Oct 25, 2010

அல்வா!

தமிழ் பேப்பரில் ஒரு தொடர்கதை எழுதி வருகிறேன். திரில்லர் என்பது மட்டும்தான் ஆரம்பிக்கும்போது போட்டுக்கொண்ட விதிமுறை. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கேன்வாஸை விரிவுபடுத்தி ஃப்யூயல் செல் ஆராய்ச்சி, தொழில் ஒற்றறிதல் (industrial espionage-ங்க :-)) என்று எகிறி, இந்தியா, மத்தியகிழக்கு, கோஸ்டா டி ஸொல், பென்சில்வேனியா, நடுக்கடலில் ஆயில்ரிக் என்று எல்லா இடங்களுக்கும் பறக்கிறது கதை.ஓரளவுக்கு கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்தியவுடன் போஸ்டர் ஒட்டலாம் என்று காத்திருந்தேன். இப்போது கதை கியர் ஷிஃப்ட் ஆகிவிட்டது, ரன்னிங்கில் ஏறுகிறவர்கள் வசதிக்காக:

1

2

3

4

கருத்துகளைச் சொன்னால் தன்யனாவேன்.

Oct 2, 2010

எந்திரன் - DOT!

எந்திரன் படத்தை பாலாபிஷேகம் செய்யும் சுபயோக வேளையான ரிலீஸ் நாளின் காலை ஏழரை மணிக்கு பார்க்க நேர்ந்தது, டெக்னிகலி முதல் நாள் இல்லை. சன் பிக்சர்ஸின் வெறுப்பேற்றும் மார்க்கெட்டிங், ஒரே கதையை இந்தியன் முதல்வன் அந்நியன் என்று நடிகர்களை மட்டும் மாற்றி மாற்றி எடுத்த ஷங்கர், பில்டப்பில் கவிழ்ந்து நான் பார்க்குமுன்னே பயந்து ஓடிவிட்ட குசேலன் புகழ் ரஜினி, உலக அழகிக்கு பக்கத்தில் கேள்விக்குறி போடவைத்த ராவணன் ஐஸ்வர்யா - எதுவுமே சகுனமாக இல்லை - இருந்தாலும் எப்பவுமே பாஸிடிவை விட நெகடிவ் விமர்சனங்கள்தானே ஹிட் ஆகும், இதில் விடுவதை அதில் பிடித்துவிடலாம் என்றுதான் போனேன்.
 
எந்த பில்ட் அப்பும் இல்லாமல் நேரடியாக ரஜினியைக் காட்டியது, ஒரு விஷயமாகக் கூட வேறு எந்த ஊர் ரசிகனுக்கும் படாதுதான், ஆனால் தமிழ் சூழலில் பெரிய ஆச்சரியம்தான்.
 
வசனம் என்று சுஜாதா-ஷங்கர்-கார்க்கி பெயர்கள் போடப்பட்டாலும், சுஜாதா ரசிகனுக்கு எல்லா ரசிக்கவைக்கும் வசனங்களுமே சுஜாதாவாகத்தான் காட்சியளித்தன. முதல் பாதியின் காமெடி கலாட்டாவில் காட்சியும் வசனமும் போட்டி.
 
"உள்ளே உயிரோடதான் இருக்காரா?" "இல்லை Wire ஓட இருக்கார்"
 
வழுக்கைத்தலையனிடம் முடிவெட்டுபவர் "நகம் வெட்டறாப்பல பாத்து வெட்டிடறேன் சார்"
 
"தலையைத் திருப்பணுமா? கண்ணாடி பாக்கலாமில்ல?" "முன்னாடி சொல்லலாமில்ல?"
 
"உனக்கு பிடிச்சிருந்தா கன்னத்தில எச்சி பண்ணுவியா?"
 
"Who is that செல்லாத்தா? 30 DB over allowed Limit!"
 
கதை விட்டலாச்சார்யா ரேஞ்சுதான் என்றாலும் பேக்கேஜிங் நம்பும் விதமாக இருந்ததில், கழட்டிவைத்த மூளையை மாட்ட அவகாசமே கொடுக்காமல் ஓடியது திரைக்கதை.
 
கடைசி பத்து-பதினைந்து நிமிஷம் தவிர்த்து பெரும்பாலும் தெளிவாகவே செல்கிறது, பொதுமேடையில் ரோபோ அறிமுகம், AIRD அப்ரூவல், தீவிபத்து, டிவி கவரேஜ், பிரசவம் பார்ப்பது என்று காட்சிகள் கோர்வையாக, வேகமாகப் பறக்கும் முதல்பாதி, இரண்டாம் பாதியில் கொசு சீன் கொஞ்சம் கடி என்றாலும் கொசுவின் பெயருக்காகவே (ரங்குஸ்கி) ரசித்தேன்! ஆனால் அந்த க்ளைமாக்ஸ் நிச்சயம் ஓவர்தான். க்ராபிக்ஸும் கூர்மையாகப் பார்த்தால் குட்டிப்பிசாசு ரேஞ்சுதான்.
 
விஞ்ஞானி ரஜினியிடம் சொல்லிக்கொள்வது போல ஒன்றும் இல்லை. ஒரு அரிவாளுக்கு பயந்து மூச்சிரைக்க ஓடிவரும் தைரியசாலியாக ரஜினியைக் காட்டுவதும் தமிழ் சூழலுக்கு மட்டும் புதுமை.
 
ஆனால் சிட்டி! முதல் பாதியின் அப்பாவி நகைச்சுவை, இரண்டாம் பாதியின் வில்லத்தனம் - ரஜினியின் வில்லத்தனத்தை நான் இவ்வளவு ரசிப்பேன் என்று "ரோபோஓஓ" டயலாக்கின்போதுதான் அறிந்துகொண்டேன். "ஏபிநெகடிவ், பெட்ரோலுக்கு பதில் தண்ணீர், கரெண்டு கட்டு, வசீ, எங்கப்பா இருக்கே?" புத்திசாலியான வில்லன் இருக்கும்போது, டேனிடென்சொங்பாவைக் (நன்றாகவே நடித்தாலும்) கழ்ட்டிவிட்டதை நியாயப்படுத்துகிறது. தேவதர்ஷினியிடம் "பையனை ரோபாடிக்ஸ் படிக்க வை, நல்ல ஃப்யூச்சர்" என்று சொல்லிக்கொண்டே தலையைக் கழட்டும் இயல்பான நடிப்பு - இத்தனை வருடங்களுக்குப் பிறகு தேவையில்லை என்றாலும், ரஜினிக்கு ஒரு மைல்கல்தான் :-)
 
ரசித்தேன் - against all odds.ரசிப்பீர்கள்.
 
