@rasanai இப்படி ஒரு ட்விட் போட்டு ஆரம்பித்துவைத்தார்:
வீடியோ ஃபோன்,வேலைக்கார ரோபாட்கள் போன்றதொரு உருப்படாத,வரப்போகாத டெக்னாலஜியே 3டி ப்ரிண்டிங். #MarkMyWords
3டி ப்ரிண்டிங் பற்றி என் கருத்துகளைச் சொல்வதற்கு முன்பாக கொஞ்சம் ரீவைண்ட்.
90களின் இறுதியில் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் என்ற சித்தாந்தம் பிரபலமாகத் தொடங்கியபோது, இணையம் என்பது இல்லாத ஒன்று, இருந்தாலுமே 14 Kbps மோடம்கள்தான் அதிவேக இணைப்புகள். அன்று வீட்டில் இருந்த கம்ப்யூட்டர்கள் வார்ட் ஆர்ட்டில் பூப்போடவும் ஜிகுஜிகா என்று ஸ்கின்மாற்றிய வின் ஆம்ப் பாட்டுப்பாடவும் மட்டும்தான் உபயோகமாயின. அன்று கம்ப்யூட்டர் வாங்கினவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? இன்று 3டி ப்ரிண்டர் வாங்கி வீட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பவர்களும் அதே கேட்டகிரிதான்.
வீடியோஃபோன் என்பது இன்று ஸ்கைப்பாக வளரவில்லையா?
வேலைக்கார ரோபோட்களை ஐஸ்வர்யாவைக் காதலிக்கும் ரஜினி போலத் தேடினால் கிடைக்காது. கொஞ்சம் அக்கம்பக்கம் உள்ள ஃபேக்டரிகளுக்குப் போய்ப்பாருங்கள் - 20 வருடங்களுக்கு முன்னே மனிதர்கள் செய்துகொண்டிருந்த அபாயகரமான வேலைகளை ரோபோக் கரங்களும் கால்களும் செய்துகொண்டிருக்கின்றன. கூலிங் கிளாஸ் போடுவதில்லையே தவிர்த்து அவையும் ரோபோதான், வேலை செய்கின்றனதான். ஹ்யூமனாய்ட் என்ற வகை ரோபோக்களுக்குத் தேவையில்லை, எனவே வரவும் இல்லை. இரண்டு ரோபோக்கரங்களையும் கால்களையும் ஒரு ஷோகேஸ் பொம்மைக்கு மாட்டிவிட்டு டாக்கிங் டாம் போன்ற சாஃப்ட்வேரைச் சேர்த்துவிட்டால் இன்றேகூட அப்படி ஒரு ரோபோவைத் தயாரித்துவிடலாம்.
டெக்னாலஜிக்கும் டார்வின் தியரி செல்லுபடியாகும். தகுதியுள்ளதுதான் தப்பிப்பிழைக்கும். செல்ஃபோன்கள் பிரபலமடையத் தொடங்கிய நாட்களில் (இன்கமிங் 5 ரூபாய்/நிமிடம், அவுட்கோயிங் 10 ரூபாய்/நிமிடம்) வில்ஃபோன் (WLL Phone) என ஒரு ஜந்து குறைப்பிரசவம் ஆனது யாருக்காவது நினைவிருக்கிறதா? அன்றைய தேதியில் அது செல்ஃபோனைவிட மலிவு. ஆனால் என்ன, தாய் டவரில் இருந்து 3 கிலோமீட்டருக்குமேல் வேலை செய்யாது. 2-3 வருடங்களிலேயே 1000 ரூபாய்க்கு செல்ஃபோனும் 10 பைசா கால்களும் வந்ததில் வில்ஃபோன் வீணாகிப்போனது.
