. அவங்ககிட்ட 42" தான் இருக்கு.. நாம 50" ஆ வாங்கிடுவோம்.. அடுத்தவாரம் 20-20 சீரிஸ் இருக்கு.. அன்னிக்கு அவனை பேமிலியோட கூப்பிட்டாதான் எனக்கு ஆறும்!"

பத்து நாளைக்கொருமுறை ஜுவல்லரிக்கு (தங்கமணி பாக்கும்போது மட்டும்) போன் செய்து "என்னாய்யா இன்னுமா வரலை அந்த டிஸைன்" என்று கேட்டவண்ணம் டிவி பார்த்துகிட்டு எஞ்சமாய் பண்ணிகிட்டு இருக்காரு தலைவர்!

இந்த நுணுக்கத்தை கொஞ்சம் நுணுக்கமாப் பாத்தீங்கன்னா, முதல் ரெண்டு பேரோட ஆசையும் இவர் ஆசையும் ஒண்ணுதான். ஆனா, அதை எப்படி செயல்படுத்தறார் என்பதில்தான் வித்தியாசம் காட்டி ஸ்கோர் பண்றாரு. முதல்ல மறுப்பு சொல்லாம ஆரம்பிச்சு, வாங்கித் தராததுக்கான காரணத்தை நாசூக்கா வேறே ஒருத்தன் மேலே போட்டு (இந்த இடத்துல முக்கியமான மேட்டர் ஸ்பெசிபிகேஷன். இதை வச்சுகிட்டு - 3 டோர், 3 பகுதியிலும் டிப்ராஸ்ட் இருக்கிற ரெப்ரிஜரேட்டர்தான் வேணும்.. ஆட்டோமேட்டிக் அவன் வேண்டாம் ஆனால் ஆட்டோமாட்டிக் க்ரில் மட்டும் வேணும், இப்படி ரெண்டு மூணு மேட்டரைத் தெரிஞ்சிகிட்டு, கிடைக்கறதுக்குக் கஷ்டமான ஸ்பெசிபிகேஷனை வெளிய விடணும்), அப்பால அவங்களுடைய நுண்ணிய உணர்வுகளைத் தூண்டிவிட்டு அப்புறமாத்தான் காரியத்தை சாதிச்சுக்கணும். டிவிதான் வாங்கிட்டமேன்னு சும்மா இருந்தாரா? பாலோ அப் பண்றாராம்.. அதுலதான் இவர் அடிவாங்காம தப்பிக்கறார்.

நானே இந்த நுணுக்கம் இன்னும் கைவராம இருந்தப்ப கைகொடுக்கும் கையா, கை கொடுத்த தெய்வமா வந்தவர் நம்ம கொத்தனார். பின்னிப் பெடலெடுத்துட்டார் இந்த ஐடியாவுல!

இன்றைய வீட்டுப்பாடம்:

ஆத்திச்சூடி தயாரிக்கும் சீஸன் இது. நாம, நம்ம வைபாலஜிக்கு ஒரு ஆத்திச்சூடி தயாரிச்சு பின்னூட்டமா போடுவோமா? சாம்பிள்:

அடங்குவது ஆண்.
ஆணீயம் பேசேல்.
இல்லாளே தெய்வம்
ஈ எம் ஐ உன் கடமை
உண்மை மாதிரி பேசு
ஊர்சுற்றும் உரிமைமற.
எந்நாளும் நீ அடிமை
ஏச்சுக்கு பழகு
ஐயம் வரவிடாதே
ஒப்புக்கு நீ தலைவன்
ஓடாமல் அடிவாங்கு
ஔஷதம் தேடு (அடிவாங்கிய பின்)


Nov 25, 2007

5. விளையாட்டுப் பாடம் - சைட் அடிப்பது எப்படி? Wifeology Exclusive Flash

விளையாட்டா பாடம் கத்துக்கறது எப்பவுமே சுலபம்ன்றதால இந்தப் பாடத்துக்காகவே ஒரு ப்ளாஷ் கேம் தயாரிச்சிருக்கேன். Practice makes perfect னு சொல்வாங்க இல்லையா, அதனால ஒரு முறை தோத்தாலும் பலமுறை முயற்சித்தால் வெற்றி நிச்சயம்!

சைட் அடிக்கறது சரியா தப்பான்ற விவாதத்துக்குள்ள நான் போக விரும்பலை. நான் தப்புன்னு சொன்னா நிறுத்திரப்போறீங்களா என்ன? இது ஒரு தவிர்க்க முடியாத விஷயம் அப்படின்றத யாரும் மறுக்க மாட்டீங்க! டாக்டர்கள் என்ன சொல்றாங்கன்றத இங்க போய் பாத்துக்கங்க! தங்கமணிங்க ஒத்துக்கவா போறாங்க? ஹூம்!

சரி தங்கமணியோட வெளிய போறீங்க, சைட் அடிச்சு மாட்டிக்கறீங்க. இந்த சிச்சுவேஷன்லே இருந்து வெற்றிகரமாக (அடிவாங்காம -ன்றதத்தான் அப்படிச் சொல்றேன்) வெளியே வருவது எப்படின்றதத் தான் இந்த பாடத்துல பாக்கப் போறோம்.

வழக்கமான டிஸ்கி: இது சிலருக்கு வொர்க் அவுட் ஆவலாம், ஆகாமலும் போகலாம், அவரவருக்கு வாய்த்தது அவரவருக்கு!

இந்த சிச்சுவேஷனையும் மூணு விதமா டீல் பண்ணலாம்.

1. "என்ன லுக்கு?"

"என்ன, அதெல்லாம் ஒண்ணும் இல்லையே"

இத்தோடு மேட்டர் முடிந்துவிட்டது போலத் தோன்றும்.. ஆனால் டேக் இட் ஈஸி பாலிஸி தங்கமணிகளுக்குத் தெரியாத பாலிஸி. அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாலிஸி கிவ் அண்ட் டேக் பாலிஸி (போட்டு வாங்கறதுதான்)

எதிர்பாராத நேரத்தில் உங்களை இப்படி ஒரு கேள்வி தாக்கும் -

"அந்தப் பொண்ணு போட்டிருந்த மாதிரி ஒரு யெல்லோ ட்ரெஸ் எனக்கு வாங்கித் தரீங்களா?"

எதோ ஞாபகத்தில் "உங்கிட்டதான் அதே ட்ரெஸ் ஏற்கனவே இருக்கே" என்றோ, "அவ போட்டிருந்தது யெல்லோ இல்லையே ப்ளூ வாச்சே" என்று சொல்லியும் விடுவீர்கள்! பொய் சொல்வதற்கு நிறைய ஞாபகசக்தி வேண்டும். இல்லையென்றால் மாட்டுவது நிச்சயம். . அடி வாங்குவது சர்வ நிச்சயம்..

2. "என்ன லுக்கு?"

"ஆமா! லுக்குதான் விட்டேன்.. என்னான்ற இப்ப? நான் எதையெல்லாம் மிஸ் பண்ணியிருக்கேன்னு தெரிஞ்சுக்க ஒரு லுக்கு விடக்கூட சுதந்திரம் கிடையாதா?"

