Dec 31, 2007

தரைவாழ் விண்மீன்கள் - விமர்சனம் - கடைசிப்பகுதி

படம் பார்த்த சூட்டோடு மூன்று பகுதிகள் எழுதிவிட்டு, வேண்டுமென்றேதான் ஒரு வாரம் இடைவெளி விட்டேன். சில படங்களின் தாக்கம் ஒன்றிரண்டு நிமிடங்களிலும் சில படங்களுக்கு நாட்கணக்கிலும் நீடிக்கும். இந்தப்படத்தின் தாக்கம் எவ்வளவு நாள் நீடிக்கிறது என்பதைப் பார்த்துவிடலாம் என்றே ஒரு வாரம் காத்திருந்தேன்.

கொஞ்சம் கூடக்குறையாமல் மனதெங்கும் வியாபித்திருக்கிறான் இஷான். இஷானாக நடித்திருக்கும் டர்ஷீல் சபாரிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்று யாரேனும் முன்மொழிந்தால் - பிச்சுப்போடுவேன் பிச்சு!

ஸ்கூல் பங்க் அடித்தேன் என்ற ஒரே வசனத்தை அண்ணனிடமும் அப்பாவிடமும் இருமுறை சொல்கிறான். அந்த இரண்டுமுறைகளிலும் எந்த அளவுக்கு வித்தியாசத்தைக் காட்டுகிறான்? அண்ணனிடம் சொல்லும்போது "பிந்தாஸ்" (கவலையற்ற), அப்பாவிடம் சொல்லும்போது உடல் முழுக்கக் குறுகி வார்த்தைகள் வெளியே வருவதே தெரியாத பயத்துடன்.. ஒரு பானை சோற்றுக்கு இந்த ஒரு காட்சியே பதம்! வகுப்பை விட்டு வெளியே போ என்று ஆசிரியை சொன்னதும் கலக்கத்துடன் வெளியே வருவதும் வந்த இரண்டாம் நொடி கவலை பறந்து நடனமாட ஆரம்பிப்பதும்; ஆமீர்கான் வந்ததும் பொதுவாக வகுப்பே மகிழ்ச்சியில் இருக்க, இவன் மட்டும் சோகமாக இருப்பதும், ஆட்டம்பாட்டத்தில் கலந்துகொள்ள மனது துடித்தாலும் அதையும் மீறிக் காயப்பட்டிருப்பதையும் வெளிப்படுத்தி இருப்பதும் -- எந்த வளர்ந்த நட்சத்திரத்தினுடனும் போட்டி போடும் இயல்பான நடிப்பு.

ஆமிர்கான் சிறந்த நடிகர்தான், ஆனால் இந்தப்படத்தில் அவருக்கு வேலைவாய்ப்பு குறைவு. இரண்டாம் பாதியில் அறிமுகமாவது மட்டுமல்ல, வரும் காட்சிகளிலும் உரை நிகழ்த்துகிறாரே அன்றி பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பில்லை - அந்த இறுதிக்காட்சி தவிர. பிரின்ஸிபல் முடிவுகளை அறிவிக்கையில், "இந்தமுறை குருவை ஒதுக்கி சிஷ்யனுக்கு முதல் பரிசு கொடுக்கப்போகிறோம்" என்றதுமே முதலில் ஊகித்து கைதட்டத் தொடங்குவதும் கண்ணோரம் துளிர்க்கும் அரைச் சொட்டு நீரும் - அவர் திறமைக்கு ட்ரெயிலர் காட்டிவிடுகிறது. ஆனால் இயக்குநராக அவர் அடைந்திருக்கும் உயரங்கள் அபாரம்!

நடிப்பில் யாருமே குறை வைக்கவில்லை - குறிப்பிட்டுச் சொல்ல கடைசிக் காட்சியில் தன் இறுக்கங்களைத் தளர்த்தி அழும் தந்தை, "நான் என்னதான் இன்னும் செய்யவேண்டும்" எனக்கலங்கும் தாய், பாசம் காட்டுவதா, கண்டிப்பு காட்டுவதா எனத் தெரியாமல் கலங்கும் அண்ணன், முதல் மாணவனாக இருந்தாலும் முழு மக்குடன் நட்பு பாராட்டும் ராஜன், ஆசிரியர்கள், கூட இருக்கும் மாணவர்கள் -- எல்லாரும் கலக்கி இருக்கிறார்கள்.