ஒரு ட்விட்டில் பார்த்தேன், @ramkij என்று நினைக்கிறேன் - சிவாஜி ரஜினிக்காக ஷங்கர் எடுத்த படம், எந்திரன் ஷங்கருக்காக ரஜினி நடித்த படம் என்று. உண்மை.
 
 

Sep 22, 2010

அமரர் கல்கி சிறுகதைப் போட்டியும் நானும்

அமரர் கல்கி சிறுகதைப் போட்டியில் பிரசுரத்துக்கு தேர்வு பெற்ற கதை

Kalki Suresh


நன்றி: கல்கி
நன்றி: என்றும் துணைநிற்கும் சக எழுத்தாளர்கள்

Aug 26, 2010

எந்திரன் - விமர்சனம் ஃபார் டம்மீஸ் (ஃப்ளாஷ்)

எந்திரன் படம் வரப்போகிறதாமே.. முன்கூட்டியே டிக்கட் பதிவு செய்பவர்கள் மட்டுமின்றி முன்கூட்டியே புறக்கணிப்பு செய்பவர்கள் அதிகமாகி இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. முன்கூட்டியேதான் நாம் எதையுமே செய்வோம். படம் வருவதற்கு முன்கூட்டியே இப்போதே சில விமர்சனங்கள் வந்துவிட்டன. ஆனால் யாரும் செய்யாததைச் செய்வதுதானே பினாத்தலுக்கு அழகு. படம் வருவதற்கு முன்பாக ஒரு விமர்சனம் வரும் ரெண்டு விமர்சனம் வரும் - 18225 விமர்சனம்?

ஏற்கனவே சிவாஜிக்கு 1024 விமர்சனம் போட்டிருந்தேன். (அதை இன்னும் ஞாபகம் வைத்திருப்பவர்களை பசித்த பாவனா தின்னட்டும்.) ஃப்ளாஷுக்கு உரித்தான இண்டராக்‌ஷனுடன், விமர்சனம் எழுத படம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற கிண்டல்.

ஆனால் இந்த முறை இன்னும் அதிகத் தெரிவுகளுடன், இன்னும் கஷ்டமான அல்காரிதம்களுடன் வந்திருக்கிறேன். கதையில் இருந்தே தேர்வு செய்யலாம். எங்கிருந்து உருவி இருப்பார்கள் என்று ஆரம்பித்து இசை சண்டை காமெடி - ஒரு ஏரியாவை விட்டுவைக்காத முழுமையான விமர்சனம், நம் வழக்கமான விமர்சகர்கள் ஸ்டைலில் பஞ்ச் லைனுடன் - ஆறு க்ளிக்குகளில் நீங்கள் காபி செய்ய வசதியாக!

ஃப்ளாஷின் முடிவில் வரும் கோட் ஐ பின்னூட்டமாகப் போடவேண்டியது மட்டும்தான் உங்கள் வேலை! அதற்காக வெறும் கோட் ஐ மட்டும் போடவேண்டும் என்ற அவசியம் இல்லை, மேலான, சைடான கருத்துகளையும் தாராளமாகத் தூவலாம். (இந்த மாதிரி கோட் எப்ப வச்சாலும் பின்னூட்டப்பொட்டி ஃபுல்லா ஒரே கோட்தான் இருக்குது!)

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஃப்ளாஷில் மூன்று நாட்கள். இந்தச் சுகத்தை எவ்வளவு மிஸ் செய்திருக்கிறேன்!

Aug 1, 2010

அமெரிக்க பணயக் கட்டுரை - 2

கலாசாரத் தேடலின் நடுவே ஒரு சிறிய இடைவெளி விடவேண்டியதாகிவிட்டது. மாபெரும் ட்விட்டர், ப்ளாக்கர் மற்றும் ஆம் ஆத்மிகளின் சந்திப்பில் அவ்வப்போது சிற்றுரை பேருரை Bore உரை எல்லாம் ஆற்ற வேண்டிய நிர்ப்பந்தங்களினால்.

பத்துமணிக்கு அழைத்து போடப்பட்ட போஸ்டர்களின் விளைவால் பதினோரு மணிக்கு எழுந்து தயாராகச் சென்றேன். இலவசனார் காலை உண்டி கொடுத்தபின் தான் தயாராவேன் என்ற என் பிடிவாதத்துக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டி இருந்தது.


நீண்ட காலத்துக்கு முன் நான் ப்ளாக்கில் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தபோது தீவிரமாக கமெண்ட் போட்டதை இன்றும் எண்ணி வருந்தும் மணியன் @rsmanyan, நீங்க எழுத ஆரம்பித்த காலத்திலெல்லாம் நான் சின்னப்பையன் என்று என் வயதைக் குறிவைத்துக் கொலைவெறி காட்டிய @forvino, எவ்ளோதூரம்தான் போறானுங்க பார்க்கலாம் என்று அமைதியாக இருந்த @the_tweedy, வைஃபாலஜி மேலுள்ள கோபத்தை கனல் அடங்காமல் காத்துவரும் பத்மா அரவிந்த் @padmaa ஆகியோருடன் மொக்கை போட ஆரம்பிக்க தீவிர இலக்கியமும் உலக சினிமா தாகமும் அடங்காத ஒருபக்கம் @orupakkam, (அடங்காத மட்டும்தான் உண்மை, மற்ற அட்ஜெக்டிவ் எல்லாம் சும்மா பில்ட் அப்புக்கு :-) வயதான, போலி டைனோபாய் @dynobuoy, சேவல்பண்ணைக்கு குடும்பத்துடன் வந்துவிட்டிருந்த இளா @vivaji (நோயாளிகள் நேரம்தப்பாமல் மாத்திரை சாப்பிடுவது போல் வெளியே தனியாகச் சென்று அடிவாங்கிக்கொண்டு திரும்பினார்), வண்ண உடைகளை கவனமாக்த் தவிர்த்த வெட்டிப்பயல் பாலாஜி @vettipaiyal, எழுத்துக்குச் சம்மந்தமே இல்லாத இளமையோடு பிகேசிவகுமார் @ivansivan, இன்னும் என்னவெல்லாம் எழுதி சமுதாயத்தைக் கொடுமைப்படுத்தலாம் என சதித்திட்டம் தீட்டிக் கொடுத்த திண்ணை துக்காராம் @thukaram என்று மொக்கை களைகட்டியது.

