நாலு பேர் நன்றாக இருப்பதற்காக ஒருவர் கஷ்டம் அனுபவித்தால் தப்பில்லை - என்று ஒரு புருடா புராணம் கூறுகிறது.. அந்த ஒருவராகத் தானே இருக்க முன்வந்த தன்னலமில்லாத் தொண்டன், தியாக சொரூபம் பினாத்தல் சுரேஷின் தியாகத் திருவரலாறுதான் என்ன?
சுனாமி எச்சரிக்கையை பலநாள் கழித்துச் சொன்னால் என்ன பயன்?
உடனே சொன்னால்தானே மக்கள் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும்?
சரி பில்ட்-அப் எல்லாம் போதும், விஷயத்துக்கே வந்து விடுகிறேன்.
'இங்கிலீஷ்காரன்" என்ற படத்தைப் பார்த்துத் தொலைத்து விட்டேன். எனக்கு ஏற்பட்ட கதி, என் நண்பர்கள், விரோதிகள் யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இதை அவசர அவசரமாகப் பதிகிறேன்!
கதையைச் சொன்னால் -'அட நல்லாத்தானே இருக்கு"என்று சொல்வீர்கள்!
சில காட்சிகளை டிவியில் பார்த்தாலும், நல்ல காமெடியா இருக்கும் போல இருக்கே என்றும் எண்ணக்கூடும். (அப்படித்தான் நினைத்து நானும் பார்த்தேன்)
ஆனால், திரைக்கதை என்ற ஒரு ஜந்து இருப்பதாகவே இந்த இயக்குநர் அறிந்திருக்கவில்லை.
படம் நெடுக பழைய படங்களில் வந்த வெவ்வேறு காட்சிகளை சத்யராஜ் மறுபடி நடித்துக் காண்பித்திருக்கிறார். காட்சிகளை கொஞ்சம் மாற்றி இருந்தாலோ, ஒரிஜினலில் உள்ள அபத்தங்களை கோடிட்டு இருந்தாலோ அது கிண்டல், நகைச்சுவை. அதே காட்சியை அப்படியே நடிகர்களை மட்டும் மாற்றி எடுத்ததினால், ஆரம்பத்தில் சில நேரங்களில் வரும் சிரிப்பையும் காணாமல் போக அடித்துவிடுகிறது.
படம் முடியப்போகும் நேரத்தில் அவசரமாக மெஸேஜ் சொல்ல வேண்டிய கட்டாயத்தால் "பெற்றோர் குழந்தைகளை அவர்கள் ஆசைப்படி வர விட வேண்டும்" என்பதை அதீதமான உதாரணங்களோடு கூறி முடிக்கிறார்கள்.
உல்டாக் காட்சிகள், சத்யராஜின் குரல் மாடுலேஷன் மட்டுமே நகைச்சுவை ஆகிவிடாது என்பத்ற்கு ஒரு சரியான உதாரணம் இந்த இங்கிலீஷ்காரன்.
இங்கிலீஷ்காரன் - Accent சரியில்லை!
Aug 27, 2005
பெனாத்தல் சுரேஷ்- ஒரு தியாகி 27 Aug 05
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 9 பின்னூட்டங்கள்
Aug 24, 2005
சபிக்கப்பட்ட பூமி - சபித்தது யார்? 24 Aug 05
"கஞ்சி குடிப்பதற்கிலார் - அதற்கு காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்" - பீஹாரின் மௌனப் பெரும்பான்மையினர் பற்றி இதைவிடச் சுருக்கமாக விவரிக்க இயலாது.
கனிம வளம் நிறைந்த மாநிலம் - நிலக்கரி இன்னும் 200 ஆண்டுகளுக்கு அள்ள அள்ளக் குறையாது, பாக்ஸைட் (அலுமினியம்), மேக்னடைட் (இரும்பு) என்று திரும்பும் இடமெல்லாம் டைட்(நன்றி: சுஜாதா). இரும்பு, அலுமினியம் உருக்காலைகள், நிலக்கரி பதப்படுத்தும் வாஷரிகள். மண்ணில் போட்டால் பொன்னாய்த் திரும்பும் நில வளம், நீர் வளம். அழகான மலை வாசஸ்தலங்கள், ஏரிகள், 2000 வருடங்களுக்கும் மேற்பட்ட சரித்திரம் கூறும் பாடலிபுத்திரம், புத்த கயா போன்ற சுற்றுலாக் கவர்ச்சிகள் - இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இவற்றில் எல்லாம் கால்பங்கு கூட இல்லாத தமிழகம் போன்ற மாநிலங்கள் அடையாத வீழ்ச்சியை பீஹார் கண்டது ஏன்?
எனக்குத் தெரிந்தவரை, தமிழகத்தையும் பீஹாரையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்:
கல்வி: நாராயண் கூறுவது உண்மைதான் - பீஹாரிலிருந்துதான் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் உருவாகின்றனர். ஆனால், அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் தந்தையும் ஒரு ஐ.ஏ.எஸ்ஸாகத்தான் இருப்பார் - அல்லது எஞ்சினியர் அல்லது டாக்டர்-- படிப்பதற்கு படித்த வம்சத்தில் பிறந்திருப்பது மிக அவசியம்!
இது இந்தியா முழுமைக்குமான பிரச்சினை என்றாலும், தமிழகத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளையும் காண இயலும் - பீஹாரில் மிக அரிது.
கோல்-இந்தியா வின் எஞ்சினியர்கள் தங்கள் மகன்களை ஷிமோகாவிற்கும், சென்னைக்கும் அனுப்பி பொறியியல் படிக்க வைக்க, தொழிலாளிகளின் மகன்களின் வாழ்நாள் ஆதர்சம் பத்தாவது வகுப்பு முடித்து விட்டு 940-ல் ஹெல்ப்பராக பணி அமர்வதாகவே இருந்தது (940 - நிலம் கொடுத்தோர்க்கு வேலை கொடுக்கும் கோல்-இந்தியா சட்ட எண்)
அவர்களைக் குறை கூற முடியாது. 10000 பேர் வேலை செய்யும் ஒரு நகரியத்துக்கு அருகில் இருப்பது ஒரே ஒரு கல்லூரி, அதில் 300 இடங்கள், அதிலும் 100 நிரப்பப் படாமல் உள்ளன.
அண்ணப் பல்கலைக்கழகத் துணைவேந்தார் கூறுகிறார் - இந்தியா முழுமைக்குமான பொறியாளர்கள் தேவையில் தென்னிந்தியாவில் இருந்து 75 சதம் தயாராகிறார்கள் என்று.
எங்கே குறைபாடு? ஏன் பீஹாரில் சொல்லிக்கொள்ளும்படியான பொறியியல் கல்லூரிகள் இல்லையா? B I T - ராஞ்சி, ஜம்ஷெட்பூர், ரூர்கேலா என்று மிக அருகிலேயே தரம் வாய்ந்த கல்லூரிகள் இருந்தாலும் அவற்றில் இடம் பெறுவதற்கு இந்தியா முழுவதிலும் இருந்து போட்டி இருப்பதால் பீஹாரிகளால் உள்ளே நுழையக்கூட முடிவதில்லை. அரசாங்கமும், லஞ்சத்துக்கு அஞ்சும் தனியார்களும் புதுக்கல்லூரிகள் திறப்பதைப் பற்றி எண்ணுவதில்லை.
வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது பீஹாரைப் பொறுத்தவரை உண்மையே. அரசாங்கம் என்று ஒன்று இருப்பதைக் கூட அறியாமல் தெற்கு பீஹார் வாழ்ந்துகொண்டிருக்க, நடக்கும் ஒரு சில நலத்திட்டங்களும், உட்கட்டுமானப்பணிகளும் வடக்கு பீஹாரில் மட்டுமே நடந்தன, (இது 1999க்கு முன் இருந்த நிலைமை - அப்போது ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டிருக்கவில்லை)
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற இயக்கங்கள் இதற்கு எதிராக பல காலம் போராடி வந்தும், சீட்டுக் கணக்கு அரசியலில் குறைவான தொகுதிகளையே கொண்ட தெற்கின் குரல், சட்டமன்றத்தில் எடுபடவும் இல்லை.
மக்களின் அரசியல் அறிவு, தமிழகத்தை ஒப்பிடுகையில் பீஹாரில் மிகவும் குறைவு. தமிழ்நாட்டின் மூலையில் உள்ள சிற்றூரில் கூட, காலை வேலையில் டீக்கடையில் தினத்தந்தி வாசிப்பதைப் பார்க்க முடியும். நான் இருந்த ஊரில், கிடைக்கும் செய்தித்தாள்கள் "த டெலிக்ராஃப்", "ஆனந்த பஸார் பத்திரிக்கா" - இரண்டுமே கொல்கொத்தா பத்திரிக்கைகள் - வட்டாரச் செய்திகளோ, பீஹார் அரசியலோ இவற்றில் பார்க்க முடியாது. இவையும் இரண்டு நாள் கழித்துத்தான் கிடைக்கும். நியூஸ்பேப்பர் போடுபவர் காலையில் ட்ரெயின் பிடித்து 100 கி.மீ சென்று எடுத்து வர வேண்டும், அவர் கொஞ்சம் தூங்கி ட்ரெயினைத் தவற விட்டால் மூன்று அல்லது நான்கு நாள் பழைய செய்தியே கிடைக்கும். அதற்கும் யாரும் கவலைப்பட்டுப் பார்த்ததில்லை!
