Jul 23, 2008

India Inc - என்ன விலை அழகே!

ஒரு சீரிய திரைப்படத்திலோ நெடுந்தொடரிலோ கூடக் காணப்படாத உணர்ச்சிக் குவியல் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பில் கிடைத்தது பாரதமக்கள் செய்த பாக்கியம்!

நம்பிக்கை வாக்கெடுப்பு அணுசக்தி ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பாக உருவகப்படுத்தப்பட்டதுதான் காமெடி. 541 பேரில் எத்தனை பேர் நிஜமாக அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிரானவர்கள்? ஜன்மவைரி அமெரிக்கா என்ற ஸ்மரணையோடு மட்டும் மக்கள் பணி செய்யும் இடதுசாரிகள், இப்போது என்ன அவசரம், ஆறு மாதம் பொறுத்தால் எங்கள் பேனாவில் கையெழுத்துப் போடலாம் என்ற உயர்சிந்தனை கொண்ட பாஜகவும் எதிர்த்து வாக்குப்போட்டு கடமை நிறைவேற்றிய விதம் புல்லரிக்கவைத்தது!

நாட்டுமக்களின் நலனுக்காக அரைமணி நேரத்தில் ஒப்பந்தத்தின் சாதக பாதகத்தைச் சீர்தூக்கி் முடிவெடுத்த அண்ணன் அமர்சிங்கின் அறிவாற்றல் வியக்கவைத்தது. அதைவிட வேகமாக  பாதக அம்சங்களைப் புரிந்துகொண்ட மாயாவதியின் மக்கள் பற்று பிரம்மிக்க வைத்தது.

அணு - ஆட்சி என்று இருபரிமாணத்தோடே ஆரம்பித்தாலும் அணு-ஆட்சி-அம்பானி என்ற மூன்றாவது பரிமாணம் வந்தபின் தான் கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது. ஓட்டுக்கு 25-30 கோடி (மந்திரி), ஓட்டுப்போடாமல் இருக்க 10 கோடி, உடம்பு சரியில்லை என லீவ் லெட்டர் கொடுக்க 5 கோடி என்று விலைப்பட்டியல் அடித்து நினைத்ததை விட அதிக வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறவைத்த அம்பானி சகோதரபாசம் உணர்ச்சிப் பெருக்கில் மூழ்கவைத்தது.

நல்ல வேளை வித்தியாசம் பெரிதாக இருக்கிறது. கொறடா உத்தரவை மீறி பதவி விலகக் காத்திருக்கும் ஏழெட்டு உறுப்பினர்கள் மட்டுமே வித்தியாசமாக இருந்திருந்தால், நம்பிக்கைத் தீர்மானத்தைத் தொடர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்திருக்குமே - அது தவிர்க்கப்பட்டதில் மனம் நிம்மதிப்பெருமூச்சு விடுகிறது.

நம் மீடியாவின் பொறுப்புணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது. ஜார்ஜ் பெர்னான்டஸ், பங்காரு மீதான ஸ்டிங் வீடியோக்களைக் காட்டியபின் வந்த  முதிர்ச்சியோ தெரியவில்லை - அத்வானியும் பிரகாஷ் காரத்தும் லஞ்சப்பணம் பட்டுவாடா செய்ய முயன்றதுக்கு ஆதாரம் இருக்கிறது என்று சொன்னால் கூட, அதைப்பற்றிப் பேசாமல், பார்லிமெண்டுக்குள் பணக்கட்டைக் கொண்டுவந்த எம்பிக்களின்  பாதுகாப்பு மீறலை SMS ஆக ஓடவிட்டுக்கொண்டிருந்த மனமுதிர்ச்சி நெகிழச் செய்கிறது.

