Showing posts with label நக்கல். Show all posts
Showing posts with label நக்கல். Show all posts

Aug 26, 2010

எந்திரன் - விமர்சனம் ஃபார் டம்மீஸ் (ஃப்ளாஷ்)

எந்திரன் படம் வரப்போகிறதாமே.. முன்கூட்டியே டிக்கட் பதிவு செய்பவர்கள் மட்டுமின்றி முன்கூட்டியே புறக்கணிப்பு செய்பவர்கள் அதிகமாகி இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. முன்கூட்டியேதான் நாம் எதையுமே செய்வோம். படம் வருவதற்கு முன்கூட்டியே இப்போதே சில விமர்சனங்கள் வந்துவிட்டன. ஆனால் யாரும் செய்யாததைச் செய்வதுதானே பினாத்தலுக்கு அழகு. படம் வருவதற்கு முன்பாக ஒரு விமர்சனம் வரும் ரெண்டு விமர்சனம் வரும் - 18225 விமர்சனம்?

ஏற்கனவே சிவாஜிக்கு 1024 விமர்சனம் போட்டிருந்தேன். (அதை இன்னும் ஞாபகம் வைத்திருப்பவர்களை பசித்த பாவனா தின்னட்டும்.) ஃப்ளாஷுக்கு உரித்தான இண்டராக்‌ஷனுடன், விமர்சனம் எழுத படம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற கிண்டல்.

ஆனால் இந்த முறை இன்னும் அதிகத் தெரிவுகளுடன், இன்னும் கஷ்டமான அல்காரிதம்களுடன் வந்திருக்கிறேன். கதையில் இருந்தே தேர்வு செய்யலாம். எங்கிருந்து உருவி இருப்பார்கள் என்று ஆரம்பித்து இசை சண்டை காமெடி - ஒரு ஏரியாவை விட்டுவைக்காத முழுமையான விமர்சனம், நம் வழக்கமான விமர்சகர்கள் ஸ்டைலில் பஞ்ச் லைனுடன் - ஆறு க்ளிக்குகளில் நீங்கள் காபி செய்ய வசதியாக!

ஃப்ளாஷின் முடிவில் வரும் கோட் ஐ பின்னூட்டமாகப் போடவேண்டியது மட்டும்தான் உங்கள் வேலை! அதற்காக வெறும் கோட் ஐ மட்டும் போடவேண்டும் என்ற அவசியம் இல்லை, மேலான, சைடான கருத்துகளையும் தாராளமாகத் தூவலாம். (இந்த மாதிரி கோட் எப்ப வச்சாலும் பின்னூட்டப்பொட்டி ஃபுல்லா ஒரே கோட்தான் இருக்குது!)

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஃப்ளாஷில் மூன்று நாட்கள். இந்தச் சுகத்தை எவ்வளவு மிஸ் செய்திருக்கிறேன்!

May 21, 2009

பேருந்துகளுக்கு கலர் அடிக்கலாம் வாங்க! (Flash)

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ப்ளாஷுடன் வந்திருக்கிறேன்.

பேருந்துகளுக்கு கலர் அடிக்க வேண்டும். இதான் விளையாட்டு. 7 பேருந்து, 7 கலர் காம்பினேஷன் கீழே கொடுத்திருக்கிறேன். எந்தப் பேருந்துக்கு என்ன வண்ணம் அடிக்கலாம்? அதான் கன்ப்யூஷன்.



எந்தக் கலர் எந்த வண்டிக்கு சூட் ஆகும்? வண்டியோட ஓட்டுநர் என்ன நினைக்கிறார், நடத்துநர் என்ன நினைக்கிறார்? வண்டியில என்ன சினிமா ஓடுது, அந்த வண்டியில ஏறிட்ட பயணிங்க என்ன நினைக்கிறாங்க - இதையெல்லாம் ஒட்டுக்கேட்டு, தனித்தனியா கொடுத்திருக்கேன். அதை மறைக்க ஒரு பட்டை - ஒரு க்ளிக் பண்ணா எழுத்து தெரியும். இந்த க்ளூவெல்லாம் வச்சு, கீழே இருக்க ஏழு கலர் காம்பினேஷன்லே இருந்து இந்தப்பேருந்துக்கு கரெக்டா கலர் அடிக்கணும். அவ்வளவுதான் கேம்.



கலர் கரெக்டுதான்னு உறுதிப்படுத்திட்டீங்கன்னா, அடுத்த பேருந்து ரெடியா நிக்கும். அதுக்கும் க்ளூவைப்பாத்து கரெக்டா கலர் அடிங்க. எல்லா பஸ்ஸும் முடிச்சிட்டீங்கன்னா எத்தனைக்கு கரெக்டா கலர் அடிச்சீங்கன்னு மார்க்கும், எவ்வளவு க்ளூ உபயோகப்படுத்தினீங்களோ அதுக்கு ஏத்த மாதிரி போனஸ் கூட கிடைக்கும் - அதாவது இருக்கற 4 க்ளூவில் 2லேயே கண்டுபிடிச்சிட்டா அதிக போனஸ்!

அங்க இருக்கிற கோட் - ஐ பின்னூட்டமா போட்டீங்கன்னா நீங்க எவ்வளவு வாங்கினீங்கன்னு நானும் தெரிஞ்சுக்குவேன்.



யார்யார் சரியான விடை சொல்லி இருக்காங்கன்னு இங்கே உடனுக்குடனே பதிவாயிடும்.





இது சங்கமம் போட்டிக்காக உருவாக்கப்பட்ட ப்ளாஷ். நேரம் வரும்போது அங்கேயும் வந்து ஓட்டுப் போட்டுடுங்க!

Apr 1, 2009

துக்ளக் இணைய இதழ் - இலவசமாய் படிக்க:

இதற்கு முன் போட்ட பதிவில் படம் பெரிதாகாமையால் பலர் ஏப்ரல் 1 என நினைத்துவிட்டனர். இப்போது படங்களின் லின்க்கைத் தருகிறேன்.

தமிழில் வெளிவரும் ஏடுகளில் நடுநிலையான ஒரே ஏடு துக்ளக்தான் என்பது பெரும்பான்மையானோரின் நம்பிக்கை. ஆனால், விகடன் குமுதம் போன்ற விற்பனை உத்திகள் கைவராததால் வெளிநாடுகளில் இந்த ஏடு கிடைப்பது அபூர்வமே.

சென்ற சில வருடங்களாக துக்ளக் இணையத்தில் கிடைத்தாலும், இணையதள சந்தா அதிகமாக (20$ வருடத்திற்கு) இருப்பதால் படிப்பது கஷ்டமாகவே இருந்துவந்தது.

இந்நிலையில் தெரிந்தவர் ஒருவர் ஒரு சுட்டி கொடுத்தார். இலவச தளம்தான். ரெஜிஸ்ட்ரேஷன் கூட தேவையில்லை.. எல்லாவற்றையும்விட, இந்தத் தளத்தின் வேகம் ஆச்சரியப்படவைத்தது. சில வேளைகளில் அதிகாரபூர்வ வலைத்தளத்தைவிடவும் முன்னரே இங்கே அட்டைப்படங்கள் கிடைத்துவிடுகின்றன.

இந்த சுட்டியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு முன் தார்மீகரீதியாக இது சரிதானா என நிறையவே யோசித்தேன். கடைசியில் குடும்பத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்வது தவறாகாது என்பதால் வலைக்குடும்பத்துடன் சில அட்டைப்படங்களை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.
ஏப்ரல் ஒன்றாம் தேதியில் முட்டாள் ஆனது நான் தான் :-( படங்கள் பெரிதாகாத முதல் பதிவினால் சொதப்பிவிட்டது.
துக்ளக் வெவ்வேறு நிலைமாற்றங்களுக்கு எப்படி அட்டைப்படம் போடும் என்பதுதான் கான்செப்ட்!
படம் 1 - 15/05/09, ஜ மு கூ வென்றால்:


படம் 2 : மூன்றாம் அணி வென்றால்:

படம் 3 : தே ஜ கூ வென்றால்:




Jan 19, 2009

திருமங்கலம் Millionaire!

தமிழ்நாட்டின் தென்பகுதியில் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன் க்ரோர்பதி நிகழ்ச்சியில் எல்லாக்கேள்விக்கும் சரியான விடை சொன்னது எப்படி?
அ. அவன் அறிவாளி
ஆ. அவன் புத்திசாலி
இ. அவன் ஏமாற்றினான்
ஈ. எழுதிவைக்கப்பட்ட விதி.

போலீஸ் ஸ்டேஷன். லாடம் கட்டப்பட்ட நிலையில் சுடலைமுத்து..

"உனக்கு எப்படி எல்லா கேள்விக்கும் விடை தெரியும்?"

"எனக்குத் தெரியும்"

"பெரிய பெரிய ப்ரொபஸர்ங்க, ஐ ஏ எஸ் ஆபீஸருங்க எல்லாம் 4 கேள்வி தாண்டறதில்லை.. உனக்கு மட்டும் எப்படி தெரியும்?"

