Nov 29, 2005

கருத்து தேவை இல்லை!

இன்றைய சன் டிவி செய்திகளில் வழக்கம் போல கலைஞர் கருத்து. நான் எந்த வெட்டோ ஒட்டோ செய்யாமல் சாராம்சத்தை அப்படியே தருகிறேன்.


செய்தித் தலைப்பு:

சுனாமி நிதியில் சுருட்டல்.

ஆட்சியில் இருப்போர் அதிகாரத்தைப் பயன்படுத்தி கோடி கோடியாக ஊழல் செய்துள்ளனர்.

வெள்ள நிவாரணத்துக்கும் நிதி சேர்ந்திருக்கிறது

இதிலும் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது.

அரசாங்கம் மட்டும் இன்றி அனைத்துக்கட்சிகுழு ஒன்று வெள்ள நிவாரண நிதியை கையாள வேண்டும்.

வழக்கமாக படம் காட்டினால்தான் இந்தப்படத்துக்கு கருத்து தேவை இல்லை என்று போடுவோம்.

இங்கே இந்தக் கருத்துக்கு மேல் கருத்து எதுவும் தேவை இல்லை.

Nov 21, 2005

வந்தாச்சு அவன் விகடன் (21 Nov 05)

அவன் விகடன் வேண்டும் எனக்கேட்டிருக்கிறார் ராமச்சந்திரன் உஷா.

மற்றவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதையே லட்சியமாகக் கொண்ட பெனாத்தலார் அதற்கான ஆயத்தங்களில் உடனடியாக ஈடுபட்டுவிட்டார்.

இதில் எதுபோன்ற கட்டுரைகளும் தொடர்களும் ரெகுலர் துணுக்குகளும் வரவேண்டும் என்பதற்கு மகளிர் பத்திரிக்கைகளையே ஆதாரமாக எடுத்துக்கொண்டு தொழிலைத்தொடங்கிவிட்டார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

என் டைரி

என் பெயர் (வேண்டாமே) (Jean-Claude Van Damme இல்லை!), வயது 35. எனக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன.

திருமணமான புதிதில் வாழ்க்கை நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால் யார் கண்பட்டதோ, திடீரென்று என் வாழ்வில் புயல் அடிக்க ஆரம்பித்துவிட்டது.

ஆம் - என் மனைவி குறட்டை விடத் தொடங்கிவிட்டாள்!

DTS எஃபெக்ட்டில் தினமும் ராத்திரி 10 மணிக்கு மேல் அருகில் உள்ளவர் குறட்டை விடும்போது தூங்க முயற்சி செய்திருக்கிறீகளா? செய்து பாருங்கள்.. இதனால் என் தூக்கம் தினமும் கெட்டுப்போய் அலுவலகத்திலும் தூங்கி வழிந்ததால் வேலை போய்விட்டது.

இப்போது என் மனைவி ஏறத்தாழ 80 டெஸிபெல்லுக்கு மேல் குறட்டை விடுகிறாள். பகல் முழுவதும் அரட்டை, இரவு முழுவதும் குறட்டை என்று என் வாழ்க்கை சீரழிந்துவிட்டது.

நேயர்கள் என் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல முடியுமா?

வாசகர்கள் பதில்

நெல்லையிலிருந்து பரசுராமன் எழுதுகிறார்: என் தோழா, உனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எண்ணிப்பார்க்கும்போது என் கண்கள் கலங்குகின்றன. கொடுமைக்கார மனைவியரிடம் மாட்டி சீரழிந்து போய் இருக்கும் லட்சக்கணக்கான உன் போன்ற ஆடவர்கள் அந்தச் சிறையை விட்டு வெளியே வர வேண்டும். உடனடியாக விவாகரத்துக்கு எழுது. நாங்கள் இருக்கிறோம்.. தைரியமாக இரு. (இவர் முழு முகவரி எழுதவில்லை என்பது குறிப்பிடத்தகாதது)

ஆம்பூரிலிருந்து அன்பழகன் எழுதுகிறார்: என் கண்மணி, உன்னைப்போல் நானும் மனைவியின் குறட்டையால் அவதிப்படுபவன் தான். என்ன செய்வது! பகலின் அரட்டையையாவது தவிர்க்கலாம், இரவில் நாம் எங்கே போவது? ஏழைகளுக்கு இதிலிருந்து என்ன விடிவு? என்று நம் காதுகளுக்கு சுதந்திரம் கிடைக்கிறதோ அன்றுதான் முழுமையான விடுதலை நாடாகத் திகழ முடியும்.

ஆதம்பாக்கத்திலிருந்து கணபதி சுப்ரமணியம் (வயது 72) எழுதுகிறார். அந்தக்காலத்தில் எல்லாம், மனைவிகள் குறட்டை விடும்போது நாங்கள் காதில் துணியை அடைத்துக்கொள்வோம். சமீபத்தில் இல்லினாய்ஸில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக வேலை பார்க்கும் என் பேரன் இதற்கென்றே அழகாக வடிவமைக்கப்பட்ட ப்ளாஸ்டிக் காது அடைப்பானைக் கொண்டு வந்திருந்தான். அதற்குப் பிறகு கேர்ஃப்ரீயாக வாழ்கிறேன்,

மொத்த வாசகர்களின் தீர்வு விவரம் --

கஷ்டப்பட்டு சகித்துக்கொள் - 3%
விவாகரத்து செய் - 78%
காதில் பஞ்சு அடைத்துக்கொள் - 19%

குறட்டையைப்பற்றி டாக்டர் பத்ரனிடம் ஆலோசித்தபோது அவர் கூறியது:

குறட்டை என்பது தூக்கத்தில் மட்டுமே வரக்கூடிய ஒரு சத்தம். இப்படிப்பட்ட நோயாளிகள் விழித்துக்கொண்டிருக்கும் போது நல்ல நலத்துடனே தெரிவார்கள். அவர்களை சுலபமாக பிரித்துப்பார்க்க முடியாது. இந்த நேயர் குறிப்பிடும் வியாதி மிகவும் முற்றிப்போன நிலையில் இருந்தாலும், என் மருத்துவமனைக்கு அழைத்து வந்தால், இவர் மனைவிக்கு சிடி ஸ்கான், ரத்தப் பரிசோதனை, மரபணுப்பரிசோதனை அனைத்தும் நடத்தியபின், அவர்களிடம் பணம் மிச்சம் இருந்தால் இந்த வியாதியை குணப்படுத்திவிட முடியும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேபிள் கலாட்டா

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எஃப் டிவியின் பல நிகழ்ச்சிகளைப்பற்றிய கேள்விகளை அள்ளித்தெளித்திருந்ததால், நம் நீலகண்ட மாமா கைனெட்டிக் ஹோன்டாவை விரட்டி, மிலனில் இருக்கும் ஆடை வடிவமைப்பாளர் ஜானைச் சந்தித்தார்.

