சுற்றுப்பயணத்தை முடித்து வீடு திரும்பிவிட்டேன்.
ஆப்பிரிக்கக் கண்டமும் ஐரோப்பியக்கண்டமும் ஒட்டிக்கொள்ளும் ஜிப்ரால்டருக்கு அருகில், மத்தியத் தரைக்கடலோரம் கடற்கரையாலும், வெயில் காயும் "சன் பாத்" பகுதி என்பதாலும் சுற்றுலாத்தலமான மலாகாவில் ஆறு நாட்கள்..
உடலை மறைக்க உடை என்ற ஸ்பானிய பண்பாட்டை மறந்து, குடும்பத்தோடும், காதலனோடும் தனியாகவும் வெயில் காயும் வனிதையருக்கு மத்தியில் புதுமைப்பித்தன் சிறுகதைகளை மொத்தமாகப் படித்தேன்.
சில பார்வைகள்:
1. உடையே அணியாதவர்களைக் கூட வெறித்துப் பார்க்க ஏன் கூட்டம் கூடுவதில்லை? கோவாவில் வெயில் காய்பவர் 10 சதவீதம் என்றால், வேடிக்கை பார்ப்பவர் 90 சதவீதமாக இருப்பதை அந்த 90ல் இருந்து பார்த்திருக்கிறேன். இங்கே வேடிக்கை பார்ப்பவர் என்பது இல்லவே இல்லை என்றே கூறிவிடலாம். மேலும், 5 நிமிடத்துக்க் மேல் வேடிக்கையும் அலுத்து விடுகிறது:-)
2. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு(?) இல்லைதான் என்றாலும் யாரும் யாருடனும் என்ற வெட்கக்கேடும் இல்லை! கூட்டம் கூடிய இடங்களிலும் இடிமன்னர்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
3. காபரே என்பது சென்னை மற்றும் பான்டிச்சேரியின் சில நிழலான இடங்களில் நடைபெறும் ஆடை அவிழ்ப்பு நடனம் என்றே கருதியிருந்தேன். சுத்தமான மேலை சாஸ்திரீய நடன வகையை எப்படி கொச்சைப்படுத்தி இருக்கிறோம் நாம்.. மூன்று ஷோக்கள் பார்த்தேன் - நடனமும், வழங்கிய விதமும் - அருமை!
4. டிவி விளம்பரங்களை ஒரு அளவுகோலாக வைத்துப் பார்த்தால், நம் மக்கள் அறிவாளிகள்தான். பெரும்பாலான ஐரோப்பிய விளம்பரங்கள் நேரிடையானவை, நகைச்சுவை அற்றவை.
5. புதுமைப்பித்தன் ஏன் மரணத்தைப் பற்றி அதிகக் கதைகள் எழுதி இருக்கிறார்? யாராவது ஆராய்ந்திருக்கிறார்களா?
பாரிஸ் பற்றி பிறகு எழுதுகிறேன்.
குஷ்பூ தங்கர் தமிழ் பண்பாடு பற்றி பதிவு போடுவதாக இல்லை. பின்னூட்டம் மட்டும்தான் (யார் கேட்டார்கள் என்கிறீர்களா?)
Sep 29, 2005
மலாகா சுற்றுப்பயணம், பண்பாடு இன்ன பிற! 28 Sep 05
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 1 பின்னூட்டங்கள்
Sep 15, 2005
எச்சரிக்கை - படித்தால் உங்கள் மனநலனுக்கு நல்லது 15 Sep 05
ஒரு பணக்காரப் பெண்ணின் குணாதிசயங்கள் என்ன?
மாடலிங் செய்வாள்
டிஸ்கோ சென்று ஆடுவாள்
தனக்குப் பிடித்தது பிடித்தவனைக் காதலிப்பாள்
மத்திய வர்க்கக் குடும்ப உறுப்பினர்களை வெறுப்பாள்
ஒரு மத்திய வர்க்க ஆணின் குணாதிசயங்கள் என்ன?
