காலையில் ஏதோ ஒரு இடத்தில் +1 முடிவு பற்றிய ஒரு பதிவு பார்த்தேன். +1 முடிவுகள் வந்து +2 ஆரம்பிக்க உள்ள காலம் என்ன தெரியுமா? 2 நாட்கள். ஆண்டு விடுமுறை - 2 நாட்கள். என்னய்யா விளையாடுகிறீர்களா?
ஒரு வருஷம் பல்லைக் கடிச்சுகிட்டு இருந்துடு. டிவி பாக்காதே. விளையாட்டு பக்கம் போயிராதே. காலைலே மூணு மணிக்கு எழுந்திரு. பத்து வருஷக் கொஸ்டின் பேப்பரைத் திருப்பி திருப்பி எழுதி ப்ராக்டிஸ் பண்ணு. பதினோராவது கேள்வி எல்லாம் வராது. டெய்லி டெஸ்ட், வாரம் ஒரு முறை பரீட்சை, மாதம் ஒரு முறை மாடல் எக்ஸாம். ஐ ஐ டி கோச்சிங், மேத்ஸ் ட்யூஷன் ப்ளா ப்ளா என்று கர்ப்பஸ்திரீக்கு அறிவுரை போல ஒரு வருடத்தை (பல சமயங்களில் 2-3 வருடங்களிக் கூட) சாமியார் வாழ்க்கை வாழ வைக்கிறோம் மாணவர்களை.
ஒரு தலைமுறையையே நாசம் செய்து வைத்திருக்கிறோம். +2வில் வரும் மார்க்குகள்தான் வாழ்க்கை என்று ஒரு கற்பிதத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். பேசும்போது என்ன பேசினாலும் நடைமுறையில் மார்க்குதான் தெய்வம். அதை எப்பாடு பட்டேனும் அடைந்தே தீருவோம் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
யாரை இதற்குக் குறை சொல்வது? பெற்றோரையா? பள்ளியையா? கல்வி முறையையா?
மூன்றுமே இல்லை என்பதுதான் என் வாதம்.
பன்னிரண்டாம் வகுப்பின் தேர்வில் மூன்று மணி நேரத்தில் பதினாறு தாள்களில் என்ன எழுதுகிறானோ / ளோ அதுதான் முழு வாழ்க்கைக்கும் அஸ்திவாரம் என்று ஆன சமுதாயச் சூழல்தான் முக்கியக் காரணம். அந்தத் தேர்வின் மதிப்பெண்கள்தான் அவன் போகப் போகும் கல்லூரியைத் தீர்மானிக்கின்றது. அவன் / அவள் போகப்போகும் கல்லூரிதான் வேலையைத் தீர்மானிக்கப் போகிறது. வேலைதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகிறது.. இந்த மாயச் சுழல்தான் அந்த மதிப்பெண்களுக்கு மரியாதையைக் கூட்டுகின்றது - இந்த விஷயத்தை சொல்லி வைத்தாற்போல எல்லாரும் கவனிக்கத் தவறுகின்றனர்.
அந்த மதிப்பெண்களுக்கு இருக்கும் அபரிமித மரியாதையே மார்க் எடுத்தே ஆகவேண்டும் - அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று பெற்றோர்களை இறங்க வைக்கிறது. இப்போது இருக்கும் தலைமுறையினர் - ஒன்று படிப்பால் மட்டும் முன்னுக்கு வந்த தலைமுறை - அல்லது படிப்பால் மட்டும் முன்னுக்கு வந்த மற்ற மத்திய வர்க்கத்தினரைப் பார்க்கும் தலைமுறை. பில் கேட்ஸ் காலேஜ் ட்ராப் அவுட் என்று ஃபேஸ்புக்கில் தினம் தினம் பார்த்தாலும் எல்லாரும் பில் கேட்ஸ் ஆவதில்லை என்ற உண்மை உரைப்பதால் படிப்பை மட்டுமே - அதுவும் உயர்கல்வியை மட்டுமே - குறிப்பாக எஞ்சினியரிங்கை மட்டுமே குறிவைத்து வாழ்க்கையை அமைக்க வைக்கிறது.
