Sep 19, 2007

கலைஞர் டிவி-பொன்னியின் செல்வன் - EXCLUSIVE PREVIEW - இயக்குநர் பேட்டி

இயக்குநர் நாகாவுடன் சில சந்தர்ப்பங்களில் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டிருந்திருக்கிறேன், சிதம்பர ரகசியத்துக்கு எழுதிய விமர்சனத்தைத் தொடர்ந்து. கலைஞர் தொ.காவிற்காக பொன்னியின் செல்வன் படமாக்கப்படுகிறது என்று வந்த செய்தியைக்கண்டதும் மீண்டும் அவருடன் தொடர்பு கொண்டேன், உண்மையா எனக்கேட்டு. அவர் ஒப்புக்கொண்டதும், படப்பிடிப்பைக்காண வரலாமா எனக்கேட்டிருந்தேன்.

காரைக்குடியை அடுத்துள்ள பள்ளத்தூரில் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்ற தகவலுடன் அவர் வரவேற்றார். இரவு எட்டு மணிக்கு படப்பிடிப்பு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருக்க ஏழு மணிக்கு தம்பதி சமேதராக படப்பிடிப்பு நடைபெறும் வீட்டிற்கு சென்று காத்திருந்தோம்.

எப்படி, எப்போது வந்தார் என்று தெரியாமல், "பினாத்தல் சுரேஷ்?" என்று கேட்டுக்கொண்டு நீட்டிய கைகளோடு அறிமுகமானார் இயக்குநர் நாகா. விமர்சனங்களை வெளிப்படையாக வரவேற்று, திட்டங்களைப் பகிர்ந்துகொண்டு, டென்ஷன் என்பதே தெரியாமல் மிக இயல்பாகப் பலகால நண்பர்கள் போல பழகினார். அவருடன் பேட்டி வடிவில் பேசவில்லை எனினும், கேட்ட கேள்விகளையும் பதில்களையும் பேட்டி போலத் தொகுத்திருக்கிறேன்.

கே: தமிழ் நாவல்களில் Magnum Opus பொன்னியின் செல்வன். இதைத் தொடராக ஆக்குவதின் சிரமங்கள் என்ன?

ப: ஒன்றல்ல, நூற்றுக்கு மேல். முதலில், மிகவும் பெரிய அளவில் படிக்கப்பட்ட, படிக்கப்பட்டுவரும் நாவல் பொ செ. படிக்கும் ஒவ்வொருவனுக்குள்ளும் ஒரு வந்தியத்தேவன் இருக்கிறான், குந்தவை நந்தினி என்ற கற்பனைகள் இருக்கின்றன. அந்தக் கற்பனைகளுக்கு ஈடு செய்ய முடியாவிடில் அவனைத் தொடரைப் பார்க்கவைப்பது சிரமம்.

கே: அப்படிப்பார்த்தால் நூற்றுக்கணக்கான வந்தியத்தேவன்களை உலவவிடவேண்டுமே?

ப: அதனால்தான் அந்த முயற்சியைச் செய்யவில்லை. என் மனதுக்குள் இருந்த பாத்திரங்களையும் ஒதுக்கிவிட்டு, தொடர்கதையாக வந்தபோது மணியம் வரைந்த ஓவியங்களை மட்டுமே மையமாக வைத்து பாத்திரத் தேர்வில் ஈடுபட்டேன். அந்த ஓவியங்கள் போல ஒப்பனை செய்யப்பட்டபின், ஒத்துப்போன நடிகர்களே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இதைத் தொடர்ந்து, தன்னுடைய மடிக்கணினியில் தேர்வு செய்யப்பட்ட கதாபாத்திரங்களையும், மணியம்மின் ஓவியங்களையும் ஒப்பிட்டுக் காட்டினார். எனக்கு தேர்வு சரியானதாகவே பட்டது.

கே: படமும் பாத்திரத் தேர்வும் பெருமளவில் ஒத்துப்போகின்றன. இவற்றை விளம்பரத்தின் போது மார்பிங் செய்து போடலாமே..

ப: அப்படித்தான் திட்டம். மணியம்மின் படங்களை வண்ணத்தில் மணியம் செல்வன் மெருகேற்றித் தரப்போகிறார். (இப்போது அவர் பார்த்த பார்வையில்.. உனக்கே இது தோணுதே, எனக்குத் தோணாமலா போகும்:-))

கே: இருபரிமாணப்படங்களில் அவர்களின் நிறம், குணாதிசயங்கள் வெளிப்படாதே?

