Jan 11, 2014

கரும்புனல் - முன்னுரை - வெங்கடேஷ்

புத்தகக் கண்காட்சியில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் “கரும்புனல்” நாவலுக்கு கல்கி ஆசிரியர் நேசமுடன் வெங்கடேஷ் எழுதித்தந்த முன்னுரை.


தொடரும் வலி!

தமிழில் சூழலியல் பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த நாவல்கள் வெகுகுறைவு. தனிமனிதர்களின் மனப் பிரச்னைகளே பெரும்பாலும் கற்பனாவாத இலக்கியமாகப் பேசப்படும் நிலையில், பல்வேறு களங்களில் நாவல்கள் படைக்கப்படுவது அவசியம். குறிப்பாக சமகாலப் பிரச்னைகள். இன்றைய தமிழகமும் இந்தியாவும் எண்ணற்ற புதிய சிக்கல்களால் நிரம்பியிருக்கிறது. நவீன மனிதன் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்தும் புதுவிதமான குழப்பங்களையும் சிதைவுகளையும் தொடர்ந்து இந்தச் சமூகத்தில் ஏற்படுத்திவருகின்றன. தமிழகத்துக்குள்ளேயே பல முக்கிய பிரச்னைகள் புனைகதையில் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் வெளிமாநிலங்களின் பிரச்னைகள் வெகு அரிதாகவே தமிழ் படைப்புக்களில் தொடப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களில் வாழும் எழுத்தாளர்கள் எழுதினாலும் தமிழகத்தைப் பற்றியும் தம் இளமைக்கால பொற்கணங்களையும் நினைவுகளையுமே அதிகம் எழுதியிருக்கின்றனர். தாம் வாழநேர்ந்த பகுதியின் வரலாற்றையும் அரசியலையும் உள்வாங்கிக்கொண்டு தரமான படைப்புகள் தந்தவர்கள் வெகுசிலரே. இந்திரா பார்த்தசாரதியின் தில்லி; அசோகமித்திரன், சுப்ரபாரதிமணியன் ஆகியோரின் ஹைதராபாத் ஆகியவை இந்த வகையில் முன்னோடிகள். 

அதேபோல், நமக்குச் சூழலியலும் நகரமயமாதலும் அதன் அரசியல், சமூக கலாசார சரிவுகளும் அதிகம் அறிமுகமில்லை. நவீன நுகர்வுகலாசாரத்தின் குழந்தைகள் நாம். நம்மைச் சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் கேள்விகள் கேட்கும் துணிவு தொலைத்தவர்கள் நாம். சூழலியல் பிரச்னைகள் பேசப்பட்ட அளவில், சா.கந்தசாமியின் ‘சாயாவனம்,’ விட்டல்ராவின் ‘போக்கிடம்’ ஆகியவை முன்னோடிகள். ஆனால், தமிழ் எழுத்துப்பரப்பில் வடகிழக்கு இந்தியப் பகுதிகள் அதிகம் வந்ததே இல்லை. பி.ஏ.கிருஷ்ணனின் ‘கலங்கிய நதி’தான் இதில் ஆரம்பம்.

ராம்சுரேஷின் கரும்புனல், அதன் வளமான தொடர்ச்சி. இதில் பழைய பீகார் (ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்புள்ள பீகார்)தான் களம். அங்கே நிலக்கரி தோண்டுவதற்குத் தேவைப்படும் நிலத்தைக் கையகப்படுத்த வரும் சந்திரசேகரன் என்ற வழக்குரைஞரின் பார்வையில், அங்குள்ள அரசியல் ரீதியான, சாதி ரீதியான ஒடுக்குமுறைகளும் ஏமாற்றல்களும் சுரண்டல்களும் வெகு அழகாக முன்வைக்கப்படுகின்றன. மோசமான ஊழல் விளையாட்டில், எப்படி ஒவ்வொருவரும் பகடைக்காய்களாக மாற்றப்படுகிறார்கள் என்ற வலிநிரம்பிய உண்மை வெளிவருகிறது. 