அழகான பெண்ணைக் காதலிப்பான்
அவளை அடைவதற்காக அவளிடம் பொய் சொல்வான்
அவளை ஏற்கவைக்க குடும்பத்தினரிடம் பொய் சொல்வான்
கல்யாணம் ஆனதும் பெண் குடும்பத்துக்கு அடங்கி நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பான்.
ஒரு பணக்காரப் பெண்ணின் அம்மாவின் குணாதிசயங்கள் என்ன?
சிகரெட் பிடிப்பாள்
சிறு வாலிபர்களுடன் டிஸ்கோ ஆடுவாள்
எந்நேரமும் குடித்துக் கொண்டு சீட்டு ஆடிக்கொண்டு இருப்பாள்.
மகளை அபார்ஷன் செய்ய வற்புறுத்துவாள்
மகளுக்கு அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்யத் துடிப்பாள் (பாவம் அமெரிக்க வாழ் எலிஜிபிள் மாப்பிள்ளைகள்!)
ஒரு பணக்காரப் பெண்ணின் அப்பாவின் குணாதிசயங்கள் என்ன?
மனைவிக்கு அடங்கி நடப்பார்
குடும்ப மதிப்பீடுகள் அனைத்தும் தெரிந்தவர் - ஆனால் அடங்காப்பிடாரியிடம் மாட்டியதால் தவிப்பார்
கடைசிக் காட்சியில் மனைவியை அடிப்பார்.
விவாகரத்து வழங்கும் நீதிபதியின் குணாதிசயங்கள் என்ன?
கணவன் மனைவி உறவைப் பற்றி ஒரு நீண்ட உரை நிகழ்த்துவார்.
ஒரு வருடம் கழித்துத் தான் விவாகரத்து வழங்குவார்.
குழந்தையை பெற்றுக் கொடுக்கச் சொல்லி மனைவிக்கு உத்தரவு(?) இடுவார்.
தன் உத்தரவை நிறைவேற்ற போலீஸ் மற்றும் மருத்துவ பாதுகாப்பை உறுதி செய்வார்.
இப்படியே எழுதிக்கொண்டே போகலாம் - பிரியசகி படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்கள் பற்றியும்!
நானும் பல டுபாக்கூர் படங்கள் பார்த்திருக்கிறேன் - இதைப்போல இல்லைடா சாமி!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 7 பின்னூட்டங்கள்
Sep 14, 2005
ட்வெல்வ்த் மேன் Vs ட்வெல்வ்த் மேன் 14 Sep 05
இந்திய அணியில் ட்வெல்வ்த் மேனாக களமிறங்கி கடைசி வரை ஒரு மேட்சு ஆடாமலே ரிட்டயர் ஆன மாடசாமியையும், எல்லாக்கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் ஒரு பதவியையும் பெற முடியாத குல்போன்ஸா முன்னேற்றக்கழகத் தலைவர் குப்புசாமியையும் முன்வைத்து ஓர் ஒப்பு நோக்குப் பார்வை:-)
1. மாடசாமி தன் விளையாட்டை 1982ல் பந்து பொறுக்கிப் போடுவதன் மூலம் தொடங்கினார். இப்போது வரை அந்த நிலை மாறாமல், பழையதை மறக்காமல் உள்ளார். குப்புசாமி எலெக்ஷன் ஏஜண்ட்டாக 50 ரூபாய் சம்பளத்துக்கு தன் பொதுவாழ்வைத் தொடங்கினார் - காலம் இன்றுவரை அவருடைய பழைய வாழ்க்கையை மறக்கவிடவில்லை:-)
2. ஒருவர் கிரிக்கெட்டில் சச்சினுக்கு நேர்மாறு, இன்னொருவர் எம்ஜிஆருக்கு நேர்மாறு.
3. மாடசாமி பாலை மீட்டுவந்த சுந்தர பாண்டியன், குப்புசாமி ஓட்டு வாங்காத உன்னத புருஷன்.
