May 28, 2007

கலைஞர் டிவி நேர்முகத் தேர்வுக்கான கோனார் நோட்ஸ் (28 May 2007)

கலைஞர் டிவி ஆகஸ்ட்டில் தொடங்குகிறதாம். நேர்முகத் தேர்வுகள் நடந்து வருகிறதாம். எல்லாத் தேர்வுகளுக்கும் கோனார் நோட்ஸ் இருக்கும் இக்காலத்தில், டிவியில் பணிபுரிவோருக்கு மட்டும் இல்லாதது பினாத்தலாரை உறுத்த, அவர் தயார் செய்தேவிட்டார், முதல் பகுதியை.

எப்படிப்பட்ட கேள்விகளை எதிர்பார்க்கலாம், அவற்றுக்கு எப்படிப்பட்ட பதில்கள் பொருத்தமாக அமையும் என்ற இந்த நோட்ஸைப்படித்து தேர்வைச் சந்தித்தால் வெற்றி நிச்சயம்.

கேள்விகள்:

1. இவற்றுள் எதை தலைப்புச் செய்தியாகப் போடலாம்?

1. தமிழ்நாட்டில் பெருமழை
2. தமிழ்நாட்டில் சாதிக்கலவரம்
3. தமிழ்நாட்டிற்கு புதுத்திட்டங்கள் அறிவிப்பு
4. உதகையில் மலர்க்கண்காட்சி.

பதில்:

நான்குமே தலைப்புச் செய்தியாகப்போட தகுதி வாய்ந்ததுதான்.

1. தமிழ்நாட்டில் பெருமழை, நமது கட்சி ஆளுங்கட்சியாக இருந்தால் - விவசாயிகள் மகிழ்ச்சி என்று உபசெய்தி தரலாம். எதிர்க்கட்சியாக இருந்தால், சாலைகள் பழுதானது, மக்கள் அவதி என உபசெய்தி தரலாம்.

2. தமிழ்நாட்டில் சாதிக்கலவரம் - நமது கட்சி எதிர்க்கட்சியாக இருந்தால் மட்டுமே போடலாம். ஆளுங்கட்சியாக இருந்தால், 4 - உதகையில் மலர்க்கண்காட்சி தலைப்புச் செய்தியாக போடலாம்.

3. புதுத்திட்டங்கள் அறிவிப்பு, இது நமது கட்சி தமிழகத்தில் மட்டும் ஆளுங்கட்சியா, மத்தியிலும் ஆளும் கூட்டணியா என்பதைப்பொறுத்தது. இரண்டில் ஏதாவது ஒன்றாக இருந்தாலும் போடலாம். ஆனால், எப்படிப்பட்ட புதுத்திட்டங்கள் என்பதைப் பொறுத்தும் அமையும்.

4. பதில் 2-ஐப்பார்க்கவும்.

2. இவற்றுள் எந்தத் தொடரை எப்போது ஒளிபரப்பலாம்?

1. பாசப்பிணைப்பு
2. கலையரசி
3. உடுக்கையாத்தா
4. அறிவியல் அறிவோம்

பதில்:

1. பாசப்பிணைப்பு என்ற தொடர், 7 பெண் கதாபாத்திரங்களைக்கொண்டது, அனைவருக்கும் ஒரு காதல், அது தோல்வியடைந்து வேறொருவனைக் கைபிடித்தால் அவனுடைய காதலி / தாய் இவர்களை டார்ச்சர் செய்கிறார் என்ற வித்தியாசமான கதையம்சம் கொண்டது, பிரபல நிறுவனம் தயாரித்து, மார்க்கெட் இல்லாத முன்னாள் நடிகைகளால் நடிக்கப்படுகிறது. இதன் சரியான ஒளிபரப்பு நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 1030 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை உள்ள நான் - ப்ரைம் ஸ்லாட். குடும்ப ஸ்திரீக்கள் பார்க்கும் நேரம்.

