Jul 11, 2006

அசைவு (தேன்கூடு போட்டிக்கு) (11 Jul 06)

முன்குறிப்பு: இந்தக்கதையில் கொஞ்சம் ரத்தம் அதிகம். கண்டிப்பாக 18 வயதிற்கு மேற்பட்ட, இருதய பலவீனம் இல்லாதவர்களுக்கு மட்டும். மென்மையான உணர்வுள்ளவர்கள் தவிர்த்துவிடுங்கள்
_________________________________________________________________________________________
 
எவ்வளவு துடைத்தாலும் இந்தச் சிவப்புக்கறை போவதில்லை. ரத்தமா சாயமா என்றும் தெரியவில்லை.இருந்த கொஞ்சம் வினிகரைப் போட்டுப் பார்த்தாகிவிட்டது. சிறையில் அரிதாகவே கிடைக்கும் ரை சோப்பையும் போட்டுத் தேய்த்தாகிவிட்டது. கொஞ்சம் எலுமிச்சை கிடைத்தால் நிச்சயம் போய்விடும். காவலாளிகளிடம் கேட்க வேண்டும்.
 
நேற்று செய்திருந்த வடிவங்களைத் தொட்டுப்பார்த்தேன். இன்னும் முழுதாகக் காயவில்லை. வானம் மூடியே இருக்கிறது. வெயில் வந்தால்தானே.
 
நேரம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. காவல்காரர்கள் வரும் நேரம் ஆகிவிட்டிருக்கும். இன்றாவது இந்த அறையைச் சுத்தம் செய்ய கெஞ்சிப்பார்க்கலாம். நாற்றம் பழகிவிட்டதுதான். இருந்தாலும் ரத்தக்கறை உடையிலும் உடலிலும் பட்டால் தங்கிவிடுகிறது.
 
சிறை என்றாலும் பெரிய அறைதான். இருந்தாலும் பாதிக்கு மேல் தலைகள் அடைத்துக்கொண்டு, மீதி இடத்தில் சாயங்களும் பாரிஸ் களிமண்ணும் அரைகுறையாக முடிக்கப்பட்ட சிலைகளும் கழிவறையும்- படுக்கக்கூட இடமில்லை. அரச குடும்பத்தினர் ராஜபோகமாய் வலம் வந்த அரண்மனையின் ஒரு பகுதியா இது? இத்தனைக்கும் லிஸ்ஸுக்கு இதே அறையில் நான் படம்வரையக் கற்றுக்கொடுத்திருக்கிறேன்.
 
"எப்படி மேரி இவ்வளவு அழகாகச் செய்ய வருகிறது உனக்கு?" லிஸ் நான் மூன்று நிமிடங்களில் செய்த மெழுகு யானையைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.
 
"இதற்கே ஆச்சரியப்படுகிறாயே. எனக்காவது மூன்று நிமிடம் ஆனது. டாக்டர் கர்டியஸ் ஒரு நிமிடத்துக்குள் முடித்துவிடுவார் தெரியுமா?
 
"அப்படியே நிஜ யானை போலவே இருக்கிறது"
 
"சரியாகப் பார்க்கவில்லை நீ. இந்தத் தந்தத்தைப் பார். என் கைவிரலின் ரேகையும் கோடுகளும் தெரிகின்றன. இன்னும் கொஞ்சம் பொறுமையாகச் செய்தால் நிஜத்துக்கு மிக அருகில் வந்துவிடலாம்"
 
"இதுவே நன்றாகத்தான் இருக்கிறது. இன்னும் தத்ரூபத்துக்கு ஏன் மெனக்கெட வேண்டும்?"
 
"டாக்டர் எனக்குச் சொல்லிக்கொடுத்ததில் முக்கியமானதே முழுமைக்கான தீவிரத் தேடல்தான். அசைவை வைத்து மட்டும்தான் உயிர் இருக்கிறதா இல்லை பொம்மையா என்று கண்டுபிடிக்க முடியவேண்டும்!"
 
