மூன்று வருஷக் காத்திருப்புக்கு ஒரு முடிவைக் கொண்டு வந்தது ரயில். இறங்கியதும் ரகுவின் கலைந்த தலையும் மூன்று நாள் தாடியும் சிந்துவுக்கு போதை ஏற்றியது.. அவளுக்கே அவள் மீது கோபம் வந்தது. அப்படியென்ன அலைச்சல் என் உடம்பே?
சாதாரணமாக, "வா சிந்து.. எப்படி இருக்கே?" என்று கேட்டவன் மீது கோபம் வந்தது. கூட்டத்தின் நடுவில் கட்டியணைப்பான் என்று இடம்பொருள் தெரியாமல் எதிர்பார்த்தது தப்புதான். இருந்தாலும் இவன் என்ன மறந்துவிட்டானா? முகத்தில் எந்த ஆர்வமும் காட்டாமல் "இதான் நாராயண், என் பிரண்டு"
கூட்டத்தை விட்டு எப்போது வீட்டுக்குப் போய்ச் சேர்வோம்.. அவள் அவசரம் புரியாமல் ஊர்ந்துகொண்டிருந்தனர்.
பெரிய ட்ரங்க் பெட்டியை டிக்கட் பரிசோதகர் திறந்துவைத்த சின்னப் பாதையில் நுழைக்கச் சிரமப்பட்டான் ரகு. மிலிட்டரி என்றதும் வெறுப்பு கலந்த அலட்சியத்துடன் பரிசோதகர் வெளியே விட, "டாக்ஸியிலே போயிடலாமா?" என்றாள் சிந்து.
"ஜி எச் பக்கமா போயிட்டா ஆட்டோக்காரன் சீப்பா வருவான்"
"இந்தப் பொட்டியத் தூக்கிட்டு சப்வேயில இறங்கி ஏறறதுக்குள்ளே"
"பழக்கமாயிட்டுது. வெயிட்டைத் தூக்கிக்கிட்டு ஓடறதுதானே தினசரி பயிற்சியே!"
"லேட் ஆயிடுமே" இதைவிடத் தெளிவாகத் தன் நிலைமையைச் சொல்ல முடியுமா? இவனுக்கு ஏன் புரியவில்லை?
ஆட்டோக்காரன் பெட்டியை ஏற்ற மறுத்து, பஸ் பிடித்து ஏறுமுன் சிந்துவின் செல் அடித்தது.
"ஆமாம்.. இங்கேதான், பக்கத்துலதான் இருக்கார்"
"நாராயண்.. இந்த நம்பர் அவருக்கு எப்படித் தெரியும்? இப்பதானே பாத்தோம்.. அதுக்குள்ள என்ன?"
"நான் தான் கொடுத்தேன்.. சொல்லு நரேன்"
"சரி.."
"சரி.."
"ஓக்கே.. அப்ப நாளைக்கு சாயங்காலம்?!"
"ம்"
"யெப்பா.. அதெல்லாம் இப்ப ஏன்? சொல்றன் இல்ல? எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளோ சீக்கிரம்"
போனை வைத்த ரகுவை ஆச்சரியமாகப் பார்த்தாள் சிந்து.
"நாளைக்குச் சாயங்காலமே ப்ரோகிராமா? எங்க?"
"மீட்டிங், ராத்திரி தண்ணி பார்ட்டின்னு ப்ரோக்ராம் போடறான்.. அவனுக்கு இந்த ஊர்லே யாரும் இல்லை."
"வீட்டுக்கே கூட்டிவந்திருக்கலாமே?"
"வீட்டுல உன்னைத் தனியாப்பாக்கணுமே" அப்பாடா! அவனுக்கும் உணர்ச்சி இருக்கிறது!
"சீ.. அதைத் தவிர வேற நினைப்பே கிடையாதா?" சிந்துவுக்கும் அதைத் தவிர வேறு நினைப்பு இல்லைதான்..
தெருமுனையில் தெரிந்தவர் "வாப்பா ரகு.. எந்த ஊர்லே போஸ்டிங் இப்ப? அங்கேயெல்லாம் வெறும் ரொட்டிதானா? பகல்பூர்னா ராஜஸ்தான் பக்கம்தானே?"