வந்திருந்தவர்களின் அன்பான கேள்விகளின் வீச்சு: “நீங்கள் ஒரு பெரிய எழுத்தாளராமே? ஆமாம், என்ன எழுதறீங்க?” “நீங்க எழுதின எல்லா புக்கும் படிச்சிருக்கேன், ஆமாம், ப்ரேசில் சமையல் குறிப்புகள் நீங்கள் எழுதினதுதானே?” “உங்க ட்விட்லே எல்லாம் ஒரு ஸ்பார்க் தெரியும். ஆமா, உங்க ஹாண்டில் என்ன?” “ஒரு சக எழுத்தாளராக டேன் ப்ரவுன் பற்றி உங்கள் கருத்தென்ன?” “அடுத்த புக் எப்போது? தற்காப்பா இருக்கவேணாமா?” போன்ற கேள்விகளுக்கு புன்னகையை பதிலாக்கினேன். இளிச்சவாயனாக ஆக்கிவிட்டார்கள் என்பதன் இடக்கரடக்கல் என்பதறிக. (ஃபோட்டோக்கள் வேறு காமராவில், தனியாகச் சேர்க்கப்படும்)

மதியம் என்று ஆரம்பித்த பயணத்திட்டம் மாலையாக மாறி அப்போதும் மொக்கை தொடர, முன்னிரவிலேயே கிளம்ப முடிந்தது. வழியில் பயணத்தில் சேர்ந்த கண்ணபிரான் ரவிஷங்கர் @kryes எழுதும்போது ஸ்ரீவேணுகோபாலன், பேசும்போது புஷ்பா தங்கதுரை.அட்லாண்டிக் சிட்டிக்கு எங்களுக்கு முன்பே வந்து காத்துக்கொண்டிருந்தார் சத்யராஜ்குமார் @ksrk. இதற்காகவா காத்திருந்தாய் சத்யராஜ்குமாரா? என்னும் அளவுக்கு அவரைப் படுத்தினோம். ஆட்டம் கொண்டாட்டம் சூதாட்டம் நிரம்பிய ஊரிலும் இசை நீர்வீழ்ச்சி போன்ற உபத்திரவமில்லாத வஸ்துக்களைத் தேடிக் கண்டுபிடித்துக் காட்டினார்.பாஸ்டன் பாலா @snapjudge வந்தார்.அவருடைய செறிவான டாட்நெட் கட்டுரைகளைப் பற்றிய விவாதங்களைத் தொடங்க அவர் ரசிகர் கூட்டம் தயாராக இருந்தும் மற்றவர்களின் கொலைவெறிப்பார்வையால் வழக்கமான மொக்கையே போட்டு காஸினோவுக்குச் சென்று காசு இனி நோ என்று பதம் பிரித்துக் காட்டச் சூளுரைத்தோம்.கலாசார நுகர்வு பூர்த்தியாகும் முன்னரே நேரம் கடக்க ஆரம்பித்தது. “அப்போ இன்னிக்கும் மேற்படி டான்ஸ் இல்லியா?” சோகத்தோடு கிளம்பும் நேரத்தில் குற்றாடை நங்கையர் சிலர் சூதாட்ட விடுதியில் ஆட ஆரம்பித்தார்கள். கலைக்கண்ணோடுதான் பார்க்கிறேன் என்று கேட்பதற்குமுன் பதில் சொல்லத் தயாரானேன். ஆனால் என்னை யார் பார்த்தார்கள்?ஆனால் முழுமையான கலாச்சார நுகர்வும் பகிர்வும் இனிமேல்தான் என்று சூளுரைக்கிறார் கொத்தனார். எனவே, சிறிய இடைவேளைக்குப் பிறகு, கலாசாரப் பகிர்வைப் பொதுவுடமைப்படுத்துகிறேன்.

அட்லாண்டிக் சிடிக்கு வந்திருந்தவர்களில் ஒரு பகுதி:

Jul 31, 2010

அமெரிக்க பணயக் கட்டுரை - 1

விமானத்தை விட்டு வெளியே வந்ததுமே அமெரிக்கா தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது. நீண்ட வரிசை. பிரிவினை பார்ப்பதில்லை எனத் தண்டோரா கொட்டும் ஏகாதிபத்தியவாதிகள் தன் குடிமையாளருக்குத் தனிவரிசை வைத்ததையும் சகித்துக் கொள்ளலாம், வந்தாரை வரவேற்க 33 சத ஒதுக்கீடு கூட இல்லாமல் 20க்கு மூன்றே வரிசைகளை வைத்திருந்தது துணுக்குறச் செய்தது. எதற்காக வந்தாய், என்ன காரியம், காரணம் என்று தேவையில்லாத ஆயிரம் கேள்விகளோடு அபசகுனத்தின் உச்சமாக எப்போது திரும்பப் போகிறாய் என்றும் கேள்விகள். அதைத் தாண்டி வந்தாலும் பெட்டியைக் குடையும் வகையில் கஷ்டம் கேள்விகள்.

அமெரிக்காவில் எல்லா மொழி இன மக்களும் இருக்கிறார்களாம். ஆனால் கலாச்சாரத்தைத் தெரிந்து கட்டுரைகள் எழுதிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தோடு நண்பன் அழைத்துச் சென்ற அத்தனை கடைகளிலும் தமிழே வழக்குமொழியாக இருந்தன. பணம் கொடுக்கும்போது ஏன் ரூபாயாகக் கொடுக்கவில்லை என்ற சந்தேகம் மட்டும் இன்னும் அழியவில்லை.

