Oct 26, 2006

அப்ஸல், தூக்குதண்டனை, கருணை மனு (26 Oct 06)

ஏமாற்றும் பதிவு அல்ல

பொதுப்புத்தி, தேசபக்தி, திம்மித்துவம், தீவிரவாத ஆதரவு, மத நல்லிணக்க ஆதரவு/ எதிர்ப்பு, மனிதாபிமானம், உடோப்பியவாதம் - அப்சலின் தூக்கு பற்றி எழுதப்பட்ட ஆயிரமாயிரம் பதிவுகளில் எழுதியவருக்கும் பின்னூட்டியவருக்கும் மேற்கூறியவற்றில் ஏதோ ஒரு பட்டம் கிடைத்தது.

யார் என்ன எழுதியிருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை யாருமே வீணடிக்காமல், அவரவர் ஸ்டைலில் கொஞ்சம் தகவல், கொஞ்சம் கருத்து என விளையாடியிருந்தார்கள். அன்னப்பட்சி போல கருத்துக்களின் தாக்கத்தை விலக்கி, தகவல்களின் தாக்கத்தை மட்டுமே கொண்டு எழுந்த யோசனைகளை எழுதுகிறேன்.

1. தூக்கு தண்டனை தேவையா?

இந்தக்கேள்விக்கு என்னால் ஆம் இல்லை யென பதில் சொல்ல முடியவில்லை. திருத்தப்பட முடியாத தீர்ப்பு என்பது பயமுறுத்தினாலும், சட்டத்திற்கு அந்தப்பக்கம் உள்ள சுதந்திரத்தில் குற்றம் செய்பவர்களுக்கு, "இங்கே அடிச்சா அங்கே வலிக்கும்" என்று திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டுபவர்களுக்கு, பலவீனர்களை கொடுமைப்படுத்தும் வன்முறையாளர்களுக்கு - தற்போது உள்ள சட்டப்படி - இருப்பதில் கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்றே தோன்றுகிறது.

இதில் கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பவர்களுக்கு கருணையே காட்டப்படக்கூடாது என்பது என் கட்சி. எந்தப்பாவமும் தெரியாத, எந்தக்கட்சியிலும் சேராத அப்பாவிகள் கலவரத்தில் சாவதையும் பழிவாங்குதலில் தூண்டப்பட்டு கொல்லப் புறப்படுவதையும் நேரில் சில கலவரங்களில் கண்டிருக்கிறேன். இன்னொருமுறை பார்க்க தைரியம் இல்லை. திருவல்லிக்கேணியில் செருப்பு வீசியவர்கள், மனித குண்டாய் வெடித்தவர்கள், மசூதியை இடித்தால் நாடு ரத்தக்காடாகும் என்று தெரிந்தே செய்தவர்கள், ரயிலை எரிப்பதன் பின்விளைவுகளை அறிந்தவர்கள், அதிகாலை மூன்று மணிக்கு வெள்ளநிவாரணம் தருவதாக அறிவித்தவர்கள் - எல்லாரையும் சேர்த்தேதான் சொல்கிறேன். இது பொதுப்புத்தியாக இருக்கலாம் - இருந்துவிட்டுப் போகட்டும்.

அப்பாவிகள், மௌனப்பெரும்பான்மையினர் தண்டிக்கப்படக்கூடாது என்பதுதான் என் வாதத்தின் அடிநாதம். நிரபராதிகள் அரசாங்கத்தால் தண்டிக்கப்படக்கூடாது என்பதைத் தனியாக சொல்லத்தேவையில்லை. எனவே, Rarest of the Rare Cases என்பது ஒப்புக்கொள்ளப்படக்கூடியதாகவே தோன்றுகிறது.

2. சுதந்திரப்போரா? தீவிரவாதமா?

காஷ்மீர் பிரச்சினை பெரிதானதில் இந்தியாவின் பாகிஸ்தானின் பங்குகள், செய்யப்பட்ட தவறுகள், கொல்லப்பட்ட அப்பாவிகள் பற்றியும் பல விரிவான பதிவுகள் வந்தன. சினிமாக்களில் வரும் தீவிரவாதிகள் தவிர உண்மையில் யாரும் பொழுதுபோக்கிற்காக குண்டுவைக்கப் போவதில்லை, உயிர்களுடன் விளையாடப்போவதில்லை - அவர்களின் பக்கம் நியாயம் இருப்பதாக அவர்கள் கருதாத வரை.