"என்ன மாமா, ரொம்ப நாளா இந்தப் பக்கமே காணோம்" உற்சாகமாக வரவேற்றார் ஜான்.

"என்ன இப்பெல்லாம் உங்களை எஃப் டிவியிலே பாக்கவே முடியறதில்லே? என்று போட்டு வாங்கினார் மாமா.

"என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க? பாரீஸிலே ஃபேஷன் வீக், லாஸ் ஏஞல்ஸிலே ஃபெஷன் வீக் ரொம்ப பிஸியாயிட்டேனா - அதனாலேதான் உங்களைப் பார்க்க முடியலே" என்று சுகமாக அலுத்துக்கொண்டார்.

"இப்பெல்லாம் ஃபேஷன் டிசைனிங்க் ரொம்ப சுலபமாயிடிச்சு.. எல்லாரும் ஒரு கத்திரிக்கோலோட கிளம்பிட்டாங்க.. இருந்தாலும், எனக்கு பொறாமை எல்லாம் கிடையாது. நாகரீகத்தாய்க்கு செய்யற சேவையாவே இந்தத் தொழிலைக் கருதறேன்"னாரு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு.

வாசகர் கடிதம்

"மூன்டிவி"யிலே ராத்திரி 12 மணிக்கு வர மசாலா மிக்ஸ் லே வர பாட்டுக்களெல்லாம் சுத்த சைவமா மாறி விட்டன. ஏமாற்றமா இருந்தாலும், இளைய தலைமுறைக்கு நல்ல பாடல்களைக் காட்டற இவங்க சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்" என்று புகழாரம் சூட்டுகிறார், அம்பத்தூரிலிருந்து அறிவுடை நம்பி.

கயா டிவியில் கடந்த 15ஆம் தேதி செய்தி வாசித்த சொக்கலிங்கம் தன் மூக்குக் கண்ணாடியை புதிய ஃப்ரேமில் மாற்றிவிட்டார், புதுக்கண்ணாடி அவர் முகத்துக்கு மேலும் மெருகு சேர்க்கிறது" உணர்ச்சிவசப்படுகிறார், கடலூரிலிருந்து கலியபெருமாள்.

"8 ஆம் தேதி நடந்த ஃபுட் பால் மேட்ச்சின் இடைவேளையில் காண்பித்த காக்காய்கள் இரண்டும் மிக அருமை. ஒளிப்பதிவாளருக்கு திருஷ்டி சுத்திப் போடவேண்டும்" நெகிழ்கிறார் தேனியிலிருந்து குணசேகரன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாசகர் கோட்டா - அனுபவங்கள் பேசுகின்றன

காசியில் விஸ்வனாதர் ஆலயத்துக்கு சென்றிருந்தேன். அங்கே கோயில் வாசலில் செருப்பு விட்டுக் கொள்ளலாம் என்று சொல்லும் போது இடை மறித்த எங்கள் ஹோட்டல் மானேஜர், அங்கே அதிக செல்வாகும், 2 கிலோ மீட்டர் தூரம்தானே, இங்கேயே விட்டுச்செல்லுங்கள் என்று கூறினார்.

செருப்பில்லாமல் நடந்தது கஷ்டமாக இருந்தாலும், 25 பைசா சேமித்துவிட்டோம் என்ற திருப்தியில் வலி பறந்தே போய்விட்டது.

நம் ஊரில் உள்ள ஹோட்டல் மானேஜர்கள் இப்படி நடந்து கொள்வார்களா? சந்தேகம்தான்.

கிருஷ்ணன், கீழ்பாக்கம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

வாசகர் கோட்டா - வாண்டு லூட்டி

விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த என் பேரன் துஷ்யந்த் (வயது 4, UKG படிக்கிறான்), ட்வின்க்கிள் ட்வின்க்கிள் லிட்டில் ஸ்டார் ரைம் பாடச்சொன்னால், முதல் வரியைப் பாடிவிட்டு, இரண்டாவது வரியாக "ரஜினிதான் எப்பவும் சூப்பர் ஸ்டார்" என்று பாடுகிறான்.. இந்தக்கால பிள்ளைகளின் அறிவையும், விஷய ஞானத்தையும் எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

தம்பித்துரை, தாம்பரம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுயமாய் தொழில் செய்வது எப்படி? (தொடர்)

இந்த வாரம் சுய தொழில் பகுதிக்க்காக, காலேஜ் வாசலில் டீக்கடை வைத்திருக்கும் மாதவன் நாயரைச் சந்தித்து பேட்டி கண்டோம்.

"முதலில் டீ மட்டும்தான் போட்டுக்கிட்டிருந்தேன். அப்புறம் முறுக்கு, புளி சாதம்னு பிசினெஸ் டெவெலப் ஆச்சு.

காலேஜ் பசங்க எல்லாம் டீ ஷர்ட் போடறாங்களேன்னு யோசிச்சு, நமிதா, அசின் படம் எல்லாம் பிரிண்ட் பண்ண பனியன்களையும் விற்க ஆரம்பிச்சேன்.

இப்போ நான் என்ன எல்லாம் பண்ணறேன்னு எனக்கே தெரியாது.

என்னை நம்பி இங்கே ஒரு குடும்பமும், கேரளாவிலே ஒரு குடும்பமும் பசியாற சாப்பிட முடியுது.

அதையும் தவிர, பசியோட வர தெரு நாய்ங்களுக்கு, பழைய பொறையை எல்லாம் போட்டு பசியாத்தறதுலே ஒரு ஆத்ம திருப்தியும் கிடைக்குது என்றார் நாயர்.

டீ செய்வது எப்படி?