விடாப்பிடியாக மைல்களிலும் பாரன்ஹீட்களிலும் மட்டுமே சம்பாஷிக்கிறார்கள். தெருவிலிருந்து ஸ்விட்ச் வரை எல்லாம் தலைகீழ். கீழே அழுத்தினால் லைட் எரிகிறது, மேலே இழுத்தால் தண்ணீர் கொட்டுகிறது, கதவைத் தள்ளி உள்ளே செல்கிறார்கள். இந்தியர்கள் பூமிப்பந்தின் மேல்பாகத்திலும் அமெரிக்கர்கள் கீழ்பாகத்திலும் இருப்பதால் எல்லாமே தலைகீழாக இருக்கலாமோ என்ற என் அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

தொலைக்காட்சியிலும் அமெரிக்கர்கள் வெள்ளி மதியம் சமையல்தான் செய்கிறார்கள், தாலி பாக்கியத்துக்காக பெண்கள் போராடுகிறார்கள், மிகச் சொற்ப விலைக்கு பிருஷ்டம் இளைக்கிறது, ப்ளாஸ்டிக் விந்தைகளை வாங்கினால் டார்ச்லைட்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. உண்மையான கலாச்சாரத்தை அறிவதற்கு இன்னும் கொஞ்சநாள் பொறுத்திருக்கவேண்டும் போல இருக்கிறது.

அறிந்ததும் தொடர்கிறேன்.

Jun 3, 2010

என்னோட நண்பனுக்கு எட்டு பொண்டாட்டி

எழுதுவதற்கு ஆசை வந்தவுடன் முதலில் புனைபெயரைத்தான் தேட ஆரம்பித்தேன். சுரேஷ், சுரேபா, ராமசுப்பு, சுரேஷ்ராமமூர்த்தி என்று மனதுக்குப் பிடிக்காத பலவிதமான பெயர்கள் முதல் பரிசீலனையைத் தாண்டவில்லை. பதிவு எழுத ஆரம்பித்தபோதுகூட பதிவுக்குதான் பினாத்தல்கள் என்று பெயர் வைத்திருந்தேனே ஒழிய என் பெயர் சுரேஷ் என்றுதான் இருந்தது. பிறகு பல சுரேஷ்கள் குவிய ஆரம்பித்த பிறகுதான் பினாத்தல் சுரேஷ் என்று ப்ளாக்கர் ஹாண்டிலை மாற்றினேன். இந்தப் பெயர் கிண்டல் எழுத்துக்கு ஓக்கே, உருப்படியா எழுதினா? என்ற எண்ணத்தை, முதல்ல உருப்படியா எழுது, அப்புறம் புனைபெயர், பூனைபெயர் எல்லாம் பாத்துக்கலாம் என்று ஒத்திவைத்தேன்.


அந்த உருப்படியா எழுதுவது மட்டும் விலகிக்கொண்டே போனது. அவ்வப்போது ஒன்றிரண்டு தப்பிப்போனாலும்.

யாருடைய மூளைக்குழந்தையோ, இன்னும் எனக்குத் தெரியவில்லை, ஐம்பெருங்காப்பியங்களை எளிய நாவல்களாக்க உத்தேசம், உன்னால் முடியுமா என்று கேட்டபோது “என்னை வச்சு காமடி கீமடி பண்ணலியே” என்றுதான் கேட்கத் தோன்றியது. ஆனால் பயம் என்பது விஷயம் தெரிந்தவர்களுக்குதானே வரும்? எனக்குதான் அந்தச் சுமையே கிடையாதே.

குருட்டுத் தைரியத்தில் ஒப்புக்கொண்டு சீவகசிந்தாமணியைப் படிக்க ஆரம்பித்தேன். செய்யுள்களில் ஆர்வம் என்று சொல்லிக்கொள்ள முடியாது, இருந்தாலும், நாமளும் இதையெல்லாம் படிக்கணும்டா என்பது மாதிரி ஆர்வம் எப்போதாவது வந்து போகும்.

நீர் உடைக் குவளையின் நெடுங் கண் நின்ற வெம் பனி
வார் உடை முலை முகம் நனைப்ப மாதர் சென்ற பின்
சீர் உடைக் குருசிலும் சிவந்து அழன்று ஓர் தீத் திரள்
பார் உடைப் பனிக்கடல் சுடுவது ஒத்து உலம்பினான்

என்பதுபோல சந்தத்தோடு, கொஞ்சம் கஷ்டப்பட்டால் புரிந்துவிடக்கூடிய பாடல்கள் சில இருந்தாலும், பல பாடல்களில் இருக்கும் சொற்கள் பிரித்தாலும் புரியாமல், சேர்த்தாலும் புரியாமல் இலக்கியத்தரமாக இருந்தது. (இப்போ புரியுதா இலக்கியத்தரம்னா இன்னான்னு?)

சரி, உரையை எடுத்துப் படிக்கலாம் என்றால் பலநேரங்களில் செய்யுளே புரிந்துவிடுகிறது, உரை புரியவில்லை. வந்தான் என்று சொல்வதற்கு வந்தனன், நின்றனன், சென்றனன் னு உரையாசிரியர் வேற இலக்கியத்தரம் வளர்க்கிறார்.

எனக்கு வேலை சொன்ன பாராவை சாட்டில் பிடித்தேன்.

“படிக்கறதுக்கே கஷ்டமா இருக்கே, எதாவது படிக்கச் சுலபமான மொழியிலே உரை இருக்கா, கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்”

“அதானேய்யா உனக்குக் கொடுத்த வேலை! படிக்க சுலபமா உரை இருந்தா அதை ரெகமண்ட் பண்ணிட்டு போயிரமாட்டோமா?”

இப்போதுதான் புரிந்தது அந்த ஐடியாவின் அருமை. தமிழ் மீடியத்தில் படித்து, யாப்பு இலக்கணத்தில் குரங்கு பெடல் அடித்துக்கொண்டு வெண்பா வெண்பாம் என்றெல்லாம் மற்றவர்களை இம்சிக்கும் எனக்கே புரிவதில் இவ்வளவு கஷ்டம் இருந்தால், தமிழை எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பித்திருக்கும் ஆர்வத்தை மட்டுமே கொண்ட தலைமுறைக்கு எப்படி இருக்கும்?

விளையாட்டாக ஆரம்பித்ததைக் கொஞ்சம் தீவிரமாக்கினேன். சீவகன் கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆக்கிரமித்தான். “வா சுரேஷ், சும்மா மொக்கைப்பதிவே போட்டுகிட்டிருக்காம என்கிட்டே வா.. என் கதை என்ன தெரியுமா? நான் ஏன் எட்டு கல்யாணம் செஞ்சேன் தெரியுமா? எத்தனை திருப்பம் தெரியுமா என் வாழ்க்கையில்?”