எல்லா தீவிரவாதிகளுமே, அவர்கள் சார்ந்த கூட்டத்துக்கு நல்லவர்கள்தான், ஆனால் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரிமினல்கள்தான். பகத்சிங் இங்கிலாந்து ஆட்சியின் கண்களில் தீவிரவாதியாகத் தானே தெரிந்தான்? இங்கே குண்டு வைப்பவர்கள் இந்தியாவின் கண்களில் குற்றவாளியாகத்தான் தெரிவார்கள், அதில் எந்தத் தவறுமில்லை. உ பியிலும் கேரளாவிலும் அந்தமானிலும் ஆயிரம் உயிர்களைச் சாகடிப்பதுதான் காஷ்மீர் பிரச்சினையின் தீவிரத்தை இந்திய அரசாங்கத்துக்கு உணர்த்தும் வழிமுறை என்பதை யாராலும் ஒப்புக்கொள்ள முடியாது. பகத்சிங்கும் வாஞ்சிநாதனும் குற்றமிழைத்ததாக அவர்கள் கருதிய ஆங்கில அதிகாரிகளைத் தான் குறிவைத்தார்களே அன்றி சம்மந்தப்படாத பொதுஜனங்களை அல்ல. இந்தப் பெரிய வித்தியாசம் கண்ணில் படாவிட்டால் மட்டுமே பகத்சிங்கையும் காஷ்மீர் போராளிகளையும் ஒப்பிடத் தோன்றும்.

3.அப்ஸல் குற்றவாளியா?

இல்லை என்று யாருமே சொன்னதாகத் தெரியவில்லை. உடந்தையாக மட்டுமே இருந்தது, குற்றத்தின் அளவு, மற்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது, சரியான வழக்கறிஞர் இல்லாதது போன்ற விஷயங்கள்தான் பேசப்பட்டது. எனக்கு முக்கியமாகத் தோன்றுவது ஒரு கேள்விதான் - "அப்ஸலுக்குத் தான் செய்த உதவியின் தீவிரம் தெரிந்து இருந்ததா இல்லையா?" தெரியாது என்னும் பட்சத்தில் அவன் தூக்கிலிடப்படுவது அநீதி, தெரிந்திருந்தது என்னும்பட்சத்தில் குற்றத்தின் அளவு எத்தகையதாக இருந்தாலும் கடும் தண்டனை சரியே .

இதைச் சரிபார்க்கும் வாய்ப்பு, ஊடகங்கள் வாயிலாக மட்டுமே தகவல் அறியும் நம்மைவிட, குற்றவாளியிடமும் சாட்சிகளிடமும் நேரடியாக உரையாடிய நீதிமன்றங்களுக்கு அதிக வாய்ப்பிருந்திருக்கும். நீதிமன்றங்கள் மேலேயே நம்பிக்கையில்லை எனச் சொல்பவர்கள் அதற்கு மாற்று என எதையும் முன்வைத்ததாக எனக்குத் தெரியவில்லை.

குற்றத்தின் அளவைக் கணக்கிடாமல் "26 பேருக்கும் தூக்கு தண்டனை" எனச்சொன்ன ராஜீவ் காந்தி கொலைவழக்கு மேற்கோளிடப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் என்ற வாய்ப்பு அவர்களுக்கு இருந்ததையும், அங்கே தீர்ப்பு திருத்தப்பட்டதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

வழக்கறிஞர் பற்றிய குறைகளும் கூறப்பட்டன. காஷ்மீர் தழுவிய போராட்டத்தைத் திட்டமிட்டு நடத்துபவர்கள் வழக்கு பல்வேறு நீதிமன்றங்களில் இருக்கையில் ஒரு வழக்கறிஞர் வைக்க முடியாமல், தூக்குதண்டனை வழங்கப்பட்டபின் போராட்டமும், அனுதாப அலை உருவாக்கலும் செய்வது திசைதிருப்பல் மட்டுமே.

4. கருணை மனு?

பாராளுமன்றம் முடிவெடுக்குமாம். எப்படிப்பார்த்தாலும், நம்மைவிட அதிகத் தகவல்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். உச்சநீதிமன்றத்தால் உறுதிபடுத்தப்பட்ட தீர்ப்பைவிட மனித உரிமையும் State Organized Murder-உக்கு எதிரான மனப்பான்மையும் பெரிதாகத் தோன்றுமளவுக்கு சந்தர்ப்ப சாட்சியங்கள் இருக்குமானால் மன்னிக்கப்படுவது சரியாக இருக்கும். ஆனால் - காஷ்மீரில் போராட்டங்கள் நடக்கின்றன, பாகிஸ்தானுடன் பேச்சு பாதிக்கப்படும், அப்ஸலின் மனைவி விதவையாகிவிடுவாள், அவன் மகன் தற்கொலைக்கு முயற்சிப்பான், வாக்கு வங்கி பாதிக்கப்படும் போன்ற காரணங்களுக்காக மன்னிக்கப்பட்டால்..

