Nov 25, 2013

3டி - சத்தியமா சாத்தியமா..

@rasanai  இப்படி ஒரு ட்விட் போட்டு ஆரம்பித்துவைத்தார்:

வீடியோ ஃபோன்,வேலைக்கார ரோபாட்கள் போன்றதொரு உருப்படாத,வரப்போகாத டெக்னாலஜியே 3டி ப்ரிண்டிங். #MarkMyWords

3டி ப்ரிண்டிங் பற்றி என் கருத்துகளைச் சொல்வதற்கு முன்பாக கொஞ்சம் ரீவைண்ட். 

90களின் இறுதியில் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் என்ற சித்தாந்தம் பிரபலமாகத் தொடங்கியபோது, இணையம் என்பது இல்லாத ஒன்று, இருந்தாலுமே 14 Kbps மோடம்கள்தான் அதிவேக இணைப்புகள். அன்று வீட்டில் இருந்த கம்ப்யூட்டர்கள் வார்ட் ஆர்ட்டில் பூப்போடவும் ஜிகுஜிகா என்று ஸ்கின்மாற்றிய வின் ஆம்ப் பாட்டுப்பாடவும் மட்டும்தான் உபயோகமாயின. அன்று கம்ப்யூட்டர் வாங்கினவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? இன்று 3டி ப்ரிண்டர் வாங்கி வீட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பவர்களும் அதே கேட்டகிரிதான்.

வீடியோஃபோன் என்பது இன்று ஸ்கைப்பாக வளரவில்லையா? 

வேலைக்கார ரோபோட்களை ஐஸ்வர்யாவைக் காதலிக்கும் ரஜினி போலத் தேடினால் கிடைக்காது. கொஞ்சம் அக்கம்பக்கம் உள்ள ஃபேக்டரிகளுக்குப் போய்ப்பாருங்கள் - 20 வருடங்களுக்கு முன்னே மனிதர்கள் செய்துகொண்டிருந்த அபாயகரமான வேலைகளை ரோபோக் கரங்களும் கால்களும் செய்துகொண்டிருக்கின்றன. கூலிங் கிளாஸ் போடுவதில்லையே தவிர்த்து அவையும் ரோபோதான், வேலை செய்கின்றனதான். ஹ்யூமனாய்ட் என்ற வகை ரோபோக்களுக்குத் தேவையில்லை, எனவே வரவும் இல்லை. இரண்டு ரோபோக்கரங்களையும் கால்களையும் ஒரு ஷோகேஸ் பொம்மைக்கு மாட்டிவிட்டு டாக்கிங் டாம் போன்ற சாஃப்ட்வேரைச் சேர்த்துவிட்டால் இன்றேகூட அப்படி ஒரு ரோபோவைத் தயாரித்துவிடலாம். 

டெக்னாலஜிக்கும் டார்வின் தியரி செல்லுபடியாகும். தகுதியுள்ளதுதான் தப்பிப்பிழைக்கும். செல்ஃபோன்கள் பிரபலமடையத் தொடங்கிய நாட்களில் (இன்கமிங் 5 ரூபாய்/நிமிடம், அவுட்கோயிங் 10 ரூபாய்/நிமிடம்) வில்ஃபோன் (WLL Phone) என ஒரு ஜந்து குறைப்பிரசவம் ஆனது யாருக்காவது நினைவிருக்கிறதா? அன்றைய தேதியில் அது செல்ஃபோனைவிட மலிவு. ஆனால் என்ன, தாய் டவரில் இருந்து 3 கிலோமீட்டருக்குமேல் வேலை செய்யாது. 2-3 வருடங்களிலேயே 1000 ரூபாய்க்கு செல்ஃபோனும் 10 பைசா கால்களும் வந்ததில் வில்ஃபோன் வீணாகிப்போனது.

இப்போது 3டி பிரிண்டருக்கு வருவோம். இன்றைய தேதியில் 3டி பிரிண்டரில் என்னவெல்லாம் சாத்தியம்? நாம் கொடுக்கும் 3டி உருவத்தை, ப்ளாஸ்டிக்கில் அதே வண்ணத்தோடு உருவாக்கும். அவ்வளவுதான். வெவ்வேறு வகையான மெட்டீரியல்கள் சாத்தியமில்லை. இரண்டு பொருட்களின் அசெம்ப்ளி சாத்தியமில்லை. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு குணாதிசயங்கள் தேவைப்படும் பொருட்களை 3டியில் வடிவமைக்க முடியாது.

கொஞ்சம் உற்பத்தி முறையையும் பார்த்துவிடலாம். பத்து பைசாவுக்குக் கிடைக்கக்கூடிய சாதாரண போல்ட் தயாரிப்பதில் எத்தனை சிறு சிறு ப்ராசஸ்கள் உள்ளடங்கி இருக்கின்றன தெரியுமா? இரும்பை உருக்கி ஃபவுண்டரியில் அறுகோண ராடாகத் தயாரிக்க வேண்டும். அளவுக்கு வெட்டி, அதை ராட்சத உருளைகள் இடையே கொடுத்து நசுக்கி மரை (Thread) உருவாக்க வேண்டும். உருவாக்கியதை ஒவ்வொரு இடத்துக்கு ஒவ்வொரு வகையாக Anodising Carbonizing, Nitriding, Induction hardening என்று படுத்தி எடுக்க வேண்டும் - இவ்வளவு வேலை ஆனபிறகு 10 பைசாவிற்கு விற்க வேண்டும் என்றால் ஒரு போல்ட் தயாரித்தால் வேலைக்காகாது, கோடிக்கணக்கில் செய்தால்தான் கட்டும். ஒரு போல்ட் தயாரிக்கும் மெஷின் ஷாப்பில்கூட Foundry, Cold Press, Heat Treatment என்று பலவகையான உப ஷாப்கள் இருந்தே ஆகவேண்டும். - இத்தனையையும் ஒரு ப்ரிண்டர் செய்துவிட முடியுமா?

இன்றைக்கு உள்ள உற்பத்தித்துறையிலும் கம்ப்யூட்டர்கள் ந்யூமரிகல் கண்ட்ரோல், CNC,  என்று பல வருடங்களுக்கு முன்பாகவே ஆரம்பித்து ஆதிக்கம் செலுத்தத்தான் செய்கின்றன. ஆனால் பெரும்பாலும் அவை தனித்தனி ப்ராஸஸ்களுக்குதான் உதவுகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் இவை உடனே மாறக்கூடியது போலத் தோன்றவில்லை.

ஆனால் நம்முடைய எண்ணங்களின் வேகத்தை பலநூறு மடங்கு தாண்டக்கூடியதாகத்தான் தொழில்நுட்பம்  இருந்துவருகிறது. 15 வருடத்துக்கு முன்பு எதற்கு கம்ப்யூட்டர் என்று கேட்டோம், 10 வருடம் முன்பு ஏன் செல்ஃபோன் என்று கேட்டோம், இன்று இரண்டையும் சேர்த்து கைக்குள் வைத்துக்கொண்டு ஊர்சுற்றுகிறோம்.

நாளை நாம் உபயோகிக்கும் இயந்திரங்களின் பெரும்பாலான பாகங்கள் ப்ளாஸ்டிக்கில் - இத்தனை ப்ராசஸ்கள் தேவைப்படாத ப்ளாஸ்டிக்கில் உருவாக்கப்படலாம். பல்வேறு விதமான கனிமங்கள் - இங்க்ஜெட் ப்ரிண்டர் கார்ட்ரிட்ஜ் போல உருவாக்கப்பட்டு தேவையான அளவு இஞ்செக்ட் செய்யப்பட்டு, பிறகு ஹீட் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படவும் சிறு கம்பார்ட்மெண்டுக்குள்ளேயே ஏற்பாடு செய்யப்படலாம் - அப்படி நடக்கும்போது முழுமையான பாகம் ப்ரிண்டரில் இருந்து வெளிவர வாய்ப்பிருக்கிறது.

உற்பத்தி மையங்கள் ஒரு இடத்தில் இருப்பதற்கான காரணங்களை இந்த 3டி ப்ரிண்டர்கள் முறியடிக்குமாயின் - அதற்கான ஆராய்ச்சிகள் நிச்சயம் நடந்துகொண்டுதான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை - அது சாதாரண மனிதன் வாழ்வில் என்னென்ன தாக்கத்தை உண்டுசெய்யும்?