  • சுடுதண்ணீரை வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்
  • டீ-பைகள் (மளிகைச் சாமான் கடைகளில் கிடைக்கும்) பக்கத்தில் வைத்து விடுங்கள்
  • சர்க்கரை ஒரு கிண்ணத்திலும், பால் ஒரு பாத்திரத்திலும் அருகே வைத்து விடுங்கள்
  • யாருக்கு எவ்வளவு வேண்டுமோ அதை அவர்கள் போட்டு சாப்பிடுவார்கள்.
    -------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆதி பதில்கள்
(கோலங்கள் தொடரில் நடிக்கும் வில்லன் ஆதி, நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்)

கே: என் மேலதிகாரிக்கு என்னைக்கண்டாலே ஆவதில்லை. எதற்கெடுத்தாலும் சிடுசிடுத்து விழுகிறார். வேலையையே விட்டு விடலாம் போல இருக்கிறது. என்ன செய்வது ஆதி?

ஆதி பதில் : ஒரு குட்டிக்கதை கேள்விப்பட்டிருப்பீர்கள் - ஒரு ஊர்லே ஒரு காக்கா இருந்துதாம், அப்புறம் அது பறந்து போயிடுச்சாம். இதிலிருந்து என்ன தெரிகிறது? மாறுதல் மட்டும்தான் மாறாதது. இன்னிக்கு உங்கள் மேலதிகாரி உங்களைத் திட்டலாம். நாளைக்கு நீங்க மேலதிகாரி ஆயிட்டீங்கன்னா, எப்படித் திட்டறதுன்றதுக்கு ஒரு பயிற்சியா இதை எடுத்துக்குங்க. ஒண்ணு மட்டும் புரிஞ்சிக்கங்க - விழுந்தவனுக்கு கால்கள் எல்லாம் பூட்டு, எழுந்தவனுக்கு விரல்கள் எல்லாம் சாவி.

கே: என் மாமனார் என்னை மதிக்க மாட்டேன் என்கிறார்.. என்ன செய்வது?

ஆதி பதில் : பிட்டு போட்டாதான் எக்ஸாம்லே பாஸ் பண்ண முடியும், விட்டுக் கொடுத்தால்தான் வாழ்க்கையிலே பாஸ் பண்ண முடியும். அவர் உங்களை மதிக்காவிட்டால்தான் என்ன, "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்"னு கண்ணதாசன் சொன்னா மாதிரி நீங்க வாழ்ந்து காட்டுங்க, அவர் உங்களை மதிக்க ஆரம்பிப்பார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்னும் கொஞ்சம் ஃபேஷன் பக்கங்கள், டாக்டர் பதில்கள், வாசகர் அனுபவங்கள் எல்லாம் சேர்த்தால், சூடான, சுவையான, நச்சென்ற அவன் விகடன் தயார்.

வினியோகஸ்தர்களே, உங்கள் பகுதிக்கு உரிமம் எடுக்க முந்துங்கள்.

வாசகர்களே! இன்னும் சில நாட்களில் உங்கள் கையில் தவழும் "அவன் விகடன்" - உங்கள் பேராதரவை எதிர்பார்க்கும்

ஆசிரியர் குழு.

Nov 17, 2005

அலுவலகக்கூட்டத்தில் பேசப்போகிறீர்களா? Tips - 2 (16 Nov 05)

ஏகோபித்த ஆதரவு இருப்பதால் (?!) சரி சரி எதிர்ப்பு இல்லாததால்..தொடர்கிறேன்.

4.கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள் - கற்பிக்கக்கூடிய தருணங்கள் (Teachable Moments) எல்லா நேரங்களிலும் அமைந்து விடாது

புதிதாக செல் தொலைபேசி வாங்கியவருக்கு அதன் தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுத்தல் சுலபம், அவர் கற்கத்தயாராக இருப்பார். மாறாக பால்-பாயிண்ட் பேனா உபயோகப்படுத்துபவரிடம் அதன் நுனி ஏன் வளைந்து இருக்கிறது, அதில் எத்தனை பாகைகள் இருக்கின்றன என்று விளக்க ஆரம்பித்தால் அவருக்கு ஆர்வம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. .

Teachable Moments-ஐ உருவாக்குவது எப்படி? உங்கள் விளக்கத்தால் எதிரில் இருப்போருக்கு ஏற்படக்கூடிய நேரடிப்பலன்களை முதலில் சொல்லுங்கள். விளம்பரங்கள் போல ஒரு பயமுறுத்தலைஅடிநாதமாகக் கொள்வது ஒரு உத்தி.(க்ளோஸ்-அப் பயன்படுத்தாவிட்டால் எந்தப்பெண்ணும் பேசமாட்டாள், அழகு க்ரீம் இல்லையென்றால் கல்யாணம் ஆகாது..இத்தியாதி..) . (முன்பெல்லாம் ஒரு பழுதைச் சரிபார்ப்பதற்கு மாதங்கள் கூட ஆகலாம் - இப்போது, நான் சொல்லப்போகும் தொழில்நுட்ப வளர்ச்சியால், நிமிடங்களில் பழுதை நீக்கிவிடலாம் - என்பது என் பழகிய ஆரம்ப வரிகள்.)

இந்த உரை அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கானது - உங்கள் வளர்ச்சியும் அதன் பக்க விளைவாய் இருக்கலாம் - ஆனால் முதல் முன்னுரிமை அவர்கள் தெவையே என்பதை உணருங்கள் - மேலும் முக்கியமாக நீங்கள் உணர்ந்துள்ளீர் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள்.

5. நீங்கள் மட்டுமே பேசாதீர்கள் - பெரும்பாலானவர்களுக்கு, அதிலும் உயர்பதவிகளில் இருப்பவர்க்கு, கேட்டு பழக்கம் கிடையாது! சின்னச் சின்ன கேள்விகள் கேட்பதன் மூலம், அனைவரையும் ஒருமுறையாவது பேச வையுங்கள்.

பலவிதமான கேள்விகள் கேட்கலாம் - திறந்த கேள்விகள் (பல பதில்கள் இருக்கலாம்), மூடிய கேள்விகள் (ஒரே சரியான பதில்தான்), அடிநிலைக்கேள்விகள் (பொதுவாக எல்லாருக்கும் தெரிந்த பதில்கள்), உயர் நிலைக்கேள்விகள் (பயிற்சிக்குப்பின்னரே விடை அளிக்க முடியும்)..
உரையின் ஆரம்பத்தில், மூடிய, அடிநிலைக்கேள்விகளாகக் கேட்டு பங்குபெறும் உற்சாகத்தை அனைவருக்கும் ஏற்படுத்துங்கள். உரையில் தொய்வு விழுவது போலவோ, யாரும் தூங்குவது போலவோ (நிச்சயம் நடக்கும்!) உணர்ந்தால் திறந்த கேள்விகள் மூலம் அனைவரையும் அதிகம் பேசவைக்க முடியும். பொதுவான கேள்விகளாய் இருந்தாலும், சொல்லப்படும் விஷயத்துடன் தொடர்பு உள்ளதாகவே இருக்க வேண்டும். (இல்லாவிட்டால் கதை அடிப்பதாகத்தான் கொள்வார்கள்).