2. கலையரசி - அரசியலிலும் பிரபலமாக உள்ள கலைக்குடும்ப வாரிசு தயாரிக்கும் தொடர். திடுக்கிடும் திருப்பங்களைக்கொண்டது - எனவே, இயக்குநர் உள்பட யாருக்கும் என்ன கதை என்றே தெரியாது. பாஸ்ட் பீட்டில் டைட்டில் சாங், மாதாமாதம் மாறும் இயக்குநர்கள் கொண்டது. வேறு வழியில்லை, இதற்கு இரவு 9 மணிக்கு ப்ரைம் ஸ்லாட்தான் தந்தாகவேண்டும். குடும்ப ஸ்திரீக்கள் மட்டுமன்றி, வேலை செல்லும் ஸ்திரீக்களும் வீட்டில் வந்து செட்டிலாகிவிடும் நேரம்.

3. கொஞ்ச நாள் மார்க்கெட்டில் இருந்த பழைய நடிகை நோன்பும் விரதமும் இருந்து நடிக்கும் அம்மன் சீரியல். பல வித்தியாசமான குணம் உள்ள அம்மன்களையும் (கோடு போட்டால் தாண்டமாட்டார், பச்சைப்புடவை கட்டினால் அருள்பாலிக்க மாட்டார், ஒரு ஊரைத்தவிர மற்றொரு ஊரைப்பார்க்கமாட்டார்), அதைவிட வித்தியாசமான குணங்களைக் கொண்ட கதாநாயகிகளையும் (அம்மன் பக்தி இருந்தாலும் அடிக்கடி கோவித்துக்கொள்வார்), உலகையே ஆள எண்ணும் வில்லன்களையும் கொண்ட பக்தித் தொடர்(?!). இதற்குச் சரியான நேரம் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம். இளவட்டங்கள் சினிமா பார்க்கப்போய்விட்டதால் பெரிசுகள் மட்டுமே வீட்டில் இருக்கும் நேரம்.

4. இப்படி ஒரு தொடரை ஒளிபரப்பவேண்டிய அவசியம் என்ன? சரி, தலைமை உறுதியாக சொல்லும் பட்சத்தில், பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை இரவு 1 மணியிலிருந்து 1.10 வரை ஒளிபரப்பலாம்.

3. புதுப்பொலிவுடன் என்றால் அர்த்தம் என்ன?

பதில்:

பல அர்த்தங்கள் உண்டு. டி ஆர் பியில் விழுந்துவிட்ட சீரியலை ஸ்பான்சரோ, டைரக்டரோ நடிகர்களையோ மாற்றி, இப்பவாவது பாருங்களேன் எனச் சொல்லவைக்கும் முயற்சி.

4. ஒரு ஹிட்டான தமிழ் சினிமாவை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்?

பதில்:

என்னென்னவோ செய்யலாம். கொத்துக்கறி போட்டு, இப்படி பல நிகழ்ச்சிகள் நடத்தலாம்:

1.பாடல் காட்சிகளை வைத்து - புதுப்பாடல், மனதில் நின்ற ராகம், ---இசையமைப்பாளரின் ராகங்கள், __ பாடகரின் and / or பாடகியின் பாடல்கள், ___நடன இயக்குநரின் கைவண்ணங்கள், நீங்கள் கேட்ட பாடல், போன்மூலம் கேட்ட பாடல், லெட்டர் எழுதிக்கேட்ட பாடல் என்று ஒரு 100 ஆப்ஷன் இருக்கிறது.

2.நகைச்சுவைக்காட்சிகளை வைத்து - காமடி ப்ரோக்ராம், நகைச்சுவைக்காட்சி, என்றும் சிரிப்பு, மறுபடியும் சிரிப்பு, சிரிப்போ சிரிப்பு என ஒரு 100 ஆப்ஷன்.