"சரிதான் - என்போன்ற பொறுமையில்லா ஜீவனுக்கு இதைக் கற்றுக் கொடுக்கப்போகிறாயா?"
 
திரைச்சீலைக்குப் பின் நின்றுகொண்டிருந்த பணிப்பெண் வெளிவந்து, "அரசிக்கு வணக்கம். பாராளுமன்றத் துணைத்தலைவர் டி கெர்செயண்ட் வந்துகொண்டிருக்கிறார்"
 
முழு அரச உடையில், கப்பல்படையில் பணியாற்றிப் பெற்ற வண்ணவண்ண மெடல்களுடன் விசித்திரமான தொப்பியுடன் வந்தாலும், எப்போதும் போல என் கண்ணுக்கு அழகனாகவே தெரிந்தான்.
 
"லிஸ் - எப்படி இருக்கிறாய்! நாளுக்கு நாள் அழகாகிக்கொண்டிருக்கிறாய்! எப்படி சொல்லிக்கொடுக்கிறாள் மேரி?" ராஜகுடும்பம் இல்லாவிட்டாலும், முக்கியமான குடும்பத்தில் பிறந்ததால் அர்மாண்ட் டி கெர்செயண்ட் இளவரசியின் சின்னவயது நண்பன்.
 
"அர்மாண்ட், புதிய பதவி வந்ததைச் சொல்லக்கூட மாட்டாயா?"
 
"அதைச்சொல்லத்தான் வந்தேன். துணை நீதிபதியாம்.. இன்னும் இரண்டு ஓட்டு கிடைத்திருந்தாலும் நீதிபதி ஆகியிருப்பேன்! அவர்களுக்கு நரைத்த தலை தேவைப்படுகிறது!"
 
"போகட்டும். இன்னும் உனக்கு வயது இருக்கிறது."
 
"ஆனால் மக்கள் முன்னைப்போல் இல்லை. அங்கங்கே பிரச்சினை வெடிக்கத் தொடங்கிவிட்டது. கட்டுக்குள் வைப்பது கடினமாகிக் கொண்டு வருகிறது."
 
"இந்தப்பிரச்சினைகளையெல்லாம் நீங்கள் ஆண்களே பார்த்துக்கொள்ளுங்கள்"
 
"மேரி! எப்படி இருக்கிறாய்.. பார்த்து வாரத்துக்குமேல் ஆகியிருக்கும்.. இல்லையா?"
 
இதுவரை என்னைக் கண்டுகொள்ளாமல் இருந்ததில் வந்த கோபம், அர்மாண்டின் குரல் இனிமைக்கு முன் காணாமல் போனது.
 
"என் நினைவு கூட உங்களுக்கு இருக்கிறதா?"
 
மரியாதையாக லிஸ் அறைக்கு வெளியே போய்விட்டாள்.
 
"என்ன வார்த்தை பேசுகிறாய் மேரி? உன்னை விட்டு என் நினைவு அலை பாயுமா?"
 
"ஏதோ பிரச்சினைகளைப் பற்றிச் சொன்னீர்களே?"
 
"உனக்கு அதைப்பற்றிய கவலை வேண்டாம். பிரெஞ்சு அரசாங்கம் எல்லாப்பிரச்சினைகளையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கும். எதற்கும், நீ அரண்மனையில் இல்லாமல் இருப்பது நல்லது, டாக்டர் பாரிஸில் சிலைக்கண்காட்சி நடத்துகிறாரே, அங்கே சென்றுவிடு. அவ்வப்போது நான் வந்து பார்க்கிறேன்."
"வெளிய வாம்மா.. உனக்கு வேலை வந்திருக்கு!" என்றான் காவல்காரன்.
 