ப: கதையை முழுக்க உள்வாங்கி நிறத்தை முடிவு செய்திருக்கிறோம். சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அடர்ந்த நிறத்தோடும் (Dark Complexion) பாண்டிய சேர நாட்டைச் சேர்ந்தவர்களை வெளிர் நிறத்தோடும் தேர்வு செய்திருக்கிறோம். குணாதிசயங்கள் அவரவர் பாத்திரப்படைப்பிலேயே வந்துவிடும் அல்லவா?

கே: என்ன தமிழ் பேசுவார்கள் பொ செ வின் பாத்திரங்கள் - நாக்குடைக்கும் செந்தமிழா அல்லது மணிப்பிரவாளமா?

ப: கதையில் வரும் வசனங்கள் அனைத்தும் கல்கி எழுதிய அதே வசனங்கள்தான். அவற்றை செயற்கை கலக்காமல் இயல்பாகப் பேசவிட்டிருக்கிறோம். அவர் தமிழ் நாக்குடைக்கும் தமிழ் அல்ல, இயல்புக்கு பங்கம் வராது..

கே: ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் வசனம் இல்லையே..

ப: ஆம். வர்ணனையாகச் சொல்லப்படும் காட்சிகள், பாத்திரங்கள் தங்களுக்குள்ளே எண்ணும் எண்ணங்கள் ஆகியவற்றை அதே கல்கியின் நடையோடு சொல்லவைக்கப்போகிறோம்.

கே: நிறைய க்ராபிக் செய்ய்வேண்டியிருக்குமே..

ப: ஆமாம். இந்த செட்டிலேயே பார்த்தீர்கள் என்றால், ஒரு பக்கம் முழுக்க நீலப்படுதாவைத் தொங்க விட்டிருக்கிறோம். ப்ளூ மேட்டில் அந்த நீல நிறத்தை இயற்கைக் காட்சியாகவும் நந்தவனமாகவும் மாற்றிவிடுவோம்.

கே: பிற்பகுதியில் வர இருக்கும் கடல் காட்சிகள், சுனாமி?

ப: இரண்டொரு ஆண்டுகளுக்கு முன் அவற்றை நினைத்து பயந்துகொண்டுதான் இருந்தோம். பலர் இதே கதையை தொடராக்க நினைத்தும் தொடராமல் விட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஆனால் க்ராபிக் நுட்பங்களில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் அவற்றை சாத்தியமாக்கி இருக்கின்றன. குறிப்பாக, லார்ட் ஆப் த ரிங்ஸ் இரண்டாம் பாகத்துக்குப் பிறகு எதுவும் சாத்தியம் என்ற நிலை வந்திருக்கிறது. நன்றாகச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கே: விமர்சனங்கள் மிக அதிகமாக வரக்கூடும் அல்லவா?

ப: மற்ற தொடர்களுக்கு இல்லாத பெரிய சவால் இத்தொடருக்கு உண்டு. மற்றவற்றில் தொடர் நன்றாக இருக்கிறதா இல்லையா என்ற கேள்விதான் எழும். இதிலோ கதையுடன் ஒப்பிட்டுப்பார்த்து சரியாக வந்திருக்கிறதா என ஒரு பார்வையாளர் வட்டமும் (கதை படித்தவர்கள்), சுவாரஸ்யமாக இருக்கிறதா இல்லையா என இன்னொரு வட்டமும் (தொடர் பார்வையாளர்கள்) கழுகுக்கண்ணோடு இருப்பார்கள் என்பது ஒரு மிகப்பெரிய சவால்.

மேலும், என் கதையாக இருந்தால் இருக்கக்கூடிய சுதந்திரமும் இதில் இல்லை. ஒரு ஷாட் கூட மாற்றி எடுக்க முடியாது.

கே: எப்போது வரப்போகிறது? தினத்தொடரா, வாரம் ஒருமுறையா?

ப: இன்றைய தமிழ்த் தொலைக்காட்சிச்சூழலில் தினங்கள் தங்கள் முகத்தை இழந்துவிட்டன. முன்பு புதன்கிழமை ருத்ரவீணை, வியாழன் உங்கள் சாய்ஸ் என்று நினைவு வைத்திருந்த ரசிகர்கள், இப்போது 7 மணி தொடர் இது, 8 மணித் தொடர் இது என்றே நினைவு வைத்துக்கொள்கிறார்கள். இச்சூழல் மாறலாம். ஆனால் இப்போது இதுதான் நிலை.

மேலும், 300க்கு மேல் பாகங்கள் இருப்பதால் தினத்தொடர்தான் ஒரே தீர்வு.

கே: அப்போது தினமும் ஒரு எபிசோட் தயாராக வேண்டும் அல்லவா?

