Dec 8, 2007

கடன் அட்டை

மணிக்கு அந்தக் கடிதம் வந்ததிலிருந்துதான் தொடங்கியது சனி.

"திரு சுப்பிரமணியம் கோவிந்தராஜன், தங்கள் கடன் அட்டையில் இரண்டு மாதங்களாக ரூ 150000/- (ரூ ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் மட்டும்) கட்டப்படாமல் நிலுவையில் இருக்கிறது. தாங்கள் உடனே ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம், ஒ-ம், ---வங்கி"

எப்படி இது சாத்தியம்? வீட்டின் கடைசிச் செலவுகளுக்காக கடன் வாங்கியது உண்மை. ஆனால் அடுத்த மாதம் அலுவலகத்தில் எல்லாக்கடன்களையும் எடுத்து வங்கிக்குக் காசோலை அனுப்பியாகிவிட்டதே. இரண்டு மாதங்களாக நிலுவையா? வங்கிக்கே பேசிவிடலாமா?

"உங்கள் சேமிப்பு கணக்கு பற்றிய தகவல்களுக்கு 1 ஐ அழுத்தவும்.."

ஏழெட்டு எண்களை அழுத்தி "உங்கள் அழைப்பு எங்களுக்கு முக்கியமானது, தயவு செய்து காத்திருக்கவும்" 20 நிமிடம் கேட்டுக்கொண்டிருந்தபின்

"வணக்கம் என் பெயர் ஜான். உங்களுக்கு என்ன சேவை வேண்டும்" அப்பாடா மனிதக் குரல்!

"என் பெயர் சுப்பிரமணியம் கோவிந்தராஜன். என் அட்டை எண்----------------"

"ஒரு நிமிடம் திரு கோவிந்தராஜன்.."

"உங்கள் கணக்கில் இன்னும் 1.5 லட்சம் கட்டப்படாமல் நிலுவையில் இருக்கிறது"

"நான் சென்ற 3ஆம் தேதி அதற்குக் காசோலை அனுப்பிவிட்டேனே"

"இன்று தேதி 5 தான் ஆகிறது, ஒருவேளை கணக்கு இற்றைப்படுத்தப்படாமல் இருக்கலாம்."

"நான் சொல்வது போனமாதம் 3ஆம் தேதி"

"மன்னிக்கவும் திரு கோவிந்தராஜன், இன்னும் எங்களுக்கு அந்தக் காசோலை வந்து சேரவில்லை"

"ஆனால் வங்கிக்கணக்கில் அந்தப் பணம் குறைந்துவிட்டிருக்கிறதே"

"இன்னும் இந்தக் கணக்குக்கு வரவில்லை திரு கோவிந்தராஜன். நீங்கள் உடனே அந்தப் பணத்தைக் கட்டவேண்டும். எங்கள் கடன்மீட்புத் துறைக்கு உங்கள் கணக்கு பற்றிய தகவல்களை அறிவித்து விட்டோம்"

"ஆனால் நான் அனுப்பிவிட்டேனே"

"உங்கள் காசோலை எண்ணைச் சொல்கிறீர்களா? சரி பார்க்கிறேன்"

சொன்னான்.

"ஆம், இந்தக் காசோலை எங்கள் வங்கிக்கு வந்திருக்கிறது, ஆனால் வேறு ஒரு எண்ணுக்கு. உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கடன் அட்டைகள் இருக்கின்றனவா?"

"இல்லையே. உங்கள் வங்கியிலிருந்து ஒரே ஒரு அட்டைதான். எந்த எண்ணுக்குச் சென்றுள்ளது?"

"மன்னிக்கவும். வேறு ஒருவர் பெயரில் உள்ள அட்டை எண்ணை நாங்கள் தெரிவிக்கக்கூடாது"

"காசோலையில் எண் தவறுதலாகப் போடப்பட்டிருக்கலாம்"

"மன்னிக்கவும், அதற்கு நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை"

"அந்த அட்டைக்குரியவரிடம் பேசி, தவற்றைச் சரி செய்யலாம் அல்லவா?"

"அதை இந்த வங்கி செய்யாது. நீங்களே செய்துகொள்ளத் தடை இல்லை."

"எனக்கு யாருடைய கணக்கு என்பது எப்படித் தெரியும்?"

