Jan 30, 2005

நன்றி..நன்றி..நன்றி..

கடந்த பதிவிற்கு வந்த பின்னூட்டங்களினால் மனம் நெகிழ்ந்து போய் இருக்கிறேன்.

மறுபடியும் என் எழுத்தின் குறைபாட்டினால், நான் சொல்ல வந்த விஷயம் சரியாக மக்களுக்குப் போய்ச் சேரவில்லை என்பதனால் வருத்தமும் கூட.

நிச்சயமாக, நான் மனம் நொந்து போயோ, வெந்து போயொ அதைப் பதியவில்லை.

சுருக்கமாக விளக்க முயல்கிறேன் :-

எழுத்து என்பது, அச்சிடப்பட்டதோ அல்லது கணிணித் திரையில் காண்பதோ, நல்ல தரமானதாக இருக்க வேண்டும் என்பது என் ஆவல்.

அவ்வாறு தரம் இல்லாத அரைவேக்காட்டு எழுத்துக்களை, குறைப்பிரசவங்களை வாசகன் என்ற முறையில் நான் மதிப்பதில்லை, தனிப்பட்டு அவற்றை எவ்வளவோ விமர்சனம் செய்திருக்கிறேன், கிண்டல் அடித்திருக்கிறேன்.

நான் எழுதும்போதும் அந்த தரத்தை "ஒரு வாசகனாக" எதிர்பார்க்கின்றேன் - அந்த அளவிற்கு, தரத்திற்கு எழுத என்னால் முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

எனவே, என் எழுத்து பண்படும் வரையில், எனக்கே பிடிக்கும் வரையில், காகிதத்தில் எழுதி, செப்பனிட்டு, சீர்திருத்தி பிறகே மற்றவர் கண்பார்வைக்கு அதை அனுப்ப வேண்டும் என முடிவெடுத்து, எழுத்தாளர் சுரேஷிற்கு விடுமுறை அளித்து அனுப்பி உள்ளேன் அவ்வளவே!

வாசகன் எப்போதும் போல உலாவுவான், மற்றவர் எழுத்தில் குற்றம் கண்டுபிடிப்பான், பின்னூட்டம் இடுவான் - அவன் அதை தொடர்ந்து செய்வதற்கு, எழுத்தாளன் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதனாலேயெ இந்த கட்டாய விடுப்பு.

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள். ஒரு சக வலைப்பதிவனை உற்சாகப்படுத்தும் நல்லெண்ணம், பெருந்தன்மை, அனைவருக்குமே இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் உள்ளது.

மீண்டும் நன்றிகள்.

Jan 29, 2005

ஒரு எழுத்தாளர் விடை பெறுகிறார்..

கடை விரித்தேன் ..கொள்வாரில்லை என்று கூற முடியாது.

என் வலைப்பதிவையும் சிலரேனும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர் என்பதற்கு சில பின்னூட்டங்கள் சாட்சி.

இருப்பினும், பதிவது அலுத்துப் போய் விட்டது.

எழுத வரவில்லை என்பது முக்கிய காரணம்.

தீவிர எழுத்து ஒரு தவம் போல. அப்படி எழுத ஒருமுகப்பட்ட சிந்தனை, இடைவிடாத படிப்பு, கொள்கை உறுதி போன்ற பல குணங்கள் தேவைப்படுகின்றன. என் நுனிப்புல் மேய்விற்கு இது சரிப்படாது.

நக்கலும் நையாண்டியுமாக எழுதலாம் - என்றால் அதற்கு பல போட்டியாளர்கள் - பலர் என்னை விடச் சிறப்பாகவே எழுதுகின்றனர். (காக்கைக்கும் தன் குஞ்சு - என்னும் அளவிலே கூட என் எழுத்து இல்லை என்பது எனக்கே தெரிகிறது)

இன்று காலை வடை சாப்பிட்டேன் என்று நாட்குறிப்பாக எழுதவும் பொறுமை இல்லை.

பொதுவான டாபிகல் விஷயங்களிலும் என் கருத்தை சுறுசுறுப்பானவர்கள் பதிந்து விடுகிறார்கள்.

கவிதை (ஆசிப் மீரானின் கவுஜ) எழுத நானும் துன்பப்பட்டு வழி தவறிப் படிக்கவரும் சிலரையும் துன்பப் படுத்தவும் தயாராக இல்லை.

எனவே, நாட்டு மக்களுக்கொரு நற்செய்தி:

இன்னும் கொஞ்ச காலத்திற்காவது வெறும் வாசகனாகவே இருப்பது என்று தீர்மானித்துள்ளேன்

எழுதும் பழக்கம் உள்ளவர்களை, எழுதத்தெரிந்தவர்களை கிண்டல் செய்து காலத்தை ஓட்டலாம் பாருங்கள். (சந்திப்பிழையிலிருந்து சந்தர்ப்பப்பிழை, இடப்பிழை, பொருட்பிழை என்று பிழை கண்டுபிடித்தே பெயர் வாங்கலாம்)

இடையில் எனக்குள் இருக்கும் எழுத்தாள மிருகம் உயிர் பெற்றால், அதை முதலில் காகிதத்தில் "மியாவ்" எனக் கத்தவிட்டு, சில நாள் கழித்து படித்து பிறகு இங்கே இட்டு வாசகர்களை காப்பாற்றலாம் என்று ஒரு யோசனை.

இதை ஒரு பதிவாக இட முக்கியமான காரணம், என் பதிவை யாரேனும் படித்து விட்டு, இவ்வளவுதானா தமிழ்மணம் என ஓடக்கூடாது என்பதே!

 

blogger templates | Make Money Online