சீவக சிந்தாமணி - தமிழ் அறிஞர்களுக்காக எழுதப்படவில்லை. நமக்காக. நான் எப்படி ஒரு நாவல் இருந்தால் படிப்பேனோ, அப்படி எழுத முயற்சி செய்திருக்கிறேன். “நூலையும் உவமைகூற இயலாத மெல்லிய இடை ஒடிய விம்மி அடி பருத்த “ என்றெல்லாம் இருக்கும் அட்ஜெக்டிவ்களை கழட்டிவிட்டு நேரடியாக, சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் முயற்சி. செய்யுளுக்குச் செய்யுள் அர்த்தம் சொல்லும் உரை அல்ல. “வா சீவகா, உட்கார்” என்று நெருங்க வைக்கும் முயற்சி. தேமா புளிமா கூவிளங்காய் தெரிந்து புணர்ச்சி இலக்கணம் தெரிந்த பண்டிதர்களுக்காக அல்ல - ”தமிழில் எதோ காப்பியம் எல்லாம் இருப்பதாகச் சொல்றாங்க, என்ன மேட்டர்னு புரியலை” என்பவர்களுக்காக.

தீக்குச்சி விழுந்து தெரிக்குதடி -கருந்தேக்குமரக் காடு வெடிக்குதடி” என்று எளிமையாக அக்கினிக்குஞ்சு பாட்டை ரீமேக் செய்திருக்கிறாரே வைரமுத்து, அதைப்போல ஒரு முயற்சி.

எழுதி முடித்தபின் புனைபெயர் இப்போது தேடலாம் என்ற எண்ணம் வந்தது.

ராம்சுரேஷ் என்ற பெயரில் இதோ, என் முதல் புத்தகம். உங்கள் ஆதரவை எதிர்பார்த்து:
இந்தப் புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளலாம் (தொலைபேசி எண்கள்: (044-42868126 / 0-9500045640 – இணையத்தில் வாங்குவதற்கு படத்தின் மேல் க்ளிக்கவும். சென்னையில் உள்ளவர்கள் கிழக்கு பதிப்பகத்தின் தி. நகர் புத்தகக் கடையிலோ, நாளை ஐந்து இடங்களில் நடைபெறும் சிறப்புப் புத்தகக் கண்காட்சிகளிலோ இந்தப் புத்தகத்தை வாங்கலாம். மற்ற ஊர்களில் இன்னும் ஒன்றிரண்டு நாள்களுக்குள் கிடைக்கத் தொடங்கிவிடும் என்று தெரிகிறது.

***

Apr 1, 2010

பதிவர் சங்கம் - என் இரண்டணா

Mar 30, 2010

அங்காடி தெரு- நான் கடவுள் - ஏழாம் உலகம்

"இதே கலர்ல டீ ஷர்ட் 42 இல்ல 44 சைஸ்லே இருக்குமாம்மா?" என்று கேட்டிருக்கிறேன் ரங்கநாதன் தெருக்கடையில்.

"இருக்காது சார்"

"பாத்துட்டு சொல்லலாமில்ல? ஒரு ஸ்மைலிங்கா சொல்லேம்மா" என்று சொல்லியிருக்கிறேன் கடையை விட்டுக் கிளம்பும் முன். அதோடு அதை மறந்தும் போயிருக்கிறேன்.

ஆனால் இப்போது தெரிகிறது, நான் பேசியது கனியுடன் என்று. செல்வராணியுடன் என்று. சோஃபியாவிடம் என்று.

ஆயிரம் முறையாவது போயிருப்பேன் ரங்கநாதன் தெருவிற்கு. ஆனால் இப்போதுதான் வசந்தபாலன் அந்தத் தெருவுக்கு முறையாக அழைத்துப் போயிருக்கிறார். மேலோட்டமாகப் பார்க்காதே. எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள் பார்.

எல்லாம் தென் தமிழ்நாட்டுத் தமிழ் பேசுகிறார்கள் என்பதை மட்டும் கவனித்தாயே, 13 வயதுப்பையன்கள் கேள்விகேட்டதும் 18 வயது (அப்படின்னா எனக்கு 90 இருக்கும்பா.. உண்மையச் சொல்லு) என்று கூசாமல் சொல்கிறார்கள் என்பதைக் கவனித்தாயே, அவர்கள் எங்கே தங்குகிறார்கள் என்று யோசித்தாயா என்று கேட்கிறார்.

பொதுக்கழிப்பிடத்துக்குக் காசு வாங்கும் அவலத்தை லெட்டர்ஸ் டு த எடிட்டருக்கு எழுதத் துடிக்கிறாயே, அது ஒரு பிச்சை எடுக்காதவனின் உழைப்பு என்பதை உணர்ந்தாயா?

"பத்து ரூபாய் ரிமோட் கவர்" விற்கும் பையன் ப்ளஸ்டூ படித்திருப்பானோ?

உதயம் தியேட்டர் ப்ளாட்பாரத்தில் 22 பேரைக் கொன்ற கொடூர விபத்தை மறுநாள் காலையில் பார்த்தேன். ஒரு மாதம் கழித்து "என்னையும் வந்து ஏற்று" என்று இன்னொரு 22 பேர் அதே இடத்தில் படுத்துக் கிடந்ததையும் பார்த்தேன். வேண்டுதலா அவர்களுக்கு லாரிகளுக்கு எலுமிச்சம்பழமாக?

திருட்டுப் பட்டம் கட்டுவதற்கும் ஸ்கிரீன் மறைவில் கசக்குவதற்கும் ஏற்ற முக்கால் அனாதைப் பிள்ளைகள், மாதம் முதல் செக்லிஸ்டின் பிள்ளையார் சுழியாய் ஏன் R-1? அண்ணாச்சிகளுக்கு ஆர் 1 துணை, ஆர்1களுக்கு அண்ணாச்சிகள் துணை - கைவிடப்பட்டவர்களுக்கு யார் துணை?

கேள்விகள்.. கேள்விகள். இப்படிக் கேள்விகள் இருப்பதையும் நான் அறிந்திராத ஆயிரம் கேள்விகள்.

