Dec 10, 2007

காட்டுவழி போற தேவ் நீ கவலைப்படாதே!

பசுமை! பசுமை! பார்க்கும் இடமெல்லாம் பசுமை!
 
நகர வாழ்க்கையிலேயே பழக்கப்பட்டிருந்த தேவுக்கு காட்டின் பசுமை புது உற்சாகம் அளித்தது. தனியாக காட்டுவழியில் செல்வதில் பயம் இருந்தாலும் இயற்கை அவன் மனதைக் குளிர்வித்தது. தன்னைத் தேடித் துரத்துபவர்கள் இங்கேயும் தொடர மாட்டார்கள் என்பதால் இலகுவாக உணர்ந்தான்.
 
பிரச்சினைகள் துரத்துவதால் எந்த வாகனமும் கிடைக்காமல் நடந்தே ஆகவேண்டும். இன்று இரவுவரை நடக்கவேண்டுமா? ஏன் மேலேகூட ஆகலாம். அதிலும் இந்தக் காட்டுப்பாதையில் யானைகள் திரியுமாம். "என்ன ஆனாலும் பாத்துக்கலாம்" என்ற முரட்டுத் தைரியத்துடன் தேவ் நடந்தான். 
 
பாதை ஊகிக்க முடியாததாக இருந்தது. சரேலேன ஏற்றம் குபீரென இறக்கம்!
 
"அம்மா.. ம்மா.." ஈனஸ்வரமாகக் குரல் கேட்டதும் தேவ் அதிர்ந்தான். நல்லவேளை..மனிதக் குரல்தான்!
 
4 அடிதான் குழி.. குழிக்குள் ஒரு இளைஞன். எப்படி விழுந்தானோ!
 
"இங்கே பாருங்க, கை கொடுங்க.."
 
வெளியே வந்ததும் தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்துக்கொண்டான் அந்த இளைஞன். "மிக்க நன்றி ...."
 
"என் பெயர் தேவ்.. அதனாலென்ன பரவாயில்லை"
 
"நான் அருண். இங்கே காட்டுக்குள் மாட்டினால், சில நாட்கள்கூட ஆகலாம் உதவி வர.. என் அதிர்ஷ்டம்தான் நீங்கள் உடனே வந்தது."
 
"என்ன செய்றீங்க அருண்?"
 
"இங்கதான் கிராமத்தில் ஒரு வேலையா வந்தேன்.. திரும்பிப் போகணும், இன்னும் உத்தரவு வரலை. சரி வெட்டியா இருக்கறதுக்கு ஊராச்சும் சுத்தலாமே ன்னு வந்தேன், விழுந்தேன்" வசீகரமான சிரிப்பு.
 
"நானும் ஏறத்தாழ அப்படித்தான்.. கிராமத்துல பெரிய்வர் இருக்காரில்ல, அவர்கிட்ட ஒரு தகவல் சொல்லணும், அதுக்குதான் வந்தேன்"
 
"இந்தக் காலத்தில, ஆள் மூலம் தகவலா? புறா அனுப்ப வேண்டியதுதானே!"
 
"எந்தக் காலமா இருந்தாலென்ன? சில முக்கியமான விஷயம் நம்பகமான ஆள் மூலம் அனுப்பறதுதான் இன்னிக்கும் பாதுகாப்பு"
 
"யாருக்கு? என்ன தகவல்?"
 
"அதை உன்கிட்ட சொன்னா நானென்ன நம்பகமான ஆள்?"
 
"அது சரி.. " மறுபடி அதே சிரிப்பு.
 
பாதையின் கடுமையும் பயமும் காணாமல் போய்விட்டது - கூட ஒரு ஆள் இருந்ததால். அவ்வப்போது தூரத்தில் கேட்ட சில மிருக ஒலிகள் முன்போல பயமுறுத்தவில்லை.
 
"இங்கேயெல்லாம் தனியாக வந்தா மகிழ்ச்சி இல்ல! காதலியோட வரணும்"
 
"ஓ, தேவ் காதல் வேற பண்றாரா?"
 
"ஆம்.. இப்போதுதான் கொஞ்ச நாளா! கண்டதும் காதல்!"
 
"சரி தகவலைத்தான் சொல்ல மாட்டே, காதலையாச்சும் சொல்லலாமில்ல?"
 
"அதுல ஒரு பிரச்சினையும் இல்ல.. சொல்றேன்..
 