3. சண்டைக்காட்சிகளை வைத்து சூப்பர் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள், ______ சண்டைக்காட்சி நிபுணரின் பேட்டி என பல ஆப்ஷன்கள்

4. செண்டிமெண்ட் காட்சிகளை வைத்து சூப்பர் காட்சிகள், படப்பார்வை, திரைக்கண்ணோட்டம் என பல ஆப்ஷன்கள்.

5. எல்லாக்காட்சிகளையும் வைத்து டாப் டென் பாடல், டாப் டென் படங்கள், டாப் டென் சண்டை, டாப் டென் காமெடி, டாம் டென் செண்டிமெண்ட் என விளம்பரம்.

6. ஆடி அடங்கியபின், தொலைக்காட்சியிலேயே முதல் முறையாய் என இதுவரை காட்டி இராத 2ஏ சீன்களையும் சேர்த்து முழுப்படம்.

7. விடுமுறை இல்லாத வார இறுதிகளில் மீண்டும் இதே படத்தை மீண்டும் மீண்டும் காட்டலாம்.

இவ்வாறாக, இரண்டரை மணிநேரப்படத்தை வைத்து, 2500 மணிநேரம் ஏர்டைம் செலவழிக்க முடியும்.

5. மக்கள் பேச்சு அரங்கம் நடத்த வேண்டியவரின் தகுதிகள் யாவை?

பதில்:

1. பேசினால் சிரிப்பு வருமோ இல்லையோ, பார்த்தாலே சிரிப்பு வரவேண்டிய ஆளாக இருத்தல் அவசியம்.

2. சோகமான நிகழ்வுகளைப்பார்த்தால் மூன்று மில்லிசெகண்டுகளுக்குள் கண்ணிலிருந்து நீர் வரவேண்டும்.

3. உண்டி குலுக்கிய அனுபவம் இன்றியமையாதது.

4. சார் சார் என்று கூப்பிடுவோரை ஊக்குவித்தல், பழைய சினிமாப்பாட்டுக்களை பாடுவோரை ஊக்குவித்தல், விவாகரத்து ஜீவனாம்சம் பற்றிப்பேசும் நான்கு வயதுக்குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்தல், அரைலாஜிக் அழகேசன்களுக்கு தனியிடம் கொடுத்தல் ஆகியவற்றைத் திறம்படச் செய்தல் அவசியம்.

5. உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், இயற்கைச்சூழல்களால் பாதிக்கப்பட்டோர், இவற்றில் யாருக்கு முன்னுரிமை கொடுத்து அழுவது என்பதில் தெளிவு வேண்டும்.

-----------------------------------------------------------------------------

இப்போதைக்கு இவ்வளவுதான். அடுத்த பகுதி எழுதும் அளவுக்கு விஷயம் சேர்ந்தால் வரும்.

40 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

இணையக் கோனார் பட்டம் ஏற்கனவே குடுக்கப் பட்டு விட்டதால் உமக்கு 'டிவி'ரவாதி என்ற பட்டத்தை அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

அபி அப்பா said...

ஒரு டி.வி சேனல் நடத்தும் முழு திறமை உங்களுக்கு இருக்கு பெனாத்தலாரே:-)))

அபி அப்பா said...

புரியுது! இராஜ கண்ணப்பன் திமுக வில் சேர்ந்ததால "கோனார்" நோட்ஸ் போட்டீங்க, இல்லாட்டினா "வெற்றி" நோட்ஸ் தான போட்டிருப்பீங்க! உங்க உள்குத்து புரியுது:-)))

பொன்ஸ்~~Poorna said...

:)))) வழக்கம் போல... :))

அறிவாலயத்துல உங்களைத் தேடிட்டிருக்காங்க.. எப்ப வரீங்க ? ;)

Anonymous said...

//சார் சார் என்று கூப்பிடுவோரை ஊக்குவித்தல், பழைய சினிமாப்பாட்டுக்களை பாடுவோரை ஊக்குவித்தல், விவாகரத்து ஜீவனாம்சம் பற்றிப்பேசும் நான்கு வயதுக்குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்தல், அரைலாஜிக் அழகேசன்களுக்கு தனியிடம் கொடுத்தல் ஆகியவற்றைத் திறம்படச் செய்தல் அவசியம். ///

இது எக்ஸலண்ட் அப்ஸர்வேஷன்...:))))))))))))))))))))))))))))

வெட்டிப்பயல் said...