என்ன செய்வது நாம் - விதியை நொந்துகொள்வதைத் தவிர?

Oct 18, 2006

விடுதலை - போட்டிக்காக Thenkoodu

விடுதலை

"இந்த முறை என்ன பண்ணப்போறே?"

"யோசிச்சுதான் செய்யணும்"

"அவசரப்பட்டு முடிவெடுக்காதே. கொஞ்ச நாளா உன் போக்கே சரியில்லை."

"அப்படி சொல்லாதே. என்னுடைய திட்டத்துக்கு கொஞ்ச நாள் முன்னாலே கூட எத்தனையோ பேர் பலியானாங்க தெரியுமா?"

"தெரியாம என்ன? ஆனா அதுக்கு அப்புறம்?"

"அப்புறம் என்ன? என்னைவிட பெரிய ஆளுங்க சிலர் வந்துட்டாங்க! அதுனாலே என்ன தப்பு?"

"தப்பெல்லாம் ஒண்ணும் இல்லை. அமாவாசை சோறு தினம் தினம் கிடைக்குமா?"

"அதுனாலே?"

"இந்த மாதம் போட்டிக்கு நீ செய்ய வேண்டியது என்னன்னு நான் சொல்றேன் கேட்டுக்க"

"நீ சொல்றதுக்கு முன்னாலேயே நான் முடிவெடுத்துட்டேன்."

"என்ன முடிவு"

"இந்த மாதம் தேன்கூடு போட்டிக்கு பினாத்தல் சுரேஷிடமிருந்து....





விடுதலை!
பி கு: அனுபவச்சிதறல்களும் அடங்குடா மவனேயும் பேசிக்கொண்டிருந்ததன் Eavesdropping!

Oct 11, 2006

கெமிக்கல் லூச்சா!

எனக்குப்பிடித்த ஒரே இந்தி நகைச்சுவைப்படம் "அந்தாஸ் அப்னா அப்னா" இரண்டு தமிழ்ப்படங்களைத் தழுவியிருந்தாலும் (பொம்மலாட்டம், நான்) ஆமிர்கானின் அசத்தல் நடிப்பு குறைகளை மறக்கச் செய்தது. மற்றபடி முழுநீளக்காமெடியை பெரும்பாலும் இந்திக்காரர்கள் முயற்சிப்பதில்லை. ஏனென்று தெரியவில்லை. "பண்டி அவுர் பப்ளி" காமெடிப்படம் என்று என்னிடம் சொன்னவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

முன்னாபாய் பார்க்காமல் வசூல்ராஜா பார்த்ததால், முன்னாபாயில் காமெடி எவ்வளவு எனத் தெரியவில்லை, இருந்தாலும், கமல்-கிரேஸி கூட்டணியிலேயே காமெடி அவ்வளவாக இல்லையென்பதால், முன்னாபாய் மேல் அவ்வளவு நம்பிக்கையில்லை. அதன் இரண்டாம் பாகம் மட்டும் என்ன பெரிசாக இருந்துவிடப்போகிறது என்று அசட்டையாக இருந்தாலும், மோகன் தாஸ் தொடங்கி தம்பி வரையிலான வலைப்பதிவு விமர்சனங்கள், ஓ பக்கத்தில் ஞாநி என்று ஊக்கிக்கொண்டே இருக்கவே கிளம்பியே விட்டேன் - இப்படம் இன்றே கடைசி என்று போர்டு ஒட்டிய நாளில்!

கதையைப் பலர் சொல்லிவிட்டார்கள். காந்தியின் புத்தகங்களைப் படித்த தாதா முன்னாபாயின் கண்ணுக்குள் "கெமிக்கல் லூச்சா" (ஹலூஸினேஷன் -ஆம்) வாக காந்தி தெரிய ஆரம்பித்து, சின்னி ஜெயந்த் போல லவ் சக்ஸஸ் ஆவதற்கு ஐடியா கொடுத்து, லஞ்சம், ஊழல், குப்பை போடல், ந்யூமரலாஜி, செவ்வாய் தோஷம் உள்ளிட்ட எல்லாப்பிரச்சினைகளுக்கும் அஹிம்சைத் தீர்வும் கொடுக்கிறார். அஹிம்சையை போதிப்பது தெரியாமல் உள்ளே நுழைத்த விதமும், பொழுது போவதே தெரியாமல் அழகாகப் பின்னப்பட்ட திரைக்கதையும் படத்துக்குப் பெரிய வலு.