உணர்ச்சிக்கொந்தளிப்புகளை மீறி அணுசக்தி தேவையா இல்லையா என்ற விவாதம் பாராளுமன்றத்துக்கு வெளியேதான் நடந்தது - ஆட்சியாளர்கள், எதிர்ப்பாளர்கள் -நாளைய ஆட்சியாளர்கள், உடன் இருந்தவர்கள் - இப்போது இல்லாதவர்கள் என்ற எந்த சக்திவாய்ந்த அமைப்பும் அணுசக்தி தேவையில்லை எனச் சொல்லவில்லை என்பதால் இப்படிப்பட்ட விவாதங்கள் Academic ஆக மட்டுமே முடியும்.

மேலும், மின்சாரம் பெற மரபுசாரா வழிமுறைகள் - அலையிலிருந்தும்  காற்றிலிருந்து மின்சாரம், எலுமிச்சையிலிருந்து பல்ப் எரியவைத்தல், வேப்பங்குச்சியிலிருந்து செல்போன் சார்ஜ் - யானைப்பசிக்கு சோளம் இருக்கும் இடத்தைக் காட்டுவது மட்டும்தான்! அதைப் பொறிக்கக்கூட இன்னும் முயற்சிகள் ஆரம்பிக்கவில்லை, பொறிந்தாலுமே தேவைக்கு எந்தப்பயனும் இருக்காது.  மரபுசார் வழிமுறைகள் எரிபொருளை இழக்க ஆரம்பித்துவிட்ட தறுவாயில் அணுசக்தி தவிர்க்கமுடியாதது. பாதுகாப்பான வழிமுறைகளை ஆராயவேண்டுமே அன்றி செர்னோபில்லையும், தவறான உதாரணமாக ஹிரோஷிமாவையும் சொல்லும் மக்கள் மின்சாரம் இன்றி இருக்கத் தயாராகவேண்டியதுதான் என்பது என் கருத்து.

ஆனால், வழிமுறைகள்?

மாயன் எழுதிய பதிவு அதிகக் கவனம் பெறாமல் போனது வருத்தமே. Frederick Forsyth வகையறா ஒற்றர் கதைகளில் அடிக்கடி வரும் ஒரு வாக்கியம் - Co incidence களை நம்பக்கூடாது! அப்படிப் பார்த்தால் சென்ற மாதம் கிடுகிடு பாய்ச்சல் காட்டி இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கவிழும் எண்ணெய் விலையும், வரலாறு காணாத "அறிவிக்கப்பட்ட" மின்வெட்டும் குறிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பின் மிகச் சமீபத்தில்  நடப்பது  Coincidence  ஆக எனக்குத் தோன்றவில்லை.  அமெரிக்கா தன் நலங்களுக்காக ஒரு மெல்லிய பயமுறுத்தலைச் செய்வது முதல் முறையாகவும் இருக்காது. இந்த பயமுறுத்தல் நிச்சயமாக அரசியல்வாதிகளை இல்லாவிட்டாலும் மக்களை நோக்கி தன் கடமையைச் செய்யும்.

வேறு வழியில்லை எனச் சொல்லப்படும் அணுசக்தியை பயமுறுத்தி ஏன் உள்ளே கொண்டு வர முயற்சிக்கவேண்டும்? கருத்தொற்றுமை பெற்று, மக்கள் வாக்கைப் பெற்று நாடாள வந்து பிறகு இதைச் செய்வதுதானே நியாயமான வழியாக இருக்கமுடியும்? அந்த வழிமுறையில் நம்பிக்கை இல்லாததால் பணம் ஒரு பக்கமும் பயம் ஒரு பக்கமுமாக இரட்டைத் தாக்குதலா?

எனக்கென்னவோ நடக்கிற மொத்தக்கூத்திலும் மன்மோகன் அம்பானி அத்வானி அமர்சிங் இடதுசாரி - எல்லாருமே தோல்பாவைகளாகத் தான் தெரிகிறார்கள். சூத்திரக்கயிறு கண்ணில் படவில்லை - ஊகிப்பதும் கடினமில்லை! 271 x 30 = ஏறத்தாழ 2 பில்லியன் டாலர்களில் இந்தியப் பாராளுமன்றத்தை - அதன் மூலம் India Inc ஐ வாங்கிவிடமுடியும் என்ற நம்பிக்கை அந்த சூத்ரதாரிகளுக்கு இப்போது வந்திருக்கும். நிம்மதிப் பெருமூச்சும் வந்திருக்கும்.