இப்படிச் சொல்லும் ஆளின் கதி என்ன என்பதை அருகாமையில் உள்ள மருத்துவமனையின் ட்யூட்டி டாக்டரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். "ICU லே சேத்தாங்களே அந்த ஆளு" என்று சொன்னால் ரிசப்ஷனில் வழி காட்டுவார்கள்.

3. இவர்தான் நம்ம ஆளு. வைபாலஜியில டாக்டரேட் வாங்கினவரு.

"என்ன லுக்கு?"

"என்ன?"

"வச்ச கண் வாங்காம சைட் அடிச்சுகிட்டிருக்கீங்களே.. "

"சைட்டா? பாத்தேன் உண்மைதான்.. எதுக்காகப் பாத்தேன்ன்னு தெரியாம பேசாதே"

"எதுக்கு?"

1. "அவ போட்டிருந்தாளே ஒரு பின்க் ட்ரெஸ்.. அந்த அட்டு பிகருக்கே அது அவ்ளோ நல்லா இருக்கே, உனக்குப் போட்டா எப்படி இருக்கும்னு யோசிச்சேன்.. நய்ஹாலே கிடைக்கும் இல்ல? உடனே போய் வாங்கிகிட்டு வந்திடலாமா?"

இதை செலவுன்னு நினைக்காதீங்க.. அடிவாங்காம இருக்கறதுக்குக் கொடுக்கற Protection Money!

2. "இந்த மாதிரி ரெண்டு பேரைப் பாத்தாதானே நான் எவ்வளவு பாக்கியசாலின்னு எனக்கே தெரியுது. .இதையெல்லாம் தடுக்காதே!"

3. "அவளைப் பாத்தா உன்னோட கஸின் மீனா மாதிரியே இல்லை?கல்யாணத்துல இண்ட்ரொட்யூஸ் செஞ்சியே? Remarkable Resemblance! உனக்கு அப்படி தோணலே?"

நேரடியாக இல்லைன்னு சொல்றதைவிட, ஆமாம்னு அடிவாங்கறதைவிட, இந்த மாதிரி சமாளிபிகேஷன் வொர்க் அவுட் ஆக வாய்ப்பு அதிகம்.

சரி.. கீழே இருக்கற கேமை விளையாடிப் பாருங்க! தங்கமணி பாக்காத நேரத்துல ரங்கமணி மேலே க்ளிக்கி சைட் அடிக்க வைங்க! பத்து பாயிண்ட் எடுத்தா வர ஸ்க்ரீனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எனக்கு மெயில் அனுப்புங்க, ஒத்துக்கறேன் நீங்க வீரர்னு!


Nov 20, 2007

பாடம் 4 - வேலை செய்யாதவன் தான் வீரமான வேலைக்காரன் (Wifeology)

இன்னிக்கு வர பாடம், ரொம்ப முக்கியமான பாடம்.

கல்யாணம் ஆனவங்க யோசிச்சுப்பாருங்க, உங்கள் தங்கமணி எப்ப உங்களுக்கு வேலை கொடுக்க ஆரம்பிச்சாங்கன்னு?

ஞாபகம் வந்துருச்சா?

ஹனிமூன் போனீங்களே, அங்கே என்ன நடந்தது?

சே.. அதைச் சொல்ல வரலைப்பா! ஏ சர்டிபிகேட் மேட்டர் எல்லாம் கிடையாதுன்னுதான் முதல்லியே சொல்லிட்டேனே!

இப்ப ஞாபகம் வருதா?

"ஸாரிங்க, என் ஹேண்ட்பேக்கை ஹோட்டல்ரூமிலேயே விட்டுட்டு வந்துட்டேன்.. கொஞ்சம் ப்ளீஸ் போயி எடுத்துகிட்டு வந்துடறீங்களா?"

ஆமாம். இப்படி சாதாரணமா, ஸாரி, ப்ளீஸ் எல்லாத்தோடயும் ஆரம்பிக்கற வேலை வாங்கற டெக்னிக்தான் பிற்காலத்துல "வெட்டியாத்தானே பொட்டி தட்டிகிட்டு இருக்கே, அந்தப் புடவைக்கெல்லாம் ரிவைவ் போட்டாதான் என்னவாம்?" என்று பரிணாம வளர்ச்சி அடையுது.

முளையிலேயே கிள்ளவேண்டிய விஷயத்தை வளரவிட்டுட்டு அப்பால குத்துதே குடையுதேன்னு சொல்றதில எந்த அர்த்தமும் இல்லை.

ரொம்ப கேர்புல்லா ஹேண்டில் பண்ணவேண்டிய ஏரியா இது. ரொம்ப அசட்டுத்தனமாவும் ஹேண்டில் பண்ண முடியாது, ரொம்ப புத்திசாலித்தனமாவும் ஹேண்டில் பண்ண முடியாது.

"ஆஹா, நீ சொல்லவே வேணாம்.. இதோ போய் செஞ்சுடறேன்"னு முதல்ல ஆரம்பிச்சீங்கன்னா, பிற்காலத்துல வலைப்பூ பாக்க முடியாது, சேலைப்பூ தான் பாக்க முடியும்.

ஓவர் புத்திசாலித்தனமா ஒருத்தர் நடந்துகிட்டாராம். அவர் தன் அனுபவத்தை நண்பர்கிட்ட பகிர்ந்துகிட்டார் இப்படி:

"என் மனைவி காலைலே ப்ரேக்பாஸ்ட் பண்றதை பார்த்தேன். தேவையில்லாத மூவ்மெண்ட் நிறைய, காய்கறிகள் எல்லாம் நறுக்கி வச்சுகிட்டு வேலைய ஆரம்பிக்கறதில்லை, நிறைய ஐடில் டைம் நடுவுல.. டைமை வேஸ்ட் பண்றா. டைம் மேனேஜ்மண்ட் படி, லெப்ட் ஹாண்ட் மூவ்மெண்ட், ரைட் ஹாண்ட் மூவ்மெண்ட், ப்ரெபரேஷன்ஸ் எல்லாத்தையும் ஒரு நாள் அனலைஸ் பண்ணி சார்ட் போட்டுக் கொடுத்தேன் அவளுக்கு"

"இம்ப்ரூவ்மெண்ட் தெரிஞ்சுதா?"

"நல்ல இம்ப்ரூவ்மெண்ட். முன்னெல்லாம் ப்ரேக்பாஸ்ட் பண்றதுக்கு அவளுக்கு 30 நிமிஷம் ஆகும். இப்பல்லாம் எனக்கு 10 நிமிஷம்தான் ஆகுது"

இல்லை, "செய்ய முடியவே முடியாது"ன்னு ஸ்ட்ராங்கா சொன்னீங்கன்னா, விளைவும் தவிட்டு ஒத்தடம் ரேஞ்சுக்கு ஸ்ட்ராங்காத்தான் இருக்கும்.

அதனால, இந்த இரண்டு எக்ஸ்ட்ரீமுக்கும் நடுவுல ஏதோ ஒரு இடத்துல இருக்கு நமக்கான தீர்வு!