கலக்கல் பினாத்தலாரே!!!

பார்ட் 2 ஆவலாக எதிர்பார்க்கிறேன் :-)

மஞ்சூர் ராசா said...

மலர்கண்காட்சி வருடம் பூராவும் நடக்காது
ஆகஸ்டில் கண்டிப்பாக நடக்காது
அதனால் அந்த கேள்வி தப்பு
கலையரசி - ராதிகான்னு சொல்லாமெ சொல்லுது

பாசப்பிணைப்பு - மீனா
ஹிட்டான தமிழ் படத்திற்கான செய்தி தான் அருமை

ஆனா முக்கியமான ஒண்ணெ விட்டுட்டீங்க

தமிங்கலத்தில் பேசத்தெரிந்தவர்களுக்கு தான் முன்னுரிமை
எ.கா: வெல்கம் டு தி புரோக்ராம் ஆன் டமில் முண்ணேட்றம்!
அடுத்த பகுதியில் சேர்த்துக்குங்க
அதிலும் கழுத்தை ஒரு சைஸாக வளைத்தும், உடம்பை நெளித்தும் சேட்டை செய்பவர்களுக்கு இன்னும் முன்னுரிமை கொடுக்கலாம்.

மேலும் கண்றாவி உடையும், தலை முடியும் உடையவர்களுக்கு விசேஷ சலுகை கொடுக்கலாம்

அடுத்து கலைஞர் குடும்ப புகழ் பாடுபவர்களுக்கு அதிக வாய்ப்புகளும் பட்டங்களும் கொடுக்கலாம்
இன்றைய வானிலை சொல்பவர்கள் சென்னையை செனை என்று சொல்லவேண்டும் என்பது மிக மிக முக்கியம்.

rv said...

பெனாத்தலார்,
மொத்தத்துல தமிழ் டிவியெல்லாத்தையும் அளவுக்கு அதிகமா பார்க்குறீங்கன்னு புரியுது...

பதிவு சூப்பர்... அக்மார்க் பெனாத்தல்ஸ்!

கதிர் said...

பயங்கர உன்னிப்பா சன் டீவிய பாத்துருக்கிங்கன்னு தெரியுது.
ஆனா கலைஞர் டீ.வி அப்படி இருக்காதுன்னு பேசிக்கறாங்களே
(எங்கன்னுலாம் கேக்ககூடாது)

ஹார்லிக்ஸ் வழங்கும் ஹவாலா குடும்பம்.
போர்ன்விட்டா வழங்கும் போண்டா கலாட்டா

இன்னொரு பார்ட் இதே மாதிரி எழுதுங்க.

பதிவெல்லாம் படிச்சிட்டுதாங்க இருக்கோம் அதுல எந்த சந்தேகமும் வேணாம்.

Anonymous said...

இந்த பதிவில் சாதி பெயர் இருப்பதாலும், எமது பின்னால் 20 - 30 பேர் இருப்பதாலும் உம்மை திட்டி பின்னூட்டம் போடலாம் என்று உள்ளோம். உமது வசதி எப்படி :))))

Geetha Sambasivam said...

பெனாத்தல், இப்படி அணுஅணுவாத் தொல்லைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசிச்சுட்டு இப்போ இப்படி ஒரு விமரிசனமா? :P

பினாத்தல் சுரேஷ் said...

நட்சத்திரக் கொத்தனாரே,

அருமையான பட்டம். நன்றி. இனி நீங்கள் மாஞ்சாப்பேரரசு (பட்டம் வழங்குவதால்) என அழைக்கப்படுவீர்கள்.