"தெரியும்"

"நீ யாரு? எந்த ஊர்லே இருந்து வந்தே?"

"மதுரைக்குப் பக்கத்துல திருமங்கலம்னு ஒரு கிராமம்.. அங்கேதான் நான் வளர்ந்தது.. டீக்கடை வச்சு பொழைச்சுக்கிட்டிருந்தேன்"

காட்சி மில்லியனேர் செட்டுக்கு மாறுகிறது.. நிகழ்ச்சி நடத்துபவர் ஆரம்பிக்கிறார்:

"வாருங்கள் நாம் மில்லியனர் நிகழ்ச்சி விளையாடலாம்... நம் எதிரே இருப்பது திருமங்கலத்தில் இருந்து வந்திருக்கும் சுடலைமுத்து.. சுடலைமுத்து என்ன செய்றீங்க?"

"டீக்கடை வச்சிருக்கேன்"............(தேவையான அளவு அவரைக் கிண்டல் செய்ததன் பின்)..

"இதோ உங்களுக்கான முதல் கேள்வி.. ஆயிரம் ரூபாய் நோட்டில் யார் படம் போட்டிருக்கும்?

அ. இந்திரா காந்தி
ஆ. நேரு
இ. ரஜினிகாந்த்
ஈ.காந்தி

ப்ளாஷ் பேக்:

நானும் எல்லா எலக்‌ஷனிலும் குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் தான் ஓட்டுப்போட்டு கிட்டிருந்தேன்.. திடீர்னு ஒரு நாள் டிவியில மட்டும் பாத்த பெரிய மனுஷங்க எல்லாம் ஊருக்கு வந்தாங்க..

வீட்டுக்குள்ள ஒழிச்சு வச்சிருந்த ரேஷன் கார்டு .. வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துகிட்டு ஓடிப்போனேன்.. கும்பலையெல்லாம் விலக்கிட்டு உள்ளே நுழைஞ்சேன்.. அப்ப அதைப்பாத்துட்ட்உ ஒரு பெரிய மனுசன் எனக்கு ரூபாய் நோட்டு ஒண்ணு தந்தாரு.. அதில..

போலீஸ் ஸ்டேஷன்..

கான்ஸ்டபிள் சொல்கிறார்: ஆமாம் சார்.. எனக்கு கூட அப்பதான் 1000 ரூபாய்க்கு நோட்டு இருக்குனே தெரியும்..

மில்லியனர் செட்..

"வாழ்த்துக்கள்.. திருமங்கலம் டீக்கடைக்காரருக்கு 1000 ரூபாய் பரிசு.."

"3000 ரூபாய்க்கான இரண்டாம் கேள்வி.. தயாரா?"

"தயார்"

"மின்சார விளக்கு எரிய முக்கியமான தேவை எது?

அ. நெருப்பு பெட்டி
ஆ. தீப்பந்தம்
இ. மேண்டில்
ஈ.மின்சாரம் "

ப்ளாஷ்பேக்:

"என்னாய்யா டீ போட்டிருக்கே.. ஒரே உப்பா கரிக்குது"

"மன்னிச்சுக்கங்க.. சக்கரையும் உப்பும் பக்கத்துல இருந்துச்சு.. உப்பைப் போட்டுட்டேன் போல.."

"ஒரு மெழுகுவத்தி கொளுத்திக்க வேண்டியதுதானே.."

"எல்லாம் தீந்து போச்சுங்க.. நேத்து வரிக்கும் கரண்டே கட் ஆவலையா? அதனால தேவைப்படல. எலக்‌ஷன் தான் முடிஞ்சு போச்சே.. இதோ போய் வாங்கி வரேன்"

கரவொலி சத்தம் மில்லியனர் அரங்கை நிறைக்கிறது.

"20000 ரூபாய்க்கான பரிசை வாங்கிச் செல்கிறார் திருமங்கலம் சுடலைமுத்து"

"இவ்வளவு பெரிய அமவுண்டை பார்த்திருக்கிறீர்களா சுடலைமுத்து?"

"எங்கேங்க? எங்க வீட்லே மொத்தம் 2 வோட்டுதான். பக்கத்து வீட்டு பரமர் 10 வோட்டு மொத்தமா வச்சிருந்தான்.. அள்ளிட்டான்"

"கவலைப்படாதீங்க.. நீங்க இங்கேயும் அள்ளலாம்"

"ஆறாவது கேள்வி.. தயாரா?"

"கேளுங்க"

"உளியின் ஓசை படத்தின் கதை வசனகர்த்தா யார்?

அ.கலைஞர்
ஆ.ராம நாராயணன்
இ. அகிரா குரசோவா
ஈ.மணிரத்னம்"

ப்ளாஷ்பேக்:

"மச்சான் என்னை சினிமாக்கு கூட்டிகிட்டு போறதா சொல்லி ஏமாத்திகிட்டே இருக்கே"

"இதோ.. இன்னிக்கு கூட்டிட்டு போறேன்.. வார்டு கவுன்சிலர் வந்தாரு.. எல்லாருக்கும் டிக்கட் தந்தாரு.."

"ப்ரீயாவா?"

"ஆமாம்.. எனக்கு மட்டுமே 10 டிக்கட் தந்தாரு.. முடிஞ்சா ப்ளாக்லே வித்துட்டு அதுலயும் கொஞ்சம் பணம் பாக்கலாம்"

படம் பார்க்கிறார்கள்.

"தோ பாரு.. உனக்கும் எனக்கும் இனிமே எந்த சங்காத்தமும் கிடையாது.. எங்கப்பன் ஊட்டுக்கு போறேன் நான்.. சினிமா கூட்டுட்டு போறானாம் சினிமா.. தியேட்டர்லே தனியா எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? இனிமே என்னைப்பாக்க வராதே!"

மில்லியனேர் செட்

"சரியான விடை சுடலை.. நீங்கள் 40000 ரூபாய் ஜெயித்துவிட்டீர்கள்"..

போலீஸ் ஸ்டேஷன்:

"தில்லானா மோகனாம்பாள் யார் வசனம் சொல்லு பாக்கலாம்?"

"எனக்குத் தெரியாது"

"அதுவே தெரியாது.. இது எப்படி தெரியும்?'

"அவங்க அந்தக் கேள்வி கேக்கலையே!"

மில்லியனர் செட்

"1,60,000 ரூபாய்க்கான அடுத்த கேள்வி:

தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

அ.பாம்பே
ஆ.ஹாங்காங்
இ.டெல்லி
ஈ.சென்னை"

"இந்தக் கேள்விக்கு எனக்கு விடை தெரியாது.. ஆடியன்ஸ் போல்"

போலீஸ் ஸ்டேஷன்..

"இந்தக் கேள்விக்கு உனக்கு விடை தெரியாதா? குழந்தை கூட சரியாகச் சொல்லுமே?"

"படித்த குழந்தை சரியாக்ச் சொல்லும்.. எனக்குத் தெரியாது"

மில்லியனர் செட்டில்
கரவொலி.

"ஆஹா.. நம்ம டீக்கடைக்காரர் எல்லாக் கேள்விக்கும் சரியான விடை சொல்லி கலக்கிகிட்டிருக்கார்.. இன்னும் இரண்டு லைப் லைன் வேற வச்சிருக்கார். 320000 ரூபாய்க்கான ஒன்பதாவது கேள்வி.. தயாரா?"

"தயார்.."

"மதுரையில் டிவி பார்க்க எந்த கேபிள் கனெக்‌ஷன் வேண்டும்?

அ. அரசு கேபிள்
ஆ.சுமங்கலி கேபிள்
இ. ராயல்
ஈ. ஹாத்வே"

ப்ளாஷ்பேக்
விரிகிறது..

"வெட்றா அந்தக் கம்பத்தை.."

"அண்ணே பாத்து வெட்டுங்கன்னே.. டீக்கடை ஓலைச் சாரம் அதோட ஒட்டி இருக்கு"

"இவன் எவண்டா.. அண்ணன் கேபிள்லே தெரியாத சானல் எங்கயும் தெரியக்கூடாதுன்னு பாடுபட்டுகிட்டிருக்கோம்.."

வெட்டிய கம்பம் கீழே விழுகிறது..டீ பாய்லரும் சேர்த்து.

போலீஸ் ஸ்டேஷன்.

"பத்து நாள் ஆச்சு எனக்கு சூடுபட்ட கொப்பளம் ஆற"

மில்லியனர் செட்

"சரியான விடை.. கலக்கறீங்க சுடலை.."

"10 ஆவது கேள்வி..

"லட்டு தயாரிக்க என்ன தேவை?

அ. கடலை மாவு, சர்க்கரை, எண்ணெய்
ஆ.மைதாமாவு சர்க்கரை எண்ணெய்
இ. அரிசிமாவு, சர்க்கரை, எண்ணெய்
ஈ. இவற்றில் எதுவும் இல்லை"

"விடை தெரியுமா தெரியாதா?"