கேள்விக்கான பதிலைப் பெற்றதும் ஒருமுறை அந்தப்பதிலை அவர்கள் வார்த்தைகளிலேயே திருப்பிச்சொல்லுங்கள் - அவர்கள் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டனர் என்பதை உணர்த்த.அதிகம் பேசாத, பங்கு பெறாதவர் கூட உற்சாகம் பெறுவர். அதற்குப்பின்னர் பொருத்தமான பதிலை உங்கள் வார்த்தையில் கூறுங்கள்.

6. செயற்கை வேண்டாம் - மாண்புமிகு பொது மேலாளரே, அவையில் அமர்ந்திருக்கும் சான்றோரே ஆன்றோரே.. இதெல்லாம் பொது மேடைப்பேச்சுக்கு உதவலாம் - இங்கு (பெரும்பாலும்) இல்லை. அதற்காக அனைவரையும் சிறுவர்களாக நினைத்து மரியாதை இன்றியும் நடத்த வேண்டாம் (பெரியோரை வியத்தல் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே - இங்கும் 100% பொருந்தும்) - எல்லோரின் கருத்துக்கும் மதிப்பு கொடுங்கள் - எங்கே இருந்து நீங்கள் ஒரு புது விஷயம் கற்க முடியும் என்பதை ஒரு போதும் சொல்ல முடியாது. இங்கே என் ஒரு அனுபவம், இன்றும் என் பெரும்பாலான வகுப்புகளில் நான் விவரிக்கும் ஒரு சம்பவத்தைப் பற்றிக் கூருவது பொருத்தமாக இருக்கும்..

ஒரு பெரிய இயந்திரத்தின் எஞ்சின் ஸ்டார்ட் ஆகாமல் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்க, நான் எல்லா சாத்தியங்களையும் பரிசொதித்து தோல்வி அடைந்து கொண்டிருந்த நேரத்தில், டீ கொண்டுவரச்சொல்லி ஒரு சிறு பையனை அனுப்பினேன். திரும்பி வரும்போது அவன் கோபமாக வந்தான் - "இனிமே நான் டீ வாங்கப் போக மாட்டேன் - அங்கே வழியிலே டீஸல் டேங்கிலிருந்து எண்ணெய் வழிகிறது - என் மேலெல்லாம் கொட்டிப்போச்சு" என்றான் - அடுத்த இரு நிமிடங்களில் லீக்கேஜை நிறுத்தி எஞ்சினை ஸ்டார்ட் செய்து விட்டோம்!

இன்னிக்கு அவ்வளவுதான் - இன்னும் ஒன்றிரண்டு பகுதிகளுடன் முடித்து விடுவேன்!

Nov 16, 2005

அலுவலகக்கூட்டத்தில் பேசப்போகிறீர்களா? Tips (15 Nov 05)

ஆங்கிலத்தில் எனக்குப் பிடிக்காத வார்த்தை - அட்வைஸ்! எனக்கு மட்டுமல்ல, பெரும்பாலோனாருக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.

இருந்தாலும், இப்படி ஒரு பதிவு எழுதத் துணிந்தேன்.

முக்கியமான பணியில் இருக்கும் அனைவருக்கும் குறைந்தது ஒருமுறையேனும் தங்கள் பணியைப்பற்றியோ, நிறுவனத்தயாரிப்புகளைப்பற்றியோ விளக்கம் அளிக்கும் சூழ்நிலை அமையக்கூடும். எனக்கு எல்லா நாளும் இதே தொழில் என்பதாலும், எந்த முன் அனுபவமோ, கற்றுக்கொடுப்பவர்களோ இல்லாததால் அடிபட்டு அடிபட்டுதான் ஓரளவாவது கற்றுக்கொள்ள முடிந்தது.

முறையான பள்ளி கல்லூரி வகுப்புக்களில், ஆசிரியர் என்பவருக்கு ஆரம்பத்திலேயே ஒரு உயர்ந்த ஸ்தானம் அளிக்கப்பட்டுவிடுகிறது. வயது, அனுபவம், அறிவு ஆகியவை சமமாகவே இருக்கக்கூடிய பயிற்சி வகுப்புகளிலும் விளக்க உரைகளிலும் அந்த ஸ்தானத்தையும், எதிரிலுப்போர் கவனத்தையும் ஈர்த்து, சொல்ல வந்த விஷயங்களை தெளிவாகச் சொல்வது, அதுவும் மிகக்குறைந்த நேரத்துக்குள் என்பது அவ்வளவு சுலபமில்லை.

எனவே, நான் கற்ற, கேட்ட, பார்த்த மற்றும் படித்த அனுபவங்களை பொதுவில் வைப்பதால் யாரேனும் பயன்பெறக்கூடும் என்ற எண்ணத்தினால் விளைந்ததே இந்தத் துணிச்சல்!
ஆலாபனை போதும், விஷயத்துக்கு வருகிறேன்.

1. தயார் செய்துகொள்ளுங்கள் - இரண்டு நிமிடமோ, இரண்டு மணிநேரமோ.. சொல்லப்போகும் விஷயத்தை மனதில் ஒருமுறை ஓடவிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். தேவையான குறிப்புகளை தனியாக எழுதிவைத்துக்கொள்வது உதவும். ஒத்திகை பார்க்க வேண்டாம். நடுவில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் பேச்சு திசை திரும்பிவிடும் சாத்தியம் உள்ளது. எதை முதலில், எதை நடுவில், எதைக் கடைசியில் சொல்ல வேண்டும் என்ற agenda மட்டும் போதும்.

2. எடுத்த எடுப்பில் திடுதிப்பென ஆரம்பிக்காதீர்கள். சுருக்கமாக ஒரு சுய அறிமுகத்துடன் ஆரம்பியுங்கள் - பிறப்பும் வளர்ப்பும், இளமையும் கல்வியும் போன்ற கட்டுரைகள் இல்லை - உங்கள் பெயர், பணி நிலை, சொல்லப்போகும் கருத்துடன் உங்கள் அனுபவம் - இது போதும்.