இது ஒரு Vicious Circle . படிப்பறிவு குறைவு, எனவே பத்திரிக்கை விற்பனை குறைவு. பத்திரிக்கை குறைவு எனவே அரசின் செயல்பாடுகள் மக்களைச் சென்றடைவது குறைவு. அரசு கவலைப்படுவதில்லை எனவே நலத்திட்டங்களும் குறைவு.. இப்படியே சென்றுகொண்டிருக்கிறது.
--தொடர்வேன்....
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 3 பின்னூட்டங்கள்
வகை அரசியல்
Aug 17, 2005
சிறுகதை - இரு சம்பவங்கள் 17 Aug 05
இருபது அடி உயரத்துக்கு நின்றுகொண்டிருந்த ராட்சத லாரியை முத்தமிட்டுக் கொண்டு நின்றது கிரேன். அதிலிருந்து தொங்கிக்கொன்டிருந்த வீலை "தம் லகாகே - ஜோர் லகாகே" என ஐலேசா பாடி உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார்கள் நால்வர்.
வீலை மாட்டியாகிவிட்டது. டயரை ஏற்றி டார்க் அடித்துவிட்டால் இன்றே வண்டியை ப்ரொடக்-ஷனுக்கு அனுப்பி விடலாம். எப்படியும் இரண்டு அவர் ஓட்டி(OT) பார்த்து விடலாம்.
"இத்ரீஸ், வர்மா சாஹப் தும்கோ புலாரஹா ஹே" என்று கத்தினான் ஜக்கேஷ்வர்,
இப்போ ஏன் கூப்பிடுகிறார்? பன்னிரண்டு வண்டி கணக்கு ஆகிவிட்டிருக்குமே? வேறெதாவது எதிர்பாராத ப்ரேக் டௌனா?
ஆஃபீஸை விட்டு வெளியே வெயிலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் குளிர் காய்ந்துகொண்டிருந்தார் வர்மா.
"புலாயா க்யா சாப்?" என்றேன்.
"ஆமாம்பா, அக்கவுண்ட் டிபார்ட்மெண்டிலே இருந்து நோட்டீஸ் வந்திருக்கு, ஓடி கட் பண்ணி இருக்காங்களாம் - உனக்கு, ஜக்கேஷ்வருக்கு, எல்லா ஃபோர்மேனுக்கும் இனிமே ஓட்டி கிடையாதாம்"
(இனிமேல் மொழிபெயர்த்து விடுகிறேன்)
'இது என்ன அநியாயமா இருக்கு சார்? காலையிலே இருந்து மாடு மாதிரி வேலை செய்யறோம், எங்க சம்பளத்த வச்சு காலம் தள்ள முடியுமா? ஓட்டியிலேதான் சார் பொழைக்கிறோம்"
"என்னப்பா பண்ணறது, மேலிடத்து முடிவு, நான் என்ன செய்ய முடியும்?"
"சரி, முயற்சி பண்ணி பார்க்கிறேன், ஆனா கஷ்டம்தான்."
"அது கிடக்கட்டும், என்ன ஆச்சு உன் பையன் ரிஸல்ட்?"
கேக்க மாட்டாருன்னு நினைச்சேன். "3 சப்ஜெக்ட்டுல போயிருச்சி சார்"
"பாஸ் பண்ண 940* லே இழுத்து போட்டிருக்கலாமே இத்ரீஸ். கொஞ்சம் கஷ்டப்பட்டு படிக்க சொல்ல கூடாதா?, எந்நேரமும் மசூதி வாசல்லெயே நாலஞ்சு பசங்களோட கெடக்குறான் - நான் கோயிலுக்கு போகும்போது பார்ப்பேன் - சகவாசத்த சரி பண்ண சொல்லு மொதல்லே."
என் முகம் மாறுவதை அவர் கவனித்து விட்டிருக்க வேண்டும்.
"சரி, அந்த டம்ப் பாடியை ட்ரெயிலரில் இருந்து இறக்கறாங்க, கொஞ்சம் போயிப் பாரு. வீல் மாட்டியாச்சில்ல?"
"சரி சார்"
கேண்டீன் சந்து வழியாக, கீழே சிந்தி இருந்த ஆயில் தேங்கலைத் தவிர்த்து மெயின்டெனன்ஸ் கொட்டகையைத் தாண்டி எரெக்-ஷன் யார்டுக்கு வந்து பார்த்தால் குளறுபடி செய்து வைத்திருந்தான் ராம்லால்.
"யாருப்பா ஸ்லிங் போட்டது, 25 டன் பாடி, இந்த சின்ன ஸ்லிங் தாங்குமா? டபுளா போட்டிருக்க வேணாமா?"
"எறக்கி கீழேதான வைக்கணும், வண்டியிலே மாட்டப் போறதில்லேயே" என்று அலட்சியமாக ராம்லால் கூற, எனக்கு கோபம் வந்தது.
"கீழே வுட்டன் ப்ளாக் ஆவது ஒழுங்கா கொடுத்தீங்களா?" என்று குனிய, ஸ்லிங் அறுந்தது.
ஆறு அடி உயரத்திலிருந்து 25 டன் இரும்பு, மரக்கட்டையை சரி செய்துகொண்டிருந்த என் வலது கை மேல் விழ,
மயக்கம் அடையும் முன் கிரேனை உயர்த்தச் சொல்லி ராம்லால் பதட்டத்துடன் கத்துவது காதில் விழுந்தது.
******************************************************************************
தூக்கமும் விழிப்புமாக எத்தனை நாள் கடந்தது எனச் சரியாகத் தெரியாத நேரத்தில், கனவா நிஜமா எனத் தெரியாத குரல்கள்...
"தப்பிச்சான்டா - கொஞ்சம் உள்ள போயிருந்தா எலும்பு கூட கெடச்சிருக்காது"
" எவ்வளவு ரத்தம் போச்சு! நல்லவேளை டிரைவர் ரொம்ப ஃபாஸ்ட்டா ஜீப்பை ஓட்டிக்கிட்டு வந்தானோ பொழச்சான்"
"வொர்க் ஷாப்பிலே இருந்த அத்தனை பேருமேவா ரத்தம் கொடுத்தாங்க?"
"ஆமாம் - அவ்வளவு தேவை இல்லதான், ஆனாலும் அன்னிக்கு மட்டும் ஒரு நாப்பது யூனிட் ரத்தம் எடுத்தாங்க"
"ராம்லால் குரூப் மட்டும்தான் சேர்ந்ததாமே?"
"கையைக் கொண்டு வந்திருந்தா சேத்து இருக்கலாம்னு டாக்டர் சொன்னாராமே?"
அப்போதுதான் உணர்ந்தேன், வலது பக்கம் முழங்கைக்கு மேலே இருந்த பெரிய கட்டையும், முழங்கைக்கு கீழே ஒன்றும் இல்லாதது போன்ற ஒரு உணர்வையும்.
*************************************************************************
கை இல்லாதது பழகிப்போய் விட்டது. இன்னும் ஒரு மாதம்தான் லீவு பாக்கி இருக்கிறது.
வர்மா சாப் வந்தபோது சொன்னது வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
"உனக்கு வேலை போகாது. ஆனால் அண்டர்கிரௌண்ட் சுரங்கத்தில் ட்ரிப் மேனாகத்தான் போட முடியும் - அங்கேதான் உனக்கு கடினம் குறைவான வேலை."
"ஆனா சார், அங்கே வரும் மீத்தேனை சுவாசித்தால் எனக்கு ஆஸ்த்மா அதிகமாகி விடுமே"
"எல்லாம் பேசிப் பாத்தாச்சுப்பா, வேற வழி இல்லை - உன் பையன் டிகிரி முடிச்சிருந்தா சுலபமா உன் வேலைய அவனுக்கு கொடுத்திருக்கலாம் - என்ன பண்ணரது சொல்லு?"
****************************************************************************
ரேடியோவில் கேட்கும் செய்திகள் ஒன்றும் சரியாக இல்லை. நாடெங்கும் கலவரமாம் - இந்துக்கள் முஸ்லிம்களை வெட்டுகிறார்களாம், இவர்கள் பதிலடி கொடுக்கிறார்களாம்.
நேற்றுக்கூட பக்கத்து ஊரில் கலவரமாம், இந்து குடிசைகளை யாரோ எரித்து விட்டார்களாம். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறதாம்.
