நம்பிக்கை வாக்கெடுப்பு அணுசக்தி ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பாக உருவகப்படுத்தப்பட்டதுதான் காமெடி. 541 பேரில் எத்தனை பேர் நிஜமாக அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிரானவர்கள்? ஜன்மவைரி அமெரிக்கா என்ற ஸ்மரணையோடு மட்டும் மக்கள் பணி செய்யும் இடதுசாரிகள், இப்போது என்ன அவசரம், ஆறு மாதம் பொறுத்தால் எங்கள் பேனாவில் கையெழுத்துப் போடலாம் என்ற உயர்சிந்தனை கொண்ட பாஜகவும் எதிர்த்து வாக்குப்போட்டு கடமை நிறைவேற்றிய விதம் புல்லரிக்கவைத்தது!
நாட்டுமக்களின் நலனுக்காக அரைமணி நேரத்தில் ஒப்பந்தத்தின் சாதக பாதகத்தைச் சீர்தூக்கி் முடிவெடுத்த அண்ணன் அமர்சிங்கின் அறிவாற்றல் வியக்கவைத்தது. அதைவிட வேகமாக பாதக அம்சங்களைப் புரிந்துகொண்ட மாயாவதியின் மக்கள் பற்று பிரம்மிக்க வைத்தது.
அணு - ஆட்சி என்று இருபரிமாணத்தோடே ஆரம்பித்தாலும் அணு-ஆட்சி-அம்பானி என்ற மூன்றாவது பரிமாணம் வந்தபின் தான் கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது. ஓட்டுக்கு 25-30 கோடி (மந்திரி), ஓட்டுப்போடாமல் இருக்க 10 கோடி, உடம்பு சரியில்லை என லீவ் லெட்டர் கொடுக்க 5 கோடி என்று விலைப்பட்டியல் அடித்து நினைத்ததை விட அதிக வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறவைத்த அம்பானி சகோதரபாசம் உணர்ச்சிப் பெருக்கில் மூழ்கவைத்தது.
நல்ல வேளை வித்தியாசம் பெரிதாக இருக்கிறது. கொறடா உத்தரவை மீறி பதவி விலகக் காத்திருக்கும் ஏழெட்டு உறுப்பினர்கள் மட்டுமே வித்தியாசமாக இருந்திருந்தால், நம்பிக்கைத் தீர்மானத்தைத் தொடர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்திருக்குமே - அது தவிர்க்கப்பட்டதில் மனம் நிம்மதிப்பெருமூச்சு விடுகிறது.
நம் மீடியாவின் பொறுப்புணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது. ஜார்ஜ் பெர்னான்டஸ், பங்காரு மீதான ஸ்டிங் வீடியோக்களைக் காட்டியபின் வந்த முதிர்ச்சியோ தெரியவில்லை - அத்வானியும் பிரகாஷ் காரத்தும் லஞ்சப்பணம் பட்டுவாடா செய்ய முயன்றதுக்கு ஆதாரம் இருக்கிறது என்று சொன்னால் கூட, அதைப்பற்றிப் பேசாமல், பார்லிமெண்டுக்குள் பணக்கட்டைக் கொண்டுவந்த எம்பிக்களின் பாதுகாப்பு மீறலை SMS ஆக ஓடவிட்டுக்கொண்டிருந்த மனமுதிர்ச்சி நெகிழச் செய்கிறது.
உணர்ச்சிக்கொந்தளிப்புகளை மீறி அணுசக்தி தேவையா இல்லையா என்ற விவாதம் பாராளுமன்றத்துக்கு வெளியேதான் நடந்தது - ஆட்சியாளர்கள், எதிர்ப்பாளர்கள் -நாளைய ஆட்சியாளர்கள், உடன் இருந்தவர்கள் - இப்போது இல்லாதவர்கள் என்ற எந்த சக்திவாய்ந்த அமைப்பும் அணுசக்தி தேவையில்லை எனச் சொல்லவில்லை என்பதால் இப்படிப்பட்ட விவாதங்கள் Academic ஆக மட்டுமே முடியும்.