வாழிய பாரத மணித்திரு நாடு!

35 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் said...

எனக்கென்னமோ இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றிபெற அமெரிக்காவே தேவைப்படும் அளவுக்கு நிதி உதவி செய்திருக்கும் என்றே தோன்றுகிறது.
:)

இலவசக்கொத்தனார் said...

சும்மாவே மெல்லுவீரு. இப்போ உம்ம வாய்க்கு அவல். அம்புட்டுதான். நடாத்தும். ஆனா அதுக்காக உலகத்தையே படுத்தி எடுக்கும் எண்ணை விலையேற்றத்திற்குக் காரணம் இந்த ஒப்பந்தம்தான்னு சொல்லறது எல்லாம் ரூஊஊஊஊ மச்சு.

Syam said...

அட்டகாசமான பினாத்தல் :-)

Expatguru said...

நம் நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில் மின் அணு உற்பத்தி வெறும் 4 சதவிகிதம் தான். இந்த ஒப்பந்தம் இல்லாவிட்டால் மின்சாரம் இல்லாமல் தவிக்க வேண்டி வரும் என்பது ஒரு மாயை தான்.

ஒவ்வொறு மின் அணு நிலையத்துக்கும் ஆயுள் (shelf life) 30லிருந்து 35 வருடங்கள் தான். ஆனால் இந்த மின் அணு நிலையங்களிலிருந்து வெளியாகும் கழிவுப்பொருட்களின் ஆயுளோ பல ஆயிரம் வருடங்கள். இந்த கழிவுப்பொருட்களை மிக மிக ஜாக்கிரதையாக பாதுகாத்து வைக்க வேண்டும். இல்லையென்றால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு பல வருடங்களுக்கு பல நூறு கிலோமீட்டர்களுக்கு பரவிக்கொண்டே இருக்கும். அதன் பின்விளைவுகள் மிக பயங்கரமாக இருக்கும்.

அங்க உறுப்புகள் ஊனம், கர்பச்சிதைவு, ஊனமாக பிறக்கும் குழந்தைகள் என்று மிக கொடூரமாக இருக்கும். ஜப்பானில் நாகசாகி மற்றும் ஹிரோஷிமாவில் அணுசக்தி கதிர் வீச்சின் காரணமாக பாதிக்கப்பட்டோரே இதற்கு சாட்சி. அத‌னால் தான் இன்று கூட‌ க‌ல்பாக்க‌ம் அணு மின்நிலைய‌த்தில் க‌திர் இய‌க்க‌த்திலிருந்த‌ பாதுகாக்க‌ மிக‌ மிக‌ க‌டுமையான விதிமுறைக‌ள் உள்ள‌ன‌. ( Main Control Roomக்குள்ளே நானே சென்றிருக்கிறேன்).

அர‌சிய‌லை விட்டு விடுவோம். இன்று நில‌வும் எண்ணெய் விலை உய‌ர்வுக்கு கார‌ண‌ம் முழுக்க‌ முழுக்க Forward Traders எனும் சூதாடுப‌வ‌ர்க‌ள் (speculators) தான். மாற்று எரிபொருட்க‌ளை க‌ண்டுபிடிக்க‌ வேண்டிய‌ நேர‌ம் வ‌ந்து விட்ட‌து. ஆனால் அணு மின் நிலைய‌ங்க‌ளால் தான் முடியும் என்ப‌தை ஏற்றுக்கொள்ள‌ முடியாது.

திவாண்ணா said...

நேற்றைய சூப்பர் ஸ்பீச் - ஒமர் அப்துல்லா.
சூப்பர் சொதப்பல் ராகுல் காந்தி. முணுக்குனா கூட திரும்பி பாத்துகிட்டு.... தட்டு தடுமாறி..... ம்ம்ம்!

