Jan 7, 2008

இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளே!

எச்சரிக்கை: இந்தப்பதிவைப் படிப்பது பெண்களின் மனநலத்துக்குக் கேடு

பொம்பளைங்களுக்கு என்ன தெரியும்? சும்மா படிச்சுட்டாப்பல ஆச்சா? எப்பப்ப ஆம்பளைங்களோட உணர்ச்சி தூண்டப்படும்னு தெரியுமா? கலாச்சாரத்தை அவங்களால தனியா காப்பாத்த முடியுமா? முதல்ல கலாச்சாரம்னா என்னன்னு அவங்களுக்குத் தெரியுமா?

பேதைப் பெண்கள்னு சும்மாவா சொன்னாங்க?

நியூ இயர் கொண்டாட்டம்னா என்னாங்க? நாம ஒரு பொது இடத்துல கூடுவோம், நம்ம பைக்க எடுத்துகிட்டு வருவோம். 9 மணியில இருந்து நல்லா கும்முன்னு சரக்கை ஏத்திக்கணும், 12 மணி ஆனதும் இல்லாத கலாட்டா எல்லாம் பண்ணிட்டு அப்பால காலியா இருக்க ரோட்டுல வரலாறு காணாத ஸ்பீட்ல பறக்கணும், எப்ப வீட்டுக்கு வந்து விழுந்தோம்னே தெரியாம வந்து விழணும். அட.. ரோட்லேயே எவன் மேலேயாவது இடிச்சாலும் சரி.. எலும்பு முறிஞ்சாலும் சரி எவனாச்சும் செத்தாலுமே சரி.. இது நம்ம கலாச்சாரம் ஆச்சே, விட்டுக் கொடுக்க முடியுமா?

சரி, நாம ஆம்பளைங்க நம்ம கலாச்சாரப்படி நடக்கும்போது இந்தப் பொம்பளைங்களுக்கு என்ன வந்துச்சு கேடு? அவங்க புத்தி ஏன் இப்படிப் போகணும்? எல்லாரையும் சொல்ல வரலை.. ஒண்ணு ரெண்டு பொம்பளைங்க இதே கலாச்சாரத்துல புகுந்து விளையாடறதுக்கு ஆசைப்பட்டா, என்ன வேணா நடக்கும்னு தெரிஞ்சும் வராங்கன்னா, அதுக்குத் தயாராத்தானே வரணும்? அதுதானே மேல்நாட்டுக் கலாச்சாரம்?

மேல்நாட்டுல என்ன நடக்குது? ஆம்பளை பொம்பளை வித்தியாசமில்லாம எல்லாரும் தண்ணி அடிப்பாங்க, எல்லாரும் ஒண்ணா கூத்தடிப்பாங்க.. இங்க அப்படியா? நம்ம ஊர்லே அன்னிக்கு வெளிய வர பொம்பளைங்களோட ரேஷியோ கம்மி ஆச்சே.. அது தெரிய வாணாம்? எல்லாரும் நம்மையேதான் பாத்துக்கிட்டு இருப்பாங்கன்ற ஒணக்கை வாணாம்? அதுக்கேத்த மாதிரி ட்ரஸ் பண்ணிக்கிட்டு வரவாணாம்?

முழுசா பர்தா போட்டுக்கிட்டு வெளிய வந்தாலே கைவிரல் தெரியுதே, அது எவ்வளோ செக்ஸியா இருக்குன்னு கற்பனைய வளக்கிற ஆளுங்க நாம. நாம போதையில இருக்க நேரத்துல வெளிய நடமாடறது எவ்வளோ பெரிய குத்தம்?

பொம்பளைங்க நம்ம கலாச்சாரப்படி புடவை கட்டி, முழுசா போத்திகிட்டு வந்தா எதோ நூத்துல ஒன்னு ரெண்டு கற்பழிப்புதான் நடக்கும். மேல்நாட்டுக் கலாச்சாரம்னு கண்டபடி ட்ரெஸ் பண்ணிகிட்டு வந்து, நம்மளுக்கு ஆசையக் கிளப்பிவிட்டா.. தப்பு யார் பேருல சொல்லுங்க? சரிகா ஷா மாதிரி பொண்ணுங்க சுரிதார்தான் போட்டாங்க.. ஆனா துப்பட்டா காத்துல ஆடிச்சே.. அதைப்பாத்துதானே நம்மாளுக்கு ஆசை வந்தது? காத்தைக் குத்தம் சொல்லாம நம்மாளை அரெஸ்ட் பண்ணி உள்ளே போட்டிருக்காங்க.. எவ்வளோ ஓரவஞ்சனை இந்தப் போலீஸுக்கு?

சரி சொல்ல வந்ததை விட்டுட்டு கச்சாமுச்சான்னு மேலே பேசிகிட்டே போறேன்..

நம்ம ஊர்லே இன்னும் கலாச்சாரம், பண்பாடு, கற்பு எல்லாம் ப்ரெஷ்னெஸ் குறையாம இருக்கறதுக்காக ஸ்ட்ராங்கா ப்ரிட்ஜுல வச்சு பூட்டி வச்சிருக்கோம். அதை மீறி ஒண்ணு ரெண்டு பேர் மேல்நாட்டுக் கலாச்சாரம் அது இதுன்னு ஆடிட்டு அப்புறம் நம்மளைக் குற்றம் சொல்லி ஒரு யூஸும் இல்லை.

மேல்நாட்டுக் கலாச்சாரம் இப்போதைக்கு Maleநாட்டுக் கலாச்சாரம்தான். இன்னும் பொம்பளைங்களுக்கு அதுக்கெல்லாம் தகுதி வரலை. நாம எல்லாம் பாத்துட்டு எப்ப பொம்பளைங்க மாடர்னா ட்ரெஸ் எல்லாம் போடலாம், ராத்திரி எத்தனை மணிக்கு வெளிய வரலாம், வரும்போது என்ன பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் தேவைன்னு பாத்துட்டு ஒரு அறிக்கை விடுவோம், அப்பால அவங்க அதுபடி செஞ்சுக்கலாம். அவங்களா எதாச்சும் முடிவெடுத்தா அப்புறம் விளைவுகளுக்கு நாம பொறுப்பில்லை.

அப்படி ஒரு விரிவான அறிக்கை வரவரைக்கும், எங்க தலைவர் பாட்டு கேட்டாவது திருந்துங்க பொம்பளைங்களே!

இப்படித்தான் இருக்கவேணும் பொம்ப்ளை
இங்கிலீஷு படிச்சாலும் இன்பத் தமிழ்நாட்டிலே
இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளே!

58 பின்னூட்டங்கள்:

seethag said...

அது என்னவோ பெனாத்தல் சார், இந்த 'மேல்' நாட்டுகலாச்சாரத்துக்கு மட்டும் பேதைப் பெண்களாக இல்லன்னா போதைப் பெண்களாகவே தெரியிரோமே ஏன்?

பாச மலர் / Paasa Malar said...

பெண்கள் தவறோ ஆண்கள் தவறோ...யார் மனநலத்துக்குக் கேடோ..நம் கலாசாரத்துக்கு மட்டும் கேடுதான்

Anonymous said...

Male chauvenism னு சொல்லுவாங்களே அது நீங்க இப்போ பண்றது தான். பசங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம். பொண்ணுங்க நா பொத்திக்கிட்டு அடக்க ஒடுக்கமா இருக்கனும் அது தான் நம்ம கலாச்சாரம் னு சொல்றது தப்பு.

