பூங்கா வலையிதழின் முதல் இதழிலேயே என் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தச் சிறுகதையை சமர்ப்பிக்கிறேன்.
இந்தக்கதையும் நிஜ நிகழ்வின் கற்பனையாக்கமே.
கருவி
விடியற்காலையிலும் பஸ் ஸ்டேண்ட்டில் சந்தடி அதிகமாகவே இருந்தது. சென்னை செல்லும் பஸ்ஸை ஸ்டேண்டுக்கு உள்ளே நுழைவதற்கு முன்னேயே இடம் பிடித்துவிட ஆயத்தமாக இருந்த பெருங்கூட்டத்தை விலக்கி உள்ளே நடந்தேன்.
"வாணியம்பாடி, திருப்பத்தூர்" என்று கூவிக்கொண்டிருந்த கண்டக்டர் என்னைப்பார்த்ததும் முகம் மாறினான்.
"நீ சரவணன் இல்லே?"
பத்து வருடம் கழிந்தாலும் என்னை நினைவு வைத்திருக்கிறான். நான் செய்த காரியத்துக்கு அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியுமா என்ன..
"கலாட்டா பண்ணாம இருக்கறதுன்னா வண்டிக்குள்ளே ஏறு. ஏறுமாறா நடந்தேன்னா இறக்கி வுட்டுறுவேன்"
முன்னெல்லாம் என்னைப் பார்த்தாலே பயந்துவிடுவான். பதிலேதும் பேசாமல் ஒரு ஓர சீட்டைப் பார்த்து அமர்ந்தேன்.
பஸ் வேகமெடுக்க அதிகாலைக் குளிர் காற்று முகத்தில் அறைந்தது. கொஞ்ச நேர ஓட்டத்திலேயே பஸ் நிறைந்துவிட்டிருந்தது. அதே காலை நேரம், பஸ் முழுவதும் எஞ்சினியரிங் மாணவர்கள் மினிட்ராப்ட் துருத்திய பைகளுடன் கதை அடிக்கும் சத்தம், முன்சீட்டுப் பெரிசுடன் அந்தக்கால கதை பேசிக்கொண்டு டிரைவர்.. எதுவுமே பெரிதாக மாறிவிடவில்லை.
இரண்டு பயணிகளை ஏற்ற விண்ணமங்கலம் புளியமரத்தில் வண்டி நிற்க, மரத்தில் கிறுக்கல் - கீதா ஐ லவ் யூ - மறக்கத் துடித்திருக்கும் நினைவுகளைக் கிளறிவிட்டது...
_____________________________________________________________
"சரவணன், சுவற்றில் ஆபாசமாக எழுதியது நீங்கள்தானே?" பிரின்ஸிபாலின் கோபம் அவருடைய செயற்கையான மரியாதையில் தெரிந்தது.
அவர் அலுவலகத்தின் ஒரு மூலையில் நான் நிற்க, அவரின் எதிர் சீட்டுகளில் மெக்கானிகல் கணேஷ், பிஸிக்ஸ் தேவசகாயம், சரளா (வேண்டுமென்றே கணேஷை விட்டு ஒரு சீட் தள்ளி உட்கார்ந்திருந்தாள்) தவிர கம்ப்யூட்டர் ராஜாவும் இருந்தான்.
"எனக்கு நல்லாத் தெரியும் - அது உன் கையெழுத்துதான்" கணேஷ்
"ஏண்டா என்னைப்பத்தி இவ்வளவு கேவலமா எழுதினே" சரளா கண்ணில் கண்ணீர்.
நான் ராஜாவைப்பார்த்தேன். மிக நுணுக்கமாக தலையை ஆட்டியதைப் புரிந்து கொண்டேன்.
"நான் எழுதலே சார். என்னைப்போலவே வேற எவனோ எழுதியிருக்கான்"
"உங்களைக் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்ய முடிவெடுத்திருக்கிறோம்"
"ஒரு அப்பாவியை அநியாயமாக சஸ்பெண்ட் செய்தீர்களானால் ஸ்டிரைக் வெடிக்கும் சார்"
"பயமுறுத்துகிறாயா?"