4. மாடசாமி தண்ணீர் கொண்டு வருவதோடு தகவலும் கொண்டு வந்து புரட்சி செய்தவர். குப்புசாமி, தன்னைச் சேர்ந்தவர்கள் டெபாஸிட்டையும் இழக்க வைக்கும் கைராசி கொண்டவர்.
5. மாடசாமி விளையாட வரும்போது இளையவர், குப்புசாமியோ நுழையும்போதே தாத்தா!
6. மாடசாமியின் பெரிய பலம், அவர் யார் திட்டினாலும் முகம் சுளிக்காமல் ஏற்றுக்கொள்வார். குப்புசாமி யாரைத் திட்டினாலும் அவர்கள் மறுநாளே அவரை விட்டு ஓடிவிடுவார்கள்!
7. மாடசாமி தன்னுடைய ஸ்பான்ஸர் கொடுத்த சட்டைகளை அழுக்குப் படாமல் காப்பதில் வல்லவர். குப்புசாமி தன் சொற்பொழிவின் போது அனைவரையும் தூங்க வைப்பதில் வல்லவர்.
8. இருவருக்குமே தங்கள் கைமேல் நிறைய நம்பிக்கை கொண்டவர்கள் (மாடசாமி ஏவல் செய்வதற்கு, குப்புசாமி மைக் பிடிப்பதற்கு). ஆனால் தன் கையே தனக்குதவி என்பது அவர்களை பொறுத்த வரை பொய்த்துப் போனது.
9. இருவருக்குமே உணர்வு மிக உண்டு. இருவருமே எந்த உழைப்புமே செய்யாமல் தோற்றூப்போனவர்கள்.
10. எந்தத் தொடர்பும் இவர்களுக்கு உதவியதும் இல்லை, ஊறு செய்ததும் இல்லை.
11. மாடாசாமி மற்றவர்களின் பெரிய 'கிட்'களைத் தூக்கிவர திணறுவார், குப்புசாமி மக்களைப் பார்த்தாலே திணறுவார்.
12. இருவரும் சமயத்துக்கு தகுந்தவாறு நடிப்பதில் வல்லவர்கள்.
இப்போது வலையுலகில் ஃபேஷன் - ஆன மற்றவர் பதிவைக் கிண்டல் அடிப்பதை நான் மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும்?
சின்னவன் - காப்பிரைட் பிரச்சினை ஒன்றும் இல்லையே?
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 6 பின்னூட்டங்கள்
Sep 13, 2005
நன்றி..நன்றி..நன்றி..13 Sep 05
முதலில் நன்றி.
போட்டியை அறிவித்து, நெறிப்படுத்தி, தகுதி பெறுகிறதா என்று படித்துப் பார்த்து, அதை PDF ஆக மாற்றி, பரிசுத் தொகையை விடவும் முகமூடி செய்த வேலைகள் அதிகம். தமிழுக்கு இன்னும் ஒரு சில நல்ல கதைகளைப் பெறுவதில் அவருடைய ஆர்வம் தெள்ளெனத் தெரிகிறது.
கதையைத் தேர்ந்தெடுப்பதோடு நிற்காமல், கதையின் அம்சங்களை நன்கு ஆராய்ந்து காரணங்களோடு விளக்கி இருந்த மாலனின் அணுகுமுறை, புதிதாக எழுதத் தொடங்குவோர்க்கு பல குறிப்புகளையும் வழங்கியது.
என் கதையை எழுதும்போது கருத்தில் கொண்ட அத்தனை விஷயங்களையும் கதையைப்படித்தே பட்டியலிட்டிருப்பதில் அவருடைய அனுபவம் தெரிகிறது,பத்தி பத்தியாகப் பாயாமல் வரிவரியாகப் படித்திருக்கிறார் என்பதிலேயே எனக்கு ஒரு பெருமை!