மணியன் said...

கலாசாரம்: இடம்,பொருள்,ஏவல் கொண்டு பொருள் கொள்க :)

இப்படித்தான் இருக்கவேணும்னு வாத்தியார் மட்டுமா சொல்கிறார், சிவாஜி (நடிகர் திலகமல்ல, படம்) வரை தமிழ்த்திரையுலகின் தாரகமந்திரமல்லவா அது !

Unknown said...

//காத்தைக் குத்தம் சொல்லாம நம்மாளை அரெஸ்ட் பண்ணி உள்ளே போட்டிருக்காங்க.. எவ்வளோ ஓரவஞ்சனை இந்தப் போலீஸுக்கு?//

"நம்ம பையன் வண்டியால மோதிட்டானாம். அடிபட்ட ஆளுக்கு குடல் வெளியே வந்திருச்சாம். நம்ம பையனை பிடிச்சு உள்ளே போட்டாங்களாம். நியாயமாப் பாத்தா... வெளியே வந்த குடலத்தான் உள்ளே போட்டிருக்கணும்" என்று சோ தங்கப்பதக்கம் படத்தில் வசனம் பேசுவார். அது மாதிரி நல்ல கிண்டல் இருக்கிறது.)))))))))

புரட்சி தமிழன் said...

பத்து ஆண்கள் குடித்துக்கொண்டு இருக்கும் இடத்தில் ஒரு பெண் தனியாக போகக்கூடாது. கூட்டமாகச்செல்லுங்கள் ஏன் இந்த பிரச்சினை வரப்போகிறது.

திவாண்ணா said...

சரிதான். மேல் நாட்டு கலாசாரத்தை ஏத்துக்கிட்டா அதன் பிரச்சனைகளும் கூடவேதான் வரும். ஒன்னு பரவாயில்லைன்னு ரெண்டையுமே ஏத்துக்கொள்ளுங்க. அல்லது நம்ம நாட்டு கலாசாரத்திலேயே இருப்போம்.

லக்ஷ்மி said...

கலக்கீட்டீங்க... :))))))

பாபு said...

இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கத. சில பிசினசு பொழப்புகளுக்கும்.

ரெண்டு பேருமே திருந்தணும்.

'நீ இப்படி இருக்கலாமா?'

'நீ மட்டும் இப்படி இருக்கலாமா?'

என்ற வி(தண்டா)வாதங்கள் முடிவு நோக்கி நகராமல், இப்படித்தான் கிண்டலாகவும், நக்கலாகவும், சொற்பநேர சொறிதலாகவும் பதிவாகிப் பயனிழக்கும்.

Voice on Wings said...

கலாச்சாரம் / பண்பாடு என்பது பெண்களுக்கு மட்டுமே என்றும் யாரும் கூறவில்லையே? ஆண் / பெண் இருபாலாருமே நம் தொன்மை வாய்ந்த பண்பாட்டுக்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும், உடை உடுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் வலியுறுத்தப்படுகிறது. பாதுகாப்பான நேரத்தில், பாதுகாப்பான பானங்களை மட்டும் அருந்திக் கொண்டு, பாதுகாப்பான இடங்களுக்கு மட்டும் இருபாலாரும் சென்று வந்து கொண்டிருப்போமானால் கலாச்சாரமும் பிழைக்கும், நாமும் பிழைத்துக் கொள்வோம் என்பதுதான் இத்தகைய சம்பவங்கள் தரும் படிப்பினை.

;)

Nimal said...

புரியுது... சூப்பர்.. :)

குசும்பன் said...

:))))))

Anonymous said...

சரியாத்தான் சொல்லியிருக்கிறீங்க. பொன்னா மதிக்கிற நாம பொண்ணுங்களையும் பாதுகாப்பாத்தா வைக்கனும்.
தான் பொன்னுங்கிறத புரிஞ்சுகாத பொண்ணுங்களுக்கு என்னத்த சொல்லுறது.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

===)))))

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க சீதா..

பேதை / போதைதான் தெரியும், பின்ன மேதையா தெரியும் :-)

ஜோக்ஸ் அபார்ட், கலர்க்கண்ணாடி மாட்டின கண்களைக் குத்தம் சொல்லிப் பிரயோஜனமே இல்லை!

பாசமலர், கலாச்சாரம்னா என்னாங்க?

ஜோ, நீங்க மேட்டரை சரியா புரிஞ்சுக்கலைன்னு நினைக்கிறேன். கொஞ்சம் மறுபடி படிச்சுப்பாருங்க :-)

பினாத்தல் சுரேஷ் said...

மணியன், சிவாஜியா? அழகிய தமிழ்மகன், வேல் எல்லாம் பாக்கலைன்னு தெரியுது :-)

நன்றி சுல்தான். கேப் கிடைச்சா எதை வேணும்னாலும் குத்தம் சொல்லி நியாயப்படுத்துவானுங்க!

கரெக்டு புரட்சித்தமிழன். பொம்பளைங்க நின்னா மாநாடு, நடந்தா பொதுக்கூட்டம்ன்ற ரேஞ்சிலதான் இருக்கணும் :-)

பினாத்தல் சுரேஷ் said...

திவா, யார் எந்தக் கலாச்சாரத்தை ஏத்துக்கணும்னு யார் முடிவு பண்றது? அதான் மேட்டர்.

லக்ஷ்மி.. பேச்சு கேக்காம வந்துட்டீங்களே :-)

எந்நாளும் உள்ள கதைன்னு நான் ஒதுக்கிட மாட்டேன் பாபு. புரிஞ்சுக்கறதுக்கு யாராவது ஒருத்தராவது முயற்சித்தா விவாதம் பயனில்லாம போகும்னு நான் நினைக்கலை.

பினாத்தல் சுரேஷ் said...

கலக்கல் பின்னூட்டம் வாய்ஸ் ஆன் விங்ஸ்.

அப்படியே அந்த பாதுகாப்பான நேரம், பானம், இடம் ஆகியவறைத் தெரிவிக்கும் காலண்டர் கைடு எங்கே கிடைக்கும் என்பதையும் சொல்லிவிட்டால் சூப்பர் ஆகிவிடும் :-)

நன்றி நிமல்.

நன்றி குசும்பன்.

பினாத்தல் சுரேஷ் said...

கரெக்டா சொன்னீங்க அனானி.. பொன்னு மாதிரி பாதுகாக்கணும். வெளிய வச்சா திருடிகிட்டு போயிடுவானுங்க.. ஆக மொத்தம் ஜடப்பொருளா ட்ரீட் செய்யணும்.. சூப்பர் கருத்து.

நன்றி சாமான்யன் சிவா.

Unknown said...

கலக்கல் பதிவு பினாத்தலாரே:-)

ஏதோ பெரிய மனசு பண்ணி ஆம்பளைங்கல்லாம் பொம்பளைங்களுக்கு படிக்கவும்,புடவை கட்டிகிட்டு ரோட்டில் போகவும் அனுமதி கொடுத்திருக்கோம்.அதை மிஸ்யூஸ் பண்ணா சும்மா விட்டுவுவோமா என்ன? அஜித்,விஜய்,எம்ஜிஆர்ன்னு பல படங்களில் பெண்களுக்கு டிரஸ் கோட் பத்தி அறிவுரை சொல்லியிருக்கோம்.அதை கூட கேக்கலைன்னா எப்படி?:-)))

கோவைப்பழம் said...

