Dec 3, 2006

வரலாறு பட விமர்சனம் (03 Dec 06)

என் கருத்துப்படி இப்படம்மிக அற்புதமான படம் என்பதில் சந்தேகமில்லை. இந்தப்படத்தின் திரைக்கதை என்னைப்பொறுத்தவரை நன்றாகவே இருந்தது - இப்படிப்பட்ட படங்கள் தயாரிப்பவர்கள், எப்படி எடுக்கவேண்டும் என்பதில் பல விதமான கருத்துகளும், சேர்க்கப்பட்ட சம்பவங்கள், நீக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து பலவிதமான கருத்துகளும் இருக்க வாய்ப்புகள் இருந்தாலும்!

கதை நாயகனின் தந்தையைக் காண்பித்து படம் ஆரம்பிக்கிறது. இரு மகன்கள், ஒருவனுடன் ஆரம்பத்திலேயே போட்டி போட வேண்டிய நிர்ப்பந்தம் தந்தைக்கு. அதில் அவர் பெருமைப்படுவதுடன் படம் ஆரம்பிக்கிறது.

ஏழை விவசாயி மாடசாமியை ஏய்த்து, அவன் சொத்தைப் பிடுங்க ஆசைப்படும் வெள்ளைக்காரனின் புரோக்கர் சார்பாக தந்தையும், மாடசாமி சார்பாக மகனும் ஆஜராகி, மகன் வெல்வதைப் பார்த்து புளகாங்கிதமடைகிறார் தந்தை. பெரும் பணக்காரராக இருந்தாலும், சம்பாதிப்பதில் ஆசை வைக்கச் சொல்லும் தந்தையின் பேச்சை நிராகரித்து, தன் நண்பர்களுடன் சேர்ந்து தேசிய விடுதலைப்போரில் ஈடுபடும் மகன் வ உ சிதம்பரமாக சிவாஜி கணேசனும், மாடசாமியாக ஜெமினி கணேசனும், நண்பர்கள் பாரதியாக எஸ் வி சுப்பையாவும் சுப்பிரமணிய சிவாவாக _______உம் வாழ்ந்திருக்கிறார்கள். (சு சிவாவாக நடித்த நடிகர் பெயர் யாருக்காவது தெரியுமா, பின்னூட்டுங்களேன்).

வாழ்க்கை வரலாற்றைப் படம் பிடிப்பதில் உள்ள எல்லாச்சிக்கல்களையும் பந்துலுவும் சந்தித்திருப்பார். எந்தச் சம்பவங்களைச் சேர்ப்பது, எதை விடுப்பது, எவை சுவாரஸ்யத்தைக் கூட்டும், எவை கருத்தை வலியுறுத்தும் என்பது போன்ற சிக்கல்கள். மங்கள் பாண்டேவின் வாழ்க்கையில் பதிந்த விவரங்கள் மிகச்சிலவே என்பதால் சம்பவங்களால் அமீர்கான் குழுவால் சுவாரஸ்யத்தைக் கூட்ட முடியவில்லை. உயர்வு நவிற்சியாக சொல்லப்போனதால் நிகழ்வுகள் பெரிதுபடுத்தப்பட்டுவிட்டன என்பது வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்குக் கிடைத்த விமர்சனம்.

இந்தச் சிக்கல்களோடு பார்க்கையில், கப்பலோட்டிய தமிழன், இவ்விரண்டு எல்லைகளையுமே தொட்டுவிடாமல், பதியப்பட்ட விஷயங்களை மட்டுமே பேசி இருக்கிறது. தன் சொத்தையெல்லாம் விற்று கப்பல் வாங்குதல், தொழிலாளர் போராட்டத்துக்காக குழந்தைகள் அணிகலன் வரை இழத்தல், சிறையில் பட்ட இன்னல்கள், நோய்வாய்ப்பட்டு இறத்தல் என்ற சிதம்பரனாரின் வாழ்க்கை நிகழ்வுகள் மட்டுமின்றி, அரிசிக்குக் காசில்லாதபோதும் குருவிகளுக்கு இறைத்து வேடிக்கை பார்க்கும் பாரதியார், வீராவேசமாகப்பேசி, சிறையில் தொழுநோய் பெற்று ஒடிந்துபோகும் சிவா, ஆங்கிலேயக் கப்பலுக்கு வெடிவைக்கத் துணியும் மாடசாமி, மணியாச்சியில் ஆஷைச் சுட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளும் வாஞ்சிநாதன் போன்ற சமகால கதாபாத்திரங்களையும் தொட்டுச் சென்று, சுவாரஸ்யம் குறையாமல் செல்கிறது திரைக்கதை.