"கேள்வி ரொம்பக் கஷ்டமா இருக்குது"

"வழக்கம் போல ப்ளாஷ்பேக்குக்கு போக வேண்டியதுதானே?"

ப்ளாஷ்பேக்:

"சுடலை.. லட்டு கொடுக்கறாங்களாம்.. போய் வாங்கல?"

"அடப்போடா.. அவன் அவன் வாஷிங் மெஷினும் டிவியும் கொடுக்கறான்.. இவங்க போயும் போயும் லட்டுதான் தராங்களா?"

"அட.. இது சாதா லட்டு இல்லைடா..வாங்கிப் பிரிச்சுப் பாரு"

மில்லியனர் செட்

"விடை ஈ..இவற்றில் எதுவும் இல்லை"

"ஷ்யூர்? கான்பிடண்ட்?"

"ஆமாம்"

"எப்படி சொல்றீங்க?"

"தங்கத்தைப் பத்தி வேறெந்த விடையிலேயும் இல்லியே?"

"வாவ்.. சரியான விடை"

"13 ஆவது கேள்விக்கு வந்துட்டீங்க.. 50,00.000 ரூபாய் இந்தக்கேள்விக்கு சரியான விடை சொன்னா கிடைக்கும்"

"இவற்றுள் எது கலவரத்தை உடனடியாக உண்டாக்கும்?

அ. பங்காளிச் சண்டை
ஆ. கடன் பாக்கி
இ. ஆபாசமாகத் திட்டுதல்
ஈ. கருத்துக் கணிப்பு"

ப்ளாஷ் பேக்..

"எல்லாக் கடையையும் மூடச்சொல்லுங்கடா.. மேயர் அம்மா வராங்க.. "
"இவன் கடையை உடைச்சு போடுங்கடா"
"டே இருடா.. பத்திரிக்கை ஆபீஸுக்குதான் மொதல்ல போகணும்.. சூடா ஒரு டீ குடிச்சுட்டு போலாம்.. எங்களுக்கெலாம் டீ போடுறா சுடல.. க்ரிஷ்ணாயில் வச்சிருப்பியே? அந்த டின்னை எடுத்துக்கங்கடா கிளம்பலாம்"

போலீஸ் ஸ்டேஷன்..

"ஆச்சரியமா இருக்கு உன்னைப்பாத்தா.. கேள்விக்கு எப்படி பதில் சொல்லி ஏமாத்தினேன்ன்னு கேட்டா அதுல இருந்து தப்பிக்கறதுக்கு கலவரத்துக்கு க்ரிஷ்ணாயில் சப்ளை பண்ணேன்னு ஒத்துக்கற.. இதுக்கு எவ்ளோ கிடைக்கும் தெரியுமா?"

"என்ன ஒரு இருபதாயிரம் கிடைக்குமா?"

"ஷார்ப்பா இருக்காண்டா"

மில்லியனேர் செட்

"சுடலைமுத்து, நீங்க ரொம்ப கேர்புல்லா இருக்கணும். ஒரு கோடிக்கான கேள்வி இது. தயாரா?"

"தயார் சார்"

"இதோ உங்கள் கேள்வி"

"இவற்றுள் எது இலவசமாகக் கிடைக்காது?

அ. டிவி
ஆ. கேஸ் ஸ்டவ்
இ. மில்லி
ஈ. மல்லி"

"குழப்பமா இருக்கே சார்.. டிவி எங்க ஊருக்கு கிடைச்சிருச்சு.. மத்ததுல.."

"மில்லியா.. மல்லியா கேஸா?"

"குழப்பமா இருக்கு சார்.. 50/50 ஆப்ஷன் உபயோகப்படுத்தறேன்"

"சரி.. கம்ப்யூட்டர், ரெண்டு தவறான விடையை அழிச்சுடுங்க"

"இ. மில்லி, ஈ. மல்லி.. எது சரியான விடை?"

"இப்பவும் சரியாத் தெரியலையே சார்.. எலக்‌ஷன் டைம்ல மட்டுமா எல்லா டைம்லேயுமா சார்?"

"அது எனக்குத் தெரியாது.. விடை இ. மில்லியா ஈ. மல்லியா?"

"தெரியலையே சார்"

"அப்ப விடை இ. மில்லியாவும் இருக்கலாம், ஈ.மல்லியாவும் இருக்கலாம் இல்லையா?"

"ஓக்கே சார்.. சரியான விடை ஈ. மல்லி"

"ஷ்யூர்? இ.மில்லியாவும் இருக்கலாம் இல்லையா?"

"இருக்கலாம் சார். ஆனா என் விடை ஈ.மல்லிதான்"

"ஓக்கே கம்ப்யூட்டர் கப்யூட்டர் ஈ மல்லியாம். லாக் பண்ணித் தொலைங்க.. லாக் பண்ணித் தொலைங்க"

"ஆ! ஈ மல்லி சரியான விடை.. நீங்கள் இப்ப ஒரு கோடீஸ்வரர்.. அடுத்த கேள்வி,.."

பாங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

"ஆ! அடுத்த கேள்வி நாளை இதே நேர நிகழ்ச்சியில கேட்கப்படும்.. நன்றி"

செட்டை விட்டு வெளியே வந்த நடத்துநர் "போலீஸ் ஸ்டேஷன், சுடலை ஏமாத்துறான்.. அவனை அடிச்சு உண்மையைக் கண்டுபிடிங்க"

போலீஸ் ஸ்டேஷன்..
"எப்படிடா ஈ மல்லின்னு சரியா சொன்னே?"

"எலக்‌ஷன் டைம்லே நெறய மில்லி ப்ரீயா கிடைச்சுது சார்.. மல்லி எப்பவுமே கிடைச்சதில்ல.. அதான் சொன்னேன்.."

"சரி.. திருமங்கலத்துக்காரன் எல்லாரும் சொல்ற மாதிரிதான் கேள்விய செட் பண்ணி இருக்கானுங்க கேனப்பயலுங்க.. அவனுங்க கிட்ட பிரச்சினைய வச்சுகிட்டு உன்னை அடிக்கச் சொன்னான் பாரு.. அவனைத்தான் உதைக்கணும்.."

மறுநாள் செட்டில்:

"வாங்க சுடலைமுத்து.. உங்ககிட்ட கடைசிக் கேள்வி கேட்கணும்.. இதுக்கு சரியான விடை சொன்னா உங்களுக்கு ரெண்டு கோடி.. தப்பான விடை சொன்னா, அய்யா ஜாலி.. நாங்க எதுவுமே கொடுக்க வேணாம்"

"கேளுங்க சார் கேள்வி"

"இந்தியாவின் பிரதம மந்திரி யார்?

அ. கலைஞர் மு கருணாநிதி
ஆ.முலாயம் சிங் யாதவ்
இ. மன்மோகன் சிங்
ஈ.லாலு பிரசாத் யாதவ்."

"சுலபமான கேள்விதான்.... இல்ல?"

"எனக்கு இதுக்கு விடை தெரியாதே?"

"ஏமாத்தாதீங்க.. இதுக்கா விடை தெரியாது?"

"நெஜமாதான் சொல்றேன் சார்..போன் அ பிரண்ட் போடலாமா?"

"யாருக்கு?"

"இந்தக் கேள்விக்கு இப்ப சரியான விடை தெரிஞ்ச ஒரே ஆளுக்கு.."

"யாரது?"

"சோனியா காந்தி!"

***************************************************************************

தமிழ்நாட்டின் தென்பகுதியில் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன் க்ரோர்பதி நிகழ்ச்சியில் எல்லாக்கேள்விக்கும் சரியான விடை சொன்னது எப்படி?

அ.
ஆ.
இ.
ஈ. எழுதிவைக்கப்பட்ட விதி.

இல்லை.. எல்லாம் நம் தலைவிதி!

Dec 30, 2008

பினாத்தல் டாப் டென் மூவீஸ் 2008!

வழங்குகிறோம்: பினாத்தல் டாப் டென் மூவீஸ்.

இது இந்த வருடம் வெளியான சில படங்களைப் பற்றிய எங்கள் விமரிசனக்குழு கணிப்புகள். தமிழ்நாட்டில் வெளியானவை பற்றி மட்டுமே இந்த கணிப்புகள் வெளியிடப்படுகின்றன; விமரிசனக்குழுவைப் பாதித்த எல்லா படங்களும் இந்த வரிசையில் இருக்கின்றன - ஆனால் எந்தப்படம் சிறந்த படம் என்று வரிசைப்படுத்தப்படவில்லை.