கரெக்ட். வீட்டுல கடைசி பையனுக்கு செல்லம், சில்லறை விஷயத்துல முன்னுரிமை போன்ற அட்வாண்டேஜ் எல்லாம் இருந்தாலும், பொதுவா பெரியவன் தான் ரூல் (அல்லது டாமினேட்) பண்ணுவான். வேற வழியே இல்லை (ஹூம் என் கஷ்டம் எனக்கு!). இல்லேன்னா இயற்கையாவே கடைக்குட்டிக்கு ஆளுமைத்தன்மை & தைரியம் இருந்தால் (அண்ணனும் சப்மிஸிவா இருந்தால்) தான் உண்டு. பெண்ணா பிறந்தா சில அட்வாண்டேஜ் இருக்கற மாதிரி டிஸ்அட்வாண்டேஜ் -உம் இருக்க தான் செய்யும். அது இயற்கை.

Sridhar V said...

சரிகா ஷா மட்டுமல்ல.... பெங்களூர் பிரதீபா போல் பல சம்பாவங்கள் நினைவுக்கு வந்து போகின்றன. எனக்குத் தெரிந்த எனது நண்பர்கள் (பெண்கள்) இருவருக்கு பேருந்தில் பயனிக்கும் பொழுது நடந்த அவமதிப்பு இருக்கிறதே... வார்த்தைகளால் எழுத முடியாது.

இந்த மாதிரி சம்பவங்கள் பாதிக்கப்பட்டவர்களை மனதளவில் எவ்வளவு பாதிக்கும் (அது எந்த நாடாயிருந்தாலும்) என்பது தெரிந்தால்... கொடுமை!!! அந்த ஆண்களுக்கு இது ஒரு சாகஸமாகத்தான் நினைவிலிருக்கும்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் ஒரு படத்தில், ஆடையை தூக்கிப் பார்க்கும் ஒரு படம். சரி... அந்த பெண் அணிந்திருந்தது ஸ்கர்ட் (நீளமானதுதான்) என்றாலும், அதை தூக்கிப் பார்க்க வேண்டும் என்று எந்த கலாச்சாரத்தில் ஐயா சொல்லியிருக்கிறது?

பாதுகாப்பை பற்றி சிலர் கூறியிருந்தனர். 70-80 மனிதர்கள் கூடியிருக்கும் ஒரு இடம் பாதுகாப்பற்றது என்றால், அந்த மனிதர்களை பற்றி வேறு என்ன சொல்வது? இத்தனைக்கும் அவர்கள் ஆண் துணையுடந்தான் (கணவர் / நண்பர்) இருந்தனராம்.

சரி விடுங்கள்! பேசி என்னவாகப் போகிறது... இன்னொரு மிருகச்செயல் நடக்கும் பொழுது, 'இப்படித்தான்...2007ல்' என்று பேசுவதை தவிர வேறு ஒன்றும் செய்வதற்க்கு வழியில்லை. :-((

seethag said...

i still cannt understand penathals, how on earth it has been decided that the girls had had alcohol?did any one do breath analysis?iti si a differnet issue what is our business to tell people what they can drink or not...

and what are these people talking about celebrating newyear as western culture ?so many families go to church on that night .does anything happen?so just because they cameout of mariott hotel they are bad?

only consolation is one of the girls was wearing trousers . just imagine their plight if they had been in sarees?naveena thuchchaadhanargal............

மங்களூர் சிவா said...

என்ன பெனாத்ஸ் ஒரு ட்ராஜடி மேட்டரை காமெடியாக்கீட்டீங்க!!

செல்வன் பதிவுல இருக்கமாதிரி படிச்சா பி.பி எகிற வேணாமா????

மங்களூர் சிவா said...

//
Joe said...
Male chauvenism னு சொல்லுவாங்களே அது நீங்க இப்போ பண்றது தான். பசங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம். பொண்ணுங்க நா பொத்திக்கிட்டு அடக்க ஒடுக்கமா இருக்கனும் அது தான் நம்ம கலாச்சாரம் னு சொல்றது தப்பு.
//
ஜோ நம்ம கலாச்சாரத்த கொஞ்சம் வெளக்குங்களேன் விம் பார் போட்டு!!

பினாத்தல் சுரேஷ் said...

செல்வன் வாங்க!

ட்ரெஸ் கோட் சொல்றதுன்றது நம்ம நடிகர்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரி ஆச்சே. அதுக்கும் ஒரு ஸ்டெப் மேலே போயி.. "சாஆஆர்.. இந்தப்பொம்பளைங்களை நம்பவே கூடாது சார்"னு ஸ்டீரியோடைப் பண்ணா வர கைதட்டல், பேரரசு, சிம்பு மாதிரி ஆளுங்க படத்துக்கு படம் சொல்ற கருத்தூஸ் பெறும் மாபெரும் வெற்றி.. இதையெல்லாம் பாத்தாச்சும் திருந்தவேணாம்? சில்லி கேர்ள்ஸ்!

திவாண்ணா said...

@சுரேஷ் //திவா, யார் எந்தக் கலாச்சாரத்தை ஏத்துக்கணும்னு யார் முடிவு பண்றது? அதான் மேட்டர்.//
அவங்க அவங்கதான் முடிவு பண்ணனும்.
பாய் பிரெண்டோட நைட்கிளப் போறியா, மத்தவங்க "அவனோட மட்டும் போவியா என் கூட வர மாட்டியா" அப்படி கேப்பாங்கங்னு எதிர்பாக்கனும். இது ஏதோ கேசு கையை பிடிச்சு இழுத்தா என்னன்னு நினைப்பாங்கன்னு எதிர்பாக்கனும். ஒரே ஒரு பாய் பிரென்டு பாதுகாப்பு இல்லைன்னு தெரியனும். மேல் நாடு மாதிரி நம்ம மாறலாம்னு நினைச்சாலும் மத்தவங்க மாறலை. அவங்க அவங்க போக்குலதான் யோசனை பண்ணுவாங்க.
இந்திய கலாசாரத்தில இருக்கற குடும்பப்பெண்களே கஷ்டப்படற காலம் இது.

பினாத்தல் சுரேஷ் said...

//70-80 மனிதர்கள் கூடியிருக்கும் ஒரு இடம் பாதுகாப்பற்றது என்றால், அந்த மனிதர்களை பற்றி வேறு என்ன சொல்வது//

ஸ்ரீதர் நாராயணன், மொத்த மேட்டரையுமே ஒரு போல்ட் இல் கொண்டுவந்துவிட்டீர்கள்!

இந்த இடிமன்னர்கள் தொந்தரவுக்கு 50 வயதுப்பெண்மணிகள் கூடத் தப்பிப்பதில்லை.. எனக்குத் தெரிந்த 55 வயது மாது என்ன ப்ரவோக் செய்தார், என்ன ஆடை அணிந்தார் -- இந்த நாய்களிடம் கிள்ளும் இடியும் வாங்கி நாள்பூரா அழ?

இதில் கொடுமை என்னவென்றால்.. பல்லைக்கடித்துக்கொண்டு இடிகளைப் பொறுத்துக்கொள்பவர்கள் "கம்பெனி" கொடுப்பதாக அறியப்படுவார்கள். அவன் கிரீடத்தில் இன்னொரு வெண்சிறகு சேரும்!

சீதா,

அந்தப் பெண்கள் குடித்திருந்தால் கூடவே, அது இப்படி ஒரு தண்டனையைப் பெறும் அளவு குற்றமா?