நள்ளிரவில் இங்கொன்றும் அங்கொன்றுமாக வேட்டுச்சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது,
என் மகன் வெளியே நண்பர்களுடன் அடித்தொண்டையில் பேசிக்கொண்டிருந்தான்.
"வெக்கணும்டா அவனுங்களுக்கு வேட்டு. நம்மளை என்ன சொங்கின்னு நெனச்சுட்டானுங்களா?"
"நேத்து ராஞ்சியிலே பூட்டி சௌக்கிலே ஒரு குடும்பத்தையே வெட்டிப் போட்டிருக்கானுங்க"
"கார்ட்டா டோலி பக்கம் நெருங்க முடியாதுல்லே அதுதான்"
"சும்மா விடக்கூடாதுடா இவனுங்களை - நம்ம ஆளுங்களை கூட்டிக்கிட்டு வாங்க, இன்னிக்கும் கெளம்பிடுவோம்"
எனக்கு என்னவோ புரிந்தது போல் இருந்தது.
"பஷீர் - இங்க வா" என்றதும் அதிர்ந்து
"வாப்பா, கேட்டுகிட்டா இருந்தீங்க?" என்றான்.
"நீங்கதானா அந்த குடிசைங்களை எரிச்சது?" என்றேன் கோபமாக.
"அது உங்களுக்குத் தேவை இல்லாத விஷயம் - பேசாம வீட்டுக்குள்ளெயெ கெடங்க"
"டேய் வேணாம்டா போகாதடா, பழி வாங்குறதுலே எந்த அர்த்தமும் இல்லயடா" என்பத்ற்குள் வெளியேறி விட்டார்கள்.
************************************************************************
இவ்வளவு நேரம் ரேடியோவிலும் வாய்மொழியாகவும் கேட்ட கலவரம் இப்போது என் நெஞ்சிற்குள்.
காதுகளை கதவு தட்டப்படும் சத்தத்திற்காக தீட்டி வைத்தது வலித்தது.
வெளியே போகவும் முடியாது, இந்த ஒற்றைக்கையை வைத்துக்கொண்டு வேகமாக ஓடவும் முடியாது.
காலை விடியத் தொடங்கிய நேரத்தில் மகனின் நண்பன் இஸ்மாயில் கதவைத் தட்டினான்.
"வாப்பா - மோசம் போயிட்டோம் வாப்பா"
"நாங்க வருவோம்னு தெரிஞ்சு அவங்க தயாரா இருந்தானுங்க - பஷீர் மொதல்ல வீட்டுக்குள்ள போயி மாட்டிக்கிட்டான் - கழுத்துலேயே போட்டுட்டானுங்க"
தவமிருந்து பெற்ற ஒற்றைப் பிள்ளை..
"யாருடா வெட்டினது" என்றேன் அனல் பறக்க.
"வொர்க்-ஷாப் ஃபோர்மென் ராம்லால்தான் மொதல்லெ வெட்டினான்"..
*********************************************************************************
பி.கு இது பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்ட உண்மைக்கதை. யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. அவ்வாறு நேர்ந்தால் அது தற்செயலே.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 28 பின்னூட்டங்கள்
Aug 16, 2005
மங்கள் பாண்டே - the Rising??????
விடுமுறை தினம் என்றாலே , சாலமன் பாப்பையாவையும், ராஜாவின் பிற்போக்கு நகைச்சுவையயும், படையெடுத்து வாழ்த்துச் சொல்லும் திரைக் கலைஞர்களின் கருத்துச் சிதறல்களையும், இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறைப் படங்களையும் இருவேறு தொல்லைக்காட்சிகளில் (சன், ஜெயா) பார்த்து ரசித்து(?!)முடித்த பின்னால்தான் எத்ற்காக விடுமுறை என்று நாட்காட்டியைப் பார்த்து தெரிந்து கொள்வேன்.
நேற்றும் அப்படித்தான். ஆனால் சுதந்திர தினமாயிற்றே என அருகில் இருந்த திரைச்சாலையில் மங்கள் பாண்டே படம் பார்த்தேன். படம் பார்த்து முடித்த கையோடு விமர்சனம் எழுதும் முன் தமிழ் மணத்தை திறந்து ஒரு ரவுண்டு விட்டால், இந்த விமரிசனம்.
நான் சொல்ல நினைத்த அதே விஷயங்களை, இன்னும் கொஞ்சம் நகைச்சுவை தடவி, கதையையும் சொல்லி (எனக்கு கதையை எழுதும் வேலை மிச்சம்) எழுதி இருக்கிறார் சுவடு ஷங்கர்.
படம் முடிந்தபின் மனதில் நிற்கும் சில கேள்விகள்:
நாலு வருஷம் உழைத்து, இழைத்து தயாரிக்கப்பட்ட மங்கள் பாண்டே ஏன் இவ்வளவு தட்டையான, ஒரு பரிமாண பாத்திரப்படைப்பாக இருக்கிறது?
கொழுப்பைக் கடித்து விட்டதால் அசூத் என தன்னைத்தானே நினைத்துக்கொள்ளும் பாண்டே ஏன் அதற்குப் பிறகும் துப்புரவுதொழிலாளியிடம் இருந்து விலக வேண்டும்?
பாண்டேவின் கலகத்துக்கு காரணம் கொழுப்பா அல்லது ஆசாதியா - படம் பார்த்தபின் எனக்குத் தோன்றும் எண்ணம் - இவை இரண்டும் இல்லை, தீண்டத் தகாதவன் ஆகிவிடுவோம் என்ற பயம்தான்!
நானா சாஹேப், டில்லி பாட்ஷா, ஜான்ஸி லக்ஷ்மிபாய் போன்றோரை பாண்டே நம்புகிறானா இல்லையா - ஆசாதி, மக்கள் ஆட்சி போன்ற வீர வசனங்கள் பேச மட்டும்தான் அவர்களை எதிர்ப்பது போன்ற காட்சி அமைப்பு பயன் பட்டிருக்கிறது.
அமிஷா பட்டேலை சதிமாதா ஆக்க நினைத்த கும்பல் என்ன ரெண்டு அம்பை மட்டும் விட்டு பின் அம்பேல் ஆகி விடுகிறது? கோர்டான், சதியை எதிர்க்க நினைத்தாரா இல்லை 'ஃபிகர் சூப்பர்" என்று டாவு கட்ட நினைத்தாரா?
ஓம் புரியின் வாய்ஸ் ஓவர் - நிச்சயமாக எரிச்சல் ஊட்டிய சில விஷயங்களில் ஒன்று. அமிதாப்பின் லகான் வாய்ஸ் ஓவர் அளவாக இருந்து திரைக்கதை நகர்தலுக்கு உதவியாக இருந்தது. இங்கே யார் இங்க்லீஷ் பேசினாலும் ஓடி வந்து துபாஷி வேலை செய்கிறார் ஓம் புரி! கடுப்பு.
பாடல்கள் - தனியாகக் கேட்டால் நன்றாக இருக்குமோ என்ற தோற்றத்தை தியேட்டரிலும், படத்துடன் பார்த்தால் நன்றாக இருக்குமோ என்ற தோற்றத்தை தனியாகக் கேட்கும்போதும் ஏற் - படுத்துகின்றன.
ஆமிர் கான் மற்றும் அனைத்து நடிகர்களின் நல்ல நடிப்பு, 100 கோடி செலவில் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள், மெனக்கெட்டிருப்பது தெரியும் அரங்க அமைப்பு, காஸ்ட்யூம்கள் எல்லாம் - டாகுமெண்டரித்தனமான திரைக்கதையால் வீணடிக்கப்பட்டிருக்கின்றன.
படம் நிச்சய்மாக எதிர்பார்ப்பிற்கு வாழவில்லை! (not living upto the expectations!)
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 1 பின்னூட்டங்கள்
Aug 10, 2005
வன்முறையா அஹிம்சையா - பாஞ்சாலி சபத மோசடி! 09 Aug 05
நல்ல வேளை, பாரதியார் பாஞ்சாலி சபதத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டு விட்டார். அவர் மட்டும் இன்றைய சூழலில் அதை வெளியிட்டிருந்தாரென்றால் - எப்படிப்பட்ட விமர்சனங்களை அவர் சந்தித்திருக்க வேண்டும் - நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
வன்முறையா அஹிம்சையா - பாஞ்சாலி சபத மோசடி!
பிணி (பினாத்தல்களின் சுருக்கம்)
தமிழ் எழுத்துலகின் ஒரு புனித அடையாளம் - பாரதியார்.
அவர் எழுதி இருக்கிற "பாஞ்சாலி சபதம்" வேறு யாரால் எழுதப்பட்டிருந்தாலும் கிழித்து வீசி எறியப் பட்டிருக்கும். ஆனால் எழுதியது பாரதியார் என்பதாலேயே வெண்சாமரங்கள் வீசப்பட்டிருக்கிறது. இன்னும் பிரிட்டிஷ் மற்றும் ஃப்ரெஞ்ச் அரசாங்கங்கள் மட்டும்தான் வாழ்த்தவில்லை. இவர் ஆதரவு அவர்களுக்கும் தேவை என்றால் அதுவும் நடந்திருக்கும்.