உப்புமா செய்வது எப்படின்னு செய்முறைக்குறிப்பு போட்டிருக்கேன், படிச்சுப் பாத்து அதன் சாராம்சத்தை மட்டும் எடுத்துகிட்டு, எல்லா வேலைக்கும் இதையே அப்ளை பண்ணலாம்.

உப்புமா செய்வது எப்படி

உப்புமா செய்ய ஆரம்பிக்கும் முன் சொல்ல வேண்டிய வசனங்கள் - "சமையல்லே இருந்து இன்னிக்கு உனக்கு ரெஸ்ட். அய்யா சமையலை சாப்பிட்டதில்லையே நீ? சாப்பிட்டவங்களைக் கேட்டுப்பாரு.. நளபாகம்னு சொல்வாங்களே அது என் கைவண்ணம்தான். இனிமே குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாச்சும் ப்ளீஸ் சமைங்கன்னு கெஞ்சப்போறே பாத்துக்க!"

1. அடுப்பை "ஹை"யில் ஏற்றி வைத்துக்கொள்ளவும். ஆண்கள் குறைந்த நெருப்பில் எப்போதும் சமைப்பதில்லை.

2. ரவையை அதன் பாத்திரத்திலிருந்து வேகமாக ஒரு தட்டில் கொட்டிக்கொள்ளவும். வேகம் மிகவும் அவசியம். அப்போதுதான் ரவை வீடு முழுவதும் தெறிக்கும்.

3. அடுப்பில் வாணலியை ஏற்றி, வாணலியில் ஒரு சொட்டு எண்ணெய் அல்லது நெய் விடவும். (அடுப்பு "ஹை"யில் எரியவேண்டும், மறக்காதீர்கள்)

4. ரவையை வாணலியில் கொட்டவும்.

5. டிவியில் என்ன ஓடுகிறது என்று பார்த்துவிட்டு வரவும்.

6. இப்போது வாணலியின் அடியில் உள்ள ரவை சற்றே கருத்தும் மேல்புறம் ஒரு மாற்றமும் இல்லாமலும் காணப்படும். ஒரே கிளறு. மேல்பாகம் கீழும், கீழ்பாகம் மேலும் செல்லும் வண்ணம் கிளறவும்.

7. ஈமெயில் எதாவது வந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு வரவும்.

8. இப்போது ரவை சமச்சீராக கருத்து இருக்கும். அதை ஒரு தட்டில் கொட்டவும். அடுப்பை அணைக்கவும்.

9. டிவி பார்த்துக்கொண்டே வெங்காயத்தை உரித்து, அதன் தோலியை வரவேற்பரையில் கொஞ்சம், சமையலறையில் கொஞ்சம், மேலும் வீட்டில் உள்ள மற்ற அறைகளில் கொஞ்சம் என சமச்சீராக பரப்பவும். வெங்காயத்தை சமச்சீரற்ற துண்டுகளாக நறுக்கவும்.

10. மறுபடி அடுப்பை ஹையில் பற்றவைத்து, எண்ணெய் ஊற்றவும்.

11. எண்ணெய் கருகும் வாசனை வந்தவுடன் கடுகைப் போடவும். உடனே வெடிக்கவேண்டும். பிறகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, கடலைக்காய் - எது கிடைக்கிறதோ எல்லாவற்றையும் போட்டுவிட்டு, கிளறுவதற்கான கரண்டியைத் தேடவும்.

12. இப்போது போட்ட பருப்புகள் எல்லாம் "கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு"ன்னு பாட ஆரம்பித்திருக்கும். அதன் தலையில் நறுக்கிய வெங்காயம், முழுத் தக்காளியை நேரடியாக எடுத்து ரெண்டே துண்டாக வெட்டி அதன்மேல் போடவும்.

13. வெங்காயம் தக்காளி கோபம் தணிந்து குழைய ஆரம்பிக்கும்வரை கிளறவும்.

14. இப்போது அதன்மேல் தண்ணீரை ஊற்றவும். அடுப்பின் தணலைச் சற்று குறைத்துக்கொண்டால்,மறுபடி மெயில் பார்க்க / மசாலா மிக்ஸ் பார்க்க நேரம் கிடைக்கும்.

15. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ரவையைக் கொட்டிக் கிளறவும். வெந்து 5 நிமிடம் கழித்து இறக்கவும் (உப்புமா இப்போது சிவாஜி ஆகியிருக்கும் - பாத்திரத்தோடு ஒன்றி இருக்கும்).

************"உப்பு போடவேண்டும் என்று சொல்லாதது தெரியாமல் செய்த பிழை அல்ல!"*************************

உப்புமா சாப்பிடும்போது சொல்லவேண்டிய வசனம் : "என்ன இருந்தாலும் நீ செய்யறது போல வரலை, இல்லையா? எந்த வேலையா இருந்தாலும் உனக்கு இருக்க இன்வால்வ்மெண்ட், கமிட்மெண்ட் எல்லாம் எனக்கு வர்றதில்லை. சும்மாவா சொன்னாங்க இதனை இதனான் இவள்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவள்கண் விடல்- னு?"

இதுவும் உறுதியான மெத்தட் கிடையாதுதான். இருந்தாலும் முயற்சித்துப் பார்க்கலாம்.

இன்னிக்கு வீட்டுப்பாடம் உப்புமாதான்.

Nov 19, 2007

தேவையா தேவ் ஐயா?

தன்னிலை விளக்கமெல்லாம் கொடுக்க வேண்டாமென்றுதான் இருந்தேன். ஆனால், எதிரிகளின் புரளிகளைக் கண்டுகொள்ளாமல் விடுவது ராஜதந்திரம் என்றால், தன் இனத்தவரின் சந்தேகங்களைத் தீர்க்காமல் இருப்பது பிரிவினைக்கே வழிவகுக்கும் என்பதும் அதுவேதானே!
 
அன்பு கச்சேரியார் அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி இருக்கிறார். நம் ரகசியங்களை எதிரிகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறேனாம், ஆயுதங்களைக் காட்டிக் கொடுக்கிறேனாம்!
 
உண்மை என்ன? நம் இல்லறத்தியல் வகுப்புகளால்,
 
அட போங்கய்ய உங்க அண்டப்புளுகுகளும் அதை கேக்ரவங்களும். என்று சொன்ன ஒரு தங்கமணியை
 
எல்லாத்தயும் விட படு ஜோக் என்னென்னா, பொம்பளங்க ஷ்ஆப்பிங்க் போகும்போது, பின்னாடி ஆம்பிளங்க ஒண்ணும் பண்ணமுடியாம வெட்டியா பையை தூக்கிட்டு நடப்பாங்க பாருங்க  என்று சொல்ல வைத்திருக்கின்றன நம் சோக கீதங்கள்!
 
பொண்ணுங்க தெளிவா இருக்குதுங்க. இதுல அரத்தல் புரத்தலாய் பாடம் எடுக்கிறாராம். ஸ்டூபிட் என்று அளப்பறை விட்ட அதே பெண்ணீய அனானி,
 
எங்காளு, அம்பானி மாதிரி தானும் உலக கோடீஸ்வரர் நம்பர் 1 ஆனதும், அன்னிய தேதில எது பெஸ்ட் பிளேனோ அதை வாங்கி தருவதாய் சத்தியம் செஞ்ருக்கார். என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார்.