மேரியட் ஹோட்டல் என்றில்லை சீதா.. மேல்மருவத்தூர் கோயில் வாசலிலும் நடக்கும்..

பேசுவதைத் தவிர என்ன செய்யமுடியும் நம்மால்?

பினாத்தல் சுரேஷ் said...

மங்களூர் சிவா,

காமெடியா ஆக்கிட்டேனா? எரிச்சலின் உச்சத்தில் வரும் சிரிப்பு சாமி இது!

ஜோ கிட்ட நீங்க கேட்ட கேள்வி ரொம்ப நாளா இருக்கு என் மனசுல!

இலவசக்கொத்தனார் said...

இந்த விஷயத்தில் நம்ம இளைய தளபதி என்ன சொல்லி இருக்காரு தெரியுமா? இக்கட சூடு!!

இன்னும் சில புரட்சி Xகள் விடுத்து இருக்கும் அறிக்கைகளும் தேடினா கிடைக்கும். இதுதான்யா நம்ம ஊர் கலாச்சாரம். இதை விட்டுப் போட்டு என்னமோ பெரூஊஊஊசா பேச வந்துட்டாங்க....

cheena (சீனா) said...

துஷ்டனைக் கண்டா தூர விலகுன்னு பழமொழி. தனி மனிதனாக இருக்கும் வரை எல்லோரும் நல்லவர்கள் தான். கூட்டமாக இருக்கும் போது ஏற்படும் தவறுகளுக்கு அவர்கள் மட்டும் பொறுப்பல்ல - பெண்கள் மென்மையானவர்கள் - எளிதில் எல்லோரையும் இயற்கையாகவே ஈர்க்கக் கூடியவர்கள். ஆண்கள் அதிகம் உள்ள - பெண்கள் குறைவாக உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டி வந்தால் கொஞ்சம் அடக்கி வாசித்தல் நலம். அல்லது தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். இதை விட்டு விட்டு கலாச்சாரம் - பெண்ணுரிமை - எங்க இஷ்டத்துக்கு உடை அணிவோம் என்பதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய் - கறிக்குதவாது.

விஜயின் கருத்துக்கு உடன் படுகிறேன்.

seethag said...

kothsu,
as it is my bp has been very high in tha last few days..that video clipping worsened it further

dont have the habit of watching vijay and his movieworld ancestors..now i understand why we have so many cultural police

பாச மலர் / Paasa Malar said...

//கலாச்சாரம்னா என்னாங்க?//

சபாஷ்..சரியான கேள்வி..சரியான விளக்கம் தரத் தடுமாறத்தான் வேண்டியிருக்கிறது இந்தக் காலகட்டத்தில்...

பினாத்தல் சுரேஷ் said...

கோவைப்பழம்,

//பெண்ணா பிறந்தா சில அட்வாண்டேஜ் இருக்கற மாதிரி டிஸ்அட்வாண்டேஜ் -உம் இருக்க தான் செய்யும். அது இயற்கை//

அது சரிதான். ஆனா அந்த டிஸ் அட்வாண்டேஜ்களை எக்ஸ்ப்ளாயிட் பண்றது தன்னோட உரிமைன்னு நினைக்கறாங்களே!

திவா,

//ஒரே ஒரு பாய் பிரென்டு பாதுகாப்பு இல்லைன்னு தெரியனும். // எவ்வளவு பாதுகாப்புதாங்க போடறது?

வாங்க கொத்தனார், ஏன் லேட்டு?

நீங்க கொடுத்த லின்க்குல யாரோட நுண்ணரசியல் தெரியுது? உங்களோடதா, விஜயோடதா அல்லது ரெண்டும் ஒண்ணேதானா?
பாருங்க சீதா டென்சன் ஆயிட்டாங்க!

சீதா.. படம் வந்தப்பவே நிறைய பேர் கொதிச்சாங்க.. என்ன பயன்?

பாசமலர்.. இது கஷ்டமான கேள்வியே இல்லைங்க..

எனக்கு எது வசதியோ, நான் எப்படி எல்லாரையும் பாக்க விரும்பறேனோ அதான் கலாச்சாரம் :-))

Sridhar V said...

பினாத்தலாரே! பதிவுக்கு சம்பந்தமில்லாமல் இருந்தால் இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம்.

//அல்லது ரெண்டும் ஒண்ணேதானா?//

உங்களுக்கும் தெரிஞ்சிப் போச்சா? :-))

நுண்ணரசியல் தகிடுதத்தங்கள் அம்பலபடுத்தப்பட்டு, முகமூடி கிழிந்து தொங்கி, கோர பாசிச முகம் வெளிப்பட்டு விட்டதே.

பினாத்தல் சுரேஷ் said...

ஸ்ரீதர் நாராயணன்.. எல்லா கீவர்டையும் போட்டு ஒரே பின்னூட்டமா.. அசத்துறீங்க :-)

இலவசக்கொத்தனார் said...

யோவ் ஸ்ரீதர். நான் மருத்துவருக்குப் போட்ட பின்னூட்டத்தைக் காப்பி பேஸ்ட் பண்ணினதுக்கு உங்க மேல கோப்பிரைற் வழக்கு போடப் போறேன்.

பாச மலர் / Paasa Malar said...

//பாசமலர்.. இது கஷ்டமான கேள்வியே இல்லைங்க..

எனக்கு எது வசதியோ, நான் எப்படி எல்லாரையும் பாக்க விரும்பறேனோ அதான் கலாச்சாரம்//

கிட்டத்தட்ட இதே விளக்கம்தான் தோன்றியது எனக்கும்...உங்களுக்குப் பின்னூட்டமிட்டது ..என் புதிய பதிவுக்கு அடிக்கோலிட்டது..

http://pettagam.blogspot.com/2008/01/blog-post_08.html

Anonymous said...

//////பாச மலர் said...
//கலாச்சாரம்னா என்னாங்க?//

சபாஷ்..சரியான கேள்வி..சரியான விளக்கம் தரத் தடுமாறத்தான் வேண்டியிருக்கிறது இந்தக் காலகட்டத்தில்...
/////////

ஆண் நண்பர்களுடன் - கவனிக்க,அவர்கள் காதலர்களாகவோ,கணவன்களானவோ இருக்கக் கூடாது- சேர்ந்து நடு இரவில் நட்சத்திர ஓட்டல்களின் பார்களில் தேடினால் ஒருவேளை கலாச்சாரம் கிடைக்கலாம்...
அவர்களும் அதைத்தான் தேடினார்களோ என்னவோ?????
என்ன,கூடி இருந்தவர்கள் வேறொரு கலாச்சாரத்தைக் காண்பித்து விட்டார்கள்..
நடந்தது குற்றச் செயல் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லையெனினும்,பெண்களை அவரவர்கள் கணவனோ அல்லது உண்மையில் காதலிப்பவர்களோ நட்சத்திர விடுதிகளின் பார்களுக்கு அழைத்துச் செல்வார்களா என்ற கேள்விக்கு நேர்மையான பதில் அளிப்பார்களா?
பெனாத்தலார் தமது மனைவியை-இக்கேள்விக்கு என்னை மன்னிக்கவும்,ஆயினும் இது அவசியமாகிறது- அல்லது தான் நேசிக்கும் ஒரு பெண்ணை இவ்வாறு தண்ணி அடிக்க,நடு இரவில்,பொது விடுதிக்கு அழைத்துச் செல்வாரா????????
இப்பதிவுக்கான விடை மேற்கண்ட கேள்விக்கான பதிலில் இருக்கிறது..
எனக்குப் பிடித்த எந்த செயலையும் செய்ய எனக்கு சமூக உரிமை வேண்டும் என்ற நிலையில் வாதம் செய்வது முட்டாள்தனமாகவே எனக்குப் படுகிறது.
நடுஇரவில்,மனக்குரங்கின் கடிவாளம் கட்டவிழ்ந்த ஒரு குடிகாரக் கூட்டத்தின் நடுவில்,நானும் அமைதியாகக் குடிக்க வேண்டும் என்ற 'சமூக உரிமையை' நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து எதிர்பார்த்தால்,அதன் விளைவுகளையும் தனியாகவே சந்திக்கும் ம்ன வலிவும் உங்களுக்கு அவசியம் !!

rv said...