மேலும், மின்சாரம் பெற மரபுசாரா வழிமுறைகள் - அலையிலிருந்தும் காற்றிலிருந்து மின்சாரம், எலுமிச்சையிலிருந்து பல்ப் எரியவைத்தல், வேப்பங்குச்சியிலிருந்து செல்போன் சார்ஜ் - யானைப்பசிக்கு சோளம் இருக்கும் இடத்தைக் காட்டுவது மட்டும்தான்! அதைப் பொறிக்கக்கூட இன்னும் முயற்சிகள் ஆரம்பிக்கவில்லை, பொறிந்தாலுமே தேவைக்கு எந்தப்பயனும் இருக்காது. மரபுசார் வழிமுறைகள் எரிபொருளை இழக்க ஆரம்பித்துவிட்ட தறுவாயில் அணுசக்தி தவிர்க்கமுடியாதது. பாதுகாப்பான வழிமுறைகளை ஆராயவேண்டுமே அன்றி செர்னோபில்லையும், தவறான உதாரணமாக ஹிரோஷிமாவையும் சொல்லும் மக்கள் மின்சாரம் இன்றி இருக்கத் தயாராகவேண்டியதுதான் என்பது என் கருத்து.
ஆனால், வழிமுறைகள்?
மாயன் எழுதிய பதிவு அதிகக் கவனம் பெறாமல் போனது வருத்தமே. Frederick Forsyth வகையறா ஒற்றர் கதைகளில் அடிக்கடி வரும் ஒரு வாக்கியம் - Co incidence களை நம்பக்கூடாது! அப்படிப் பார்த்தால் சென்ற மாதம் கிடுகிடு பாய்ச்சல் காட்டி இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கவிழும் எண்ணெய் விலையும், வரலாறு காணாத "அறிவிக்கப்பட்ட" மின்வெட்டும் குறிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பின் மிகச் சமீபத்தில் நடப்பது Coincidence ஆக எனக்குத் தோன்றவில்லை. அமெரிக்கா தன் நலங்களுக்காக ஒரு மெல்லிய பயமுறுத்தலைச் செய்வது முதல் முறையாகவும் இருக்காது. இந்த பயமுறுத்தல் நிச்சயமாக அரசியல்வாதிகளை இல்லாவிட்டாலும் மக்களை நோக்கி தன் கடமையைச் செய்யும்.
வேறு வழியில்லை எனச் சொல்லப்படும் அணுசக்தியை பயமுறுத்தி ஏன் உள்ளே கொண்டு வர முயற்சிக்கவேண்டும்? கருத்தொற்றுமை பெற்று, மக்கள் வாக்கைப் பெற்று நாடாள வந்து பிறகு இதைச் செய்வதுதானே நியாயமான வழியாக இருக்கமுடியும்? அந்த வழிமுறையில் நம்பிக்கை இல்லாததால் பணம் ஒரு பக்கமும் பயம் ஒரு பக்கமுமாக இரட்டைத் தாக்குதலா?
எனக்கென்னவோ நடக்கிற மொத்தக்கூத்திலும் மன்மோகன் அம்பானி அத்வானி அமர்சிங் இடதுசாரி - எல்லாருமே தோல்பாவைகளாகத் தான் தெரிகிறார்கள். சூத்திரக்கயிறு கண்ணில் படவில்லை - ஊகிப்பதும் கடினமில்லை! 271 x 30 = ஏறத்தாழ 2 பில்லியன் டாலர்களில் இந்தியப் பாராளுமன்றத்தை - அதன் மூலம் India Inc ஐ வாங்கிவிடமுடியும் என்ற நம்பிக்கை அந்த சூத்ரதாரிகளுக்கு இப்போது வந்திருக்கும். நிம்மதிப் பெருமூச்சும் வந்திருக்கும்.
வாழிய பாரத மணித்திரு நாடு!