"மன்னிக்கவும், நான் தகவல்கள் தர இயலாது"

"உங்கள் மேலாளரிடம் பேசிப்பார்க்கலாமா?"

"தாராளமாக. ஆனால் அவரும் இத்தகவல்களைத் தரமாட்டார்"

"அப்போது என்னதான் வழி?"

"தாங்கள் ரூ 1.5 லட்சத்தை உடனடியாகக் கட்டவேண்டும்"

"எப்படிக் கட்டுவது?"

"மன்னிக்கவும், வேறு எதேனும் கேள்வி இருக்கிறதா? நல்ல நாளுக்கு வாழ்த்துகள்" வைத்துவிட்டான்.

நல்ல நாள்? இதைவிட மோசமான நாள் இருக்க முடியுமா?

என்ன செய்வது? எப்படி இந்தப் பிரச்சினையிலிருந்து மீள்வது? யாரை ஆலோசிப்பது..ஒன்றும் புரியாமல் அடிவயிறு கனக்க வீட்டிற்குச் சென்றால் வாசலிலேயே மடக்கினார் செயலர் ராமாராவ்.

"என்ன மணி, உங்கள் வீட்டுக்கு இப்படிப்பட்ட விருந்தாளிங்க எல்லாம் வருவாங்களா?"

யார் அது விருந்தாளி?

"இது மரியாதைப்பட்டவங்க இருக்கற இடம். இந்த மாதிரி ரவுடிங்க எல்லாம் வராம பாத்துக்கங்க"

ராமாராவுடன் சண்டை பிடிக்க நேரம் இல்லாமல் வீட்டிற்கு விரைந்தான். 3 தடி ஆட்கள் அழைப்பு மணியைப் புறக்கணித்து கதவை ஓங்கித் தட்டிக் கொண்டிருந்தார்கள்.

"யாருங்க நீங்க"

"நாங்க வங்கியிலிருந்து வரோம். கடன் வாங்கினியே.. திரும்பிக் கொடுக்கவாணாம்?"

அந்த முகங்கள், அவர்கள் உடைகள் எதுவும் பன்னாட்டு வங்கியின் பெயருடன் ஒத்துவரவில்லை. ஆரம்பிக்கும்போதே ஒருமையில் ஆரம்பிக்கிறானே..

"வாங்க உக்காந்து பேசலாம்"

உட்கார்வதற்குள் "வாளைமீனுக்கும் விலாங்குமீனுக்கும்" சத்தம்.

"அந்த கஸ்மாலத்தை அணைச்சு வையின்னு சொன்னேனில்ல?.. எடுறா!" என்றான் அவர்களுள் தலைவன் போலத் தோற்றமளித்தவன்.

"என்னாது .. கொடுக்க முடியாதாமா? கைகால் போனா பரவாயில்லையான்னு கேளு! கடன் வாங்கித் திருப்பிக் கொடுக்கமுடியாத நாய்க்கு வாய் மட்டும் வண்டலூர் வரைக்கும்!"

அணைத்துவிட்டு மணியைப் பார்த்தான்.

"என்னாய்யா? எப்ப தருவே?"

"நான் பணத்தை அனுப்பிட்டேனுங்க. ஆனா ஒரு தப்பு நடந்துபோச்சு"

"எல்லாரும் இப்படித்தான் ஆரம்பிக்கறாங்க"

"இல்லீங்க, நிஜமாவே, வேர ஒரு கணக்குக்கு பணம் போயிருச்சு"

"அதுக்கு, என்னை என்னா பண்ணச் சொல்றே? டேய் மொட்டைக்கு போட்டுப் பேசுறா! அந்த நங்கநல்லூர்காரன் விஷயம் ஒரு வாரத்துக்கு மேல இழுத்துகிட்டிருக்கு"

"நான் மேலதிகாரிங்ககிட்ட பேசி சரி பண்ணிருவேங்க"

"மொட்டை.. அவன் என்னதான் சொல்றான்? குடும்பத்தோட மரியாதையா வாழணுமாவா? வேணாமாவா? ஒரு காட்டு காட்டிட்டு வா! அப்பதான் தெரியும் இவனுங்களுக்கு" மணி பேசியதை காதில் வாங்கிக் கொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை.

