Sep 3, 2014

தடம் மாற்றிய புத்தகங்கள்

நான் ஒரு மசாலாவிரும்பி. நீளநீளமாக விவரணைகள் உள்ள கதைகளை ஒரேதாண்டாகத் தாண்டி வசனம் இருக்கும் இடத்துக்கு ஓடிவிடக்கூடிய பொறுமை செத்த ஆசாமி. அதனால்தான் நான் எழுதிய கதைகளிலும்கூட வர்ணனைகள் தேவைப்படும் இடத்தில்கூட வசனமாகவே எழுதிவிட்டேன். நுட்பமான எழுத்து என்பதைவிட, சிக்கலான கதை என்பதைத்தான் ஆசையாய்ப் படிப்பேன். சுயமேம்பாடு என்பது என் படித்தலின் நோக்கமல்ல, பொழுதுபோக்குதான். சிறுவயதிலேயே தமிழ்நாட்டைவிட்டு, தமிழ்க்கதைப் புத்தகங்களை விட்டு வெளியேறிய காரணத்தால் மட்டும்தான் நான் ஆங்கிலப் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். ஆங்கிலத்திலும் அதே வரையறைதான். ரத்தம் தெரிக்கவேண்டும், குண்டுவெடிக்கவேண்டும். அதுதான் நல்ல கதை.

என்னுடைய பட்டியல் உள்ளொளி எல்லாம் பெருக்காது. புளியமரமா என்னது அது, ஜேஜேவா யாரவன் என்ற கேள்வியெல்லாம் கேட்கவைக்காது. அப்புறம் என்ன பட்டியல் இது?

சினிமாவில் எல்லாம் ஒரு காட்சி வரும். ஹீரோ ஹீரோயினிடம் காதல் சொல்ல வரும் காட்சியில் சினிமாவுக்குள்ளேயே ஒரு நாடகமோ இன்னொரு சினிமாவோ அதே காட்சியமைப்புடன் வரும், ஹீரோ அதைப்பார்த்து மனம் மாறுவான். க்ளீஷேவான காட்சியமைப்புதான் என்றாலும் சிலவேளைகளில் இப்படி உண்மையிலேயே நடப்பதும் உண்டுதான். நான் படித்த சில புத்தகங்கள், என் வாழ்க்கையின் தடத்தை, பார்வையை மாற்றிப்போட்டிருக்கின்றன - அப்படிப்பட்ட சில புத்தகங்களைப் பட்டியலிடுகிறேன்.

1. நிர்வாண நகரம் (சுஜாதா) - பத்தாவது வகுப்பு முடித்த லீவில் என்ன செய்வதென்று தெரியாமல் ஊர்சுற்றிக் கொண்டிருந்தபோது ஒரு லெண்டிங் லைப்ரரியில் காலைமுதல் மாலைவரை உட்கார்ந்து லக்ஷ்மி சாண்டில்யன் என்று படித்துக்கொண்டிருந்தபோது கிடைத்த முத்து இது. ஹீரோ நல்லவன் வில்லன் கெட்டவன் என்றெல்லாம் இல்லாமல் புத்தியை வைத்து நகரத்தைப் பழிவாங்க நினைக்கம் ஜீவராசி அன்று என்னை ஆட்கொண்டான். கதாபாத்திரங்கள் கொஞ்சமேனும் அறிவாளிகளாக இருக்கவேண்டும் என்ற சூத்திரத்தைச் சொல்லிக் கொடுத்தது இந்தக் கதை.

2. வால்காவிலிருந்து கங்கை வரை ( ராகுல சாங்கிருத்தியாயன்) முதல் முறை இதைப் படிக்கும்போது எனக்கு 17 வயதிருக்கும். அதில் உள்ள சிறுகதைகளைவிட, தலைமுறை என்பது 30 வருஷம் என்று அவர் போட்டிருந்த கணக்கு என்னை வசீகரித்தது. மஹாபாரத காலத்தில் பிராமணர்கள் தின்ற மாட்டுக்கறியில் தொடங்கி ஆற்று வெள்ளத்தில் தள்ளாடும் சமகாலக் கதை வரை மாற்றங்களைத் தெளிவாகச் சொன்ன நாவல். அதுவரை தெரிந்திராத பல விஷயங்களைப் புரியவைத்தது.

3. குருதிப்புனல் (இந்திரா பார்த்தசாரதி) - இதுவும் பின்புலம் எதுவும் தெரியாமல் படிக்கத் தொடங்கிய கதைதான். கிராமத்து முட்டாள்களை உயர்பீடத்திலிருந்து பார்க்கும் அறிவுஜீவிகளுடனே நகரும் கதை முடிவை நெருங்கும்போது கொடுத்த உதை, நான் கண்முன்னே பார்த்துக்கொண்டிருந்த பீகார் ஜாதிவெறியர்களை மாற்றுக்கண்ணோட்டத்துடன் பார்க்கவைத்தது.(கரும்புனல் தலைப்பு இதன் பாதிப்புதான்)

4. Strong Medicine (Arthur Hailey) - இது அவ்வளவாகப் பிரபலமாகாத ஆர்தர் ஹெய்லி நாவல்களுள் ஒன்று. வேலை பிடிக்காமல் மாறத் தவித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரே நிறுவனத்தில் மேலுக்கு உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டு, திறமையும் பொறுமையும் இருந்தால் என்று எனக்குப் புரியவைத்து, என் கேரியர் சாய்ஸை உணர்த்தியதால், எனக்கு மிகவும் நெருக்கமான நாவல்.