"இல்லை சார், நம்ம கிட்டே சாலிட் ப்ரூப் இல்லை..இப்போ இந்த மாதிரி ஆக்-ஷன் எடுத்தா பிரச்சினை ஆயிடும்" ராஜா சாதாரண ஆசிரியர்தான். ஆனாலும் கரெஸ்பாண்டெண்ட்டின் தம்பி மகன்.
வெளியே ஆவலுடன் காத்திருந்தார்கள் நண்பர்கள்.
"என்ன ஆச்சு தலைவா?"
"முதல்லே சிகரெட்டைக்கொடு"
கொஞ்சம் தூள் கசக்கிப் புகைத்தபின்தான் சற்றுப்பதட்டம் குறைந்தது.
"சொட்டைத்தலையன் சஸ்பெண்டுன்னு ஒத்தைக்கால்லே நின்னான்.. ராஜா சார் நம்ம பக்கம் பேசின உடனே சொட்டைக்கு முகமே தொங்கிப்போச்சு."
செல்வின் ஓடிவந்தான்.
"ராஜா சார் சாயங்காலம் உன்னை வீட்டுக்கு வரச் சொன்னாரு."
"சரி போயிடறேன்..ராத்திரி கச்சேரி எங்கே?"
"உமாஷங்கர் வீட்டுலே எல்லாரும் வெளிய போயிருக்காங்க.. சரக்கு என்னுது, சால்னா பழனி"
_____________________________________________________________
மாலை வீட்டில் ராஜா கோபமாக இருந்தான்.
'என்னடா.. வேற ஆளை விட்டு எழுத மாட்டியா? உன் கையெழுத்து அது-இதுன்றான் கணேஷ்"
"அவசரத்துக்கு வேற யாரும் கிடைக்கலே சார்"
"நேத்து பெரியப்பா வந்திருந்தார். நெல்லு மண்டியாருக்கு கரெஸ்பாண்டெண்ட் ஆவணுமாம். மில்லுக்காரர் அவருக்கு சப்போர்ட்டாம்"
"பத்திரிக்கையிலிருந்து வராங்கன்னு சொன்னீங்களே"
"நாளைக்கோ நாளை மறுநாளோதான் வருவாங்க. சீக்கிரமா இந்த பிரின்ஸிக்கும் கணேஷுக்கும் ஒரு வழி பண்ணியாவணும்"
"பத்திரிக்கைல வர்றத வச்சு என்ன சார் பண்ண முடியும்?"
"முட்டாள் மாதிரி பேசாதே - நம்ம வார்த்தைய வச்சு மட்டும் அவனுங்களை தூக்க முடியாது. நெல்லு மண்டியார் கேக்க மாட்டார். பத்திரிக்கையிலே ஸ்ட்ராங்கா வந்துச்சுன்னா அத்தனை பார்ட்னருங்களுக்கும் வேற வழி இருக்காது. இப்போ மட்டும் சும்மா விட்டா, பிரின்ஸியும் கணேஷும் சேர்ந்து நம்ம எல்லாரையும் காலி பண்ணிடுவானுங்க"
_____________________________________________________________
பஸ் நிறுத்தம் வரை சென்று திரும்புவதைவிட கொஞ்ச முன்னாலேயே இறங்கிக்கொள்ளலாம். ராஜா வீட்டுக்கு அருகிலேயே நிறுத்தச் சொல்லலாம்.
"உனக்காக நிறுத்த எல்லாம் முடியாது. வேணுமுன்னா ஸ்லோவா ஓட்டச்சொல்லறேன்.. நீதான் ரன்னிங்லேயே இறங்குவியே.. பத்து வருஷத்துலே மறந்து போச்சா"
பயணம் முழுவதும் அமைதியாகவே இருந்ததில், இவனுக்கு தைரியம் அதிகமாகிவிட்டது.
ராஜா வீட்டின் முன்புறம் மாறிவிட்டிருந்தது. தாழ்வாகப் போடப்பட்ட ஓலைக்கூரை உள்ளே இருந்த பகட்டை மறைத்து எளிமையாகக் காட்டிக்கொண்டிருந்தது. வாசலில் நாலைந்து கரை வேட்டிகள்.