1.அபியும் நானும்:

தாத்தா பக்கமா பேரன் பக்கமா என்று திண்டாடும் ஆவி, கோலங்கள் அபியினால் ஒரு பக்கம் சாயும் கதை. லூஸ் போன்ற சிறுவர்களை வைத்து மதுரையைக் கிண்டல் அடித்தாலும், தாத்தா வேட்டியினால் வந்த பிரச்சினைக்கு ஞானத்தை பலி கொடுக்கும் காட்சி உருக்கம். க்ராபிக்ஸ் மூலம் உயரமாக ஒல்லியாக மாறும் நாயகன், பழைய க்ளிப்பிங்ஸை வைத்தே பொக்கிஷமாக மக்களைக் கவர முயற்சிக்கிறார் - ஆனால் முடிந்ததா எனத் தெரியவில்லை. எதிர்பாராத திருப்பமாக தாத்தாவும் பேரனும் சேர்ந்துவிட, கழுகார் கேட்கும்" நான் யார் பக்கம் என்று உங்களுக்காவது தெரிகிறதா" என்ற க்ளைமாக்ஸ் காட்சி செண்டிமெண்டாக எடுத்திருந்தாலும் சிரிப்பலைதான் பரவுகிறது!

அபியும் நானும் - அலங்கோலங்கள்!

2. சில நேரங்களில்:

ஊர்ப்பெரியவர் ஒருவர் அடுத்த ஊர்ப்பிரச்சினையில் சில நேரங்களில் சில மாதிரி முடிவெடுக்கும் உளவியல் ரீதியான கதை. சில நேரங்களில் அவர் உணர்ச்சிவசப்பட்டு உயிரையும் கொடுப்பேன், பதவியைத் துறப்பேன் என்கிறார் - அடுத்த காட்சிகளிலேயே - கைகோத்தால் போதும், ஏன் உயிரை விடவேண்டும் என்கிறார். அடுத்த ஊர்ப் பிரச்சினையைப் பற்றிப் பேசினால் தண்டனை கொடுப்பேன் என்கிறார் சில நேரங்களில், உணர்ச்சி வசப்பட்டு பேசுவது கூடத் தவறா எனக் குமுறுகிறார் சில நேரங்களில். அத்தனை சில நேரத்து முடிவுகளுக்கும் காரணம் மேலூரில் இருக்கும் பதினெட்டுப் பட்டி பஞ்சாயத்துதான் எனத் தெரியும் காட்சிதான் க்ளைமாக்ஸ் - ஆனால் அதையும் ஊகித்துவிட முடிவதால் சுவாரஸ்யம் இல்லை.

சில நேரங்களில் - சில பேரங்களில்!

3. பிரிவோம் சந்திப்போம்:

பச்சைத் துரோகம் செய்திருந்தாலும் நாயகனோடு வேறு வழியில்லாமல் நட்பாக இருக்கும் நண்பனைப் பற்றிய கதை. நாயகன் வேறு வழியின்றி பிரிவதாக அறிவிக்கும் சோகமான காட்சி - எதிர்பார்த்திருந்தாலும் கண்ணீரை வரவழைக்கிறது. தன்னைத் திட்டிய நண்பனின் ஆள் பேசிய சிடி கிடைத்ததும் கோபமாக நண்பனின் குருவைச் சிறையில் அடைக்கிறார் நாயகன். பட முடிவில் நாங்கள் எப்போது பிரிந்தோம், புதிதாகச் சந்திக்க என்று காமெடி செய்கிறார். நடுவில் ஏற்பட்ட மாற்றம் என்ன, குருவை ஏன் சிறையில் அடைத்தார், ஏன் விடுதலை செய்தார், நண்பனின் நிலை என்ன என்பதெல்லாம் தெரியாமலேயே படம் முடிகிறது.

பிரிவோம் சந்திப்போம் - சந்திப்பார்களா? சந்தி சிரிப்பார்களா?

4.பிடிச்சிருக்கு:

வேறு வழியில்லாமல் நாயகியைப் பிடிச்சிருக்கு என்றே படம் முழுக்கச் சொல்லி வரும் நாயகனின் கதை. ஏன் பிடிச்சிருக்கு, எப்படிப் பிடிச்சிருக்கு என்பதெல்லாம் யாருக்கும் தெரிவதில்லை. இத்தனைக்கும் நாயகி கொஞ்ச நாள் முன்னால் நாயகனைச் சிறையில் அடைத்தவள். வெளியூருக்காக பாடுபட்ட நாயகன், நாயகிக்குப் பிடிக்காது என்பதால் அதையும் அடக்கி வாசிக்கிறான். விடியோ கவரேஜ் இல்லை என்பதால் சண்டை போட்ட நாயகனுக்கு அபரிமிதமாக விடியோ கவரேஜ் கிடைத்தாலும் நாயகி "பிடிச்சிருக்கு" என்பதால் எதையுமே உபயோகப் படுத்திக் கொள்வதில்லை. குழப்பமான கதை!

பிடிச்சிருக்கு - என்ன பிடிச்சிருக்கு?

5.ஆயுதம் செய்வோம்:

வேறு யாரும் ஆயுதம் செய்யக்கூடாது, தாங்கள் மட்டும்தான் செய்வோம்; நாங்கள் சொல்லும் ஆளோடுதான் செய்யவேண்டும் என்றெல்லாம் நிபந்தனை வைத்து கூட்டாளிகளைக் கவிழ்க்க நினைக்கும் தோழர்களின் முழக்கம். எதிராளிகளைக் கவிழ்க்க முடியாத நிலையில் ஆயுதம் செய்ய கூட்டுக்கு ஆள் தேடுகிறார்கள் - இதோ எங்கள் அணித்தலைவன், இவர்தாண்டா மதச் சார்பற்ற தலைவி என்று பண்ணும் காமெடி இரண்டாம் பாதியை ரசிக்க வைக்கிறது.

ஆயுதம் செய்வோம் - காமெடி கீமடி பண்ணலியே?

6.ஆனந்த தாண்டவம்:

தோற்றாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், அடுத்த முறைக்கு வேறு நாதியில்லை என்று ஆனந்த தாண்டவம் ஆடும் அம்மணியின் கதை. மும்பையில் குண்டு வெடித்தாலும் மூவரசம்பட்டு சாக்கடை அடைத்தாலும் மைனாரிட்டி பஞ்சாயத்து தலைவர் வெளியேறினால் போதும் என்ற சர்வரோக நிவாரணியே துணை என்று வாழ்கிறார் அம்மணி. ஓய்விலேயே செல்லும் முதல்பாதி, ஓய்விலேயே இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கும் இரண்டாம் பாதி; படம் முடிவு வரை க்ளைமாக்ஸ் தேர்தல்கள் வராததால் சொதப்பல்.

ஆனந்த தாண்டவம் - ஓவரா ஆடாதீங்கம்மா!

7.சரோஜா:

படத்தின் பெயருக்கு வித்தியாசமான விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் - த்தியமூர்த்தி பவன் எதிரே ரோட்டில் நடக்கும் ஜாலியான சண்டை என்று. இந்தப்படம் வழக்கம்போலவே பல இயக்குநர்களால் குதறப்பட்டு இருந்தாலும், எப்போது படம் சூடுபிடிக்கும், எப்போது டல்லடிக்கும் என்பது எதிர்பார்க்க முடியாமல் இருந்தது. அவ்வப்போது ஊர்ப்பெரியவரோட சண்டை பிடிப்பது மாதிரி தெரிந்தாலும் அம்மா சொன்னவுடன் அமைதியாகிறார்கள் நாயகர்கள்; திடுதிப்பென்று செத்துப்போன அப்பா ஞாபகம் வந்து போடு.. எல்லாரையும் ஜெயில்ல போடு என்று மிரட்டுகிறார்கள் ஊர்ப்பெரியவரை. எனக்கு ஆறு மாசம், உணக்கு மூணு வருஷம் என்பது போல பஞ்ச் டயலாக்குகளும் உண்டு.

சரோஜா - சறுக்கும் ரோஜா!

8.அஞ்சாதே:

26 நவம்பர் வெளியீடு. நிறைய காரக்டர்கள், எது எங்கே எப்போது எப்படி நடந்தாலும் அதை வைத்து நம் கொள்கையை வலுப்படுத்திக் கொள்ள அஞ்சாதே என்பதுதான் கதையின் நாட். எதிரி நம் மேல குண்டு போட்டாச்சு, எதிரி மேலே ஏன் இன்னும் குண்டு போடலைன்னு கேட்க அஞ்சாதே, 16 வருஷம் முன்னாடி நீ போட்ட கடப்பாரைக்கு இந்த குண்டு சரியாப்போச்சு என்று சொல்ல அஞ்சாதே, ஏன் பணக்கார செத்தவனை மட்டும் கவனிக்கிறே என்று திசைதிருப்ப அஞ்சாதே, ஒருத்தனை சாகடிக்கத்தான் 200 பேரைக் கொன்னாங்க என்று சொல்ல அஞ்சாதே - எனப் பல அஞ்சாதேக்கள். விறுவிறுப்பாக போனாலும் வெறுவெறுப்பாக முடிகிறது - யாரும் எப்போதும் மாற மாட்டார்கள் என்பதை வலியுறுத்தும் கதை!

அஞ்சாதே - அஞ்சாமல் இருக்க முடியாதே!

