Mar 15, 2008

கட்டாயத் தமிழ்க் கல்வி?


முனைவர் வா குழந்தைசாமி பேட்டியை முன்வைத்து இலவசக்கொத்தனார் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு என்னிடத்தில் விடை இல்லை - ஆனால் கருத்து இருக்கிறது. (அது என்னிக்குதான் இல்லாம இருந்தது?)

தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமல் பட்டம் வரை பெறும் நிலை ஒன்றும் பயப்படும் அளவுக்கு இல்லை என்கிறார் மு வா கு. அதில் நிச்சயமாக எனக்கு ஒப்புதல் இல்லை. நான் படித்த பள்ளிக்கு மிக அருகிலேயே கூட தெலுங்குமுறைக் கல்வி (தமிழ்நாடு பாடத்திட்டத்தில்) இருந்திருக்கிறது, இருக்கிறது, அத்தகைய பள்ளிகளைப் பற்றிக் கவலை இல்லை, அதன் சதவீதம் குறைவாயே இருக்கும். தவறு அவர் எடுத்துக்கொண்ட அளவுகோலில் இருக்கிறது - மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளை மட்டும் எடுத்துக்கொண்டது அவர் தவறு.

நான் படிக்கும் காலத்தில், 10ஆம் வகுப்பு வரை படித்தவர்களில் மிகப்பெரும்பான்மையானோர் மாநிலக் கல்வி இயக்ககம் மூலமாகவே படிக்க, மாற்று முறைகளில் படித்தவர் சதவீதம் மிகக்குறைவாக இருந்தது. ஆனால், இன்றோ நிலை மாறிவிட்டது. மையக்கல்வி வாரியம், மெட்ரிகுலேஷன் போன்ற பள்ளிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த நிலை மாறி, மாநிலக்கல்வி இயக்ககப் பள்ளிகளுக்குச் சமமாக, ஏன் நகரங்களைப்பொறுத்தவரை அதிகமாகவே இருக்கின்றன இந்த மாற்று முறைப் பள்ளிகள்.

பிரச்சினை தமிழை ஒரு மொழிப்பாடமாகப் படிப்பதைக் கட்டாயமாக்குவதுதானே, தமிழ்வழியிலேயே மற்ற பாடங்களைப் படிப்பதைக் கட்டாயமாக்குவது இல்லையே? மற்ற பாடங்களை எந்த மொழியில் படிக்கவேண்டும் என்பதை அரசாணை கட்டாயப்படுத்தும் என்றால் நிச்சயம் நானும் எதிர்ப்பேன்.

தமிழை ஒரு மொழியாகப் படிப்பதில், கட்டாயப்படுத்துவதில் என்ன தவறு இருக்கமுடியும் என்று எனக்குத் தெரியவில்லை. உபயோகம் சார்ந்த காரணமா?

சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றியும், அமீபாவின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும், வெட்டுக்கணங்கள் பற்றியும் ஏறத்தாழ அனைவருமே படித்திருக்கிறோம். அவற்றில் எவ்வளவு பேர் வாழ்க்கைக்கு அதை உபயோகப் படுத்துகின்றார்கள்?

நான் பள்ளியில் படித்ததில் இன்றும் எனக்குச் சோற்றுக்கு உபயோகமாக இருப்பது எஞ்சின்கள் பற்றிய இரண்டு பக்கப் பாடம் மட்டுமே. அதையும் அன்றைக்கு ரொம்ப சுவாரஸ்யமாக எல்லாம் படித்ததாக ஞாபகம் இல்லை.

இல்லை கட்டாயப்படுத்துவது தவறா?

அதுவும் எனக்குத் தவறெனப் படவில்லை. கட்டாயப்படுத்தாவிட்டால் பெரும்பாலானோர் பள்ளிக்கே போகமாட்டார்கள். அதுவும் குறிப்பாக குழந்தைத் தொழிலாளர்கள் - அந்தக் கட்டாயத்தைத் தவறு என யாரேனும் சொல்வார்களா?

அதுவும் இதுவும் ஒன்றல்ல என்று எப்படிச் சொல்ல முடியும்?