ஆனா இதுக்கு பின்னால அமேரிக்கான்னு நினைக்கிறீங்களே? கொத்தனா சொல்கிறா மாதிரி ரொம்பதான் far fetched!

Anonymous said...

mind blowing analysis

sathya said...

Nice post Money rules India not MEn

அகரம் அமுதா said...

அணுவாற்றல் உடன்பாட்டைப்பற்றி மிக அருமையாக அலசியிருக்கிறீர்கள் வாழ்த்துகள். அணுவாற்றல் உடன்பாட்டைப் பற்றி ஈற்றடி கொடுத்திருக்கிறேன் என் வலையில் வந்து எழுதுவேண்டுகிறேன் நன்றி

வல்லிசிம்ஹன் said...

இந்தச் செய்தியைப் படிக்கும் போதே அரசியல் வாடை எப்போதுக்கும் மேல், தூக்கலாக இருந்தது.:(

சின்னப் பையன் said...

//நாட்டுமக்களின் நலனுக்காக அரைமணி நேரத்தில் ஒப்பந்தத்தின் சாதக பாதகத்தைச் சீர்தூக்கி் முடிவெடுத்த அண்ணன் அமர்சிங்கின் அறிவாற்றல் வியக்கவைத்தது. அதைவிட வேகமாக பாதக அம்சங்களைப் புரிந்துகொண்ட மாயாவதியின் மக்கள் பற்று பிரம்மிக்க வைத்தது.
//

:-))))))))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கோவி கண்ணன். நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

கொத்தனார், வாய்க்கு அவலும் இல்லை ஒண்ணும் இல்லை. இது ஒரு தியரி. இதான் நடந்திருக்கும்னு சொல்ல நான் என்ன நாஸ்ட்ராடமஸ் ஆ? இப்படி நடந்திருக்க வாய்ப்புகளும் இருக்கின்றன, வரலாறும் இருக்கிறது..

நன்றி ஸ்யாம். (காமெடியா உண்மையாவேவா?)

எக்ஸ்பாட்குரு, அணுசக்தி, அணு ஆயுதம் - எல்லாமே டேஞ்சரஸ்தான், இல்லைன்னே சொல்லலை. ஆனா மின்சாரத்தேவையைச் சரிக்கட்ட அதைவிட்டா வேற வழியும் இல்லை. பெட்ரோல் டீஸல் எஞ்சின்களாலும் நிலக்கரியாலும் கூட ஓசோன் படலம் ஓட்டை விழுந்துகிட்டே இருக்குது. எரியற கொள்ளியில எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்திகிட்டு, இஷ்டதெய்வத்தையும் கூடவே வேண்டிக்கவேண்டியதுதான்.

மாற்று எரிபொருள்களைக் கண்டுபிடிக்கவேண்டியதன் அவசியம் ரொம்ப நாளாவே இருக்கிறது. இன்னும் வராததுதான் பிரச்சினை.

திவா, கொத்தனாருக்குச் சொன்னதேதான் உங்களுக்கும். Far fetched என்பதை நான் மறுக்கவில்லை. ஒரு தியரிதான் நான் முன்வைப்பது.

பினாத்தல் சுரேஷ் said...

அனானிமஸ், இது திட்டா வாழ்த்தா :-)

நன்றி சத்யா. உண்மை. பணம் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் :-)

நன்றி அகரம் அமுதா. கூடியவிரைவில் வருகிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

வல்லி அம்மா, இந்தத் தலைப்புல இன்னி டேட்டுக்கு அரசியல் எழுதாம வேறென்ன எழுதமுடியும் :-) நன்றி.

நன்றி ச்சின்னப்பையன்.

திவாண்ணா said...