நிச்சயமாக ஒரு காரை நெட்டில் டவுன்லோட் செய்து உடனுக்குடன் ப்ரிண்ட் கொடுத்து ஓட்டிச் செல்லமுடியாது. காரின் 5000 உதிரிபாகங்களைத் தனித்தனியாக ப்ரிண்ட் செய்யலாம். அவற்றை அசெம்பிள் செய்ய மெக்கானிக்கைக் கூப்பிட்டு 5 கார் வாங்க ஆகும் செலவைச் செய்யலாம் :-)

ஆனால் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் உதிரிபாகங்களை ப்ரிண்ட் செய்யும் வசதி வந்துவிட்டால் - எவ்வளவோ செலவுகள் மிச்சப்படும். குடோன்கள் தேவையில்லை, கப்பல் விமானத்தில் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. துருப்பிடித்துவிடுமா கெட்டுவிடுமா என்ற பயம் தேவையில்லை. அச்சு அசல் அதே தரத்துக்கு சுடச்சுடத் தயாராகி வந்துவிடும். ஆனாலும் இவை பேக் எண்டில்தான் நடக்கும் என்பதால் ஆம் ஆத்மிக்கு செலவு மிச்சம் மட்டும்தான் தெரியும் - இன்று கண்ணுக்கு மறைவாகவே இருக்கும் ரோபோக்கள் போல!

சின்னச் சின்ன விஷயங்கள் வீட்டில் ப்ரிண்ட் செய்யும் அளவுக்கு வரலாம், அவை பெரிய மாற்றத்தை உண்டுசெய்யாது - ஒற்றைக்குணம் படைத்த பொருள்களாகத்தான் பெரும்பாலும் இருக்கும், அசெம்ப்ளி தேவைப்பட்டால் IKEAத்தனமான ஒரு வரைபடமும் கூடவே வரும். ஆனால் இதெல்லாம் கேம்சேஞ்சர் இல்லை.

இன்றேகூட 3டி பிரிண்டர்களை முழுவதும் வேஸ்ட் என்று சொல்லிவிடமுடியாது. முழு அளவிலான பாகங்களை வடிவமைப்பதற்கு முன்பு சிறு மாடல்களைச் செய்து ஆராய்ச்சி செய்து பின் பெரிய அளவில் தயாரிப்பது என்பதெல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது - பெரிய அளவில் செய்வதைவிட இது எவ்வளவோ செலவு மிச்சம். மருத்துவத்துறையிலும் கூட செயற்கைக் கண்கள், பல்செட், எலும்பு பாகங்கள் - இவற்றைத் துல்லியமாக 3டியில் பிரிண்ட் செய்து வெற்றி கண்ட கதைகளை இங்கே காணலாம். 

நான் பீஹாரில் வேலை செய்த காலத்தில் ஒரு உதிரிபாகம் கெட்டுப்போனால், மாற்று பாகம் வர, பீஹாரில் இருந்து சென்னைக்கு - சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு - அமெரிக்கா-சென்னை பீஹார் என்று வந்து சேர 2-3 மாதங்கள்கூட ஆகும். வந்தபிறகு பிரித்துப்பார்த்தால் தவறான பார்ட் நம்பர் என்று பொருந்தாமல் போன சந்தர்ப்பங்களும்கூட உண்டு. இப்போதெல்லாம் உலகமயமானபிறகு தகவல்கள் வேகமாகச் செல்கின்றன - இருந்தாலும் முறை என்னவோ அதேதான். அமெரிக்கா சென்னை பொருள் வந்துதான் ஆகவேண்டும் - அதற்கான நேரம் செலவாகத்தான் செய்யும். இந்த நேரச்செலவையும் பயணச்செலவையும் 3டி ப்ரிண்டர்கள் பெருமளவு குறைக்கும் - இது எல்லாருக்குமே நல்லது.

முடிவுரையாக - 3டி ப்ரிண்டர்கள் வரத்தான் போகின்றன - ஆனால் அது நம் கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு மாற்றம் ஏற்படுத்துமா என்றால், எங்கே பார்க்கிறீர்கள் என்பதைப் பொருத்தது.

உரையாடலில் ஆக்கபூர்வமாகப் பங்கேற்று, இதை எழுதத்தூண்டிய @mokrish @orupakkam @dtwdy @Rasanai @msathia - ஆகியோர்க்கு நன்றி.

Oct 7, 2013

இடைவேளை - புத்தக விமர்சனம்

மதிப்பீடுகள் எல்லாக்காலத்திலும் மாறிக்கொண்டுதான் வந்திருக்கின்றன. பாட்டனார் காலத்து குடுமி தந்தை காலத்து கிராப்பாக மாறியது, பவுடர் போடுவது ரவிக்கை அணிவது.. எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிய மதிப்பீடுகள்தான். தெளிவாக ஓடும் ஓடை போன்று.

ஆனால் 90களின் இறுதியில் தகவல் தொழில்நுட்பம் தாராளமயத்துடன் திருமணம் செய்துகொண்டபின் ஏற்பட்ட மாற்றங்கள் ஆயிரம் அடி மேலிருந்து விழுந்த அருவிபோன்ற மாற்றம். மாற்றங்களின் வேகம் பிரமிப்பூட்டுவதாக இருக்கும் என்று ஆல்வின் டாஃப்ளர் Third Waveல் எச்சரித்திருந்தாலும் வாழும்போதுதான் தாக்கம் பளீரென்று அறைகிறது.

மத்தியவர்க்கத்துக்கு வாழ்நாள் ஆதர்சமே ஒரு வெஸ்பாவும் தர்ட்டிஃபார்ட்டியுமாக இருந்த நாட்கள் சட்டென்று மாறி கனவுகளாக இருந்த வசதிகள் கையருகே வந்து விழுந்தது ஐடி காசால். கால்காசானாலும் கவர்மெண்ட் காசு என்றிருந்த வர்க்கம் எதற்கெடுத்தாலும் கவர்மெண்டைத் திட்ட ஆரம்பித்தது "சான்ஹோசேலே ரோடெல்லாம் பார்க்கணும் நீங்க"

மாற்றங்கள் சீராக இருந்தபோது அந்த மாற்றங்களை ஏற்கும் மனப்பக்குவமும் இருந்தது. எது நிரந்தரம் எது தற்காலிகம் என்ற புரிந்துணர்வும் இருந்தது. அடுத்த தலைமுறையில் புதிய மாற்றங்கள் பழக்கப்பட்டும் போகலாம்.ஆனால் மாறுதல் நடக்கும் இன்றைய காலகட்டத்தில் வேகமாக மாறும் கியருக்குல் சிக்கிய ஈசல்களாகத்தான் நாம் இருக்கிறோம் - பழைய வேகத்தில் தாக்குப்பிடித்திருக்கக்கூடிய ஈசல்கள், புதுவேகத்தில் அடிபடும் ஈசல்கள் - அப்படிப்பட்ட ஈசல்களைத்தான் இந்தக் கதை பேசுகிறது.

பொருளாதாரத் தேக்கம் (இந்த வார்த்தை அந்த நிகழ்வு தந்த (தரும், தரப்போகும்) வலிக்கான நியாயத்தைத் தராமல் மென்மையாகவே இருக்கிறது) - ஏற்படும்போதுதான் முந்தைய வேலைமுறையில் இருந்த நிரந்தரத்தன்மை, தாய்போல் பரிந்தூட்டும் நிர்வாகத்தின் பழைமையான மனிதாபிமானமும் புரிபடுகிறது. இன்றைய கார்ப்பரேட்டுகள் கூலிகளைத் தங்கள் தேவைக்கேற்ப மட்டுமே சமைக்கின்றன - கருவேப்பிலையாகத் தூக்கிப்போடப்படும்போதுதான் இந்த உண்மையே உரைக்கிறது.

கல்யாணராமன் நல்ல நிர்வாகிதான். ஆனால் அந்த நிறுவனத்துக்காகச்  சமைக்கப்பட்டவன். ஆண்டிவைரஸில் பக் இருக்கிறதா என்று பார்ப்பது அவன் வேலையும் இல்லை, இருந்தால் பதில் சொல்ல பெரிய கார்ப்பொரேட்டில் பல துறைகள் இருக்கின்றன. ஆனால் ஸ்டார்ட்டப்பில் எல்லாப்பணமும் முதலாளிக்கு, எல்லாப் பொறுப்பும் அவனுக்கு என்ற நிலைமைக்குத் தயாரிக்கப்பட்டவன் இல்லை.