ரோட்டோரம் பாட்டு பாடுகிறவன் கூட தேச விடுதலையைப் பற்றி பாடல் பாடிக்கொண்டிருக்க, இவர் அந்தக் காலத்து மஹாபாரதக் கதையை 'உல்டா" செய்து வெளியிடுகிறார். எவ்வளவு பொருள் செலவு, வீண் விரயம்?
இதற்கு காந்தீயவாதிகளான சிதம்பரம் பிள்ளை போன்றோர் பெருத்த ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு இதனால் எழக் கூடிய தர்மசங்கடங்களைப் பற்றிப் பார்ப்போம். இவருடைய பாஞ்சாலி சபதத்தில், பாஞ்சாலி அம்மாள் கூறுகிறார் - துரியோதனின் ரத்தத்தை தலையில் பூசிக் குளிப்பாளாம் - எவ்வளவு வன்முறை? அஹிம்சையை போதிக்கும் காந்தி வழிவந்தோர்க்கு இந்த வன்முறைக்கு ஆதரவு தெரிவிக்க முடியுமா?
பாடல் எழுதப் பட்டாகி விட்டது - அடக்கித்தான் வாசிக்க வேண்டும்.
போதக்குறைக்கு இந்த சபதத்தை நாத்திகர்கள் கூட வரவேற்கிறார்கள் - இது மஹாபாரதத்தின் மீது உள்ள அன்பா? பாரதியார் மீது உள்ள அன்பா?
இவர் எழுதிய கதையைப் பற்றிப் பார்ப்போம். மஹாபாரதம் என்பது, பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரசர்களைப் பற்றிய கதை என்கிறார்கள் கற்றோர். அப்படி பார்த்தால், விக்கிரமாதித்தன் கதையும், விஜயபுரி வீரன் கதையும் கூட பாஞ்சாலி சபதத்துக்கு சமம்தானே?
இவருக்குப் பின்னால் கவி எழுத வந்த பாரதி தாசன் போன்றோருக்கு வரவேற்பு அதிகமாகி வரும் நிலையில் வந்திருக்கிறது இந்த பாஞ்சாலி சபதம். இது பாரதியாரின் ஈகோ வெளிப்பாடே அன்றி வேறு என்ன?
பின்னால் வெளிவந்த ராஜாஜி மற்றும் சின்மயானந்தரின் மகாபாரதத்தில் மொத்த கதபாத்திரங்களைப் பற்றியும் எழுதப் பட்டிருக்க, இவர் மட்டும் கொஞ்சம் பாத்திரங்களைப் பற்றி மட்டுமே எழுதி, முழு பாரதக் கதையையும் எழுதி விட்டதாக பீற்றிக்கொள்கிறார்.
இந்தப் பாடல்கள் எழுதியதற்கு ஃப்ரெஞ்ச் அரசாங்கமும் உறுதுணையாக இருந்திருக்கிறது, அவருக்கு புதுச்சேரியில் வாழ இடம் கொடுத்து!
ஆனால், பாரதியாரின் ஏமாற்றல்களில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை - மஹாபாரதமே ஏமாற்றுக் கதைதானே?
இந்த நிலையில், இவர் மேலும் புராணப் பாடல்களை எழுத வேண்டும் எனவும் ஆத்திகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவற்றில் யார் யாரை ஏமாற்றப் போகிறாரோ?
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 13 பின்னூட்டங்கள்
வகை நக்கல்
Aug 7, 2005
மேக்கிங் ஆஃப் இந்த வார நட்சத்திரம் 07 Aug 05
"உலகளாவிய தமிழ்வலைப்பதிவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் எழுதிவரும் வலைப்பதிவர்"-களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தமிழ்மணத்தார், தவறுதலாக என்னைத் தேர்ந்தெடுத்துவிட, எங்கே தவறைப் புரிந்துகொண்டு திருத்திக்கொண்டு விடுவார்களோ என்ற பயத்தில் உடனடியாக ஒத்துக்கொண்டுவிட்டேன்.
இந்த வாரப் பதிவுகளால் நான் அடைந்த நன்மைகள் மிக அதிகம். ஒரு முடிவில்லாத கன்வேயர் பெல்ட்டைப் போல (உதாரணம் நன்றி - அலைகள்) ஊர்ந்துகொண்டு, ஐந்து-ஆறு மணிநேரத்துக்கு மேல் சாஸ்வதமில்லாமல் போகும் பதிவுகளில் ஒன்றாக இருந்து, அதற்கு மேல் உயிர் பெற வைக்க பின்னூட்டங்களையும் மதிப்பீட்டு நட்சத்திரங்களையும் நம்பி இருந்த பினாத்தல்கள், கடந்த வாரத்தில், பக்கத்தின் மேல் பாதியில் நிலை பெற்று, ஒவ்வொரு பதிவும் 24 மணி நேர கவனிப்பைப் பெற்றது.
அதிக கவனம் பெறும், அதிக வாசிப்பைப் பெறும் என்ற 'Peer Pressure'னாலேயே நல்ல பதிவுகளைத் தர நானும் முயற்சித்தேன்.
ஒரு நாளுக்கு ஒரு பதிவு - என முடிவு செய்து, ஒவ்வொரு நாளும் வித்தியாசம் காட்ட முயற்சி செய்தேன்.
பீஹார் அனுபவங்களைப் பற்றிய முதல் பதிவை என் சொந்தக்கதையையும், பீஹார் முரண்பாடுகளையும் போட்டுக் குழப்பிவிட்டாலும், நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ச்சியாக நான் எழுத உள்ள 'சபிக்கப்பட்ட பூமி - சபித்தது யார்' என்னும் பதிவை எழுதவதற்கு ஊக்கமாகவும் பின்னூட்டங்கள் அமைந்தன.
சில மாதங்களாக நான் என் வகுப்புகளில் உபயோகப் படுத்திவரும் ஃப்ளாஷ் மென்பொருளின் சக்தியை அல்வாசிட்டி விஜய் நன்கு காட்டி வந்தார். அவரிடம் ஃப்ளாஷ்-ஐ ப்ளாக்கில் உபயோகிப்பது எப்படி என தொழில்நுட்ப உதவி பெற்று, கண்ணும் கண்ணும் நோக்கியா பதிவைச் செய்தேன். இதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது என்றாலும், சூப்பர் ஹிட் செல்லக்கிளி தான்! இந்த இரண்டு பதிவுகளும் பெற்ற வரவேற்பு, நகைச்சுவை நக்கல் மற்றும் நையாண்டிக்கு என்றுமே மவுசு குறையாது என உணர்த்தின.
ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டது திருவாசகம் பதிவிற்குத்தான். திருவாசகம் இசை என்னை எந்த அளவிற்கு ஈர்த்ததோ, அதே அளவுக்கு அதைப் பற்றி வெளிவந்த நியாயமற்ற விமர்சனங்கல்மேல் வெறுப்பும் வந்தது. புற்றில் வாழ் அரவும் அஞ்சேன் வடிவில் விமர்சனங்களுக்குப் பதில் எழுதலாம் என்று முனைந்தால், இறண்டு பாக்களுக்கு மேல் எழுதமுடியவில்லை. அப்புறம்தான் வாராது வந்த மாமணியாய் - கிடைத்தது ஞாநியின் விமர்சனம் - எனக்கு ஆறு பாக்கள் எழுத விஷயம் கிடைத்து விட்டது!
எல்லாரும் பிறந்தகப் பெருமை எழுத, வேலூர்க்காரர்கள் (வேலூருக்கு ஒரு இழுக்கு என்றால் அது அருகே உள்ள சித்தூருக்கும் அல்லவா? சித்தூர்க்காரர்கள் கவனிக்க) தங்கள் ஊரைப்பற்றி மௌனம் சாதிப்பது பொறுக்காமல் நேற்றைய வேலூர் பதிவு.
நன்றி சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே போகலாம் -
தமிழில் எழுத, இணையத்தில் பதிக்க ஆர்வத்தை உண்டு செய்து , ப்ளாக்கர் கணக்கு தொடங்கி வலைப்பூ காணும்வரை எளிய தமிழில் விளக்கிய "தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் வாருங்கள்" கட்டுரைகளுக்கு நன்றி.