தமிழ்நாட்டில் மாற்றுக்கல்விகள் எதுவுமே இலவசம் இல்லை. அவற்றுக்குக் கொடுக்கப்படும் மாதாந்திர கல்வித் தொகை மாநிலக் கல்விக்குச் செலவிடப்படும் தொகையைவிட கணிசமாக அதிகமே. எனவே, மாற்றுமுறை உபயோகப்படுத்தும் மாணவர்கள், பொருளாதார ரீதியில் சற்றேனும் மேம்பட்டவர்களாக இருக்கவேண்டும். குறைந்த செலவான மாநிலக்கல்வியைவிட்டு மாற்றுமுறைக் கல்வியைத் தேர்ந்தெடுப்பதில், அடுத்தடுத்த பள்ளிகளில், கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற ஆலோசனை பெற்றவர்களாக இருக்கவேண்டும்..

இப்படிப்பட்டவர்கள், தாங்கள் என்னென்ன படிக்கவேண்டும் என எல்லாவற்றையும் தேர்வு செய்யும் நிலை இருக்கிறதா?

ஆங்கிலப் பாடத்தை யாராலேனும் தவிர்க்க முடிகிறதா? நான் பொறியியல் படிக்கப்போகிறேன், எனக்குப் புவியியல் தேவையில்லை எனத் தவிர்க்க முடியுமா? அங்கே புவியியல் கட்டாயப்பாடம் ஆகிவிடுகிறதே?

ஆனால், தமிழைத் தவிர்க்க முடியும் - கட்டாயமாக இல்லாமல் இருக்கும் தற்போதைய நிலையில் - அவ்வாறே பலர் செய்துவருவதையும் அறிவேன்.

கட்டாயம் இல்லை என்ற பட்சத்தில் தமிழை ஒதுக்கி, பாடங்கள் படித்து, வயதானபிறகு தமிழின் அரிச்சுவடி படித்தால் ஏறுமா?

கட்டாயம் இல்லை என்று விட்டுவிட்டால், கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும், பாரதியும் தாசனும் கவிதை படைத்ததும், சுஜாதா ராஜேஷ்குமார் கதைகள் புனைந்ததும், முன்னாலும் பின்னாலும் நவீனத்துவம் கண்ட சிற்றிதழ்கள் தழைத்ததும், அன்ன யாவும் அறிந்திலர் ஆக ஒரு குழு வளரும். ஒரு தலைமுறைக்குப் பின், தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத தமிழர்கள் என்று ஒரு குழு உருவாகிவிடும். (ஏற்கனவே உருவாகி வருகிறது)

தமிழில் மட்டுமே எல்லா அறிவிப்புகளும் செய்யப்பட்டுவரும் இடங்களில் அவர்கள் ஒதுக்கப்பட்டதாக உணர்வார்கள். ஏற்கனவே இருக்கும் குழுக்கள் போதாது என இன்னொரு குழுவும் உருவாகும். தொலைக்காட்சிகளில் தமிழாகவும் இல்லாத ஆங்கிலமாகவும் இல்லாத நிகழ்ச்சிகளின் பெருக்கம் அதிகமாகும். இரண்டு மட்டத்தையும் யாராலும் திருப்தி செய்ய முடியாத நிலை உருவாகும். தமிழ்சார் ஊடகங்களின் வளர்ச்சி கணிசமாகக் குறையும். (வலைப்பதிவுகள் உள்பட:-)) இரண்டு மட்டங்களின் இடையே சமச்சீர் கெடும் - சுருங்கச் சொன்னால் மெல்லத் தமிழினிச் சாகும்.

தமிழைக் கட்டாயப்படுத்தாததை ஒரு தலைமுறைக்குப் பின் குறையாகவும், பிழையாகவும் சொல்ல நேரிட்டாலும் நேரிடும். அதைத் தவிர்க்க இப்போதே செயல்படுவது - ஏன் சற்று முன்பாகவே செய்யப்பட்டிருக்கவேண்டும் என்பதே சரி.

என்னைப் பொறுத்தவரை தமிழ் கட்டாயமாகச் செய்யப்பட்டது, காலதாமதமாகவேனும் செய்யப்பட்ட நல்ல செயல்!