ரஞ்சன் நல்ல ப்ளானர்தான். ஆனால் அவனுடைய திட்டங்களைச் செயல்படுத்த குறைந்தபட்ச நேர்மை உள்ள ஆட்கள் தேவை. அறம் பாடிக் காசு பிடுங்கும் நிலைமையில் நூறாண்டுகள் கடந்தும் இருக்கும் துறைகளில் அவன் புத்திசாலித்தனத்துக்குப் பிரயோஜனம் கிடையாது.

ஆர்த்தி நல்ல விற்பனையாளர்தான் - எம் எல் எம்முக்கு அல்ல.

வேலை போனால் என்ன - சமாளித்துக்கொள்ளலாம் - என்ற நிலையில்தான் கதை ஆரம்பிக்கிறது - அதில் beginners luck வெற்றிகளும் தெரியத்தான் செய்கின்றன. ஆனால் ஈமெயிலில் வேலை நடக்காது, சம்பளத்தை அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் டெபிட் செய்யாது, தேவையான ஆட்களை எச் ஆர் தராது - போர்வையைக் கழட்டிவிட்ட நிஜ உலகம் கதாபாத்திரங்களுக்குத் தன் தரிசனத்தைக் காட்டுகிறது.

அன்றைய நாளும் அன்றைய டார்கெட்டும் அன்றைய ப்ரசண்டேஷனுமே புரிந்த கார்ப்போரேட் வாழ்க்கை வேறு. 16 மணிநேரம் வேலையே கதியாக இருந்தாலும் நேற்று நினைவில் இல்லை, நாளை பற்றி நினைக்க நேரமில்லை. ப்ரசண்டேஷன் முடிவிலான கைதட்டல்களும், இன்க்ரிமெண்ட்களும் நம் திறமையைப்பற்றிய லார்ஜர் தன் லைஃப் பிம்பம் நமக்குள் ஏற்பட்டுவிடுகிறது. எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் சமாளித்துவிடமுடியும் என்ற நிஜத்தை மீறிய எண்ணங்கள் நிஜத்தைச் சந்திக்கும்போது சுக்குநூறாகிறது.  நம் திறமைகள் குறிப்பிட்ட கூலித்திறனுக்காக உருவாக்கப்பட்டவை என்ற உண்மை  நம்மைப்பார்த்துச் சிரிக்கும்போது காலம் கடந்துவிட்டிருக்கிறது.


மொத்தமாக நாவலைப் படிக்கவே 1 மணிநேரம்தான் தேவைப்பட்டது என்னும் அளவுக்கு வேகம் இருந்தாலும்.. படித்து முடித்துவிட்டு நீண்டநேரம் யோசிக்க வைத்த கதை. 

புதிய களம்தான் - ஆனால் இன்றைய கார்ப்போரெட் கூலிகள் சுலபமாக அடையாளம் காணக்கூடிய களம் - அவர்கள் வாழ்க்கையைப்பற்றிய புதிய கோணத்தைக் காட்டக்கூடியது என்பதால், சிந்திக்கவைக்கும் என்பதால் - நிச்சயம் படித்தே ஆகவேண்டிய நாவல்.

நன்றி வெங்கடேஷ்.
Jun 23, 2013

இந்தக்கால எஞ்சினியர்கள்

ஒத்திசைவு எழுதிய பதிவாகட்டும், ஜெமோ எழுதிய பதிவாகட்டும், பேசுபொருள் வேறாக இருந்தாலும் தொனி என்னவோ ஒன்றேதான். நம்ம ஊர் எஞ்சினியர்கள் எல்லாம் சும்மா வெத்துவேட்டு, அந்தக்காலம் போல வருமா..

ஏனோ தெரியவில்லை, இந்தத் தொனியை மட்டும் நான் அந்தக்காலம் முதலே வெறுத்து வருகிறேன். இந்தக்கூற்றில் சிலவேளைகளில் உண்மை இருக்கலாம் என்றாலும் பலவேளைகளில் உண்மை இருப்பதில்லை என்பதே என் அனுபவம்.

25 வருடங்களுக்கு முன்பாக நான் சென்ற இண்டர்வியூக்களில் "ஓம்ஸ் லா கூடத் தெரியாதா? என்னதான் படிச்சிட்டு வரீங்களோ" என்ற கேள்வி இன்றுவரை மாறவில்லை.அப்புறம் என்ன அந்தக்காலம் இந்தக்காலம்?

பாடத்துக்கும் வாழ்க்கைக்குமான வேறுபாடுகள் என்றும் இருந்துகொண்டுதான் இருக்கும் - எவ்வளவுதான் பாடத்திட்டத்தை மாற்றி அமைத்துக்கொண்டே இருந்தாலும். ஏன் அப்படி?

ஃபேஸ்புக்கில் இன்றும் போட்டால் 100 லைக் வாங்கக்கூடிய கேள்வி - "(a+b)2 இன்றுவரை நான் உபயோகிக்கவில்லை, ஏன் படிக்கவேண்டும்?" அதேபோலத்தான் சிந்துசமவெளி நாகரிகத்தையும் யாப்பிலக்கணத்தையும் ஏன் படிக்கவேண்டும்..  இந்தப்பாடத்திட்டம் பைத்தியக்காரத் திட்டமா? இல்லை.

பள்ளிக்கல்வி என்பது பெரும்பாலும் இருக்கக்கூடிய பல தெரிவுகளையும் காட்டி அதில் உனக்கு எது வேண்டுமோ - நீ யாப்பிலக்கணத்தை கூறுகட்டி மேயப்போகிறாயா? சிந்து சமவெளியை மேலும் தோண்டவேண்டுமா, அல்ஜீப்ராவை ஆராய வேண்டுமா - எது வேண்டுமோ எடுத்துக்கொள் என்று தெரிவுகளை முன்வைப்பதற்கான ஒரு களம் மட்டுமே. கல்லூரிக்குச் செல்லும்போது தேவையானதை எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் கல்லூரியிலும் இதே நிலை தொடரத்தான் செய்கிறது, தொடரத்தான் செய்யும். மெக்கானிகல் எஞ்சினியரிங் என்று எடுத்துக்கொண்டால் அதை உபயோகப்படுத்தும் துறைகள் ஒன்றா இரண்டா? மேனுஃபாக்சரிங் என்றாலே ராக்கெட் தயாரிப்பில் இருந்து ஸ்க்ரூ தயாரிப்பு வரை அந்தத் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படும் எந்திரங்கள், பராமரித்தல் பழுதுபார்த்தல் தரச்சான்று வழங்கல் - சொல்லி மாளுமா? 

கல்லூரியில் இதில் எதை என்று தேர்ந்தெடுத்துப் பாடத்திட்டம் அமைப்பார்கள்? கொஞ்சம் பொத்தாம்பொதுவாகத்தான் இருக்கும். எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் கலந்த பாடத்திட்டமாகத்தான் இருக்கமுடியும். பள்ளிக்கல்வி போலவே, வேலைக்குத் தேவையான சிலதும் தேவையற்ற பலதும் படித்துத்தான் ஒரு பொறியாளன் வெளியே வருகிறான் - அப்படித்தான் இருக்கமுடியும். 

நான் என் நிறுவனத்துக்கு ஆள் எடுக்கும்போது மறுநாள் காலையில் நேரடியாகப் போய் வேலை செய்யவேண்டும் - ஏனென்றால் இவன் ஒரு எஞ்சினியர் - என்று எதிர்பார்த்தால் நான் தான் கேனை. அப்படி 25 ஆண்டுகளுக்கு முன்பும் கிடையாது, இன்றும் கிடையாது, என்றும் இருக்கப்போவதும் கிடையாது. என் நிறுவனத்துக்குத் தேவையான தொழில்நுட்பத்தை முறையான ட்ரெய்னிங் மூலமோ, மூத்த மெக்கானிக்குகள் மூலமோதான் அவனுக்குப் பயிற்றுவிக்கவேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் - சிறிதோ பெரிதோ - இப்படிப்பட்ட முறையான ட்ரெய்னிங்குக்காக நிறையப்பணம் செலவிடத்தான் செய்கின்றன.