தமிழ் எழுத்துரு முதல் கலப்பை உபயோகித்தல், யூனிகோடின் தாத்பர்யம், எந்தப் படம் குறைவான அளவெடுக்கும் என்னும்படியான டிப்ஸ், எப்படி வார்ப்புருவை மேம்படுத்துவது, எப்படி படங்களை உள்ளிடுவது போன்ற தொழில்னுட்ப விளக்கங்களை அள்ளிக்கொடுத்த பல பதிவுகளுக்கு நன்றி (ஒவ்வொன்றையும் தேடி சுட்டி கொடுக்க ஆசைதான் - ஆனால் நேரமில்லை)
புதிய பதிவர்களைத் தேடி, படித்து, அவர்களுக்கு ஊக்கமூட்டிய வலைப்பூக்கள் - எனக்கு நவன் கொடுத்த அறிமுகமும், அதைத் தொடர்ந்த பதிவுக்கு கோபி கொடுத்த விமர்சனமும்தான் என்னையும் சிலர் படிக்கிறார்கள் என்ற எண்ணத்தை உண்டுபண்ணி தொடர்ந்து பதிய ஊக்கமாகவும் இருந்தது- அவற்றுக்கு என் நன்றி.
விமர்சனங்கள் இல்லாத எந்தக் கலைவடிவும் வளர்ச்சி அடைவதில்லை. குழந்தைகள் படிக்கறதுதானே என்று விமர்சனங்கள் செய்யப் படாததாலேயே 'அம்புலி மாமா" நாளுக்கு நாள் தரம் தாழ்ந்து வருகிறது. மெகாத் தொடர்கள் விமர்சகர்களால் ஒதுக்கி வைக்கப் பட்டதாலேயே மட்டமான தொடர்களே 24 மணி நேரமும் தொடர்கின்றன.
ஆனால், வலைப்பூக்களுக்கு இந்த நிலை ஏற்படாது. பதிந்த பத்தாவது நிமிடத்திலிருந்தே விமர்சனங்கள், முதுகு சொறிபவையாக இல்லாமல், ஊக்கப்படுத்துபவையாக. கழித்துக்கட்டுபவையாக இல்லாமல் சுட்டிக்காட்டுபவையாக. ஆபாசப் பின்னூட்டங்கள் என்ற ஒரு ஆபத்து இருந்தாலும் அவை உடனடியாக அடையாளம் காணப்பட்டுவிடுவதால் பெரும்தொல்லை கிடையாது.
என்னை ஊக்கிய மற்றும் செதுக்கிய விமர்சனங்களுக்கும் நன்றி.
இதை முழுக்கப் படித்தவர் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:
இந்த வாரம் எப்படி இருந்தது என வாரப்பதிவுகளில் பின்னூட்டமிட்டிருந்தாலும், இடாவிட்டாலும், இந்தப் பதிவுக்கு ஒரு பின்னூட்டம் கொடுத்து வருங்காலத்தில் என் பதிவுகள் எந்தத் திசையை நோக்கிச் செல்ல வேண்டும் என பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் - வாழிய பாரத மணித்திரு நாடு.
பி கு
55 டிகிரி வெய்யிலில் ஆரம்பித்த இந்த வாரம், 0-வுக்கும் குறைவான உறைநிலையில் முடிவடைந்திருக்கிறது.
மகிழ்ச்சியின் உச்சத்தில் நான்!
நாராயணன் வெங்கிட்டு வின் முயற்சி நிச்சயமாக நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருக்கிறது, இதுபோன்ற போட்டிகள் அதிகமாக வேண்டும் என்பது என் அவா.
நம்பிக்கை என்ற தலைப்பே எழுதத் தூண்டுவதாக இருந்தது, அருணின் நம்பிக்கைக் கவிதைக்கும், அவர் காட்டிய வழிக்கும் நன்றி.
எழுதியது முதலே ஊக்கப்படுத்திய சக வலைப்பதிவாளர்களுக்கு நன்றி.
வெற்றி பெற்ற ராஜ்குமார் மற்றும் காப்ஸ் க்கு வாழ்த்து.
பரிசுக்குத் தெரிவு செய்த வாதூலன் அவர்களுக்கும் தொடர்ந்து வாழ்த்தி வரும் தோழர்களுக்கும் வந்தனம்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 11 பின்னூட்டங்கள்
வகை அனுபவம், நட்சத்திரம்
Aug 6, 2005
ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே... 06 Aug 05
என் பிறந்தகப் பெருமையை இணையத்தில் பெரும்பாலும் காண முடியாது. வெளியே கூட, பல எதிர்மறைக் காரணங்களுக்காகவே பிரபலமான ஊர் என்னுடையது.
வெயில் காலத்திலும், ஜெயில் காலத்திலும் மட்டுமே பிரபலம் அடைந்து மற்ற நேரங்களில் கண்டுகொள்ளப்படாத ஊர்.
தஞ்சாவூர் பக்கத்தில் இருக்கும் குக்கிராமங்கள் கூட சில பிரபலங்களால் அறியப்பட்டிருக்க, பல பிரபலங்களைக் கொடுத்தும் (பெனாத்தல் சுரேஷ் உள்பட)ஊர் பேரை அந்தப் பிரபலங்கள் வெளிப்படுத்த விரும்பாமையினாலோ என்னவோ வெளிச்ச வட்டத்தில் எங்கள் ஊர் காணப்படவில்லை.
இன்னும் கொஞ்சம் குறிப்புக்கள் கொடுக்கிறேன், கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்.
இருக்கும் சில சிறு விஷயங்களால் பல சிற்றூர்கள் பெருமை பெற்றிருக்க, எங்கள் ஊரின் பெருமைகள் ஏழு 'இல்லாதவை"களால் காணப்படுபவை.
1. மரங்கள் இல்லாத மலைகள்
2. தண்ணீர் இல்லாத ஆறு
3. மன்னன் இல்லாத கோட்டை
4. அதிகாரம் இல்லாத காவலர்கள்
5. மூர்த்தி (விக்கிரகம்) இல்லாத கோவில்
6. மற்றும் ..
--மற்றும்
தைரியம் இல்லாத ஆண்கள்
7. மற்றும்
--மற்றும்..
அழகு இல்லாத பெண்கள்!
கடுமையான வெயிலில் எங்கள் ஊருக்கு வந்த தேசத் துரோகியால் மட்டுமே இப்படிப்பட்ட "பெருமை"களைக் காண இயலும் என்றாலும் எந்த விதியோ இதுவே நிலைத்து விட்டது.. இவற்றில் எதுவுமே இன்று உண்மையில்லை என்பதும் உண்மை.
இன்னுமா கண்டுபிடிக்க முடியவில்லை? என் ஊர் :
--
--
வேலூர்
மொட்டை மலைகளுக்கும், நீர் இல்லாத ஆற்றுக்கும் (இன்று பெரும்பாலான தமிழக நதிகளில் இதே நிலைமைதான்), மன்னன் இல்லாக் கோட்டைக்கும் (மன்னராட்சி ஒழிக்கப்பட்ட இந்நாளில்) அதிகாரம் இல்லாக் காவலர்களுக்கும் (காவலர் பயிற்சிப்பள்ளி உள்ளதால்) நாங்கள் எதுவும் செய்ய முடியாது.
1980-ல் கோவிலில் மூர்த்தி ப்ரதிஷ்டை செய்யப்பட்டு விட்டது.
தைரியம் இல்லாத ஆண்கள்? சிப்பாய்க்கலகத்தின் முதல் வேர்கள் 1802-ல் ஊன்றப்பட்ட ஊரிலா?
அழகு இல்லாத பெண்கள்? மீனாக்ஷி சேஷாத்ரியை இந்தியாவுக்கு அளித்த ஊரிலா?
இருந்த போதும், இந்த அவதூறுகளை எல்லாம் மறுதளிக்காமல், அவற்றை புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டதே எங்கள் சகிப்புத்தன்மைக்கும் நகைச்சுவை உணர்வுக்கும் ஆதாரம்.
வேலூர் என்பதே வெளியில் பெருமையாக சொல்லிக் கொள்ள முடியாததாக இந்தப் "பெருமை"கள் செய்துவிட்டிருக்க, நான் படித்த கல்லூரியின் அமைவிடம் இன்னுமே கவலைக்கிடம் !
ஒரு புறம் - வேலூரின் புகழ்பெற்ற கிறித்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மனநலக் காப்பகம் (பைத்தியக்கார ஆஸ்பத்திரி சார்!)
மறுபுறம் - வேலூரின் இன்னொரு புகழ் - மத்திய சிறைச்சாலை!
கல்லூரியில் அனுமதி கிடைத்தவுடனே மகனின் (மகளின்) எதிர்காலம் இந்த இரண்டு புறக்காரணிகளாலும் பாதிக்கப் படாமல் இருக்கவேண்டுமே என்று ஏழுமலையான் முதல் எல்லை அம்மன் வரை அனைத்துக் கடவுள்களிடமும் நேர்ந்துகொள்வர் பெற்றோர்!
ஒரு அவசரத்துக்கு (?!) கட் அடித்துவிட்டு சினிமா செல்ல முடியாத தொலைவு. அருகில் உள்ள தியேட்டர்களின் (?!) திரை வண்ணப்படங்களைக் காணாத சபதம் பூண்டவை!
