Aug 26, 2010

எந்திரன் - விமர்சனம் ஃபார் டம்மீஸ் (ஃப்ளாஷ்)

எந்திரன் படம் வரப்போகிறதாமே.. முன்கூட்டியே டிக்கட் பதிவு செய்பவர்கள் மட்டுமின்றி முன்கூட்டியே புறக்கணிப்பு செய்பவர்கள் அதிகமாகி இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. முன்கூட்டியேதான் நாம் எதையுமே செய்வோம். படம் வருவதற்கு முன்கூட்டியே இப்போதே சில விமர்சனங்கள் வந்துவிட்டன. ஆனால் யாரும் செய்யாததைச் செய்வதுதானே பினாத்தலுக்கு அழகு. படம் வருவதற்கு முன்பாக ஒரு விமர்சனம் வரும் ரெண்டு விமர்சனம் வரும் - 18225 விமர்சனம்?

ஏற்கனவே சிவாஜிக்கு 1024 விமர்சனம் போட்டிருந்தேன். (அதை இன்னும் ஞாபகம் வைத்திருப்பவர்களை பசித்த பாவனா தின்னட்டும்.) ஃப்ளாஷுக்கு உரித்தான இண்டராக்‌ஷனுடன், விமர்சனம் எழுத படம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற கிண்டல்.

ஆனால் இந்த முறை இன்னும் அதிகத் தெரிவுகளுடன், இன்னும் கஷ்டமான அல்காரிதம்களுடன் வந்திருக்கிறேன். கதையில் இருந்தே தேர்வு செய்யலாம். எங்கிருந்து உருவி இருப்பார்கள் என்று ஆரம்பித்து இசை சண்டை காமெடி - ஒரு ஏரியாவை விட்டுவைக்காத முழுமையான விமர்சனம், நம் வழக்கமான விமர்சகர்கள் ஸ்டைலில் பஞ்ச் லைனுடன் - ஆறு க்ளிக்குகளில் நீங்கள் காபி செய்ய வசதியாக!

ஃப்ளாஷின் முடிவில் வரும் கோட் ஐ பின்னூட்டமாகப் போடவேண்டியது மட்டும்தான் உங்கள் வேலை! அதற்காக வெறும் கோட் ஐ மட்டும் போடவேண்டும் என்ற அவசியம் இல்லை, மேலான, சைடான கருத்துகளையும் தாராளமாகத் தூவலாம். (இந்த மாதிரி கோட் எப்ப வச்சாலும் பின்னூட்டப்பொட்டி ஃபுல்லா ஒரே கோட்தான் இருக்குது!)

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஃப்ளாஷில் மூன்று நாட்கள். இந்தச் சுகத்தை எவ்வளவு மிஸ் செய்திருக்கிறேன்!

Aug 1, 2010

அமெரிக்க பணயக் கட்டுரை - 2

கலாசாரத் தேடலின் நடுவே ஒரு சிறிய இடைவெளி விடவேண்டியதாகிவிட்டது. மாபெரும் ட்விட்டர், ப்ளாக்கர் மற்றும் ஆம் ஆத்மிகளின் சந்திப்பில் அவ்வப்போது சிற்றுரை பேருரை Bore உரை எல்லாம் ஆற்ற வேண்டிய நிர்ப்பந்தங்களினால்.

பத்துமணிக்கு அழைத்து போடப்பட்ட போஸ்டர்களின் விளைவால் பதினோரு மணிக்கு எழுந்து தயாராகச் சென்றேன். இலவசனார் காலை உண்டி கொடுத்தபின் தான் தயாராவேன் என்ற என் பிடிவாதத்துக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டி இருந்தது.


நீண்ட காலத்துக்கு முன் நான் ப்ளாக்கில் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தபோது தீவிரமாக கமெண்ட் போட்டதை இன்றும் எண்ணி வருந்தும் மணியன் @rsmanyan, நீங்க எழுத ஆரம்பித்த காலத்திலெல்லாம் நான் சின்னப்பையன் என்று என் வயதைக் குறிவைத்துக் கொலைவெறி காட்டிய @forvino, எவ்ளோதூரம்தான் போறானுங்க பார்க்கலாம் என்று அமைதியாக இருந்த @the_tweedy, வைஃபாலஜி மேலுள்ள கோபத்தை கனல் அடங்காமல் காத்துவரும் பத்மா அரவிந்த் @padmaa ஆகியோருடன் மொக்கை போட ஆரம்பிக்க தீவிர இலக்கியமும் உலக சினிமா தாகமும் அடங்காத ஒருபக்கம் @orupakkam, (அடங்காத மட்டும்தான் உண்மை, மற்ற அட்ஜெக்டிவ் எல்லாம் சும்மா பில்ட் அப்புக்கு :-) வயதான, போலி டைனோபாய் @dynobuoy, சேவல்பண்ணைக்கு குடும்பத்துடன் வந்துவிட்டிருந்த இளா @vivaji (நோயாளிகள் நேரம்தப்பாமல் மாத்திரை சாப்பிடுவது போல் வெளியே தனியாகச் சென்று அடிவாங்கிக்கொண்டு திரும்பினார்), வண்ண உடைகளை கவனமாக்த் தவிர்த்த வெட்டிப்பயல் பாலாஜி @vettipaiyal, எழுத்துக்குச் சம்மந்தமே இல்லாத இளமையோடு பிகேசிவகுமார் @ivansivan, இன்னும் என்னவெல்லாம் எழுதி சமுதாயத்தைக் கொடுமைப்படுத்தலாம் என சதித்திட்டம் தீட்டிக் கொடுத்த திண்ணை துக்காராம் @thukaram என்று மொக்கை களைகட்டியது.