ஏழாம் உலகம், என்னை மிகவும் பாதித்த ஒரு நாவல். நள்ளிரவில் படித்து முடித்துவிட்டு, கதையில் வரும் பாத்திரங்களுக்காக இரவெல்லாம் தூங்காமல் என்ன செய்வது, யாரை உதைத்து இவர்களின் இழிநிலைக்கு ஒரு தீர்வைக் கொண்டுவருவது? உதைக்கப்படவேண்டியவர்கள் வரிசையின் நானும் நிற்கிறேனே என்ற குற்ற உணர்ச்சி கலங்கடிக்க நான் அனுபவித்த சுகங்கள் எல்லாம் சுமையாகத் தோன்றி மூன்று நாட்களுக்கு எதிலும் முனைப்பில்லாமல் செய்த நாவல்.

ஏழாம் உலகம் நான் கடவுளாகப் படமானது ஒரு விபத்து. அகோரிகளையும் ஏழாம் உலகமும் கொத்துக்கறியாக. திரைப்படம் என்பதற்கான இலக்கணத்துக்காக ருத்ரன் தாண்டவனைப் புரட்டி எடுத்தான் - அந்த புரட்டி எடுத்தலை மையப்படுத்தியே ஆரம்பத்தில் இருந்து கதை நகர்ந்தது - தாண்டவன் அனியாயத்துக்குக் கெட்டவன், அம்சா பாவம் அவளை குரூபிக்குக் கூட்டிக் கொடுக்கிறான், ருத்ரன் முக்கா கடவுள், இப்போது அவளை ரட்சிப்பான் - இந்தக் கூத்தில் ஒரு பேக்ட்ராப்பாக மட்டுமே வந்தது ஏழாம் உலகம். நாவல் தோற்றுவித்த எந்த உணர்வையுமே படம் தோற்றுவிக்கவில்லை. பஞ்ச் டயலாக் இல்லையே தவிர அது ஒரு மாஸ் ஹீரோ படம்தான்.

ஏழாம் உலகம் கேட்ட கேள்விகளில் முக்கியமானது - தினமும்தான் பார்க்கிறாய் இவர்களை. ஒரு நாளாவது கவனித்திருக்கிறாயா?

அதே கேள்வியை "இவர்களை" மட்டும் மாற்றிக் கேட்கிறது அங்காடி தெரு.

ஆனால் நான் கடவுள் செய்திருக்கவேண்டிய ஆனால் வழுக்கிய பல இடங்களைச் சரி செய்திருக்கிறார் வசந்தபாலன்.

நான் கடவுளில் தரைக்கு மேலே மிதந்த கதாபாத்திரங்களை தரைக்குக் கொண்டு வந்து Closer to life ஆக்கியதன் மூலம் அனாயாசமாகச் செய்திருக்கிறார். பாலாவை பாலன் ஜெயித்திருக்கிறார்.

ருத்ரன் போல யாரையும் உதைக்கும் எதற்கும் கவலைப்படாத டெர்மினேட்டர் பாடி இல்லை லிங்குவுக்கு. இயலாமையின் உச்சியில் காலைப்பிடித்து அழுபவன் தான். ஆனால் இவனும் ஹீரோ ஆகிறான் - திரைமறைவில் கசக்கிய சூப்பர்வைசரை விளைவுகளுக்கு அஞ்சாமல் புரட்டி எடுத்து - விளைவாக புரட்டி எடுக்கப்பட்டு; புத்தி சொல்லும் முடிவை உறுதியான இதயத்தால் மாற்றி.

அம்சவல்லிக்கு குரூபியுடன் திருமணம் ஆவதே முக்கியமான குறை. கனி கசக்கலைப் பற்றி வருந்தினாலும் அதை வாழ்க்கையாக நினைக்கவில்லை.

அண்ணாச்சிகளுக்கும் தாண்டவன்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கைவிடப்பட்டவர்களைக் கறப்பவன் பணக்காரன் ஆனதும் புத்திசாலியும் ஆகிறான்.

இந்தப்பதிவு படத்தின் விமர்சனம் இல்லை. விமர்சனம் என்பது குறைநிறைகளைத் தொட்டுக்காட்டுவது. இப்போதைக்கு அதைச் செய்வதாக உத்தேசம் இல்லை. சிறு சிறுகுறைகளையும் மீறி என் தூக்கத்தைக் கெடுத்த கோர்வையற்ற எண்ணங்களை பதிந்தே ஆகவேண்டும் என்ற உந்துதல்தான் இந்தப்பதிவு.

அய்யனார் சொல்லிதான் தெரிந்தது துபாயில் படம் ஓடுகிறது என்று. தியேட்டரில் சொற்பக் கூட்டமே. இன்னும் இரண்டு நாளில் பையா விரட்டப் போகிறதாம்.

என்ன, எனக்குதான் இன்னும் கொஞ்ச நாள் ஆகும் - தரைக்கு வந்து, "அந்த ஷர்ட்டை எடுத்துப் போடுப்பா, சோம்பேறித்தனம் பாக்காம" என்று சொல்ல

Mar 2, 2010

வித்தியாசமான காதல் படம் - விண்ணைத்தாண்டி வருவாயா!

பீமா கந்தசாமி போன்ற தொடர் அடிகளுக்குப் பிறகு எந்தப்படமும் முதல்நாள் செல்வதில்லை என்று முடிவெடுத்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் வந்தேன். விமர்சனங்களைப்பார்த்து எனக்கு கொஞ்சமாவது பிடிக்குமாறு கதை இருக்கிறதா என்றறிந்துகொண்டு அதற்குப்பிறகே திரையரங்குப்படையெடுப்பை வைத்துக்கொள்ளலாம் என்ற உத்தேசம் ஓரளவுக்குப் பலன் அளித்துதான் வந்தது - விண்ணைத்தாண்டி வருவாயா வரை.

பெரும்பாலான முதல்நாள் விமர்சகர்கள் வித்தியாசமான காதல் கதை என்று பாராட்டியதாலும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அற்புதம் என்று சிலாகித்ததாலும், மின்னலே முதல் வாரணம் ஆயிரம் வரை கௌதம் படங்கள் பிடித்தே இருந்ததாலும் - கவிழ்ந்தேன் - படம் பார்த்ததும்தான் தெரிந்தது, நம் மக்கள் எவ்வளவு காய்ந்துபோயிருக்கிறார்கள், வித்தியாசத்தின் அளவுகோல் எந்த அளவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பது!