இன்றைக்கு நாடெங்கும் பேசப்படும் நிலக்கரிச் சுரங்க ஊழல் என்பதன் ஆரம்ப காலகட்டத்தை இந்நாவலில் தெரிந்துகொள்ளலாம். மனிதர்களின் பேராசையினால், நமது வளங்கள் கொள்ளை போகின்றன. ஒவ்வொரு அதிகாரியும் எப்படியெல்லாம் நிலங்களை தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ளலாம், ஏழை எளியோர்களான கிராம மக்களைச் சுரண்டலாம், நடுத்தெருவில் நிற்கவைக்கலாம் என்று திட்டம் போட்டே பணியாற்றுகின்றனர். விளைவு, வேறு வழியில்லாமல் அவர்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய துர்நிலை. 

இந்நாவலில் வரும் சின்னச் சின்னப் பாத்திரங்கள் மனத்தைத் தைக்கின்றன. பொக்காரோ ஸ்டீல் ப்ளான்ட்டுக்கு நிலத்தைக் கொடுத்துவிட்டு நடுக்காட்டில் டீக்கடை நடத்தும் கிழவர், எதிர்ப்பைத் தெரிவிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்று மோதும் லோபோ, கையாலாகாத டர்க்கி என்று புனையப்பட்டுள்ள பாத்திரங்கள், நாவலின் பாதிப்பைக் கூட்டுகின்றன. 

பீகாருக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி அரசியல், எவ்வளவு தூரம் வன்மமமாக மாறி, ஒரு கிராமத்தையே அழிக்கத் துணைசெய்கிறது என்பதைப் படிக்கும்போது, அச்சம் அடிவயிற்றில். இத்தகைய சூழ்நிலைகளில் எவ்வளவுதான் நல்லவனாக ஒருவன் இருந்தாலும் என்னவிதமான நல்ல பலன்களை மக்களிடம் ஏற்படுத்த முயன்றாலும், அவை அனைத்தும் கடலில் கரைத்த பெருங்காயம். துளி பலனும் கிட்டுவதில்லை. மேன்மேலும் வெறுப்பும் எரிச்சலும் வன்மமுமே பெருக்கெடுக்கின்றன. 

இக்கதை நடப்பது 1995 காலகட்டம். அன்றைய சூழ்நிலையும் இன்றைய சூழ்நிலையும் பெருமளவில் மாறிவிடவில்லை என்பதை பீகார் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து பின்பற்றுவோர் புரிந்துகொள்ளலாம். சாதி அரசியல் இன்று அடைந்திருக்கும் அவலம், சொல்லில் எழுத வழங்காது. இவையெல்லாம் மக்களின் பெயரால், மக்களுக்குச் செய்யப்படும் அநீதி என்று நினைக்கும்போதே, கோபம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. கடைசியில் நேர்மையாளர்கள் என்று யாருமே இருக்கமுடியாது, நடுநிலைமை என்ற ஒரு நிலைப்பாடு இருக்கவே முடியாது என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது. 

இந்நாவல், பல விஷயங்களை விவாதிப்பதற்கான களத்தை அமைத்துத் தந்திருக்கிறது. இதில் எழுதப்பட்டதைவிட, வெளியே இருக்கும் செய்திகளும் வலிகளும் அதிகம். அதைப் பற்றி யோசிக்கவும் பேசவும் இன்றைக்கு அவசர அவசியம் ஏற்பட்டுள்ளது.  நீரோட்டம் போன்ற நடை, பெரும்பாலான விஷயங்களை உரையாடல்களின் மூலமே இந்நாவல் எடுத்துச் சொல்கிறது. அடுத்து, அடுத்து என்று வேகமும் விறுவிறுப்பும் இந்நாவலின் அணிகலன்கள். 

பழைய பீகாரைத் தமிழில் தெரிந்துகொள்ள வாய்ப்பளித்த ராம்சுரேஷுக்கு வாழ்த்துக்கள்.

நேசமுடன்
ஆர்.வெங்கடேஷ்
rvrv30@gmail.com
30.12.2013

வெங்கடேஷுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி!

0 பின்னூட்டங்கள்:

 

blogger templates | Make Money Online