ப: அதில்தான் பிரச்சினை இருக்கிறது. படப்பிடிப்பு ஒரு நாளில் ஒரு எபிசோட் எடுக்க முடிந்தாலும், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் - எடிட்டிங், க்ராபிக், டப்பிங் - 3 முதல் 4 நாட்கள் எடுக்கின்றது. குழுக்களை அதிகப்படுத்தவேண்டும்.. 80 எபிசோட் தயாரானதும் தொடர் வரத் தொடங்கும்.


இதற்கிடையில் கொஞ்சம் கொஞ்சமாக, 21ஆம் நூற்றாண்டு காரைக்குடி வீடு, 10ஆம் நூற்றாண்டு கடம்பூர் சம்புவரையர் அரண்மனையாக உருவெடுக்கத் தொடங்கியது. மழவரையரும் இதர சிற்றரசர்களும் ஒப்பனை செய்துகொண்டிருக்க பெரிய பழுவேட்டரையருக்குக் கூந்தல் அலங்காரம் தொடங்கியது. விளக்குகள் பொருத்தப்பட்டு பல்லக்கு அலங்கரிக்கப்பட்டது. காமராவுக்கு ட்ராலி பொருத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டது.

இயக்குநரும் இந்த வேலைகளுக்குள் இழுக்கப்பட்டார்.

1 மணிநேர ஒப்பனைக்குப் பிறகு பெரிய பழுவேட்டரையர் வந்தார்.

கடம்பூர் சம்புவரையர் மாளிகை மந்திராலோசனை தொடங்கியது.

மழவரையர் "இந்த நிலை மிகவும் மோசமாக அல்லவா இருக்கிறது? மன்னரிடம் நீங்கள் கேட்டுப்பார்க்கலாமே" என்றார் பழுவேட்டரையரிடம்.

"கேட்காமல் என்ன? பலமுறை கேட்டாகிவிட்டது" என்று 2 பக்க வசனத்தை பழுவேட்டரையர் பேச..

"சரி சார், நாங்க கிளம்பறோம், மணி இரவு 12:30 ஆகிவிட்டது"

"நன்றி சுரேஷ். கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு. எம் ஜி ஆர் முதல் மணிரத்னம் வரை பல பேர் தொட்டுப் பார்த்த ப்ராஜக்ட்"

"எனக்குப் பார்த்த வரை நம்பிக்கை இருக்கு சார், ஆல் த பெஸ்ட்"

38 பின்னூட்டங்கள்:

Mohandoss said...

பொன்னியின் செல்வன் படிக்காத நபர்களுக்கு வேண்டுமானால் இந்தத் தொடர் பிடித்திருக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை இதை க்ராபிக்ஸில் எடுக்கலாம். ஏனென்றால் தனிநபர் வாழ்க்கையுடன் நாம் கதாப்பாத்திரங்களை கற்பனை செய்வது அதிகம். குறைந்த பட்சம் நான்.

இதில் குந்தவையாக நடிக்கும் பெண் குத்துப் பாட்டுக்கு மஸ்தானா மஸ்தானாவில் டான்ஸ் ஆடினால் எனக்கு கொமட்டிக்கொண்டு வர வாய்ப்பிருக்கிறது ;-) ஆனால் இது என்னுடைய பிரச்சனையாக மட்டுமே கூட இருக்கலாம் தான்.

அதே போல் வந்தியத்தேவனாக நடிப்பவர் இன்னொரு சீரியலில் வில்லன் கேரக்டர் செய்பவராயிருந்தாலும் அதே குமட்டல் வரலாம்.

Sridhar V said...

நாகா அருமையான இயக்குனர். எனக்கும் நம்பிக்கை இருக்கிறது.

அவருடைய 'மர்ம தேசம்' மற்றும் 'ரமணி Vs ரமணி' போன்ற தொடர்கள் ஒரு ட்ரெண்ட் செட்டர்கள் என்று சொல்லலாம்.

அத்துனை பொருட்செலவில் எடுக்கபட்ட ஹாரி போர்ட்டர் படங்களையே 'கதையில் படிச்சது போல் இல்லையே' என்று குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். living room critics-ஐ எல்லாவிதத்திலும் திருப்தி படுத்திவிட முடியாது.

கூடுதுறை said...

உண்மையிலேயே இதுஒர் அற்புத முயற்சி

பாராட்டுவோம்

கூடுதுறை said...

உண்மையிலேயே இதுஒர் அற்புத முயற்சி

பாராட்டுவோம்

Bee'morgan said...