"மச்சி காதல்ன்றது " என்று நண்பர்களிடம் பேசும் காட்சி ஆர்டினரி.. "எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும்போது" என்று பேசுவது வித்தியாசம்

பாடல் காட்சிகளில் 40 ஆண் 40 பெண் ஆடுவது ஆர்டினரி, 10 ஆண்கள் மட்டும் அக்ரோபாடிக்காக ஆடுவது வித்தியாசம்.

பஸ் ஸ்டேண்டில் சைட்டடிப்பது ஆர்டினரி, கேஎஃப்சிக்கு துரத்திச் செல்வது வித்தியாசம்.

அண்ணன்கள் அரிவாளோடு காதலனைத் தேடுவது ஆர்டினரி, பாக்ஸிங் செய்வது வித்தியாசம்

காதலுக்குத் தடையாக மதம் இருப்பது ஆர்டினரி, காதலுக்குத் தடையாக மதம்+வயது இருப்பது வித்தியாசம்.

எல்லா கதாபாத்திரங்களும் தமிழில் பேசுவது ஆர்டினரி, தமிழில் பேச முயற்சித்து திக்குவது வித்தியாசம். (நல்ல தமிழ் பேசக்கூடிய உமா பத்மநாபன், கிட்டி ஆகியோரும்கூடத் திக்குவது ஸ்பெஷல் வித்தியாசம்)

தங்கை காதலுக்கு உதவுவது ஆர்டினரி, "அவளுக்கு ரூட் போடாதே" என்று சொல்லிவிட்டு பிற்கு போய் காதலியின் கல்யாண ஆல்பம் பார்த்துவிட்டு வருவது வித்தியாசம்.

"அவனைக் காதலிச்சா என் பொணத்துமேலதான் கல்யாணம்" என்பது ஆர்டினரி "Over my dead body" என்பது வித்தியாசம்.

சிம்பு விரலை ஆட்டிக்கொண்டு பல்லைக்கடித்துக்கொண்டு பேசினால் ஆர்டினரி, விரலை ஆட்டாமல் பல்லைக்கடித்தால் வித்தியாசம்.

நாயகி முதல் சீனில் நாயகனிடம் திட்டுவாங்கி மூன்றாவது சீனில் காதலுக்கு ஓக்கே சொன்னால் ஆர்டினரி, இடைவேளை தாண்டியபின் சொன்னால் வித்தியாசம்.

கதாநாயகியைத் துரத்திக்கொண்டு கேரளா போய் "மனசுக்குள்ளே காதல் வந்துச்சா" - ஆர்டினரி, "மன்னிப்பாயா" வித்தியாசம்.

கதாநாயகனின் கனவாக சினிமா இருந்து "என்ன சொல்லப்போகிறாய்" என்பது ஆர்டினரி. கதாநாயகனின் கனவாக சினிமா இருந்து "ஆரோமலே" என்பது வித்தியாசம்.

நாயகியைக் கல்யாணம் செய்துகொண்டு குடைக்குள் மழையாகக் கனவு கண்டால் ஆர்டினரி, நாயகியைக் கல்யாணம் செய்துகொண்டு ஜெஸ்ஸி ரீலீஸாகக் கனவு கண்டால் வித்தியாசம்.

அமெரிக்க மாப்பிள்ளை (பாவம் இந்த ப்ரீட்!) உடனான திருமணம் க்ளைமாக்ஸில் நின்றால் ஆர்டினரி, இடைவேளையில் நின்றால் வித்தியாசம்!

இவை மட்டுமல்ல, நிறைய நிறைய வித்தியாசங்கள் கொட்டிக்கிடக்கின்றன படம் முழுவதும்.
ஸ்லோவாப் போனா க்ளாஸிக் மூவி என்ற அடூர் காலத்து எண்ணத்தில் இருந்து எப்பதான் வெளிய வரப்போறோமோ! நுணுக்கமான விவரணைக்காக திரைக்கதை நொண்டியடித்தால் ஓக்கே - இந்த சப்பை ஒற்றைப் பரிமாணக் கதாபாத்திரங்களுக்கா? அநியாயம்.

நல்ல விஷயமே இல்லையா படத்தில்? இருக்கிறது! அவையாவன: 1. ரஹ்மானின் பின்னணி இசை எனக்குபபிடித்த முதல் படம் இதுதான். 2. ஒளிப்பதிவு - தெள்ளத்தெளிவு. 3. காத்திருந்து வந்த இடைவேளை, 4. நொந்து முடிந்தபின் வந்த சுபம்.

இதிலே பெரிய காமெடி என்னவென்றால், இந்தப்படம் பிடிக்காதவர்கள் கிழவர்கள் என்று ட்விட்டரிலும் பஸ்ஸிலும் மக்கள் அடிக்கும் கூத்துதான். இதே அளவுகோலை வேட்டைக்காரனுக்கும் வைக்கப்போகிறேன். "என்னா ஃபைட்டு.. உங்களுக்கெல்லாம் படம் சுறுசுறுப்பா இருந்தா பிடிக்காதா? வயசாயிடுச்சுப்பா உங்களுக்கு!"

இதனால் அறிவிப்பது என்னவென்றால், நம் மக்கள் விமர்சனத்தின் மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்துவிட்டேன்! (இது இந்த விமர்சனத்துக்கும் பொருந்தும்:-)

Jan 27, 2010

காபரே கருத்துகள்

தாய்லாந்து சென்றிருந்தேன் குடும்பத்தோடு. வேண்டாம், அந்தக்கேள்வியைக் கேட்காதீர்கள், ஆயிரம் முறை பதில் சொல்லியாகிவிட்டது.

புன்னகை தேசம் என்று விமானநிலைய வரவேற்புப்பலகை சொல்கிறது. உண்மை. இருபது ரூபாய்க்கு மாங்காய் வாங்கினாலும் விற்பவர் சொல்லும் கணக்கில்லாத கபுன்கா (நன்றி :-))வுடன் புன்னகைகள் இலவசம்; 1000 கிலோமீட்டருக்குள் கடல் மலை அருவி காடு என எல்லா இயற்கையையும் பார்க்க நீந்த குளிக்க களிக்க - பதப்படுத்தி வைத்திருக்கும் சுற்றுலாத்துறை -- மிக நிறைவான பயணம். விரிவாக எழுதினாலும் எழுதுவேன். 1000 ஃபோட்டோக்கள், 5 மணிநேர வீடியோ இருப்பதால் எதை எழுத எதை விட என்று தெரியாமல் இருக்கிறேன் இப்போதைக்கு.