உங்கள் பெயர் எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என எதிர்பார்க்காதீர்கள் - ஒருமுறை ஒரு நபருடன் அரை மணி நிறுவனத்தின் நிலை பற்றி கதை அடித்து முடித்த பிறகு நான் "உங்கள் பெயர் என்ன" எனக்கேட்டேன் - அவர் புருவம் சுருங்கி, பெயர் கூறி, நான் இங்கே வைஸ் ப்ரெஸிடென்ட்டாக வேலை பார்க்கிறேன் என்றார்!

சொல்லப்போகும் கருத்துடன் உங்கள் அனுபவம் - இது மிகவும் அவசியம். சொல்பவரின் தகுதியே சொல்லப்படுவதின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

3. எந்த நிமிடத்திலும் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை உணர்ந்து இருக்க வேண்டும். நீங்கள் உணர்ந்தால் மட்டும் போதாது, உங்கள் சபைக்கும் கதை அடிக்கிறான்(ள்) என்ற எண்ணம் தோன்றிவிடக்கூடாது.

கதை அடிப்பதில் தப்பு இல்லை - ஆனால், கதை உங்கள் பேசுபொருளுடன் சம்மந்தம் உள்ளதாக இருக்கட்டும். எப்படியாவது ஒரு ஜோக்கை ஒட்டவேண்டும் என்று நினைக்காதீர்கள். அனைத்தும் ஆண்களே உள்ள கூட்டமாக இருந்தாலும், அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்குகள் வேண்டவே வேண்டாம். அவற்றுக்குதான் சாயங்கால பார்ட்டிகள் இருக்கிறதே! சில குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் எல்லாக்கூட்டத்திலும் இருப்பார்கள். கதை அடித்து அவர்களின் வெறும் வாய்க்கு அவல் கொடுக்காதீர்கள்.

இன்றைக்கு ரொம்ப நீளமாகப் போய்விட்டது, மீண்டும் தொடர்கிறேன் - உங்கள் விருப்பம் இருந்தால்.

பி கு: துறவறம் கொண்டு விட்டதாகக் கூறினேர்களே என்று புரட்சிப்பினாத்தலாரைக் கேட்டதற்கு - "அவங்களை நிறுத்தச் சொல் - நான் நிறுத்தறேன்"றாரு!

Nov 14, 2005

பொது வாழ்விலிருந்து விலகுகிறார் பினாத்தலார் 14 Nov 05

பொது வாழ்விலிருந்து விலகுகிறார் பினாத்தலார்.

புரட்சிப்பினாத்தலார் தன் தொழிலான பினாத்துவதை விட்டுத் துறவறம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். காரணம் கேட்டதற்கு, கீழ்க்கண்ட செய்திகளைக் காண்பித்தார்.

  • தமிழ் கலாசாரத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததாக நடிகை குஷ்புக்கு தமிழக முழுவதும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத்தெரிவித்தன. பல்வேறு கோர்ட்டுகளில்வழக்கும் தொடரபட்டன.
  • குஷ்புவுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது: பா.ம.க.
  • தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி நடிகை குஷ்பு பேசிய கருத்துகள் சரியே என
    அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ள நடிகை சுஹாசினிக்கு பல தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனம் எழுந்துள்ளது.
  • "குஷ்பு-சுஹாசினி ஆகிய 2 பேர் வீட்டின் முன்பும் துடைப்பம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" என்று தமிழர் பாதுகாப்பு கழக தலைவர் கே.ராஜன் கூறியிருக்கிறார்.
  • மனோரமா: முதல்வரும் ஒரு நடிகையாக இருந்தவர்தான். அவரே குஷ்பு கூறியது தவறு என்று கூறியிருக்கிறார். முடிந்த விஷயத்தை மீண்டும் பெரிதுபடுத்துகிறார்கள். அவர்கள் படித்தவர்கள். அதனால் இப்படித்தான் பேசுவார்கள். நான் படித்தவள் இல்லை. அவர்கள் மன்னிப்பு கேட்பதுதான் சரி.
  • தயாரிப்பாளர் கேயார்: குஷ்பு, சுஹாசினி ஆகியோரின் பேச்சு அவர்களுக்கு
    வேண்டுமானால் துணிச்சலான பேச்சாக தெரியலாம். அவர்கள் கருத்தை ஏற்கமுடியாது. இது கண்ணகி வாழ்ந்த நாடு. விளம்பரம் இல்லாமல் இருப்பதை விட இப்படித் தவறான விஷயங்களைப் பேசி மலிவான விளம்பரம் தேடிக்கொள்ள விரும்புகிறார்கள்.
  • இயக்குநர் சீமான்: தமிழர்களுக்கு கொம்பா முளைத்திருக்கிறது, தமிழர்கள் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்பதெல்லாம் சகிக்க முடியாத விஷயங்கள். இதற்காக சுஹாசினி மன்னிப்பு கேட்கவேண்டும்.
  • கவிஞர் மேத்தா: குஷ்பு விளக்கு பற்ற வைக்க உரசிய தீக்குச்சி கூரையின் மேல் விழுந்து கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த சமயத்தில் அதை அணைக்கப் பார்ப்பதுதான் அறிவுடமை. நிதானம் இழந்து நெய் ஊற்றக்கூடாது.
  • தமிழருவி மணியன்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று சர்வதேச சிந்தனையை விதைத்த தமிழர்களுக்கு கொம்பு முளைத்திருப்பது உண்மைதான்.
  • இல.கணேசன்: தமிழர்களைப் பற்றி தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்தவர்கள் இழிவாகப் பேசுவதா என்று ஆவேசப்படும் தமிழக மக்களுக்கு சவால்விடும் வகையில் குஷ்புவுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என்று சுஹாசினி பேசியுள்ளதாகவே கருதுகிறேன்.
  • வெற்றிகொண்டான்: கலையை மலிவான விலைக்கு விற்க குஷ்பு, சுஹாசினி போன்றவர்கள் தயாராகிவிட்டனர். இவர்களைத் திருத்த முடியாது. தமிழர்களுக்கு கொம்பு இருப்பதைக் காட்டினால் அதை இவர்களால் தாங்கமுடியாது.
  • திருமாவளவன்: என்னைக் கருத்து கேட்டிருந்தால் கிழித்திருப்பேன் என்று
    குஷ்புவைக் கண்டித்தவர்களைத்தான் சுஹாசினி கூறியுள்ளார். ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதியாக மன்னிப்பு கேட்க இவர் யார்? தமிழர்கள் வெட்கித் தலைகுனியவேண்டுமாம்.
  • "என் மீது நீங்கள் குற்றம் சாட்டினால் உங்களையும், உங்கள் தலைவரையும்
    கோர்ட்டில் சந்திப்பேன்'' - சுஹாசினி எஸ்.எம்.எஸ்.
  • எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டல் - நடிகை சுஹாசினிக்கு சரத்குமார் கண்டனம்
  • செயற்குழுவை கூட்டி குஷ்பு மீது நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
மேலும் அவர் கூறியதாவது: என் கொள்கை, உயிர், மூச்சு அனைத்துமே பினாத்துவதுதான். இதை இவ்வளவு பேர் பங்கு போட்டுக்கொண்டால் நான் என்ன செய்வேன்?