அபி அப்பா, டிவி சேனலா? பினாத்தலே எப்பவாச்சும் ஒண்ணுதான் ஹிட் ஆவுது :(

ஆமாம், அதென்ன ஜாதீயத்தை பூசும் முயற்சி? என் ரசிகர்கள் (அப்படி யாராச்சும் இருந்தால்) இதுக்கெல்லாம் திசை மாற மாட்டார்கள் :)

பினாத்தல் சுரேஷ் said...

பொன்ஸ், அறிவாலயத்துலேயா? தேடினவங்க கையில பொருள் இருந்துதா? நல்லா பாத்தீங்களா?

நன்றி செந்தழல். அது மட்டும்தானா?

நன்றி வெட்டிப்பயல். அடுத்தது இன்னும் ஒரு ரெண்டு மூணு நாள்லே முடிவெடுத்துடுவேன் :-)

பினாத்தல் சுரேஷ் said...

மஞ்சூர்க்காரரே,

ஊட்டியில மலர்க்கண்காட்சி எப்பவும் நடக்காட்டி என்ன? |திருப்பத்தூரில் மூன்று குழந்தைகள் பெற்ற அதிசயப்பெண்மணி, லண்டன் ஜூவில் குட்டி போட்ட கங்காரு, ப்ராங்பர்ட் விமானநிலையத்தில் கணினிமயமாக்கப்பட்ட செக் இன் கவுண்டர்... விஷயமா இல்லை?

நன்றி ராம்ஸு.

தம்பி .. என்ன குண்டைத் தூக்கிப் போடறே? கலைஞர் டிவி அப்படி இருக்காதா? அப்ப என் நோட்ஸ் வேஸ்ட்டா?

பினாத்தல் சுரேஷ் said...

அனானி,

என்னைத் திட்டறதுக்குப்போயி ஜாதி சங்கம், என் பின்னால ஆளுன்னெல்லாம் சொல்றீங்க பாருங்க.. ஹய்யோ ஹய்யோ!

கீதா,

ரசிச்சிட்டு? :-(

தருமி said...

இதனால தெரிவது என்னவென்றால் - பதிவு போட்டவரும் சரி, அதுக்குப் பின்னூட்டம் போடுற நாங்களும் சரி எல்லோருமா நல்லாவே டி.வி. நிகழ்ச்சிகளை ஒழுங்கா பாத்துக்கிட்டு இருக்கிறோம்னு தெரியுது.

சரி, நேரமாச்சு. மீனாட்சி.. ச்சீ.. இல்ல .. லஷ்மியில ஜீவாவுக்கு என்ன ஆச்சுன்னு பார்க்கணும் .. வர்ரேன் .. :)

பினாத்தல் சுரேஷ் said...

தருமி..

ஜீவா மேட்டரை விடுங்க.. வீட்டிலே ஒரு சின்ன சந்தேகம்... மேகலான்னு ஒரு சீரியல் அட்வர்டைஸ்மெண்டு போடறாங்களே, அது காலைல வருமா, சாயங்காலம் வருமான்னு! நான் காலை சீரியல்னு சொல்லியிருக்கேன்.. பாப்போம் :-))

குட்டிபிசாசு said...

சுரேஷ் அண்ணே,

நல்ல டிப்ஸ்கள்!! நீங்க இதுல முனைவர் பட்டம் வாங்க வாய்ப்பு இருக்கு! இதுபோல செத்தபாம்ப அடிக்கிற உப்புமா டிவிகளுக்கு ஆலோசகராக போகலாம்!!

வாழ்த்துக்கள்!!

குட்டிபிசாசு said...

கலைஞருக்கு வேண்டியவங்க சுரேஷ் அண்ணன ரெகமண்ட் பண்ணலாம்!!

சோமி said...

அருமை அருமை தமிழகத்தில் ஒரு தொலைக்காட்சி தொடங்க இனி உங்களை விட்டால் ஆளில்ல்லைபோலிருக்கு.ஆர்காட்டாருக்கு தகவல் கடத்திருக்கும் தலைவா...விரைவில் அழைப்பு வரலாம்.