இந்தக்காலத்துக்காக இவ்வளவு வக்காலத்து வாங்குகிறேனே, முழுமையான மனதுடன் இதைச் செய்கிறேனா? இல்லைதான். இந்தக்காலக் கல்வி தரமானதாக இருக்கிறது என்று உரக்கச் சொல்லமுடியுமா? இல்லைதான். ஆனால் இதற்கு மாணவர்களைக் காரணமாகச் சொல்வேனா? மாட்டேன்.

கோர் எஞ்சினியரிங் என்று மெக்கானிகல் எலக்ட்ரிகல் சிவில் படித்துவிட்டு கேம்பஸில் செலக்ட் ஆகி என்ன படித்தோம் என்பதையே மறந்துபோய் பொட்டிதட்டிக்கொண்டிருக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கிறோம். கேம்பஸில் செலக்ட் ஆகாதவர்களுக்கும் வாழ்க்கை லட்சியம் பொட்டி தட்டுவதே என்று  கோர் - ஐடி சம்பள வித்தியாசங்கள் நினைக்கவைக்கின்றன. இவ்வளவையும் மீறி கோர் எஞ்சினியரிங் பக்கம் வருபவன் பெரும்பாலும் ஐடி செக்டாரால் கழித்துக்கட்டப்பட்டவனாகவே இருக்கிறான். 

இந்த நிலை நிரந்தரமல்ல என்பதே என் நம்பிக்கை. ஐடி அடங்கத் தொடங்கிவிட்டது, இன்னும் ஓரிரு வருடங்களில் இதன் தாக்கம் கல்வியில் தெரிய ஆரம்பிக்கும்.  பயோடேட்டாவில் பொய்சொன்னால்தான் வேலை என்று இருந்தால் பொய் சொல்லும் ஆசாமி, ஓம்ஸ் லாவைத் தெரிந்தால்தான் வேலை என்றாகிவிட்டால் நிச்சயம் கற்றுக்கொள்வான். பிரச்சினை ஜாப் மார்க்கெட்டில், படிக்கும் மாணவர்கள் மீது அல்ல என்பதே என் உறுதியான அபிப்பிராயம்.

நாம் நமது அடுத்த தலைமுறையைப்பற்றிப் பேசுகையில் - நம் ஒருவயதுக்குழந்தை மொபைலில் கேம் ஆடும் அழகைப் பெருமையாகப் பேசுகிறோம் - ஆனால் வளர்ந்த அடுத்த தலைமுறை எதற்கும் உதவாது என்று சொல்லத் தயங்குவதில்லை!

ஜெயமோகன் எழுதிய கட்டுரை படித்து, சிரிப்புதான் வந்தது - அதாவது, இன்றுவரை இந்தியாவில் எந்த நவீனத் தொழில்நுட்பமும் பழுதானதே இல்லை, பழுதானால் அது சரியானதே இல்லை - இதுதான் அவர் சொல்ல வருவது. இப்படி ஒரு நிலை இருந்தால் எவனுமே நவீனத் தொழில்நுட்பம் பக்கமே போகமாட்டான். காரைச் சரிசெய்ய சரியான ஆட்களே இல்லை என்கிறார். எங்கே தேடிவிட்டுச் சொல்கிறார்? தெருவோர பஞ்சர் ஒட்டும் கடைகளிலா? அவர்களுக்கு எந்தவிதமான கமிட்மெண்ட் இருக்கிறது? அதிகாரபூர்வத் தொழிற்சாலையில் காரைவிட்டுவிட்டு, எடுக்கும்போது பழுது சரியாகவில்லை என்றால் காசு கொடுப்பார்களா? சினிமாத்தயாரிப்பாளர் ஒருவர் சொன்னாராம்.. சினிமாவிலேயே இன்று எத்தனை நவீனத் தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன? அவையெல்லாம் ஒரு முறை பழுதானால் தூக்கித்தான் வீசிவிடுகிறார்களா? 

இன்றல்ல, நேற்றல்ல - 20 வருடங்களுக்கு முன்னால் பிஹாரின் ஒரு மூலையில் கனரக வாகனங்களைப் பழுதுபார்க்கும் வேலையில் இருந்தபோதே, ஒரு பிரச்சினை என்று வந்தால் அதைத் தீர்க்கவேண்டிய கடமை - எனக்கு, அடுத்து ராஞ்சி ஆபீஸ்க்கு, அவர்களாலும் முடியாதபோது சென்னை தலைமையகத்துக்கு, தீரவே இல்லையென்றால் அமெரிக்கத் தயாரிப்பாளருக்கு என்று இருந்த சங்கிலியில் - என்னைத் தாண்டி ராஞ்சிக்குப் போவதே அவமானம் என்று நினைத்துக்கொண்டிருந்தவன் நான் - நான் மட்டுமல்ல - என் சக தொழிலாளர்கள் பலரும் - அன்றும் அப்படித்தான், இன்றும் அப்படித்தான். இது ஒரு தேவையான ஈகோ, இருக்கிறது, இருக்கும்.

களப்பணியாளராக இருந்தாலும் எழுத்தாளராக இருந்தாலும் நம்முடைய ஒரே பொதுக்குணம் - பொதுமைப்படுத்தத் தயங்காமல் இருப்பது - மட்டும்தான்!

May 9, 2013

தந்தை சொல் மிக்க.. சிறுகதை

ப்ளஸ்2 முடிவுகள் வெளியான இந்நாளில், போனவருடத்தில் கல்கியில் பிரசுரமான என் சிறுகதை:
_________________________________________________________________________________________________

தந்தை சொல் மிக்க..

"கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லைன்னு தோணுது சார். இவனுக்குப்போய் எப்படிக் குறையும் மார்க்கு? மார்க்‌ஷீட் வாங்கனதுமே கிழிக்கப் போயிட்டான் இவன். ரீ வால்யூவேஷன் எல்லாம் பம்மாத்து.இப்ப திருத்தறவன் முதல்ல கரெக்ட் பண்ணவனை விட்டுக்கொடுப்பானா?" தந்தையொருவர் நாலுசீட் தள்ளி சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார். சொல்லப்பட்ட பையன் விபூதி இட்டுக்கொண்டு உத்தரத்து ஒட்டடையை வெறித்துக் கொண்டிருந்தான். சரவணன் அப்பாவைப் பார்த்தான். கேட்காதவர் போல அவர் கவனமாக இவன் பார்வையைத் தவிர்த்தார். 

 

சரவணன் சட்டைப்பையில் வைத்திருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தான் "சரவணன், நீங்கள் விரும்பிய பி எஸ் சி கணிதம் சேர ஆறாம் தேதிக்குள்..." நான் விரும்பிய - உண்மைதான். அப்பா விரும்பவில்லையே. சரவணன் பெஞ்சில் இருந்து எழுந்தான்.

 

"எங்கேடா போறே?"

 

"சும்மா அந்த நோட்டீஸ் போர்ட் வரைக்கும் போய் பாத்துட்டு வரேன்."

 

"கூப்டுட்டாங்கன்னா?"

 

"செல் வச்சிருக்கேனில்ல? கூப்பிடுங்க. ரொம்பதூரமெல்லாம் போயிரமாட்டேன்"

 

பிரின்ஸிபால் அறையைத் தாண்டும்போது காலிங் பெல் அலறியது. வந்ததில் இருந்து மூன்று முறை அலறி இருக்கிறது. க்யூ அசைவேனா என்கிறது. அவசரமாக இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் போய்க்கொண்டிருந்த காக்கிச்சட்டைப் பையன்கள் விரோதமாகப் பார்த்தார்கள். எச்பி2 இன்னிக்காடா என்று அவர்கள் பேசிக்கொண்டது எதுவும் புரியவில்லை. 

 

அறிவிப்புப் பலகையில் சரம்சரமாக டாட்மாட்ரிக்ஸ் ப்ரிண்ட் அவுட் நீண்டது. ஏதேதோ பேர்கள் எண்கள். இந்த லிஸ்டுகளை இனிமேல் துரத்தவேண்டும். இந்தச் சரத்தில் எந்தப் பக்கத்தில் சரவணன் என்று அச்சடித்திருக்கிறதோ அதுதான் வருங்கால வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகிறது. ஓரத்தில் ஒரு காகிதம் "அரியர்ஸ் உள்ளவர்கள் கிரிக்கெட் ப்ராக்டிஸுக்கு கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்". 