23 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

பெனாத்தல் நீங்க சொல்லி இருக்கும் விஷயங்களைப் பலரும் என் பதிவில் சொல்லி இருக்காங்க. நானும் எனக்கு ஏன் கட்டாயமாக்கல் சரி இல்லைன்னு தோணுதுன்னு சொல்லிட்டேன். ஆனா அது பத்தி எல்லாம் பேசாம மீண்டும் கட்டாயமாக்கல் சரியேன்னு கருத்து சொல்லி உள்ளேன் ஐயான்னு பதிவு போட்டு இருக்கீங்க. நானும் வந்து இந்த பின்னூட்டத்தைப் போட்டு உள்ளேன் ஐயா சொல்லிக்கிறேம்பா.

TBCD said...

சுரேஷ் ஐயா,

உங்க கருத்தை வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
///என்னைப் பொறுத்தவரை தமிழ் கட்டாயமாகச் செய்யப்பட்டது, காலதாமதமாகவேனும் செய்யப்பட்ட நல்ல செயல்!//

சரவணன் said...

உங்கள் முக்கியக் கருத்தில் உடன்படுகிறேன். ஆனால் சிந்துவெளியை இழுத்திருக்க வேண்டாமே. வேத-ஆரிய நாகரிகமே இந்தியாவின் தொடக்கம் என்றிருந்ததை மாற்றி திராவிட நாகரிமே அசலாக இந்தியாவில் இருந்தது, சிந்துசமவெளியில் பேசப்பட்டது திராவிட மொழி என்பது அனைவரும் அறிய வேண்டிய விஷயம்--மதவாத சங்க பரிவாரின் பொய்யுரைகளிலிருந்து காத்துக்கொள்ள.

அதேபோல வெட்டுக்கணம், அமீபா என்பவை எப்படி உபயோகமாகின்றன என்று விளக்க சமயம் இல்லை. [தண்ணீரை ஏன் காய்ச்சிக்குடிக்க வேண்டும் என விளக்குவது, அமீபியாசிஸ் தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்வது இதெல்லாம் உயிர்ப் பிரச்சினைங்க சுரேஷ்!]

அதுசரி, அனைத்துப்பாடங்களையும் தமிழில் கற்பதை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று விளக்க முடியுமா? தமிழர்கள் கருத்துத்தளையை உடைத்து அனைத்துத் துறைகளிலும் முன்னேற அதுவே வழி.

Anonymous said...

//பிரச்சினை தமிழை ஒரு மொழிப்பாடமாகப் படிப்பதைக் கட்டாயமாக்குவதுதானே, தமிழ்வழியிலேயே மற்ற பாடங்களைப் படிப்பதைக் கட்டாயமாக்குவது இல்லையே? மற்ற பாடங்களை எந்த மொழியில் படிக்கவேண்டும் என்பதை அரசாணை கட்டாயப்படுத்தும் என்றால் நிச்சயம் நானும் எதிர்ப்பேன். தமிழை ஒரு மொழியாகப் படிப்பதில், கட்டாயப்படுத்துவதில் என்ன தவறு இருக்கமுடியும் என்று எனக்குத் தெரியவில்லை.//

இது தான் என் கருத்து.

//ஆங்கிலப் பாடத்தை யாராலேனும் தவிர்க்க முடிகிறதா? //

நல்ல கேள்வி.

அப்படியே மற்றுமொரு கேள்வி. பக்கத்து மாநிலத்தில் கன்னடம் கட்டாயபாடமாகவும், மகாராஷ்ட்ராவில் மராத்தி கட்டாய பாடமாகவும் இருக்கிறதே. அங்கு தவிர்க்க முடியுமா ??

அரை பிளேடு said...

கட்டாய தமிழ் பாடத்தை வரவேற்கும் உங்கள் கருத்தை வரவேற்கிறோம்.

அப்பாலிக்கா மாசம் ஒண்ணு இல்லாட்டி இரண்டு பதிவு அதுவும் சீரியசா.

பெனாத்தலார்னு ஒரு தலைசிறந்த உப்புமா வித்தகர் ஒருத்தரை காணலை. உங்களுக்கு தெரிஞ்சா அவரை பதிவு போட சொல்லுங்களேன்.

குசும்பன் said...