இருந்தாலும், அரசுக்கல்லூரி என்பதால் உள்கட்டுமானத்தில் எந்தக்குறையும் இல்லை, பெரும்பான்மை ஆசிரியர்களும் தொழில்பக்தி கொண்டவர்கள் என்பதால் கல்வித்தரத்திலும் குறை சொல்ல முடியாது.
எங்களின் முதன்மையான குணமான நகைச்சுவைக்கு அங்கே தீனிக்கும் குறைவே இல்லை.
இன்றும் கூட நினைவிருக்கும் சில சம்பவங்கள்:
புதிதாக (எங்கள் பேட்சிலிருந்துதான் ஆரம்பம்) பெண்களை அனுமதிக்க ஆரம்பித்ததால், முதல் ஆண்டு மற்றும் கடைசி ஆண்டு மாணவர்கள் ஒரே சிட்டுக்களை சைட் அடிக்கும் இழிநிலை! ஃபர்ஸ்ட் இயர் ஃபிகர் ஃபர்ஸ்ட் இயருக்கே என உரிமைப் போராட்டங்கள், கோஷங்கள்!
நடனப்போட்டி என்பது குத்து பாட்டுக்கள் ஆடுவதற்கே என்னும் ஆதார விதியை ஆட்டிப்பார்க்க நினைத்து, பரத நாட்டியம் ஆடத்துணிந்த பெண்ணை போகும் போதும் வரும் போதும் ஜதி சொல்லியே ஜகா வாங்க வைத்த இளைஞர்கள்!
காதல் வசப்பட்டு, கவிதைகள் எழுதிக்குவித்து காதலிக்கு அர்ப்பணித்ததும் அவள். கல்வி கற்க வேண்டிய நேரத்தில் கனவு காணக்கூடாது எனக் கருத்து சொல்ல, தாத்தாவுக்கு கொடுத்த ட்ராங்குவலைஸர்களை 30 விழுங்கி, 3 நாள் தூங்க மட்டுமே செய்து "பிழைத்த"பின், காதல் தோல்விக்கு அடிப்படை அம்சமான தாடி வளராததைக் குறித்து மட்டுமே கவலையில் ஆழ்ந்த நண்பன்!
கல்லூரித் தேர்தலுக்கு அரசியலில் ஊறிப்போன மாணவர்கள் பெயர் போட்டு போஸ்டர் தயார் செய்து, கல்லூரிக்கு எதிரே உள்ள மொட்டை மலையில் இடம் பிடித்து தயாராக இருந்த நேரத்தில், "அரியர்ஸ் உள்ளவர்கள் தேர்தலில் நிற்கக்கூடாது" என ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்த முதல்வர்! (தேர்தலில் நிற்கும் தகுதியே மூன்று நான்கு மாணவர்களுக்குத்தான் இருந்தது!)
இன்றைய பினாத்தல்களின் முன்னோட்டமாக, நாற்காலிகளின் மேலேறி "அன்பே.... இன்பம்" எனப் பாடி, உயர்ந்த காதல் காட்சிகள் என சினிமா ட்ரெயிலர் விட்ட உங்கள் உண்மையுள்ள! (yours truly!)
சொல்லிக்கொண்டே போகலாம் என்றாலும், இந்த கலாட்டா நிகழ்ச்சியை மட்டும் கூறி முடித்துக் கொள்கிறேன்..
ஒரு பெண்ணை மட்டம் தட்டக் காத்திருந்த மாணவன், விழா ஒன்றில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினான்.
கூட ஒரு தோழனை போர்வை போர்த்தி மேடைக்கு அழைத்து சென்று, "டியர் ஸ்டூடன்ட்ஸ், இது என் மனைவி"
"சமீபத்துலே இவளுக்கு தேமல் வந்து,அம்மை போட்டதோட மட்டும் இல்லாம, ஸ்கின் ப்ராப்ளம் என்ன என்ன உண்டோ அத்தனையும் வந்துடுச்சி!"
"அதனால இவள் முகம் ரொம்ப குரூரமாவும் ஆயிடிச்சி - எந்த அளவுக்கு குரூரம்னா, பாக்கறவங்க அத்தனை பேரும் உடனே மயக்கம் போட்டு விழுந்துடறாங்க"
அதனாலே இவளை நான் எங்கே கூட்டிப் போனாலும், போர்வை போத்தியே கூட்டிட்டுப் போறேன். இவளுக்கும் இதனால தன்னம்பிக்கை குறைஞ்சு போய், கஷ்டப்படுறா.
டாக்டர் கிட்டே கேட்டதற்கு, யாராவது ஒருத்தராச்சும் இவளைப் பாத்து மயங்காமல் இருந்தாலும், இவளோட தன்னம்பிக்கை திரும்பிடும்ன்றாரு.
யாராவது எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா ப்ளீஸ்!" என்றான்.
தொடர்ந்து சொல்லி வைக்கப்பட்ட தோழர்கள் வரிசையாக வந்து போர்வையை விலக்கி மயங்கி விழுந்தார்கள்!
"ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும் -- நீங்க வர முடியுமா ப்ளீஸ்" என்றான் மேற்படி பெண்ணை நோக்கி..
அவள் வந்து போர்வையை விலக்கிய நொடியில்,
--
--
--
--
--
--
போர்வைக்குள் இருந்த தோழன் மயங்கி விழுந்தான்!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 11 பின்னூட்டங்கள்
வகை நட்சத்திரம்
Aug 5, 2005
செல்லக்கிளி - the Preview 05 Aug 2005
தோழர் முகமூடி, தன் பதிவில் அன்னியனுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் ஓரளவு கூட மண்ணின் மைந்தனுக்கு அளிக்கப்படவில்லை என்று ஆதங்கப்பட்டிருந்தார்.
ஆஹா - ஒரு சக வலைப்பதிவாளரின் நியாயமான கோரிக்கைக்குக் கூட செவி சாய்க்கவில்லை என்றால் என்னிடம் கம்ப்யூட்டர் இருந்து என்ன பயன், கலப்பை இருந்து என்ன பயன், ப்ளாஷ்தான் இருந்து என்ன பயன்?
ஆனால் மண்ணின் மைந்தன் படம் பார்க்க முடியவில்லையே? (பார்க்கும் படியாகவும் இல்லையே என இடையே சொல்லும் நபர் சற்று அடங்கவும்!)
கழகக் கண்மணிகளுக்கு புத்துயிர் ஊட்டும் வண்ணமாக, கலைஞர் கதை, உரையாடல், பாடல்கள் எழுதி வெளிவர உள்ள "செல்லக்கிளி" படத்தின் சில காட்சி அமைப்புக்களையும், பாடல்களையும் நம்பத்தகாத வட்டாரங்கள் மூலம் அறியப்பெற்றேன்.
அவற்றை உங்களுக்கு அளிப்பதில் உள்ளபடியே பேருவகை அடைகிறேன் என்று சொன்னால் அது மிகை ஆகாது என்பதோடு, கீழே உள்ள ஃப்ளாஷ் படத்தை தமிழ்மணம் கூறும் நல்லுலகத்தார் பலமுறை பார்த்து, நாட்டு நடப்புக்களை அறிய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.. (இதுதான்பா இந்த செந்தமிழ்லே எழுதினா வர பிரச்சினை - வாக்கியத்தை முடிக்கவே மனசு வர மாட்டேங்குது.)
படத்தில் வரும் பாடல்களையும் நானே பாடி வலை ஏற்றிவிடலாம் என நினைத்தேன் - ஆனால், இரு தினங்களுக்கு முன் தான் என் குரல்வளத்தை உங்களிடம் காட்டி கொடுமைப்படுத்தினேன், மீண்டும் அதையே செய்ய நான் சாடிஸ்ட் கிடையாது.
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் - அட அது கூட முடியாவிட்டால் குறைந்தபட்சம் நட்சத்திரத்திலாவது குத்துவீர், பின்னூட்டமாவது தாரீர்!
தோழர்களே, எழுமின், விழிமின்! கண்ணம்மாவுக்கும் மண்ணின் மைந்தனுக்கும் ஆன கதி இந்த செல்லக்கிளிக்கு ஆகாமல் இருக்க பாடுபடுமின்!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 23 பின்னூட்டங்கள்
வகை சினிமா, நக்கல், நட்சத்திரம், ப்ளாஷ், விமர்சனம்
Aug 4, 2005
இளையராஜா அஞ்ச வேண்டிய ஆறு 04 Aug 05
முன் குறிப்பு: இளையராஜாவின் திருவாசகம், குறிப்பாக "புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்" பாடல் கேட்காதவர்களுக்கு இந்தப்பதிவு புரியாமல் போகக்கூடிய சாத்தியம் உள்ளது. ஒரு நடை கேட்டுவிட்டு, வலைப்பதிவுகளில் அதை பற்றிய விமர்சனங்களையும் படித்துவிட்டு வந்து விடுங்கள்.
அடே இது என்ன?
இதுதான் சிம்பனியில் திருவாசகமா?
அடேங்கப்பா - நல்லா இருக்கே?