"தோ பாரு மணி.. ஒரு வாரம் உனக்குத் தர்றேன். அதுக்குள்ள பைசல் பண்ணாச் சரி. இல்லாட்டி என்ன வேணும்னாலும் நடக்கும்"

வெளியேறிவிட்டார்கள். இரண்டு நிமிடம்தான் உள்ளே இருந்தார்கள், ஆனால் ஒரு தேர்ந்த நாடகம் போல, மேலே கை வைக்காமல், நேரடியாகத் திட்டாமல் செய்தியை மணிக்குச் சொல்லிவிட்டார்கள் - நாங்கள் எந்த அளவுக்கும் இறங்குவோம்!

அடுத்து வந்த நாட்கள் அன்றைவிட மோசமாகவே இருந்தன.

"அட்டைக்கு அனுப்பப்படும் காசோலை யாருடைய கணக்கில் இருந்து வந்தது என்பது எங்களுக்குத் தேவையில்லாத விஷயம். உங்களுக்கும் அந்த அட்டைதாரருக்கும் என்ன கொடுக்கல் வாங்கலோ? அவராக முன்வந்து சரிசெய்தால் மட்டுமே முடியும்"

"சரி அவர் பெயர் முகவரி சொன்னீங்கன்னா கேட்டுப்பாக்கிறேனே"

"மன்னிக்கவும். நாங்கள் அந்த எண்ணைத் தரமுடியாது. நீங்கள் இப்போது உடனடியாக 175000த்தை கட்டுவது தவிர வேறு வழி கிடையாது"

வங்கி மேலதிகாரிகள் கைகழுவிவிட்டார்கள்.

வாரம் கழிந்தவுடன் சரியாக வந்துவிட்டார்கள் தாதாக்கள்.

"என்னா மணி, இன்னும் கட்டலியாமே? என்னா தெனாவட்டுடா உன்க்கு?"

"இல்லைங்க, எதாவது பண்ணி சரி பண்ணிடுவேன்."

"த்தா.. உனக்கெல்லாம் ஒரு வீடு.. சோறுதானே திங்கறே? கடன் வாங்கினா திருப்பிக் கொடுக்கணும்ன்ற ஒணக்கை வேணாம்?"

"எப்படியும் இன்னும் ஒரு ரெண்டு மூணு நாள்லே..."

"கடைசியா இன்னும் ரெண்டு நாள் கொடுக்கறேன். மவனே அதுக்குள்ள கணக்குத் தீர்க்கலே..."

யாரைக் கேட்பது? .

"உங்க அப்பாகிட்ட இருந்து எதாச்சும்?"

"அவரு கடைசிக் காசையும் சுரண்டிதானே 3 லட்சம் கொடுத்தாரு? உங்களுக்குத் தெரியாததா?"

எந்த வழியும் இல்லை. அலுவலகத்தில், வங்கிகளில் தெரிந்தவர்களிடம் எல்லாம் எல்லை வரைக் கடன் வாங்கித்தான் வீடே முழுமை ஆகி இருக்கிறது. நண்பர்கள் எல்லாரும் முடியாது என்றே சொல்லிவிட்டார்கள்.

நடைப்பிணமாகத்தான் அலைந்தான் மணி. "அஞ்சு வட்டிக்குத் தர்றேன். ஆனா ரெண்டு மாசத்துக்குள்ள திருப்பணும்" ரெண்டு மாசத்துக்குள்? வேறு குண்டர்களை அழைப்பதில்தான் இது முடியும். "வேணாங்க"

வீட்டை அடகு வைக்கலாமா? "இதை எப்படிங்க அடகு வைக்க முடியும்? ஏற்கனவே அடகுக்குதானே வீட்டுக்கடன் வாங்கியிருக்கோம்?"

ஒன்றும் புரியவில்லை. தற்கொலையைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. ஒருநாள் அம்சா பதட்டமாக அழைக்க, வீட்டிற்கு வேகமாக ஓடினான்.

வீட்டு வாசலில் ஒரு வண்டியில் அவன் தொலைக்காட்சியும் குளிர்பதனப் பெட்டியும்.