எஞ்சினியரிங்குக்கு தமிழ்நாட்டில் சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் அமோக ஆதரவு ஆச்சரியம் அளிக்கிறது. எத்தனை காலேஜ்கள் - தமிழகத்துக்கு மட்டும் அல்லாது மொத்த இந்தியாவின் எஞ்சினியரிங் பட்டதாரிகளின் தேவையை தமிழ்நாடே தர இயலும் என்ற அளவுக்கு இங்கே காலேஜ்கள் இருக்கின்றனவாம். ஏன் இத்தனை? இந்தியாவின் மற்ற இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மற்ற அனைவருக்கும் வேலை இல்லாமல் போனால்தான் தமிழகத்து எஞ்சினியர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும் - அப்படியென்றால் நிச்சயம் தமிழகத்து எஞ்சினியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேலை இல்லாமல்தான் இருக்கப் போகிறார்கள். எந்தப் பாதிக்கு வேலை கிடைக்கும்? முக்கியக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு. யார் முக்கியக் கல்லூரிகளில் இடம் பிடிக்கப் போகிறார்கள்? நன்றாகப் படிக்கும் மாணவர்கள். நன்றாகப் படிப்பார்கள் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? +2 மதிப்பெண்களை வைத்து. ஆக, இந்த மதிப்பெண் மரியாதைக்கு இந்தச் சுழல் சூழல்தான் முக்கியக் காரணம்.
அப்படியென்ன எஞ்சினியரிங் மேல் மோகம்? டாக்டர்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள், எல்லாரும் ப்ரொஃபஷனல்கள் தானே? அந்தத் தொழில்களில் இல்லாத ஆசை ஏன் எஞ்சினியரிங் மேல் மட்டும்?
படிப்பு என்பதை கல்வி என்று சிந்தித்த காலம் மலையேறிப் போய், முதலீடு என்று சிந்திக்கிற காலம் வந்தே பல ஆண்டுகளாக இருக்கிறது. இந்த நிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணம் இப்போது predominant ஆக இருக்கும் படிப்பால் மட்டுமே முன்னுக்கு வந்த தலைமுறை. முதலீடு என்று வந்தவுடன் ப்ரேக் - ஈவன் என்பதைப் பார்க்கவும் வேண்டும் அல்லவா?
ஒரு மாணவன், 17 ஆம் வயதில் +2 முடித்தால் 21 ஆம் வயதில் எஞ்சினியர். அவன் முதல் வேலை படித்து முடிக்கும் முன்னரே கேம்பஸில் கிடைத்து விடுகிறது. (எலைட் மாணவர்களுக்கு). ஆனால் அவன் ஒரு டாக்டராக வேலை தொடங்க குறைந்தது 25 வயதாவது ஆக வேண்டும். பிறகும் எதேனும் ஒரு மருத்துவமனையின் அடி ஆழத்தில் ட்யூட்டி டாக்டராக ஆரம்பித்து கைராசி எனப் பெயர் வாங்கி சம்பாதிக்க ஆரம்பிப்பதற்குள் நரைத்து விடுகிறது. வக்கீல்கள் பெயர் வாங்க இன்னுமே அதிகக் காலம் ஆகும். கேஸ் கிடைக்க வேண்டும். சீனியரிடம் இருந்து விடுபடவேண்டும்..ஆடிட்டர்கள் கதையோ அமோகம். சி ஏ பாஸ் செய்வதற்குள்ளேயே பாதி பேருக்கு நரைத்து விடுகிறது.
உடனடி காசு எஞ்சினியரிங்கில்தான். எனவே எஞ்சினியரிங்.
மார்க் வேண்டும். அதற்கு நல்ல பள்ளியாகப் பிடிக்க வேண்டும். நல்ல பள்ளி என்பது எது? ஆசிரியர்கள் அன்பாக நடந்துகொண்டு நல்லபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் பள்ளியா? அதற்கு என்ன அளவுகோள்? போன முறை வரை அவர்கள் தேர்ச்சி சதவீதம் என்ன? எத்தனை ஸ்டேட் ராங்க்.. இவைதானே?
பள்ளிகளுக்கு யுனிக் செல்லிங் பாயிண்ட் அவர்கள் மாணவர்களிடம் இருந்து கறக்கும் மதிப்பெண்கள்தான் என்று ஆன பிறகு, ஒரு மாணவன் முடியவில்லை, படிக்கத் தெரியவில்லை என்று சொன்னால் அவர்களுடைய யூ எஸ் பிக்கு பாதிப்பு வராதா? அவர்கள் எப்படி அதை விடுவார்கள்? ஏதேனும் செய்து - அவனுக்கு அழுத்தம் கொடுத்து அல்லது பள்ளியில் இருந்தே விலக்கி அவர்களுடைய ஃபிகர்களுக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளத் தானே பாடுபடுவார்கள்? ஒரு மாணவன் தோற்றாலும் 100 சதம் இரட்டை இலக்கமாகி விடுகிறதே..