பாடல்கள் படத்தின் மிகப்பெரிய பலம். எல்லாம் பாரதியார் பாடல்களே என்றாலும், காட்சிகளுக்குத் தக்கவாறு சரியாகத் தேர்ந்தெடுத்ததில் இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும் பாராட்டுகள் உரித்தாகின்றன. காதல் வேளையில் "காற்று வெளியிடை", கப்பல் வெள்ளோட்டத்தின்போது "வெள்ளிப்பனிமலையின் மீதுலாவுவோம்", செக்கிழுத்து கஷ்டப்படும் வேளையில் "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்", சுதந்திரம் பெறாமலே இறக்கும் வேளையில் "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" - அருமையான தேர்வுகள். மெட்டுகளும் காட்சிகளின் உணர்ச்சியோடு இழைந்திருக்கின்றன. குறிப்பாக கடைசிப்பாடலில் "பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?" என்று சோகக்குரலில் வரும் வரிகள் உள்ளத்தைத் தொடுகின்றன.

நடிப்பைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். முதல் பாதியில் அதிக ஸ்கோப் இல்லையென்றாலும், சேரிச்சிறுவனை வீட்டுக்கழைத்து வருகையில் அவர் பேசும் வசனங்கள், ஒரே கோர்ட் காட்சியில் வாதாடும் பாங்கு, ஒரு செல்வந்தர் + தேசப் போராட்ட வீரர் இரண்டும் கலந்த மிடுக்குடன் கூடிய பாடி லேங்குவேஜ் - அசத்துகிறார். இரண்டாம் பாதியில், சிறை சென்று மீண்ட வேதனையுடன், தொழுநோயால் பாதிக்கப்பட்ட சிவாவைச் சந்திக்கும் காட்சி, கப்பலுக்காக விற்ற உப்பளமும், கப்பலும் ஆங்கிலேயனால் விழுங்கப்பட்டதைப் சோகத்தோடு பார்க்கும் காட்சி - தொழில்நுட்பங்கள் காட்சிக்கு அதிக அழகு வேண்டுமானால் சேர்க்கலாம், ஆனால் ஆதாரமாக நல்ல நடிகன் தேவை என உணர்த்தும்.

தலைப்பில் ஒரு பிழை - வரலாறு பட விமர்சனம் என்பதற்குப் பதிலாக வரலாற்றுப்பட விமர்சனம் எனப்படிக்கவும்.

அஜித் நடித்த வரலாறுக்கும் இதற்கும் ஒரே தொடர்புதான் - அந்தப்படத்தைப்பார்க்க ஆரம்பித்து மூன்றாம் சீனில் வெறுத்து, மீண்டும் ஒருமுறை கப்பலோட்டிய தமிழன் பார்க்க ஆரம்பித்ததுதான்:-)

13 பின்னூட்டங்கள்:

சிறில் அலெக்ஸ் said...

அப்டியே 'குறும்பு' தாஇப்புல போட்டிக்கு சேத்துருங்க.

தாங்க முடியலீங்க... குறும்பச் சொன்னேன்

aruppukottaiyan said...

Suresh!

I still remember watching the movie with my mom. she was big fan of Sivaji and still is. she was crying when sivaji was teary eyed and seeing her i was also crying.

Perusu (sivaji) maathiri innum oru nadigan piranthu than varanum !!!! hmmmmmm

--- Aruppukottaiyan

Sridhar Narayanan said...

//சு சிவாவாக நடித்த நடிகர் பெயர் யாருக்காவது தெரியுமா, பின்னூட்டுங்களேன்//

எஸ்.வி. சகஸ்ரநாமம் என்று நினைக்கிறேன்.

பலப்படங்களில் மிகச் சிறப்பாக நடித்த பழம்பெரும் நாடக நடிகர். டி.கே.எஸ் சகோதரர்கள் நாடகக்குழுவில் நடிக்க ஆரம்பித்து, பிறகு அந்தக் குழு இரண்டாகப் பிரிந்த பொழுது தனிக்குழுவாகப் பல நாடகங்களை அரங்கேற்றியவர். இன்னொரு குழுவிற்கு நடிப்பிசைப் புலவர் என்று அழைக்கப்பட்ட கே. ஆர். இராமசாமி தலைவராக இருந்தார் என்றுப் படித்திருக்கின்றேன்.

கிரேசி மோகனின் நாடகமான 'கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' நாடகத்தில் ஒரு வசனம் -

"ஏன்டா மாது! மார்கழி மாதமும் அதுவுமா காலையில எழுந்தோமா... சகஸ்ரநாமத்தை எடுத்து மடியில வச்சின்டு..."