ம்.. நல்ல தகவல்.. ஆவலுடன் காத்திருக்கிறேன். எழுத்தாளர் சுஜாதாவும் கூட, தான் பொன்னியின் செல்வனிற்கு திரைக்கதை தயாரிக்கும் பணியில் இருப்பதாக முன்பொரு முறை பேட்டியில் தெரிவித்திருந்தார்.. பின் எக்காரணத்தினாலோ, அதுவும் கிடப்பிற்கு போனது.. நண்பர் sridar venkat ற்கு ஒரு தகவல்.. எக்கச் சக்க எதிர்பார்ப்புகளோடு ஹாரிபாட்டர் பார்க்கச் சென்ற எனக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.. ஆனால், Lord of the rings ஒரு perfect masterpiece. சில இடங்களில் புத்தகத்தில் கற்பனை செய்யமுடியாத காட்சிகளைக்கூட மிக அருமையாகத் திரையில் காட்டியிருந்தனர்.. நாகாவும் இதனையே எ.கா யிருப்பது மகிழ்ச்சி.. பொன்னியின் செல்வனை Animation திரைப்படமாக எடுக்கவும் ஒரு முயற்சி இடையில் நடந்து முடிவுக்கு வந்தது.. எல்லாம் போகட்டும். நாகாவுக்காக காத்திருக்கலாம்.. வாழ்த்துக்கள் நாகா.. பதிவுக்கு நன்றி நண்பரே.. :-)

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க மோகன் தாஸ்..

நீங்க சொல்றது சரிதான், நானும் உங்க கட்சியிலேதான் இருந்தேன் - பொ-செ-வையெல்லாம்-படம்பிடிக்க-முடியாது - கட்சி!

ஆனா, இந்த முயற்சியைப்பத்தி நாகா சொன்ன ஒரு வார்த்தைய விட்டுட்டேன்.. அவரோட தயாரிப்பாளர் பத்தி - சிக்கனம் பாக்காத, இந்தக்கதைக்கு ஜஸ்டிஸ் செய்யக்கூடிய அளவுக்கு செலவு செஞ்சுக்கங்கன்னு சொல்றாராம்..

பாப்போம், நாம ஒண்ணும் ஓப்பனா முழு ஆதரவு கொடுத்துடலையே :)

//இதில் குந்தவையாக நடிக்கும் பெண் குத்துப் பாட்டுக்கு மஸ்தானா மஸ்தானாவில் டான்ஸ் ஆடினால் எனக்கு கொமட்டிக்கொண்டு வர வாய்ப்பிருக்கிறது// இது டூ மச்சுன்னுதான் நான் சொல்வேன் ;-) அப்ப ப்ரிட்ஜிலேருந்துதான் நடிக நடிகைகளை எடுக்கணும், ஷெட்யூல் முடிஞ்சதும் மறுபடியு ப்ரிட்ஜ்லே வச்சு லாக் பண்ணனும் ;)

அனுசுயா said...

பொன்னியின் செல்வன் படித்துவிட்டு கதாபாத்திரங்களை கற்பனையில் உருவகப்படுத்திருயிருக்கிறோம். அதனால் இயக்குநருக்கு கஷ்டம்தான். ஆனால் படிக்காமல் இருக்கும் பல மக்களுக்கும் இந்த கதை சென்றடைவதில் சந்தோசம்தான்.

பினாத்தல் சுரேஷ் said...

ஸ்ரீதர்,

//'கதையில் படிச்சது போல் இல்லையே' என்று குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.//

தனிநபர் தாக்குதல் போல இருக்கிறது ;))

Jokes apart, ஒத்துக்கொள்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி scssundar.

நன்றி Bee'Morgan. இப்போதைக்கு வரவேற்கலாம், அப்புறம் வந்தபிறகு விமர்சிச்சுக்கலாம் :)

உண்மையிலேயே, நாகாவிடம் என்னைக்கவர்ந்த விஷயம், நாம் சொல்லும் அத்தனைப் பிரச்சினைகளையும், அதன் வீச்சையும் தெரிந்துவைத்திருப்பது. மோகன் தாஸ் குறிப்பிட்ட "குந்தவை மஸ்தானா"வையும் ஏறத்தாழ தொட்டுச் சென்றார் - இப்படி: "சிலருக்கு குந்தவை வந்தியத்தேவன் போன்ற பிம்பங்கள் ஹோலி! அந்த பிம்பத்தில் யார் வருவது என்பது குறித்த ஆசாரமான கருத்துக்கள் இருக்கும்!"

எதிர்பார்க்கலாம், தப்பில்லை!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அனுசுயா.

வெட்டிப்பயல் said...

நல்ல முயற்சி... வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஆனா ரொம்ப கவனமா எடுக்கனும். நிறைய பேருக்கு நாயகன் வந்தியத்தேவன் தான். அதை கெடுத்துடக்கூடாது.

ஜீவி said...

