Jan 21, 2007

நான் ஒரு முறை முடிவெடுத்துட்டா!

என் பேச்சை நானே கேக்க மாட்டேன்!

கேட்டிருந்தா , வல்லவன் மாதிரியோ, செந்தழலின் வீராச்சாமி மாதிரியோ விமர்சனம் எழுதியிருக்க வேண்டிய படத்தை தியேட்டருக்குப் போயி பாத்திருப்பேனா?

படத்தின் பிளஸ் பாயிண்டுகள்:

நவரசமும் காட்டும் விஜயின் முகபாவங்கள்:

கோபம்
ஆத்திரம்நகைச்சுவைசோகம்மகிழ்ச்சிஇது போதும்.

வடிவேலுவின் நகைச்சுவை பார்க்கும்போது ரசிகர்களின் முகபாவம்அசினைப் பார்க்கும்போது மட்டும்


தியேட்டரை விட்டு வெளியே வரும்போது மக்கள்


போதுண்டா சாமி!

Jan 18, 2007

மணிரத்னம் இயக்கும் குருசாமி நாயகன் (பெரியார்) Full Screenplay

பெரியார் படம் பல பிரச்சினைகளைக் கிளப்பிவிட்டிருக்கிறது! நான் ரொம்ப சிம்பிளா ஒரு தீர்வு சொல்வேன்.. ஞான ராஜசேகரனுக்கு பதிலா மணிரத்னத்தை இயக்கவிட்டிருந்தா ஆல் பிராப்ளம் சால்வ்ட்!

Preview பாக்கறீங்களா?

மணிரத்னம் - ஆனந்தவிகடன் பேட்டியிலிருந்து:

இந்தப்படம் பெரியார் வாழ்க்கைய பேஸ் பண்ணி எடுத்தது சொல்றாங்களே?

என்னுடைய எல்லாப்படங்களுமே யாருடைய வாழ்க்கையையோ பேஸ்பண்ணி எடுத்ததுதான்.

அப்ப இது பெரியார் கதைதானா?

அப்படி முழுசா சொல்லிட முடியாது. அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு கற்பனைக்கதை - அவ்வளவுதான்.

அப்ப பெரியாருக்கும் இந்தப்படத்துக்கும் சம்மந்தம் இல்லையா?

ஒரு நாவல் போல கற்பனைகளையும் கனவுகளையும் நிஜ வாழ்க்கையோடு சம்மந்தப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான் இது. சவால்களைச் சந்தித்து பிரபலமான ஒருவரின் வாழ்க்கை, என் கற்பனையோடு சேர்த்து சொல்லியிருக்கேன்.

SCREENPLAY
காட்சி 1

சில்ஹவுட்டில் சிறுவன் குருவும் அவன் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

" எதுக்கு?"
".."
"எதுக்கு போகணும்? கோயிலுக்கு எதுக்கு போகணும்?"
"சாமி கும்பிடத்தான் ராசா"
"சாமி கும்பிடாட்டா தப்பாப்பா?"
"தப்பில்ல ராசா.. மனசுக்குள்ளேயே சாமி இருக்கு"

ஆஆஆஆஆஆ.. பேக் கிரவுண்ட் ம்யூசிக்குடன் பாட்டு ஆரம்பம்..

ஈரோட்டு மூலையிலே
ஈஸ்வரனே இல்லையென
பேயோட்டி வந்தவனே..
நாட்டைக் காப்பாத்து..
நாட்டைக் காப்பாத்து..

காட்சி 2

குருசாமி நாயகனும் அவர் மனைவியும்

கவித்துவமாக வார்த்தை வெளிப்படுகிறது, டாப் ஆங்கிள் ஷாட், காமெரா முதலில் மெதுவாக, பின் வேகமாக சுழல்கிறது.

"உன்னோடு நான் வதக்கிய ஒவ்வொரு வெங்காயமும் நாலுநாள் ஆனாலும் ஊசாது கண்மணியே"

காட்சி 3

ஒரு பெரிய கோயில் செட்டில் ஆயிரக்கணக்கான துணைநடிகர்களுடன் குருசாமி முன்னே செல்கிறார்..