"போப்பா... சகஸ்ரநாமத்தை எப்படிப்பா ம்டியில எடுத்து வச்சிக்கிறது... அவர் எவ்வளவு பெரிய நடிகர்...."

:-)))))))

Anonymous said...

Anna,
enna epdi soliteenga? vandha diwali release lae varalaru thaan house full solranga? ama, ajith vedam potrukum aravani character patthi enna nenaikireenga?

பினாத்தல் சுரேஷ் said...

சிறில்,

குறும்பு தலைப்புக்கு வேற ஒரு மேட்டர் தயார் பண்ணியிருக்கோம். ஆசீப்போட பதிவுலே போய்ப்பாருங்க;-))

அருப்புக்கோட்டையன்,

அருமையான படம்! சிவாஜியின் எல்லாப்படங்களும் என்னைக்கவர்ந்ததில்லை என்றாலும், இப்படம் -- உங்கள் வார்த்தைகளைக் கேள்வியின்றி ஒப்புக்கொள்கிறேன்.

ஸ்ரீதர் வெங்கட்,

சஹஸ்ரநாமமா அது? மற்ற படங்களில் இன்னும் வயதானவராகப் பார்த்ததால் அடையாளம் தெரியவில்லை.

நீங்கள் சொன்ன ஜோக் என் பேவரைட் லிஸ்ட்டில் உள்ளது. தொடர்ச்சியாக, ஷோலே படம், 70MM, தவச பஞ்சகச்ச வேட்டி எல்லாம் நினைவுக்கு வந்து சிரித்துக்கொண்டு இருந்தேன்;-))

புனித்,

அஜித் படம் பார்க்கும் வயதைத் தாண்டிவிட்டேன் போல;-)

ஜோ/Joe said...

சுரேஷ்,
விமரிசனத்துக்கு நன்றி!

இப்படம் பற்றிய சில கொசுறு தகவல்கள்

1.இன்று நான் வெகுவாக பாராட்டும் இப்படம் வெளிவந்த போது வியாபார ரீதியாக மிகப்பெரிய தோல்வி.

2.நடிகர் திலகம் நடித்த படங்களில் அவருக்கு முகவும் பிடித்த படம் இது தான்.

3.சிதம்பரனாரின் சொந்த மகன் இந்த படத்தை பார்த்த போது தன்னிலை மறந்து "அப்பா!" என்று கதறியது ,நடிகர் திலகத்தினைப் பற்றி விமர்சிக்கிறேன் பேர்வழி என்று உளறிக்கொட்டும் மேதாவிகளுக்கு ஒரு நல்ல பதில்.

பினாத்தல் சுரேஷ் said...

ஜோ,

வாங்க வாங்க! கொசுறு தகவல்களுக்கு நன்றி.

இங்கேயும் உங்களை எதிர்பார்த்தேனே! கமல் பற்றி என்பதால்;-))

நற்கீரன் said...

படம் பார்க்காமல் விமர்சனம். வரலாறு மீதே விமர்சனம். விமர்சன துறையில் புதிய தடங்கள் பதிக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

Sridhar Narayanan said...

திரு பெனாத்தலார் அவர்களே!

//
//சு சிவாவாக நடித்த நடிகர் பெயர் யாருக்காவது தெரியுமா, பின்னூட்டுங்களேன்//

எஸ்.வி. சகஸ்ரநாமம் என்று நினைக்கிறேன்.//

தவறான தகவலை சொல்லிவிட்டேன். மன்னியுங்கள்.

சுப்ரமண்ய சிவாவாக நடித்தது 'ஔவை' ஷண்முகம் என்று அழைக்கப்படும் டி. கே. எஸ். ஷண்முகம்தான்.

http://www.nilacharal.com/tamil/thirai/tamil_sivaji_221.html

இவரின் நினைவாகத்தான் கமல்ஹாசன் தன் படத்திற்கு 'அவ்வை சண்முகி' என்றுப் பெயரிட்டார் என்று படித்திருக்கின்றேன்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நற்கீரன்.. நீங்களாவது என் திறமையை (?!) கவனிக்கிறீங்களே!

நன்றி ஸ்ரீதர் வெங்கட் - மறுபடியும்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நற்கீரன்.. நீங்களாவது என் திறமையை (?!) கவனிக்கிறீங்களே!

நன்றி ஸ்ரீதர் வெங்கட் - மறுபடியும்.

ஜோ/Joe said...

சுரேஷ்,
தேவர் மகன் பற்றிய பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை எங்க தூக்கி வீசிட்டீங்க?

பினாத்தல் சுரேஷ் said...

இருக்கே, இங்கே பத்திரமா!

 

blogger templates | Make Money Online