கிழிந்திருந்த உடைகளைச் சரிசெய்து மறைத்துக்கொண்டேன். குளிர் அதிகமாகி விட்டதா அல்லது என் உடை சாதாரணக்குளிரையும் தாங்காமல் போய்விட்டதா? அவசரமாக வெளியே வந்தேன். நேரம் அதிகமாக்கினால் புதுமையாக யோசித்து தண்டனை கொடுப்பான். தண்டிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அவனுக்கு காரணங்கள் தேவையில்லை. ஜன்னல்களைத் திறந்துவைத்துக் குளிரில் வாட்டுவதிலிருந்து, உணவு தண்ணீரை மறுப்பது வரை எது வேண்டுமானாலும் செய்வான். அடிக்கக்கூடாது, கொல்லக்கூடாது என்ற அரச கட்டளைகள் அவன் கையைக்கட்டினாலும்,  முடிந்தவரை எதுவும் செய்வான்.
 
திறந்த குதிரைவண்டி. பாரீஸின் தெருக்களில் ஓடியது. இன்னொரு அரண்மனையில் தீ எரிகின்றது. இதையும் பார்த்திருக்கிறேனே.. ஆம், இங்கேதானே டாக்டர் முதலில் கண்காட்சி வைத்தார்?
"டாக்டர், கதவை அடைத்துவிடலாமா?"
 
"ஆமாம். நேரமாகிவிட்டது. இனி யாரும் வரமாட்டார்கள். தெருக்களில் சத்தம் அதிகமாகிவிட்டது. நல்லவேளையாக நீ அரண்மனையில் இல்லை."
 
"கும்பல் அரண்மனைக்கா போயிருக்கிறது?"
 
"பின்னே? இன்று அரச குடும்பத்தில் ஒரு உயிர் மிஞ்சாது.. அவ்வளவு கோபத்தில் சென்றிருக்கிறார்கள்"
 
ஒரு நொடி ராஜாவின் முகம் என்கண் முன் வந்து சென்றது. அவரை மோசமானவர் என்று எல்லோரும் நினைத்திருந்தாலும் என்னிடம் மிகவும் அன்பாகவும் கனிவாகவுமே நடந்துகொண்டவர். வேலைக்காரி மகள் நான் என்று தெரிந்திருந்தாலும், பெருங்குலத்து மக்களிடம் போலவே என்னிடமும் மரியாதை காட்டியவர்.
 
"எவ்வளவுதான் ஓவியங்கள் இருந்தாலும், நீ செய்வது போல தத்ரூபமான சிலைகள்தான் எனக்குப் பிடித்திருக்கிறது."
 
"ஆணையிடுங்கள் ராஜா, உங்கள் சிலையை வடித்துவிடுகிறேன்"
 
"எங்கே நேரம் இருக்கிறது! ஓய்வு கிடைத்தால் சொல்கிறேன்.. "
 
கலைக்கு மரியாதை கொடுத்தவர். என் கண்களில் இருந்து ஒரு சொட்டுக்கண்ணீர் வெளியேறியது.
 
கதவை அடைத்துவிட்டுத் திரும்பினேன்.
 
"டாக்டர், விளக்குகளையும் அணைத்துவிடட்டுமா?" கேட்பதற்குள் கதவு இடிபடும் சத்தம்.. இரைச்சல். ஒரு நிமிடம் முன்பு அமைதியாகத்தானே இருந்தது?
 
கதவைத் திறப்பதா வேண்டாமா.. என் கையில் எதுவும் இல்லை என்பது மட்டும் புரிந்தது. திறக்காவிட்டால் உடைபடும். முடிவு ஒன்றுதான்.
 
கதவு உடைந்தது. கூட்டம் உள்ளே நுழைந்தது. தலைவன் போல் இருந்தவன் கத்தியை நீட்டினான். நுனியில் ரத்தம்.
 
"நீதான மேரி? ராஜகுடும்பத்துக்கு நீ ரொம்பப் பழக்கமாமே!"
 
"இவளை அடிக்கடி வெர்ஸே லே பாத்திருக்கேன். இளவரசி எலிஸபெத்துக்கு ஓவியம் கத்துக்கொடுக்கறவ"
 
"ராஜாதான் பாதிக்குடும்பத்தோட தப்பி ஓடிட்டான்! அவனோட சம்மந்தப்பட்ட யாரையும் உயிரோட விடக்கூடாது!"
 