முக்கியமாக குறிப்பிட வேண்டியவை:

1.ஹர்ஷத் வார்சி - கலக்கியிருக்கான் மனுஷன்! ஒவ்வொரு முகபாவமும் சிரிப்பை வரவழைக்கிறது. ஒரு சேம்பிள் டயலாக்:

சர்க்யூட் (ஹர்ஷத்) - 116 வீட்டை காலி பண்ணியிருக்கோம், 200 பேர் எலும்பை முறிச்சிருக்கோம் - இதுவரைக்கும் ஒருமுறை கூட ஜெயிலுக்கு வந்தது கிடையாது. அஹிம்சைன்னு ஒரு சாரி சொல்ல ஆரம்பிச்சொம், ஸ்ட்ரெயிட்டா ஜெயிலுக்கு உள்ளே!

முன்னா (சஞ்சய்) - நாம காந்தி மாதிரி ஜெயிலுக்குள்ளே வந்ததால நமக்கு எவ்வளோ ரெப்யுடேஷன் வளரும் தெரியுமா? நாளைக்கு நம்ம பேர்லே ரோட் வைப்பாங்க, முன்னா நகர், சர்க்யூடாபாத்!

ச: நோட்டுலே நம்ப போட்டோ வரும்

மு: ஸ்கூல்லே நம்ம வரலாறு பாடமா வரும்.

ச: நம்ம பொறந்த நாளு ட்ரை டே ஆகும்..

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு..

இருவரும்: வேண்டாம் - ட்ரை டே மட்டும் வேண்டாம்!

2. திவ்யா வித்யா பாலன் - சொல்வதற்கு ஒன்றுமில்லை. திரையில் வந்து நின்றாலே போதும். குட் மாஆஆஆர்னிங் மும்பை!

3. பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் - குறிப்பாக லகே ரஹோ முன்னா பாய்.. எவ்வளவு ரிச்சாக எடுக்கிறார்கள்!

குறை என்று என் கண்ணில் எதுவும் படவில்லை.

கொஞ்சம் செண்டி காட்சிகள் இருந்தாலும், இழுவை இல்லாததால், இதை முழுநீளக்காமெடியாகவே அங்கீகரித்து, "அந்தாஸ் அப்னா அப்னா" வுடன் லகே ரஹோ முன்னாபாயும் சேர்க்கிறேன்.

இந்தப்படத்தைப் பார்த்து நாட்டில் அஹிம்சை அதிகரித்ததா? இந்தியன் ரமணா வந்த போதும் இதையேதானடா சொன்னீங்க:-)) 100 கோடி பேர் ஒவ்வொருத்தருக்கும் கெமிக்கல் லூச்சா வந்தா ஒரு சான்ஸ் இருக்கு!

குடும்பத்தோடு பார்த்து, ரசிக்க வேண்டிய படம்/

Oct 7, 2006

பிரம்மாண்ட நட்சத்திரக்கலைவிழா..

தமிழ்நாட்டில் கொசு ஒழிந்துவிட்டது, வியாதிகள் தீர்ந்துவிட்டது.. அட கற்பனைதாங்க.. அதைத் தொடர்ந்து

பிரம்மாண்ட நட்சத்திரக்கலைவிழா

சிக்குன் குனியாவைச் சிதறடித்த செம்மல் டாக்டர் கலைஞருக்கு கலையுலகம் பாராட்டு விழா..

வரும் வெள்ளி சனி ஞாயிறு, உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை ஒவ்வொரு நாளும் மாலை 6:30 லிருந்து 11:30 வரை.

நிகழ்ச்சியை உடன் வழங்குவோர் - எம் ஆர் கே வி வழங்கும் பாரம்பரியக் கிழிசல் பட்டு, டெக்ஸ்டான் வழங்கும் ரிவர்ஸிபிள் பனியன் ஜட்டிகள், பெரியாத்தா மசாலாவின் மட்டன் மோர்க்குழம்பு மசாலா, "மக்களாட்சிதான் வேண்டும்" மற்றும் ராங் ராஜா!

நிகழ்ச்சியில் பேசிய பிரபலங்கள்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர்

கலைஞர் அவர்களே,

வட்டி கட்டி வதைபட்டு கொண்டிருந்த எங்களுக்கு வரிவிலக்கு அளித்த செம்மலே.

கொசு கடித்து கஷ்டப்பட்ட எங்களுக்கு கொசு மருந்து அளித்த கோமகனே.

சிக்கன் சாப்பிடவே கஷ்டப்பட்ட எங்களுக்கு சிக்குன் குனியாவிலிருந்து விலக்கு அளித்த வெண்ணிலவே..

நீங்கள் இன்னும் 2000 ஆண்டு வாழ வேண்டும், நீங்களே தமிழகத்தைத் தொடர்ந்து ஆளவேண்டும்.. என்று எல்லாம் வல்ல இயற்கையை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

ஏனென்றால், ஆட்சி மாறும்போதெல்லாம் இரண்டு மூன்று கலைநிகழ்ச்சிகள் நடத்துவது கட்டுபடியாகவில்லை.