"இந்தக் கேள்விகளுக்கு ஸ்டாண்டர்டா பதில் தயார் செஞ்சு வச்சுக்கங்க! தேவைப்படும்.. உங்க அவசரம் தெரியாம போரடிக்கிறாங்க பாருங்க!" காதோரத்தில் கிசுகிசுத்தாள்.
வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தும் காபி டிபன் என்ற கடமைகள் எல்லாம் முடிய நேரம் ஆனது.. பிறகும்..
"என்னங்க ஆச்சு?"
"தெரியலைடி.. இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலை"
"சரி விடுங்க.. அப்புறம் பாத்துக்கலாம்.. பயணக்களைப்போ என்னவோ" அவள் கண்களிலும் ஏமாற்றம்.
இரவுக்குள் ஏமாற்றம் தொடர்கதை ஆனதை சிந்துவால் தாங்க முடியவில்லை.
"எனக்கு இப்ப தெரிஞ்சாகணும்.. முழுசா மூணு வருஷம் கழிச்சுப் பொண்டாட்டியைப் பாக்க்றீங்க.. இப்பவும் முடியலன்னா எப்படி?"
".."
"உங்களுக்கு என்னவோ நடந்திருக்கு.. அதை உண்மையாச் சொல்லுங்க"
".."
"நான் உங்க தாலி கட்டின பொண்டாட்டி.. என்கிட்ட என்ன பயம்.. சொல்லுங்க"
"நாராயண்" ஒற்றை வார்த்தையில் பதில் சொன்ன ரகுவால் சிந்துவின் கண்களைப் பார்க்க முடியவில்லை.
"செண்ட்ரல்ல காட்டினீங்களே அந்த ஆளா? அவருக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?"
"கல்யாணம் ஆன ஒரு மாசத்துல பாரக்குக்கு போயிட்டேன். அதுக்கு அப்புறம் அவன் தான் இதுக்கு"
"சீச்சீ என்ன சொல்றீங்க!"
"கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு இந்தப் பழக்கம் இருந்தது.. சீரியஸ்னு நினைக்கலை.. ஆனா கல்யாணத்துக்கு அப்புறமும் இது தொடரவேதான் தப்புப் பண்ணிட்டேன்னு புரிஞ்சுது"
"விளையாடாதீங்க! கல்யாணம் முடிஞ்ச முதல் மாசத்துல நீங்க இப்படி இல்லையே?"
"அதான் எனக்கும் தெரியல. அப்ப வேற மாதிரி எக்ஸைட்மெண்ட்!"
"ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களே!"
"வேணும்னு ஏமாத்தலை.. எங்க அப்பா வற்புறுத்திதான்.."
சிந்துவுக்கு ஏமாற்றமும் இந்தப்புதுக்கதையும் தாங்காமல் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
காலையில் குளித்துவிட்டு ஷேவ் செய்துகொண்டிருந்தான் ரகு.
"எங்க கிளம்பிட்டீங்க?"
"டாக்டரைப் பாக்க.. இதுக்கு எதாச்சும் செய்ய முடியுமான்னு.."
"இது பொறவியிலேயே வர்றது.. இதுக்கு டாக்டர் ஒண்ணும் செய்ய முடியாதுன்னு படிச்சிருக்கேன்"
"அப்ப என்ன பண்ணலாம்ன்றே?"
எதிர்காலம் இருண்டுதான் தெரிகிறது. ராத்திரி பூரா விட்டத்தைப் பார்த்து அழுததில் கண்கள் கனத்தது. ஆயாசத்தில் எடுத்த வாந்தியில் உடல் பலவீனமாய்த் தெரிந்தது. இருந்தாலும் முடிவெடுக்க வேண்டும்.
"போங்க! அந்தச் சக்களத்தி நாராயண் கிட்ட!" அடங்கியிருந்த கண்களிலிருந்து புதிதாய்க் கரித்த உப்பு.
*************************
வ வா ச போட்டிக்கு எழுதப்பட்ட கதை. நகைச்சுவைதான் வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லவில்லையே?
13 பின்னூட்டங்கள்:
என்னையும் சோதனை செய்ய வச்சுட்டீங்களே சாமிகளா!