5. 18ம் அட்சக்கோடு (அசோகமித்திரன்) - இதுவும் என்னைக் கதாபாத்திரமாக்கி உள்ளே இழுத்துக்கொண்டுபோய் சரளைக்கற்களில் அடிவாங்கவைத்த நாவல். சந்துரு என்னும் சந்திரசேகரனாகச் சில அத்தியாயங்கள், தன்மை ஒருமையில் சில அத்தியாயங்கள் என்று குழப்பினாலும், முடிவில் கதாபாத்திரத்துக்கு ஏற்படும் அதிர்ச்சியைக் கொஞ்சம்கூடக் குறையாமல் படிப்பவர்களுக்குக் கடத்திய சம்பவக் கோர்வை.(கரும்புனல் நாயகன் சந்திரசேகரன் - இந்த நாவலுக்கான ட்ரிப்யூட்)

6. Fourth Protocol (Frederick Forsyth) - சாதா மசாலா நாவல்தான். ஆனால் கதையின் அமைப்பு என் பிற்கால நாவல்களை எந்த அளவு பாதித்திருக்கிறது என்பதை நானே படிக்கும்போது உணர்ந்துகொண்டேன். இதற்குமுன் நான் படித்த கதைகளில் எல்லாம் சாதா 9-5 ஆசாமிகளைத் தனிக்கதையிலும், ஸூட் போட்ட அதிகாரிகள், நாட்டுத்தலைவர்கள், கண்ணுக்குத் தென்படாத ஒற்றர்களையெல்லாம் தனிக்கதையிலும்தான் படித்திருக்கிறேன். இவர்களை ஒரே கதையில் இணைத்தால் சுவாரஸ்யம் கூடும் என்று சொல்லிக்கொடுத்த நாவல்.

7. Third Wave (Alvin Toffler) - இதுவரை சொல்லாத ஜாதி. நான்-ஃபிக்‌ஷன் படிக்கப் பிடிக்காத எனக்கு வித்தியாசமான உதாரணங்கள் மூலம் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லிக்கொடுத்த புத்தகம். இருபது ஆண்டுகளுக்கு முன் படித்தேன். இதில் படித்த உதாரணங்களை இன்றும் உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

8. Gone With the Wind (Margaret Mitchell) - எனக்குக் காதல்கதைகளே பிடிக்காது. Epic Love Story என்ற டேக்லைனுடன் கிடைத்த இந்தக் கதையை பலவருடங்கள் படிக்காமலேயே வைத்திருந்தேன். ஒரு வேலையற்ற நாளில் படிக்கத்தொடங்கியவுடன் டேக்லைனைக் கிழித்து எறியத் தோன்றியது. யுத்தம் என்பது சாமானியனின் வாழ்வில் எப்படியெல்லாம் விளையாடும் - அவர்கள் காதல் உள்பட என்று சொன்ன நாவலை, காதல் கதை என்று சுருக்கியதால்.

9. ஏழாம் உலகம் (ஜெயமோகன்) - சமீபத்தில் மிகமிக பாதித்த ஒரு நாவல். நான் கடவுளாக கொத்துக்கறி போடப்பட்டாலும் கோயில் வாசலில் உள்ள 'உருப்படிகளை' மனிதர்களாகப் பார்க்கச் சொல்லிக்கொடுத்ததால், இந்தப் பட்டியலில் இடம் பெறுகிறது.

10. தா, மறுபடி தா (பட்டுக்கோட்டை பிரபாகர்) - ரேடியோ நாடகத்தின் தம்பி என்று ஒரு வர்ணனைகூட இல்லாமல் எழுதப்பட்ட நாவல்கள்.. இதன் க்ராஃப்டுக்காக, என்னை ஸ்கிப் செய்யாமல் முழுமையாகப் படிக்க வைத்ததற்காக, இப்படியும் எழுதலாம் என்று என்னை ஊக்குவித்ததற்காக, இது என் மனதுக்கு நெருக்கமான நாவல்.

நிறைய விடுபட்டிருக்கிறதுதான். ஆனால் நான் எடுத்துக்கொண்ட அளவுகோலில் இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லமுடிகிறது.

இன்னும் மூன்றுபேரைக் கோத்துவிட்டு, அவர்களிடம் அடிவாங்க எனக்குத் தெம்பில்லை. என்னை அழைத்த பாராவுக்கு நன்றி (:-)) 

 

blogger templates | Make Money Online