பெனாத்தலார்,
:))))))

ஹூம்... பாய்பிரண்டோட இராத்திரி 12 மணிக்கு போய் ரெண்டு க்ளாஸ் ஷாம்பெயின் குடிச்சு எஞ்சாய் பண்ணினா , அது எப்படி அங்க இருக்குற மத்த ஆம்பிளைகளுக்கெல்லாம் அந்தப் பொண்ணு பப்ளிக் ப்ராப்பர்டினு எண்ணம் வருதுன்னு எனக்குப் புரிவதேயில்லை.

இன்னொரு விஷயமும் கண்டிப்பா சொல்லணும்...கொச்சையா சொல்லணும்னா, மேலை நாடுகளிலெல்லாம் என்னவோ பெண்கள் டெய்லி வோட்கா அடிச்சுட்டு தெருவுல இருக்குற குடிகாரர்கள், ரவுடிகள்லாம் வம்பு பண்ணினா ‘ஜஸ்ட் லைக் தட்' விட்டுட்டு போயிடுவாங்கங்கற மாதிரி "holier than thou' கான்செப்ட் நம்மகிட்ட நிறைய இருக்கு.

வெளிநாட்டு பெண்களுக்கும் இப்பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. அவர்கள் இவ்வாறு நடப்பதை தவிர்ப்பதற்கென்று அவரவர்களின் கலாச்சாரத்தின் படி ஒரு பொதுஇடத்தில் நடந்துகொள்வதற்கு விதிமுறைகள் இருக்கின்றன. அளவுகோல்கள் வேறுபடுவதாலும் கலாச்சார வேறுபாடுகளாலும் அந்நிகழ்வுகளின் தாக்கங்களும் வேறுமாதிரி வெளிப்படுகின்றன.

தனிமனித சுதந்திரம் என்பதன் அளவில் இந்தியாவிற்கும் மேலைநாடுகளுக்கும் இருக்கும் வித்தியாசம்தான் இது. ஆணாதிக்க சமூகமான நம்முடையதில் ஆண்களுக்கே தனிமனித சுதந்திரம் கம்மி என்னும் போது அப்பா, அண்ணன், கணவன், மகன் என்ற வட்டத்துக்குள்ளேயே கட்டமைக்கப்படும் பெண்களின் சுதந்திரம் பற்றியும் சொல்லவேண்டுமா என்ன?

இதையே காரணமா வச்சு, இது அவங்களால வந்தது இவங்களால வந்துச்சு அதுக்கு முன்னாடி நாங்க பெண்களுக்கு மரியாதை கொடுத்தோம்னெல்லாம் கும்மி அடிச்சு குளிரு காய ஒரு கூட்டம். இப்போதைய ஓரளவிற்கு கட்டற்ற பெண்சுதந்திரம் பேணூம் ஐரோப்பியர்கள் dark agesஇல் தொடங்கி கடந்த நூற்றாண்டுவரை என்னவெல்லாம் செய்தார்களென்று படித்துப்பார்த்தால் இன்னும் நம் சமூகம் மெச்சூர் ஆகவேண்டியது பாக்கி இருக்கிறது என்பது புரியும்.

இதுதவிர பெண்ணீயவியாதிகள் சமத்துவம் மறந்து பெர்ஸனல் ஈகோ டிரிப்களாக அவர்களுடைய போராட்டங்கள் அமைந்துவிடுவதும் இந்த இழிநிலைக்கு காரணம்.

------
எல்லாத்தையும் சேர்த்துகட்டி வேகாத அவியலா வந்துருச்சு பின்னூட்டம். இருந்தாலும் கண்டுக்காம பப்ளிஷுடுங்க.

மங்களூர் சிவா said...

//
இப்பதிவுக்கான விடை மேற்கண்ட கேள்விக்கான பதிலில் இருக்கிறது..
எனக்குப் பிடித்த எந்த செயலையும் செய்ய எனக்கு சமூக உரிமை வேண்டும் என்ற நிலையில் வாதம் செய்வது முட்டாள்தனமாகவே எனக்குப் படுகிறது.
//
அனானி அண்ணே,

ஏறக்குறைய இதே கருத்தை செல்வனின் பதிவில் சொன்னேன். இதெல்லாம் தீர்வாகது அப்டின்னுட்டார்!! விவாதம் செய்யற அளவு எனக்கு டைம் கிடையாது அதனால சரி என்ஜாய் பண்ணுங்க அப்டின்னு சொல்லீட்டு கழண்டுகிட்டேன்!!

மங்களூர் சிவா said...

//
இராமநாதன் said...
பெனாத்தலார்,
:))))))

ஹூம்... பாய்பிரண்டோட இராத்திரி 12 மணிக்கு போய் ரெண்டு க்ளாஸ் ஷாம்பெயின் குடிச்சு எஞ்சாய் பண்ணினா , அது எப்படி அங்க இருக்குற மத்த ஆம்பிளைகளுக்கெல்லாம் அந்தப் பொண்ணு பப்ளிக் ப்ராப்பர்டினு எண்ணம் வருதுன்னு எனக்குப் புரிவதேயில்லை.
//
இரமநாதன் ஐயா
இந்தியாவில அன்னைக்கு ஏகப்பட்ட இடங்களீல ஏகப்பட்ட பெண்கள் இப்பிடி தண்ணியடித்து கொண்டாடியிருப்பார்கள் இந்த சம்பவம் ஒரு ஆக்சிடெண்ட் அவ்வளவுதான்.

மங்களூர் சிவா said...

//
Seetha said...
i still cannt understand penathals, how on earth it has been decided that the girls had had alcohol?did any one do breath analysis?iti si a differnet issue what is our business to tell people what they can drink or not...
//
நீங்க எப்பிடி அவிங்க குடிக்கலைன்னு முடிவுக்கு வந்தீங்க நீங்க ப்ரீத் அனலைஸ் பண்ண சர்டிபிகேட் பாத்தீங்களா??

என்னமோ நம்ம ஊர் பொம்மணாட்டிகளுக்கு எல்லாம் தண்ணீனா என்னானே தெரியாதுங்கற மாதிரி ஜவுண்டு விடறீக.

பெங்களூர்ல பப் பக்கம் வந்து பாருங்க.

மங்களூர் சிவா said...