அதே தாதாதான் நின்று மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்."மணி.. வண்ட்டியா? காசைத் திருப்பிக் கொடுக்காத டோமரு உனக்கு படம் பாக்கணுமா?"

ராமாராவும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். "மணி, இதெல்லாம் சரியில்லை. நான் முதல்லேயே சொன்னேன், இது மரியாதைப் பட்டவங்க இருக்கற இடம்னு. நீங்க கூடிய சீக்கிரம் வீட்டைக் காலி பண்ணிடுங்க. குழந்தைங்க எல்லாம் பயப்படுது பாருங்க!"

வீட்டில் தொலைக்காட்சி போனதில் நிசப்தம் பெரும் சப்தமாகக் கேட்டது. சமையலறையில் கேவல்.

அடுத்த முறை தாதா வந்தபோது, மணியும் வீட்டில் இருந்தான் நல்ல வேளையாக..

"மணி.. உன் மூஞ்சுக்குதான் இவ்ளோ நாள் மேல கைவைக்காம விட்டு வச்சிருக்கேன்.."

"இதோ பாருங்க.. நீங்க பண்றது சட்டப்படி தப்பு.. தீர்ப்பு கூட வந்திருக்கு தெரியுமா?"

"நீ சரிப்படமாட்டே.. சட்டம் பேசறியா.. தயிர்சோத்துக்கு இவ்ளோ காண்டு கூடாது..தோ கூப்பிடறேன் நம்ம பசங்கள.."

"அய்யோ.. அவங்ககிட்டே ஏன் வம்பு.. எதாச்சும் கொடுத்து அனுப்புங்க!" கண்ணில் கலவரத்தோடு அம்சா..

"என்ன இருக்கிறது கொடுக்க?"

"ஏன் உன் பொண்டாட்டிய அனுப்பேன்! அம்சாவா பேரு? அம்சமாத்தானே இருக்கா?"

கதறி அழ ஆரம்பித்துவிட்டாள்..

"இந்தத் தாலி ஒண்ணுதான் இருக்கு.. சாமி படத்துக்குக் கீழே மஞ்சள் கயிறு இருக்கு அதை எடுத்துகிட்டு வாங்க.."

சமையல் அறையைத் தாண்டும்போதுதான் அதைப் பார்த்தான்.

மாட்சிமை தாங்கிய நீதிபதி அவர்களே.. என் கட்சிக்காரர் மணி, உணர்ச்சியின் தூண்டுதலால்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார் என்பதால், குறைந்தபட்சத் தண்டனை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

************************************
ஆங்கிலக் கலப்பை என் குறையாகக் கூறிய நண்பர் சாத்தான்குளத்தாருக்கு, துளி ஆங்கிலமும் கலக்காமல் எழுதிய இக்கதையை காணிக்கையாக்குகிறேன்.

43 பின்னூட்டங்கள்:

Mohandoss said...

//போன் போட்டு விடலாம்.//

எங்க ஊரில் போன் என்பது ஆங்கிலம் ;)

குசும்பன் said...

அருமையான கதை போட்டிக்கு அனுப்பலாம்:))

Anonymous said...

1) வாழ்த்துக்கள்

2) போட்டியில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

3) நிச்சயம் வெற்றி பெற போகும் கதை.

4) கலக்கல் கதை வெற்றி நிச்சயம்.

5) இப்படி எல்லாம் கதை எழுதினா நாங்க எல்லாம் போட்டியில் கலந்துக்க முடியாது போலவே!!!

pudugaithendral said...

வாழ்த்துக்கள்.

அருமையான் கதை.

பல பேரின் நிலைமையை படம் பிடித்து காட்டியிருக்கிரீகள்.

seethag said...

இப்படி நடக்க கூடுமா பெனாத்தல்ஸ்?

சீரியசாக கேட்கிறேன். பயமா இருக்கே?

rv said...

//மணிக்கு அந்தக் கடிதம் வந்ததிலிருந்துதான் தொடங்கியது சனி//

ஆரம்பமே அதிரடி.. கதை சுவையாகத்தான் இருந்திருக்கவேண்டுமென்று எனக்கு புரிந்துவிட்டது.

அதான் நேரடியா ஸ்க்ரோல் பண்ணி பின்னூட்டத்துக்கு வந்துட்டேன்.

Anonymous said...