"விடுடா! இவளை வச்சு வேற ஒரு வேலை இருக்குது! நீதானே இந்த மெழுகு பொம்மையெல்லாம் செய்யறவ? எனக்கு ஒண்ணு செஞ்சு கொடு!"
 
"என்ன தலைவா இந்த நேரத்துல பொம்மை?"
 
"டேய் - அந்த ராணி தலையைக் கொண்டு வாங்கடா! மிஞ்சிப்போனா இது ரெண்டு நாளைக்கு இருக்கும்.. அப்புறம் அழுகிடாது? மெழுகுலே பொம்மையா செஞ்சு வெச்சுகிட்டா எப்பவும் ஞாபகமா வெச்சுக்கலாமில்ல?"
 
ராணியின் கண்கள் மேல்நோக்கிச் செருகியிருந்தன. மூடவில்லை. கழுத்து நரம்பிலிருந்து இன்னும் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. எனக்கு கண் இருட்டியது மயங்கி விழுந்தேன்..
 
சில்லென்ற தண்ணீர் மேலே பட்டதும் விழித்தேன். கண்ணெதிரே அதே தலை. வாந்தி வந்தது.
 
"நீ வாந்தி எடு, மயங்கிவிழு என்ன வேணும்னாலும் பண்ணு.. ஆனா இன்னுமொரு மணிநேரத்துக்குள்ள பொம்மை தயாராகணும்"
எப்போது செய்ய ஆரம்பித்தேன், எப்படி முடித்தேன் - இன்னும் தெரியவில்லை. பிறகு சிறையில் அடைக்கப்பட்டு, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கில்லட்டினின் தீராத பசிக்கு தினம் உணவாகும் அரச குடும்பத்தினர் அனைவரின் தலைகளும் மெழுகு பொம்மைகளாக்க வெட்டப்பட்ட சில நிமிடங்களில் கொண்டுவர ஆரம்பித்தனர். வாந்தியும், ரத்தமும் பழகிவிட்டது.
 
சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டது.
 
ஒரு நாள் எலிஸபெத்தின் தலை வந்தது - அழுகை வரவில்லை.
 
இன்னொருநாள் லூயிஸ் ராஜாவின் தலை வந்தபோதும் அழுகை வரவில்லை.
 
ஒரு வேளை இந்தச்சிறையிலிருந்து தப்பித்தாலும் என் வாழ்நாளில் எனக்கு அழுகை வரப்போவதில்லை. உணர்ச்சிகளற்ற ஜடமாகிவிட்டேன்.
 
இப்போது நான் செய்யும் பொம்மைகளுக்கும் அவற்றின் மூலங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டிலும் அசைவு இல்லை.
 
குதிரை வண்டி வேகம் குறைய ஆரம்பித்தது. இடத்தைப்பார்த்தேன். மயானபூமி. புதிதாகச் செய்யப்பட்ட 17ஆவது கில்லட்டின்னை இங்கேதான் வைத்திருக்கிறார்கள். என் கதையும் முடியப்போகிறது.
 
"இதோ பாரு இன்னிக்கு மட்டும் 43 பேரைக் கணக்கு தீர்த்திருக்காங்க. இதுலே யார் அரச குடும்பம், யாரு சாதாரண ஆளுங்கன்னு தெரியல. நீதான் அரச குடும்பத்துக்கு வேண்டப்பட்டவளாச்சே! பாத்து எந்த எந்தத் தலை வேணுமோ எடுத்துக்க!  ஒரு மணிநேரத்துக்குள்ள எல்லாத்தையும் பாத்துடு"
 
காலியான வயிற்றில் குளிர்காற்றும் ரத்தவாடையும் குமட்ட தலைகளையும் உடல்களையும் பார்த்தேன்.
 