என் கதையை படித்து, பாராட்டி, ஆதரித்து ஊக்குவித்த நண்பர்களுக்கு நன்றி. சிலருக்கு நினைவிருக்கலாம் - கொஞ்ச நாள் முன்பு நான் எனக்கு எழுத வரவில்லை என்று வலைப்பதிவை மூட இருந்தேன். அப்போது பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவரையும் நான் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன் - (இவங்க தான்ப்பா காரணம் - என்னை வுட்டுடுங்க!)
இப்போது கதையை பற்றி.
ஏற்கனவே இருமுறை சொல்லி இருந்தது போல, இது உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே, நான் செய்தது ஜன்னல் உடை அலங்காரம் (Window Dressing:-)) மட்டுமே. இத்ரீஸ், பஷீர் ராம்லால் ஆகியோரின் செய்கைகளுக்கு காரணம் என்ன, எந்த மாதிரியான உளவியல் இது எனப் புரியாமல் சில இரவுகள் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறேன்.
ராம்லாலுக்கு விபத்தில் அடிபடும் போது சக தொழிலாளி எனப் பார்க்க முடிந்த இத்ரீஸை கலவர சமயத்தில் மாற்று மதத்தான் என மட்டுமே பார்க்க முடிந்தததற்கு குழு மனப்பான்மை மட்டுமே காரணமா?
இத்ரீஸுக்கும் ராம்லாலுக்கும் இருந்த தொழில் ரீதியிலான (ஒரே வொர்க்-ஷாப், ஒரே நிலை - ஆனால் மேலதிகாரிகளிடம் இத்ரீஸுக்கு இருந்த நம்பிக்கை ராம்லால் மேல் இல்லை - இதை கதையிலும் கோடி காட்டி இருந்தேன்)போட்டி அந்த (மகனை வெட்டிய) நேரத்தில் வந்திருக்குமா இல்லை மதம் பிடித்த மூளைச்சலவை மட்டுமே காரணமா என்பதும் இன்னும் எனக்குப் புரியவில்லை.
யோசியுங்கள், யோசிக்கிறேன்!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 5 பின்னூட்டங்கள்
வகை பதிவர்
Sep 6, 2005
வினாயகர் சதுர்த்தி 07 Sep 2005
களிமண்ணில் செய்த வினாயகர்தான் விசேஷமாம்..
துபாயில் எங்கே களிமண்ணைத் தேடுவது?
எனவே என் சொந்த மூளையை உபயோகித்தேன்!
குழந்தைகள் விளையாடும் வண்ணக் களிமண்ணை எடுத்தேன் - என் கைவண்ணத்தை அதில் காட்டினேன் -(இது என் முதல் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது)
இதைப் பார்த்து வியந்த (இவன்கிட்டே இருந்து இப்படி எதிர்பார்க்கலையே!) மனைவி, தன் நண்பர்கள் குழாத்தில் செய்தியை பறக்கவிட..
மாஸ் ப்ரொடக்ஷன் செய்யவேண்டியதாகிவிட்டது!
அனைவருக்கும் வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 10 பின்னூட்டங்கள்
மறுபடியும்..
வலைப்பதிவுகளுக்கு வரும் முன்னர் எழுதுவது என்பது மிகவும் சுலபமான விஷயம், நேரமின்மை ஒன்றே குறை, நேரம் மட்டும் இருந்தால் எழுதுவது எளிது என்றே நினைத்திருந்தேன்.
எழுதத் தொடங்கியபின்னர்தான் கோர்வையாக ஒரு சிறு கட்டுரையோ கதையோ எழுதுவதில் உள்ள சிக்கல்கள், வார்த்தை தேர்ந்தெடுப்பு, நடை, உள்ளடக்கத்தை மற்றவர் எப்படிப் புரிந்து கொள்வாரோ என்ற சுயம் விலக்கிய பார்வை, ஆங்கில தமிழ் மயக்கங்கள், சந்திப் பிழை தவிர்த்தல் என எவ்வளவோ பிரச்சினைகள் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
இருந்த போதிலும், சிலருக்கு மட்டும் எழுதுவது என்பது பேசுவதைப் போல சுலபமாக இருப்பதையும் பார்க்க முடிகிறது.