//மாற்று எரிபொருள்களைக் கண்டுபிடிக்கவேண்டியதன் அவசியம் ரொம்ப நாளாவே இருக்கிறது. இன்னும் வராததுதான் பிரச்சினை.//

வருஷம் 300 நாள் வெயில் அடிக்கிற நம் நாட்டிலே சூரிய ஒளியிலேந்து மின் சக்தி உண்டாக ஒரு ஆராய்ச்சியும் இருக்கிறதா காணோம்!

பினாத்தல் சுரேஷ் said...

சூரிய ஒளி மின்சாரம் மாசே ஏற்படுத்தாதது என்பதும் ஒரு மாயையே. http://www.eia.doe.gov/kids/energyfacts/sources/renewable/solar.html

சூரிய ஒளி மின்சாரத்துக்கு நிறைய பரப்பளவு தேவைப்படும். கண்ணாடிகள் - அவை வெளிப்படுத்தும் வெப்பம் - கதிரியக்கமும் கூடத்தான்..

மேலும் மின்சாரம் எடுக்கும் இடங்கள் விளைநிலமாக இருந்தாலும் - இனி இருக்கமுடியாது.

சூரியஒளி மின்சாரம் ஒரு மாற்று அல்ல - மரபுசாரா மின் தயாரிப்பு முறை அவ்வளவே.

Unknown said...

ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல. நடந்தத பாத்தா, நம்ம கேங்குக்கு பண்ணை வேலை செய்ய விசா ரெடியாச்சு போலத்தான் தெரியுது :(

ambi said...

//271 x 30 = ஏறத்தாழ 2 பில்லியன் டாலர்களில் இந்தியப் பாராளுமன்றத்தை - அதன் மூலம் India Inc ஐ வாங்கிவிடமுடியும் //

செம நச். நானும் இதே தியரியை தான் நினைத்தேன். நம்பிக்கைக்கு ஆதரவா வாக்களிக்கவே காங்கிரஸ் எம்பிக்கள் கூட தலைக்கு இவ்வளவுனு வாங்கி இருக்கலாம். who knows..? :)

இலவசக்கொத்தனார் said...

//இதான் நடந்திருக்கும்னு சொல்ல நான் என்ன நாஸ்ட்ராடமஸ் ஆ?//

நடக்கப் போவதைச் சொன்னவரு இல்ல அவருன்னு நினைச்சேன். வெறும் நடந்ததைச் சொல்பவர்தானா...

கோவை விஜய் said...

//ambi said...
//271 x 30 = ஏறத்தாழ 2 பில்லியன் டாலர்களில் இந்தியப் பாராளுமன்றத்தை - அதன் மூலம் India Inc ஐ வாங்கிவிடமுடியும் //

செம நச். நானும் இதே தியரியை தான் நினைத்தேன். நம்பிக்கைக்கு ஆதரவா வாக்களிக்கவே காங்கிரஸ் எம்பிக்கள் கூட தலைக்கு இவ்வளவுனு வாங்கி இருக்கலாம். who knows..? :)//


வாழ்க இந்தியா!
வாழ்க ஜனநாயகம்!

வாழ்க மக்கள்!

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

திவாண்ணா said...

சுரேஷ்,
படிச்சேன்.
//Using solar energy produces no air or water pollution but does have some indirect impacts on the environment. For example, manufacturing the photovoltaic cells ..., consumes silicon and produces some waste products. In addition, large solar thermal farms can also harm desert ecosystems if not properly managed.//

ரொம்பவே பொத்தாம் பொதுவா இல்லே?
சிலிகான் என்னன்னுதான் உங்களுக்கே தெரியும். some waste products????? அவை என்ன என்ன?
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு சோலார் பானல் மாதிரி வர முடிஞ்சதுனா அதால அந்த வீட்டோட சக்தி தேவையை பூர்த்தி செய்ய் முடிஞ்சாக்கூட போதும். எங்கேயோ போயிடுவோம். இப்ப அதுல இருக்கிற பிரச்சினை விலைதான். அதுக்குத்தான் ஆராய்ச்சி வேணூம்னு சொல்றேன்.