ஈராக்ல சிறைகைதிகளை ஹோமோசெக்சுவலில் ஈடுபடவைத்தும், நிர்வாணமாக்கி அவர்களின் மேல் நாயை விட்டு கடிக்க வைத்தாரே ஒரு அமெரிக்க ராணுவ பெண்மணி (ஆதாரம் எல்லாம் கூகுள்ல தேடுங்க கண்டிப்பா கிடைக்கும் இது எல்லா டிவிலயும் வந்ததுதான்) அப்ப ஏன்பா யாரும் ஒரு பதிவு கூட போடலை???

திவாண்ணா said...

@ராமநாதன்
//ஹூம்... பாய்பிரண்டோட இராத்திரி 12 மணிக்கு போய் ரெண்டு க்ளாஸ் ஷாம்பெயின் குடிச்சு எஞ்சாய் பண்ணினா , அது எப்படி அங்க இருக்குற மத்த ஆம்பிளைகளுக்கெல்லாம் அந்தப் பொண்ணு பப்ளிக் ப்ராப்பர்டினு எண்ணம் வருதுன்னு எனக்குப் புரிவதேயில்லை.//

நம்ம சமுதாயத்துக்கு பெண்கள் இப்படி நடந்து கொள்வது இன்னமும் ஜீரணிக்க முடியாத சமாசாரம். அதனால அப்படிப்பட்ட எண்ணங்கள் வருது.

பினாத்தல் சுரேஷ் said...

கொத்ஸு.. இதுக்கெல்லாம் கேஸ் போட ஆரம்பிச்சா, நாம எத்தனை கோர்ட்லே நிக்க வேண்டியிருக்கும்னு யோசிச்சுப் பாத்தீங்களா?

நன்றி பாசமலர். அதையும் படிச்சிட்டேன்.

அனானி..

//மன்னிக்கவும்,ஆயினும் இது அவசியமாகிறது//

ஏன் இது அவசியம் என்பது புரியாவிட்டாலும், இந்தக்கேள்வியை எதிர்பார்த்துத்தான் இருந்தேன். சொல்லப்போனால், இந்தக்கேள்வியை முதலில் எழுப்பியதே என் மனைவிதான்.

பதில்: நிச்சயம் அழைத்துப் போக மாட்டேன்! தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கு சஜஸ்ட் செய்யவும் மாட்டேன்.

ஆனால் இந்தப்பதிலின் மூலம் என்ன தெளிவாகிவிடும் என நம்புகிறீர்கள்? பினாத்தல் ஒரு மிடில் கிளாஸ் மெண்டாலிட்டி உள்ள ஆள், பயந்தவன் என்பதைத் தவிர!

ஆனால், வருங்காலத்திற்கும் இப்படி பயந்து வாழ்வதையேதான் அறிவுறுத்தப்போகிறோமா? அவர்கள் அப்படித்தான், நீ கட்டுப்பாட்டோடே இரு என்றேதான் வளர்க்கப்போகிறோமா? இது நமக்கு அசிங்கமாக இல்லை?

//எனக்குப் பிடித்த எந்த செயலையும் செய்ய எனக்கு சமூக உரிமை வேண்டும் என்ற நிலையில் வாதம் செய்வது முட்டாள்தனமாகவே எனக்குப் படுகிறது.// அந்தச் செயல் சட்டவிரோதமாக இல்லாதபட்சத்தில், சட்டவிரோதிகளுக்கு பயந்து செய்யாமல் இருப்பது யதார்த்தமாக இருக்கலாம் - புத்திசாலித்தனமாக இருக்கலாம்..ஆனால் அதுதான் சரி என்பதை என்னால் ஏற்க முடியவில்லை!

seethag said...

சிவா , இடக்கு கேள்விகளுக்கு பதில் என்னால் சொல்ல முடியாது. நிங்கள் ஜெயித்ததாகவீ இருக்கட்டும்...எனக்கு அதுவல்ல பிரச்சினை.


அனானி நிஇங்கள் கேட்டிர்களே கணவன் அழைத்து போவானா என்று....ஒரு பெண் போனது அவருடய கணவருடன்.ஒரு வேலை அவர்கள் marriott hotelil ஒன்றும் ஆகாது என்று நினைத்தார்களோ ....இவ்வளவு சொல்லும் எல்லாரும் முந்தைய தினம் gurgaon ,shopping malil கணவருடன் கடைக்கு சென்ற பெண்ணின் நிலையை பத்தி படிக்கவில்லையோ? சிவா அப்பவும் "திதும் , நன்றும் பிறர் .." கதை விடுவீர்களா?

பினாத்தல் சுரேஷ் said...

தம்பி ராம்ஸு..

//அது எப்படி அங்க இருக்குற மத்த ஆம்பிளைகளுக்கெல்லாம் அந்தப் பொண்ணு பப்ளிக் ப்ராப்பர்டினு எண்ணம் வருதுன்னு எனக்குப் புரிவதேயில்லை.//

//"கொலிஎர் தன் தொஉ' கான்செப்ட் நம்மகிட்ட நிறைய இருக்கு//

//பெண்ணீயவியாதிகள் சமத்துவம் மறந்து பெர்ஸனல் ஈகோ டிரிப்களாக அவர்களுடைய போராட்டங்கள் அமைந்துவிடுவதும் இந்த இழிநிலைக்கு காரணம்//

இதுவா வேகாத அவியல்? கலக்கலா இருக்கு.

பினாத்தல் சுரேஷ் said...

மங்களூர் சிவா,

அனானி அண்ணனை வழிமொழிந்திருப்பதற்கு அவருக்கு கொடுத்த பதில்தான் :-)

ஆனால், எவ்வளவோ இடங்களில் பெண்கள் சென்றிருந்தாலும் ஓரிரு இடங்களில்தான் இப்படி பிரச்சினை என்பது -- விபத்து என்ற உங்கள் வாதத்தை ஏற்கவைக்கிறது.

சீதாவின் கொட்டுக்கு நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி - அதே பின்னூட்டத்துக்கு நான் அளித்த பதில் - குடித்திருந்ததாலோ, குடிக்காமல் இருந்ததாலோ அவர்கள் தவறிழைத்தவர்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?

பினாத்தல் சுரேஷ் said...

//அப்ப ஏன்பா யாரும் ஒரு பதிவு கூட போடலை???//

நான் போடலை.. அதைப்பத்தி எனக்கு ரொம்ப இன்வால்வ்மெண்ட் இல்லாததாலேயும் அதன் அரசியல் தளம் வேறன்றதாலயும்.

திவா.. சரியாச் சொன்னீங்க. நம்ம சமுதாயம் ஜீரணிக்கத் தவிக்கறதுதான் இங்கே வர பின்னூட்டங்கள்லேயே தெரியுதே..

சீதா..அதான் பதிவிலேயே சொல்லிட்டொமில்ல.. நாங்க பாத்து முடிவு சொன்னாதான் நீங்கதான் மேரியட்டும் சரி காய்கறிக்கடைக்கும் சரி போகலாம்!

மங்களூர் சிவா said...

//
பினாத்தல் சுரேஷ் said...

//
குடித்திருந்ததாலோ, குடிக்காமல் இருந்ததாலோ அவர்கள் தவறிழைத்தவர்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?
//
பாதுகாப்பற்ற ஒரு மெச்சூரிடி இல்லாத நம் ஜனநாயக தேசத்தில் நடுராத்திரி 12 மணிக்கு போய் தண்ணியடிக்கணுமா இல்ல தண்ணியடிக்க வேணாம்யா அங்க தண்ணியடிச்சகூட்டத்தில கும்மாளமிடத்தான் வேணுமா

//
நான் போடலை.. அதைப்பத்தி எனக்கு ரொம்ப இன்வால்வ்மெண்ட் இல்லாததாலேயும் அதன் அரசியல் தளம் வேறன்றதாலயும்.
//
இப்ப எங்கிருந்து வந்தது இன்வால்வ்மெண்ட்?? அது எப்பிடி ஒரு பொம்பளை பண்ணதை சொன்ன உடனே தளம் மாறீடுது!!!