ஆசிரியர்கள் மீதான மாணவர்களின் மரியாதை பற்றி நிறைய பேசப்படுகிறது - குறிப்பாக சமீபத்தில் ஒரு பள்ளி ஆசிரியை கொல்லப்பட்ட பிறகு. 'அந்தக் காலத்துல நாங்க எல்லாம்' ரேஞ்சில் கருத்துகளை உதிர்க்கும் அனைவரும் மறப்பது இரண்டு விஷயங்களை. ஒன்று அவர்கள் ஆசிரியர்கள் எத்தனை பேரை அவர்களுக்கு ஞாபகம் இருக்கிறது? ஒவ்வொரு மாணவனும், ஆறாம் வகுப்பில் இருந்து ஞாபகம் இருக்கும் என்று வைத்துக் கொண்டால் - 12 ஆம் வகுப்பு வரை - 35- 40 ஆசிரியர்களைப் பார்க்கிறான். 40 வயதான அப்பாவிடம் அந்த 40 ஆசிரியர்களின் பெயரையும் கேட்டால் நினைவிருக்குமா? அதே விகிதத்தில் இன்றும் நல்ல ஆசிரியர்கள் இருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது.
இரண்டாவது கவனிக்க வேண்டிய விஷயம் -அவர்கள் படிப்பிற்காகக் கொடுத்த பணத்தை. பணத்தின் மதிப்பு டான்ஸ் ஆடிக்கொண்டிருப்பதால் நேரடி மதிப்பைப் பார்க்காமல் இப்படிப் பார்க்கலாம் - அவர்கள் படித்தபோது பள்ளிகளின் ஃபீஸ் அவர்கள் அன்றைய குடும்ப வருமானத்தில் எவ்வளவு சதவீதம்? இன்று எவ்வளவு? ஆராய்ச்சியே பண்ணத் தேவையில்லை. சதவீதமே மிக அதிகமாக ஆகியிருக்கிறது. அன்று பள்ளிக்குக் கொடுத்த சம்பளம் ஏறத்தாழ ஓசிதான். ஓசியிலே கற்பிக்கும்போது மரியாதை வரத்தான் செய்யும். இன்று வருமானத்தில் குறிப்பிடத்தக்க சதவீதம் பள்ளிக்குப் போகும்போது எதிர்பார்ப்புகளும் அதிகம். அவர்கள் சும்மா சர்வீஸ் ப்ரொவைடர்கள்தானே என்ற எண்ணத்தில் மரியாதை குறையத்தான் செய்கிறது. அதை மாற்ற முடியாது.
கல்விமுறையைப் பற்றிச் சொல்வதும் வீண். சமுதாயம் என்ன கேட்கிறதோ அதைத்தான் கல்விமுறை செய்கிறது. மெக்காலே கல்வித்திட்டத்தைத் திட்டுவது நம் எல்லாருக்கும் செல்லப் பொழுதுபோக்கு. 'யாருக்கு என்ன பிடிக்கிறதோ அதைச் சொல்லிக் கொடுங்கள்' வாதமாகப் பேசும்போது இனிமையாக ஒலிக்கிறதே, இதன் நடைமுறை சாத்தியக் கூற்றைப் பற்றி யோசித்திருப்போமா? நாம் கல்வியை பணம் சம்பாதிக்கும் கருவியாக மாற்றிவைத்துவிட்டோம். விட்டில் பூச்சிகளைப் போல எல்லாரும் ஒரே இடத்தில் மொய்க்கும்போது பேகான் ஸ்ப்ரே அடிக்கத்தான் செய்வார்கள். எப்படி உண்மையிலேயே ஒரு குறிப்பிட்ட படிப்பில் ஆர்வமுள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும்? நுழைவுத் தேர்வு போன்ற இரண்டாம் நிலை ஃபில்டர்களும் இல்லாத பட்சத்தில்?
எல்லாவித careerகளுக்கும் சம மதிப்பு இருந்தால்தான் இந்த மாயச் சுழலில் இருந்து விடுபட முடியும். அதற்கு என்ன செய்வது? விவாதிக்கலாமா?