அதுக்கு என்ன விமர்சனம் வந்திருக்கு?
ஒஹோ இவ்வளவு விமர்சனமா?
இதுக்கு நம்ம இளையராஜா பதில் சொன்னா எப்படி இருக்கும்?
"நல்ல தமிழினில் நான் பாட்டிசைத்து .."
சரியா வரலையே - மெட்டுக்கு பொருந்தலையே!
ஆங் - இது சரியா வரும்.. தான்னன்னா தனனா நானா..
ஏறிய செலவுக்கு அஞ்சேன் - இறங்கிடும் விற்பனைக்கஞ்சேன்
ஏச ஓர் காரணம் தேடி - எழுத்துக்குள் அர்த்தமும் தேடி
எம்பிரானைப் பாடும் பாட்டு ஏசுவை ஏசுதென்ற
எஜுகேட்டட் பேச்சைக் கண்டால் - அம்ம நாம் அஞ்சும் ஆறே. (1)
பேச்சுப்போல் கவிதைக்கஞ்சேன் - பெயர்த்திடும் உழைப்பிற்கஞ்சேன்
பேச்சையும் பாட்டுப்போலாக்கி பிடித்து அதை மெட்டில் வைத்தால்
பிசிறுதான் தட்டுதென்று - பெரியவர் சிறியோரெல்லாம்
பேசிடும் பேச்சைக் கண்டால் - அம்ம நாம் அஞ்சும் ஆறே. (2)
பைரசி திருடர்க்கஞ்சேன் - பரவிடும் MP3க்கஞ்சேன்
"இருட்டிலே பாட்டைக் கேளு - ஈரமாகும் கண்கள்" என்று
பாட்டினைக் கேட்கத்தானே பலநூறு விதிகள் போடும்
பண்டிதர் தனையே கண்டால் - அம்ம நாம் அஞ்சும் ஆறே. (3)
விமர்சனம் வரினும் அஞ்சேன் - அவர் வீசிடும் புழுதிக்கஞ்சேன்
விண்ணவர் பாடும் பாட்டை வீட்டிலே ஒலிக்கச் செய்தும்
வீதியில் செல்வோர் கூட விளங்கிட இலக்கியம் தந்தும்
விளம்பரம் அதிகம் என்றால் - அம்ம நாம் அஞ்சும் ஆறே. (4)
இசைத்திட்ட அன்னியர்க்கஞ்சேன் - இறைமறுக்கும் மக்கட் கஞ்சேன்
"ஈழத்துக் காசை நோக்கி ஈசன்மேல் பாடல் இசைத்தேன்
இசையிலே பின் தங்கிவிட்டேன் - ஈகோவால் இசைத்தேன்"
இதுபோன்ற பேச்செலாம் கேட்டால் - அம்ம நாம் அஞ்சும் ஆறே. (5)
ஆயிரம் தோல்விக்கஞ்சேன் - ஆபாசப் போட்டிக்கஞ்சேன்
அருள்தரும் பாட்டுப்போட்டு -ஆதரவு தேடி நின்றால்
"அரசுதான் அள்ளித்தருது - ஆரவாரம் அதிகம்" என்ற
அவதூறு அனைத்தும் கண்டால் - அம்ம நாம் அஞ்சும் ஆறே. (6)
பின் குறிப்பு:
இளையராஜாவின் "திருவாசகம்" விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என நான் நினைக்கவில்லை - (எதையுமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என நான் நினைப்பதில்லை). ஆனால் விமர்சனங்கள் கொடுக்கப்பட்ட இசை வடிவத்தைப் பற்றியதாய் இருக்க வேண்டும், இளையராஜாவின் பின்புலத்தையும், நோக்கங்களையும் விமர்சிப்பதாய் இருக்கக் கூடாது என்பது என் தாழ்ந்த அபிப்பிராயம்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 16 பின்னூட்டங்கள்
வகை சினிமா, நட்சத்திரம், விமர்சனம்
Aug 3, 2005
பாட்டு பாட வா - மெட்டு போட வா 03 Aug 05
அருமையான பாட்டு.. என் ஐயப்பாட்டை தீர்த்து வைத்து, அற்புதமான கருத்துக்களையும், எழுதிய கவிஞரின் ஆழ்ந்த மொழி அறிவையும் வெளிப்படுத்திய பாடல்.
ஒவ்வொரு வரியிலும் பல அடுக்குகளாக அர்த்தங்கள் விரிந்து கிடக்கிறது.
ரொம்ப வளர்த்துவானேன் - இதுதான் அந்தப் பாடல் -
கண்ணும் கண்ணும் நோக்கியா - நீ
கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்புசினோ காப்பியா - ஸோஃபியா..
கண்ணில் உள்ள அதே தொழில்நுட்பத்தில் தயாரானதுதான் கேமரா மொபைலில் உள்ள கேமரா என்பதிலிருந்து, மாஃபியாவுக்கும் காப்புசினோவுக்கும் உள்ள தொடர்பையும், வித்தியாசங்களையும் பல காலம் படிமக்கவிதை படித்து இருண்மை நீங்கிய வாசகர்களால் மட்டுமே உணர முடியும்!
இந்தப் பாடலில் எனக்கு ஒரே ஒரு குறைதான் - பாடல் அமைந்த மெட்டு. மன்னரும், ஞானியும், தென்றலும் புயலும் வளர்த்த தமிழ் திரை இசையில் ஒரு பாட்டுக்கு ஒரே மெட்டுத்தானா உண்டு?
புறப்பட்டேன், சந்தித்தேன் அனைத்து இசைஞர்களையும், மெட்டு வாங்கினேன் இந்த காலத்தால் அழியாக் கவிதைக்கு.
கீழே உள்ள ஃபிளாஷில், எந்த இசை அமைப்பாளர் வேன்டுமோ அவர் மேல் எலிக்குட்டியை அழுத்தி (அட - க்ளிக்குப்பா) இசை வெள்ளத்தில் அமிழ்க!
இதிலும் ஒரு சிறு பிரச்சினை - தம்பி பாலு மற்றும் ஹரியும் அவசர காரியமாக வெளி ஊர் சென்றுவிட்டதால், அவர்கள் குருவாகிய நானே பாடிவிட்டேன்!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 18 பின்னூட்டங்கள்
வகை நக்கல், நட்சத்திரம், புனைவு
Aug 2, 2005
Bihar - ஒரு முரண்பாடுகளின் மூட்டை 02 Aug 05
பத்தொன்பது வயதிலே நீங்கள் என்னவெல்லாம் செய்திருப்பீர்கள்?
படிப்பின் இடையிலே கட்டடித்து சினிமா போயிருப்பீர்களா?பஸ் ஸ்டாப்பில்
குயில் வரும் நேரங்களைக் கணக்கெடுத்திருப்பீர்களா?
உங்கள் முதல் காதல் கவிதையை எழுதி இருப்பீர்களா?
கும்பல் கூடி "பழம்"களை கிண்டல் அடித்திருப்பீர்களா?
சபிக்கப்பட்ட என்னுடைய இளமைக் காலத்தைப் பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்:
அப்போதைய பீஹாரில், ராஞ்சியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில், நிலக்கரிச் சுரங்கங்களுக்கும் அனல்மின் நிலையத்தின் பறக்கும் சாம்பல்களுக்கும் இடையில், தொலைக்காட்சி, தொலைபேசி,பெண்வாடை எதுவும் இல்லாத ஒரு நகரியத்தில் என் ஆறு வருடங்கள் கழிந்தன.
இறந்தாலும், இருந்தாலும் ஊருக்கு நாலு நாள் கழித்துத்தான் தெரியும்.
தற்காலிக நிரந்தரமாக (semi-permanent-ஐ தமிழில் எப்படிச் சொல்வது?) எனது நிறுவனத்தால் கோல் இந்தியா விற்கு தத்துக் கொடுக்கப்பட்டு, Caterpillar தயாரித்த ராட்சத இயந்திரங்களைப் பராமரித்து, பாகம் பிரித்து பழுது பார்த்து, பஞ்சர் ஒட்டி பாடாய்ப் படும் வேலை. பிரச்சினை பெரிதாகாத வரையில் இருக்கிறேனா செத்தேனா என்று கவலைப்படாது என் நிர்வாகம். கோல் இந்தியா அதிகாரிகளுக்கும் இயந்திரங்கள் ஓடும் வரை என்னைப்பற்றிய கவலை இருக்காது.
கவலை இல்லாத, வேலைகள் இல்லாத, பொழுதுபோக்கற்ற தனிமை எவ்வளவு பெரிய கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே விளங்கும்.
நான் பார்த்த வரையில், பீஹார் ஒரு முரண்பாடுகளின் மூட்டை.