நடிகர் விவேக்

டெம்பரேச்சர் ஏறினாலே ஸ்ட்ரெச்சர்னு சொல்லிகிட்டு இருக்காங்க சில பேர்! மாட்டினவனெல்லாம் மலேரியா பார்ட்டி, சிக்குனவனெல்லாம் சிக்குன் குனியா பார்ட்டின்னு விளையாடிகிட்டிருந்தாங்க!

இப்போ எங்க வீட்டுக் கொசு கூட எங்க பேச்சு கேக்குது. பசு மாதிரி அடங்கிக்கிடக்குது. இந்தக்காலத்திலயும் வியாதி.. மலேரியா..சிக்குன் குனியான்னு சொல்றவனையெல்லாம் ஆயிரம் கலைஞர் வந்தாலும் திருத்த முடியாதுடா!

கவிப்பேரரசு வைரமுத்து

கடிப்பது கொசுக்களில்
பெண்ணினம் மட்டும்தான்
கொசுக்கள் அழிந்ததைப்
பார்த்து இன்று
துடிப்பதும்
பெண்ணொருவர் மட்டும்தான்.

உபாதைகள்
தோன்றலும் மறைதலும்
விஞ்ஞானம் கண்டவை.
ஒரு மாதத்தில்
வியாதியை அழித்தது
உன் நிர்வாக ஞானம் மட்டுமே
கண்டது..

கவியரசர் வாலி

சிக்கனமாய் இருக்கச்
சொன்னது ஈரோட்டுக் கிழவன்
சிக்குன் குனியாவை அழித்தது
இந்த திருவாரூர் உழவன்.

அழிந்தது கொசு
ஆனந்தப்படுவது இந்தச் சிசு.

இனி உள்ளாட்சியும் உன்
ஃபுல்-ஆட்சிதான்.

நடிகர் கமலஹாசன்

கொசுவை ஒழித்தது நல்ல விஷயம்தான். ஆனால் அதைவிடவும் பெரிய பிரச்சினைகள் திரை உலகை ஆக்கிரமணம் செய்து கொண்டிருக்கிறது என்கிற விஷயம் - செய்தின்னும் சொல்லலாம்..கலைஞருக்குத் தெரியாததல்ல - அவரை தமிழ்நாடே முதல்வராய்க் கொண்டாடிக்கொண்டிருந்தாலும் அவர் முதலில் கலஞர் என்பதில் எங்களுக்கு ஒரு பெருமை..

அகாடமி அவார்டுகள் அமெரிக்கப் படங்களுக்குத் தந்தாலும் அதில் தமிழனின் பங்களிப்பு இருப்பது எல்லாருக்கும் தெரியும். உலகத்தரத்துக்கு ஏற்கனவே தமிழ்ப்படங்களுக்கு அரசு விருது வழங்கினாலும் அதில் வேற்று நாட்டுப்படங்களுக்கு விருது வழங்கப்படுவதில்லை. எனவே, இனிமேல், தமிழில் சிறந்த படமாக "தாலி காத்த காளி அம்மன்" -ஐத் தேர்ந்தெடுக்கையில், கூடவே அயல்நாட்டுப்பட வரிசையில் "ஷிண்ட்லர்ஸ் லிஸ்டை"யோ "பைசைக்கிள் தீவ்ஸை"யோ தேர்ந்தெடுத்து நம் விருதுகளை உலகத்தரமாக்கவேண்டும் என ஒரு கோரிக்கை வைக்கிறேன். கோரிக்கை வைப்பது ஒரு சக நடிகனாக, சக மனிதனாக, சக கடவுளாக எனக்கிருக்கும் உரிமை யாருக்கும் குறைந்ததல்ல என்று ஓங்கி உரத்தே சொல்லுவேன்.

நடிகர் இயக்குநர் பாக்யராஜ்

இப்படித்தான் பாருங்க, போடி பக்கத்துலே ஒரு கிராமத்துலே, ஒரு வயசாளிகிட்டே பேசிகிட்டிருந்தேன். எதார்த்தமாத்தான் பேசிக்கிட்டிருந்தவர், பொண்டாட்டிகிட்டே திரும்பி "கொசுமருந்து வாங்கியாரட்டுமா"ன்னு கேட்டாரு. அதுக்கு அவர் சம்சாரம் "ஏழு கழுதை வயசு ஆவுது, இப்போ கொசு மருந்து ஒண்ணுதான் குறைச்சலா"ன்னு கேட்டாங்க! அவருகிட்டே "என்ன, உங்க சம்சாரம் கொசு மருந்துன்னா கோவப்படுறாங்க?"ன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொல்றாரு, "கொசு மருந்து மட்டும் இல்லாட்டி, இந்தியாவோட ஜனத்தொகை எப்போவோ 200 கோடியைத் தாண்டியில்ல போயிருக்கும்?"னாரு.