இந்த அளவுக்கு மாற்றம் இருப்பதே இத்தொடருக்கு கிடைத்த வெற்றியா நான் பாக்கறேன். ஏனென்றால் நாம் எடுக்கும் வகுப்புகளால் உலகம் தலைகீழாகத் திரும்பிவிடும் என்று எதிர்பார்த்து இத்தொடர் தொடங்கப்படவில்லை. பாம்புன்னா படம் எடுக்கும், பாலைவனம்னா சுட்டெரிக்கும், டாஸ்மாக்னா தள்ளாடவைக்கும், தங்கமணின்னா டப்பா டான்ஸ் ஆடும் .. இதெல்லாம் உலக நியதி!
 
மேலும், இந்த வகுப்புகளால் மனைவிக்குப் பயப்படாமல் வாழும் நிலை உருவாகும் என்பதா நம் நோக்கம்? நடக்க இயலாதவற்றைச் சொல்ல நாம் என்ன விளம்பரத்துறையில் இருக்கிறோமா அல்லது ஹாரி பாட்டர் கதை எழுதுகிறோமா?
 
அறிவிப்பின்போது தங்கமணிகளையும் ஏன் இந்த வகுப்புக்கு அழைத்தேன் எனத் தெரிந்துகொள்ள வேண்டுமா?
 
இங்கே பாருங்கள், அந்த ரகசியம் விளங்கும்!
 
ஆயுதங்களைக் காட்டிக்கொடுக்கிறேனா? அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் அய்யா! தங்கமணிகளுக்கு இந்த ரகசியங்கள் தெரிந்துவிடக் கூடுமே என்று எதையுமே சொல்லாமல் தவிர்த்தால் நம் இளைய ரங்கமணிகளுக்கு ஏது எதிர்காலம்?
 
கச்சேரியாருக்கு இன்னும் ஒரு சந்தேகம்:
 
நம சிங்கத் தலை கைப்புள்ள, சங்கத்தின் தங்க மகன் இளையதளபதி வெட்டிப் பயல ஆகியோர் இல்லறத்தில் இனிதே அடியெடுத்து வைத்த நேரம் பாசமிகு தம்பிகளாம் நீங்களும் மண வாழ்வில் நுழைய வரிசையில் காத்து நிற்க இப்படி ஒரு தொடர்...
 
வேறெந்த நேரத்திலய்யா இப்படி ஒரு தொடர் வெளிவரவேண்டும்? இதைவிடச் சிறந்த, பொருத்தமான நேரம் வாய்க்குமா?
 
கைப்புள்ளைக்கு ஆப்பு வாங்குவது என்ன புதிதா? அவருடைய "ஆப்பு" அனுபவத்துக்கு இந்தத் தொடர் மட்டுமல்ல வேறெந்தத் தொடருமே தேவையில்லையே!
 
வெட்டிப்பயலின் தற்போதைக்கு கடைசிப்பதிவைப் பார்த்து நானே புல்லரித்துப் போயிருக்கிறேன்! லகான் எங்கே என்று தெரிந்த குதிரையாக உலக இயல்புகளையும் நடப்புகளையும் புரிந்துகொண்டிருக்கும் அவருக்கு இத்தொடரால் நஷ்டமா?
 
ஆனால், இல்லற வாழ்வில் குதிக்கக் காத்திருக்கும் பலகோடி இளைஞர்கள், கல்வியறிவு பெற்றிடக்கூடாது, வாழ்க்கை சாகரத்தில் தொபுக்கடீர் எனக்குதித்து அடிபட்டுத்தான் முன்னேற வேண்டும் என்று நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தங்கமணிகளின்  சூழ்ச்சிக்கு நீங்கள் பலியானது மட்டுமின்றி அப்பாவி இளைஞர்களின் எதிர்காலத்தை புதிர்காலமாக  ஆக்கும் நோக்கமும்  அல்லவா தெரிகிறது? 
 
கம்ப்யூட்டரைத் திறந்தாலே  ஒரு எக்காளச் சிரிப்பு கேக்குது. "பாத்தியா, பிரிஞ்சுட்டாங்க, சண்டை போட்டுக்கறாங்க! இனிமே நமக்கு வெற்றிதான்"னு தங்கமணிங்க குரல்கள்! ரங்கமணிங்க ரெண்டுபட்டா தங்கமணிங்களுக்கு கொண்டாட்டமாம்!
 
தேவ் எந்த உள்நோக்கமும் இல்லாமல்தான், சூழ்ச்சிக்கு பலியாகி மட்டும்தான் இப்படி ஒரு போராட்டத்தைத் தொடங்கி இருப்பார் என்று உளமாறவே நான் நம்புவதால், அவரைக் குறை சொல்ல விரும்பவில்லை.
 
ஒரு ஆம்பளை மனசு இன்னொரு ஆம்பளைக்குத் தான் புரியும் என்பதால், தேவ் இந்த விஷயங்களைத் தெளிவா புரிஞ்சுப்பாருன்னு நம்பறேன்.
 
 எனவே, மீண்டும் நமது ஒற்றுமையை தங்கமணிகளின் உலகுக்குப் பறைசாற்றி, அவர்கள் ஆனந்தத்தில் அணுகுண்டு போடுவோம் வாருங்கள்! 
 
பி கு: இல்லறத்தியல் பாடம் இன்னும் ஓரிரு நாட்களில்.

Nov 12, 2007

Wifeology பாடம் 3 - தயார் ஆகுங்க!

போன வாரப் பாடத்துல மனைவியருடைய விசேஷ குணாம்சங்களான அரை லாஜிக், உள்குத்துகள், அபார ஞாபகசக்தி ஆகியவற்றைப் பார்த்தோம். ரிவைஸ் பண்ணிட்டு வாங்க.
 
இந்த வாரப் பாடத்துல, நாம (ஆண்கள்) எப்படியெல்லாம் தம்மை மேம்படுத்திக்கணும், ஆரம்ப காலத்து அதிர்ச்சிகள் வராம எப்படி நம்மளை பாதுகாத்துக்கறது ஆகியவற்றைப் பார்க்கலாம்.
 
1. கருப்புப் பணம் காப்போம்!
 
"உங்க சம்பளம் என்ன?"
 
இந்தக்கேள்விக்கு நீங்க என்ன பதில் சொல்வீங்க? "பொம்பளை கிட்ட வயசைக் கேட்கக்கூடாது, ஆம்பளை கிட்ட சம்பளத்தைக் கேட்கக்கூடாது"ன்னு பழமொழி எல்லாம் இருந்தாலும்கூட இந்தக் கேள்வியைத் தவிர்க்க முடிவதில்லை. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்றது பொதுவா மூணாவது நபர் கேட்டாலே அவ்வளவு சுலபம் இல்லை.
 
கேக்கறவங்க வேலைக்குச் சேரப்போற எச் ஆர் டிபார்ட்மெண்டா இருந்தா ஒரு 30% கூட்டிச் சொல்றதும்,  பொறாமைப் படக்கூடிய நண்பனா இருந்தா ஒரு 30% குறைச்சுச் சொல்றதும் சகஜம்தான், அதெல்லாம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்.
 