வந்திருந்தவர்களின் அன்பான கேள்விகளின் வீச்சு: “நீங்கள் ஒரு பெரிய எழுத்தாளராமே? ஆமாம், என்ன எழுதறீங்க?” “நீங்க எழுதின எல்லா புக்கும் படிச்சிருக்கேன், ஆமாம், ப்ரேசில் சமையல் குறிப்புகள் நீங்கள் எழுதினதுதானே?” “உங்க ட்விட்லே எல்லாம் ஒரு ஸ்பார்க் தெரியும். ஆமா, உங்க ஹாண்டில் என்ன?” “ஒரு சக எழுத்தாளராக டேன் ப்ரவுன் பற்றி உங்கள் கருத்தென்ன?” “அடுத்த புக் எப்போது? தற்காப்பா இருக்கவேணாமா?” போன்ற கேள்விகளுக்கு புன்னகையை பதிலாக்கினேன். இளிச்சவாயனாக ஆக்கிவிட்டார்கள் என்பதன் இடக்கரடக்கல் என்பதறிக. (ஃபோட்டோக்கள் வேறு காமராவில், தனியாகச் சேர்க்கப்படும்)

மதியம் என்று ஆரம்பித்த பயணத்திட்டம் மாலையாக மாறி அப்போதும் மொக்கை தொடர, முன்னிரவிலேயே கிளம்ப முடிந்தது. வழியில் பயணத்தில் சேர்ந்த கண்ணபிரான் ரவிஷங்கர் @kryes எழுதும்போது ஸ்ரீவேணுகோபாலன், பேசும்போது புஷ்பா தங்கதுரை.



அட்லாண்டிக் சிட்டிக்கு எங்களுக்கு முன்பே வந்து காத்துக்கொண்டிருந்தார் சத்யராஜ்குமார் @ksrk. இதற்காகவா காத்திருந்தாய் சத்யராஜ்குமாரா? என்னும் அளவுக்கு அவரைப் படுத்தினோம். ஆட்டம் கொண்டாட்டம் சூதாட்டம் நிரம்பிய ஊரிலும் இசை நீர்வீழ்ச்சி போன்ற உபத்திரவமில்லாத வஸ்துக்களைத் தேடிக் கண்டுபிடித்துக் காட்டினார்.



பாஸ்டன் பாலா @snapjudge வந்தார்.அவருடைய செறிவான டாட்நெட் கட்டுரைகளைப் பற்றிய விவாதங்களைத் தொடங்க அவர் ரசிகர் கூட்டம் தயாராக இருந்தும் மற்றவர்களின் கொலைவெறிப்பார்வையால் வழக்கமான மொக்கையே போட்டு காஸினோவுக்குச் சென்று காசு இனி நோ என்று பதம் பிரித்துக் காட்டச் சூளுரைத்தோம்.



கலாசார நுகர்வு பூர்த்தியாகும் முன்னரே நேரம் கடக்க ஆரம்பித்தது. “அப்போ இன்னிக்கும் மேற்படி டான்ஸ் இல்லியா?” சோகத்தோடு கிளம்பும் நேரத்தில் குற்றாடை நங்கையர் சிலர் சூதாட்ட விடுதியில் ஆட ஆரம்பித்தார்கள். கலைக்கண்ணோடுதான் பார்க்கிறேன் என்று கேட்பதற்குமுன் பதில் சொல்லத் தயாரானேன். ஆனால் என்னை யார் பார்த்தார்கள்?



ஆனால் முழுமையான கலாச்சார நுகர்வும் பகிர்வும் இனிமேல்தான் என்று சூளுரைக்கிறார் கொத்தனார். எனவே, சிறிய இடைவேளைக்குப் பிறகு, கலாசாரப் பகிர்வைப் பொதுவுடமைப்படுத்துகிறேன்.

அட்லாண்டிக் சிடிக்கு வந்திருந்தவர்களில் ஒரு பகுதி:

 

blogger templates | Make Money Online