 

வாசலில் இருந்து ரொம்ப தூரத்தில் பஸ் ஸ்டாப் தெரிந்தது. இவ்வளவு தூரத்துக்கும் ஒரு மரமும் இல்லாமல் செம்மண் கொட்டிக் கிடந்தது. வருங்கால மரங்களை செங்கல் வட்டங்கள் அடைகாத்துக்கொண்டிருந்தன. பிட்சுக்கும் அவுட்ஃபீல்டுக்கும் வித்தியாசம் தெரியாத களத்தில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அரியர்ஸ் இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள்.

 

இங்கேதான் என் அடுத்த நான்கு வருஷம் கரையப் போகிறதா? ப்ளேஸ்மெண்ட் 80% என்கிறார்கள். நான்கு வருஷத்துக்குப் பின் வேலை. சம்பளம். எட்டாம் கிளாஸில் இருந்து ஒலிக்க ஆரம்பித்த காலை 4 மணி அலாரம் ஓய்வே இல்லாமல் ஒலிக்கப் போகிறது. சமுதாயப் பற்சக்கரங்களில் நானும் ஒரு கண்ணி. ஆனால் என்ன, பற்சக்கரத்தில் ஒன்று உடைந்தாலும் வேலை செய்யாது. இங்கே ஒன்று இல்லாவிட்டாலும் ஒன்றும் தெரியவே தெரியாது. நான்கு வருடங்களில் இந்தத் தொழிற்சாலை துப்பப்போகும் உற்பத்திப்பொருட்களுள் நானும் ஒருவன். வேலை கிடைக்கக்கூடிய காலேஜ் என்று அப்பா தேடிப்பிடித்தது இதைத்தான். 

 

"ஹாய்" சத்தம் கேட்டுத் திரும்பினான். க்யூவில் இருந்த விபூதிப்பையன். "எவ்வளவு நேரம்தான் சும்மா உட்கார்ந்துகிட்டே இருக்கறது? அதான் உலாத்தலாம்னு"

 

கையைக் குலுக்கினான். "நான் கணேஷ். எம் ஏ வி ஸ்கூல். நீங்க?"

 

"சரவணன். க்வீன்ஸ் சைதாப்பேட்டை" அடுத்த கேள்வி என்னவாக இருக்கும் என்று சரவணனுக்குத் தெரிந்துதான் இருந்தது. ஏமாற்றாமல் கேட்டான் கணேஷ். 

 

"உங்க கட் ஆஃப் என்ன?"

 

"185 எஞ்சினியரிங். 178 மெடிக்கல். உங்களுது?" கேட்காவிட்டாலும் சொல்வான்.

 

"186 எஞ்சினியரிங்.." சரவணனைவிட ஒரு மார்க் அதிகம் என்பதால் அனிச்சையாகவே அவன் குரலில் பெருமை ஏறிவிட்டிருந்தது. 200ல் ஆரம்பித்து 186க்குள் 45 காலேஜ் ரேங்குகள் கழிந்துவிடுகின்றன. இது சரியான பரவல்தானா? சரவணனின் கணித மூளை நார்மல் டிஸ்ட்ரிப்யூஷன் கர்வ் லேம்ப்டா என்றெல்லாம் ஓடியது. 

 

"கெமிஸ்ட்ரிலே 200 எதிர்பார்த்தேன். ரொம்பக் குறைஞ்சுபோச்சு. ரீவால்யூவேஷன் கேட்டாலும் யூஸ் இல்லைன்னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க.." அவன் அப்பாவும் இதையேதானே சொல்லிக்கொண்டு இருந்தார்.

 

"இங்கே மெரிட் கண்டுக்கவே மாட்டாங்களா?"

 

"இவங்களுக்கு எக்ஸாம் மார்க் பத்திக் கவலை இல்லை. நிறைய டீம்டு யூனிவர்சிட்டிலே எல்லாம் தனியா எண்ட்ரன்ஸ் எக்ஸாம் வைக்கறாங்க. இவங்க அப்படிக்கூட வைக்கிறதில்லை. காசு மட்டும்தான்."

 

"கவர்மெண்டு காலேஜே தேவலாம்.."

 

"தேவலாம்தான். ஆனா இந்த கட் ஆஃபுக்கு எதாவது பட்டிக்காட்டுலதான் சீட்டு கிடைக்கும். அங்கே எந்தக் கம்பெனி காம்பஸுக்கு வரப்போகுது? நான் விசாரிச்சேன்.. போனவருஷம் மட்டும் டிசிஎஸ்ஸுக்கு 40 பேர் எடுத்திருக்காங்க இந்தக் காலேஜ்லே இருந்து"

 

சரவணன் அப்பா இருந்த பெஞ்சைப் பார்த்தான். ஒரு சீட்கூட முன்னேறவில்லை.

 

"கேண்டீன் போலாமா கணேஷ்?"

 

டீ குடித்துக்கொண்டே கேட்டான். "இந்த காலேஜ்லே வந்தா ஹாஸ்டல்லதான் இருக்கணுமா?"

 

"அவசியம் இல்லை. ஆனா நான் ஹாஸ்டல்லதான் இருப்பேன். நாமக்கல்லகூட ஹாஸ்டல்ல தங்கிதான் படிச்சேன். தொடர்ந்து சூப்பர்விஷன் நடந்துகிட்டே இருக்கும் அங்கே.அப்பதான் செல்ஃப் கண்ட்ரோல் வரும்"

 

சரவணனுக்குச் சிரிப்பு வந்தது. செல்ஃப் கண்ட்ரோலால் என்னைவிட ஒரு மார்க் அதிகம் எடுத்திருக்கிறான். 

 

"ஒரு வருஷம் லேட்டாப் பொறந்திருக்கலாம். ஐஐடிக்கும் ஏஐஈஈஈக்கும் ஒரே எண்ட்ரன்ஸாம் அடுத்த வருஷத்துல இருந்து"

 

"அதனால என்ன? சீட்டையும் சேர்த்துப் பிரிச்சுப் போடுவாங்க.. அவ்வளவுதானே?"

 

"அது மட்டுமில்ல.. +2 மார்க்கையும் அதுக்கு எடுத்துப்பாங்களாமே"

 

நாமக்கல்லுக்கும் ஐஐடி போக ஒரே வாய்ப்பு. சரவணன் வாய்வரை வந்த வார்த்தைகளைத் தவிர்த்தான்.

 

"எனக்கு அப்படியாச்சும் இங்கே படிக்கணுமான்னு இருக்கு கணேஷ். நான் பிஎஸ்சி மேத்ஸ் எடுக்கலாம்னு சொன்னேன். அப்பாதான் இங்கே கூட்டிகிட்டு வந்தார்."

 

கணேஷ் பார்த்த பார்வையிலேயே புரிந்துவிட்டது, ஒருவேளை காலேஜில் சேர்ந்தாலும் இவர்கள் நண்பர்களாகப் போவதில்லை. கணேஷ் முகத்தில் பிறந்த உடனே ஒட்டிவிட்டிருந்த 'நான் எஞ்சினியர்' தெரிந்தது.

 

"பிஎஸ்சி, எம்எஸ்சி, பி எட்.. எப்பதான் வாழ்க்கைலே செட்டில் ஆகறது?" கணேஷ் புண்பட்டவனாய்க் கேட்டான்.

 

'செட்டில் ஆகறது என்றால் என்ன?' என்று கேட்க இருந்த சரவணனை செல் அடித்துக் காப்பாற்றியது.

 

"வந்துடறேன்ப்பா"

 

அப்பா பரபரப்பாக ஃபைலை இன்னொருமுறை புரட்டிக் கொண்டிருந்தார். "டிசிக்கு ரெண்டு காபி இல்லையா? ஒண்ணுதானே இருக்கு?"

 

ப்யூன் வந்து "நீங்க உள்ளே போலாம் சார்."

 

பிரின்ஸிபால் அறைக்குள் சீட்டில் அமர்ந்திருந்த ஆசாமியைப் பார்த்தால் பிரின்ஸிபால் போலத் தோன்றவில்லை. அம்மைத் தழும்பிட்ட முகத்தில் அரிவாள் மீசை. கிடைமட்டமாக முழுநெற்றியையும் ஆக்கிரமித்த குங்குமத் தீற்றல். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை. அரசியல்வாதி.