ஆனா, உங்க மனைவி ஆகப்போறவங்க இந்தக் கேள்வியைக் கேட்டால், குழப்பம்தான். நான் எவ்ளோ பெரிய ஆள் பார்னு அதிகப்படுத்திச் சொல்லுவாங்க சிலர், மனைவிகிட்ட ஏன் மறைக்கணும்னு சரியாச் சொல்வாங்க சிலர்.
 
ரெண்டு பேருமே தப்பு! ஒரு 10-15% குறைச்சுச் சொல்றதுதான் புத்திசாலித்தனம். ஏன்?
 
போன பாடத்தோட பின்னூட்டத்துல ஒரு அனானி சொன்னாங்க:
//ஆயிரத்து ஐநூறு ஸ்கொயர் பீஃட் பிளாட் புக் செஞ்சிட்டேன், வீக் எண்டு பார்ட்டி அது இதுன்னு காசை வீணாக்காம, மாசா மாசம் இ எம் ஐ, முப்பாதாயிரம் கட்டணும், சிக்கனமா இருங்கன்னு// இந்தக்காலத்துப் பொண்ணுங்க சொல்வாங்களாம்.
 
உங்க சம்பளம் ஆயிரங்களிலா லட்சங்களிலா என்பது இல்லை இங்கே பிரச்சினை! மாச பட்ஜெட்டில் ஒரு பகுதி பக்கத்து வீட்டுக்காரி வாங்கின பட்டுப்புடவைக்கு அப்போர்ஷன் ஆகலாம் அல்லது அம்பானி மாதிரி பொண்டாட்டிக்கு ப்ளேன் வாங்கறதுக்கும் (உதைக்கணும் அவனை! செஞ்சுட்டுப் போ, நியூஸ் ஏன் கொடுக்கறே?) அப்போர்ஷன் ஆகலாம்.அதாவது, கல்யாணம் ஆன மறுநாள்லே இருந்தே நம்முடைய பொருளாதார உரிமை பறிக்கப்படப் போகுதுன்றதுக்கு பெண்ணீய வாக்குமூலமே இதுலே இருக்கு!
 
அதுனாலதான் சொல்றேன், ஒரு 10-15% ஐ யார் கண்லேயும் படாம ஒதுக்குப் புறமா வச்சிருங்க. நம்ம லாகிரிக்குத் தேவைப்படும்.
 
2. நாகாக்க!
 
நட்பா காதலான்னு நம்ம சினிமாக்காரங்க பிரிச்சு மேய்ஞ்சிட்டாங்க! அவங்களே நண்பனா மனைவியான்னு பெரிசா கேள்வி கேக்கலல. நண்பன் கிட்டே பேசறதெல்லாம் மனைவிகிட்ட பேச முடியாது.. என்னாதான் சினேகிதனை.. சினேகிதனை.. ரகசிய சினேகிதனைன்னு பாட்டுப் பாடினாலும்! அடிவாங்கறது நிச்சயம். அதுவும் பிறவியிலேயே நாக்கு நீளமான என்னைப்போன்ற பிறவிகளுக்கு.
 
கல்யாணமான புதுசுலே வாக்குவாதம் வந்தது - ஆம்பளைங்க புத்திசாலிங்களா, பொம்பளைங்களான்னு! (தேவைதானா?) நான் சொன்னேன், சந்தேகத்துக்கே இடமில்லாமல் பொம்பளைங்கதான் - ஏன்னா அவங்கதானே இளிச்சவாயனுங்களைக் கல்யாணம் செய்துக்கறாங்க!  விளைவு என்னாச்சுன்னு கேக்காதீங்க, பர்சனல்!
 
அப்பவாவது திருந்தினேனா, ஒரு ட்ரஸ் செலக்ஷன் பண்ணும்போது இன்னொரு வாக்குவாதம் - நான் செலக்ட் பண்ணது நல்லா இருக்கா, அவங்க செலக்ட் பண்ணதா? வாக்குவாதத்தின் முடிவில், வழக்கம்போல தோற்றபிறகாவது சும்மா இருந்திருக்கலாம் - ஆனா நாக்கு இருக்கே! "உன் செலக்ஷன் தான் எப்பவும் சூப்பர்! என் செலக்ஷன் மோசம்தான் என்றேன் அவளை ஏற இறங்கப் பார்த்து! இதோட விளைவு முன்னை மாதிரி பல மடங்கு!
 
நாகாக்க! இந்த மாதிரி ஜோக்கடிக்கிறேன்னு தத்துபித்து பண்றது விபரீத விளைவுக்கு வழிகோலும். அதுவும் அவங்க வீட்டைச் சார்ந்தவங்களைப் பத்தி ஜோக் அடிச்சா முடிவே நிச்சயம்.
 
3. நிறங்களில் இத்தனை நிறங்களா?
 
இந்தக் கலர் எல்லாம் எப்பவாச்சும் கேள்விப்பட்டிருக்கீங்களா? பீச், பீச் ப்ளூ, காப்பர் சல்பேட், மயில் கழுத்துக் கலர், ராமர் கலர், டர்க்காய்ஸ், டீல் - சான்ஸே இல்லை!
 
ஒரு துணிக்கடையில 50000 கலர் பட்டுப்புடவைன்னு விக்கும்போது இதையெல்லாம் எண்ணிப்பார்க்கவா போறாங்கன்னு கொஞ்சம் அலட்சியமா இருந்தாங்களாம்! ஒரு மனைவி அந்தப் பட்டுப்புடவையில இந்தக்கலரெல்லாம் இல்லைன்னு ஒரு லிஸ்டும், இந்தக்கலரெல்லாம் ரிப்பீட் ஆவுதுன்னு ஒரு லிஸ்டும் கொடுத்தபோது மயங்கிக் கீழே விழுந்தாங்களாம்!
 
பொதுவா, ஆம்பளைக்களுக்குத் தெரிஞ்ச வண்ணங்கள் எல்லாம் வானவில், குறிப்பா ட்ராபிக் சிக்னல் புண்ணியத்தால மூணு கலர் - இவ்ளோதான் உருப்படியாத் தெரியும்!  வேலை செய்யும்போதும் FFFFFF, 000000 போன்ற HTML கலர் கோடையே உபயோகப்படுத்துவோம், இல்லை எங்க இருந்தாவது காபி-பேஸ்ட் செய்வோம்!
 
திருமணத்துக்குத் தயாராகும் விதமா, இப்ப ஒரு சின்ன வீட்டுப்பாடம் :
 
1. வெள்ளை மயிலோட கழுத்து என்ன கலர்? சாதா மயிலோட கழுத்து என்ன கலர்?
2. ராமர் கலர் என்பது ராமர் ராஜாவாக இருந்தபோது இருந்த கலரா இல்லை காட்டில் சுற்றிக்கொண்டிருந்தபோது இருந்த கலரா?
 
பொது வீட்டுப்பாடம்:
 
பி கு: பலத்த மிரட்டல்களுக்கு இடையில் எழுதப்படும் இந்த இலக்கியவடிவம், திங்கள்தோறும் வெளியாவதைத் தடுக்க பெரிய அளவில் சதி நடக்கிறது. "அமீரகத்தில் அருவா ஆட்டம்" என்று பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாகவும் வரலாம்!
 