"எனக்கு காஞ்சிபுரம் பக்கத்துல ஒரு கிராமம். பெரும்பாலும் காஞ்சிபுரத்துலதான் இருப்பேன். அங்கே நாங்க நண்பர்கள் நாலஞ்சு பேரு வேலை வெட்டியில்லாம ராஜவாழ்க்கை வாழ்ந்துகிட்டிருந்தோம். அப்பதான் என் நண்பன் ஆதி ஒரு வேலை சொன்னான்"
 
"காஞ்சிபுரம், ஆதியா?"
 
"தெரியுமா? பிரபலமான ஆளுதான்"
 
"இல்ல தெரியாது.. நீங்க மேல சொல்லுங்க"
 
"அவங்க அப்பாகிட்ட ஒரு தகவல் சொல்லணுமாம்.. என்னை அனுப்பினான்.. அவங்க அப்பா ஊருக்கு வந்து பாத்தா ஒரே களேபரம்! அவரு தஞ்சாவூர்லே பெரிய பசையுள்ள புள்ளி..பெரிய புள்ளின்னாலே நாலு எதிரிங்க, நாலு நண்பர்ங்க இருப்பாங்க இல்லியா? அவரைப் பாக்கவே விடல"
 
"அப்புறம்?"
 
"வேறென்ன, எப்படியாவது விஷயத்தை ஆதி அப்பாகிட்ட சொல்லிடணும்னு ஒரு தப்பு பண்ணிட்டேன்"
 
"என்ன தப்பு?"
 
"பொய் சொல்லி உள்ளே நுழைஞ்சுட்டேன்.. விஷயத்தை என்னவோ ஆதிஅப்பாகிட்டே சேத்துட்டேன்.. அவரோட நண்பர்கள், நான் என்னவோ அவரைக் கொலை செய்யத்தான் பொய் சொன்னதா நினைச்சுகிட்டுத் துரத்தறாங்க. அவரோட எதிரிங்களுக்கு, நான் அந்த ஆளை சந்திச்சதுல கடுப்பு.. என்னைப் போட்டுத் தள்ளிடணும்னு துரத்தறாங்க!"
 
"காதல்னு சொன்னீங்களே!"
 
"வரேன், வரேன்.. கிரமப்படிதானே வரமுடியும்? துரத்துனாங்களா? ஒளியறதுக்கு இடம் தேவைப்பட்டுச்சு. அப்பதான் ஆதியோட தங்கையைப் பாத்தேன்.
 
"பாத்ததுதான்.. முதல் பார்வையிலேயே காதல்னு முன்னாடி சொல்லியிருந்தா நம்பியிருக்கமாட்டேன்.. அருண் நீ என்ன நினைக்கிறே?"
 
"காதலுக்குக் கண் இல்லைன்னு"
 
"கிண்டலா? நீ யாரையும் காதலிக்கலையா?"
 
"இல்லைப்பா.. நிறைய வேலைகள்.. கடமைகள்.. அதெல்லாம் முடிஞ்சபிறகுதான் யோசிக்கமுடியும்! சரி அப்புறம்?"
 
"அவங்ககிட்டே எல்லாத்தையும் விலாவாரியாச் சொன்னேன்.. அவங்க என்ன சொன்னாங்க, சரி நீங்க கொஞ்சநாள் தலைமறைவா இருங்க, கிராமத்துக்குப் போயிருங்க..
 
"எனக்குத் தெரிஞ்சவர்தான் கிராமத்துப் பெரியவரு, அவருக்கு ஒரு கடுதாசி கொடுத்தா அவர் உங்களை இப்ப உள்ள பிரச்சினைலே இருந்து காப்பாத்துவார்"னு.. அதான் இங்க வந்திருக்கேன்..
 
பேசாமல் கொஞ்ச தூரம் சென்றார்கள்.. அப்புறம்தான் உறைத்தது தேவுக்கு..
 
"கில்லாடி அருண் நீ.. கொஞ்சம் கொஞ்சமா பேசி என்கிட்டே இருந்தே விஷயத்தையெல்லாம் கறந்துட்டியே!"
 
"சேசே.. கவலைப்படாதே.. நானும் நம்பகமான ஆள்தான்.. அதிலும் என்னை நீ காப்பாத்தி வேற இருக்கே"
 
"இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்?"
 
"வந்துட்டோம் ஏறத்தாழ!.. அதோ புகை தெரியுதா?"
 
புகை தெரிந்தது, ஆனாலும் புகையின் ஆதாரத்தை நெருங்குவதற்குள் மாலை மங்கத் தொடங்கிவிட்டது.
 