எனக்கு தெரிந்து சென்னை நண்பர்கள் சிலருக்கு தமிழ் பேச மட்டும் தான் தெரியும் சரளமாக, அ........ ம்.......மா என்று எழுத்து கூட்டிதான் படிப்பார்கள் எழுத சொனா ஆமா என்று எழுதுவார்கள் கேட்டால் ஸ்கூலில் இருந்து தமிழே படித்தது இல்லையாம்:(

இந்த சட்டமும் கட்டாய ஹெல்மேட் சட்டம் போல் ஆகாமல் இருந்தால் நலமே!!!!

Anonymous said...

தாய்மொழி தமிழ் என்பதால் தானே கட்டாயமாக தமிழை படிக்க சொல்கிறீர்கள்?

பட்ஜெட் பத்மனாபன் படத்தில் விவேக் செய்வது போல் "நான் தமிழனே கிடையாது" என்று கெஜட்டில் அறிவித்துவிட்டு தாய்மொழியை மாற்றிக்கொள்ளும் வசதியையாவது கொடுத்து தொலையுங்களேன்யா.

seethag said...

பினாத்தலாரே..அப்பாடீ...ரொம்ப மகிழ்ச்சி..

சரி விஷயத்துக்கு வருவோம்..எனக்கு தமிழ் தாய் மொழியில்லை. ஆனால் தமிழ் தான் எனக்கு சரியாக தெரிந்த மொழி.இதனாலே மக்களுடய பண்பாடுகளையும் பழக்கவழக்கஙளையும் அறிந்துகொள்ள எனக்கு மிகவும் உதவியாக இருக்கு.

குசும்பன் எனக்கு தெரிந்து இந்த இங்லிபீஸ் தவிர இந்திய மொழி சரியா தெரியாத பிறவிகள் தமிழ்ல மட்டுமில்லை, அடுத்த மொழி மானிலங்களிலும் இருக்காங்க.என்னோட படித்த சிலருக்கு அவுங்க தாய் மொழியையும் ஆங்கிலப்படுத்தி பேசுவாங்க, தமிழையும் தமிழ் பேசுறதா நினைச்சு அவுங்களுக்கு தெரிஞ்ச ஒரு கலவைல பேசுவாங்க. எழுதறது ஆங்கிலம் மட்டுமே.

கண்டிப்பாக ஒரு இந்திய மொழியையாவது படிக்கணும்.ஆனா கர்னாடகாவுல இருக்கிற அவியல் மாதிரி ஒரு நிலைமையில குழந்தைங்க "தாரே சமீன் பர்'" மாதிரி கஷ்ட்டப்படுற நிலைமையும் எனக்கு தெரியும்.அரசியல் இல்லாம இருந்திருந்தா இதெல்லாம் நல்ல இருந்திருக்கும்

திவாண்ணா said...

//சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றியும், அமீபாவின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும், வெட்டுக்கணங்கள் பற்றியும் ஏறத்தாழ அனைவருமே படித்திருக்கிறோம். அவற்றில் எவ்வளவு பேர் வாழ்க்கைக்கு அதை உபயோகப் படுத்துகின்றார்கள்?//

இல்லைதான். ஆனால் ஓரளவு பொது அறிவு எல்லா துறைகளிலும் இருக்கத்தான் வேண்டும். இந்த "ஓரளவு" ஓவரா போயிடுச்சு. அதுதான் தப்பு. இப்ப பசங்க 8 ஆம் வகுப்பில படிக்கிற பாடங்களை பாத்தா பரிதாபமா இருக்கு.

திவாண்ணா said...

சுரேஷரே, கொஞ்சம் பான்ட் (font) அளவை அதிகமாக்கலாம் போல இருக்கே!

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்,

கட்டாயமாக்கல் சரியே என்று நான் சொல்வதற்கான காரணங்கள் சற்று வேறுபட்டவை. ஹிந்தி பள்ளியில் கற்பிக்கப்படுவது நின்று ஒன்றரை தலைமுறைகள் கழித்து, ஹிந்தி பேசுபவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இன்று உள்ள இடைவெளி, நாளை தமிழகத்திலேயே, தமிழ் பேசுபவர்களுக்கும் பேசாதவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகிறேன். அதைத்தான் நான் முக்கியமாகக் கருதுகிறேன்.