சினிமாவா ஒரே உட்காரலில் பார்க்க
வேண்டிய ஒன்றை, தொலைக்காட்சித்
தொடராகக் கற்பனை செய்ய முடியவிலலை.
சினிமாவின் அந்த பிர்மாண்டமும், ரிச்னஸூம் நிச்சயம் நாம் இழக்க வேண்டிய ஒன்றாக இருக்கப் போகிறது.
தொலைக்காட்சித் தொடருக்குப் பிறகு யாரேனும் சினிமாவாக எடுத்தாலும் எடுபடாது.
இந்த நேரத்தில் சரித்திரப்படம் ஓடாது என்று நினைக்கிறார்களோ என்னவோ.
நமது சினிமாக்கலைஞர்களில், ஒரு டிரெண்ட்டை செட்பண்ணத் தெரிந்தவர்கள் சிலரே. அந்த சிலரில்,
யாரேனும் ஒருவர், 'பென்ஹர்'
'டென்கமாண்ட்மெண்ட்ஸ்' ஆங்கில பட ரேஞ்ச்சுக்கு எடுத்தால் நிச்சயம் வெற்றி அடையும். மாக்ஸ் தியேட்டர்
எபக்ட் என்றால் கேட்கவே வேண்டாம். சேலம் மார்டன் தியேட்டர்ஸ் எல்லிஸ்.ஆர்.டங்கன் மாதிரி டைரக்டர் இப்பொழுது இருந்தால் நிச்சயம் செய்வார்கள்.
---இந்த எதிர்பார்புகளெல்லாம்,
கதையை வெறும் கதையாக அல்லாமல், உலவும் பாத்திரங்களாக
நேசித்துப்படித்தவர்களின் எதிர்பார்ப்பே தவிர, துணிந்து ஒரு பெரும் முயற்சியில் இறங்கியிருக்கும், திரு.
நாகாவின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவது ஆகாது.
அவர் முயற்சி வெல்லட்டும்!
வாழ்த்துக்கள்..

தருமி said...

நாகாவின் இதுவரை வந்த படைப்புகள் அவரின் தனித்துவத்தைக் காட்டியுள்ளன. நல்ல களம் இப்போது. எதிர்பார்க்கிறேன். அவருக்கு வாழ்த்துக்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி வெட்டிப்பயல்.

ஜீவி, இது குறித்தும் பேச்சு வந்தது. 3 மணிநேரத்திரைப்படத்தில் இதை அடைக்க வேண்டும் என்றால் திரைக்கதையில் பல Compromiseகள் செய்யவேண்டிவரும். அப்போதும் க்ரிட்டிக்ஸிடம் இருந்து தப்ப முடியாது.. தொடரில் நீளம் ஒரு பிரச்சினையில்லை என்பதாலே இந்த வடிவம் ஏற்புடையதாயிருக்கும் என்பது இயக்குநர் கருத்து.

என் கருத்து என்னவென்றால், தொடர்கள் என்ற வடிவமே, கதைசொல்லல் என்பதைத்தவிர்த்து, கேரக்டர்களை உலவவிட்டு அவர்களின் உலகில் பார்வையாளனை சஞ்சாரிக்கவிடும் முயற்சிதான். எனவே, பொ செ தொடருக்குச் சரியாக வர வாய்ப்புகள் அதிகம்.

தருமி, உங்களைப்பற்றியும் பேச்சு வந்தது ;) ஜோசியத்தைப்பற்றியே எடுக்கிறேன் என்று குறைபட்டுக்கொண்டாரே அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டார்.

G.Ragavan said...

பொன்னியின் செல்வன்....சற்றுச் சிரமமான தயாரிப்புதான். ஆனால் நாகா வெல்வார் என்றே நம்புகிறேன். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

கோபிநாத் said...

நாகாவின் முயற்சிக்கள் வெற்றி எனது பெற வாழ்த்துக்கள்.. :)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ராகவன், கோபிநாத்.

வடுவூர் குமார் said...

ப்ளூ மேட்டில் அந்த நீல நிறத்தை இயற்கைக் காட்சியாகவும் நந்தவனமாகவும் மாற்றிவிடுவோம்.
இந்த நுட்பம் வீடியோ எடிட்டிங் செய்ய தெரிந்தவர்களுக்கு பல விதங்களில் கை கொடுக்கும்.

Sridhar V said...

ஒரு சின்ன விளக்கம்...

இந்த பதிவை படிக்கும்பொழுது சுரேஷ் மற்ற பின்னூட்டங்களை வெளியிடவில்லை. அதனால் எனது பின்னூட்டம் பதிவை பற்றி மட்டுமே.

சுரேஷின் பழைய பதிவுகளையும் படிக்கவில்லை.