போலீசாரின் கண்பார்வைக்குள்ளேயே இருந்துகொண்டு தந்திரமாக லெனின் எழுதியதுபோல இந்த இலக்கியத்தின் ஆசிரியரும் எழுதவேண்டி இருப்பதால், பிரதி திங்கள் என்ற இலக்கு தளர்த்தப்பட்டு, முடிந்தபோதெல்லாம் எழுத முடிவு கொண்டிருக்கிறோம்.

Nov 5, 2007

பாடம் 2 - தயார் ஆகுங்க மக்களே - wifeology

கல்யாணம் பண்ணி வாழப்ப்போற பையா, பாவப்பட்ட பையா.. சில புத்திமதிகளைச் சொல்லப்போறார் ஐயா.. கேட்டுக்கோ மெய்யா..

எல்லாத்தையும் பாட்டாவே பாட முடியாதுங்கறதால, மேட்டருக்கு வரேன்.

இன்னிக்கு நம்ம பாடத்துல நாம பாக்கப்போற விஷயம் - கல்யாண்த்துக்கான முன்னேற்பாடுகள்.

ஒரு ஜோக் சொல்வாங்க, கல்யாணத்துக்கு முன்னால அவன் பேசினான், அவள் கேட்டாள், கல்யாணத்துக்கு அப்புறம் அவள் பேசினாள், அவன் கேட்டான், 10 வருஷம் கழிச்சு ரெண்டு பேருமே பேசினாங்க - ஊரே கேட்டுதுன்னு.. (நம்ம நிலைமையெல்லாம் எப்படி சிரிப்பா சிரிக்குது பாத்தீங்களா?)

அவன் பேசினதுக்கும் அவள் பேசினதுக்கும் இடையே ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி என்ன? ஏன் அப்படி ஆனது?

பெண் என்னும் ஜீவராசிகளுக்கென்றே சில அடிப்படை குணாதிசயங்கள் உண்டு. அவற்றைப் புரிந்து கொள்ளாததாலும், புரிந்துகொள்ள முயற்சி செய்யாததாலும்தான் இது நடக்கிறது.

சில அடிப்படைப்பாடங்களை கவனிக்கலாம்.

1. லாஜிக் தவிர். பெண்மை தவறேல்!

பெண்களுக்கு லாஜிக்கே இல்லைன்னு நான் சொல்லவரலை. இருக்கு. ஆனா, நமக்குப் புரியாம எங்கேயோ மூலையில மறைஞ்சுகிட்டு இருக்கு. இந்தப்பாடத்தை ஒரு உதாரணம் மூலமா விளக்கறேன்,

நம்ம பிரண்டு அப்பாவி கோயிந்து, மனைவியோட ஷாப்பிங் மால் போனார். 3 மணிநேரம் சுத்தினாங்க அம்மணி, ஒண்ணும் பெரிசா வாங்கலை. (சிறிசா வாங்கனதுலேயே பர்ஸ் பழுத்துடுச்சுன்னு வைங்க - அது கணக்குல வராது). ஒரு கடையில அரை மணிநேரம் செலவு பண்ணிட்டு வெளிய வராங்க, அப்ப தலைவர்
கேக்கறாரு:

"கடையிலெ எதாச்சும் வாங்கினயா? ஏன் இவ்வ்ளோ நேரம்?"

"ஒண்ணும் வாங்கலை! வாங்கினாத்தான தப்பு? வெறுமனே பாத்தா என்ன தப்பு?"

"இதுக்கா அரை மணி நேரம்"னு கேள்விய மனசுக்குள்ளே அடக்கிட்டு, அடுத்த கடைக்கு உள்ளே போகாம, வெளிப்பக்கமா ஒரு பென்சுல உக்கார்ந்துகிட்டு, கண்களுக்கு குளிர்ச்சி கொடுத்துகிட்டு இருக்கார். அம்மணி வராங்க, இவர் விடற லுக்கை லுக்கு விட்டுடறாங்க.

"என்ன கண்ணு அலைபாயுது?"

நம்ம கோயிந்து லாஜிக்லே புலியாச்சே.. புத்திசாலித்தனமா கேக்கறாராம்..

"தப்பா எதாச்சும பண்ணேன்? வெறுமனே பாத்தா தப்பில்லைன்னு நீதானே சொன்னே?"

என்னா ஆயிருக்கும் அவர் கதின்றத வாசகர்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

(இந்த மாதிரிக் கேள்விக்கு எப்படி பதில் சொல்றதுன்றதை பின்னால வர பாகங்கள்லே சொல்றேன்)

2. அர்த்தத்துக்கு அர்த்தம்

நவீன கவிதைகள் எல்லாம் வரதுக்கு ரொம்ப நாள் முன்னாலேயே அர்த்ததுகுள்ளே அர்த்தம் வச்சு பேசத் தெரிஞ்சவங்க நம்ம பெண்கள். தமிழ்ப்பதிவுகள் ஆரம்பிக்கறதுக்கு பலகோடி வருஷத்துக்கும் முன்னாலேயே வரிக்கு வரி உள்குத்து வச்சுப் பேசத் தெரிஞ்சவங்க!

அவங்க எதாச்சும் பேசினாங்கன்னா நேரடியான அர்த்தம் மட்டும் எடுத்துக்காதீங்க!

உதாரணமா, "இன்னிக்கு என்ன தேதி"ன்னு கேட்டா அதுக்குள்ளே, "அடுத்த வாரம் என் பிறந்த நாள் வருது, கிப்ட் ரெடியா" என்ற கேள்வியோ, "சம்பளம்தான் வந்தாச்சு இல்ல, எங்கயாவது போயி அதை ஊதிவிட்டுட்டு வரலாமா?" என்ற கேள்வியோ உள்ளே பதுங்கி இருக்கும்!

சாப்பாடு விஷயத்துல கூட, "இன்னிக்கு டின்னர் என்ன பண்ணலாம், தோசையா, உப்புமாவா?" அப்படின்னு ஒரு கேள்வி வந்தா உடனடியா பதில் சொல்லிடக்கூடாது. எது பண்ரதால அவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையோ அதைச் சொல்லித் தப்பிச்சுடறதுதான் புத்திசாலித்தனம். அட்வான்ஸ்டு கணவர்கள், நேரடியா அவங்க ஆப்ஷன்ஸில முதல்ல என்ன சொல்றாங்களோ அதையே சொல்லிடுவாங்க. இல்லாட்டி, காலப்போக்குல, "இன்னிக்கு டின்னர் என்ன? தோசையா, வேறே எதாச்சுமா?" என்று அறிவுறுத்தப்படுவார்கள். இதுக்கும் திருந்தாதவர் ஒருத்தர் வீட்டுல நடந்த சம்பவம்:

"இன்னிக்கு டின்னர் வேணுமா?

"ஆப்ஷன்ஸ் என்ன?"

"யெஸ் ஆர் நோ"!