"இதான் கிராமத்துப் பெரியவர் வீடு. நீ போய் உன்னை அறிமுகப்படுத்திக்கோ.. நான் துணியெல்லாம் மாத்திகிட்டு வரேன். எதாச்சும் பிரச்சினைன்னா தாராளமா நான் அருணோட நண்பன்னு சொல்லிக்க"
 
பெரியவர் என்ன காரணமோ தெரியவில்லை, கோபமாக இருந்தார்.
 
"அய்யா வணக்கம்.. என் பெயர் தேவ், காஞ்சிபுரத்திலிருந்து வந்திருக்கேன்"
 
"இவந்தானா தேவ்.. இவனை உடனே பிடிச்சு சிறைலே போடுங்கடா. தஞ்சாவூர்லே என்ன பண்ண நீ? கொலை பண்ண முயற்சி பண்ணிட்டு ஓடிவந்துட்டியா? எங்களுக்கு வேற வழியிலே விஷயம் வராதுன்னு நினைச்சயா?"
 
நான்கு பேர் உடனே தேவைச் சூழ்ந்து அவனைப் பிடிக்க முற்பட, உடை மாற்றிக்கொண்டு உள்ளே நுழைந்த அருண் சொன்னான்..
 
"கொடும்பாளூர் பெரிய வேளாரே! அருண்மொழி வர்மன் ஆணையிடுகிறேன். வந்தியத் தேவர் நம் நண்பர். அவரைப் பிடிக்க முயற்சி செய்யாதீர்கள். அவர் என் தமக்கை குந்தவை பிராட்டியாரிடம் இருந்து எனக்கு முக்கியமான தகவல் கொண்டு வந்திருக்கிறார்"
 
************************

37 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

தல, பின்னிட்டீங்க. உப்புமாவில் இப்படி ஒரு சுவையா? சூப்பரே சூப்பர். நடந்தே போவது், காட்டுப் பகுதியில் யானை என படிக்கும் போது கொஞ்சம் குழம்பத்தான் குழம்பினேன். ஆனால் கொஞ்சமும் எதிர்பார்க்காத முடிவு!!

சூப்பருங்கண்ணா!!

ramachandranusha(உஷா) said...

நல்லாதான் இருக்கு, ஆனால் பொ.செவில் வந்தியதேவன் ஆழ்வார்கடியானைதானே காப்பாற்றுவான்??? யாராச்சும் பொன்னியின் செல்வன் அபிமானிகள் உதவிக்கு வந்து, பினாத்தலாரை குட்டவும் :-)

Anonymous said...

Excellent story. The twist was very good(has got a Sujatha touch).I guess it is for Surveysan's Contest. If not, plz do send it.
- Ramya.

Anonymous said...

அற்புதம். பொன்னியின் செல்வனை நீங்கள் உங்கள் நடையில் எழுதலாம். பாராட்டுகள்.

- அரசு

பாச மலர் / Paasa Malar said...

நல்ல கற்பனை..பாத்திரங்களின் பெயர் மாற்றம் பொருத்தமாகவும் நன்றாகவும் இருக்கிறது..

SurveySan said...

;)

Anonymous said...

மிகவும் நன்றாக இருந்தது சுரேஷ் !.
பொன்னியன் செல்வருக்கு என் பெயரை வைத்ததற்கு ஒரு special பாராட்டு :).

seethag said...

பொன்னியின் செல்வன் படித்ததில்லை..திட்டாதீங்க.

ஏதோ ட்விஸ்ட் மட்டும் புருன்சுது...i am unable to enjoy

குசும்பன் said...

நீங்க ஒரு சிறுகதை சிற்பி

மங்களூர் சிவா said...

//
குசும்பன் said...
நீங்க ஒரு சிறுகதை சிற்பி
//
ரிப்பீட்டேய்

(குசும்பன்
//நீங்க ஒரு சிறுகதை சிற்பி//
இந்த லைன் டெம்ப்ளேட்டில் உடனடியாக சேர்க்கவும்)

rv said...

எப்பவும் கதை விடுவீரு.. இன்னிக்கு கதை எழுதியிருக்கீரு.

பொன்னியின் செல்வன் காண்டெக்ஸ்ட் நினைவிலில்லை. இருந்தாலும் யானை புறானெல்லாம் சொன்னோன கொஞ்சம் டவுட் ஆனேன். அதே மாதிரி கடசியில வித்தியாசமா ட்விஸ்ட்.

யோசிப்பவர் said...

பினாத்தலாரே,

முதல்லேயே கதை பொ.செ. தான்னு தெரிஞ்சு போச்சு. ஆனாலும் அதை இப்படி வித்தியாசமான தளத்தில் சொல்லியிருப்பது மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது.