Syam said...

//(காமெடியா உண்மையாவேவா?)//

சத்தியமா உண்மைங்க( நான் எது சொன்னாலும் காமெடியாவே தெரியுது) :-)

seethag said...

பெனத்த்ஸ் இவ்வளவு அசிங்கமான நிலைமைக்கு உங்களுடய பொது ஜனம் ஆகிய நாமெல்லாரும் தான் காரணம்..இப்படி ஆட்ச்சியாளர்களை நாம் தானே தெரிந்தெடுத்தோம்?

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபுணர்கள் சொல்றது சிலனேரம் எல்லாம் உண்மையாவும் இருக்கிறது இல்லை. எல்லாருகும் ஒரு அஜெண்டா இருக்கும் போது எதை நம்புறதுனு நமக்கெல்லாம் குழப்பம் வேற...

கயல்விழி said...

அணு சக்தி அரசியலைப்பற்றி எழுதி இருக்கிறீர்கள். கடந்த வாரம் நானும் இதையே தான் விவாதித்தேன். அணு சக்தியைப்பற்றிய பயங்கள் தேவை தான் என்றாலும் it's blown out of proportion. Nice post!

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க தஞ்சாவூரான், ஆமாமாம் - நீங்க பண்ணை வேலைக்கு போட்டு வச்ச போர்ட்போலியோவுக்காவது வேலை வேணாமா?

நன்றி அம்பி. வாங்குவது என்றால் முழுமையும் வாங்கவேண்டும் என்பதில்லையே..கண்ட்ரோலை மட்டும் வாங்கினால் போதுமே.

நன்றி விஜய்.

பினாத்தல் சுரேஷ் said...

திவா,

பொத்தாம்பொதுவா மட்டுமில்லை, ரொம்ப கன்ப்யூஸிங்காகவுமே இருக்கிறது. ஒரு இடத்தில் சோலார் பவர் தெய்வம் என்கிறார்கள், ஒரு இடத்தில் யூஸ்லஸ் என்கிறார்கள் - கூகுள் கொட்டுவதையெல்லாம் நம்பமுடியாதுதான் என்றாலும் டயமெட்ரிகலி ஆப்போஸிட்!! உண்மை, வழக்கம்போல இரண்டுக்கும் நடுவே இருக்கிறது.

கொத்தனார்,

//நடக்கப் போவதைச் சொன்னவரு இல்ல அவருன்னு நினைச்சேன். வெறும் நடந்ததைச் சொல்பவர்தானா...// எழுதும்போதே நெனச்சேன். இப்படி ஒரு லூப்ஹோல் தலைவர்கிட்ட கிடைச்சா சும்மாவா விடுவார்னு.. கப்புனு புடிச்சிகிட்டீங்க .. என்சாய்.

நன்றி ஸ்யாம். (பயமா இருக்குதே இந்தக்காலத்துல :-)

சீதா, உண்மை. அதுவும் அணுசக்தி என்று வந்துவிட்டால் சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் will have a field day.. அப்போது மட்டும், அதிகமாக எரியப்போகும் நிலக்கரியும் பெட்ரோலியமும் எந்த சுற்றுப்புறச்சூழல் பாதிப்பும் ஏற்படுத்தாது போல!

கயல்விழி.. உங்கள்பதிவையும் பின்னூட்டங்களையும் படித்தேன். நான் சொல்லவிரும்பியவை அனைத்தும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டிருந்ததால் விட்டுவிட்டேன்.

Blown out of proportions - சரியான வார்த்தை. எப்படி இருக்கிறதென்றால் - வானில் போகும் விமானம் கட்டுப்பாடிழந்து, அது ஒரு பெட்ரோல் டாங்கியின் மீது விழுந்து, அது பற்றியெரிய ஆரம்பித்து காடும் வீடும் அழிய வாய்ப்பிர்ருக்கிறது - எனவே விமானங்களே கூடாது என்று சொல்வது போல!

Sridhar V said...

நல்ல விவாதம்.