இது தோட்டக்காரன் பியரி.. இவன் எப்படி.. காரணங்கள் தேவைப்படாத கொலைக்கூட்டத்திடம் இவன் ஏன் மாட்டினான்?
 
இது என்னை ஒருமுறை குதிரை வண்டியில் ஏற்றிவந்த ஜீன் - பால்..
 
இந்த முகம் பார்த்தது போலத்தான் இருக்கிறது.. ஆனால் கில்லட்டினுக்கு முன்னாலேயே சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறான். அடையாளம் தெரியவில்லை.
 
இன்னும் இரண்டு தலைகளைப் பார்த்த பிறகு திடீரெனப் பொறிதட்ட திரும்பி வந்து அதே முகத்தைப் பார்த்தேன்..
 
இனிமேல் வராது என்று நினைத்திருந்த அழுகை கண்களில் அருவியாய்க் கொட்ட ஆரம்பித்தது..
_________________________________________
 
பின் குறிப்பு: மேடம் தூஸேவின் மெழுகுப்பொம்மைகள் பிரபலம். லண்டனின் முக்கியமான சுற்றுலாத்தளம். "If it doesn't move, it is wax" என்ற பிரபல வரிகளுக்குச் சொந்தக்காரரின் வாழ்க்கையில் நடந்த சூறாவளியை பயோகிராபி சேனலில் மேம்போக்காக பார்க்க நேர்ந்தது. ஆடிப்போய்விட்டேன். நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கூகிளையும் விக்கிபீடியாவையும் துணைக்கழைத்து ஆராய்ச்சி செய்து எழுதிய என் முதல் சரித்திரக்கதை இது. ரத்தம் அதிகம்தான் என்றாலும், எல்லாச் சம்பவங்களும் உண்மையே. உரையாடல்கள் மட்டுமே என்னுடையது. கதையில் வரும் காதலுக்கு சரித்திர ஆதாரம் இல்லையென்றாலும், RPH  வழங்கிய தூஸே - இசைநாடகத்தின் கற்பனையை, நானும் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.
 
தேன்கூடு போட்டிக்கான என் இரண்டாவது படைப்பு.

29 பின்னூட்டங்கள்:

கதிர் said...

எங்கயோ போய்ட்டிங்க சுரேஷ். கதை அருமையா இருக்கு. இந்த முறையும் பரிசு நிச்சயம்.

Geetha Sambasivam said...

கட்டாயம் முதல் பரிசு சுரேஷ், முன் கூட்டிய வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

பெனாத்தல்,
என்னோட பின்னூட்டம் இப்போ உங்களுக்குப் புரியறதுக்குக் காரணம் எனக்குப் பிராப்ளம் இல்லை. நீங்க வளர்ந்துட்டீங்க. அதான். சொல்ல மறந்துட்டேன், அதான் திரும்பி வந்தேன், வரட்டா? Congratulations, வளர்ந்ததுக்கு.

ramachandranusha(உஷா) said...

அனைத்து சரித்திரங்களும் ரத்தத்தால் எழுதப்பட்டவை என்பது மீண்டும் நீரூபிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் படித்தவைகளை விவரித்து, இன்னும் ஒரு தனி பதிவு போடுங்கள்.

Anonymous said...

சிவப்பு எழுத்தில் காணப்பட்ட, எச்சரிக்கை வரிகளைப் படித்துவிட்டு சிரித்துக்கொண்டே ஆரம்பித்தால் உண்மையில் சீரியசான கதையை தந்தது பினாத்தல் சுரேஷ்தானா? எச்சரிக்கை தவறான வழிக்காட்டலை தருகிறது நண்பா :-)

Dr.Srishiv said...

உண்மையிலேயே என் இதயம் தொட்ட கதை இது சுரேஷ், இந்த கதையை நான் முதல் பரிசிற்கே சிபாரிசு செய்கின்றேன் என் பின்னூட்டம் மூலமாக...அவ்வளவு அற்புதமாக புனைந்திருக்கின்றீர்கள், வாழ்க வளமுடன், இன்னும் எழுதுங்கள், வணக்கம்.
ஸ்ரீஷிவ்..