யோசிப்பவர் said...

நான் தலைப்பை பார்த்ததும், முதலில் 'தேவ்'ஐ கலாய்க்கிறீங்களோன்னு நினைச்சேன்.;-)

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க கொத்தனார். இதுவும் உப்புமாவா? உமக்கு உப்புமா வெறிதான்னு ப்ரூவ் பண்ணிட்டீங்களே..

பாராட்டுக்கு நன்றி.

உஷாக்கா, நீங்க சொல்றது கரெக்டுதான், ஆழ்வார்கடியான் தான் வந்தியத்தேவனை இப்படி ஒரு சூழ்நிலைலே காப்பாத்துவான், ஆனா நிறைய கேரக்டரை உள்ளே கொண்டுவரவேணாமேன்னு (அதுவும் திருமலைன்னு பேர் வந்தா பாதி பேர் முதல் பாராலேயே கண்டுபிடிச்சிடுவாங்க) எழுத்தாளர் சுதந்திரத்தை உபயோகப்படுத்திகிட்டேன்:-) இதான் கேப்புன்னு அடிக்க ஆள் சேக்கறீங்க பாத்தீங்களா?

இந்த இடத்தில் ஒரு சிறு அறிவிப்பு: இல்லறத்தியல் பாடங்கள் புதன் அன்று வெளியாகும்.

பினாத்தல் சுரேஷ் said...

ரம்யா, நன்றி. சுஜாதா டச்சா? தன்யனானேன் :-)

அரசு, நன்றி. முழுசா இப்படி எழுதினா போரடிச்சிடாது?

நன்றி பாசமலர்.

என்ன சர்வேசன்? வெறுமன சிரிச்சிருக்கீங்க?

பினாத்தல் சுரேஷ் said...

அருண்,

பேரு வச்சது நானில்லை. கல்கியில்ல வச்சாரு ;-) நன்றி.

சீதா, ஏன் திட்டப்போறேன்.. பொ.செ படிக்காம இருக்கறது குற்றமா என்ன :-) ஆனா, படிச்சுடுங்க!

குசும்பன், காமெடி? ம்ம்..

மங்களூர் சிவா, கமெண்டுக்கு ரிப்பீட் போட்ட உங்களுக்கு பதிலும் ரிப்பீட்!

பினாத்தல் சுரேஷ் said...

இராமநாதன்..

இந்தக் கதை நல்லாயிருக்குன்னு சொல்ற சாக்குல மத்ததையெல்லாம் போட்டுத் தள்ளிட்டயெப்பா! தாங்க முடியலையேப்பா!!!

யோசிப்பவர்,

ப்ரூவ் பண்ணிட்டீங்க நீங்க யோசிப்பவர்தான்னு :-) பல்பு வாங்காத ஒரே ஆள் நீங்கதான்.

Sridhar Narayanan said...

எதிர்பாராத திருப்பம். சூப்பரா யோசிச்சிருக்கீங்க. brilliant.

//பேரு வச்சது நானில்லை. கல்கியில்ல வச்சாரு ;-) நன்றி.
//

நான் அவங்க அப்பா சுந்தரத் சோழர்ன்னுதான் நினச்சிட்டிருந்தேன் :-))))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஸ்ரீதர் வெங்கட்..

ஆஹா.. தஞ்சாவூர் சுந்தர்தானே பேரு வச்சாரு.. நானும் பல்பு வாங்கிட்டேனே :-)

Boston Bala said...

வேறென்னவோ மேட்டர் என்று ஆர்வத்துடன் புரட்டினால் :))) கலக்கல்!

G.Ragavan said...

சூப்பர். :) கதையில சொல்லிக்கிட்டு வந்தப்ப சவசவன்னு இருந்துச்சு. முடிவைப் படிச்சப்புறம் கதையத் திரும்பிப் படிக்க வெச்சீங்க பாருங்க. அங்கதாங்க கதை வெற்றி பெற்றது. என்னுடைய வாழ்த்துகள்.

துளசி கோபால் said...

பினாத்தலாரே,

ச்சும்மா சொல்லக்கூடாது.....

பின்னிட்டீங்க.

வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.

Anonymous said...

Found out it's Po.Sel., as I read Po.Sel very recently. Your style is more easy to understand for readers like me (Tamil Ilakiyam - Beginners level). I name it as (Remake of) "Poniyin Selvan 2007" and sure it's a BOX OFFICE HIT :))))

கோபிநாத் said...

நான் கூட அண்ணன் தேவ்வை தான் கலாய்கிறிங்கன்னு நினைச்சேன்..