இப்போது 3டி பிரிண்டருக்கு வருவோம். இன்றைய தேதியில் 3டி பிரிண்டரில் என்னவெல்லாம் சாத்தியம்? நாம் கொடுக்கும் 3டி உருவத்தை, ப்ளாஸ்டிக்கில் அதே வண்ணத்தோடு உருவாக்கும். அவ்வளவுதான். வெவ்வேறு வகையான மெட்டீரியல்கள் சாத்தியமில்லை. இரண்டு பொருட்களின் அசெம்ப்ளி சாத்தியமில்லை. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு குணாதிசயங்கள் தேவைப்படும் பொருட்களை 3டியில் வடிவமைக்க முடியாது.
கொஞ்சம் உற்பத்தி முறையையும் பார்த்துவிடலாம். பத்து பைசாவுக்குக் கிடைக்கக்கூடிய சாதாரண போல்ட் தயாரிப்பதில் எத்தனை சிறு சிறு ப்ராசஸ்கள் உள்ளடங்கி இருக்கின்றன தெரியுமா? இரும்பை உருக்கி ஃபவுண்டரியில் அறுகோண ராடாகத் தயாரிக்க வேண்டும். அளவுக்கு வெட்டி, அதை ராட்சத உருளைகள் இடையே கொடுத்து நசுக்கி மரை (Thread) உருவாக்க வேண்டும். உருவாக்கியதை ஒவ்வொரு இடத்துக்கு ஒவ்வொரு வகையாக Anodising Carbonizing, Nitriding, Induction hardening என்று படுத்தி எடுக்க வேண்டும் - இவ்வளவு வேலை ஆனபிறகு 10 பைசாவிற்கு விற்க வேண்டும் என்றால் ஒரு போல்ட் தயாரித்தால் வேலைக்காகாது, கோடிக்கணக்கில் செய்தால்தான் கட்டும். ஒரு போல்ட் தயாரிக்கும் மெஷின் ஷாப்பில்கூட Foundry, Cold Press, Heat Treatment என்று பலவகையான உப ஷாப்கள் இருந்தே ஆகவேண்டும். - இத்தனையையும் ஒரு ப்ரிண்டர் செய்துவிட முடியுமா?
இன்றைக்கு உள்ள உற்பத்தித்துறையிலும் கம்ப்யூட்டர்கள் ந்யூமரிகல் கண்ட்ரோல், CNC, என்று பல வருடங்களுக்கு முன்பாகவே ஆரம்பித்து ஆதிக்கம் செலுத்தத்தான் செய்கின்றன. ஆனால் பெரும்பாலும் அவை தனித்தனி ப்ராஸஸ்களுக்குதான் உதவுகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் இவை உடனே மாறக்கூடியது போலத் தோன்றவில்லை.
ஆனால் நம்முடைய எண்ணங்களின் வேகத்தை பலநூறு மடங்கு தாண்டக்கூடியதாகத்தான் தொழில்நுட்பம் இருந்துவருகிறது. 15 வருடத்துக்கு முன்பு எதற்கு கம்ப்யூட்டர் என்று கேட்டோம், 10 வருடம் முன்பு ஏன் செல்ஃபோன் என்று கேட்டோம், இன்று இரண்டையும் சேர்த்து கைக்குள் வைத்துக்கொண்டு ஊர்சுற்றுகிறோம்.
நாளை நாம் உபயோகிக்கும் இயந்திரங்களின் பெரும்பாலான பாகங்கள் ப்ளாஸ்டிக்கில் - இத்தனை ப்ராசஸ்கள் தேவைப்படாத ப்ளாஸ்டிக்கில் உருவாக்கப்படலாம். பல்வேறு விதமான கனிமங்கள் - இங்க்ஜெட் ப்ரிண்டர் கார்ட்ரிட்ஜ் போல உருவாக்கப்பட்டு தேவையான அளவு இஞ்செக்ட் செய்யப்பட்டு, பிறகு ஹீட் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படவும் சிறு கம்பார்ட்மெண்டுக்குள்ளேயே ஏற்பாடு செய்யப்படலாம் - அப்படி நடக்கும்போது முழுமையான பாகம் ப்ரிண்டரில் இருந்து வெளிவர வாய்ப்பிருக்கிறது.