நமீதாவை வைத்து குழந்தைகள் நிகழ்ச்சி செவதைப் பற்றி சொல்ல மறந்துட்டிங்களே தலைவா

Unknown said...

அண்ணே அண்ணே துபாய்க்கு ஆட்டோ ரூட் கேட்டுகிட்டு இங்கே ஒருத்தர் வந்தார்.. வழி சொல்லவா?

Anonymous said...

//4. இப்படி ஒரு தொடரை ஒளிபரப்பவேண்டிய அவசியம் என்ன?//

இதுதான் கலக்கல். எப்படி இதெல்லாம்??!!!

பினாத்தல் சுரேஷ் said...

குட்டி பிசாசு,

முனைவரா? சரிதான் :-)

நன்றி.

சோமி,

குழந்தைகள் நிகழ்ச்சிக்கு நமீதா சரிப்படமாட்டார் :-( அதற்கு ரிட்டயர்டு நடிகை யாரையாச்சும் பிடிக்கணும். நமீதா உங்கள் சாய்ஸுக்குதான் சரி.

தேவ் தம்பி.. ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க எல்லாரும். நான் என்னப்பா பண்ணேன்.. ஒரு பதிவுதானே போட்டேன்! அதுக்கு இப்படி ஒரு தண்டனையா.. என்ன கொடுமை சார் இது?

நன்றி செந்தில். அதை நான் கோனார் நோட்ஸிலேயே சேத்துருக்கக்கூடாது.. அவ்வளோ அவுட் ஆப் சிலபஸ் :-)

வெங்கட்ராமன் said...

/////////////////////////////
இவ்வாறாக, இரண்டரை மணிநேரப்படத்தை வைத்து, 2500 மணிநேரம் ஏர்டைம் செலவழிக்க முடியும்.
/////////////////////////////

Sun TV Secret, ungalukku eppadi therinjathu . . .

News Item super. . . :-)))(((

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி வெங்கட்ராமன்.

கப்பி | Kappi said...

சூப்பர்!! :)))

Anonymous said...

//சார் சார் என்று கூப்பிடுவோரை ஊக்குவித்தல், பழைய சினிமாப்பாட்டுக்களை பாடுவோரை ஊக்குவித்தல், விவாகரத்து ஜீவனாம்சம் பற்றிப்பேசும் நான்கு வயதுக்குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்தல், அரைலாஜிக் அழகேசன்களுக்கு தனியிடம் கொடுத்தல் ஆகியவற்றைத் திறம்படச் செய்தல் அவசியம். ///

எட்டு கட்டையில் வீச் வீச்சென்று கத்தும் பெண்மணிகள்?

Anonymous said...

டிவி நிகழ்ச்சிகளில் முழுநிர்வான உடை அணியும்பொழுது காஸ்ட்யூம் யார்போடுவது என்பதை எப்படி தீர்மானிப்பீர்கள்???

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கப்பி பய.

நன்றி அனானி.

//எட்டு கட்டையில் வீச் வீச்சென்று கத்தும் பெண்மணிகள்?
//

ஆஹா, அவங்களை விட்டுட்டேன். சரி அதான் நீங்க சொல்லிட்டீங்களே.

அனானி 2,

//முழுநிர்வான உடை அணியும்பொழுது காஸ்ட்யூம் யார்போடுவது என்பதை எப்படி தீர்மானிப்பீர்கள்???
//

ரொம்பக்குழப்புதே உங்க பின்னூட்டம். அதென்ன முழுநிர்வாணம், காஸ்ட்யூம்? விளக்குக.

ramachandranusha(உஷா) said...

இவ்வளவு திறமையானவர்கள் வலையுலகில் வலம் வர, அதெல்லாம் சம்மந்தப்பட்டவர்கள் கன்ணில் விழாமல் போவது
வருத்தத்திற்குரிய விஷயம் :-))))))))))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி யெக்கோவ்!