3. Omit your commitments

வரலாற்று ஆசிரியர்கள், ஞாபகசக்தி க்ராண்ட் மாஸ்டர்கள் என இருக்கும் எல்லாரின் ஞாபகசக்தியையும் சுலபமாக மிஞ்சும் ஒரு பெண்ணின் ஞாபகசக்தி. "நம்ம கல்யாணம் முடிஞ்ச நாலாவது நாள், அன்னிக்குக்கூட நான் அந்த ஊதாக்கலர் சல்வார் போட்டிருந்தேன், நீங்க சிவப்புல வெள்ளை ஸ்ட்ரைப்ஸ் டி ஷர்ட் போட்டிருந்தீங்க, நீங்க ஆபீஸ்லே இருந்து அரவிந் போனை அட்டெண்ட் பண்ணிட்டு வந்தப்போ நான் கேட்டேனே, அந்த GUCCI ஹேண்ட்பேக், அப்ப ஒத்துக்கிட்டீங்களே, மறந்துபோச்சா?" என்பது பொன்ற கேள்விகளைத் தவிர்க்க ஒரே வழி எதிலும் கமிட் ஆகாமல் இருப்பதுதான்.

எனவே, எண்ணிச் செய்க கமிட்மெண்ட், எண்ணாதார் உண்ணும் உணவும் பனிஷ்மெண்ட்!

இந்த ஞாபகசக்தி இருந்தாலுமே, நமக்கு அவங்க செய்த கமிட்மெண்ட்கள் செலக்டிவ் அம்னீஷியாவில் காணாமல் போவதும் லாஜிக்கை மீறிய விஷயம்தான். (அதாவது நம்ம லாஜிக்கை)

இதுவே ரொம்ப நீளமா போயிட்டதால, அடுத்த வாரமும் இதே சப்ஜெக்ட் தொடரும்.

வீட்டுப்பாடம்:

1. http://www.yoest.org/archives/shopping_male_female_gap_tom_peters.jpg

Oct 29, 2007

பாடம் ஒன்று: ஏன் திருமணம்? (M Sc Wifeology - 1)

இந்தக்கேள்விக்கு நேரடியான விடையே கிடையாது. கண்ணதாசன் சொன்ன மாதிரி, நான் மாட்டின காரணத்தை நானே அறியும் முன்னே நீயும் வந்து ஏன் கேட்கிறாய்னுதான் கேட்கணும்.
 
"everybody should be married.. in fact, happiness is not everything" னு சொன்ன அறிஞரோட விடைதான் கொஞ்சம் கிட்டக்கிட்ட வருது.
 
ரொம்ப யோசிச்சா, இந்த மாதிரி சில காரணங்களைத் தேடிப் பிடிக்கலாம்.
 
1. நாளைக்கு வயசாயி உடம்பு சரியில்லாம போனா பாத்துக்க ஒரு ஆளு வேணாம்? (மனைவி வேணுமா நர்ஸ் வேணுமான்னு தெரியாத ஆளுங்க! - நாளைக்கு உனக்கு வயசாகும்போது அவங்களுக்கும் வயசாகாதா? வெளிய சொல்லிக்கறத நாம நம்பவா முடியும்??)
 
2. வம்சம் விளங்க வேணாமா? (பெரிய ராஜ ராஜ சோழன் வம்சம்!)
 
3. எத்தனை நாள்தான் இப்படி வாழ்க்கையில பிடிப்பே இல்லாம ஓட்ட முடியும்? (மவனே இருக்குடீ உனக்கு! வாயுப்பிடிப்பு., சதைப்பிடிப்பு, சம்பளப்பிடிப்பு எல்லாம் கிடைக்கும் கவலையே படாதே!)
 
4. வீட்டுக்கு விளக்கேத்த ஒரு பொண்ணு வேணுமே! (ஸ்விட்சுன்னு ஒண்ணு எதுக்கு கண்டுபிடிச்சிருக்காங்களாம்?)
 
5.சாப்பாட்டுக்கு கஷ்டப்பட வேணாம் இல்லையா? (இது கரெக்டு.. எப்படியும் சமைக்கக் கத்துக்கத்தான் போறே!)
 
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன அப்ப்டின்னு சொல்லும்போதே தெரிய வாணாம்? மவனே உனக்கு சாவுமணிதாண்டான்னு!
 
கல்யாணம் ஆனவங்களோட பொறாமை மற்றவர்களோட திருமணத்துக்குக் காரணமாகி விடுவது உளவியல் அறிஞர்கள் ஆராய வேண்டிய விஷயம்.  "என்னங்க, நம்ம சித்தப்பா பொண்ணுக்கு உங்க பிரண்டு சரவணனைக் கேக்கலாமா" என்ற கேள்விக்கு, சரி என்று சொல்லும் முன், "நான் மட்டும் என்ன முட்டாளா?" என்ற எண்ணமும் "எஞ்சாய் பண்றாண்டா" என்ற பொறாமையும் இருப்பது திண்ணம்.
 
பெரியோர் நிச்சயித்த கல்யாணத்துக்கும், காதல் திருமணத்துக்கும் கொலைக்கும் தற்கொலைக்கும் ஆன வித்தியாசம்தான் என்று சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.
 
ஆனால், மத்தவங்க என்ன சொன்னாலும், வேறு சில சிற்றின்பக் காரணங்களுக்காக, "கல்யாணத்துக்கு என்ன அவசரம்? நாலஞ்சு நாள் போகட்டும்" என்று சொல்லும் மாப்பிள்ளைதானே முதல் குற்றவாளி?
 
சிற்றின்பம்னு சொன்னதும் இந்தப்பதிவுக்கு ஏ சர்டிபிகேட் கொடுத்துடாதீங்க! நான் சொல்ல வர சிற்றின்பம், பெரியோர் ஆசீர்வாதத்துடன் சைட்டடிப்பது, நாம என்னவோ ஆணழகன் மாதிரி எந்த போட்டோ வந்தாலும் "Forehead ஆ இது? Four Head மாதிரி இருக்கே!" "பொண்ணு கிளி மாதிரின்னு சொன்னாங்களே? மூக்கை மட்டும்தான் சொன்னாங்களா?" என்று வர்ஜ்யா வர்ஜ்யம் இல்லாமல் கமெண்ட் அடிப்பது, திடுதிப்பென்று கிடைக ்கும் எலுமிச்சை வெளிச்சம் போன்ற சிற்றின்பங்களைச் சொல்றேன்.
 
ஆனா ஒண்ணு.. கல்யாணம் பண்ணாம நிம்மதியா இருக்கறது 1 - 2% ஆளுங்கதான். ஆடை இல்லாத ஊரிலே கோவணம் கட்ட முடியாதவங்க எப்ப்டி கல்யாணத்துக்கு தயார் ஆவது எப்படின்னு அடுத்த திங்கள் சொல்றேன்.
 