"போறோம்.. கோயிலுக்கு உள்ளே போறோம்"

"போலீஸ்காரா எல்லாம் வாசல்லே இருக்கா"

"இருக்கட்டுமே.. நூறு பேர் இருக்கட்டுமே.. போறோம்.."

"இல்ல, அவா நம்மளை ரிமாண்டு பண்ணிடுவா"

"தப்பு.. உன் பாஷை தப்பு.. காட்டுமிராண்டித் தனமா பேசாதே..மாத்து.. இப்பவே மாத்து"

காட்சி 4

குருசாமிக்கு குழந்தை பிறந்திருக்கிறது - பாட்டு (ஜெர்மனி, செக்கோஸ்லாவாகியா வெளிப்புறக்காட்சிகள் பின்னால் வரும்)

"நீ நடக்கும் பாதை எங்கும் முட்கள் போனது.. திதக்குதாங்"
"நீ தொடங்கும் வேலை யாவும் முடிந்து போனது.. திதக்குதாங்"
"எழுத்துக்குள்ளே இருந்த கொம்பெல்லாம்.. எங்க போச்சு
அது காக்கா போச்சு"
"பொம்பளைக்கு போட்ட விலங்கெல்லாம்.. எங்க போச்சு
அது உடஞ்சுபோச்சு"

காட்சி 5

குருசாமி காதல் காட்சி

"ஏய்.. முட்டைகோஸ் கண்ணு"
"உங்க கண்ணும்தான் பெரிசு"
"எனக்கு உன்ன மாதிரி பெரிய கண்ணோட ஒரு பொண்ணு பெத்துக்குடு"

பாட்டு - பொட்டப்புள்ள பெத்துக்குடு.. போதும் என்ன விட்டுவிடு..

காட்சி 6

குருசாமி தெருவில் செல்லும்போது செருப்பு வீசப்படுகிறது. அவருடன் இருந்தவர்கள் ஆவேசமாகிறார்கள்.

"வேணாம்.. வுட்டுடுங்க.. அவனை விட்டுடுங்க"
"ஏன் அவனை வுடச் சொல்றீங்க குருவார்?"
"இன்னொரு செருப்ப அவன்கிட்ட வாங்கிப் போட்டுக்கலாம்"


காட்சி 7

குருசாமிக்கு உடம்பு சரியில்லை. பார்க்க அரசியல் எதிரி ராமாஜி வருகிறார்.

"எப்படி இருக்கீங்க?"

"பாக்கறீங்க இல்ல?"

"சரியாப் போயிடும். நான் பகவானை வேண்டிக்கறேன்"

"இல்லாத பகவானை எப்படி வேண்டிப்பீங்க?"

"இந்தக் குறும்பு மட்டும் குறையல!"

காட்சி 8:

குருசாமி மரணம். 10000 துணைநடிகர்களுடன் பிரமாண்ட ஊர்வலம். பின்னணியில் பாட்டு:

ஈரோட்டு மூலையிலே
ஈஸ்வரனே இல்லையென
பேயோட்டி வந்தவனே..
நாட்டைக் காப்பாத்து..
நாட்டைக் காப்பாத்து..

பிரச்சினைகளைத் தவிர்க்கும் முகமாக, படத்தில் எடுத்திருந்த மற்ற அத்தனை காட்சிகளும் வெட்டப்பட்டுவிட்டன!

Jan 16, 2007

குமுதம், விகடன், டைம்ஸ் யாராவது இதை வெளியிடுவார்களா?

வெளியிட மாட்டார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, இருந்தாலும், வேறு ஒருவர் பெயரில் வெளிவந்தால் இது பதிப்பிக்கப்படும், அதற்கு வரலாறும் இருக்கிறது.

தமிழ்நாட்டுப் பத்திரிக்கைகள் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைவிட, யாரால் எழுதப்பட்டிருக்கிறது என்பதைத் தான் அதிகம் கவனிக்கிறது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக, இதை வெளியிடுகிறேன்.