இப்போ தமிழ்நாட்டுலே கொசுவே இல்லே. ஆனா சுகாதார நிலையத்துலே வேற ஒரு சமாச்சாரம் ஒரு ரூபாய்க்கு மூணுன்னு தராங்க! ஜனத்தொகைய கூட்டிபுடாதீங்க சாமிங்களா!

நடிகர் இயக்குநர் பார்த்திபன்

கலைஞர் அவர்கள் ஒரு பொறுக்கி (பறந்து வரும் கல்லிலிருந்து தப்பித்த் வண்ணம்) - பல இலக்கியங்களிலுருந்தும் முத்துக்களைப் பொறுக்கி நமக்குத் தருபவர்னு சொல்ல வந்தேங்க!

ஒரு கொசுவே கலைஞர் பற்றிப் பாடிய கவிதைக்கிறுக்கலை அதுக்கே தெரியாம ரெகார்டு பண்ணிகிட்டு வந்தேன். கேளுங்க!

எங்கள்
ரி
திரி
எதிரி
நீ.

மக்களுக்கோ
பன் -
நண்பன்!

ஜனங்களுக்கு
வியாதியைக் கொடுக்கும்
கொசுக்களுக்கு
வியாதி கொடுத்து
வீட்டில்
முடங்கவைத்த
கலைஞருக்கு

மக்கள் சார்பில் ஒரு ஜே -- சாரி.. ஓ!

நடிகர் ரஜினிகாந்த்

ஒரு பெரிய மகானைச் சந்திச்சு பேசிகிட்டிருந்தேன் - "அஸ்வம் வதம் ஜகத் புண்யம்" னு ஒரு அற்புதமான மந்திரத்தை சொன்னாரு.

ஒரு கிராமத்துலே, தாத்தா, அப்பா, பேரன் எல்லாரும் இருந்தாங்க. நல்ல பெரிய குடும்பம். எல்லா வசதிகளோடும் பகவான் அருளோடவும் இருந்த குடும்பம். ஒரு முறை அந்தக் குடும்பத்தை எதிரிகள் திட்ட ஆரம்பிச்சாங்க.

திட்டறவன் எதிரியா இருந்தா பரவாயில்லை. நண்பனா இருந்தாலும் பொறுத்துக்கலாம். கொசுவெல்லாம் கடிச்சா.. இது நாட்டுக்கு நல்லதா சொல்லுங்க!

ஆனா, கண்ணா, இந்தக்கதைய இனிமே தமிழ்நாட்டுலே சொல்ல முடியாது. ஏன்னா, கொசுவே இல்லாத ஊர்லே எப்படிச் சொல்றது?

கலைஞர் ஏற்புரை

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அவர்களே, உங்கள் கஷ்டம் எனக்குத் தெரியாததல்ல, நானே முதலில் ஒரு தயாரிப்பாளர்தான்.

உங்கள் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக தமிழில் படம் தயாரிக்கும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு என அறிவிக்கிறேன். நேரு உள்விளையாட்டரங்கை முன்பதிவு செய்வதற்கு கலைத்துறையினருக்கு முன்னுரிமை அளிக்கச் சொல்கிறேன்.

தம்பி விவேக் அவர்களே, ஆயிரம் கலைஞர் வேண்டாம், நான் ஒருவனே போதும், இந்நாட்டை திருத்தாமல் எனக்கு ஓய்வில்லை, ஒழிவில்லை.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே, பெண்ணினம் கடித்தது என்றுதானே தமிழினம் என்னைத் தேர்ந்தெடுத்தது.. கடித்த கொசுவை ஒருமுறை அடித்தால் போதாது. இன்னொரு முறை அடிக்கும் வாய்ப்பும் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

கவியரசர் வாலி அவர்களே, இது ஃபுல்லாக ஐந்தாண்டும் மேலும் ஆளும் ஆட்சி.. மக்கள் ஃபுல்லாக அடிக்கும் ஆட்சி அல்ல!

கலைஞானி கமலஹாசன் அவர்களே, நல்ல ஆலோசனை, உடனடியாகவே ஏற்றுக்கொள்கிறேன். இனிமேல், தமிழக அரசு வழங்கும் திரைப்பட விருதுகளோடு "சேரப்பெருலாதன் முதுகுடுமிப் பெருவழுதி" விருது ஒன்று உருவாக்கப்பட்டு உலகப்படங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கிறேன்.