முன்பெல்லாம் அவ்வாறு எழுதுபவர்களை வரம் பெற்றவர்களாய் கற்பிதம் செய்திருந்தேன்.
இப்போது புரிகிறது, அவர்கள் என் நிலையை வெகு நாட்களுக்கு முன்னாலேயே கடந்து விட்டவர்கள், முறையாக ஆர்வம் செலுத்தி, பயின்று இந்தக் கலையை கைவரப் பெற்றவர்கள் என்று.
ஒரு எழுத்தாளர் உருவாவது இவ்வளவு பயிற்சி தேவைப்படும் நிகழ்வாக இருக்கும்போது, எழுதுபவரை நிறுத்த வைப்பது எவ்வளவு சுல்பமாக இருக்கிறது!
கழிவறைச் சுவற்றில் உள்ள கிறுக்கல்களுக்காகவெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்று சொல்வது எளிது. நேரடியான தாக்குதலை எதிர்கொள்ளும் போதுதான் அதன் வலி தெரியும். ராமச்சந்திரன் உஷாவின் முடிவையும் அதன் பின்னால் உள்ள வலியையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
மற்றவர்களைக் கேவலப்படுத்தி அதில் குளிர் காயும் அநாமதேயரே,
உங்களுக்கு இன்னொரு வெற்றி. அதைக் கொண்டாடும் முன், ஒரு முறை சிந்தியுங்கள் -
உங்களால் இன்னொரு எழுத்தாளரை உருவாக்க முடியுமா?
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 4 பின்னூட்டங்கள்
வகை பதிவர்
பினாத்தல்களின் ஐரோப்பிய பயணம் 06 Sep 05
அலுவலக வேலை காரணமாக, வரும் 18ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை (செப்டம்பர் 2005) ஸ்பெயினில் மலாகா(MALAGA)விற்கும், மூன்று நாட்கள் பாரீஸில் ஊற் சுற்றிப் பார்ப்பதற்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது,
ஸ்பெயினிலோ, பாரீஸிலோ உள்ள வலைப்பதிவர்கள் பின்னூட்டம் இட்டால் சந்திக்க முயற்சிப்பேன்.
நன்றி
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 0 பின்னூட்டங்கள்
வகை பதிவர்
Sep 3, 2005
விகடனின் சமூக அக்கறை 03 Sep 05
இந்த வார ஜுனியர் விகடனில் "கவர்ச்சிக் கோடு - எல்லை தெரியாமல் தடுமாறும் தமிழ் சினிமா" என்ற விசேஷக் கட்டுரை வெளியாகி உள்ளது.. இங்கே.
தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரைப்பட வினியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள், சென்சார் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் பேட்டி கண்டு, ஆய்வுக்கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட கட்டுரை.
கட்டுரைக்குக் காரணமான சமூக அக்கறை வியக்க வைக்கிறது. விடலைகளும் அறியாதவர்களும் மன்ம் அலைக்கழிக்கப் பட்டுவிடக்கூடாது என்னும் தொலைநோக்குப் பார்வை புல்லரிக்க வைக்கிறது. அதை எல்லாம் விட, ஆபாசம் என்பது என்ன என எல்லோரும் தெரிந்துகொண்டு அதை ஒதுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் "மனம் நொந்த வண்ணம்" கொடுத்திருக்கும் புகைப்படங்கள், தெளிவாக "ஆபாசத்தை"வரையறுத்திருக்கின்றன.
இக்கட்டுரையைப் பற்றிய என் விமர்சனம் - 'சீ"
(நன்றி: பாய்ஸ் படத்துக்கு எழுதப்பட்ட விகடன் விமர்சனம் )
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 9 பின்னூட்டங்கள்
வகை பொது