எனக்குத் தெரிந்து 93-ல் கூட இதே மாதிரி பணம் விளையாடியது. அப்புறம் நரசிம்மராவ் மேல கேஸ் எல்லாம் போட்டாங்க. நம்மாளுங்களுக்கு புதுசா சொல்லியா தரனும்? அதுனால்தான் என்னவோ இந்த முறை அமெரிக்கா, ஈரான் எல்லாம் இதுல சம்பந்தபட்டிருப்பாங்கன்னு சொல்ல முடியலை.

உண்மையை சொல்லப்போனால் மாற்று எனர்ஜி தேவைகள் அமெரிக்க அரசினை விட அதிக வலிமை வாய்ந்தவை. அதிலும் அணுசக்தி ஒரு green energy வேறு.

123 ஒப்பந்தம் பற்றி பல்வேறு தவறான கருத்துகள் கூட நம்மை இப்படி சிந்திக்கத் தூண்டலாம்.

எந்தவொரு வியாபார ஒப்பந்தமுமே win-win அடிப்படையில் இருப்பது இருசாராருக்கும் நலம். இந்த 123 ஒப்பந்தத்தை ஹைட் சட்டத்தோடு இணைப்பதினால் பிற்பாடு பாதகமான சூழ்நிலை வர வாய்ப்புகள் அதிகம். win-loss ஆக மாறிவிடலாம்.

கம்யூணிஸ்டுகளின் கவலை நியாயமே. இண்டிஜீனியஸாகப் போகலாம் என்கிறார்கள்.

பிஜேபி - ஹைட் ஆக்ட் இல்லாத 123 ஒப்பந்தம் நலம் என்கிறார்கள்.

காங்கிரஸ் - இதே ஒரு நல்ல வாய்ப்பு என்கிறார்கள்.

இதை விவாதித்தே கூட நாம் முடிவு செய்யலாம். ஆனால் ஆட்சி அதிகாரம் என்பது ஒரு போதைதானே. அதனால்தான் இப்படி ஒரு ஆட்டம். அமெரிக்க சூத்திரக் கயிறு இல்லாமலேயே இந்த ஆட்டம் போடக் கூடியவர்கள்தான் நமது பிரதிநிதிகள் என்பது எனது கணிப்பு. :-) தவறாகவும் இருக்கலாம்.

இலவசக்கொத்தனார் said...

//கொத்தனார்,

//நடக்கப் போவதைச் சொன்னவரு இல்ல அவருன்னு நினைச்சேன். வெறும் நடந்ததைச் சொல்பவர்தானா...// எழுதும்போதே நெனச்சேன். இப்படி ஒரு லூப்ஹோல் தலைவர்கிட்ட கிடைச்சா சும்மாவா விடுவார்னு.. கப்புனு புடிச்சிகிட்டீங்க .. என்சாய்.//

உம்ம ஊரில் மண் அதிகம் இருந்தாலும் உமக்கு மீசை இல்லையே. அதனால ஒட்டலைன்னே வெச்சுக்கலாம். :)

ச.சங்கர் said...

//////இதான் நடந்திருக்கும்னு சொல்ல நான் என்ன நாஸ்ட்ராடமஸ் ஆ?//

///நடக்கப் போவதைச் சொன்னவரு இல்ல அவருன்னு நினைச்சேன். வெறும் நடந்ததைச் சொல்பவர்தானா...///

அவரு நடந்ததையும் சொல்லலை, நடக்கப் போறதையும் சொல்லலை. அவரு மனசுக்கு பட்டதைச் சொல்லிட்டு போயிட்டாரு. வேலையத்தவனுங்க அதை ஆராய்ச்சி பண்ணி அவர் அதைத்தான் சொன்னாரு..இதைத்தான் சொன்னாரு அப்படீன்னு சொல்லி புத்தகம் போட்டு காசு சம்பாதிச்சிக்கிடு போறானுங்க.(கிட்டத்தட்ட நம்ம ஊரு கிளி சோசியக்காரர் கிளி எடுத்துக் குடுக்குற கார்டுக்கு கச்சிதமா கதை சொல்லுவாரே அப்படி)

ச.சங்கர் said...