வீட்டுப்பாடம்: இந்த யூ ட்யூப் வீடியோவைப் பார்க்கவும்: http://www.youtube.com/watch?v=pSWTVXh_Yns
 
ஒரு டிஸ்கிளெய்மர்:
 
பிரச்சினையில்லாத திருமண வாழ்வை இந்த வகுப்புகள் வழங்கும் என்ற உடோபியக்கனவுகளை நம்பவேண்டாம். அது ஒரு மாயை.  இதன் ஆசிரியர்களின் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களின் மீள்பார்வையில் Retrospective  சிந்தனைகளின் விளைவே இந்த வகுப்புகள். இது ஒரு Exact Science உம் கிடையாது. மனைவிகள் என்னும் பிரகிருதிகளுடான உளவியலில் Scienceக்கும் எந்த இடமும் கிடையாது, Exact கும் எந்த இடமும் கிடையாது. இந்த வழிமுறைகளை முயற்சிப்பவர்கள் தத்தம் சொந்தப் பொறுப்பின் பெயரிலேயெ செயல் படுபவர்கள் ஆவார்கள். மீறி ஏற்படும் வீக்கங்களுக்கும் ரத்தகாயங்களுக்கும் கல்லூரி பொறுப்பேற்காது.

Oct 25, 2007

முதுகலை இல்லறத்தியல் - வகுப்புகள் ஆரம்பம் (1)

M.Sc Wifeology (முதுகலை இல்லறத்தியல்) படித்த படிக்காத அன்பர்களே!
 
கல்யாணம் கட்டிக்கிட்டு கஷ்டப்படும் கட்டிளங்காளைகளே!
 
இன்னும் திருமணம் நடக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் மிதப்பாகத் திரியும் இளைஞர்களே! (இன்னிக்கு நான், நாளைக்கு நீ என்ற எளிய சூத்திரம் புரியாதவர்களே)!
 
கணவனை அன்பாக நடத்தும் 0.0000000000000001% மனைவிகளே!
 
மிச்சம் உள்ள சாதாரண ரக மனைவிகளே!
 
இது உங்களுக்காகவே ஆரம்பிக்கப்படும் புத்தம் புதிய வகுப்பு.
 
இந்த வகுப்புகளைப் பற்றி சில அ கே கே (FAQ)
 
என்ன சொல்லித் தரப்போகிறேன்?
 
  • திருமண வாழ்வில் பிரச்சினை கிளப்பக்கூடிய நிகழ்வுகள் யாவை, அவற்றைச் சமாளிப்பது எங்ஙனம்?
  • மனைவிகளைக் கண்டு பயப்படாமல் வாழ்வது எப்படி?
  • உங்கள் சுதந்திரத்தைப் பறிகொடுக்காமல் இல்வாழ்வை நல்வாழ்வாக மாற்றுவது எப்படி?
  • வீட்டு வேலைகளிலிருந்து தப்பிப்பது எப்படி?
  • மனைவி கேட்பதை வாங்கித்தராமலே அடிவாங்கா வாழ்க்கை வாழ்வது எப்படி? 
 
இப்படிப்பட்ட
 
  • How to survive Matrimony  என்பதைப் பற்றிய எளிய பாடங்கள் 
  • வாழ்க்கைத் தேர்வில் எளிதாய் வென்றிட ஏற்றமிகு கருத்துகள்
 நான் யார்? எனக்கு என்ன தகுதி இருக்கிறது?
 
M.Sc Wifeology யில் பட்டம் பெற்ற மாணவன், பின்னூட்டங்களில் முனைவர் பட்டத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டவன். கடுமையான சூழலுக்கு நடுவே ஏறத்தாழ பத்து ஆண்டுகள் களப்பணி செய்து வருபவன்.
 பாடத்தில் சொல்லப்போவதையெல்லாம் நான் கடைப்பிடிக்கிறேனா?
 
கிரிக்கெட்டில் பேட்டிங் சொல்லிக்கொடுக்கும் கோச் அவர் பேட் செய்கையில் அவுட்டே ஆகாதவரா? ஆனால் தன் / பிறரின் தவறுகளில் இருந்து பாடம் கற்பவர். அப்படித்தான் நானும். எனக்கும் வீங்கிய கன்னங்கள், சிராய்ப்புகள், விழுப்புண்கள் இருந்திருக்கின்றன. (இதைச் சொல்ல என்ன வெட்கம் - அதுவும் நமக்குள்ளே)
 யார் யார் பாடம் எடுக்கப்போகிறார்கள்?
 
நீங்களும் நானும்தான். உங்கள் பங்களிப்பும் மிக அவசியம். நிகழ்வுகளைக் கூறினால் அதற்கு துறை ஆசிரியர் குழு நடக்கவேண்டிய முறைக்கு பரிந்துரைகள் வழங்குவார்கள்.அவ்வப்போது How to survive Matrimony என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்து, காணாமல் போன புத்தகத்தின் நினைவில் இருக்கும் பக்கங்களும் விஸிட்டிங் ப்ரொபசராக வரும்.
 படிப்பின் முடிவில் என்ன பட்டம் வழங்கப்படும்?
 
உங்கள் திறமை, கற்றுக்கொள்ளும் திறன் ஆகியவற்றை வைத்து M B A (Marriage - Beginner's Approval), B.L (Beginner's Licence), M Tech (Marriage Technologist), PHD (Problem-free Household Doctorate), MBBS (Bachelor of Marriage and Bachelor of Solutions) ஆகிய பட்டங்கள் வழங்கப்படும்.
 
bcom, ca, cwa போன்ற பட்டங்களை சேர்க்காமல் விட்டது கணக்குப் பண்ணாதீங்கடா என்ற உள்குத்தின் காரணமாகவே. இது போன்ற பல மறை பாடங்கள் இருக்கும். ஆகவே ஆழ்ந்து படிக்கவும்.
 மனைவிகளை ஏன் இவ்வகுப்பில் அழைக்கிறேன்?
 
கீழ்க்கண்ட அரை டஜன் காரணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்:
 
  1. எதிரியின் நுணுக்கங்களை அறிந்துகொள்வது ராஜதந்திரம்.
  2. களவும் கற்று மற என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
  3. கணவன்மாரின் பார்வையில் இஷ்டம் எது கஷ்டம் எது என்பதை அறிந்துகொண்டால், நமக்குத் தேவையானதுபோல செய்ய முடியும்.
  4. அழைக்கவில்லையென்றால் ஈயம் பித்தளை என்று என்னையும் கட்டம் கட்டிவிடுவீர்கள்.
  5. பாடத்தில் ரோல்ப்ளே போன்ற கட்டங்கள் வரும்போது, நல்ல இயல்பான நடிகர்கள் தேவைப்படுவார்கள்
  6. நாலு முட்டா பசங்க மேடையேறி பேசினா வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் வருமே. வரப் போற கூட்டத்தை வாங்கன்னு கூப்பிட்டுடலாமேன்னுதான்
 வகுப்புகளுக்கு என்ன கட்டணம்?
 
இப்போது ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணம் ஒரு பின்னூட்டம். பின்னர் அனைத்து வகுப்புகளுக்கும் குறைந்தபட்சம் ஒரு பின்னூட்டம். பின்னூட்டம் என்பது வருகைப் பதிவு மட்டுமல்ல, அதில் கேள்விகளும் விடையும் கலந்த ப்ராஜக்ட் வொர்க்கும் உண்டு.
 வகுப்புகள் எப்போது ஆரம்பம்?
 29 அக்ட் திங்கள் முதல்.

 

blogger templates | Make Money Online