9.குசேலன்:

பங்கு பிரித்த பிறகு ஏழையாக மாறிவிட்ட குசேலன், குபேரன் மீது போர்தொடுத்து, அவனை நல்வழிப்படுத்தும் கதை. குபேரன் வேறு வழியில்லாமல் எதிர்க்கட்சியை ஆதரிப்பதும், அது குசேலனுக்கு இன்னும் கோபத்தை உண்டுபண்ணுவதும் விறுவிறுப்பான காட்சிகள். க்ளைமாக்ஸில் குபேரன் குசேலனுக்கு செட்டில்மெண்ட் செய்து கண்கள் பனிக்கின்றன; ஆண்டி க்ளைமாக்ஸாக போரில் இருபுறமும் உதவியவர்கள் நடுங்கிக்கொண்டு இருக்கும் காட்சி நகைச்சுவையா சீரியஸா எனத் தெரியவில்லை.

குசேலன் - மாடி வீட்டு ஏழை!

10. தசாவதாரம்:

எனக்கு யார் கூட்டும் தேவையில்லை, நானே எல்லா அவதாரமும் எடுப்பேன் என்று சொல்லும் அணித்தலைவன், இன்றாவது நம்முடன் கூட்டு என்று வயிற்றில் பால்வார்ப்பாரா எனக் காத்துக்கிடக்கும் மேலூர்ப் பெரிசுகளை அலட்சியப்படுத்துகிறார். தப்பு - இங்கே எல்லாரும் தப்பு - நான் மட்டும்தான் சரி என்று பஞ்ச் டயலாக் விடுகிறார்; வாரம் ஒரு ஊருக்குச் சென்று விளையாட்டு காட்டுகிறார். வாரிசுகளை ஒழிக்கணும் என்று மனைவியை வைத்தும் பஞ்ச் டயலாக் விடுகிறார். ஊரில் உள்ள மற்ற பெரிசுகள் எல்லாம் இவரை பாம்பு என்று அஞ்சுவதா, பழுது என்று மிதிப்பதா என்று புரியாமல் டரியல் ஆகிறார்கள்.

தசாவதாரம் - பத்துக்கு ரெண்டு தேறும்!

Jun 11, 2008

ஜிலேபியும் மலச்சிக்கல் பதிவர்களும் இன்னபிற பிரபலங்களும் (11 Jun 2008)

அடர்கானகத்தில் திறந்திருக்கும் வாய்
 
மரத்தின் வெளியே
வெளிச்சம் மறைக்கும் தழைகள்.
சத்தம் உணர்த்தும் சருகுகள்.
எங்கோ ஓடிச்செல்லும் முயலின் ஈன ஒலி.
சிங்கங்கள் துரத்தலாம்
மான்கள் மருளலாம்
இக்காட்டின் ஏதோ ஓர் மூலையில்.
அலுத்துக் காத்திருக்கும்புலிக்கு
நேற்று அருந்திய பியர் போத்தல்
எட்டி உதைக்கும் பொம்மை ஆகலாம்.
பசித்திருக்கும் வயிறுகளும் உண்டு.
சிவாஜிக்கு மட்டும்தானா?
இவ்வாய்க்கும் ஜிலேபிகள் தரப்படலாம்.
அதை இலவசமென்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் நீங்கள்.
 
***********************

சிவாஜி வாயிலே ஜிலேபி..

"இதான் க்ளூவா?" இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் தன் சட்டைப்பையினின்றும் எடுத்த கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தவண்ணம் கேட்டார்.

"ஆமாம் சார். அந்த யங் சாப் அப்படித்தான் தன் கையிலே பச்சை குத்தியிருந்தான்" சொன்னார் சிலம்பரசன் ஐ பி எஸ்.. சத்தியிலிருந்து மாற்றலாகி வந்திருந்தார். புது ரெக்ரூட்மெண்ட்.

"இறந்தவர் பேரு என்ன?"

"வாகீசன் சார். ஆர் எஸ் புரத்துல தங்கி இருக்கார். இண்டஸ்ட்ரிஸ்ட்"

"எப்படி இறந்தார்?"

"பாரன்ஸிக் டிபார்ட்மெண்ட் ரிசல்ட் இன்னும் வரலை.. ஆனா உடம்பெல்லாம் நீலம் பாரிச்சிருந்தது சார்"

"லாஸ்ட் வீக் இதே ஏரியாவுல ஒரு கொலை நடந்ததே.. அதுல இறந்தவர் பேர் என்ன?"

"ஜியா மொகித்தீன் சார்.. அவரும் புட் பாய்சனிங் தானாம் சார்"

".. ம்" கோகுல்நாத் இன்னும் விவேக்கைக் கூப்பிட முடிவெடுக்கவில்லை..

"ஸ்வீட் சாப்பிடறீங்களா சார்.. பக்கத்துக் கடையில ஆனிவர்ஸரியாம்.. அதுக்காகக் கொடுத்துட்டுப் போனாங்க.."

கோகுல்நாத் துல்லியமாக அதிர்ந்தார்..

"சிலம்பரசன்.. அந்த ஜிலேபியச் சாப்பிடாதீங்க..

இன்னுமா உங்களுக்கு க்ளூ புரியல?

சிலம்பரசன் - வாகீசன் - ஜியா மொகித்தீன் -மூணு பேரையும் ஜிலேபி கொடுத்து கொல்லறதா ப்ளான் போட்டிருக்கான் அந்த ப்ளாகாட்!"
 
*******************
ஜிலேபியும் மலச்சிக்கல் பதிவர்களும்
 
கவுஜயிலே இருக்கற வகைங்களே போதும்னு பொறவிக்கவிஞனான நானும் நினைச்சுப்புட்டா, அண்ணாச்சிக்கு சரக்கு தீந்து போச்சுன்னு அபுதாபிக் கடைங்கள்லே சரக்கை வாங்கி அனுப்புவான் வளர்ந்துவரும் இலக்கியவாதி.. இருக்கற சோகம் போதாதுன்னு இதையும் ஒரு சோகமாக்கி அய்யனார் சோக கீதம் பாடுவான். கோட்டிக்காரங்க அப்படித்தான் பண்ணுவாங்கன்னு விட்டுத் தொலைக்கலாம்  சவத்தைன்னு விட முடியுதா? நம்ம மனசாட்சி நம்மளைக் கேள்வி கேக்காது?  அப்புறம் ஜெமோவுக்கும் சாத்தான்குளத்தானுக்கும் என்ன வித்தியாசம்?
 
இந்தப் புது வகைக் கவுஜைக்கு சரி ரியலிஸம்னு பேரு..எதைச் சொன்னாலும் சரி இருக்கற ஆளுங்கதானே நம்ம ஊர்லே பெரும்பான்மை.. அந்த ஒடுக்கப்பட்ட இனத்துக்காக பாடுபடும் கவுஜை இது!
 
சிவா
ஜி
வாயி
லேஜி
லே
பி.
 
இந்தக் கவுஜைய எவனாச்சும் திறனாய்வு செஞ்சு பின்னூட்டம் போட்டா வெளியிடவே மாட்டேன்.. ஆமாம் சொல்லிபுட்டேன்.
 
************************
அவனுக்கென்று ஒரு ஜிலேபி
 
'மட சாம்பிராணி.. ஒரு பெண்ணை இந்த இடத்திலா நிற்க வைப்பது? ' போவோர் வருவோர் பார்வையெல்லாம் தன்னையே துளைப்பதாக எண்ணிக் குன்றிப்போனாள் ரம்யா. போர்ட்டர் ஒருவன் இடிக்க வந்தபோது இயலாமைச் சினத்தில் துடித்தாள்.

காலையில் அப்பா சொன்னாரே..'என் பெண் சமத்து. எந்த இடத்திலும் தன்னிலை உணர்ந்து நடந்து கொள்வாள்' இங்கே அதெல்லாம் முடியாது என பெருமூச்செறிந்தாள்.

வாயிலுக்குச் செல்லலாம். அங்கேயாவது இந்த அருண் ராஸ்கல் வந்திருக்கிறானா என்று பார்க்கலாம்.

டிக்கட் கேட்ட பரிசோதகரிடம் சீசன் டிக்கட்டைக் காட்டி வெளியே வந்தாள். சி எஸ் டி டெர்மினல் வாசல் ஆட்டோக்காரர்கள் 'வரீங்களா அம்மா' என்று கேட்டதற்கு தலையசைத்துவிட்டு முன்னேறினாள்.

அருண் வேகமாக வந்தான். "டார்லிங், நம் கஷ்டம் எல்லாம் தீந்துது.. இந்தா இனிப்பு சாப்பிடு" என்று வாயிலே ஒரு இனிப்பையும் திணித்தான்.

'என்னது இது.. நான்குபேர் போகிற வருகிற இடத்திலா சாப்பிடுவது?'

' அதனால் என்ன சிவாஜி (டெர்மினஸ்) வாயில்லே ஜிலேபி' என்று ஜோக்கடித்தான் அருண்.

 
***********************
பி கு 1: இந்த சிவாஜி வாயிலே ஜிலேபி என்ற தொடர் விளையாட்டை ஆரம்பித்து வைத்த புண்ணியவானை நேரில் சந்திக்க ஆவலாய் உள்ளேன். இன்ஷ்யூர் செய்துகொண்டு வரவும்.
 