Visu Pakkam said...

innum oru vivarathai vittu vitteergaLe: seidhi padippavar alladhu arivippaLar eppodhum, sambandham irundhaalum illaavittaalum thalayai aattikkondE irukka vEndum.

Anonymous said...

செம ரகளை மச்சி!

இளங்கோவன்.

ILA (a) இளா said...

//அறிவாலயத்துல உங்களைத் தேடிட்டிருக்காங்க.. எப்ப வரீங்க ? //
அப்படியே பொட்டிய மூடி வெச்சுட்டு ஜன்னல் வழியா எட்டிப்பாருங்க, ஆட்டோ காத்திட்டு இருக்குமே. மக்கள்ல ஒருத்தர், கையில முட்டை வெச்சு கிட்டு இருப்பாரே, இன்னொருத்தர் ஹாக்கி ஸ்டிக் வெச்சிருப்பாரே...
( சே இந்த சினிமா பண்ற பாட்டை பாருங்க)

தகடூர் கோபி(Gopi) said...

:-))))

கலக்கல். (வழக்கம் போல)

//பதிவெல்லாம் படிச்சிட்டுதாங்க இருக்கோம் அதுல எந்த சந்தேகமும் வேணாம்.//

ரிபீட்ட்ட்ட்டே!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நான் கேள்விகளை படிச்சிட்டேன்..நேர்முகத்தேர்வுக்கு போகலாமா? :)

சரண் said...

அரட்டை அரங்கத்துக்கு நம்ம டி.ஆர் வந்த பிறகு அபரிமிதமான சரிவாமே? அதிருக்கட்டும் இதுபோன்ற மக்கள் நிகழ்ச்சிகளில் சிறுவர்கள் பேசுவது அதிகப் பிரசங்கித்தனமாக இல்லை??

பினாத்தல் சுரேஷ் said...

விசு பக்கம் -- சரிதான் நீங்க சொல்றது. ஒவ்வொரு ப்ரேக்கப்பவும் பேசிகிட்டு இருப்பாங்களாம், காமெரா பேன் ஆனதும் வேலை ஞாபகம் வந்து பேச ஆரம்பிப்பாங்களாம் - என்னா கூதல் :-)

நன்றி இளங்கோவன்.

விவ்ஸ், உங்ககிட்டே என் போன் நம்பர் கொடுத்திருந்தேன் இல்லை? அது மாறிடுச்சி.. அழிச்சுடுங்க (யாரையும் நம்ப முடியறதில்லை)!! ஒரு மார்க்கமாத்தான் அலையறாங்கப்பா!

கோபி.. இதுக்குத்தான் அன்னிக்கே எங்க தலைவர் படம் எடுத்துட்டார் - படித்தால் மட்டும் போதுமா? பின்னூட்டம் போட வேண்டாமா?

நிலவு நண்பன் - கேள்வியப்படிச்சா மட்டும் போதாது. பதில்களையும் கவனமாப்படிங்க :-)

தெக்கத்திப்பையன் - சிறுவர்கள் மட்டுமல்ல - எல்லாருமே மைக்கைப்பார்த்தால் கொஞ்சம் கேனத்தனமாகத்தான் பேசறாங்க :-))

enRenRum-anbudan.BALA said...

அன்பின் பெனாத்தலார்,
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் !

இதுக்கெல்லாம், ஆபிஸ்லே, கான்பரன்ஸ் அல்லது டிரெயினிங்க் ரூம்ல உட்கார்ந்து யோசிப்பீங்களா ?
(OR)
எல்லாரும் சொல்ற மாதிரி, ஓட்டல்-ல ரூம் போட்டு யோசிப்பீங்களா ?

பாராட்டுக்கள், வாழ்க, வளர்க :)

Anonymous said...

http://ullal.blogspot.com/2007/06/blog-post_04.html
இன்னுமொரு கோனார் நோட்ஸ் - அக்கா ஆதிரை வாழ்க ;)))

 

blogger templates | Make Money Online