மணியன் said...

மரணங்களால் மரத்துப் போன மனதிலும் காதல் மறப்பதில்லை :(

நீங்கள் தாண்டுகழி(bar?)யை உயர்த்தி விட்டீர்கள் :)

இலவசக்கொத்தனார் said...

யோவ். பாத்துக்கிட்டேதான் இருக்கேன். உம்ம லெவலே வேறையா போயிகிட்டு இருக்கு. எதுக்கும் அடுத்த கதைக்கு பப்ளிஷர் செலவுல பாரிஸ் எல்லாம் போயிடுங்க என்ன?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தம்பி. உங்க வாய் முகூர்த்தம் பலிச்சா சரி.

நன்றி கீதா அக்கா. என் வளர்ச்சியை அங்கீகரித்ததற்கும் சேர்த்து:-))

நன்றி உஷா, நிச்சயம் எழுதுகிறேன்.

அனானி, இதுதான் புலி வருது கதையோ:-)) சீரியசாவே யோசிச்சுகிட்டிருக்கேன், சீரியஸ் பதிவுகளுக்கு தனி வீடு போகலாமான்னு!

நன்றி ஸ்ரீஷிவ். பின்னூட்டம் மட்டும் போதாது. ஓட்டும் போடணும்:-))

மணியன், நன்றி. தாண்டுகழி கொஞ்சம் வழக்கமான பதிவு போட்டா அதுவாவே கீழே இறங்கிடாது?;-)

இலவசம் அண்ணா! என்ன சொல்றீங்க? எங்கே போயிட்டேன்.. எங்கேயும் போகல சாமி.. என்னை ஒதுக்கிடாதீங்க!

லக்கிலுக் said...

அட்டகாசம் தலைவரே.... தூள் கிளப்பிட்டீங்க....

பினாத்தல் சுரேஷ் said...
This comment has been removed by a blog administrator.
பினாத்தல் சுரேஷ் said...

நன்றி லக்கிலுக்.

ஓட்டுப்போடும்போது மறந்திடாதீங்க!

பொன்ஸ்~~Poorna said...

பிரஞ்சுப் புரட்சி பற்றி நெப்போலியனின் முதல் மனைவியின் சரித்திரம்னு ஒரு புத்தகம் படிச்சிருக்கேன்.. அதைப் படிச்சிட்டு பயங்கரமா ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருந்தேன்...

இந்தக் கதை நல்லா வந்திருக்கு.. கொஞ்சம் இடம்/காலம் தெளிவாக இல்லைன்னு தோணுது.. பின்புலம், வரலாறு தெரிஞ்சா மட்டுமே புரியும்.. அங்கங்க ஒரு மாதிரி வசனங்களில் வர்ணனையை மீறி நாடகத்தனம் இருக்கோ - அதாவது, நடப்பதைப் பார்த்தால் மட்டுமே கான்டெக்ஸ்ட் புரியும் என்பது போல?..

மணியன் சொல்லும் தாண்டுகழி உங்களுக்கு இல்லை சுரேஷ், எங்களுக்கு.. இனிமே போட்டிக்குப் புதுக் கதை எழுதணும்னா இதைத் தாண்டி யோசிக்க வேணுமே?!! :)

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க பொன்ஸ்.

//பிரஞ்சுப் புரட்சி பற்றி நெப்போலியனின் முதல் மனைவியின் சரித்திரம்னு ஒரு புத்தகம் படிச்சிருக்கேன்.. //

நான் படிச்ச வரை மேற்படி நெப்ஸ் மனைவியும், தூஸேவும் ஒன்றாக ஜெயிலில் இருந்திருக்கிறார்கள். அதுவும் அந்தப்புஸ்தகத்துல வருதா?