பாக்யராஜ் அவர்கள் என்னைத் திட்டுகிறாரா வாழ்த்துகிறாரா என்றே தெரியவில்லை. மக்கள் வாழ கொசுவை ஒழித்தால் மக்கள்தொகை வளரும் எனப் பயமுறுத்துகிறாரே..

தம்பி பார்த்திபனுக்கு கவிதையாகவே பதிலளிக்கிறேன்.

கொசுவும் ஒழியும்,
பசுவும் தணியும்..
மக்கள் ஒழிக்கவேண்டியதை
ஒழித்தால்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு மட்டுமே புரியும் வகையில் சொன்னது எனக்குப் புரிந்துவிட்டது. தமிழ் மக்கள் அறிவார்கள், அந்தப்பெரிய குடும்பத்தைத் திட்டுவது பலரின் பொழுதுபோக்காய் இருந்தது ஒரு காலம், காக்கைக் கூட்டமும் திசை திரும்பியது இந்தக்காலம்.

ஆடலால் என்னை மகிழ்வித்த நமீதா, ரகசியா, திரிஷா ஆகியோருக்கும் என் நன்றி.

_____________________________________________________________________

பி கு: சன் டிவியில் தொடர்ந்து தாக்கும் கலையுலகப்பாராட்டு விழாக்களால் நொந்து போயிருந்த எனக்கு இட்லிவடையில் இந்தப்பதிவில் சிறில் அலெக்ஸின் இந்தப்பின்னூட்டம் நிஜமாவே வரவைத்த சிரிப்பை விரித்தேன். இந்தப்பதிவு தன்னைத் தானே எழுதிக்கொண்டது:-))

Oct 2, 2006

ஐ க்யூ தேர்வு

இணையம் முழுக்க ஐ க்யூ தேர்வுகள் கொட்டிக் கிடக்கின்றன. எல்லாக்கேள்விகளும் ஆங்கிலத்தில், ஆங்கில அறிவையும், கணித அறிவையும் உலக அறிவையும் சோதித்து இந்தா பிடி என்று மார்க்கை அள்ளித் தெளிக்கின்றன.

எந்தத் தேர்வாவது, நமக்கு மட்டுமே தெரிந்த கேள்விகளைக் கேட்கின்றனவா? ரஜினிகாந்தின் 100 ஆவது படம் எது? ஜெய்சங்கர் வில்லனாக அறிமுகமான படம் எது? வைகோ 1996 தேர்தலில் எந்தக்கட்சியில் இருந்தார்? அழகி என்ற சொல்லுக்கு விகடனில் என்ன அர்த்தம், தினத்தந்தியில் என்ன அர்த்தம்?.. தமிழுக்கே தமிழகத்துக்கே உரிய எத்தனை கேள்விகள் இருக்கின்றன? யாராவது இதைப்பற்றிச் சிந்தித்திருக்கிறார்களா?

எனவே, சோதனை முயற்சியாக, நான் ஒரு தேர்வைத் தயாரித்திருக்கிறேன். 30 கேள்விகள், 6 பிரிவுகளாக. இப்போதைக்கு எல்லாக்கேள்விகளும் பொருத்துக வகை மட்டுமே.

இடப்புறம் உள்ள கேள்விக்கு வலப்புறம் உள்ள தெரிவை பொருத்துங்கள். அந்த நேரத்தில் மறைக்கப்படாமல் தெரியும் தெரிவுக்கு மட்டுமே விடையளிக்க முடியும். சொடுக்கியவுடன் அடுத்த இடப்புறத் தெரிவுக்குப் போய்விடும். தவறெனில் முந்தைய கேள்வியை அழுத்தி சரி செய்யலாம்.

ஆறு பிரிவிற்கும் விடைஅளித்தபிறகு உங்கள் மதிப்பெண்ணுக்குத் தகுந்தமாதிரி பட்டம் வழங்கப்படும். (அந்தப்பட்டத்தை மட்டும் பின்னூட்டமாக எழுதிவிடுங்கள்.)

கருத்துக்களை தயங்காமல் கூறுங்கள்.

சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா வலைப்பதிவுகளை? (02 Oct 06)

தவறி வந்திருந்தால் மன்னிக்க, வலைப்பதிவில் நடக்கும் சண்டைகள், திட்டுகள், கருத்து சுதந்திரம் / வன்முறை பற்றியெல்லாம் இந்தப்பதிவு பேசப்போவதில்லை. இப்படி எழுதுங்கள், இவற்றை எழுதுங்கள் என்னும் அட்வைஸும் கிடையாது.

வேறு என்ன?

வலைப்பதிவுகள் என்பது என்ன?