டிபிசிடி, நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

சரவணன்,

வரலாறு பற்றிய அறிவு தேவை எனச் சொல்லுகிறீர்கள். அது அவ்வளவு அவசியம் என எனக்குப் படவில்லை. ஆனால், ஆவல் இருந்தால், தேவைப்பட்டால் தேடிப் படிக்க மொழி அவசியம். அதைத்தான் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

அமீபியாசிஸ் பற்றி எல்லாம் பள்ளியில் படித்ததை வைத்துதான் ஜாக்கிரதையாக இருக்கிறோமா :-) சும்மா சொன்னேன் சார்.. விவாதத்தை இந்தத் திசையில் திருப்ப வேண்டாம் :-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ப்ரூனோ. ஆனால், தமிழகத்தில் கட்டாயத்தமிழுக்கு முன்னுதாரணமாக மற்ற மாநிலங்களைக் கொள்ள வேண்டாமே. அவர்கள் செய்யும் தவறுகளுக்கும் நாம் பொறுப்பேற்க வேண்டி வரலாமே :-)

நன்றி அரைபிளேடு. அந்தப் பினாத்தலார் நெறைய ஐடியாக்கள் பாதிபாதியாத் தொங்க, எப்ப திரும்ப வரலாம்னு யோசிச்சுகிட்டிருக்கார் :-) ரவை சேந்ததும்தான் துப்பாக்கிலே போடறதா உப்புமா கிண்டறதான்னு முடிவு செய்வாராம். (சரக்கு இல்லைன்றதைக்கூட எவ்ளோ ஸ்டைலா சொல்றேன் பாருங்க :-)

பினாத்தல் சுரேஷ் said...

ஆமாம் குசும்பன்.. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, பொதுமக்கள் விருப்பத்தோடு தொடரவேண்டும் என்பதே என் அவாவும்.

அனானி,

கெஜட்டில் மாற்றுவது என்ற அளவுக்கு சீரியஸான பிரச்சினையாக இதைக் கருதவில்லை நான். ஒரு மொழி, கட்டாயப்பாடமாகிறது, அதற்கு தினமும் மேலும் சில நிமிடங்கள் படிக்கவேண்டும் அவ்வளவுதானே.

பினாத்தல் சுரேஷ் said...

சீதா,

//அரசியல் இல்லாம இருந்திருந்தா இதெல்லாம் நல்ல இருந்திருக்கும்//

if wishes were horses...

திவா,

//இந்த "ஓரளவு" ஓவரா போயிடுச்சு. அதுதான் தப்பு. இப்ப பசங்க 8 ஆம் வகுப்பில படிக்கிற பாடங்களை பாத்தா பரிதாபமா இருக்கு.//

ஆமாம். தமிழைக்கட்டாயமாக்கும் அதே வேளையில் பாடத்திட்டத்தை இரண்டாம் மூன்றாம் மொழியாகத் தமிழ் படிப்பவர்களுக்கு இலகுவாக ஆக்கினால்தான் ஆதரவு என்பது இயல்பாக வரும். அதை நிச்சயமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

பாண்ட் சைசா.. படுத்தறேன்.

நிஜமா நல்லவன் said...

///சுருங்கச் சொன்னால் மெல்லத் தமிழினிச் சாகும்.///முன்டாசுக்கவி ஒரு தீர்க்கதரிசி. அவன் சொன்னது நடந்து விடும் போலிருக்கிறது. சட்டம் போட்டு தமிழை காப்பற்ற வேண்டிய நிலையில் இருப்பது மகா கேவலம். மொழியே ஒரு இனத்தின் அடையாளம். தமிழன் தன் அடையாளங்களை தொலைத்து வெகுகாலமாகி விட்டது.

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க நிஜமா நல்லவன்.. (அப்ப நாங்க எல்லாம்?)

நன்றி.

நிஜமா நல்லவன் said...

ஆஹா என்ன இப்படி கேட்டுட்டீங்க.
நீங்க நான் நம்ம சுற்றி இருக்கிற எல்லோருமே நல்லவங்க தான் சுரேஷ்.

குமரன் (Kumaran) said...

சிந்து சமவெளி தெரியும். அமீபா தெரியும். அதென்ன வெட்டுக்கணம்? தெரியாது. ஆங்கில வழியில் படித்ததால் தெரியவில்லை என்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் என்ன சொல்லுவார்கள்?

மத்தபடி மொத்தத்தில் இது தான் என் கருத்தும்.