எனக்கு தெரிந்த சில நாவல்கள் திரைப்படமாக வந்த பொழுது அவை முழுவதுமாக ஏற்று கொள்ளப்படவில்லை. ஹாலிவுட்டிலாவது நிலைமை வேறு. அங்கே நிறைய படங்களுக்கு அடிப்படையாக நாவல்கள் இருக்கும். ஆனாலும் rotten tomatoes போன்ற பதிவுகளில் கிழி கிழி என்று கிழித்து விடுவார்கள்.

தமிழில் கேட்கவே வேண்டாம். ப்ரியா, காயத்ரி போன்ற complete failures-ம் பார்த்திருக்கோம். கரையெல்லாம் செண்பகப்பூ, மோகமுள் போன்ற அரைவேக்காட்டு முயற்சிகளையும் பார்த்திருக்கோம்.

அந்த வரிசையில் நாகாவின் 'ரகசியமான ரகசியம்' (மர்மதேசம் முதல் கதை) மிக அருமையானதொரு முயற்சி.

இந்திரா சௌந்திரராஜன் எழுதிய கதையை இன்னொரு படி உயர்த்தி எடுத்திருப்பார்.

அவருடைய 'ரமணி Vs ரமணி' தமிழ் தொலைகாட்சியில் laughter serials-கு ஒரு முன்னோடி என்று சொல்லலாம். ஹிந்தியில் வெள்ளிகிழமைகளில் வரும் 'யே ஜோ ஹை ஜிந்தகி' போன்ற சீரியல்களை காத்திருந்து பார்த்து பரவசப்படுவோம். தமிழிலும் எஸ்வி சேகர் / கிரேசி மோகன் போன்றவர்கள் முயற்சி செய்தாலும் கொஞ்சம் மொக்கை ஓவராகத்தான் இருந்தது :-).

ஆனால் பிறகு அவர் ஒரே மாதிரியாக மந்திர தந்திர தொடர்களையே எடுத்து கொண்டிருந்த பொழுது கொஞ்சம் நம்பிக்கை குறைந்தது உண்மைதான்.

விஜய் டிவியின் 'நீயா நானா' நிகழ்ச்சியில் கூட பில்லி சூனியத்தை பற்றி அவர் பேச வந்த பொழுது இவர் ஏன் இப்படி ஒரு வளையத்திற்குள் மாட்டி கொண்டிருக்கிறார் என்ற கேள்வி வந்தது.

பொன்னியின் செல்வன் நிச்சயமாக ஒரு சவாலான முயற்சிதான். நாகா மீண்டும் நிரூபிப்பார் என்று நம்புவோமாக. :-)

Vanchinathan said...

நம்மைப் பெரிதாகக் கவர்ந்த கதைகள், அதுவும் ஐம்பது வருஷங்களுக்கு மேலாக நின்ற கதை நமக்குப் பலவேறாக மனதில் பாத்திரங்களைப் பற்றிய கற்பனையைத் தந்திருக்கும்.
அது உடைபடாமல் எடுப்பது சாத்தியமில்லை.
ஷெர்லக் ஹோம்ஸ் கதையை ரசித்துப் படித்தாலும் ஏனோ தொ.கா.வில் அவ்வளவு எடுபடாததாகத் தோன்றியது.
கதையெழுதும் போது நூறு யானைகள் அணிவகுத்து நின்றன என்று ஒரு நிமிடத்திலெழுதி விடலாம்.
படமாக்குபவர்க்கு எத்தனையோ சிக்கல்கள் செலவுகள் என்பதால் நாம் கதாபாத்திரப் படைப்பில் எவ்வளவு தூரம் மெனக்கடுகிறார் என்பதையே கருத்தில் கொள்ள வேண்டும்.

இயக்குநர் திறமையானவராக இருந்து விடலாம்.
ஆனால் எனக்குள்ள பயமெல்லாம் நடிகர்கள்/நடிகைகளின் உழைப்பைப் பற்றிதான்.
நிச்சயம் கதையை முழுதும் படித்திருப்பார்களா? அப்படிப் படித்த வாசகர்களின் கற்பனையை அறிய முயன்றிருப்பார்களா என்பதுதான் கேள்விக்குறி. அப்படி நினைத்து உழைத்திருந்தார்களானால் இதற்கு முன் அவர்கள் நடித்த சொத்தைப் பாத்திரங்களையும் பார்ப்பவர்கள் மன்னித்து விடுவார்கள்

நாகை சிவா said...

ஆல் தி பெஸ்ட் நாகா...

அவரின் வைத்து நம்பிக்கையை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது

தருமி said...

//ஜோசியத்தைப்பற்றியே எடுக்கிறேன் என்று குறைபட்டுக்கொண்டாரே அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டார்.//

அடப் பாவமே! இப்படி ஒரு பெயரா?
:(((

வந்தியத்தேவன் said...