உற்பத்தி மையங்கள் ஒரு இடத்தில் இருப்பதற்கான காரணங்களை இந்த 3டி ப்ரிண்டர்கள் முறியடிக்குமாயின் - அதற்கான ஆராய்ச்சிகள் நிச்சயம் நடந்துகொண்டுதான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை - அது சாதாரண மனிதன் வாழ்வில் என்னென்ன தாக்கத்தை உண்டுசெய்யும்?
நிச்சயமாக ஒரு காரை நெட்டில் டவுன்லோட் செய்து உடனுக்குடன் ப்ரிண்ட் கொடுத்து ஓட்டிச் செல்லமுடியாது. காரின் 5000 உதிரிபாகங்களைத் தனித்தனியாக ப்ரிண்ட் செய்யலாம். அவற்றை அசெம்பிள் செய்ய மெக்கானிக்கைக் கூப்பிட்டு 5 கார் வாங்க ஆகும் செலவைச் செய்யலாம் :-)
ஆனால் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் உதிரிபாகங்களை ப்ரிண்ட் செய்யும் வசதி வந்துவிட்டால் - எவ்வளவோ செலவுகள் மிச்சப்படும். குடோன்கள் தேவையில்லை, கப்பல் விமானத்தில் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. துருப்பிடித்துவிடுமா கெட்டுவிடுமா என்ற பயம் தேவையில்லை. அச்சு அசல் அதே தரத்துக்கு சுடச்சுடத் தயாராகி வந்துவிடும். ஆனாலும் இவை பேக் எண்டில்தான் நடக்கும் என்பதால் ஆம் ஆத்மிக்கு செலவு மிச்சம் மட்டும்தான் தெரியும் - இன்று கண்ணுக்கு மறைவாகவே இருக்கும் ரோபோக்கள் போல!
சின்னச் சின்ன விஷயங்கள் வீட்டில் ப்ரிண்ட் செய்யும் அளவுக்கு வரலாம், அவை பெரிய மாற்றத்தை உண்டுசெய்யாது - ஒற்றைக்குணம் படைத்த பொருள்களாகத்தான் பெரும்பாலும் இருக்கும், அசெம்ப்ளி தேவைப்பட்டால் IKEAத்தனமான ஒரு வரைபடமும் கூடவே வரும். ஆனால் இதெல்லாம் கேம்சேஞ்சர் இல்லை.
இன்றேகூட 3டி பிரிண்டர்களை முழுவதும் வேஸ்ட் என்று சொல்லிவிடமுடியாது. முழு அளவிலான பாகங்களை வடிவமைப்பதற்கு முன்பு சிறு மாடல்களைச் செய்து ஆராய்ச்சி செய்து பின் பெரிய அளவில் தயாரிப்பது என்பதெல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது - பெரிய அளவில் செய்வதைவிட இது எவ்வளவோ செலவு மிச்சம். மருத்துவத்துறையிலும் கூட செயற்கைக் கண்கள், பல்செட், எலும்பு பாகங்கள் - இவற்றைத் துல்லியமாக 3டியில் பிரிண்ட் செய்து வெற்றி கண்ட கதைகளை இங்கே காணலாம்.
நான் பீஹாரில் வேலை செய்த காலத்தில் ஒரு உதிரிபாகம் கெட்டுப்போனால், மாற்று பாகம் வர, பீஹாரில் இருந்து சென்னைக்கு - சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு - அமெரிக்கா-சென்னை பீஹார் என்று வந்து சேர 2-3 மாதங்கள்கூட ஆகும். வந்தபிறகு பிரித்துப்பார்த்தால் தவறான பார்ட் நம்பர் என்று பொருந்தாமல் போன சந்தர்ப்பங்களும்கூட உண்டு. இப்போதெல்லாம் உலகமயமானபிறகு தகவல்கள் வேகமாகச் செல்கின்றன - இருந்தாலும் முறை என்னவோ அதேதான். அமெரிக்கா சென்னை பொருள் வந்துதான் ஆகவேண்டும் - அதற்கான நேரம் செலவாகத்தான் செய்யும். இந்த நேரச்செலவையும் பயணச்செலவையும் 3டி ப்ரிண்டர்கள் பெருமளவு குறைக்கும் - இது எல்லாருக்குமே நல்லது.