பி கு 2: இலவசக்கொத்தனாருக்கும் இன்ஷ்யூரன்ஸ் பரிந்துரைக்கிறேன்.
 
பி கு 3: ராஜேஷ்குமாரும் ரமணி சந்திரனும் கோவிச்சுக்க மாட்டாங்க.. மத்தவங்க கோவிச்சுக்கிட்டாலும் கவலையில்லை :-)
 
பி கு 4: இன்னும் மூணு பேரைக் கூப்பிடணுமாமே - சாத்தான்குளத்தான், அடர்கானகப் புலி, வளர்ந்துவரும் இலக்கியவாதின்னு எங்க லோக்கல் லேயே முடிச்சுக்கிறேன்.
 
பி கு 5: ஒரு மெகா ப்ராஜக்ட் தயாராகி வருகிறது. குவிஸ் மற்றும் பரிசுப்போட்டி. அடுத்த வாரம் ரிலீஸ்.
 
பி கு 6: தசாவதாரம் முதல்நாள் முதல் காட்சிக்கு புக் செய்தாகிவிட்டது. சென்னைப்பதிவர்களுக்கு முன்பே பார்த்துவிடுவேன். (இங்கு 12 ஜூன் ரிலீஸ்)
 

Apr 22, 2008

இதென்ன கலாட்டா?

தலைமைச் செயலகச் செய்திக் குறிப்பு - காலை 11 மணிக்கு
 
1. கடலூர் எஸ் பி விழுப்புரத்துக்கும் விழுப்புரம் எஸ் பி வேலூருக்கும் வேலூர் எஸ் பி கடலூருக்கும் மாற்றம்.
 
2. சட்டசபைக் கூட்டத்தொடர் 19 ஆம் தேதி தொடக்கம்.
 
3. வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ 3000 உதவித்தொகை
 
4. தமிழ்ப்படங்களில் நடிக்கும் நடிகர்களில் யாரேனும் ஒருவர் பெயர் தமிழில் இருந்தாலும் வரிவிலக்கு.
 
தலைமைச் செயலகச் செய்திக் குறிப்பு - மாலை 6 மணிக்கு
 
1. வேலூர் எஸ் பி விழுப்புரத்துக்கும் விழுப்புரம் எஸ் பி கடலூருக்கும் கடலூர் எஸ் பி வேலூருக்கும் மாற்றம்.
 
2. சட்டசபைக் கூட்டத்தொடர் 18 ஆம் தேதி தொடக்கம்.
 
3. வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ 5000 உதவித்தொகை.
 
4. தமிழ்ப்படங்களில் பேசப்படும் வசனங்களில் ஏதேனும் ஒருவரி தமிழில் இருந்தாலும் வரிவிலக்கு.
 
நடிகர் சங்க அறிக்கை - காலை 11:30க்கு
 
வரும் 28 ஆம் தேதி வரிவிலக்களித்த முதல்வரைப்பாராட்டி மாபெரும் நட்சத்திரக்கலைவிழா. பங்குகொள்ளாத நடிகர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
நடிகர் சங்க அறிக்கை -மாலை 6:30க்கு
 
வரும் 27 ஆம் தேதியும் வரிவிலக்களித்த முதல்வரைப்பாராட்டி மாபெரும் நட்சத்திரக்கலைவிழா. பங்குகொள்ளாத நடிகர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
முதலமைச்சர் அறிக்கை - காலை
 
கர்நாடக முதல்வர் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. அவர் பேச மறுப்பதில் சற்றும் நியாயம் இல்லை. முடிவெடுப்பதை ஒத்திப்போட்டிருக்கிறேன்.
 
முதலமைச்சர் அறிக்கை - மாலை
 
கர்நாடக முதல்வருடன் பேசிவிட்டேன். அவர் பேசுவதில் சற்றும் நியாயமில்லை. பிரச்சினையை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லவிருக்கிறேன்.
 
முதலமைச்சர் பேட்டி - காலை
 
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது. விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது. என்பதால் மக்கள் மகிழ்ச்சியோடு இந்த ஆட்சியை ஆதரிக்கின்றனர்.
 
அதே சமயத்தில் போக்குவரத்துத் துறையில் நடைபெறும் ஊழலால் நாடே தத்தளிக்கிறது. கல்வி நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தத் தயாராக உள்ளோம்.
 
முதலமைச்சர் பேட்டி - மாலை
 
தமிழ்நாட்டில் வாகன வசதி மிகவும் அற்புதமாக உள்ளதை உலகவங்கியே வியந்து பாராட்டுகிறது. கல்வியில் குறுகிய காலத்தில் சிறந்துவிட்ட தமிழ்நாட்டைப்பற்றி முனைவர்கள் ஆராய்ச்சி செய்கின்றார்கள்.
 
ஆனால், அளவுக்கதிகமாக உயர்ந்துவிட்ட விலைவாசியைப்பற்றியும், தாறுமாறாகக் கெட்டுக்கிடக்கும் சட்டம் ஒழுங்கைப்பற்றியும் மக்கள் தெரிவிக்கும் கவலையில் நானும் பங்கேற்கிறேன். அடுத்தமாதம் விலைவாசி உயர்வை எதிர்த்து பிரம்மாண்டப் பேரணி நடத்துவோம்.
*****
 
என்னடா இது கலாட்டான்னு பாக்கறீங்களா? தமிழ்நாட்டோட சோகம் எல்லாம் முதலமைச்சரா இல்லாதப்ப மட்டும்தான் அம்மாவுக்கும் சரி, கலைஞருக்கும் சரி - கண்ணுல படுது. இதே ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல ஒருத்தரை காலை நேர முதல்வராவும், இன்னொருத்தரை மாலை நேர முதல்வராவும் முதலமைச்சராக ஆக்கிட்டா? 
 

Apr 9, 2008

நாடாட ஓட்டாட.. 2

வெல்கம் பேக் ஆப்டர் தி ப்ரேக்..
 
நம்ம நிகழ்ச்சியோட அடுத்த கண்டெஸ்டண்ட்.. அதிரடிக்கார மச்சான் மச்சான் மச்சானே..
 
யெஸ்.. யூ கெஸ்ட் இட் ரைட்.. இட் இஸ் நன் அதர் தன்...
 
வாட்டாள் நாகராஜ்!
 
அதிரடியாகவே உள்ளே நுழைகிறார்.. 

அதாண்டா இதாண்டா வாட்டாளு நான் தாண்டா
அந்தத் தமிழ் ஆளுங்க அனைவருக்கும் எனிமிடா..
எடியூரப்பா ஆரம்பிச்சாண்டா.. நாகராஜு தொடர்ந்திடுவாண்டா..
 
நான் ஆறைப் பங்கு போட விடுவதில்லைடா..
அதிலும் தமிழு பேசும் ஆளை விடுவதில்லைடா.. ஆ ஆ அதாண்டா
!

 கொஞ்சம் கூல்டவுன் ஆகி, ஒரு மெலடியைப் போட்டுத் தாக்குகிறார். 

என்ன விட.. இங்க கன்னடத்தை காக்கறதுக்கு யாரும் இல்லை எவனும் இல்ல..
என்ன விட.. இங்க கலவரத்தை கிளப்பறதுக்கு யாரும் இல்ல.. எவனும் இல்ல..
 
ஆத்துத்தண்ணி குடிச்சா ஒழிப்பேண்டி..
டிவியில தமிழ அழிப்பேண்டி..
பாதி ஊரு எல்லாம் எமக்கேடி..
மீதி ஊரு நாளைக்குக் கேப்பேண்டி..
 
என்ன விட...

முடிக்கும் விதமாக ஒரு குத்துப்பாட்டைப் போட்டு முடிக்கிறார்:

ஏய்.. தாத்தா.. ஆத்தோரமா வாரியா..
நான் பாத்தா.. பம்மிகிட்டே போறியா!
 
அட எங்க பக்கம் நியாயம் இல்ல..
ஆமா அருவி கேட்டா உனக்கு தொல்ல...
 
ஏய்ய்!!
 
அடேங்கப்பா.. இவரு பாடி முடிக்கிற வரைக்கும் எல்லாரும் குலை நடுங்கிகிட்டே தான் உக்காந்திருந்தோம். எதைச்சொன்னா அதை வச்சுக் கலவரம் கிளப்புவாரோன்னு ஒரே பயம்.. ஜட்ஜஸ் உங்களுக்கு?
 
நடுவர் 1: பின்ன? இவரு கான்சப்ட் இல்லாமயே கம்பு சுத்துவாரு. இப்படி ஒரு மேட்டர் கிடைச்சா.. முதல்ல கலவரத்தைக் கிளப்பிட்டுதான் காரணமே கேப்பாரு.. இவருக்கு, வேற வழியில்ல, 10!
 
நடுவர் 2: நான் இதுக்கெல்லாம் பயப்படாது. ஆனா சினிமாவ நிறுத்திடுவாரோன்னுதான் பயப்படுது. சோ, என் மார்க் 8!
 