தப்பு என்ன ஆம்பளைங்க மட்டும் செய்யறாங்களா?

//
Seetha said...
சிவா அப்பவும் "திதும் , நன்றும் பிறர் .." கதை விடுவீர்களா?
//
இப்பவும் சொல்லறேன் நமக்கு எதாவது ஒன்று என்றால் நாமதான் காரணம் மத்தவன் கிடையாது அந்த நியூஸ் நான் படிக்கலை இருந்தபோதும்.

துணையோடல்லது நெடுவழி போகேல் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி

மங்களூர் சிவா said...

'இதெல்லாம் விட்டுட்டு போய் புள்ளை குட்டிய படிக்க வைக்கிற வழிய பாருங்கய்யா' அப்படின்னு வடிவேல் வின்னர்ல சொல்லுவார் அதுதான் ஞாபகத்துக்கு வருது!!

Anonymous said...

ரொம்ப ஆச்சர்யமா இருக்கு இங்க நடக்கிற சில விவாதங்கள் எல்லாம்.

நாம் சுத்த பத்தமா இருந்தாலும் ஒரு சாக்கடையில புரண்டு எழுந்த பன்னி மேல விழுந்து பிடுங்கினா கூட நம்ம நன்பர்கள் 'நீ எதுக்கு சாக்கடை பக்கம் போற, அந்த பன்னிய தூண்டுற மாதிரி நீ நடந்து போன' அப்படின்னு சொல்லுவாங்க போல.

இதுல ஒரு பெரிய அண்ணாச்சி கவிதை வேற எழுதறார். அட... அவரே சொன்னாருங்க அது கவிதைதான்னு.

உடையை பற்றி சொல்றாங்க. ஐயா... எனக்கு தெரிந்து நல்லொழுக்கம் என்பது எனது உடையை நன்றாக அணிவதுதான். அடுத்தவங்க - அவங்க ஆணா இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அதை 'தூக்கி பார்க்க' யாருக்கும் அனுமதி கிடையாது. எந்த நாட்டுலயும் அனுமதி கிடையாது. எந்த நாட்டு பெண்களும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

மேலை நாடுகளில் (இப்படி சொல்றது ரொம்பவும் க்ளிஷேவா இருக்கு. என்ன செய்யறது... அப்படி சொன்னாத்தானே பலருக்கும் புரிகிறது) ஆண், பெண்கள் சகஜமாக பழகுகிறார்கள். தொடுதல் என்பது அங்கு சகஜம். ஆனால் தவறான நினைவோடு ஒரு பெண்ணை கட்டிய கணவன் கூட தொட முடியாது. 911 டயல் செய்தால் போதும். கதை காலி. இதில் ஒருவர் சொல்கிறார் 'அந்த பெண்கள் சட்டையை கழட்டினால், சரி விடு என்று எஞ்சாய் செய்வார்களாம்'. இவர் எத்தனை சட்டையை கழட்டி பார்த்தார் என்று தெரியவில்லை.

மேலை நாடுகளை விடுங்கள், கீழை நாடான தாய்லாந்தில், பாலியல் தொழில் என்பது ஒரு tourist attraction. அங்கே கூட நீங்கள் பெண்களைஇ பலவந்தபடுத்த முடியாது ஒரு பெண்மணியின் பேட்டியை படித்திருக்கிறேன்.

இன்னொருவர் எள்ளலுடன் சொல்கிறார் 'பெண்கள் பல இடங்களில் குடித்து கொண்டுதானிருக்கின்றனர்'. இந்த செய்தியில் என்ன விசேடம்? எனக்குத் தெரிந்து கருவுற்றிருக்கும் பெண்கள், மற்றும் வயதுக்கு வராத ஆண் / பெண் குடிக்க கூடாது என்று அறிவுரை / சட்டம் இருக்கிறது. நீங்கள் குடிக்க செல்லும் இடத்தில் இன்னொரு வயதுக்கு வந்த பெண்ணும் குடிக்க வந்தால் உங்களுக்கு அது ஏன் விசேடமாக தெரிகிறது என்று யோசித்து பார்த்தீர்களா?

பெண்கள் குடிப்பது, கூத்தாடுவது ஒன்றும் நமது கலாச்சாரத்திற்க்கு புதிதல்ல. இந்த கொண்டாட்டதிற்க்காவே பெண்களை 'நேர்ந்து விடும்' கலாச்சாரம்தான் நமது கலாச்சாரம். அப்படிபட்ட கீழ்த்தனமான விஷயங்களை செய்தவர்கள்தான் நமது முப்பாட்டனார்கள்.

ஆனால் 'குடும்ப பெண்களுக்கு' அவையெல்லாம் தடை என்று வைத்துவிட்டார்கள். இங்க 'குடும்ப ஆண்கள்' என்று யாருமே கிடையாது என்பதுதான் ஆச்சர்யம்.

இந்த செய்தியை படிக்கவில்லை ஆனால் பெண்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்கிறார். எத்தனையோ பெண்கள் குடிக்கிறார்கள். குறிப்பிட்ட சம்பவம் ஒரு ஆக்ஸிடண்ட் என்கிறார். ஐயா... ஏன் இந்த சம்பவம் மட்டும் பேசப்படுகின்றது என்று ஒரு முறை செய்தியை முழுவதும் படித்து விட்டு அப்புறமா பேசலாம். அல்லது பேசாமல் உங்க புள்ள குட்டியை படிக்க வைப்பதில் கவனம் செலுத்தலாம். சமூகமாவது பிழைத்து போகட்டும்.

இதில் ஒரு அனானியின் கேள்வி 'உங்க மனைவியை அந்த இடத்திற்க்கு கூட்டிக் கொண்டு போவீர்களா?'

இங்கு பேசப்படும் பொருள் சக மனிதரை அசிங்கபடுத்தும் மனப்பாண்மையை பற்றி. அந்த மாதிரி மனிதர்கள் மட்டும் கூடக் கூடிய இடம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? அந்த மாதிரி வக்கிரம் பிடித்தவர்கள்தான் எல்லா இடத்திலும் இருக்கின்றார்களே? மோகமுள் கதையில் வருகிற மாதிரி தனது மனைவியை பூட்டு போட்டு பூட்டி வைத்துவிட்டு போவார் போல.

இந்த செய்தியின் அடிநாதமானது என்னவென்றால்...

தனது கனவனின் துணையுடன், பெரு நகரத்தில், பலர் நடமாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், போலீஸ் ரோந்து இருக்கும் நேரத்தில், செல்லும் ஒரு சக மனுசியை 'குடி மற்றும் கொண்டாட்டம்' என்ற போர்வையில் நாங்கள் இழிவு படுத்துவதில் சந்தோஷம் கொள்கிறோம் என்று நாம் உலக மக்களுக்கு தெரிவித்திருக்கிறோம். அவ்வளவே!

எனக்கும் ஒரு கவலையில்ல. நானும் எனது குடும்பத்தை வீட்டில் பாதுகாப்பாக விட்டுவிட்டு அந்த சோதியில் கலந்து 'கொண்டாடி' விட்டு எனது பிள்ளை குழந்தைகளை படிக்க வைக்க போகிறேன்.