ஆனாலும், இந்த விஷயத்தைப் பற்றி உடனடியாக எழுதியே ஆகவேண்டும். ஒரு காபரே ஷோ பார்த்தேன்.


காபரே என்றதும் எனக்கும் கச்சடாவான எண்ணங்கள்தான் வந்துகொண்டிருந்தன, ஸ்பெயினில் ஒரு வருட ஆரம்ப காபரேவைப் பார்க்கும்வரை - பத்தாண்டுகளுக்கு ஒரு பாடலை எடுத்துக்கொண்டு நூறாண்டுகளின் இசை ரசனை மாற்றத்தை நடனத்தோடு சொன்ன காபரேதான் கண்ணைத்திறந்தது - சிஐடி சகுந்தலா ஆடுவது காபரே அல்ல என்று.

தாய்லாந்து காபரேவும் ஏறத்தாழ இதேபோலத்தான். பல பாடல்களுக்கான நடனங்களை லூஸாக ஒரு கதையை வைத்துத் தொகுத்தது. கடவுள் நவரத்தினங்களை அறிமுகப்படுத்துகிறார் - ஒன்பது மிக அழகிய பெண்கள், அவர் ரத்தினத்துக்கான நிறத்தில் ஆடை அணிந்து, க்ரூப் டான்ஸர் புடைசூழ ஆடி அறிமுகமாகிறார்கள். உடனே சாத்தானின் வேலையால் நவரத்தினங்களும் உலகின் பல்வேறு திசைகளிலும் பந்தாடப்பட, அடுத்த காட்சியில் இருந்து ஒவ்வொரு ரத்தினமும் தான் சேர்ந்த நாட்டின் கலாச்சார நடனம் ஆட (ஒரு ரத்தினம் தாய்லாந்து, அமெரிக்கா, ப்ரான்ஸு, இந்தியா, சீனா, ஜப்பான் - எல்லா நாட்டு நடனங்களும்) பின் சேர்கிறார்கள். வைரம்தான் நவரத்தினத்துக்கும் தலை, டிஃபானிதான் வைரத்தின் அத்தாரிட்டி என்று முடிக்கும்போதுதான் ஒன்றரை மணிநேரமும் விளம்பரம் என்று உரைக்கிறது.


ஒவ்வொரு காட்சியிலும் விஸ்தாரமான ஒப்பனைகளுடனும் அழகோ அழகான உடை அலங்காரங்களோடு மிக மிக அழகான பெண்கள் அந்தந்த நாட்டிற்கேற்ப பிரம்மாண்டமான அரங்க அமைப்புகளில் ஆடுகிறார்கள். ஆட்டம் என்றால் என்ன ஆட்டம்! கலா மாஸ்டர் சொல்வதுபோல எல்லாம் ஹெவி ஸ்டெப்புகள் :-) பத்துபேருக்குக் குறையாத க்ரூப் டேன்ஸிலும் ஒரு ஸ்டெப் கூட தவறவிடாத துல்லியம்; சொன்னேனா? இந்தக் காட்சிகளுக்கு இடையே ஒரு நொடிகூட இடைவெளி இல்லை. அரங்கமாற்றம், ஒப்பனை, கேண்டீன் விற்பனை - எதற்கும் ஒருநொடியும் இடைவெளி இல்லை - அரங்கின் முன்பகுதியில் நகைச்சுவைக்காரர்கள் ஒரு பாட்டுக்கு ஆடி முடிக்கும்போது பின்பாதியின் அமைப்பு தயாராகிவிடுகிறது. ஆடிக்கொண்டே இடதுபக்கம் போகும் நடனக்காரி 20 நொடியில் வேறு ஒப்பனையில் வலதுபக்கம் தோன்றுகிறாள். மிக மிகத் துல்லியமான நேர ஒருங்கிசைவு.


அழகோ அழகான பெண்கள் என்றா சொன்னேன்? அழித்துவிடுங்கள். ஆடியது அத்தனை பேரும் ட்ரேன்ஸ் செக்ஸுவல்சாம். (திருநங்கை பொருந்திவருமா தெரியவில்லை) - சொல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் கண்டுபிடித்திருக்க முடியாது.

ஒரு நாளைக்கு மூன்று காட்சி ஓட்டுகிறார்கள், ஒரு நடுத்தர நகரத்திலேயே (பட்டாயா) இரண்டு ஷோக்கள் (அல் கஸார் ஷோ, டிஃபானி ஷோ) - அத்தனையும் அரங்கு நிறைகின்றன என்பதில், அதன் தரத்தைப் பார்த்ததும் ஆச்சரியம் ஏற்படவில்லை.

சொல்லவந்த முக்கியமான விஷயங்கள் இவைதான்:

இது போன்ற ஷோக்கள் மட்டுமின்றி நாட்டிலேயே பொதுவாக பல தொழில்களிலும் இது போன்ற பெண்கள் இருக்கிறார்கள், மிக சகஜமாக என்பதையும் பிறகு அறிந்துகொண்டேன். நம் ஊரில் மட்டும் இன்னும் இப்படிப் பிறப்பதையும் இருப்பதையும் குற்றமாக்கி, சக உயிரினமாகக் கூட மதிக்காமல் இருப்பதன் அசிங்கம் முழுமையாக உரைத்தது.

முதல் வரிசையில் அமர்ந்து பார்த்ததற்கு நான் செய்த செலவு சுமார் 800 இந்திய ரூபாய். காசைப்பற்றி சொல்வதற்கு காரணம், இதைப்போன்று இருமடங்கு செலவு செய்தாலும் தமிழ்நாட்டின் தியேட்டர்களில் நமக்குக் கிடைப்பது துணுக்குத் தோரணங்களே, இதுபோன்ற ஒரு பல்சுவை ஷோ இருக்கிறதா என்பதறியேன்.

பார்த்து பதினைந்து நாள் ஆனாலும் இன்னும் அந்த நிறைவான உணர்வை மனதில் உணர்கிறேன்.

 

blogger templates | Make Money Online