நண்பர் சொக்கன் எழுத்துப்பயிற்சியில் விதவிதமான சவால்களை வைத்து எழுதவைக்கிறார். இப்போது அவர் கொடுத்திருக்கும் சவால், முழுக்க முழுக்க உரையாடல்களால் ஆன கதை, முதல் மூன்று வரிகள் அவர் தந்தது.
இது எனக்கு வசதிப்பட்ட களம் என்பதால் இலவசம் ஊக்குவிக்க, எழுதிவிட்டேன்.
*****
'என்னடா, முகம் வாடியிருக்கு! எதாவது பிரச்னையா?'
'அதெல்லாம் ஒண்ணுமில்லைடா.'
'ப்ச், சும்மாப் பொய் சொல்லாதே. உன் குரலும் சரியில்லை. உண்மையைச் சொல்லு.'
“அதான் ஒண்ணுமில்லைன்றேனில்ல..”
“அடேய்.. உன்னை யுக யகமாத் தெரியும்டா எனக்கு.. உன் மூஞ்சி ஒண்ணும் இல்லாம இருந்தா எப்படி இருக்கும், கவலையா இருந்தா எப்படி இருக்கும்னு கூட எனக்குத் தெரியாதா? சொல்றியா, லக்ஷ்மிகிட்ட போட்டுக் கொடுத்துரவா?”
“நீ என்ன துர்வாச முனிவரா? விரல் பட்டதுக்கு சாபம் விட்ட மாதிரி மிரட்டறே? இது சப்பை மேட்டர்..விட்டுரு.”
“சப்பை மேட்டர்ன்னா.. சொல்றதுக்கு என்ன?”
“சரி.. என்னிக்காச்சும் ஒருநாள் உனக்கும் தெரியத்தான் வேணும். சொல்லிடறேன். சிவா இருக்கானில்ல.. அவன் கொஞ்சம் பயமுறுத்திட்டான்..”
“யாரு? கஞ்சாகுடிக்கி சிவாவா? அவனெல்லாம் ஒரு ஆளுன்னு.. ”
“இல்லடா.. மேலிடத்துக்கு வேண்டப்பட்டவன்.. அவன் சொன்னது நடந்துருச்சுன்னா? அவன் கோவக்காரன் வேற…”
“ஆமாம். பயப்பட வேண்டியதுக்கு பயப்படத்தான் வேணும்.. சரி.. என்ன சொன்னான் சொல்லு?”
“ப்ரமோஷன் டைம் வேற.. நம்ம ரெண்டு பேர்ல யாருக்கு ஆபிஸ்ன்னு கண்டுபிடிக்க டாஸ்க் செட் பண்ற வேலைய அவன் எடுத்துக்கப் போறானாம்.”
“சரி விடுடா.. என்ன டாஸ்க்கா இருந்தா என்ன.. ஒரு கை பாத்துடலாம். நாம பாக்காத டாஸ்க்கா? எவ்ளோ புதுசு புதுசா உருவாக்கியிருக்கேன் நான்.. உனக்கு மட்டும் என்ன குறை? ஆரம்பத்துல இருந்து இன்னி வரைக்கும் நீ இந்த ஆபிஸ்ல பாக்காத வேலை உண்டா.. போடாத அவதாரம் உண்டா? ஆரோக்கியமான போட்டியா இருக்கட்டும்..”
“ஜஸ்ட் ப்ரமோஷன் போட்டியா இருந்தா பரவாயில்ல.. ஒருவேளை டாஸ்க்கை முடிக்கலைன்னா.. வேலை செய்ய ஆபீஸே இருக்காதாம். அப்படி டெர்ம்ஸ் போட்டிருக்காங்களாம்.”
“அடேங்கப்பா.. அப்படியென்ன டாஸ்க்காம்?”
“கொஞ்சம் நூல்விட்டுப் பார்த்தேன். அவன் டிபார்ட்மெண்ட்ல முருகன் இருக்கானில்ல.. அவன் என்னை மாமான்னுதான் கூப்பிடுவான். அவ்ளோ க்ளோஸ்.. அவன் எதோ அரசல்புரசலாக் கேள்விப்பட்டதைச் சொன்னான்.”
“அப்புறமென்ன.. டாஸ்க்கே தெரிஞ்சிருச்சு. என்கிட்ட சொல்வியா.. இல்லை போட்டின்னு..”
“சேச்சே.. என்னை அவ்ளோ மோசம்னு நினைக்கறியா? எனக்குத் தெரிஞ்சதை உனக்குச் சொல்லலைன்னா அது ஏமாத்தி ஜெயிக்கறதா ஆயிடாது? அந்தக் கேடுகெட்ட வேலையை நான் செய்வேனா?”
“சரிடா புருஷேஷ்ட்டா! மேட்டரைச் சொல்லு”
“அந்தச் சிவனோட ஆதி எங்கே இருக்கு, அந்தம் எங்கே இருக்குன்னு கண்டுபிடிக்கணுமாம். நான் பாதாளத்துக்குப் போய் அந்தத்தைத் தேடணுமாம், நீ ஆகாயத்துக்குப் போய் முடியைக் கண்டுபிடிக்கணுமாம்.”
“அவ்ளோதானே.. கொஞ்ச நேரம் அப்படியே சுத்திட்டு, கண்டுபிடிச்சிட்டேன்னு சொல்லிட்டாப் போச்சு”
“சோம்பேறி பிரம்மா! உண்மைக்கும் உனக்கும் ஆகாது போல.. இதுனாலதாண்டா உனக்கு ஒரு கோயில்கூட கட்டப் போறதில்ல..”
****புராணக்கதைதான். புண்படுபவர்கள் புராணத்தின் மேல் புண்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.