நாகா நிச்சயம் வெற்றி பெறுவார். மிகவும் ஆவலுடன் இந்த தொடரை எதிர்பார்த்திருக்கின்றேன். எனக்கு யார் யார் எந்த பாத்திரத்தில் நடிக்கப்போகின்றார்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளது. குறிப்பாக வந்தியத்தேவன் குந்தவை பழுவேட்டரையர் நந்தினி பாத்திரங்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

வடுவூர் குமார்..

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் இந்த ப்ளூ மேட் பற்றி. விட்டலாச்சார்யா காலத்திலிருந்தே இருக்குதாமே..

இப்ப டிவி நிகழ்ச்சிகள்லே -- முக்கியமா உங்கள் சாய்ஸ் காமடி டைம் போன்ற நிகழ்ச்சிகள்லே பின்பக்கம் மாறிகிட்டே இருந்தாலும், ப்ளூமேட்தான் என்பது ப்ளூ கலரில் எதையாவது காட்டும்போது ட்ரேன்ஸ்பரண்டாகத் தெரிந்து, காட்டிக்கொடுக்கும்.

பினாத்தல் சுரேஷ் said...

ஸ்ரீதர்,

என்ன டென்சன்? தனிநபர் தாக்குதல்னு என்னைத் தாக்கறதாத்தான் சொன்னேன் :-)

மத்தபடி, உங்க அப்சர்வேஷன்ஸ் உடன் ஒத்துப்போகிறேன். நான் மேலே கொடுத்த லின்க்கில் பெரும்பாலும் இதே டோனில்தான் எழுதியிருப்பேன்.


வாஞ்சிநாதன்,

ஒரு டெண்டர் நெர்வைத் தொட்டுவிட்டீர்கள் :) நடிகர்களின் இன்வால்வ்மெண்டும் டெடிகேஷனும் ரொம்பவே தேவைப்படும் சப்ஜெக்ட் இது!


நன்றி நாகை சிவா..

தருமி :)

நன்றி வந்தியத்தேவன்.. எனக்குத் தெரியுமே.. ஆனா சொல்லமாட்டேனே :)

ramachandranusha(உஷா) said...

நல்லவேளையாய் எங்கூட்டுல கலைஞர் டீவி வருவதில்லை. பினாத்தலாரே! தனிமடலில்லாவது நடிக நடிகை யாரூன்னு
சொல்லுங்க.

தாசு! ரீ எண்டீரி கொடுத்தாச்சா :-)

வல்லிசிம்ஹன் said...

எல்லோரையும் சமாதானப் படுத்தும் அளவுக்கு எடுப்பது கடினம்தான்.

இருந்தாலும் நாகா என்பதால்
சரியாக வரும் என்றே நம்பலாம்.
நல்ல தகவல்களுக்கு நன்றி சுரேஷ்.

பினாத்தல் சுரேஷ் said...

யெக்கோவ்..

எங்க கௌஉரலேயும் (முன்னாள் உங்க ஊர்லேயும்) வர்றதில்லை!

தனிமடல் எல்லாம் எதிக்ஸ் கிடையாது :)

வல்லி சிம்ஹன்,

நன்றிக்கு நன்றி.

Yogi said...

கண்டிப்பாக நல்லா வரும் என்றே தோன்றுகிறது.

இயக்குனருக்கு வாழ்த்துக்கள் !!

Ramesh said...

முடியாது முடியாது என்று பினாத்திக் கொண்டிருப்பதை விட முயன்று பார்ப்பது நன்று. நாகா ஒரு சிறந்த இயக்குனர். அவரால் பெரும்பான்மையினோருக்கு திருப்தி தரும் வகையில் எடுக்க முடிந்தால் மகிழ்ச்சி.

அமெரிக்க தொலைக்காட்சித் தொடர்களைப் போல ஒரு சில நாட்கள் "பைலட்" போலச் செய்து காட்டி நேயர்களின் கருத்துக்களைக் கேட்ட பின் மீண்டும் தொடர்வது உத்தமம்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பொன்வண்டு.

ரமேஷ், நீங்கள் சொல்வது போல விஜய் டிவியில் எதோ வருகிறது போல் கேள்விப்பட்டேனே.. (ஆமாம், பினாத்திக்கொண்டு என்பது என் மீதான விமர்சனமில்லையே :-))

இவன்....இளையவன் said...