//துளி ஆங்கிலமும் கலக்காமல் எழுதிய இக்கதையை காணிக்கையாக்குகிறேன்.//

ஆனால் அடுத்த மாதம் பி எப்பில் கடன் எடுத்து வங்கிக்குக் காசோலை அனுப்பியாகிவிட்டதே.

இப்னு ஹம்துன் said...

அருமையா எழுதி..திரும்பவும் நிலைக்கு (form) வந்துட்டீங்க...பெனாத்தலாரே!

திடுக் முடிவு நன்று.

ஆனால், 'தயிர்சோத்துக்கு...' மாதிரி வசனங்களை தவிர்த்திருக்கலாமோ.ன்னு தோணுது. அதுபோல,

//சமையல் அறையைத் தாண்டும்போதுதான் அதைப் பார்த்தேன்.//
என்பது...
சமையல் அறையைத் தாண்டும்போதுதான் அதைப் பார்த்தான்.

மணியன் said...

//அடுத்த மாதம் பி எப்பில் கடன் எடுத்து வங்கிக்குக் காசோலை அனுப்பியாகிவிட்டதே.//

//துளி ஆங்கிலமும் கலக்காமல் எழுதிய இக்கதையை//

:((

பி எப்= சேமநல நிதி?

பினாத்தல் சுரேஷ் said...

மோகன் தாஸ், துளியைக் கண்டவள், மணியன் - சுட்டிக் காட்டியதற்கு நன்றி. சரி செய்துவிட்டேன். நேரடியாக சேமநலநிதி, தொலைபேசி போன்ற தமிழாக்க வார்த்தைகளைத் தவிர்க்க நினைத்து, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டதில் இந்த இரண்டையும் மறந்துவிட்டேன். இப்போது மாற்றிவிட்டேன்.

இப்னு ஹம்துன், உங்கள் விமர்சனத்திற்கு நன்றி. பார்த்தேன் - பார்த்தான், திருத்திவிட்டேன்.

ஆனால், தயிர் சாதம் கதைக்குத் தேவை என்றே நினைக்கிறேன். முடிவின் ஆச்சரியத்தை அதிகப்படுத்த.

பினாத்தல் சுரேஷ் said...

குசும்பன், டெம்ப்ளேட் உபயோகிப்பவன் ஆகிய "இரண்டு பேருக்கும்" க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கலந்த நன்றி.

ராமநாதா.. இதுக்கு கதை கண்றாவின்னே சொல்லியிருக்கலாம் நீ :-(

பினாத்தல் சுரேஷ் said...

புதுகைத் தென்றல், நன்றி.

சீதா, நிறையவே நடக்குது - கொலைமுடிவு அல்ல, கடன் அட்டைத் தகராறுகளும், கடன்மீட்புத் துறையை அவுட் சோர்ஸ் செய்துவிட்ட பன்னாட்டு வங்கிகளும். வழக்கு ஒன்று நடந்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பே சொல்லி இருக்கிறதே..

ramachandranusha(உஷா) said...

அதான் நேரடியா ஸ்க்ரோல் பண்ணி பின்னூட்டத்துக்கு வந்துட்டேன்//

ராமனாதா, அறிவாளிகள் ஓரே மாதிரி சிந்திக்கவும் செய்வார்கள், செயல்படவும் செய்வார்கள் என்பதை இன்றுதான் புரிந்துக் கொண்டேன்.

இலவசக்கொத்தனார் said...

போன கதையை விட இந்தக் கதை பெட்டர். (பின்னூட்டத்தில் ஆங்கிலக் கலப்பு ஓக்கேதானே?)

ஆனா ராமநாதன் குடுத்த ட்விஸ்ட் சூப்பர்!

அதுவும் நானும் உஷாக்காவும் ஒண்ணா சேர்ந்து ஓக்கே சொல்லும் அளவுக்கு சூப்பர். இல்லையா உஷாக்கா? :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

enakku kadan attaiye vendamnu solliyum phone panni thondharuseidhu mudalil thalaiyil kattinaanga- enbadhiyum serththirukkalam
Moththathil oru arumaiyana kadhai.

T.V.Radhakrishnan

Anonymous said...