நடுவர் 3: முதல் அக்கா சொன்னதுகூட சேந்துக்கறேன். ஏன்னா, எனக்கும் பயம்.
 
அடுத்து வரப்போற இந்த ஜோடி காம்படிஷன்லே இல்லாட்டியும், ஒரு பாட்டு மட்டும் பாடி நம்மை மகிழ்விக்கிறதுக்காக வராங்க - எ ஸ்பெஷல் ரீமிக்ஸ் பர்பார்மன்ஸ் ப்ரம் தேசியக்கட்சிகள்!

டூயட் ரீமிக்ஸ்.. கர்நாடக பாஜக, காங்கிரஸ் ஒரு கட்சியாவும், தமிழக காங்கிரஸ் பாஜக இன்னொரு கட்சியாவும்..

நாடொன்று கண்டேன், நியாயம் காணவில்லை, என்னென்று நான் சொல்லலாகுமா.. என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
ஓட்டொன்று கண்டேன், உண்மை காணவில்லை, என்னென்று நான் சொல்லலாகுமா.. என்னென்று நான் சொல்ல வேண்டுமா?

நான் வாங்கும் ஓட்டு நீ பார்ப்பதில்லை, நீ வாங்கும் ஓட்டு நான் பார்ப்பதில்லை..
நான் பார்க்கும் ரீஜன் உன் ரீஜன் இல்லை, என்னோட வோட்பேங்க் உன் பேங்கு இல்லை..
எல்லையிலே கொள்கையில்லை.. ஒற்றுமையில் நாட்டமில்லை..
ஓட்டோடு உறவாடும் கட்சி எங்கள் கட்சியல்லவோ..

நின்றேன்.. ம்ஹூம்.. வென்றேன்.. ம்ஹூம்.. சுருட்டினேன்..

காம்படிஷன்லேயே இல்லாட்டியும் சும்மா கிளப்பிட்டாய்ங்க இல்ல பீதிய!
 
நிக்ழ்ச்சியோட அடுத்த.. அதாவது கடைசியான ஜோடி வரப்போறாங்க! லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட்! ஆமாம்.. வி வெல்கம் ஆன் ஸ்டேஜ்.. தெ கிரேட் கலைஞர் கருணாநிதி அண்ட்.. ஹிஸ் உட் பி கர்நாடகா கவுண்டர்பார்ட்.. மிஸ்டர் எஸ் எம் கிருஷ்ணா!
 
டூயட் பாட்டில், கலைஞர் தொடங்குகிறார்:

ஏலே.. ஏலேலே லே..
ஹொகெனக்கல் ஓரத்துல
பாத்திகட்டி பத்திரமா
தண்ணியத்தான் ஊத்தித்தரேன்
தாகமெல்லாம் தீத்துத்தரேன்
வாடி .. நீ வாடி..
 
பத்துவருசம் முன்னாலியே
எல்லாரையும் கேட்டுப்பிட்டேன்
பாச்சலோட ஓடிவாரேன்
எலும்பொடிஞ்சா
கவலையில்ல
வாடி.. நீ வாடி..
 
ஏலே ஏலே லே லே..
 
எல்லைதாண்டி வாராம் பாரு..
அவனைச் சிறையெடுக்கப் போறேன் வாடி..

எஸ் எம் கிருஷ்ணா:

அய்யய்யோ.. என் ஓட்டுக்குள்ளே கைய வச்சான் அய்யய்யோ..
அய்யய்யோ.. என் ஊருக்குள்ளே தண்ணி மொண்டான் அய்யய்யோ..

கலைஞர்:

திண்டாடி நான் தேடித் தேடி..
நானும் கொண்டாந்தது இந்தத் தண்ணி..

 கிருஷ்ணா:

நீ போனாக்கூட குத்தம் இல்லை..
நல்லா ஆட்சி பாக்கும் இந்தப் புள்ள! அய்யய்யோ!

அடடா.. அணுகுண்டை அக்குள்லே சொருகிகிட்டோமோ ன்னு கலைஞர் கொஞ்சம் மாடரேட் பண்றாரு..

உன்னைத்தானே.. பஞ்சம் என்று தண்ணீர் கேட்டேன் நானே
உயிர் போகிறது.. திட்டம் போடவிடு..
குடிநீர் கொடுத்து கொஞ்சம் வாழவிடு!

 விடாம சண்டித்தனம் பண்றாரு கிருஷ்ணா

என்னைத்தானே.. தானமாகத் தண்ணீர் கேட்டாய் நீயே..
ஓட்டு போகிறது.. ஆட்சி போகிறது
நியாயம் பேசிவிட்.. இது நேரமில்லை..

 சோகத்தின் உச்சத்தில் தொடர்கிறார் கலைஞர்:

ஓடும் கட்சிகளே..
ஒருசொல் கேளீரோ..
ஆடும் ஆட்சியிலே
ஆதரவு தாரீரோ..
 
நாடாளும் சட்டசபையில்
மைனாரிட்டிக்கு நான் தலைவன்,,
கூட உள்ள கட்சிகளின்
தலைமைக்கு நீ தோழன்..
 
தண்ணீரிலே உன் ஓட்டு..
பிஜேபி போட்ட ரூட்டு
பிரச்சினையில் என் கூட்டு.
 
இதில் நான் அந்த ப்ளான்
பற்றிப் பாடுவதெங்கே பாட்டு!

அரங்கம் ஒளிரத்தொடங்க, எல்லாரும் அவசரமாக கண்ணைத்துடைக்க கர்சீப் தேடுகிறார்கள்.
 
ஆஹா.. நவரசமும் கலந்த கான்சப்ட்.. ஜாலியா டூயட் பாடினாலும் கடைசியில எல்லாரையும் அழவைச்சுட்டாங்க! நடுவர்கள் உடனே எதுவும் சொல்ல முடியாத நிலைமையில இருக்காங்க.. ஜட்ஜஸ், கண்ணைத் தொடச்சுக்கிட்டு கமெண்ட் சொல்லுங்க..
 
நடுவர் 1: என்னன்னு சொல்லுவேன்.. எக்ஸ்ட்ரா ஆர்டினரி பர்பார்மன்ஸ். வேற எங்க இருந்து வராட்டியும், கண்ணுல இருந்து தண்ணி வரதை நிறுத்தவே முடியல.. என் மார்க் 10!

நடுவர் 2: ஆமாக்கா.. வழக்கமா நாமதான் இவர் முன்னாடி ஆடுவோம், இப்ப நம்ம முன்னாடி இவர் ஆடுறாரேன்றதப் பாத்ததும் கண்ணுலேயே அருவி.. அது என்னோட எல்லைக்குள்ளதான் இருக்கு! நானும் 10!

நடுவர் 3: நீங்க ரெண்டு பேரும் சொன்ன பிறகு நான் சொல்ல என்ன இருக்கு.. (விசும்பியபடி) நானும் 10 மார்க்தான்.

வாவ்.. புல் மார்க் எடுத்து போட்டியிலே பரிசைத் தட்டிக்கிட்டுப் போறாங்க கலைஞர்-கிருஷ்ணா ஜோடி.. அவங்களோட சூப்பர் பர்பார்மன்ஸ் இப்படியே கண்டின்யூ ஆனாதான் எடியூரப்பா அண்ட் கோ தோக்க முடியும்..

நாம நிகழ்ச்சியோட சோகமான கட்டத்துக்கு வந்துட்டோம். (எல்லாருக்கும் கிளிசரின் சப்ளை பண்ணியாச்சாப்பா?) இன்னிக்கு எலிமினேட் ஆகப்போற டீம் யாருன்னு பார்க்கப்போறோம்! யார் அந்த பாவப்பட்ட டீம்?

அழாதீங்க.. இன்னிக்கு இல்லாட்டியும் அடுத்த சான்ஸுல நீங்க உள்ள வர வாய்ப்பு இருக்கு..

இல்ல மேடம்.. இதுவரைக்கும் எந்த காம்படிஷன்லேயும் ஜெயிச்சதே இல்லை..

உங்க பர்பார்மன்ஸை இம்ப்ரூவ் பண்ணனும்.. ஆனா நம்பிக்கையத் தளர விடாதீங்க!

பொதுமக்கள் டீம் அழுதுகொண்டே விலக க்ரெடிட் டைட்டில்ஸ் ஓட ஆரம்பிக்கிறது.

Apr 7, 2008

நாடாட.. ஓட்டாட!

"ஹாய் வியூவர்ஸ்!  தமிழ் தொலைக்காட்சிகளிலேயே ஒரு புதுமையான நிகழ்ச்சி - நாடாட ஓட்டாட.. அற்புதமான நிகழ்ச்சின்னு நாமே சொல்லிக்கக் கூடாதுன்றதுக்காக, நம்ம நடுவர்களைச் சொல்ல வைக்கலாமா? வீ வெல்கம் அவர் நடுவர்ஸ் ஆன் த ஸ்டேஜ் ப்ளீஸ்"
 
நடுவர் 1: இது ஒரு எக்ஸலண்ட் ப்ரொக்ராம். இதைப் பார்த்த பிறகுதான் நான் எவ்வளோ நல்லா நொட்டை சொல்வேன் னு எனக்கே தெரிஞ்சுது.
 