படத்தில் எனக்குத் தோன்றிய ஒரே குறை - இஷான் ஒரு பரிசுப்போட்டியில் வெல்வதாக அமைக்கப்பட்டிருந்த க்ளைமாக்ஸ். ஏன் மறுபடி பரிசு, போட்டியில் தள்ளவேண்டும்?அந்த வயதிலியே எதேனும் - படிப்பு இல்லாவிட்டாலும் வேறு விஷயத்திலாவது - சாதித்துக் காட்டவேண்டும் என்ற தகவலைத்தான் முன்னிறுத்துவதாகத் தோன்றியது. ஆனால், படம் பார்க்கவரும் சாதாரணப் பெற்றோர்க்கு, இப்படி ஒரு பேண்டஸி முடிவைக் கொடுத்தால்தான் முழுத்தாக்கமும் அவர்களுக்குச் செல்லும் என்பதற்காகவே இப்படி ஒரு முடிவு என்று ஆசிப் சொன்னதும் நியாயமாகத்தான் படுகிறது.

மேலும் இந்த ஒரு குறையை (என் மனதளவில்) பிடித்துத் தொங்கி, இயக்குநருக்கே தெரியாத கோணங்களை விமர்சிக்கும் கும்பலில் நானும் போய்ச் சேர விரும்பாததாலும், எழுதிய அமோல் குப்தே, இயக்கிய ஆமிர்கானின் நேர்மை படம் நெடுகிலும் தெரிவதாலும், அதற்கு ஒரு முக்கியத்துவமும் கொடுக்க மறுக்கிறேன்.

மொத்தத்தில், 2007 இல் பார்த்த ஒரே, முழு நிறைவான படம் என்று தாரே ஜமீன் பர்-ஐச் சொல்வதற்கும், 7 வயதுக்கு மேல் வளர்ந்துவிட்ட அத்தனை பேரையும் பார்க்கப் பரிந்துரைப்பதிலும் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

10 பின்னூட்டங்கள்:

கானா பிரபா said...

rasiththen

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சுரேஷ் !!!
இந்த புத்தாண்டில் நீங்கள் மேலும் மேலும் நல்ல பல பதிவுகளை போட வாழ்த்துகள் மற்றும் வேண்டுகோள்.

ஹாரி said...

//மொத்தத்தில், 2007 இல் பார்த்த ஒரே, முழு நிறைவான படம் என்று தாரே ஜமீன் பர்//

ஏன் நீங்க 'ராம்கோபால் வர்மா கி ஆக்' பார்க்கலையா?
:)

கோபிநாத் said...

நாங்களும் படத்தை பார்த்துட்டோம். அதுக்கு உங்க விமர்சனமும் ஒரு காரணம் ;)

புத்தாண்டு வாழ்த்துக்கள் தல ;))

Anonymous said...

Gostei muito desse post e seu blog é muito interessante, vou passar por aqui sempre =) Depois dá uma passada lá no meu site, que é sobre o CresceNet, espero que goste. O endereço dele é http://www.provedorcrescenet.com . Um abraço.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கானாபிரபா.

நன்றி அருண். சட்டியிலே இருந்தா அகப்பையிலே வரப்போகுது :-)

ஹாரி, ஆக் பாக்கலை..ஆனா என்ன, சிவாஜி பாத்தேன், பில்லா பாத்தேன், பேரரசு படம் ஒண்ணு பாத்தேன் :-)

கோபிநாத், எங்கே உன் விமர்சனம்?

கிரிஸ்கினெட், ரொம்ப நன்றி. ப்ளாக் படிக்கறதுக்கு மொழி தடையில்லைன்னு நிரூபிச்சுட்டீங்களே!

Unknown said...

puthandu vazthukkal babu. mudaliiye parkjkanunu ninaithu konduerunda padam. un vimarsanthal parthe aage vendum ena thondrugiradhu

Boston Bala said...

கோபிநாத்தை வழிமொழிகிறேன் :)

திவாண்ணா said...

சுரேஷ், நான் சாதாரணமாக சினிமா பார்ப்பதில்லை. ஆனால் உங்கள் பதிவை பார்த்துவிட்டு பார்க்க முடிவு செய்தேன். பிரமாதமான படம்! முடிவு கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தாலும் அது புரிந்து கொள்ளக்கூடியதே.
இதை பார்க்க வைத்த உங்களுக்கு நன்றி!

பினாத்தல் சுரேஷ் said...

மாலதி.. அவசியம் பாக்க வேண்டிய படம். சந்தேகமே இல்லை.

நன்றி பாபா. கோபிநாத்துக்கே ரிப்பீட்டா?

திவா.. நன்றி.. (நான் எழுதினதாலதான் பாத்தீங்கன்றத யோசிச்சா, அழகிய தமிழ்மகன் சூப்பர் படம்னு விமர்சனம் போடலாம்னு ஒரு கொலைவெறி வருதே :-))

 

blogger templates | Make Money Online