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு சுரேஷ். ஒரு விசயம் கவனிச்சீங்களா? இப்படி எழுதியதால கதையோட போக்கும் சரி, நடையும் சரி எங்கும் தடைப்படவேயில்ல. ஆங்கிலம் கலந்து எழுதுனாத்தான் இயல்பா இருக்கும்கறது எல்லாம் ஆடத்தெரியாத --- (ஆபாசம் வேணாம்கறதால விட்டுடுறேன்) வீதி கோணல்னு சொல்ற மாதிரிதான்

மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நெசம்மாவே நல்லா இருங்கடே!!

சாத்தான்குளத்தான்

மங்களூர் சிவா said...

தயிர் சாதத்துக்கும் பவர் இருக்குன்னு கதைல சொன்னதுக்கு ஒரு 'ஓ' போட்டுக்கறேன்!

பினாத்தல் சுரேஷ் said...

கொத்ஸ், என்ன சொல்ல வரீங்க? பெட்டரா, அல்லது உஷாக்காவோடு சேர்ந்து சொல்லும் சூப்பரா! ஒரு இடத்துல நில்லுமய்யா.. உமக்கு பாப்பையா பாதிப்பு அதிகம் ஆயிடுச்சி.

உஷாக்கா, இன்று ஒரு தகவல், அறிந்துகொண்டேன். (என்ன தகவல்னு சொல்லமாட்டேனே)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ராதாகிருஷ்ணன். சேர்த்திருக்கலாம்தான், பெரும்பாலான கடன் அட்டைகள் வாங்கப்படுவதைவிட தலையில் கட்டப்படுபவைதான். ஆனால் உபயோகித்த பிறகு எப்படி வந்தது என்ற மூலம் தேவையற்றது அல்லவா?

நன்றி சாத்தான்குளத்தாரே..ஆனா தமிழ்லே எழுதினதாலே கொஞ்சம் நீளம் அதிகம் ஆனது உண்மைதான் :-)

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க மங்களூர் சிவா, நன்றி.

Unknown said...

பினாத்தல்ஸ், கதை அருமையா இருக்கு! இந்த நெலம தயிர் சாதத்துக்கு மட்டுமில்ல, எல்லா சாதத்துக்கும் வரும் :)

அப்புறம், 'கஸ்மாலம்','டோமரு', 'காண்டு' போன்ற வார்த்தைகளையும் தவிர்த்திருக்கலாமே?

CVR said...

கதை தானே என்ற உண்மையை தாண்டி மனதை ஊடுருவி ,இது உனக்கும் நடக்கும் நடக்கலாம் என்ற கிலியை கிளப்பும் கதைகள் உண்டு.
அது போன்ற திகில் ஏற்றும் கதை இது.
கடைசியில் யாரை கொல்கிறார் அவர் என்று எனக்கு புரியவில்லை.
ஆனால் யாரை கொன்றார் என்பதை விட இந்தக்கொலையால் அவரின் பிரச்சினை மேலும் அதிகமாகி விட்டது என்பது மட்டுமே மனதில் நிறைந்து பாதிப்பை கூட்டுகிறது.
இனிமே பினாத்தலாரின் பதிவுகளையும் பயத்தோடும் கவனத்தோடும்தான் படிக்க வேண்டும் போல!!!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தஞ்சாவூரான்.

நீங்கள் குறிப்பிட்ட வார்த்தைகளையும் தவிர்த்திருக்கலாம். ஆனால் நேட்டிவிட்டி சுத்தமாகி விட்டிருக்கும் :-)

நன்றி சிவிஆர். ஆமாம்.. யாருக்கும் நடக்கலாம்தான்.கொல்லப்பட்டது தாதாதான்.. வேறு யாரை கொன்றிருக்க முடியும்?

CVR said...

இப்போ யோசிச்சு பாத்தா பைத்தியக்காரத்தனமா இருக்கு,ஆனா குழப்பத்தில் அவன் தனது மனைவியையே கொண்றிருப்பானோ என்று நினைத்து விட்டேன்!! :-)

Unknown said...

1. முடிந்நதவரை ஆங்கிலம் கலக்காமல் இருப்பதால், கதையோட்டத்தில் ஏதும் தடையிருப்பதாகத் தெரியவில்லை.
2. இப்படியும் நடக்குமா என பயமுறுத்தும் கதை. நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

ஆமாம் சிவிஆர்.. அவசரத்துல இப்படி நடக்கறது ஜகஜம்தான் :-)

சுல்தான், நன்றி. ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க :-)

ரசிகன் said...