இதை வெளியிட்டமைக்கு ஒரு தனி நன்னிங்கோ!

மங்களூர் சிவா said...

//
Anonymous said...

நாம் சுத்த பத்தமா இருந்தாலும் ஒரு சாக்கடையில புரண்டு எழுந்த பன்னி மேல விழுந்து பிடுங்கினா கூட நம்ம நன்பர்கள் 'நீ எதுக்கு சாக்கடை பக்கம் போற, அந்த பன்னிய தூண்டுற மாதிரி நீ நடந்து போன' அப்படின்னு சொல்லுவாங்க போல.
//
//
ஒரு சக மனுசியை 'குடி மற்றும் கொண்டாட்டம்' என்ற போர்வையில் நாங்கள் இழிவு படுத்துவதில் சந்தோஷம் கொள்கிறோம் என்று நாம் உலக மக்களுக்கு தெரிவித்திருக்கிறோம். அவ்வளவே!
//

//
எனக்கும் ஒரு கவலையில்ல. நானும் எனது குடும்பத்தை வீட்டில் பாதுகாப்பாக விட்டுவிட்டு அந்த சோதியில் கலந்து 'கொண்டாடி' விட்டு எனது பிள்ளை குழந்தைகளை படிக்க வைக்க போகிறேன்.
//
அறிவு கெட்ட மட அனானி 'துஷ்டதை கண்டால் தூர விலகு'ன்னு சொல்றது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும்தான்.

இப்பிடித்தான் குடித்து கும்மாளமிட்டு போய் சேர்ந்தானே ஒரு மவராசன் 'சூவேரா ஹோட்டலில்' அவனுக்கு 25 - 26 வயசாம் சாப்ட்வேர் இன்சினியராம்.

உடனே இதுக்கு எடக்கு மடக்கா ஒரு கேள்விவரலாம் ஏன் அவன் ஒருத்தன் தானே செத்தான் மத்தவன் எல்லாம் கொண்டாடலையா என கேட்டால் எப்பிடியோ நாசமா போங்க அதன் விளைவுகளை தாங்கிக்கொள்ளும் மனதுடன் அதுக்கப்புறம் ஐயா போச்சே அம்மா போச்சே என புலம்புவதில் அர்த்தமில்லை.

உலக மக்களுக்கு என்ன தெரிவித்திருக்கிறோம் நாம்? இந்தியாவிற்கு என ஒரு கலாச்சாரம் இருக்கிறது பண்பாடு இருக்கிறது (அது எங்க இருக்குதுன்னு தெரியாது Incredible India வாம்) என நினைத்திருக்கும் மேலை நாட்டவரின் நினைப்பில் மண்ணை அள்ளி போட்டிருக்கிறோம் அவ்வளவுதான்.

குற்றமே நடக்காத எதாவது ஒரு நாட்டை கூறுங்கள் பார்க்கலாம்.

இதையும் வெளியிட்டமைக்கு ஒரு தனி நன்றிங்கோ!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<===
மங்களூர் சிவா said...
....அறிவு கெட்ட மட அனானி 'துஷ்டதை .....
===>
ம.சிவா,என்ன இந்த தாக்கு தாக்குறீங்க? நல்ல அடுக்குமொழி.

Boston Bala said...

சென்ற வருடம் தாங்கள் எழுதியதில் தங்களுக்கு உவந்ததைப் பகிர முடியுமா?

அழைப்பு இங்கே

நன்றிகள் பல :)

Hariharan # 03985177737685368452 said...

மிகுதியான குடிபோதையில் மிதந்து மிருகத்தனத்தையும்,Mob mentalityயை வெகுதியாக வெளிப்படுத்தும் நிலையில் தன்னை வைத்துக்கொள்வது நமது இந்தியக் கலாச்சாரம் அல்ல.


இத்தகைய குடி மிகுந்த, உடல் வெறி பிடித்த மிருக கலாச்சாரம் மேற்கத்தைய நாடுகளின் கலாச்சாரம். இத்தனை நிமிடங்களுக்கு இத்தனை பெண்கள் பெருநகரங்களின் பெரிய கட்டிடங்களின் லிஃப்டில் (பயணிக்கிற நிமிடங்களுக்குள்) மானபங்கப் படுத்தப்படுகிறார்கள் என்று புள்ளிவிபரம் தரும் மேலான மேற்கத்தைய நகர்ப்புறக் கலாச்சாரம்!

இம்மாதிரி குடிகார சூழலில் புத்தாண்டு கொண்டாடுவது பெண்களின் சுதந்திரம் எனில் குடிக்குப் பின் போதை, தலைவலி, வாந்தி என்பதான உபாதைகளை மறுப்பின்றி ஏற்றுக் கொள்வது போல் இந்த நவயுக கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொள்ள அதிசுதந்திர விரும்பும் பெண்கள் தயார்படுத்திக்கொண்டு வருவது உசிதம்.

Better to be alone than in such BAD company!

பொதுவில் மதுவிடுதியில் குடும்பப்பெண்கள் குடிப்பதும் கும்மாளம் அடிப்பதும் முதலில் நமது பாரம்பரியமா? பாரத கலாச்சாரமா?

கொம்புள்ள, கொடிய , தாக்குதல் நடத்தித் தீங்கிழைக்கும் மிருகங்களிடம் இருந்து இத்தனை அடி விலகி இரு என்பதை அறிந்திருப்பது, அறிவைப்பயன்படுத்தி நடந்துகொண்டு பலன் பெறுவது மாதிரி, இம்மாதிரி மிருகத்தை மிஞ்சித் தீங்கிழைக்க வல்ல குடிவசப்பட்ட , நிதானம் தப்பிய கூட்டத்தினிடையே கொண்டாடப்படும் விழாக் கொண்டாட்டங்களின் பை ப்ராடக்ட் ஆக இத்தகைய கேவலங்களும் வெளிவரத் தயாரான நிலையில் இருக்கவே செய்யும். பொதுஅறிவு இருந்தாலே ஊகித்து ஒதுக்கிவிடலாம்.

ஆபத்து என்பது வருமுன் காத்துக்கொள்ளவேண்டும்.
அதைச்செய்யாத இந்தப் பெண்களின் புத்தி பின் புத்தி!

பொது இடத்தில் பெண்களிடம் கண்ணியம் துளியும் இன்றி படு கேவலமாக நடந்து கொண்ட மனித மிருகங்களையும், இவர்களுக்கு இவ்விதமான கேவலமான ஒரு வேல்யூ சிஸ்டம் தந்து வளர்த்த பெற்றோர்களை எண்ணி வருந்துகிறேன்!

பினாத்தல் சுரேஷ் said...

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

வெளிநாட்டில் நடக்காத ஒன்று இங்கே நடப்பதாகச் சொல்லவில்லை. எல்லா ஊர்களிலும் பெர்வர்ட்டுகள் இல்லாமல் இல்லை. ஆனால், அவர்களின் நடத்தைக்கு பலியானவர்கள்தான் காரணம் என்று சப்பைக்கட்டுக் கட்டும் "கலாச்சாரம்", அதைப் பரவலாக ஏற்கும் சமூகம், அதுதான் நியாயம் என்றே நினைத்துவிடும் படித்தவர் வட்டம் இளைஞர் சமூகம் எல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை.

 

blogger templates | Make Money Online