கதை நல்லாயிருக்கு...;))

அரை பிளேடு said...

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஐந்தாவது முறையாக படித்து முடித்துவிட்டு வந்தால் இங்கே மீண்டும் பொன்னியின் செல்வன் :)))

பினாத்தல் சுரேஷ் said...

பாஸ்டன் பாலா, ரொம்ப நன்றி!

ஜிரா.. நன்றி - குறிப்பா, திரும்பிப் படிக்கவச்சேன்னு சொன்னீங்களே அதுக்கு :-)

துளசி அக்கா, இந்தப் பின்னூட்டப்பெட்டியில துளசி அக்கான்னு அடிச்சு எவ்வளவு நாளாச்சு..ஹூம்ம்! நன்றி :-)

பினாத்தல் சுரேஷ் said...

அனானி, பொன்னியின் Cell One அப்படின்னு யோசிப்பவர் ஒண்ணு எழுதினதா ஞாபகம். காபிரைட் பிரச்சினை வந்துடாது?

கோபிநாத், நன்றி.

அரை பிளேடு, நன்றி.

Anonymous said...

I guess, the character name is AruLmozhiVarman..Not Arunmozhi:)

Anyway, nalla Uppuma...

SurveySan said...

//என்ன சர்வேசன்? வெறுமன சிரிச்சிருக்கீங்க?//

Village படத்துல, நைட் ஷ்யாமளன் ட்விஸ்ட் குடுத்த மாதிரி குடுத்திருக்கீங்கன்னு புரிஞ்சது.

பொ.செ படிச்சதில்ல, அதனால, முழு வீச்சு எனக்கு புரியல :)
அதான் சிரிச்சு, எஸ்கேப் ஆயிருந்தேன்.

Chinna BOSS said...

கலக்கல் பெனத்தாலரே... டைட்டில் பார்த்து வில்லங்கமா இருக்குமோன்னு விக்கல் எடுத்து வந்து பார்த்தேன்... படிச்சு சிரிக்க வைச்சிட்டீங்க.. :-)

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

நல்லாருக்கு

பினாத்தல் சுரேஷ் said...

மதி.. இன்னொரு குழப்பம் :-) நன்றி..


சர்வேசன், வில்லேஜ் பாக்கலை, அதனால அந்த ட்விஸ்ட் தெரியலை, அதனால நீங்க சிரிச்சதுக்கு காரணம் புரிஞ்சிடுச்சி :-)

சின்ன பாஸ், சிரிச்சதுக்கு நன்றி.

சாமான்யன் சிவா, நன்றி.

Nimal said...

பினாத்தல் செல்வன்...
நல்லா இருக்கு...
சூப்பரப்ப்பு...!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தலைவா!
பொன்னியின் செல்வனை அப்படியே அசால்ட்டா லோக்கலைஸ் பண்ணத் திட்டம் ஏதாச்சும் வச்சிருக்கீங்களா? :-)
கதை மாந்தர்களின் பெயரும் நல்ல செலக்சன்!

மொதல்ல ஒன்னும் பிடிபடலை! கடைசி வரிக்கு அப்புறம், மீண்டும் இன்னொரு தபா படிக்க வச்சி, யார் யாரு என்னென்ன பாத்திரம்-னு யோசிக்க வச்சீங்க பாருங்க! அங்கிட்டு தான் பின்னிட்டீங்க!

//அப்பதான் ஆதியோட தங்கையைப் பாத்தேன்//

ஏன் ஆதியோட தங்கையை விட ஒரு பேரழகி - நந்திதா-வைப் பாக்கலையா? :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கில்லியில் இணைத்துள்ளேன்!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நிமல், நான் பினாத்தல் சுரேஷ், செல்வன் வேற ஆளு, அவர பினாத்த எல்லாம் மாட்டார் :-)

கண்ணபிரான் ரவிஷங்கர், பொ.செ குவிஸ்ஸெல்லாம் போட்ட ஆளு படிச்சதைப் பதிவு செய்யலையேன்னு யோசிச்சுகிட்டே இருந்தேன். நல்லவேளை வந்துட்டீங்க!

நந்திதா சூப்பர் பிகர்தான், ஆனா மேரீடு ஆச்சே :-( அதான் தேவ் கொஞ்சம் கலக்கமா இருந்தான்..

Anonymous said...

//ஏன் ஆதியோட தங்கையை விட ஒரு பேரழகி - நந்திதா-வைப் பாக்கலையா? :-))//

நந்திதா இல்லை, நந்தினி.

 

blogger templates | Make Money Online