நகைச்சுவையா சொல்லியிருந்தாலும்.., நிஜமாவே கடன் அட்டைகளால் கழுத்தை நெறிக்கும் வங்க்கிகளின் அவலத்தை நல்லா சாடியிருக்கிங்க...
நல்லாயிருக்கு..

பினாத்தல் சுரேஷ் said...

என்ன ரசிகன், நகைச்சுவையா சொல்லியிருக்கேனா???

என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலையே?

கோபிநாத் said...

சாரி தல லேட்டு...

கதை ரொம்ப நல்லாயிருக்கு..;))

கருப்பன் (A) Sundar said...

கதை சுவாரஸ்யமாக இருந்தது இருந்தாலும் கதைக்கருவில் சில சட்டச்சிக்கல்கள் உள்ளன. தயவுசெய்வு இந்த பதிவில் சென்று பார்க்கவும் http://maalaimayakkam.blogspot.com/2007/12/blog-post_11.html

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

விறுவிறுப்பா இருந்திச்சு.எனக்கு கூட கடன் அட்டையினால ரூ.250 கடனுக்கு 6 மாதத்தில் ரூ.2500 தண்டம் வந்துச்சு. கட்டிட்டு ரிசர்வ் வங்கியின் நடுவர் மன்றத்துக்கு ஒரு புகாரைக்கொடுத்தேன். சில மாதங்களில் பணம் திரும்பக்கிடைத்தது.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கோபிநாத்.

நன்றி கருப்பன். உங்கள் பதிவில் வந்து பதில் அளிக்கிறேன்.

நன்றி சாமான்யன் சிவா.

மக்கள் சட்டம் said...

சற்று தாமதமாகத்தான் தங்கள் பதிவை படிக்க நேர்ந்தது. பலரது அனுபவத்தை எழுத்தோவியமாக தீட்டியுள்ளீ்ர்கள். நன்றி.

//கிரெடிட் கார்டு - கடன் வசூல் என்ற பெயரில் அராஜகமா?// என்ற எங்கள் பதிவை http://makkal-sattam.blogspot.com/2007/07/blog-post_3201.html என்ற இணைப்பில் படித்தால் பயனளிக்கக்கூடும்.

-சுந்தரராஜன்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மக்கள் சட்டம் சுந்தரராஜன்.

indirasenthilraj said...

உங்க கதைய படிச்ச பிறகு கடன் அட்டைனாலே கைகால் நடுங்குது சுரேஸ். கதை மிக நன்றாக உள்ளது.

சென்ஷி said...

சாரி தலைவா... நான் அநியாயத்துக்கு லேட்டு... :(((

துளிகூட ஆங்கில கலப்பில்லாமல் என்னால் பின்னூட்டவே முடியல.. இப்படி ஒரு கதையா! மிக்க மகிழ்ச்சி.. அண்ணாச்சிக்கும் என் வாழ்த்துக்கள் :))

ஷார்ஜாவிலிருந்து சென்ஷி

cheena (சீனா) said...

கதை அருமையாக இருக்கிறது. கடன் அட்டை வாங்கும் ( அல்லது தலையில் கட்டப்பட்ட) நடுத்தர மக்கள் படும் பாடு இருக்கிறதே - அப்பப்பா - சொல்லி மாளாது.

தயிர் சாதம் கடைசி முடிவுக்கு முன்னுரை.

பன்னாட்டு வங்கிகள் பண்ணும் அநியாயம் கொஞ்ச நஞ்சமல்ல .ஆனாலும் திரும்பத் திரும்ப மடல்கள் எழுதி, வங்கிகளின் மேலதிகாரிகள் வரை செய்திகளைக் கொண்டு சென்றால் சீக்கிரமே நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

BCSBI, Ombudsman, RBI, Consumer forum என பல அமைப்புகள் உண்டு. இவைகளைப் பற்றிய புரிதல் குறைவு.

என்ன செய்வது.