"யாரு வேணும்"
"அவரோட பழைய ஸ்டூடண்ட், சரவணன்னு"
"நீதானா அது? கரஸ்பாண்டெண்ட் அய்யாகிட்டே சொல்லறேன்"
சரிதான், மறுபடியும் அதிகாரம் கைமாறிவிட்டதா.
ராஜா பெருத்துப் போயிருந்தான். முழு அரசியல்வாதியாக ஆகிவிட்டான் என்பது வெள்ளை சட்டையிலும், பகட்டுச் சங்கிலியிலும் தெரிந்தது. தூக்கக்குறைவும், நேற்றைய போதையின் மிச்சமும் கண்களில் சிவப்பாகத் தெரிந்தது,
"வாடா வா.. இவன் யாரு தெரியுதா அறிவழகன், சரவணன்! இவன் துணை மட்டும் இல்லாட்டா நான் வாத்தியாராவே ரிட்டயர் ஆயிருப்பேன்."
"பெரிய ஆளாயிட்டே ராஜா.. என்னை ஞாபகம் கூட வச்சிருக்கியே"
"அறிவழகன் கொஞ்சம் வெளியே இருங்க" என்றான் ராஜா நான் ஒருமைக்கு மாறிவிட்டதைக்கண்டு.
"கதவு திறந்தே இருக்கட்டும்" என்றேன் அறிவழகனிடம்.
"உன் கோபம் எனக்குப் புரியுது.. நான் ஒன்னும் பண்ண முடியாத நிலைமையிலே இருந்தேன் சரவணா.. நீ பண்ண வேலை அப்படி"
"யாருக்காக செஞ்சேன்?"
"எனக்காகதான் செஞ்சே, நான் இல்லேங்கலியே, ஆனா அன்னிக்கு நான் உனக்கு உதவி செய்ய வந்திருந்தேன்னா அன்னிக்கே என்னை கட்டம் கட்டியிருப்பாங்க. எழுந்திருச்சிருக்கவே முடியாது. எல்லார்கிட்டேயும் உனக்கும் எனக்கும் சம்மந்தம் கிடையாதுன்னு சொல்லிகிட்டே வக்கீல் வைக்க முடியுமா நீயே சொல்லு!"
"அதுவும் இல்லாம என் உபயோகமும் முடிஞ்சு போச்சு - இல்லையா?"
"என்ன பேச்சு பேசறே நீ? நீ மட்டும் நான் சொன்னதையா செஞ்சே? யோசிச்சுப் பாரு?"
யோசித்துப் பார்த்தேன்..
_____________________________________________________________
"நீதி கேட்டுப் போராட்டம்" "உண்ணாவிரதம்" "மாணவரை மதியாத முதல்வர் ஒழிக" பலவிதமான தட்டிகள் நடுவே உட்கார்ந்திருந்தேன்.
"தலைவா.. போர்வாள் பத்திரிக்கையிலே உன் போட்டோ வந்திருக்கு பாத்தியா?"
"முதல்வர் ஊழல், தட்டிக்கேட்ட மாணவன் டிஸ்மிஸ்" என்று அட்டையிலேயே என் புகைப்படம் போட்டிருந்தார்கள்.
"செமெஸ்டர் எக்ஸாம் வேற வருது தலைவா..ஸ்டுடெண்டுங்கள ரொம்ப அடக்கி வைக்க முடியாது"
"இன்னும் ரெண்டு மூணு நாளில எல்லாம் மாறிடும், நிறுத்திடலாம், தலைவன்றீங்க.. நான் சொல்ற பேச்சை மீறி நடப்பீங்களா?" புகழ் போதை என் தலைக்கு ஏறிவிட்டிருந்தது.
எதிர்பார்த்ததற்கு நேர் எதிராக எல்லாம் நடந்து கொண்டிருந்தது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, ராஜாவைச் சந்திக்கும்வரை.
"நூறு ஸீட்டுடா.. எல்லாம் போச்சு! அவனுங்க செய்யறதைத்தான் செய்துகிட்டிருக்காங்க. உன்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க..என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. ஆடறாங்கடா.. ஸ்டிரைக்கும் பிசுபிசுத்துப் போச்சு.. பத்திரிக்கையிலே வந்ததுக்கும் ஒரு எபெக்டும் இல்லே.." கோபமாகப் புலம்பினான் ராஜா.