தோய்க்க:

சட்டை - 3

பேண்ட் - 2

பட்டுப்புடவை - 1

ஸ்கூல் யூனிபார்ம் - 3

தேய்க்க:

சட்டை - 2

சுடிதார் - 2

சுஜாதாவின் லாண்டரிக்கணக்கை வெளியிட்ட சாவியே, இதை வெளியிடத் துணிச்சல் இருக்கிறதா???

குரு - மணிரத்னம் மாறவே மாட்டாரா? (16 Jan 2007)

ஆமாங்க, இது மணிரத்னத்தின் சமீபத்திய, அபிஷேக் பச்சன் நடித்துள்ள குரு படத்தின் விமர்சனமேதான்! (இப்படி ஒரு டிஸ்கி விட வேண்டிய கட்டாயம் எல்லாம் பினாத்தலுக்கு மட்டும்தான் வரும்!)

மணிரத்னத்தின் மற்றுமொரு வாழ்க்கை வரலாற்றுப்படம், டெம்ப்ளேட்டை மாற்றாமல் எடுத்திருக்கிறார்.

முதல் ரீலில் சிறு பையனாக அறிமுகமாகும் நாயகன் பிழைப்புக்காக வெளியூர் (நாடு) செல்கிறார் (சக்திவேலு, ஆனந்தன் வரிசையில் குருகாந்த் தேசாய்)

இரண்டாம் ரீலில் அவர் போன ஊரில் ஒரு குத்துப்பாட்டு பாடுகிறார் (நிலா அது வானத்து மேலே / நான் சிரித்தால் தீபாவளி, ருக்குமணி-ருக்குமணி, அரபிக்கடலோரம்.. வரிசையில் மல்லிகா ஷெராவத் கலக்கியிருக்கும் மய்யா மய்யா)

மூன்றாம் ரீலில் எல்லா மணிரத்னம் படத்திலும் நாயகி அறிமுகமாகும் பாட்டுக்கள் ( ஓஹோ மேகம் வந்ததோ.. சின்னச்சின்ன ஆசை..) வரிசையில் இதிலும் ஐஸ்வர்யா ராய் அறிமுகமாகும் காட்சியில்.. மழை நீர்வீழ்ச்சி என ஜல்ப் பிடிக்கும் அளவிற்கு நனைகிறார்.

பிறகு குருகாந்த் தேசாய் வாழ்க்கைச் சம்பவம் என்ற பெயரில் சிலபல எதிரிகளைப் பந்தாடுகிறார், வெற்றிகள் அடைகிறார், நாய்க்கர் பாவா என்று அழைக்கப்படும் அளவிற்கு பிரபலமாகிறார்.. மன்னிக்கவும் இதில் குருபாய் என்று அழைக்கிறார்கள்.

மனைவியுடன் ஒரு பாட்டு பாடுகிறார்,( நீ ஒரு காதல் சங்கீதம்.) குழந்தைகள் பிறந்ததும் இன்னொரு பாட்டு பாடுகிறார். ( குச்சி குச்சி ராக்கம்மா, அந்தி மழை மேகம் வரிசை)

இடைவேளை போடும் நேரத்தில் இவர் கெட்டவராக இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் மனதில் விதைக்கப்படுகிறது.

நாயகன் செய்த குற்றங்களை தோலுரித்துக் காட்ட சூளுரைத்துக் கிளம்பும் நாசருக்கு மனைவி நாயகனின் மகள். இங்கே மேற்படி வேலையைச் செய்யவரும் மாதவனுக்கு காதலி மகள்போல பழகும் ஜல்குக்டி வித்யா பாலன்.

"நல்லவரா, கெட்டவரா.. தெரியலையேப்பா" குழந்தையுடன் பேசிய நாயகன், கோர்ட்டில் பேசும் குருபாய்!

என்ன, கடைசியில் சாவதில்லை -- அவ்வளவுதான்.