நச்சென்ற கதை - முடிவின் திருப்பம் சற்றே எதிர்பாராதது. முதல் பரிசுக்கு பரிந்துரைக்கிறேன். ( நான் சொன்னால் கேட்பார்களா ??)

manjoorraja said...

அன்பு சுரேஷ் மிக பிரமாதமாக சிறுகதைகள் எழுத ஆரம்பித்துவிட்டீர்கள். நண்பர் ஆசிப்பின் அறிவுரை காரணமாக தமிழிலேயே முழுக்கதையையும் எழுதியதற்கு கூடுதல் வாழ்த்துக்கள்.

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

வவ்வால் said...

பெனாத்தல்,

கதை என்ற வரையில் பரவாயில்லை. கடன் அட்டைக்கொண்டு பணம் எடுக்க லிமிட் இருக்கு 1,50,000 எல்லாம் எடுக்க முடியாது.அப்படி எடுக்க வேண்டும் எனில் அது மிக அதிகப்பட்ச கடன் எல்லை உள்ள அட்டையாக இருக்க வேண்டும் அதற்கு ஏற்ற சம்பளம் இருக்குமே.

மேலும் பணத்தை திரும்ப செலுத்த வசதி அற்றவர்கள் தான் மாட்டிக்கொள்கிறார்கள்.செலுத்தி தவறாக போய்விட்டது என்றால் தப்பித்து விடலாம். நம் கணக்கில் இருந்து , வங்கிக்கணக்கிற்கு மாறியது எப்படிப்பார்த்தாலும் நிருபிக்கலாமே. அது போதும் பணம் கட்டியாச்சு என்று சொல்லி மேல் நடவடிக்கை தவிர்க்க.

பணமே செலுத்தாதவர்கள் தான் போலீசுக்கும் போக முடியாது.மணி தைரியமாக போலீஸ் போகலாமே!

சினிமாவில் லாஜிக் இல்லாம எப்படி போகுதுனா இப்படித்தான்!

Nithi said...

அருமையான் கதை.மனம் நிறைந்த வாழ்த்துகள்

Tech Shankar said...

ஆன்லைனில் ட்ரான்ஸ்பர் செய்துவிடவேண்டியதுதானே? கண்டிப்பாக கடன் அட்டை வைத்து இருப்பவருக்குச் சிரிதேனும் கணிணி பரிச்சயம் இருக்க வாய்ப்புள்ளது.

இதற்கு ஒரு மாற்று வழி:
கடன் அட்டை வைத்து இருக்கும் கணிணிப் பயன்பாடு தெரியாதவர்களுக்கு.
கேஷ் டெப்பாசிட் செய்து விட்டுப் போகலாம். அது ஒரு நல்ல தீர்வு. கேஷ் டெப்பாசிட் செய்வது சிரிது நேரம் பிடிக்கும். ஆனால் அதற்கு ரசீது சிட்டை கொடுப்பார்கள். அது ஒரு சாட்சி.

நீதி : கடன் அட்டை வைத்து இருப்போர் தயவுசெய்து காசோலையை அதற்குரிய பெட்டியில் இட்டுச் செல்லாதீர்கள்.

Anonymous said...

தனியார் வங்கிகளை ஒழித்து விட்டு நாட்டுடைமை வங்கிகள் மட்டும் தான் பாரத தேசத்தில் செயல் பட அனுமதிக்க வேண்டும். 'கூப்பிடாதே' என்ற பதிவேட்டில் பதிவு செய்த பின்னும், கடனட்டை வேண்டுமா என்று நம் பின் அலையும் தனியார் வங்கிகளை ஒழிப்பதே சாலச்சிறந்த வழி.

இந்த பின்னூட்டத்தை போடும் போது, இரண்டு முறை ரெலையன்ஸ் கடனட்டை அழைப்பு வந்த்து.

தீபக் வாசுதேவன்

Anonymous said...

தமிழ் நெஞ்சம் கூறியது போல கேஷ் கட்டும் போதும் கவனம் தேவை. ஒருவருக்கு ஹ். டி. எப். சி. வங்கியில் 12000 செலுத்தும் போது, 1200 என்று போட்டு விட்டார்கள். இது ஒரு 'பெரிய ஏப்பமாக' தெரிவில்லையா?

தீபக் வாசுதேவன்

 

blogger templates | Make Money Online