//என்னைப் பொறுத்தவரை தமிழ் கட்டாயமாகச் செய்யப்பட்டது, காலதாமதமாகவேனும் செய்யப்பட்ட நல்ல செயல்!
//

அதனால் வழிமொழிகிறேன்னு போட்டுக்கிறேன்.

கொத்ஸ் பதிவை போட்டவுடனே படிச்சது. இனிமே போய் தான் பின்னூட்டமெல்லாம் படிக்கணும். ஆமா இதை ஏன் இங்க சொல்றேன்?

கோவை சிபி said...

நல்ல கருத்துகள்.ஆங்கில வழிக்கல்வியில் மத்தியவழிக்கல்வி என்பது தமிழை அழிக்கும் ஒரு விசச் செடி.இதில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழை ஒரு கேவலமான மனப்பாங்குடன் கற்பிக்கும்போது மாணவர்களின் நிலை பற்றி சொல்ல தேவையில்லை.இதன் வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் கொடுமை.

திவாண்ணா said...

சுரேஷ், எந்த ஊர்ல இருக்கீங்க? ஒன்னும் இல்ல உங்க வீட்டு முன்னால ஒரு சத்தியாகிரக போராட்டம் நடத்தலாமான்னு யோசனை. பதிவு போட்டு 15 நாள் ஆச்சு தெரியுமில்ல?

ச.சங்கர் said...

" மெல்லத் தமிழினி சாகும் " என்ற பாடல் வரி வரும் பாரதியாரின் பாடலை முழுமையாக கீழே தந்துள்ளேன்.

தமிழ்த் தாய் !


தன் மக்களைப் புதிய சாத்திரம் வேண்டுதல்
(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்)

ஆதிசிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

மூன்று குலத் தமிழ் மன்னர் என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.

கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
காற்றையும் வானவெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.

நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்பு
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.

கன்னிப் பருவத்தில் அந்நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்ன வோபெய ருண்டு - பின்னர்
யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்!

தந்தை அருள்வலி யாலும் - முன்பு
சான்ற புலவர் தவவலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்கலிண் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை,
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை உரத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திட லோமோ!
சென்றி டுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

பாடல் : மஹாகவி சுப்ரமணிய பாரதி

சுரேஷ்

ஆச்சரியமாக இருக்கிறது,
பொதுவாகவே பலர் செய்யும் தவறு இங்கு சர்வ சாதாரணமாக செய்யப்பட்டு இருப்பதும் அது கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டதும்.

மேலே பாரதியார் பாடலின் முழுமையையும் கொடுத்துள்ளேன். அவர் மெல்லத் தமிழினி சாகும் என்று யாரோ சொன்னதை எதிர்த்து கோபப் பட்டு மறுத்திருக்கிறாரே தவிர அவர் அப்படி சொல்லவில்லை. அனால் இந்த " misquote" சர்வ சாதாரணமாக இலக்கிய வட்டங்களிலும் மற்ற இடங்களிலும் உபயோகிக்கப் படுவது ஆச்சரியம் அளிக்கிறது.

இதை நிஜமா நல்லவன் என்பவர் "தவறாக" பாரதி சொன்னதாக மேற்கோள் காட்ட தெரிந்தோ தெரியாமலோ "நன்றி" என்று சொல்லி விட்டு விட்ட உங்களுக்கு இந்த வார குட்டு :)

இந்தப் பாடலை பத்து முறை எழுதிப் பழகவும் :)

அன்புடன்...ச.சங்கர்

பினாத்தல் சுரேஷ் said...

குமரன், வெட்டுக்கணம்னா Intesecting set னு நினைக்கிறேன்! செட் தியரில வரும். நான் இங்கிலீஷைக் கண்டதில்லை.

நன்றி கோவை சிபி.

திவா.. நல்ல காமெடி மேட்டரா சிக்கவே மாட்டேங்குது..

ச சங்கர்.. ஓவர்சைட்.. மன்னிக்கவும்.. சரத்குமாருக்கே தெரிஞ்சது எனக்குத் தெரியாதா :)

நோட்பேட்லே 10முறை காபிபேஸ்ட் பண்ணி உங்களுக்கு அனுப்பிடட்டுமா?

 

blogger templates | Make Money Online