சீனுக்கு சீன் டெம்ப்ளேட்டில் அடைவதால் அடுத்த காட்சி என்ன என்பதை யோசிக்காமலே சொல்லும் அளவிற்கு திரைக்கதை.

அது மட்டுமல்ல, மணிரத்னத்தின் பிரபலமான ஜல்லியும் லோடு லோடாக உண்டு.

எம்ஜிஆர் கலைஞர் வாழ்க்கையோடு இணைந்த தமிழ்நாட்டு அரசியல் சூழலைத் தொட்டு மட்டுமே சென்று அவர்களுடைய மனைவிகள் (!), காதல் வாழ்க்கையை பெரிதாகக் காட்டிய இருவர்,

மதக்கலவரத்தின் பின்னணி, காரணங்கள், காரணர்கள் எதையும் பற்றி அதிகம் கவலைப்படாமல், காதல் கல்யாணம் குழந்தைகள் என்றே முக்கால் படத்தை ஓட்டிவிட்டு, கைகள் கோர்த்து கலவரத்தை முடித்த பம்பாய்,

ஈழப்பிரச்சினையை ஆயுத வியாபாரிகள் நலன் என்று சுருக்கிய கன்னத்தில் முத்தமிட்டால்...

பொதுவாக, அந்தப் பிரபலத்தைப்பற்றிய படம், இந்தப்பிரபலத்தைப்பற்றிய படம் என்று ஹைப்பைக் கிளறிவிட்டு, கான்ட்ரவர்சியலான எந்த விஷயத்தையும் மேம்போக்காகவே தொட்டுச் சென்று எல்லாருக்கும் நல்லவனாக எடுக்கும் படங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

சரியா தவறா என்ற கேள்வியை விடுங்கள், அவரவர்க்கு அவரவர் நிலைப்பாடு. நுஸ்லி வாடியாவுடன் அம்பானியின் வியாபாரப்போட்டியை ஒரு ப்ளாங்க் செக்கில் சுருக்கிவிட்டு, ஏக் லோ ஏக் முப்த் என்று விஸ்தாரமாகப் பாடுவது, அம்பானியின் மகன்களால் சாம்ராஜ்யத்துக்கு ஏற்பட்ட குனிவைக் காண்பிக்காமல் அதற்கு முன்னதாகவே முடித்துவிடுவது, லஞ்சம் கொடுத்து, ஏமாற்றி லைசன்ஸ் பெறுவது எல்லாவற்றையும் மேம்போக்காகவும், பாலியஸ்டர் தொழிற்சாலை 1-2-3 எனப் பெருகுவதை விஸ்தாரமாகவும் காட்டி "நல்லவனா-கெட்டவனா" கேள்விக்கு ஒருபுறமான சாட்சிகள் மட்டுமே கொடுப்பது.... மணிரத்னம் மாறவே இல்லை!

அதிலும் அந்த கிளைமாக்ஸ் கோர்ட் காட்சி.. நாலரை நிமிடத்தில் தன் நற்பண்புகளை கோர்ட்டுக்கு விவரித்து, நீதிபதிகள் அதற்கு மயங்கி வெறும் 63.5 லட்சம் அபராதத்துடன் விட்டுவிடுவது (வசனத்தில் 63.5 லட்சம் என்றும் சப்டைடிலில் 6350000 லட்சம் என்றும் வந்தது ஒரு கன்பூசன்:-) காதில் ரீலோ ரீல்.

படம் திராபை என்று சொல்ல வரவில்லை நான். அபிஷேக் பச்சனிடம் இவ்வளவு அபாரமான நடிப்பை எதிர்பார்க்கவில்லை. அப்பன் பேர் கெடுக்க வந்த பிள்ளை என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஒப்பனை, நடிப்பு, பாடி லேங்குவேஜ் எல்லாவற்றிலும் கொளுத்தியிருக்கிறார். கூடவே வரும் பாத்திரங்களில் ஐஸ்வர்யா ராய், துருக்கி படாபாய் தவிர வேறு யாரும் தொடர்ச்சியாக வருவதில்லை- ஐஸ்வர்யா அழகிருக்கும் அளவிற்கு நடிக்க வரவில்லை. ரஜினி படத்துக்கே நடித்திருக்கலாம் - அங்கே ஹீரோயினுக்கு என்றும் வேலை இருந்ததில்லை.