முடிவுரையாக - 3டி ப்ரிண்டர்கள் வரத்தான் போகின்றன - ஆனால் அது நம் கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு மாற்றம் ஏற்படுத்துமா என்றால், எங்கே பார்க்கிறீர்கள் என்பதைப் பொருத்தது.
16 பின்னூட்டங்கள்:
நன்றி சார், ஒன்னுமே தெரியாத போட்டது என் ட்வீட் :D
\\டெக்னாலஜிக்கும் டார்வின் தியரி செல்லுபடியாகும்\\ ரசித்தேன்.
அந்த ரோபோ உதாரணம். - nailed it.
முடிவுரையாக - 3டி ப்ரிண்டர்கள் வரத்தான் போகின்றன - ??? இன்னமும் பரவலான பயன்பாட்டிற்கு வரப்போகின்றன என்று சொல்ல வந்தீர்களோ? Additive உற்பத்தி முறை விளையாட்டுப் பொருட்கள் உலகில் மிகவும் பரவலாக இருக்கிறதே. ஒரு நகர போக்குவரத்து சூழலுக்குண்டான அத்தனை பொருட்களையும், ஒரே செட்டாக, சிறிய மாடலாக டிசைன் செய்து பிளாஸ்டிக்கில் உருவாக்கி (3D ப்ரிண்ட் செய்து) சின்ன டப்பாவில் போட்டுக் கொடுத்து விடுகிறார்கள். இப்படி நுணுக்கமான விளையாட்டு செட்டுகள் பல கிடைக்கின்றன. GM, Chrysler போன்ற பெரிய தொழிற்சாலைகளும் பெருமளவிற்கு Additive உற்பத்தி முறையில் முதலீடு செய்கின்றன.
நீங்கள் சொல்வது போல, பெரிய நிறுவனங்கள் நிறைய Franchiseகள் உருவாக்கி, Supply-chain managementஐ எளிமையாக்க முடியும். Quality Control மட்டும் சள்ளைபிடித்ததாக இருக்க புதிய பிராசஸ்கள் கொண்டு வந்து ஈடுகட்டுவார்கள்.
இதன் சாத்தியம், மற்றும் பாதிப்புகள் பற்றியெல்லாம் எனக்கு நன்றாகவே புரிகிறது. இது எந்த அளவிற்கு தொழில்துறையை revolutionize செய்யும் என்பதில்தான் நான் விவாதத்தில் ஈடுபட விழைந்தேன். ஒரு sustaining தொழில்நுட்ப முன்னேற்றமாக இருப்பதை (நடைமுறை வலுப்படுத்துவது / விரைவுபடுத்துவது) மீடியாக்களும், கார்பொரேட்களும் disruptive தொழில்நுட்பமாக முன்வைக்கிறதோ (to promote consumerism) என்பதே என் ஐயம்.
ஜூப்பர்் சுரேஷ். After a long gap sujatha style writing
ஜூப்பர்் சுரேஷ். After a long gap sujatha style writing
ஜூப்பர்் சுரேஷ். After a long gap sujatha style writing
பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் எல்லாமே 3டி பிரிண்டிங் கான்செப்ட்தானே?
உதிரிபாகங்களுக்கான டீலர்- 3டி பிரிண்டிங் பின்னாட்களில் சாத்தியமே.
PCB இதில் வராது. அப்படி பார்த்தால் 25 வருடங்களுக்கு முன்பே சென்னையில் typeset செய்து, bangalore-இல் ப்ளேட்டாக பிரிண்ட் செய்த ஹிந்து பத்திரிகை கூட 3D printing என்று வந்துவிடும். ஆவி remote printing 3d printing இல்லை.