இட்லி வடைக்கு (கருத்துக்களை சேகரித்து வைத்தமைக்காக) நன்றி.

Nov 8, 2005

திரைக்கு வந்த புத்தகங்கள் 08 Nov 05

என்னுடைய முந்தைய பதிவில், ராமச்சந்திரன் உஷாவின் பின்னூட்டத்தில் கூறியிருந்தார் - விரும்பி படிச்ச கதைய படமா பார்க்கிற தைரியம் எனக்கு எப்போதும் கிடையாது - என்று.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சிந்தனைச் சிதறல்களில் இதுவரை படமாக்கப்பட்ட புத்தகங்களைப்பற்றி யோசித்தேன்.

எனக்கு புத்தகங்களில் இருந்து வந்த ஆங்கிலப்படங்கள் பற்றி அதிகம் பரிச்சயம் கிடையாது, எனவே தமிழ் பற்றி மட்டும்.

பாலு மகேந்திரா ஒரு பேட்டியில் கூறியிருந்தார் - "ஒரு பாட்டி வடை சுட்ட கதையைக்கூட படித்தவர்கள் பாராட்டும் விதமாக திரையில் கொடுக்க முடியாது. பாட்டி என்றால் சுமங்கலிப்பாட்டியா அல்லது விதவைப்பாட்டியா, வடை என்றால் மெதுவடையா அல்லது மசால்வடையா என்று படித்தவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிம்பத்தை மனதில் கொண்டிருப்பார்கள், அதை நான் எந்த வகையில் எடுத்தாலும், படித்தவர்களில் சிலரின் பிம்பத்தையாவது அது உடைத்துவிடும்" இதுதான் முக்கியக் காரணம் என்று நம்புகிறேன்.

"பார்த்திபன் கனவு" புத்தகத்தின் கடைசியில் அவிழும் மர்ம முடிச்சு, திரைப்படத்தின் மூன்றாவது காட்சியிலேயே எஸ்.வி.ரங்காராவ் வரும்போது தூள் தூளானதும் இதற்கு உதாரணமே

பத்திரிக்கைகளில் தொடராக வரும்போது, மணியம் செல்வனோ, மாருதியோ வரையும் கதாபாத்திரங்களின் ஓவியம், படிப்பவர்க்கு ஏறத்தாழவேனும் கொடுக்கும் ஒரு அடையாளத்தை, படத்தில் வரும் பாத்திரங்கள் உடைத்துவிடும் என்பது நிச்சயம். யாராவது, சுஜாதாவின் வஸந்தாக வெண்ணிற ஆடை மூர்த்தியையோ, ப்ரியாவில் வரும் பெயர் தெரியாத நடிகராகவோ கற்பனை செய்து பார்த்திருப்பார்களா? "குறிஞ்சி மலர்" அரவிந்தனாக மு க ஸ்டாலினைப் பார்த்த தீவிர தி மு க வினரே வெறுத்துப்போனது மறந்திருக்காது. அப்புசாமியாகவும் துப்பறியும் சாம்புவாகவும் காத்தாடி ராமமூர்த்தி நடித்தது பற்றி எதுவும் கூறாமல் இருப்பதே நல்லது.

வாசகர் பெரும்பாலானோர் மனதில், பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை ஏதெனும் ஒரு நடிகர் / நடிகையாக கற்பனை செய்து பார்த்திருப்பார்கள்.. டோண்டு, தருமி போன்றோர் (அவர்கள் மன்னிக்க) வைஜயந்தி மாலாவையும், ஜெமினி கணேசனையும் பாலையாவையும் நினைத்திருக்க, இடைப்பட்ட காலத்தோர் கமலஹாசனையும், குஷ்பூவையும் நினைத்திருக்கலாம். என்போன்ற சிறுவர்கள் அஸினையும் நினைக்கலாம்:-) எப்போது எடுக்கப்பட்டாலும், ஏதெனும் ஒரு சாராரிடம் இருந்தாவது திட்டு வாங்காமல் தப்பிக்கவே முடியாது. மாஜிக் லாண்டர்ன் குழுவினர் இதை நாடகமாக நடித்தபோது பசுபதி வந்தியத்தேவனாக நடித்ததாக அறிகிறேன் - பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு இத்தேர்வு சரிதான் எனப்பட்டாலும் எத்தனை பேர் என்னுடன் ஒத்துப்போவர் என்று நினைக்கிறீர்கள்?

இந்தப்பிரச்சினை வேன்டாம் என்று தியாக பூமி, விக்ரம் ஆகிய தொடர்கதைகள் வரும்போதே, நடிகர்களையே புத்தகத்திலும் போட்டு ஒருவாறு தயார் செய்து இருந்தார்கள். இது திரைப்படம் எடுக்கப்படும் எனும் முன்முடிவுடன் (ஸ்டோரி டிஸ்கஷன் குழு ஆசீர்வாதத்துடன்) எழுதப்படும் மிகச்சில கதைகளுக்கு மட்டுமே சாத்தியமாகும்.

விதிவிலக்குகளும் இருக்கலாம் - ஆனால் அவற்றை நான் பார்த்ததில்லை அல்லது படித்ததில்லை. மோகமுள் கதை படித்திருக்கிறேன், திரைப்படம் பார்க்கவில்லை. அழகி, சொல்ல மறந்த கதை திரைப்படங்களாக எனக்குப் பிடித்திருந்தன - ஆனால் கதைகளை படித்திருக்கவில்லை (படிக்கவில்லை என்பதுதான் படம் பிடித்ததுக்கு காரணமோ என்றும் சந்தேகிக்கிறேன்).