//வசனங்களில் வர்ணனையை மீறி நாடகத்தனம் இருக்கோ - அதாவது, நடப்பதைப் பார்த்தால் மட்டுமே கான்டெக்ஸ்ட் புரியும் என்பது போல?..//

அப்படி எந்தத் திட்டமும் இல்லை:-)) ஆனால், தவறியும் ஒரு ஆங்கில வார்த்தையும் பயன்படுத்திவிடக்கூடாது என்ற கவனம் இருந்தது. அது சில இடங்களில் வார்த்தைகளின் நீளத்தைக் கூட்டியது. அதைக்குறிப்பிடுகிறீர்களா?

//தாண்டுகழி உங்களுக்கு இல்லை சுரேஷ், எங்களுக்கு//

தோடா! இதானே வேணாங்கறது.. மாடஸ்டி ப்ளெயிஸ் உங்க அக்காவா:-))

Anonymous said...

அதெப்படி சுரேஷ் உங்களால் இப்படி ஒரு கதையும் முடிகிறது, டா கில்லி கோடும் முடிகிறது? ஒரு ஆள்தானே?

நாகராஜன்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நாகராஜன்.

லக்கிலுக் said...

////தோடா! இதானே வேணாங்கறது.. மாடஸ்டி ப்ளெயிஸ் உங்க அக்காவா:-)) ////

காமிக்ஸ் ரசிகரோ.... என் தலைவி மாடஸ்டி பிளைஸி பற்றியெல்லாம் தெரிந்திருக்கிறது...

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க லக்கிலுக்,

காமிக்ஸ் மேலே பெரிய ரசிப்பெல்லாம் இல்லாவிட்டாலும், சின்ன வயதில் துரத்தி துரத்தி படித்த ஞாபகங்கள்தான்!

MSV Muthu said...

நல்லா எழுதியிருக்கீங்க. தமிழகத்தின் "டான் பிரௌன்"? ஒரு கதைக்கு நேசனல் ஜியோகராபி, கூகிள், விக்கிபீடியா. ம்ம்..வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

பெரிய வார்த்தைகள்! நன்றி MSV Muthu.

Prabu Raja said...

கதையை பார்த்து வைத்துக்கொண்டு ரொம்ப நாள் காத்திருந்தேன். நேரம் கிடைக்கத்தான்.

இப்போதுதான் படிக்க முடிந்தது.

எனக்கு ஓட்டு போடும் உரிமை இருந்தால் உங்களுக்கு போட்டிருப்பேன்.

கதை சூப்பர்.

பினாத்தல் சுரேஷ் said...

பிரபு ராஜா,

நன்றி.

தேன்கூடுலே வோட்டுப்போடறதிலே என்ன சார் கஷ்டம், ஒரு ரெஜிஸ்ட்ரேஷன் தானே.. இன்னும் 3 - 4 மணி நேரம் இருக்கு:-))

நிர்மல் said...

very nice story...
Nice narration.
Good luck Suresh

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி என்னமெனது.. (எண்ணமெனதோ?)

Prabu Raja said...

avloothaana?
nan kooda blog vechirukkanumnu nenachen.
register panniyachu,
Vottu pottachu.
:)

பினாத்தல் சுரேஷ் said...

ஆஹா பிரபு ராஜா! நன்றி நன்றி நன்றி!! x 1000 முறை!

யோசிப்பவர் said...

அருமையான கதை. எல்லா கதாப்பாத்திரங்களுமே உண்மைதானா?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி யோசிப்பவர். ஆமாம் - இருப்பதே 4 கதாபாத்திரம்தானே :-) எல்லாம் உண்மைப்பாத்திரங்களே.

பேயோன் said...

நன்றாக இருக்கிறது. வரலாறு தெரியாதவர்களுக்கும் புரியும்படியாக அடிக்குறிப்புகள் சேர்த்திருக்கலாம். நேரம் கிடைக்கும்போது தெரிந்த கதைகளுக்கு திரைக்கதை எழுதிப் பழகலாம் நீங்கள். அதை சிரமமே இல்லாமல் செய்ய மென்பொருட்கள் இருக்கின்றன.

 

blogger templates | Make Money Online