மிதுன் கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். எதற்கெடுத்தாலும் "அச்சா ஹே.." என்று பெங்காலி உச்சரிப்போடு - அச்சா ஹே! மாதவன் நாலைந்து காட்சிக்காக! அவர் வருவதும் போவதும் எந்த பெரிய பாதிப்பையும் உண்டு பண்ணவில்லை. இதில் ஒரு முத்தக்காட்சி வேறு! திணிக்கப்பட்ட மாதிரி.

மல்லிகா ஷெராவத், ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன் ஆகியோரைப் பார்ப்பதற்கும், அபிஷேக் பச்சனின் நடிப்பை அனுபவிப்பதற்கும், நல்ல இசை, ஒளிப்பதிவை ரசிப்பதற்கும் போவேன் என்று தீர்மானித்தால் தாராளமாகப் போகலாம் - வேறு எதையும் எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். குறிப்பாக "மணிரத்னம் படங்களிலேயே சிறந்த படம்" என்ற விமர்சனங்களையும், பாஸ்டன் பாலாவின் "படம் பார்த்ததும் புது CV தயாரிக்கும் ஆர்வம் வரும்" என்றெல்லாம் எதிர்பார்த்துவிடாதீர்கள்

Jan 10, 2007

கனவில் வந்த தமிழ்மணம் (10 Jan 2007)

நேற்று இரவு வெகுநேரம் வரை தூக்கம் வராமல் தமிழ்மணம் பார்த்துவிட்டுச் சென்றதன் விளைவோ என்னவோ, ராத்திரி கனவிலும் தமிழ்மணமே வந்தது. கனவில் வந்த கணினியில் Print Screen போட்டு Screenshot ஐ சேமித்து வைத்துவிட்டேன். (லாஜிக்கா பார்க்கிறீங்க பினாத்தல்கள்லே?)

அந்தப்படத்தை உங்கள் வசதிக்காக இங்கே கொடுத்துள்ளேன்.பிளாக்கரில் சரியாகத் தெரியாவிட்டால் இங்கே இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.

டிஸ்கி: யாரையும் காயப்படுத்த அல்ல, நகைச்சுவைக்காக மட்டுமே!

Jan 4, 2007

அவியல் - ஜனவரி 2007

சில சமயங்கள்ல மேட்டருக்குப் பஞ்சம் வரும்.
சில சமயங்கள்ல நேரத்துக்குப் பஞ்சம் வரும்.

இன்னும் சில சமயங்களிலோ, ரெண்டும் ஓக்கேவா இருந்தாலும், மேட்டரோட அளவு ரொம்பச் சின்னதா இருக்கும். இருந்தாலும் நாட்டு நடப்புல பினாத்தலாரின் கருத்து என்னன்றதை அவருடைய லட்சோபலட்சம் (என்ன கஞ்சத்தனம் - சரி கோடானு கோடி) ரசிகர்களுக்கு தெரியப்படுத்த வேணாமா?

*************************
மூன்று திரைப்படங்கள்

இரண்டு நாள் இடைவெளியில் மூன்று படங்கள் பார்த்தேன். மூன்றும் மூன்று ஜாதி!

வரலாறு, ஈ, டெரரிஸ்ட்.

வரலாறு கே எஸ் ரவிக்குமாரின் முத்திரை கொண்ட படம். டாஸ்மாக் கடையில் போய் ஓமவாட்டர் கேட்கக்கூடாது. மூன்று வேட அஜித்தை பன்ச் வசனம் பேசாமல் காத்ததில் இருந்தே ரசிகர்கள் மேல் கே எஸ் ஆர் கொண்ட பாசம் தெரிகிறது. திரைக்கதை தூங்கவைக்காமல் ஓடுகிறது.அதற்கு மேல் குறையாகவோ நிறையாகவோ சொல்ல ஒன்றும் இல்லை.