மணிரத்னம் படங்களில் சில காட்சிகள் அல்லது பாத்திரங்கள் கதைகளில் இருந்து தழுவப்பட்டபோதும், திரைக்கேற்றவண்ணம் செப்பனிட்டிருப்பார். "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தின் இரு காட்சிகள் கதையாகவும், படமாகவும் நன்றே செய்யப்பட்டிருந்தன. "அஞ்சலி"யில் பிரபு பாத்திரம், Mockingbird பூ ராட்லீயைத் தழுவியது, நாயகன் - காட்ஃபாதர் திரைப்படத்தைவிட, புத்தகத்தையே அதிகம் தழுவியதாக நான் நினைக்கிறேன்.

மொத்தத்தில், படித்த புத்தகத்தை திரையில் பார்க்கும் தைரியம் எனக்கும் வராது, இதுவரை வந்த படங்கள் அந்த நம்பிக்கையை தூண்டும் விதமாகவும் இல்லை.

பி கு - புத்தகங்களில் இருந்து வந்த ஆங்கிலப்படங்கள் பற்றிப் பேச விரும்புவோர், இந்தப் பின்னூட்டப்பெட்டியிலேயே பேசலாம். (காத்துத்தான் வாங்குது:-))

Nov 7, 2005

To Kill a Mockingbird -புத்தகப்பார்வை

மு கு or Disclaimer : இது ஒரு வழக்கமான பினாத்தல் பதிவு அல்ல.

எப்போது நாம் ஒரு புத்தகத்தையோ அல்லது வேறெந்த புனைவையுமோ பாராட்டுகிறோம்?
கதையில் உள்ள மாந்தர்களுடன் நம்மை அடையாளம் காண முடியும்போது, அவர்களின் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ள முடியும்போது, அவர்களின் செயல்களின் நியாய அநியாயங்களைப் பற்றி தர்க்கிக்கும்போது தான் நம்முள் எந்த ஒரு புனைவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

தன்னைக் காண்பது என்பது சில நேரங்களில் மிக எளிதாக அமைந்துவிடும். தமிழ்நாட்டின் தாய்க்குலம் கஷ்டம் மட்டுமே அனுபவிக்கும் மெகா சீரியல் நாயகிகளிடமும், தங்களைக் கொடுமைப்படுத்திய கணவர்களையும், மாமியார்களையும் தொடரிலும் பார்க்கும்போது மிக எளிதாக அதில் ஒன்றிவிடுகின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் வெளிவரும் கல்லூரி / காதல் திரைப்படங்களில் மாணவர்கள் எளிதாக ஒன்ற முடிவதால்தான் பல படங்கள் அப்போது வெளியிடப்படுகின்றன. வேலை நிமித்தமாக பல ஊர்கள் / நாடுகள் சுற்றியதால், இரா முருகனின் அதே போன்ற கதாபாத்திரங்களுடன் என்னால் முழுமையாக ஒன்ற முடிந்தது.

சில நேரங்களில், கதை மாந்தர்களுடன் முழுமையாக தம்மை அடையாளம் காண முடியாவிடினும், ஒரு பகுதியில் மட்டுமே ஒத்துப்போனாலும், நம் தொல்லைகளுக்கு எளிய/ வலிய தீர்வு சொல்லும் பாத்திரங்கள் வெல்கின்றன. தெருவில் தினம் சந்திக்கும் லஞ்சப்பேய்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய பேராசிரியரும், சுதந்திரப் போராட்டத் தாத்தாவும் எம்.எல்.ஏவின் வீட்டில் மாடுகளைக்கட்டிய பால்காரனும் நம்மை ஈர்த்தது இதனால்தான்.

வெகு சில கதைகள் மட்டுமே, நம்முடைய தினக் குணாதிசயங்கள் எதுவுமே இல்லாத பாத்திரங்களுடன் இருக்கும்போதும், ஏதோ ஒருவகையில் நம்மை அப்பாத்திரங்களுக்காக சிரிக்க வைத்து, கண்ணீர் விட வைத்து கோபிக்கவைத்து -- எல்லாம் செய்யும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், நான் பார்த்திராத ஊர்களில் பயனம் செய்து, கற்பனைக்கும் எட்டாத பாத்திரங்களுடன் பழகினாலும், வந்தியத்தேவன் கடலில் விழுந்து எழும்போது என் உடலிலும் உப்புத்தண்ணீர் பட்ட உணர்வு ஏற்படுவது எப்படி?

எங்கேயோ அமெரிக்காவில் ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்த ஸிந்தியா, என் வேலையை ராஜினாமா செய்யும் எண்ணத்தை மாற்றியது எப்படி? (Strong Medicine - Arthur Hailey)

காட்டையே பார்த்திராத நான் அடர்காடுகளில், அதிரடிப்படைக்கு பயந்த சோளகனாகவும் கொஞ்சம் வாழ முடிந்தது எப்படி?

ஆபிரஹாம் லிங்கன் என்ன சொன்னால் என்ன? போர் வந்தால் என்ன? எனக்குத் தேவை என்னுடைய ரசிகர் கூட்டம், அதற்காக என்ன வேன்டுமென்றாலும் செய்வேன் என்னும் ஸ்கார்லெட் ஓ ஹாரா வாக எப்படி என்னை நினைத்துக்கொள்ள முடிந்தது? (Gone with the Wind - Margeret Mitchell)

யோசித்துப்பார்த்தால், இப்படி கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத கதாபத்திரங்கள் உள்ள புனைவுகள்தான் என்னை நீண்ட நாட்கள் பாதிக்கின்றன.

அப்படி ஒரு கதைதான் to Kill a Mockingbird (Harper Lee)

கதையை சுருக்கமாகக் கூறிவிடுகிடுகிறேன்.

