முடிவெட்டுக்கும் எனக்கும் ஒத்துப்போவதே இல்லை. மாதத்துக்கு ஒருமுறை நடந்துகொண்டிருந்த சடங்கு இப்போதெல்லாம் பின்வாங்கத் தொடங்கிய கூந்தலால் இருமாதங்களுக்கு ஒருமுறை ஆனாலும் ஒத்துப்போகாதது மட்டும் தொடர்கிறது.
முடிவெட்டு நிலையங்களில் காத்திருப்பு என்பது கிளுகிளுப்பான அனுபவமாக இருந்தது ஒரு காலத்தில். வேறெங்கும் காணக்கிடைக்காத அரிய காலண்டர்களை நான் பார்ப்பதை யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற குறுகுறுப்போடு பார்க்கும்போது "பாருப்பா.. பார்க்கறதுக்குத்தானே மாட்டிவச்சிருக்கேன்" என்பார் முடிவெட்டுபவர். இதற்காகவே காத்திருந்தது போல சூழ்ந்திருக்கும் எல்லாரும் சிரிக்க குறுகிப்போவேன். தினத்தந்தி தினகரன் என்று பேப்பர்கள் இரைந்துகிடக்க, "இங்கே அரசியல் பேசாதீர்கள்" என்று ஒரு போர்டு "இவனுங்க மட்டும் என்னவாம்? ஆட்சி மாறத்தான் போவுது நாயக்கரே.. டேய் அந்த கத்தியை எடுடா" என்று தீவிரமாக கத்தியைத் தீட்டுபவரே வைத்த முரண் சிரிக்கவைக்கும். "வந்து உக்காரு. காடாட்டம் வளர்த்து வச்சிருக்க.. அப்பப்ப வந்தா செலவாயிடுமா? அம்பது பைசாவை வச்சு மாடிவீடு கட்டப்போறியா?" முடிவெட்டுபவர், வெட்டப்படுபவர் இரண்டுபேரும் தூங்கிக்கொண்டே வேலைநடக்கும். "என்னடா இப்படி கொந்தி வச்சிருக்கான்?" மட்டும் மாறவே மாறாது.
ஸ்டைலாக முடிவெட்டிக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் வந்த வயதிலும் கூட அதே முடிவெட்டுபவர் "ஸ்டெப் கட்டிங் எல்லாம் உனக்கு செட் ஆவாது கண்ணு. நல்லா எண்ணெய் தடவி படிய வாரிக்க, அப்பதான் அயகா இருக்கும்" என்று எனக்காக முடி எடுப்பதுடன் சேர்த்து முடிவெடுப்பார். பின்னணியில் 'ரேடியோ சோதனை மேல் சோதனை-போதுமடா சாமி' என்று பொருத்தமாக ரீரெக்கார்டிங் செய்யத் தொடங்கிவிட்ட காலத்தில்.
17 18 வயதில் டெய்லி ஷேவிங் செய்ய வேண்டியிருக்குதுடா என்று அலுத்துக்கொள்ளும் கும்பல் மத்தியில் பூனைமீசைகூட வராமல் பல்லவ சிற்பம் போல இருப்பதே அவமானம். முடிவெட்டுபவரும் தொழிலில் முன்னேறி டிவி எல்லாம் வைத்திருந்தார். சித்ரமாலாவில் அஸ்ஸாம்காரர்கள் சப்பை மூக்குடன் 'லாட்ல லோட்ல லையூ' என்று பாடிக்கொண்டிருப்பதை சுவாரஸ்யமாகப் பார்த்துக்கொண்டே "அடடா.. கிருதா போயிருச்சு. பரவாயில்ல. இந்த ஸ்டைல் உனக்கு நல்லா இருக்கு" என்று விபத்தில் விஞ்ஞானம் வளர்ப்பார்.
வெளியூர் போயும் கூட என் சோகம் தொடர்ந்ததுதான் கொடுமை. பீஹாரின் முடிவெட்டுபவர்கள் அனைவரும் யார் எப்படி வந்தாலும் எல்லா முடியையும் முன் பக்கம் வாரி லாலு ப்ரஸாத் யாதவ் ஹேர்ஸ்டைலுக்குக் கொண்டுவந்துவிட்டுதான் மேலதிக அழகுபடுத்தலை ஆரம்பித்தார்கள். அதற்குள்ளாகவே என் முடியும் அழகும் காலாவதி ஆகிவிடுவதால் அவர்களின் கலைநுணுக்கங்களை ஏற்க முடியாத என் தலைநுணுக்கம்.