 

"என்னய்யா? 10 கொண்டு வந்திருக்கியா?" ஆரம்பிக்கும்போதே ஏகவசனத்தில் ஆரம்பிக்கிறாரே. உட்காரக்கூடச் சொல்லவில்லை. அப்பாவும் உட்கார்வதில் ஆர்வம் காட்டவில்லை. அப்பா மீதி எல்லா இடத்திலும் டெரர். ஆனால் பள்ளிக்குப் போகும்போது பம்மிவிடுவதைப் பார்த்திருக்கிறான். இப்போது கல்லூரியிலும் அதே பம்மல் தொடர்கிறது.

 

"சார்.. யெஸ்டர்டே த பர்சன் ஆன் த டோர் டோல்ட் ஒன்லி செவன் சார்" அப்பா ஏன் ஆங்கிலத்தில் பேசவேண்டும்

 

"என்னாது? ஏழா? உன் பையன் வாங்கின மார்க்குக்கு ஏழுக்கெல்லாம் சீட் கொடுத்தா நல்ல மார்க் வாங்கினவனுக்கு ஃப்ரீயாவா கொடுக்க முடியும்?"

 

185 நல்ல மார்க் இல்லையா? சரவணனுக்குக் கோபம் ஏறியது. அவமானப்பட்டாவது சீட் வாங்கவேண்டுமா? ஆனால் அப்பாவிடம் இதையெல்லாம் பேச முடியாது. 'உனக்கு முதல்லே இருந்தே பிடிக்கலை.. அதான் காரணம் தேடறே

 

ஃபோன் அடிக்க வெள்ளைச் சட்டை எடுத்தார்.

 

"ம்.. ம்..  சரி.." என்று எதிர்முனைக் கரகரப்பைக் கேட்டுக் கொண்டிருந்தவர் முகத்தில் கோபம் ஏறுவது தெரிந்தது. "அப்பாகிட்ட கொடு ஃபோனை"

 

"சொல்லுப்பா.. இப்ப என்ன பண்ணுது?"

 

"அதெல்லாம் சொல்லாதே.. இந்தக் காலத்துல எழுவத்தஞ்செல்லாம் ஒரு வயசா?"

 

"அதை இப்ப முடிவு பண்ண முடியாது. நான் வந்து பேசறேன்"

 

"டாக்டர் வருவார். அவர் என்ன சொல்றாரோ அதைச் செய். எல்லாம் சரியாப் போயிடும். அந்த நர்ஸுகிட்ட கொடு ஃபோனை"

 

"என்னம்மா வேலை பாக்கறீங்க? பெரியவர் கிட்ட ஃபோனைத் தராதீங்கன்னு எத்தனை முறை சொல்றது?" 

 

ஃபோனை வைத்தவர் கோபம் அடங்காமல் "எட்டாயிர்ரூவா கொடுக்கறேன் இவளுகளுக்கு. சாக்கு சொல்றாளுங்க"

 

அப்பாவைப் பார்த்தார். "உன்கிட்ட என்னய்யா சொல்லிகிட்டிருந்தேன்? பத்துன்னா உள்ளே வா. இல்லாட்டி கிளம்பு"

 

"இல்லை சார்.. பணங்காசு உள்ள குடும்பம் இல்ல சார் நாங்க" அப்பா எப்போது தமிழுக்கு மாறினார்?

 

"சரி. உனக்காக ஒன்பதரைலே முடிச்சுரலாம். கொண்டு வந்துருக்கியா?"

 

"இல்லை சார். ஏழுன்னுதான் சொன்னாங்க..அதைதான் கொண்டு வந்திருக்கேன்"

 

"அப்ப நாளைக்கு வா.. உன் பேரை எழுதிக்கச் சொல்லு அந்த க்ளார்க்கை." க்ளார்க்கே உள்ளே நுழைந்தான்." யோவ்.. இந்தாள்கிட்ட பேரை எழுதி வாங்கிக்க.. ஒன்பதரை போட்டுக்க.."

 

ரெஜிஸ்டரெல்லாம் எதுவும் இல்லை. 40 பக்க நோட்டு. பின்னே.. இதற்கெல்லாம் ரெக்கார்டா வைத்துக்கொள்ள முடியும்? அப்பா அழுத்தம் திருத்தமாக எழுத ஆரம்பித்தார்.

 

"நாம நினைச்சதைவிட ரெண்டரை அதிகமாச்சேப்பா"

 

"ஆமாம்.. ஆனா பிரச்சினை இல்லை. எஃப்டி ப்ரீக்ளோஸ் பண்ணனும்.. அம்மாகிட்ட நகை இருக்கு"

 

"இருந்தாலும்.."

 

"அதெயெல்லாம் மறுபடி ஆரம்பிக்காதே சரவணா.. எல்லாம் பேசி முடிச்சாச்சு. மை டெசிஷன் இஸ் ஃபைனல்".

 

அப்போது இரண்டு பேர் வேகமாக ஏறத்தாழ அப்பாவை இடித்துக்கொண்டு பிரின்ஸிபால் ரூமுக்குள் நுழைந்தார்கள். உள்ளே வெள்ளைவேட்டியின் குரல் கேட்டது.. "யோவ் யாருய்யா இவங்களை உள்ளே விட்டது?"

 

அப்பாவின் மிடில் கிளாஸ் உள்ளுணர்வு வரப்போகும் சண்டையைக் கண்டுபிடித்துவிட்டிருக்க வேண்டும். "கிளம்பு போலாம்" வாசலில் இன்னும் ரெண்டு பேர் நிற்க, வெளியிலும் போக முடியாமல் அடைபட்டார்கள்.

 

கரஸ்பாண்டெண்ட் கத்தினார் "என்னய்யா வேணும் உங்களுக்கு? செக்யூரிட்டி.." கத்தினார். க்ளார்க் குறிப்புணர்ந்து செக்யூரிட்டிக்கு ஃபோன் செய்தான்.

 

"பெரியவரு ஃபோன் பண்ணாரு.. எங்களுக்குச் சேர வேண்டியது சேர்ந்தா நான் ஏன்யா இங்க வரப்போறேன்" உள்ளே நுழைந்த ஆளாக இருக்க வேண்டும்.

 

"உங்களுக்குச் சேர வேண்டியது என்னய்யா? நீயா சேர்த்தே சொத்து..ரோட்லே போறவனுக்கு எல்லாம் அள்ளித்தர இங்க கொட்டியா வச்சிருக்கு? மூடிகிட்டு போ"

 

"ரோட்ல போறவனா நானு? உன் மாமன்.. உன் அக்காவுக்கு புருசன்"

 

"பாசத்தைப் பத்தி என்கிட்ட பேசாதே.. எவ்வளவு கொடுத்திருப்பேன் உனக்கு?"

 

"பெரியவரு சொல்லிட்டாராமே உன்னை எழுதித்தரச் சொல்லி.."

 

"ஆமாம்.. பெரிய பெரியவரு.. அந்தாளு என்னைப் பெத்தாரு, வளர்த்தாரு எல்லாம் சரிதான். அதுக்காக அந்தாள் பேச்சையே கேட்டுகிட்டிருந்தா நான் உருப்பட்டிருப்பேனா? ரயில்லே டிக்கட் கிழிக்கற உத்தியோகத்துக்குப் போன்னு சொன்னாரு - கேட்டேனா? இதைச் செய் அதைச் செய்யுன்னு ஆயிரம் கட்டளை.. ஒரு மண்ணும் தெரியாட்டியும் நான் அப்பன்.. நான் சொல்றது சரின்னு பேச்சு.. இப்ப நான் கஷ்டப்பட்டுச் சேத்த சொத்துக்கு ரோட்ல போறவனுக்கு பங்கு கொடுன்னா கேக்கணுமா?"

 

செக்யூரிட்டிகள் நாலைந்துபேர் வர வந்தவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். வெள்ளைவேட்டியின் குரல் ஃபோனில் சத்தமாக ஒலித்தது.

 

"அப்பாகிட்ட கொடு"

 

"என்னதான் நினைச்சுகிட்டிருக்கீங்க? உங்களை பத்திரமா வச்சுக்க வேண்டியது என் கடமை. உங்களுக்கு என்ன ஆசையோ அதைச் செய்யத்தான் ஆளு தேளு எல்லாம் போட்டிருக்கேன். ஆனா உங்க பேச்சையே கேட்டுகிட்டிருக்க முடியுமா?"