கச்சா எண்ணை விலை உயர்வுக்கும் இதற்கும் தொடர்பு என்பது நூலிழை கூட நம்ப ஆதாரம் இல்லை என்றே எண்ணுகிறேன்.

Forsith ரொம்ப படிக்காதீங்க :)

மத்த படி பதிவு நல்லா இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

சுரேஷ் ,அரசியல் ஏன்று உங்கள்ள் பதிவைச் சொல்லவில்லை. டெல்லியில் நடக்கும் மோசமான அரசியல் வாடையைச் சொல்லி இருந்தேன்மா.

Sridhar V said...

சுரேஷ்,

இதைப் படிச்சீங்களா?

http://www.kumudam.com/magazine/Reporter/2008-07-31/pg2.php

:-)) வரிகளுக்கு இடையே அதிகம் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

பினாத்தல் சுரேஷ் said...

ஸ்ரீதர்,

//ஆட்சி அதிகாரம் என்பது ஒரு போதைதானே. அதனால்தான் இப்படி ஒரு ஆட்டம்.//

சரியாகச் சொன்னீர்கள்.

// அமெரிக்க சூத்திரக் கயிறு இல்லாமலேயே இந்த ஆட்டம் போடக் கூடியவர்கள்தான் நமது பிரதிநிதிகள் என்பது எனது கணிப்பு//

நான் சொன்ன விஷயங்களின் டைமிங்.. ஆச்சரியமாக இருக்கிறது.
இன்றோடு 25 $ குறைந்திருக்கிறது பெட்ரோல் விலை.

கொத்தண்ணா..

//உம்ம ஊரில் மண் அதிகம் இருந்தாலும் உமக்கு மீசை இல்லையே. அதனால ஒட்டலைன்னே வெச்சுக்கலாம். :)//

நான் மீசை வச்சிருக்கறதையும் வச்சில்லாததையும் என் கண்ணாடியவிட கரெக்டா தப்பா சொல்றீங்களே :-)


ச சங்கர்..

//வேலையத்தவனுங்க அதை ஆராய்ச்சி பண்ணி அவர் அதைத்தான் சொன்னாரு..இதைத்தான் சொன்னாரு அப்படீன்னு சொல்லி புத்தகம் போட்டு காசு சம்பாதிச்சிக்கிடு போறானுங்க.//

அப்படி போடுங்க..

ஈராயிரம் ஆண்டப்பால் ஓராயிரம் முடிகொண்ட
இருகால்கொண்ட மிருகம் இருகண்ணால் பார்த்திட்டு
ஒருநாட்டை ஆண்டிடவே கோடியில் வாக்கெடுப்பான்..
வருங்காலம் உரைத்தேன் காண்!

இதுக்கு அர்த்தம் சொல்லி நீங்களும் புக்கு போடுங்க!

//Forsith ரொம்ப படிக்காதீங்க :)//

சரிதான் :-)

வல்லிம்மா.. அரசியல்ல இதெல்லாம் சகஜமம்மா :-)

ஸ்ரீதர்.. ஆமாம் :-)

நல்லதந்தி said...

இப்பவே கரண்ட் கட்டுன்னு இவ்வளவு அல்லாடிக்கிட்டு இருக்கோம்.இன்னும் நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல அணுசக்தி ஒப்பந்தம் தேவையென்றே நினைக்க வேண்டி இருக்கிறது.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ஸ்ரீதர் சொல்வது அனைத்தும் ஒத்துக்கொள்ளக் கூடியவை.

ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்ற உடன் ஆயில் விலை குறைவதுதான் கேள்விகளை எழுப்புகிறது என நினைக்கிறேன்..

rahini said...

அசத்தல் மன்னர் நீர்தான்

 

blogger templates | Make Money Online