சரி.. தலையில் தேவையான அளவு முடி இல்லை என்பதால்தானே இவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை? ஆறுமாதங்கள் வெட்டாமல் என் தலைக்கனத்தை ஏற்றினேன்.பங்க் கட்டிங் என்று போனி டெயில் போடும் அளவுக்குப் பின்னந்தலைமுடி வளர்ந்தால் ஜடாமுடி போடும் அளவுக்கு முன்னந்தலைமுடியும் சீராக வளர்ந்தது. பார்ப்பதற்கு பங்க் போலத் தெரியவில்லை. பரதேசி போலத் தெரிந்தது. இப்போதும் பல்லவ சிற்ப முக அமைப்பில் மாற்றம் இல்லாததால் அழகிய தமிழ்மகள் இவள் என்று பீஹார்வாசிகள் பாடுவார்களோ என்று பயந்து லாலு முடிவெட்டுபவரைச் சரணடைய நேர்ந்தது. ஒருமுறை ஆறுமாதங்களுக்குப் பிறகு ஜடாமுடியுடன் என்னைப்பார்த்த என் அப்பா "நீ இஷ்டம் போல இரு, நாளை மறுநாள் வீட்டில் விசேஷம், என் அண்ணன்கள் எல்லாரும் வருவார்கள், அப்போது மட்டும் வெட்டிவிடு.. எனக்குன்னு ஒரு மானம் இருக்கில்ல?" என்றதைத் தொடர்ந்து பலியானது.
சென்னை மாதிரி நகரத்திலும்கூட என் வீட்டுக்கு அருகே அமைந்த முடிவெட்டுக்கடை என் முன்வரலாறு தெரிந்ததாகவே அமைந்த கொடுமை. ஞாயிற்றுக்கிழமைகளின் நீண்ட வரிசைகள், நேரக்கட்டுப்பாடுகளுக்கு இடையில் குயிக் கட் முருகன் என் தலையில் விளையாடுவார். இங்கே அரசியல் பேச்சுக்கள் கிடையாது. க்யூவில் இருப்பவர்கள் எந்நேரமும் சிடுசிடுவென்று இருப்பார்கள். "அப்பா, அம்மா வரும்போது பச்சைமிளகாய் வாங்கிண்டு வரச் சொன்னா"வுக்கு தமிழில் பதில் பேசிவிட்டு "எக்ஸ்க்யூஸ்மீ, ஐ ஹாவ் அப்பாயின்மெண்ட்ஸ், கென் ஐ கோ நெக்ஸ்ட்" என்று ஆங்கிலத்தில் க்யூ முந்துவார்கள். கவனித்துப் பார்ப்பவர்களுக்கு மட்டும் புது ப்ளேடு போட்டு பாண்ட்ஸ் பவுடரை தாராளமாக வீசி வயதான ஆட்கள் முடிவெட்டுவார்கள். எனக்கு எப்போதும் கடைக்குப் புதிதாக வந்த பையன்தான். ஆஃபீஸில் மறுநாள் "என்னாச்சு?" என்று துக்கம் விசாரிக்க ஏதுவாக முடிவெட்டுவான் பையன்.
என் முகத்திலும் முடி அரும்ப ஆரம்பித்தாலும் இவர்கள் ஏதாவது செய்து பழைய பல்லவகாலத்துக்குக் கொண்டு சென்றுவிடுவார்களோ என்ற பயத்தில் ஷேவிங் மட்டும் செய்துகொள்ளாமல் தப்பித்துக் கொள்வேன். வீட்டுக்கு வந்து முகவெட்டுடன் சவரம் செய்தால்தான் திருப்தி.