வெள்ள நிவாரண நிதிக்கு சம்பளத்தில் இருந்து நூறு ரூபாய் பிடிப்பதை "நான் ஏன் கொடுக்க வேண்டும்" என் எதிர்த்த ஒரு தொழிலாளி, நான் கண்டதைத் தின்று டீ-ஹைட்ரேஷன் ஆகி ஆஸ்பத்திரியில் இருந்தபோது மூன்று நாட்கள் கூட இருந்து பணிவிடை செய்தான்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் - எல்லாம் சும்மா! பீஹாரில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் 90% எஞ்சினியர்கள் உ.பி, மேற்கு வங்காள்த்திலிருந்து - 90% உழைப்பாளிகள் பீஹாரில்- இருந்து! இருப்பினும், அந்த பத்து சத பீஹாரி எஞ்சினியர்களுக்கு ஜாதீயக் காரணங்களுக்காக தொழிலாளிகள் மதிப்பதில்லை! ஆனால் வெளி மாநிலத்தாருக்கு மரியாதையே தனிதான் (எந்த ஜாதியாக இருப்பினும்)
எழுதப் படிக்கத்தெரியாதவன் டிரெயினில் செல்லும்போது டிக்கெட் எடுத்துவிட, எல்லாம் படித்த மேதைகள் டிக்கெட் எடுக்கமாட்டார்கள் - டிக்கெட் செக்கர் வந்தால் நான் ஸ்டுடன்ட், நான் எஞ்சினியர் என்று காரணம் சொல்வார்கள், அல்லது இரண்டு ரூபாய் கொடுத்து செக்கர் வாயை அடைப்பார்கள்.
வாரம் ஒருமுறை ஏதாவது காரணம் சொல்லி வேலை நிறுத்தமும் சாலை மறியலும் செய்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஜீவ் கொலை செய்யப்பட்ட நேரத்தில், தமிழர்களுக்கு எதிராக புறப்பட்ட கும்பலை அடக்கி பிரச்சினை பெரிதாகாமல் அடக்கியது. (நான் நாலு நாள் வீட்டை விட்டு வெளியேறவில்லை!)
வேலை செய்யும் போது அடிபட்ட ஒரு தொழிலாளிக்கு ரத்தம் கொடுக்க நூறு பேர் முன்வந்தார்கள். ஆறு மாதம் கழித்து நடந்த மதக் கலவரத்தில் முன்பு அடிபட்ட தொழிலளியின் மகனை - மாற்று மதம் என்ற ஒரே காரணத்துக்காக - அதே தொழிலாளிகள் - நடு சாலையில் வெட்டிப் போட்டார்கள்!
எல்லாவற்றுக்கும் சிகரமாக, ஒரு நாள் என் வீட்டில் உணவு உண்ண வந்திருந்த ஒரு தொழிலாளி, "அய்யய்யோ உங்கள் வீட்டில் வந்து சாப்பிட்டு விட்டேனே - தயவு செய்து யாரிடமும் சொல்லி விடாதீர்கள்" என்றான்.
ஏன் எனக் கேட்ட எனக்கு அவன் அளித்த விளக்கம், தமிழ்நாட்டில் நான் கேள்வி மட்டுமே பட்டிருந்த தீண்டாமைக் கொடுமையின் முழு வீச்சையும் உணர வைத்தது.
பல்வேறு மாநிலத்து மக்களும் வாழும் நகரியக் கலாசாரத்துக்குள்ளேயும் ஊடுருவி இருந்த ஜாதிக் கட்டமைப்பு அருவருக்க வைத்தது.
இன்றும் செய்தித்தாளில் பீஹார் - ஜாதிக்கலவரங்கள் - மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை - அரசியலும் ஆதிக்க வெறியும் அடங்கும் வரை.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 13 பின்னூட்டங்கள்
வகை அரசியல், நட்சத்திரம்
Aug 1, 2005
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி 01 Aug 05
புதுப்படம் வெளிவராத நேரத்தில் டப்பிங் படம் போட்டு தியேட்டரை நடத்துவதில்லையா?
அறுசுவை உணவே தினம் சாப்பிட்டவன் ஒரு மாறுதலுக்கு பத்திய சாப்பாடு சாப்பிடுவதில்லையா?
கடலை எண்ணெய் தயாரிக்கும் செக்கில் வேலை இல்லாதபோது வேப்பெண்ணெய் ஆட்டுவதில்லையா?
கனமான புத்தகம் படித்தவன் ஆசுவாசப் படுத்திக்கொள்ள கிசு கிசு படிப்பதில்லையா?
அதுபோலத்தான் - இந்த வார நட்சத்திரம் - பினாத்தல்கள்!
நிஜமான நட்சத்திரங்கள் தங்கிப்போன இந்த 'தமிழ்மண"ச் சத்திரம், இந்த வாரம் நட் - சத்திரமாக மலர்கிறது.
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் பொழிகிறது..
தமிழ்மணத்துக்கு கிடைத்து வரும் உங்கள் (என்) ஏகோபித்த ஆதரவை இந்த ஒரு சிறு தவறுக்காக குலைத்துவிடவோ, குறைத்துவிடவோ செய்துவிடாதீர்கள்.
என்னுடைய வழக்கமான பதியும் வேகத்தில் (வாரம் ஒருமுறை) இந்த வாரம் செய்ய முடியாது. தினம் ஒரு பதிவாவது போட வேண்டும்.
ஒரு சிறு பிரச்சினை - மற்றவர்கள் நட்சத்திரமாக இருந்த காலங்களில் தமிழ்மணத்தை 20 நொடிக்கு ஒருமுறை F5 செய்தவண்ணம் வேலைப்பளுவோடுதான் இருப்பேன்..
ஆனால், அமீரக வாழ்க்கையில் முதல் முறையாக கொடுத்த சம்பளத்துக்கு வேலை செய்ய இந்த வாரம்தான் வாய்ப்பு! திங்கள் செவ்வாய் இரு நாளும் நூறு கிலோ மீட்டர் தள்ளி பாலைவன மத்தியில், 55 டிகிரி (செல்சியஸ்தான்!)கடுங்குளிரில் வேலை!
அவசரப்பட்டு மகிழ்ச்சி அடைந்து விடாதீர்கள்.. மதுரைக்கு வந்த இந்த சோதனை இரண்டே நாட்களில் விலகி விடும்.
என்ன செய்யலாம் இந்த வாரம்?
நெட்டைக் குடைந்து புதிது புதிதாக விவரங்களைக் கொடுக்கப் போவதில்லை - அதற்கான பொறுமை இல்லாததால்.
இருத்தலியல், போஸ்ட் - மாடெர்னிஸம், க்யூபிஸம் பற்றியெல்லாம் எதுவும் எழுதப்போவதில்லை - (ஸ்பெல்லிங்கே கஷ்டப்பட்டுத்தான் எழுதினேன்)
நகைச்சுவை - படித்து சிரிக்கத்தான் முடியும்!
சுயதம்பட்டம் - ஒரு அளவுக்கு மேல் எனக்கே போரடித்து விடும்..
எனவே, கொஞ்சம் வழக்கம் போல ஈகொ டிரிப் (உபயம்: பெருந்தலைவர் சுஜாதா), மேலே கொஞ்சம் ஃபிலிம் காட்டலாம் என உத்தேசம்.
ஆதரவு, பின்னூட்டங்கள் எல்லாம், கண்ணா, கேட்டு வரக்கூடாது, தானா வரணும், வரும்!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 8 பின்னூட்டங்கள்
வகை அனுபவம், நட்சத்திரம்
பதினைந்து நிமிடப் புகழ்?
வார்த்தைகள் கோர்த்து கதைகளாய்ச் செய்ததில்லை
சேர்த்ததை மாற்றி கவிதைகள் என்றதில்லை
வேர்த்து விறுவிறுத்து வீரனாய் நின்றதில்லை
பார்த்தே பசியாறும் தோற்றம் எனக்கில்லை
வாளெடுத்து போர்செய்து வாகை அணிந்ததில்லை
நாலெழுத்து நானெழுதி நாட்டை மயக்கவில்லை
வேலெடுத்து வீசியே சாதனை செய்யவில்லை
நாளேட்டின் பக்கம் நடுத்தரனைக் கண்டதில்லை
சோற்றுக்கு பொய்சொல்லி சோம்பல் வளர்த்ததில்லை
ஆற்றல் இருக்கோ- அதையாரும் பார்த்ததில்லை
நேற்றைக்கும் இன்றைக்கும் மாற்றம் ஏதுமில்லை
காற்றடிக்கும் போக்கில் கரைகிறதென் காலம்.
எதிலும் வியப்புமில்லை - ஏதும்புதிய தில்லை
குதிரையாய்க் கண்கட்டி கோட்டிலோடும் வாழ்வில்
பதிலுக் கலைகின்றேன் - என்றுதான் எந்தன்
பதினைந் துநிமிடப் பேறு?
மின்னிடும் பின்னால் (Flash Back:-)) - மறு ஒளிபரப்பு - முதல்முறை பலர் படிக்காததால்..
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 9 பின்னூட்டங்கள்
வகை நட்சத்திரம், புனைவு