 

"கடைசியா சொல்றேன்.. பாசம் வேற.. முடிவெடுக்கறது வேற.. ரெண்டையும் போட்டுக் குழப்பிக்காதீங்க.. இன்னொரு முறை அவங்களுக்கு ஃபோன் செய்யாதீங்க! இங்க வந்து மானத்தை வாங்கறாங்க"

 

செக்யூரிட்டி எல்லாம் போனபிறகுதான் அப்பாவுக்கு வெளியே வரத் தைரியம் வந்தது. கணேஷ் எதிர்ப்பட்டான் "எட்டுக்கு முடிச்சிட்டோம்.. புக்ஸ் மெடீரியல் எல்லாம் இன்னிக்கே வாங்கிடச் சொல்லிட்டாங்க!" பெருமிதம் தெரிந்தது அவன் குரலில்.

 

ஆட்டோக்கு வரும்வரை அப்பா பேசவில்லை. ஆட்டோக்காரன் "எங்கே போகணும்?" 

 

"சரவணா.. அந்தக் காலேஜ் அட்ரஸ் சொல்லுடா.. பிஎஸ்சி கார்டு வந்திருந்துதே.."

 

*****

 நன்றி: கல்கி வார இதழ்Mar 15, 2013

பரதேசி - விமர்சனம்

பாலா படங்கள் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. சேது கடைசி 20 நிமிடத்தில் மனசைப் பிழிந்ததாலும், ராஜாவாலும் மட்டும்தான் ஒரு சப்பைப்படம் தேறியது என்று தீர்மானமாக நம்புபவன் நான். பிதாமகனிலும் நடிப்பு எல்லாம் நன்றாகவே இருந்தாலும் சினிகலாக எடுக்கப்பட்ட கதையில்லாத படம்தான் அது. நான் கடவுள் - ஏழாம் உலகத்தையும் சிதைத்து, அகோரிகளையும் ஊறுகாயாகத் தொட்டுக்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு மாஸ் ஹீரோ படம். அவன் இவன் பார்க்கவே இல்லை..

இந்நிலையில், காரணமே இல்லாமல் பரதேசி முதல்நாளே பார்க்க முடிவெடுத்தேன் - இந்த முடிவுக்காக வருந்துவேன் என்ற திண்ணமான எண்ணம் பின்புலத்தில் இருந்தாலும்.

ஆனால் - என் முதல் பாரா எண்ணங்கள் அத்தனையையும் புரட்டிப்போட்டுவிட்டது பரதேசி.

1939களில் நடந்த மிகப்பெரிய மனிதவளச் சுரண்டலின் ஆவணமாக்கல்தான் கதை. பஞ்சம் தீண்டிய கிராமத்தில் இருந்து இனிக்க இனிக்கப் பேசும் கங்காணிகளால் மூட்டை மூட்டையாக ஆட்கள் தேயிலைத் தோட்டத்துக்குக் கடத்தப்பட்டு அங்கே கொத்தடிமைகளாக வாழ்ந்தவர்களின் கதை. நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கிறது, மிகை உணர்ச்சிகளுக்கான பல வாய்ப்புகள் இருந்தும், தேவதைக்கதை முடிவெல்லாம் இல்லாமல்.

ஏறத்தாழ முதல் பாதி முழுவதுமே அமைதியான பஞ்சத்தில் அடிபட்ட கிராமம்தான். நாஞ்சில் நாடனின் அழகான வட்டார மொழி வசனங்களோடு - நாஞ்சில் நாடன் என்றதும் நினைவுக்கு வரும் காட்சி “ராசா வண்டிய நேரா விட்டுருவேன்” என்று பந்தியில் அவமானப்படுத்தப்படும் விடலைப் பிச்சைக்காரன் - சிறுகதையாகப் படித்திருக்கிறேன், அந்தச் சிறுகதையின் தாக்கத்தை அப்படியே சினிமாக் காட்சி தரும் என்று நம்பி இருக்கவில்லை.

தெளிவான திரைக்கதையுடன்தான் பாலா இறங்கி இருக்கிறார். தேவையற்ற காட்சிகள் பெரும்பாலும் (பாடல்கள் தவிர) இல்லை. கங்காணியும் முழுக்க வில்லனில்லை - அவனும் அடிவாங்குபவன்; மருந்து கலந்து தரும் ‘டாக்டர்’ கூட கால் நரம்பை வெட்டுமுன் பழிபாவத்துக்கு அஞ்சுகிறான், எதோ கொத்தடிமைகள் வாழ்வில் விளக்கேற்ற வந்தவர்கள் போல வரும் டாக்டருக்கும் முதல் குறி தன் மிஷனரி வேலைதான். பாலாவின் பழைய படங்கள் போல கிளைமாக்ஸில் வில்லன்களைப் பந்தாடி வெல்லும் கதாநாயகன் எல்லாம் இல்லை - ஆனால் மொத்தமாக படம் தரும் அழுத்தம் மிக மிக அதிகம். ஏறத்தாழ என்னைப்போன்ற ஒரு கல்நெஞ்சனின் கண்ணிலேயே ஈரம் வரவழைத்தது.

குறைகளைத் தோண்டித் தோண்டிச் சொல்லலாம், இனிவரும் பல விமர்சனங்கள் சொல்லும். நான் அதைச் செய்ய விரும்பவில்லை - Except - THIS FILM NEEDED ILAIYARAJA - more than any other Bala film.

நிச்சயம் பாருங்கள். குழந்தைகள் வேண்டாம், இதயம் ரொம்ப பலஹீனமானவர்கள் தவிர்த்து/

Feb 6, 2013

பாண்டுச் சோழன் சரித்திரம்

நான் மீள்பதிவுகள் பெரும்பாலும் செய்வதில்லை. ஆனால் இன்று மறைந்த டோண்டு அவர்களைப்பற்றி 2006ல் எழுதிய இந்தப் பதிவு, காலைமுதலே நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. பல புதியவர்கள் அறியட்டும் என..

அன்னார் ஆத்மா சாந்தி அடைவதாக!

பாண்டுச்சோழன்

முன்னொருகாலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியில் பாண்டுச்சோழன் என்னும் மகாராஜா ஆண்டுவந்தார். இவருக்கு வலைகொண்டான், பன்மொழிப்புலவர், அனுபவ வித்தகர் என்ற பல பெருமைகளும் உண்டு. களம் பல கண்டு வெற்றிகண்ட இவர், வலையூரிலும் தன் கொடியை நாட்டிட முனைந்தார். 


இதே காலத்தில் சோழர்களின் ஆட்சி முறை பற்றி பலரும் விமர்சித்து வந்திருந்தனர். அவ்வாறு விமர்சித்தவர்களுள் ஒருவர் கீர்த்திவாசன். நேசநாட்டுக்கவிஞர் ஒருவர் பல்வேறு கலைஞர்களைப் பற்றிப் பாடிய பாடலில் கீர்த்திவாசன் ஒரு குறை கண்டார். பல்வேறு கலைஞர்களைப் பற்றிய பாடலாயினும், அனைத்தும் சோழர்களைப் பற்றியதாகவே உள்ளதே என்றார். 

இவ்வமயம் ஆங்கே வருகை புரிந்த பாண்டுச்சோழன், சோழர்களைப் பற்றிக் கூறியதில் தவறொன்றுமில்லை என வாதிட்டார். அப்போது கீர்த்திவாசனும் வெகுண்டு, நீர் எப்படிப்பட்ட சோழன் என்றும் பாண்டுச்சோழனைக்கேட்கத் தலைப்பட்டார். சோழர்கள் என்று இல்லை, எந்த மன்னருமே தன் வம்சத்தைப் பற்றிப் பெருமை கொள்ளல் ஆகாது என்றும் வாதிட்டார்.

வெளிப்படைக்கல்வெட்டுக்கள்

இதனால் மனக்காயம் அடைந்த பாண்டுச்சோழன், தன் வெளிப்படையான எண்ணங்களை கல்வெட்டாகப் பதிந்துவைத்தார். சோழர் அல்லாதவர்களுக்கும் சோழர்களுக்கும் உள்ள பிரிவினை இவர் அதிகப்படுத்திவிட்டார் எனக்கூறுவோரும் உண்டு.

மன்னர்கள் மீதும், குறிப்பாகச் சோழர்கள் மீதும் கோபம் அடைந்திருந்த கீர்த்திவாசன், இக்கல்வெட்டுக்கு எதிராக போர் புரிந்தார்.

