Oct 29, 2009

படுக்கை - சிறுகதை

படுக்கையில் கிடந்தான் கிழவன். எவ்வளவு நாள் ஆசைப்பட்டிருப்பேன் இவனை இப்படிப்பார்க்க.

”தேவா”

கவனிக்கவில்லை. அவனை இந்தப்பெயர் சொல்லி யாரும் அழைப்பதில்லை.

“தேவா.. கண்ணைத் திறந்து பாரு”

புரண்டு படுக்க முயற்சித்தான். குத்தல் வலியில் முகம் அஷ்டகோணல் ஆனது. இந்த நிலையில் இருப்பவனைப் பார்த்து மகிழ்ச்சி அடைவது தவறுதான். இருந்தாலும் என்னால் மகிழ்ச்சியை மறைக்கமுடியவில்லை.

“நீயா? இப்ப திருப்தியா இருக்கணுமே”

“திருப்தி? அதை நான் இழந்து பல ஜென்மம் ஆச்சு.”

“இன்னுமா உன் கோபம் அடங்கல?”

“அவ்வளவு சுலபமா? உன் வீரத்தை என்கிட்ட எத்தனை முறை காமிச்சிருக்கே? இப்பதானே நான் ஆட ஆரம்பிச்சிருக்கேன்!”

வலியிலும் கிழவனுக்கு சிரிப்பு வந்தது,

“நீயா? இப்ப ஆடறியா? நீ ஜெயிச்சிட்டதா நினைக்கிறயா?”

”தெரியும் தெரியும். இப்பவும் எதாச்சும் சொல்லுவே. இப்படி நீ படுக்கையா கிடக்கறதுக்கு நான் காரணம் இல்லன்னு சொல்லுவே”

”நீ நம்பமாட்டே. ஆனாலும் சொல்றேன். நீ இல்லை!”

அதே சிரிப்பு. பலவருடங்கள் முன்பு எரிச்சலை ஏற்படுத்திய அதே சிரிப்பு.

தேவா அப்போது மரத்தடியில் உட்கார்ந்திருந்தான். அப்போதும் என்னைப்பார்க்கையில் கிழவன் தான்.

நான் பயணத்தில் களைத்துப் போயிருந்தேன். ஏமாற்றங்களில் அடிபட்டிருந்தேன்.

”திரும்ப வந்துட்டியா? போன வேலை?” உண்மையான கனிவோடு கேட்பவன் போலவே கேட்டான்.

தலையை ஆட்டினேன். கண்ணீர் அவனுக்கு கதை சொல்லியிருக்கும்.

”என்ன பண்ணப்போறே?”

எச்சிலை விழுங்கிக்கொண்டேன். இவனிடம் எப்படிச் சொல்வது?

“நீங்க..” வார்த்தை திக்கியது.

“நான்?” தேவாவின் முகம் குழப்பமானது.

“நான் உங்களை..”

“என்னை?” வார்த்தைகளுக்கு இடையிலான இடைவெளி அவனைத் துன்புறுத்தியது போல.

“நீங்க என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறீங்களா” சொல்லியே விட்டேன். இந்தக் கிழவனைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொல்லும் அளவுக்கு விதி என்னைக் கொண்டு விட்டதை நினைத்து இலக்கில்லாத கோபம் வந்தது. விதியா? இவனா? இல்லை என் கோபத்தின் இலக்கு இவன் தான்.

உடனே பதில் வரவில்லை. என்னை ஏற இறங்கப் பார்த்தான். என் அழகு பருவத்தின் உச்சத்தில் இருந்த நேரம் அது. சம்மதித்து விடுவான். எங்கே போகிறான். கல்யாணம் மட்டும் ஆகட்டும். இவன் எனக்குச் செய்த கொடுமைக்கெல்லாம் அவனைப் பழி தீர்த்துக்கொள்ளலாம். வட்டியும் முதலுமாக.

இந்த வயதில் இவ்வளவு அழகான பெண் கிடைத்திருக்கிறாள். முதலில் அவன் கண்ணில் தெரிந்தது ஆசைதான். ஆனால் கொஞ்ச நேரம்தான். நடைமுறைச் சிக்கல்களை நினைத்திருப்பான் போல. ஆசை போய் ஏமாற்றம் வந்தது.

“என்ன பேத்தறே? உன் வயசென்ன என் வயசென்ன? இந்தக் கிழவனை ஆசையா படறே?” அவன் குரலில் அது உண்மையாக இருந்துவிடக்கூடாதா என்ற ஆசை இருந்தது.

“நான் பொய் சொல்ல விரும்பல. ஆனா எனக்கு வேற வழி இருக்கா?”

உண்மை சுட்டிருக்கவேண்டும். கோபமாக எழுந்தான்.

“உனக்கு வேற வழி இருக்கான்னு தெரியாது. எனக்கு வேற வழி இருக்கு. நீ எக்கேடு கெட்டுப்போனா எனக்கென்ன?”

ஒருவேளை பொய் சொல்லியிருந்தால் கிழவன் அன்றே மசிந்திருப்பானோ என்று பலமுறை பிறகு யோசித்திருக்கிறேன். எவ்வளவு சுலபமாக முடிந்திருக்கவேண்டிய பழிவாங்கல். எத்தனை வருடங்கள் இழுத்துவிட்டது. ஆனால்.. இன்றாவது முடிந்ததே. கிழவனை திருப்தியாகப் பார்த்தேன். முனகிக்கொண்டுதான் இருந்தான்.

“நான் அன்னிக்கே உன்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டிருப்பேன். ஆனா ரொம்ப சீக்கிரமா படுக்கையில விழுந்திருப்பேன். உன்னோட ஆசையும் அதுதான்னு எனக்கும் தெரியும்” தேவா ஒவ்வொரு வார்த்தை பேசும்போதும் வலி தெரிந்ததில் என் வெறி தணிந்தது.

“உன்னோட ஆசை மட்டும் இல்ல.. என்னோட ஆசையும் அதுதான். சொல்லப்போனா அன்னிக்கு உன்னை ஏன் வேண்டாம்னு சொன்னேன்னு என்னை நானே திட்டிக்காத நாளே கிடையாது.”

சாகும் நேரத்தில் பேசுகிறான். ஒருவேளை உண்மையாக இருக்குமோ?

“பாழாப்போன கௌரவர்கள், பாண்டவர்கள்.. அவங்க நல்லதை நினச்சு பிரம்மச்சரியம் பேசியே என் வாழ்க்கையை கெடுத்துகிட்டேன். உன் வாழ்க்கைய சர்வநாசம் செஞ்சிட்டேன். சால்வன் உன்னை திருப்பி அனுப்புவான்னு எதிர்பார்க்கவே இல்லை. அம்பா.. என்னை மன்னிச்சுடு..” அம்புகள் புரள ஆசைப்பட்டபோதெல்லாம் குத்தியதில் புதிதாக ரத்தம் பீரிட்டது.

“இப்ப என் பேர் அம்பா இல்லை. சிகண்டி” திரும்பினேன் நான்.
***

 

blogger templates | Make Money Online