தல,
எஸ்.ரா மாலிக் கப்பூர் கதை போட்டாலும் போட்டாரு ஆளாளுக்கு புகுந்து ஆட ஆரம்பிச்சிட்டீங்களா..
Gayவலமா இல்ல! :)
அய்யா! நீங்க லிங்க் கொடுத்துதான் எஸ் ராவையே படிச்சேன்.. காபி கீபின்னெல்லாம் கிளப்பி விடாதீங்கய்யா..பாவம் அய்யா நான் :-)
தப்பில்ல.
இதுக்கெல்லாம் டாக்டர பாக்க தேவையில்லை. செல்வன் http://holyox.blogspot.com/ ல ரொம்ப நாள் முன்னாடி ஒரு பதிவு போட்டிருந்தார்.
பெண்களை பார்த்தால் ஆண்களுக்கு ஈர்ப்பு வருவது போல சில ஆண்களுக்கு ஆணகள் மீதுதான் ஈர்ப்பு வருமாம். இயற்கையின் கோளாறு இதெல்லாம்.
சுரேஷ், இந்த வார விகடனில், இப்பிடி ஒரு செய்தி வந்திருக்கு. எப்பவும் போல அதுக்கு சாதி, அரசியல் சாயம் போட்டு மனித மனத்தின் நுண் உணர்வுகளைப்பற்றிய ப்ரக்ஞயே இல்லாமல் எழுதப்பட்டிருக்கு.
உங்களுடய் முயற்சி விழிப்புணர்வை ஏற்ப்படுத்த உபயோகமக இருக்கும்..என் கருத்து...
சுரேஷ், இந்த வார விகடனில், இப்பிடி ஒரு செய்தி வந்திருக்கு. எப்பவும் போல அதுக்கு சாதி, அரசியல் சாயம் போட்டு மனித மனத்தின் நுண் உணர்வுகளைப்பற்றிய ப்ரக்ஞயே இல்லாமல் எழுதப்பட்டிருக்கு.
உங்களுடய் முயற்சி விழிப்புணர்வை ஏற்ப்படுத்த உபயோகமக இருக்கும்..என் கருத்து...
ம்ம்ம்ம்.......கதை சுருக்கமா தெளிவா இருக்கு.
அது என்ன எஸ்.ரா மாலிக் கபூர் கதை??
இதுவும் நடப்பததுதானே/.
என்ன திருமணம் செய்யாமல் இருந்திருக்கலாம்.
அதென்ன எஸ்ரா லின்க்??:)
தல, கடைசிவரைக்கும் 'வேறு' ஏதோ திருப்பம் திட்டமிட்டு வச்சிருக்கீங்கன்னு தோணிகிட்டே இருந்தது. ஹ்ம்ம்...
Page 3 திரைப்படம் பார்த்தீர்களா?
தல
கதை கடைசிவரைக்கும் விறுவிறுப்பாக இருக்கு.!!
வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)
மங்களூர் சிவா,
//இயற்கையின் கோளாறு இதெல்லாம்.// வாஸ்தவம். ஆனால் அடுத்தவர் வாழ்க்கையோடு விளையாடுவது?
சீதா, நன்றி.
//மனித மனத்தின் நுண் உணர்வுகளைப்பற்றிய ப்ரக்ஞயே இல்லாமல் எழுதப்பட்டிருக்கு//
அவங்க டெம்ப்ளேட் அவங்களுக்கு :-)
நன்றி ராதா ஸ்ரீராம்.
எஸ் ரா லின்க்: http://sramakrishnan.com/view.asp?id=100&PS=1
வாங்க வல்லி சிம்ஹன்,
//என்ன திருமணம் செய்யாமல் இருந்திருக்கலாம்.// அதையேதான் நானும் சொல்லவரேன்.
ஸ்ரீதர்,
எதிர்பாராததை எதிர்பார்த்தே பழக்கப்பட்டுப் போயிட்டீங்க ;-) பேஜ்3 வச்சிருக்கேன், பாக்க டைம் வாய்க்கலை இன்னும்.
கோபிநாத், நன்றி.
ஜாலியாக ஆரம்பித்த கதை பாதிக்கு மேல் ஏமாற்றத்தையே எனக்கு தந்தது. உங்களோட ரெகுலர் ஸ்டேண்டர்டில் இது இல்லை!!! :-(
Post a Comment