Nat Sriram, சைசைச் சரி பண்ணிட்டேன். கருத்தெல்லாம் ஒண்ணும் இல்லையா?
நன்றி சத்யா.
ஸ்ரீதர்:நன்றி.
/இன்னமும் பரவலான பயன்பாட்டிற்கு வரப்போகின்றன என்று சொல்ல வந்தீர்களோ?/ ஏறத்தாழ. ஆனால் அந்த வரி ரசனைக்கான பதில். வரபோகாமல் இருக்கப்போகின்றன என்பதற்கான பதில்.
மல்டிபிள் விஷயங்கள் சாத்தியம்தான். அந்தக்கால ப்ளாட்டரிலேயே பல கலர்மைகளை வைத்து கலர் பிரிண்ட் செய்தோமே, அந்த அடிப்படைதானே. ஆனால் நான் சொல்ல்வருவது மெட்டல்கள் - அதில் இன்னும் பெரிய ஸ்டெப் எடுக்கப்படவில்லை. அதற்கு பவுடர் மெட்டலர்ஜி துறை பாய்ச்சல் காட்டவேண்டும்.
/மீடியாக்களும், கார்பொரேட்களும் disruptive தொழில்நுட்பமாக முன்வைக்கிறதோ (to promote consumerism) என்பதே என் ஐயம்./ ரோபோவை அப்படித்தானே செய்தார்கள்? எந்த ரோபோவாவது கதைகளில் நம்மை ஆட்சி செய்யாமல் இருந்திருக்கிறதா? கண்ணுக்குத் தெரியாமல் வளர்ந்தால்தான் சாத்தியம். இவனுங்க நாய்க்கண்ணு பேய்க்கண்ணு முன்னாடிஎல்லாம் நல்லது நடக்கமுடியாது :-)
முரளிகண்ணன், நன்றி.
யோசிப்பவர், நன்றி * 3 :-)
முரளி, பிரிண்டட் சர்க்யூட் போர்ட்கள் தயாரிப்பில் கம்ப்யூட்டர்கள் நிச்சயமாக இருக்கின்றன. ஆனால் அவை 3டி ப்ரிண்டிங்கா? இன்றைய டெக்னாலஜியில் ப்ரிண்டர் சால்டரிங் எல்லாம் செய்யுமா? இப்போதைக்கு இல்லை.
ஆதிமுருகன், நன்றி.
ஆமாம் - நீங்கள் சொல்வதுபோல பிசிபிக்கள் ப்ரிண்டிங்கை டைப் செட்டிங்கோடு ஒப்பிடலாம்.
ஆனால் அதென்ன ஆவி 3டி? இப்போது படங்களைப் பதிப்பிக்கிறார்களே அதா?
// நான் சொல்ல்வருவது மெட்டல்கள் - அதில் இன்னும் பெரிய ஸ்டெப் எடுக்கப்படவில்லை. அதற்கு பவுடர் மெட்டலர்ஜி துறை பாய்ச்சல் காட்டவேண்டும். //
புரிந்தது. :-) பொறுமையாக விளக்கியதற்கு நன்றி சாரே!
3டி பிரிண்டிங் என்பது சி.என்சி லேத் போலத்தான், அதனால் பயன்கள் உண்டு, இன்னும் மேம்படுத்த செய்துவிடுவார்கள், வந்த அன்னிக்கெ ஜெட் பிளேன் செய்து பறக்க விடனும்னா எப்பூடியாம்?
நானோ டெக்னாலஜில செல்ஃப் ரெப்ளிகேட்டிங் மாலிக்கியூள் வச்சு ஒரு முழு அமைப்பே உருவாக்கலாம்னு ஒரு கட்டுரைக்கூட படிச்சேன் ,அதெல்லாம் நடைமுறைக்கு வர நாள் ஆகும், அப்படி வந்தால் , எல்லாமே மலிவா தயாரிச்சுடலாம்.