நடுவர் 2: ஆமாம் நடுவரக்கா.. இந்த ப்ரொகிராம் பாக்கச் சொன்னவுடனே என் பசங்க எல்லாம் டிவிய ஆப் பண்ணிட்டு படிக்கப் போயிடறாங்க. இன்பார்மேட்டிவ் ப்ரொகிராம்.
 
நடுவர் 3: நடுவர் அக்கா சொல்லிச்சு, இன்னொரு நடுவர் அக்காவும் ஷொன்னாப்போல, சூப்பர் நிகல்ச்சி.
 
இன்னிக்கு நம்ம நிகழ்ச்சியிலே, மெட்லீ ரவுண்ட்.. ஒவ்வொரு காண்டெஸ்டண்டும் ரெண்டு மூணு பாட்டை ரீ மிக்ஸ் பண்ணி கலக்கப் போறாங்க.. முதலாவதா ஆட வராரு.. ஏமாந்த சோணகிரின்னு எதிர்பாத்தவங்களை எல்லாம் ஏமாத்தின எடியூரப்பா!
 
மேடை இருளடைகிறது.. பேத்தாஸ் ஒலியுடன் ஆரம்பிக்கிறது பாட்டு..
 
"தரைமேல் பிறக்கவைத்தான் - எங்களை
தண்ணீரை நிறுத்தவைத்தான்..
கரைமேல் பிறக்கவைத்தான் - உங்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்.."
 
படகோட்டி கெட்டப்பில் பாடியவண்ணம் நுழைகிறார் எடியூரப்பா.
 
டக்கென்று இசை மாறுகிறது.. பீட் அதிகரித்து குத்துப் பாட்டு பாட ஆரம்பிக்கிறார்..
 
புகையடிக்குது புகையடிக்குது
ஹோகெனக்கல் புகையடிக்குது..
எங்க ஜனம் பார்த்தடிக்குது..
எல்லா வோட்டும் சேத்தடிக்குது..
கூட்டு போட்டும் எலெக்ட் ஆவலாம்.. (தமிழனுக்கு)
வேட்டு வச்சும் எலெக்ட் ஆவலாம்..
 
இசை மறுபடி மாறுகிறது..
 
பரிசல ஓட்டி எல்லைக்கு ஓடு..
பஸ்ஸை நிறுத்தி எல்லைய மாத்து..........................
 
என் பேரு எடியப்பா..
தண்ணியெல்லாம் எனக்கப்பா..
எங்களுக்கு மிஞ்சிப்போனா
நீயும் கொஞ்சம் குடியப்பா.. குடியப்பா
 
நெஞ்சில் ஆறா வடுவப்பா..
குமாரசாமி ஆப்பப்பா..
அதிக சீட்டு வேணுமுன்னா
தண்ணி மேட்டர் எடுவப்பா..எடு அப்பா..
 
"வாவ்.. கலக்கிட்டீங்க எடியூரப்பா.. அந்தக்காலத்துல ஆரம்பிச்சு இப்ப வரைக்கும் எல்லாப்பாட்டையும் போட்டுக் கலக்கிட்டீங்க! ஜட்ஜஸ் என்ன சொல்றாங்கன்னு கேக்கலாமா?"
 
நடுவர் 1: கான்சப்ட் ரொம்பப் புதுமையா யோசிச்சிருக்காரு.. ஓட்டு வாங்கணும்னா எந்த எல்லைக்கும் போகத்தயார்ன்றத அழகா வெளிப்படுத்தினாரு.. ஆனா.. ஆட்டம் கொஞ்சம் - இல்லை, ரொம்பவே அதிகம்தான். தன்னோட ஸ்டேஜ்லே மட்டும் ஆடாம, அடுத்த ஸ்டேஜுக்கும் போயி ஆடினார் பாருங்க.. அது ஒரு பெரிய மைனஸ் பாயிண்ட்.. என் மார்க்ஸ் : 7
 
நடுவர் 2: ஆமாம். ஆட்டம் அதிகமாத்தான் போச்சு. கூட்டு போட்டும் எலக்ட் ஆவலாம்னு பாடணவரு அதை ஏன் செலக்ட் பண்ணல? என் மார்க்ஸ்: 6
 
நடுவர் 3: அவங்க சொன்னா மாதிரிதான்.
 
நம்ம நிகழ்ச்சியில அடுத்ததா வந்து கலக்கப் போறவங்க - நடிகர் சங்கம்!
 
எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ஆரம்பிக்கிறார் சத்யராஜ்.
 
ஆடுங்கடா என்னச்சுத்தி
நான் பெரியாரு வெட்டுக்கத்தி
பாடப்போறேன் மண்ணைப்பத்தி
கேளுங்கடா வாயப்பொத்தி..
 
தமிழ்ச்சாமிய கும்பிட்டா தமிழனோட சங்கமடா..
திருப்பதிய கும்பிட்டா கொல்டியோட சங்கமடா..
 
பொறாமை எரிச்சல் கெட்ட வார்த்தை சேர்த்துப் போட்டா நடிகர் சங்கம்..
அவனை இவனை திட்டிப்போட்டு தமிழைக் கொஞ்சம் கலந்து வச்சா நடிகர் சங்கம்!
 
ட்யூன் மாறித் தொடர்கிறார் ரஜினி..
 
வாட்டாளென்ன முட்டாளென்ன தண்ணியென்ன வெந்நியென்ன சொல்லடா சொல்லடா பதிலை..
எந்த ஊரு எந்தன் ஊரு எந்தப்பக்கம் எந்தன்பக்கம் சொல்லடா எனக்கு பதிலை..
 
நம்பிநம்பி எடுத்துவச்ச சினிமாவெல்லாம் நிறுத்திப்புட்டா சோறு எதுக்கு போடா.. 
இங்க விரதத்துக்கு எதுக்கு பீடா? 
 
நம்பிநம்பி எடுத்துவச்ச சினிமாவெல்லாம் நிறுத்திப்புட்டா சோறு எதுக்கு போடா.. 
இங்க விரதத்துக்கு எதுக்கு பீடா? 
 
உடனே ட்யூனெல்லாம் நிற்கிறது.. கமல் பேஸ் வாய்சில் கிருஷ்ணர் கெட்டப்பில் போகஸ் லைட் அடிக்க, தொடர்கிறார்.
 
"இன்று அருவி உன்னுடையது.. விட்டுவிட்டால் நாளை அவனுடையது.
 
எதை நீ குடித்து வைத்தாய்? அதை நீ வாந்தி எடுப்பதற்கு?
 
எது நடந்ததோ அது மோசமாகவே நடந்தது..
 
எது நடக்கிறதோ அது பசியோடே நடக்கிறது..
 
எது நடக்க இருக்கிறதோ அது கள்ள ஓட்டோடே நடக்கும்"
 
அபாரமான சைலன்ஸ் மட்டும்! குழப்பத்தோடு அரங்கம் ஒளிர்கிறது.
 
"வாவ்.. நடிகர்கள் எல்லாம் பின்னிட்டீங்க!.. ஜட்ஜஸ்?"
 
நடுவர் 1: இன்னும் நான் ஆச்சரியத்துல இருந்து விலகல.. ஆனா, இவங்களோட கான்சப்ட் என்னன்னுதான் புரியவே இல்ல. சினிமா போடணுமா, தண்ணி விடணுமா? அந்தக் குழப்பம் இருந்ததாலேயும், கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகாததாலேயும் என் மார்க் 6.
 
நடுவர் 2: டிஸ்ஸப்பாயிண்ட் பண்ணிட்டீங்க நடிகர்களே.. கெமிஸ்ட்ரியும் இல்லை.. அந்த ஜோஷ் உம் இல்லை.. ஆனா, சூப்பர் கான்சப்ட்.. எனக்கே பசி வந்துதுன்னா பாத்துக்கங்க.. உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. (விசிலடித்துவிட்டு).. என் மார்க் 8!
 
நடுவர் 3: (இப்படி ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசி குழப்பிட்டீங்களே.. ஒரே மாதிரி பேசி இருந்தா காபி அடிச்சிருப்பேன்.. சரி.. )நல்லாவும் இருந்துது - சில இடங்கள்லே இன்னும் கொஞ்சம் பெப் போட ஜோஷ் கலந்து கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆயிருந்தா (எல்லா வார்த்தையும் சொல்லிட்டனா?) நல்லா இருக்கும்..
 
நேயர்களே.. இன்னும் கலைஞர், எஸ் எம் கிருஷ்ணா, டாக்டர் ராமதாஸ் எல்லாம் ஆட வராங்க.. அதுக்கு முன்னாலே ஒரு சின்ன ப்ரேக்!!!!!!!!!!!!!!

 

blogger templates | Make Money Online