டெரரிஸ்ட் - சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மனித வெடிகுண்டின் பார்வையில் அஸாசினேஷன் பற்றிய படம். படம் பார்த்து முடித்த பின்னும் எது சரி தவறு என்று பார்ப்பவர்களை யோசிக்க வைத்த படம் - அதுதான் நோக்கம் என்றால் நிச்சயமாக நிறைவேறிவிட்டது. நல்ல நடிப்பு, தெளிவான திரைக்கதை, புத்திசாலித்தனமான முடிவு (ஸ்விட்சை அழுத்துகிறாளா இல்லையா எனக்காட்டாமல்), அற்புதமான ஒளிப்பதிவு - இந்தப்படமெல்லாம் ஏன் தியேட்டருக்கு வருவதில்லை?

கொடுமை ஈ தான். இந்தப்பக்கத்திலும் இல்லாமல், அந்தப்பக்கத்திலும் இல்லாமல் தடுமாறுகிறார் இயக்குநர். பயோகெமிக்கல் ஆயுதங்கள் என்று டாகுமெண்டரித்தனமான சில காட்சிகள் தவிர மற்றதெல்லாம் சாதாரண மசாலாப்படம் போலவே. "திருப்பித் தந்தா கைமாத்தி, தராவிட்டால் ஏமாத்து" என்பதுபோல தத்துவம் கலந்த குத்துப்பாடல்கள், கூட்டிக்கொடுக்கவும் கொலை செய்யவும் அஞ்சாத நாயகனுக்கு கற்பில் சிறந்த, கைபடாத ஆனால் காபரே ஆடும் நாயகி (புதுப்பேட்டை போல அமைத்திருந்தால் த.பண்பாடு காற்றில் பறந்துவிடுமா?), "மக்களை நினைடா" என்பது தவிர அழுத்தமான வசனமோ, காட்சிகளோ இல்லாத நெல்லை மணி ஈயைத் திருத்தி நல்வழிப்படுத்துவது -- படம் முடிந்தபின் என்னதான்யா சொல்லவராரு என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை. திரிசங்கு!
*******************

நொய்டாவில் தோண்டத் தோண்டப் பிணம்! அநியாயம். சட்டம் வாங்கப்பட்டு விட்ட தைரியமும், குறைந்தபட்ச மனிதாபிமானமும் இல்லாத மிருகங்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும் என்று உணர்ச்சிவசப்பட்ட மனம் நினைத்தாலும், வழக்கறிஞர்கள் வாதாட மறுப்பது வெறும் விளம்பரம் என்றே மணியன் போல எனக்கும் தோன்றுகிறது. கும்பகோணத்திலும் தீ விபத்துக்குப் பின் வழக்கறிஞர்கள் இவ்வாறு சூளுரைத்ததாக ஞாபகம். வழக்கு என்ன ஆயிற்று? யாரேனும் தண்டனை அடைந்தார்களா? வேறு ஊர் வழக்கறிஞர்கள் வந்து வாதாடவில்லையா?

*************************

தேன்கூடு போட்டியில் எனக்கு ஓட்டுப்போட்ட அனைவருக்கும் நன்றி. பரிசு எதிர்பார்த்தேன், ஏமாற்றம்தான் - மறைக்க விரும்பவில்லை. இருந்தாலும் ரசனைகள் பலவிதம், என் ரசனைக்கு நான் படைக்கிறேன், அது எல்லோரையும் கவர்ந்தே ஆகவேண்டுமா என்ன?

*************************


நேராய், குறுஞ்செய்தியாய், பதிவாய், மின்னஞ்சலாய் புத்தாண்டு வாழ்த்து அளித்த அனைவருக்கும் நன்றி, அனைவருக்கும் எனது புத்தாண்டு+பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

*************************

 

blogger templates | Make Money Online