இதுல நீங்க சொன்ன எல்லா பிரச்சனையும் சரி
அதயெல்லாம் விட பெரிய பிரச்சனை ஒன்னு இருக்கு
நம்ம ஆளுங்க பதிமூனு வாரத்தொடர் எடுக்கும் போதே முக்கியமான நடிகை கூட பஞ்சாயத்து பன்னிட்டு ஆள மாத்திடுவாங்க. பொ.செ. எத்தனை எபிசோட் வருமோ தெரியல, ஏகப்பட்ட ஏகபட்ட characters வேற,
"இதுவரை குந்தவை பாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு பதிலாக இனி இவர் நடிப்பார்" னு இரண்டு போட்டோவை பக்கத்துல பக்கத்துல போடாம இருந்தா அதுவே போதும்.
ஏற்கனவே நம்ம நினைச்ச மாதிரி சில characters வரலைனு பல பேர் கான்டுல இருப்பாங்க, இது வேற நடந்துச்சுனா நம்மாளுங்க டென்ஷன் ஆகிடுவாங்க..........

Unknown said...

r they really doing this??? :'( mummy... am very afraid that they shud not kill any characters!!!

நான் மிகவும் விரும்பி படித்த ஒரெ நாவல்... அதை பாழாக்குவதை பார்க்க் எனக்கு மனம் வராது...

வந்தியத்தேவன் கதாபாத்திரத்தையும் அந்த இயற்கையும் படிக்கையில் மனதிற்குள் வந்த கற்பனை அனைத்தும் பாழாகிவிடக்கூடாது... எத்ற்கு இந்த வீண் விபரீதம்?? :(

Sridhar Harisekaran said...

அருமை.. எனது நீண்ட நாள் கனவு.. கல்கியின் நாவல் ஒன்றை திரை வடிவாக பார்க்க மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன்..

ஸ்ரீதர்..

வந்தியத்தேவன் said...

எப்போ இந்தத் தொடர் ஆரம்பமாகின்றது என்ற தகவலை மட்டும் எங்களுக்குச் சொல்லுங்கள் நண்பரே மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.

பினாத்தல் சுரேஷ் said...

கணேஷ் பாபு, நீங்க சொல்லும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பிரார்த்திப்போம்!

அனானிமஸ் (இப்படியே ப்ரொபைல் வச்சுருக்கீங்களா, நல்லா இருங்க) விபரீதம்னு இப்பவே ஏன் சொல்லணும்? பாத்துட்டு சொல்லலாம் :-)

வாங்க ஸ்ரீதர்.. பாப்போம்..


ரகசியமெல்லாம் ஒன்றுமில்லை வந்தியத்தேவன், எனக்கும் தெரியாது :-)

இயக்குநர் நாகாவை ஊர் வந்தபோது சந்தித்தேன், பேசினேன், அவ்வளவுதான்.. எனக்கும் மேல் விவரங்கள் எதுவும் தெரியாது.

சீனு said...

ஏங்க. யார் யார் எந்தெந்த பாத்திரங்களுக்குன்னு கொஞ்சம் சொல்லக் கூடாதா? கதை படித்தது போலவெல்லாம் படம் எடுக்க முடியாது என்பது என் கருத்து. வரட்டும். கண்டிப்பாக நன்றாக இருக்கும்.

//முன்பு புதன்கிழமை ருத்ரவீணை, வியாழன் உங்கள் சாய்ஸ் என்று நினைவு வைத்திருந்த ரசிகர்கள், இப்போது 7 மணி தொடர் இது, 8 மணித் தொடர் இது என்றே நினைவு வைத்துக்கொள்கிறார்கள். இச்சூழல் மாறலாம். ஆனால் இப்போது இதுதான் நிலை.//

அடடா! மறுஒளிபரப்பு உண்டா? காரணம், என்னை போன்ற அலுவல் செல்பவர்கள் பார்க்க வேண்டுமே!!!

//சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அடர்ந்த நிறத்தோடும் (Dark Complexion) பாண்டிய சேர நாட்டைச் சேர்ந்தவர்களை வெளிர் நிறத்தோடும் தேர்வு செய்திருக்கிறோம். குணாதிசயங்கள் அவரவர் பாத்திரப்படைப்பிலேயே வந்துவிடும் அல்லவா?//

Excellent. எங்கே நடிக / நடிகர்களை வழக்கம் போல வெள்ளை நிறத்தில் தேர்ந்தெடுப்பார்களோ என்று நினைத்தேன். சபாஷ்.

Anonymous said...

Dear People, I am from Sri Lanka, and I have been watching the series "Rudra Veenai" by Radaan Films continuously. it shows wonderful blend of Hinduism and Islam. I shall be much obliged if any of you could tell from where I could purchase the DVDs or even Cds of this excellent Rudra Veenai covering all the episodes.
My email address is:
nazim123@websrilanka.com
I earnestly solicit your very kind cooperation and assistance.

 

blogger templates | Make Money Online