மாறுவேடச் சோழன் 

இந்நிலையில், மாறுவேடச் சோழன் என்று ஒருவன் முளைத்தான். இச்சரித்திர ஆசிரியருக்கு மாறுவேடச் சோழனின் பூர்வாசிரமத்தைப் பற்றிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

இம்மாறுவேடச்சோழன், நட்பு நாட்டரசர்களிடம் சென்று சோழன் கூறியதாக இல்லாததையும் பொல்லாததையும் கூற, முதலில் அவர்களில் சிலரும் நம்பத் தலைப்பட்டனர். சோழன் கூறியதாக எண்ணி பல சிறு போர்களும் நடைபெற்றன.

முத்திரை மோதிரம் 

இதனால் பாதிக்கப்பட்ட பாண்டுச்சோழன், முத்திரை மோதிரம் இல்லாதவர்களை அரசியல் பேச்சுவார்த்தைக்கு அனுமதியாதீர் என்று அனைத்து அரசர்களுக்கும் அறைகூவல் விடுத்தார். பெரும்பான்மையான அரசர்கள், பாண்டுவின் நேர்மையான கோரிக்கைக்கு செவி சாய்த்தனர். 

மாறுவேடச்சோழன் சளைத்தவன் இல்லை. இவனும் பல போலி முத்திரை மோதிரங்களை உருவாக்கி, தன் அவதூற்றுப் பிரசாரத்தை நடத்தத் துவங்கினான்.

பெரும்பான்மையான அரசர்களுக்கு, உண்மையான பாண்டுச்சோழனுக்கும், மாறுவேடச்சோழனுக்கும் வித்தியாசம் தெரிந்துவிட, மாறுவேடச் சோழன் செல்லும் இடத்தில் எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டனர்.

மாறுவேடச்சோழன் அவதூறு

இதனால் வெகுண்ட மாறுவேடச்சோழன், தன்னை அலட்சியப்படுத்தியவர்கள் பெயரிலும் அவதூற்றைத் துவங்கினான். சில அரசர்கள் மாறுவேடச்சோழனைக் கையும் களவுமாகப் பிடித்தனர் என்ற ஒரு வரலாறும் உலவுகிறது. சிலர் அவதூற்றினால் பாதிக்கப் பட்டு ஆட்சியைவிட்டு சிறிது காலத்துக்கு சன்யாசமும் கொண்டனர்.

புலிக்குட்டிச் சோதனை

பாண்டுச்சோழனும், மேலும் எச்சரிக்கை கொள்ளத் துவங்கினார். புலிக்குட்டிச் சோதனையை அறிமுகப்படுத்தினார். மாறுவேடச் சோழன் மீது புலிக்குட்டியை ஏவினால், அவன் மாறுவேடமா அல்லது மெய்யான சோழனா என்று தெரிந்துவிடும் என்பதே அந்தச் சோதனை. பாண்டு செல்லும் இடமெல்லாம் தன் புலிக்குட்டியுடனே செல்லத் துவங்கினார். 

இரண்டாம் கல்வெட்டூர் 

அதுமட்டும் இன்றி வேறு மன்னர்களுடன் பேசும் வார்த்தைகளையெல்லாம் கல்வெட்டாக மாற்ற ஒரு தனி ஊரையும் துவங்கினார். இந்த ஊர் மற்ற ஊர்களின் எல்லையில் இருந்ததால், மற்ற நாட்டரசர்களின் முக்கியமான கல்வெட்டுக்களையும் இந்த இரண்டாம் கல்வெட்டூர் ,மறைத்தது என்று ஒரு குற்றச்சாட்டு உலவியது.

இதனிடையில் மாறுவேடச்சோழனின் ஆட்டம், புதிய மன்னர்களின் நாட்டில் அதிகமாகியது. புலிக்குட்டிச் சோதனை, இரண்டாம் கல்வெட்டூர் பற்றி அறியாத புதிய மன்னர்கள் சிலர், மாறுவேடச்சோழனின் சதியில் சிக்கி, பாண்டுச்சோழன் மீதும், மாறுவேடச்சோழனின் பிற எதிரிகள் மீதும் சந்தேகம் கொண்டனர். அது உடனேயே தெளிவாகிவிட்டது என்றாலும், பாண்டுச்சோழனுக்கு கோபம் அதிகமாகிவிட்டது.

எல்லைப் பாதுகாப்புப் படை 

இதற்கிடையில், எல்லா நாட்டு அரசாங்கங்களுக்கும் பொதுவாக எல்லைப் பாதுகாப்புப் படை ஒன்று துவங்கப்பட்டது. இதன்படி, நாட்டிற்கு வரும் அனைத்து விருந்தினர்களும், எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு, கடவுச்சீட்டு, புலிக்குட்டிச் சோதனை செய்யப்பட்ட பிறகே அவர்களை நாட்டிற்குள் அனுமதிக்கும்படிச் செய்ய இயலும்.

எல்லைப் பாதுகாப்பை சில நாட்டரசர்கள் விரும்பி ஏற்றனர். மாறுவேடம் தரித்தவர்கள், வெள்ளையர் ஊடுறுவல் ஆகியவற்றைத் திறம்படத் தடுக்க இயலும் என்றாலும், வேறு சில நாட்டரசர்களுக்கு இம்முறை ஒத்துவரவில்லை. எல்லைப்பாதுகாப்பிற்காகச் செலவிடவேண்டிய செலவு, நேரம் ஆகியவை மட்டுமின்றி, வந்தாரை வாழவைக்கும் தம் நாட்டின் மரபும் குலைந்துவிடும் என்பது அவர்கள் குற்றச்சாட்டு.

இந்நிலையில் கீர்த்திவாசன், பன்னாட்டுக் கூட்டமைப்பிலிருந்து விலக்கிவைக்கப்பட, மாறுவேடச் சோழன் பன்னாட்டுக்கூட்டமைப்பின் தலைவர்கள் பெயரிலும் ஓலை கொண்டு சென்று அவதூறு செய்ய்த் துவங்கினான்

பன்னாட்டுக் கூட்டமைப்பின் சட்டங்கள்

பல்வேறு அழையா விருந்தாளிகளின் அவதூற்றுப் பிரசாரங்களினாலும், வெள்ளையர் ஊடுறுவலினால் முக்கியக்கல்வெட்டுக்கள் மறைந்ததாலும், மாறுவேடங்களின் குறிப்பிட்ட தாக்குதலினாலும், பன்னாட்டுக் கூட்டமைப்பின் சட்டங்கள் திருத்தப் பட்டன. எல்லைப் பாதுகாப்புப் படை செயல்படாத நாடுகளின் புதிய சீர்திருத்தங்கள் பன்னாட்டுக் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப் படாது என முடிவெடுக்கப்பட்டது.

பன்னாட்டுக் கூட்டமைப்புக்கு நன்றி தெரிவித்த பாண்டுச்சோழன், இம்முடிவைத் தன் வெற்றியாகக் காட்ட முனைந்தார் என்று கூருவோரும் உண்டு. மற்ற நாட்டரசர்கள் பாண்டுவின் கேள்வி மழை பொழிந்தனர். முத்திரை மோதிரம், புலிக்குட்டிச் சோதனை, எல்லைப்பாதுகாப்புப் படை, இரண்டாம் கல்வெட்டூர் எனப் பல பாதுகாப்புகளும் செய்துகொண்டுவிட்ட பாண்டுச் சோழனை விட, மாறுவேடச் சோழனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்ற நாட்டரசர்களே ஆவர். போரில் பங்கு கொள்ள முடியாத நிலையில் மாறுவேடச் சோழன் இருந்த நிலையிலும், தன் பல அறைகூவல்களினால் மாறுவேடச்சோழனைப் போருக்குத் தூண்டியதும் இவர்தான் என்றும் பலர் கூறியதாக வரலாறு.

போர் முடிவு

வரலாற்றின் எந்த ஆவணங்களிலும், பாண்டுச்சோழன் விடுத்த போர் யாது, அதில் வெற்றி பெற்றவர் யார் என்ற தகவல்கள் காணப்பெறவில்லை.

முடிவுரை

இந்த வரலாற்றைப் படித்தவர்கள், இதில் பினாத்தலுக்கு மேல் வேறு எந்த அர்த்தமும் கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

blogger templates | Make Money Online