துபாய்க்கு வந்தும் என் துயரம் தொலையவில்லை. போஸ்டர்கள் சித்ரமாலா டிவி அரசியல் போன்ற சில்லறைச் சந்தோஷங்கள் விடுபட்டுப் போனது தவிர, முடிவெட்டுபவர்கள் என்னைப் பார்ப்பது மாறவே இல்லை. ஆயிரக்கணக்கான அழகுசாதனங்கள் எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக் சாதனங்கள் இரைந்துகிடக்க என் தலைக்கு அதே சீப்பும் கத்தரியும் மட்டும்தான். இந்தக்கடை முடிவெட்டுபவர்களுக்கான கல்லூரி போலிருக்கிறது. ஒவ்வொரு முறையும் பழைய ஆட்கள் 2 பேரும், புதியவர்கள் 2 பேரும் இருப்பார்கள். புதியவர்கள் ப்ழையவர்கள் ஆனவுடன் பழையவர்கள் வேறுகடைக்குப் போய் புதிய புதியவர்கள் வருவார்கள். புதிய புதியவர்கள் எப்போது வரலாம் என்பதை என் தலைமுடி அளவு தீர்மானிக்கும். முதல் போணி என்றும் நான்தான்.
புதியவர்களாக இருந்தாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழி. ஒருவர் பின்னந்தலையில் இருந்து ஆரம்பிப்பார். தலையில் குளவி கொட்டும். இன்னொருவர் புஸ்புஸ் என்று தண்ணீரை இரைத்து படிய வாரி கம்மியாதானே இருக்கு, ஏன் வந்தோம் என்று உணரவைப்பார். இன்னொருவர் மெஷினை எடுத்து வலது இடதுபக்கங்களுக்கு வெட்டுவதற்கு முன், வெட்டியதற்குப் பின் என்று வித்தியாசம் காட்டுவார்.இன்னொருவர் பொறுமையாக மில்லிமீட்டர் மில்லிமீட்டராக வெட்டி, வெட்டியதைச் சுத்தம் செய்து, மீண்டும் வெட்டி என்று ஆர்ட்ஃபிலிம் காண்பிப்பார். பாதைகள் ஆயிரம், பயணம் ஒன்றுதான். வழிமுறைகள் ஆயிரம், கொத்துக்கறி என் தலைதான்.
என் தலைக்கு ஏன் இவ்வளவு மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டுகிறார்கள் என்று தீவிரமாக யோசித்தேன். ஒருவர் இருவர் என்றால் பிரச்சினை அந்தப்பக்கம் இருக்கலாம். சொல்லிவைத்ததுபோல வேலூர் சென்னை பீஹார் துபாய் என்று எல்லாரும் செய்கிறார்கள் என்றால் என்னதான் கூட்டுறவாக இருந்தாலும் சின்க் ஆகாது, பிரச்சினை என்னிடம்தான் இருக்கவேண்டும். ஒருவேளை முடிவெட்டும்போது ஒரு வார்த்தைகூடப் பேசாமல் முடிந்தவுடன் "ரொம்பச் சின்னதாப்போச்சு இல்ல?" என்று கேட்பதா? மசாஜ் செய்யவருபவர்களைத் தடுத்து எந்த மேலதிக சேவையுமே வேண்டாம் என்று பொருள்பட வைப்பதா? மருத்துவ நாவிதர் சங்கம் - 1-4-XXXXஇல் இருந்து என்று போடப்பட்டிருக்கும் விலைப்பட்டியலில் இருந்து எல்லா நேரமும் 75% டிஸ்கவுண்டிலேயே வெட்டுவதாலா? (அந்த விலைப்பட்டியல் சிவகாசி பட்டாசு விலை போல. யாரும் அந்தப்பணம் கொடுத்து நான் பார்த்ததே இல்லை)
நேற்று முடிவெட்டிக்கொண்டு வந்தேன். மனைவி பார்த்தாள், சிரித்தாள். சிரி சிரி.. புதுசா என்ன? இதெல்லாம் நாங்க எவ்ளோ நாள் பாத்துகிட்டு இருக்கோம்!
"ரொம்ப மோசமா இருக்கா?"
"எப்பவும் போலதான். முடிவெட்டிகிட்டு வந்தா ஒருவாரம் தனி அசிங்கமா இருக்கும் உங்க முகம்"
"அப்புறம்?"
"வழக்கம்போல அசிங்கமா இருக்கும்"