செல்ஃப் ரெப்ளிகேட்டிங் ரோபோ ஆராய்ச்சி தான் இப்போ வேகமா நடக்குதாம்.
#//வில்ஃபோன் (WLL Phone) என ஒரு ஜந்து குறைப்பிரசவம் ஆனது யாருக்காவது நினைவிருக்கிறதா? அன்றைய தேதியில் அது செல்ஃபோனைவிட மலிவு. ஆனால் என்ன, தாய் டவரில் இருந்து 3 கிலோமீட்டருக்குமேல் வேலை செய்யாது. 2-3 வருடங்களிலேயே 1000 ரூபாய்க்கு செல்ஃபோனும் 10 பைசா கால்களும் வந்ததில் வில்ஃபோன் வீணாகிப்போனது.//
WLL -ireless in local loop , தான் CDMA - code division multiple access .
பேரு தான் வேற வேற மாதிரி சொல்லிக்கிட்டாங்க, பி.எஸ்.என்.எல் WLL முடக்க காரணம் , ரிலையன்ஸ் அவங்க WLL ஐ CDMA என்ற பெயரில் தான் தான் பயன்ப்படுத்தி வந்தாங்க,அதுவும் பி.எஸ்.என்.எல் டவர் வச்சு அவ்வ்.
மேலும் அப்பொழுதே, அமெரிக்கா தவிர்த்து மற்ற நாடுகளில் CDMA/WLL நுட்பம் பரவலாக இருந்தது.
இப்பவும் CDMA தான் டாப்பில் இருக்கு 3ஜி எனப்படுவது WCDMA தான், இதுவும் டவரில் இருந்து 3 கி.மீக்கு மேல வேலைக்காவாது அப்புறம் 2ஜி தான் அவ்வ்.
எனவே CDMA காலாவதி ஆகலை டெவெலப் ஆகி முன்னாடி போயிட்டு இருக்கு,ஜி.எஸ்.எம் தான் பின் சீட்டுக்கு போயிடுச்சு.
வவ்வால். கருத்துக்கு நன்றி.
WLL பரிணாம வளர்ச்சியடைந்து தொடருதுன்றீங்க, நான் அந்த வடிவத்துல அது செத்துப்போச்சுன்றேன். ரெண்டு பேருமே சரிதானே.
/செல்ஃப் ரெப்ளிகேட்டிங் மாலிக்கியூள்/ இது பிரிண்டரைவிட இன்னும் சுவாரஸ்யமா இருக்கும் போலிருக்கே. தோண்டிப்படிக்க வேண்டியதுதான்.
சுரேஷ்,
வில் வச்சு அப்போவே ரிலையன்ஸ் நல்லா காசுப்பார்த்தது எனவே குறைப்பிரசவம் அல்லனு சொல்ல வந்தேன். இப்போ அடுத்த பரிமாணத்துக்கும் போயாச்சு.
செல்ப் ரெப்ளிகேட்டிங் மாலிக்கியூல் ,வச்சு 3டி எந்திரம் அல்லது ஏதோ ஒன்றை உருவாக்க ஆய்வு நடப்பதாக வத கட்டுரை ,
http://phys.org/news100264289.html
வருங்காலத்தில பெரிய தொழிற்சாலைலாம் தேவைப்படாம எங்கே வேண்டும்னாலும் தயாரிச்சுக்கலாம்னு நிலை வருமோ அவ்வ்!
அழகான நடையில் அற்புதமான விளக்கம்
எங்கடா வவ்வால் படிக்காம போயிடுவாரோ என்று பயந்தேன். நல்ல மேற் தகவல்களை அள்ளிக்கொடுத்துள்ளார்.
3டி - கட்டுமானத்துறையில் ஒரு சில இடங்களில் பயன் அளிக்கலாம்.
Post a Comment