தனிப்பட்ட நாட்குறிப்பா? ஆமெனில் ஏன் தமிழ்மணம் தேன்கூடு போன்ற திரட்டிகள் தேவைப்படுகின்றன? நாலு பேர் படிக்கத்தானே எழுதுகிறோம்..

நண்பர்களைச் சந்திக்க ஒரு தளமா? எத்தனையோ பாரம்கள், சாட் ரூம்கள் அதற்காக இருக்கின்றனவே..

அச்சு ஊடகங்களின் அடுத்த அவதாரமா? என் கருத்துப்படி ஆமாம்.

ஆனால் அடுத்த அவதாரம் என்று சொல்ல முடியுமா?

ஊடக மாற்றங்கள் ஒவ்வொன்றிலும், புது ஊடகத்தின் தனித்தன்மை வெளிப்படும்போதுதான் புது ஊடகம் நிலைபெறுகிறது.

தெருக்கூத்து போலவே இருந்தவரை நாடகங்களோ, நாடகங்கள் போலவே இருந்தவரை திரைப்படங்களோ, திரைப்படங்களே இருந்தவரை சின்னத்திரையோ பெரும் வளர்ச்சி பெறவில்லை. அரங்க அமைப்புகள் என்ற தனித்தன்மையால் நாடகங்கள் நின்றன, வெளிப்புறப்படப்பிடிப்பு என்ற தனித்தன்மையால் திரைப்படங்கள் நின்றன, உடனடி ஒளிபரப்பு என்பதால் சின்னத்திரை நின்றது.

எனவே, வலைப்பதிவுகள் அடுத்த நிலைக்குச் செல்லவேண்டுமானால், அச்சு ஊடகங்களால் முடியாத தனித்தன்மைகள் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும்.

உடனடியான பின்னூட்டங்கள், ஹைப்பர்லிங் சுட்டிகள் ஆகிய வலைப்பதிவின் தனித்தன்மைகளை ஏறத்தாழ எல்லாரும் பயன்படுத்துகிறோம்.

Podcasting போன்ற விஷயங்களை வைத்து ஒலி வலைப்பதிவுகள் வந்து, வானொலி, அச்சு ஊடகம் இரண்டுக்கும் மாற்றாக, அவற்றைவிட உயர்வாக வரும் பதிவுகள் மிகச்சிலவே உள்ளது வருத்தமே.

குறும்படங்கள், படத்துணுக்குகள் ஆகியவற்றை இணைத்து வரும் பதிவுகளில் பெரும்பாலானவை நமது தயாரிப்பாக இல்லாமல், Forwarded Mail வகையைச் சார்ந்தே இருப்பதால், தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சியில் அவற்றைச் சேர்க்க இயலாது.

என்னுடைய பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தவை ஃப்ளாஷ் மென்பொருள் உதவியோடு நான் செய்யும் முயற்சிகளே.
அதற்கு முக்கிய காரணம், அவற்றின் இடையூடாடும் தன்மை (Interavtivity). அச்சு ஊடகங்களால் முடியாத, கணினிக்கே உரிய தனித் தன்மை.


கொஞ்சம் ஐடியா, கொஞ்சம் கணினி அறிவு இருந்தால் யார் வேண்டுமென்றாலும் ஃப்ளாஷ் தயாரித்துவிடலாம். - நான் ஃப்ளாஷ் எந்தப்பள்ளியிலும் படிக்கவில்லை, மென்பொருளை வைத்தே Help Files வழியாகக் கற்றுக்கொண்டது மட்டும்தான். - இத்தனைக்கும் நானே சொல்லியிருக்கும் தேவைகள் இரண்டிலுமே நான் சராசரிக்குக் கீழ்தான்.

இதன் சாத்தியங்கள் வியப்பூட்டுகின்றன. சிவாஜி போல மிமிக்கிரி செய்த நகைச்சுவையும் உள்ளிட முடிகிறது, உங்கள் கருத்துக் கணிப்பு போல கணக்கிட முடிகிறது, பரமபதம் போல நடிகன் அரசியல்கட்சி துவங்குவதைப்பற்றி கிண்டல் செய்ய முடிகிறது, குட்டிக்கதைகளுக்கு Database அமைக்க முடிகிறது.. ஐடியா உருவான 2 - 3 நாட்களிலேயே இவற்றை வடிவமைத்துவிட முடிகிறது.

எனக்குத் தெரிந்ததால் ஃப்ளாஷ் பற்றி விளம்பரம் அளவிற்கு எழுதியுள்ளேன். வேறு ஏதாவது இன்னும் உத்தமமான மென்பொருள் இருந்தால் பின்னூட்டுங்களேன்.

தமிழில் ஒரு ஐக்யூ தேர்வை வடிவமைத்துள்ளேன், நாளை வலையேற்றுகிறேன்.

 

blogger templates | Make Money Online