"இப்போ என்னதான் சார் செய்ய?"
"போராட்டத்தை நிறுத்திடு. அடுத்த வாரம் எக்ஸாம் ஆரம்பிக்குது, நீ எழுதறதுக்குப்போ"
"என்னைத்தான் டிஸ்மிஸ் பண்ணிட்டாங்களே..எக்ஸாம் ஹாலுக்கு உள்ள விட மாட்டாங்களே"
"அதுதானேடா திட்டமே" விளக்கினான் ராஜா.
பரீட்சை அன்று காலையிலிருந்தே பதட்டம் அதிகமாக இருந்தது. ஏற்றிய சரக்கு உதவவில்லை. நாலைந்து பாக்கெட் தூளைக் கசக்கிப் புகைத்தும் பயனில்லை.
பரீட்சை அறைக்குள் கணேஷ் வினாத்தாள்களை வினியோகித்துக்கொண்டிருந்தான்.
"டேய் கணேஷ் பாடு, என் சீட்டு எங்கேடா"
"சரவணன் - கெட் அவுட் ஆப் ஹியர்.. பரீட்சை நடக்கிறது..கலாட்டா பண்ணாதே"
"எனக்குக் கொடுடா கொஸ்டின் பேப்பர்" என்று அவன் கையிலிருந்து பேப்பர்களைப் பிடுங்கினேன். அவன் கையை உதறிய வேகத்திலும் ஏறியிருந்த போதையிலும் சடாலென கீழே விழுந்தேன்.
பாக்கெட்டிலிருந்த புட்டியும் விழுந்ததில் உடைந்து நாற்றமெடுக்க, அமைதியாக இருந்த மாணவர்களும் மாணவிகளும் சிரிக்க, தேர்வுக் கண்காணிப்பாளர்களும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர்.
வெறியும் கோபமும் தலைக்கேற, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தேன்..
_____________________________________________________________
"கணேஷ் வாத்தியாரின் வீடு இந்தச் சந்துதானே" வேகமாக வந்ததில் மூச்சு இறைக்கக் கேட்டேன்.
"அவர் போயி பத்து வருசமாச்சேப்பா - அவங்க சம்சாரமும் குழந்தையும் அந்த மூணாவது வீட்டுலே இருக்காங்க"
மூன்றாவது வீட்டு வாசலில் கில்லி ஆடிக்கொண்டிருந்தான் அவர் மகன்..பெரியவனாகிவிட்டிருந்தான். எத்தனை முறை இவனை கணேஷின் டிவிஎஸ் 50ன் முன்னால் நிற்கப் பார்த்திருப்பேன். சட்டை இல்லை, கிழிந்த டிரௌசர்..என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.
கதவைத் தட்ட வெளியே வந்த கணேஷின் மனைவி ஒரு நிமிடம் ஒன்றும் பேசவில்லை.. நான் இங்கேயே வருவேன் என்று எதிர்பார்க்காததால் அதிர்ச்சி.. "இன்னும் யாரைக்கொல்ல இங்கே வந்திருக்கே? உனக்கு வெறி இன்னுமா அடங்கலே" ஆத்திரமும் அழுகையும் சேர்ந்திருந்தது ..
"நான் செஞ்சது மன்னிக்கவே முடியாத தப்புத்தான்.. பத்து வருஷம் இல்லே.. நூறு வருஷம் ஜெயில்லே இருந்தாலும் அது பத்தாத தண்டனைதான்."
சொல்லிக்கொண்டிருக்கும்போதே தெருவில் சுமோவின் பிரேக் கிறீச்சிட்டது. தபதபவென்று ஆட்கள் இறங்கி ஓடிவரும் சப்தம்..
"பிடிடா அவனை..எவ்வளவு கொழுப்பிருந்தா வீடு புகுந்து ராஜா சாரைக் கொன்னுட்டு தப்பிச்சு ஓடப் பார்ப்பே?" அவர்கள்தான்.. என்னைத் துரத்தி வந்தவர்கள்தான்..
சரமாரியான அடிகள் என்மேல் விழ..
வலிக்கவில்லை
_____________________________________________________________