1935 வாக்கில், அட்லாண்டாவிற்கு அருகில் இருந்த மேகோம்ப் கிராமத்தில் நிகழ்ந்த சம்பவங்கள். வழக்கறிஞர் அட்டிகஸுக்கு கோர்ட்டால் தரப்பட்ட ஒரு வழக்கில், வெள்ளை இனத்துப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக ஒரு கறுப்பின இளைஞன் குற்றம் சாட்டப் படுகின்றான். ஊர் மக்கள் இதை ஒரு சாதாரண வழக்காகப் பார்க்காமல், வெள்ளையர் VS கறுப்பர் என்று பார்ப்பதால், நீதிக்கு வேலை இல்லாமல் உணர்வுகளுக்கே முதலிடம் தரப்படுகின்றது. வழக்கை நடத்தும் அட்டிகஸ்ஸை கறுப்பர் தோழர் என்று வீட்டுக்குள்ளே பேசிக்கொண்டாலும், வீட்டில் கவனிக்கும் ஊர்ச்சிறுவர்கள் அட்டிகஸ்ஸின் குழந்தைகளை கிண்டல் செய்யத் தலைப்படுகின்றனர். வாதங்களால் பலாத்காரம் நிகழவே இல்லை என்று அட்டிகஸ் நிரூபித்து விட்டாலும், வெள்ளையர் மட்டுமே அடங்கிய ஜூரி கறுப்பு இளைஞனுக்கு மரண தண்டனை விதிக்கிறது. வழக்கில் வென்ற போதிலும், அவமானப்படுத்தப்பட்டதாய் உணரும் (பலாத்கரப் படுத்தப்பட்டதாய் கூறப்பட்ட)பெண்ணின் தந்தை, அட்டிகஸ்ஸின் குழந்தைகளை பயமுறுத்த முயலும்போது, சந்தேகத்துக்கு இடமான முறையில் இறந்துவிடுகிறான். கதை என்று பார்த்தால் இவ்வளவுதான்.

ஆனால், கதை முழுக்க முழுக்க அட்டிகஸ்ஸின் ஆறு வயதுப் பெண் குழந்தை வாயிலாகவே கூறப்படுகிறது. ஆரம்பப் பக்கங்களிலேயே, நானும் ஜீன் லூயிஸ் ஃபிஞ்ச் (ஸ்கவுட்) ஆக மாறிவிடுகிறேன்.

  • பள்ளிக்குச் செல்ல அடம் பிடிக்கிறேன்.
  • அண்ணனுடன் சண்டை போடுகிறேன் - பெரியவர்கள் ஏன் அவன் பக்கமே இருக்கிறார்கள் என கோபிக்கிறேன்.
  • பக்கத்தில் இருக்கும் மர்ம வீட்டில் உள்ளேயே அடைந்து கிடக்கும் பூ ராட்லீ(Boo Radley) யை வெளியே கொண்டுவரும் முயற்சிகளில் அண்ணனுக்கும், தோழன் டில் (Dill)லிற்கும் துணை நிற்கிறேன்.
  • என் இயல்பை மாற்றி ஒரு சிறந்த பெண்மணியாக என்னை மாற்றிவிட முயற்சிக்கும் அத்தைமேல் வெறுப்பு கொள்கிறேன்.
  • வெள்ளையரின் சர்ச்சுக்கும், கறுப்பர்களின் சர்ச்சுக்கும் வழிமுறைகளில் உள்ள வித்தியாசங்களைக் கண்டு வியக்கிறேன்.
  • "Nigger Lover" என்று கத்தி என்னை வெறுப்பேற்றும் பள்ளி சகாக்களிடம் மல்லுக்கு நிற்கிறேன்.
  • அதிசயமாக வந்த பனிமழையில் நனைகிறேன்.
  • அப்பாவின் அலுவலகத்திற்கு அழையாமல் சென்று, அவரைக் கொல்ல வந்தவர்களிடம் இருந்து அவரைக் காப்பாற்றுகின்றேன்.
  • அப்பாவின் அசைக்க முடியாத வாதத்தைக் கேட்டும் அதற்கு எதிராகத் தீர்ப்பளிக்கும் ஜூரிகளைக்கண்டு குழம்புகிறேன்.
  • எப்போதும் வீட்டை விட்டு வெளிவராத பூ (Boo) என்னைக்காப்பாற்ற மட்டும் வெளியே வந்ததற்காக நன்றி செலுத்துகிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாக என் அறியாமையை இழக்கிறேன். "வயதான பிறகு கற்றுக்கொள்ள என்ன இருக்கப்போகிறது - அல்ஜீப்ராவைத்தவிர?"

கதையின் இடை இடையே வரும் தத்துவ விசாரங்கள் மேன்மக்களுக்கும் கீழ்மக்களுக்கும் என்ன வித்தியாசம் என்று சிறுமியின் அறிவுக்கு ஏற்ப ஆராய்வது நிச்சயமாக பெரியவர்களை யோசிக்கச் செய்யும்.

உங்களை ஒருமுறை படிக்கப் பரிந்துரைக்கிறேன், நிச்சயமாக, நீங்கள் பலமுறை படிப்பீர்கள்.

Nov 5, 2005

மேலும் ஒரு கடற்கரை சந்திப்பு 03 Nov 05

அமீரக வரலாற்றில் முதல் முறையாக, புஜைராவை ஒட்டி உள்ள கல்பா கடற்கரையில் மாபெரும் வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது. சம்பிரதாய முறைப்படி, என்ன சாப்பிட்டோம் என்பதைக்கூறிவிட்டு, பிறகு என்ன விஷயங்கள் விவாதிக்கப்பட்டன என்பதைக் கூறுகிறேன்.

காலையில் எடுத்துச் சென்ற உணவு வகைகள் மதியத்துக்குள்ளேயே தீர்ந்துவிட்டதால், கடற்கரையிலேயே இருந்த டுபாக்கூர் உணவகத்தில் இருந்து, சுடச்சுட சமோசாக்களையும் (சமைத்து ஐந்தே நாள் ஆனது), காப்பியையும் குடித்து வயிற்றுக்கு சிறிது ஈந்த பின்னர், செவிக்கும் ஈய ஆயத்தமானோம்.

சந்திப்பில் கலந்துகொண்ட ஒவ்வொரு பெயரையும் கூற முடியாது என்பதால், முக்கியமான சிலர் பற்றி மட்டும் (ம்ஹூம் நீ சரிப்பட மாட்டே!):

நுனிப்புல் (ஃபுஜைரா கடற்கரையில் இயற்கையான புல் கிடையாது என்பதால், இவர் வரவு கடற்கரைக்கு பசுமை சேர்த்தது) தன் கணவருடன்,

உங்கள் உண்மையுள்ள (yours truly) புரட்சிப்பினாத்தலார் தன் ரத கஜ துரக பதாதியுடன் (அப்படீன்னா என்னங்க?),

பதிவிட இன்னும் தொடங்காமல் அவ்வப்போது பின்னூட்டம் மட்டும் கொடுக்கும் தென்றல் தன் குடும்பத்துடன்,

90களில் கையெழுத்துப்பத்திரிக்கையாகத் தொடங்கி, அதன் விஞ்ஞான நீட்சியாக வலைப்பதிவுலகிலும் தடம் பதிக்க இருக்கும் குளம் வலைப்பூவின் ஆறு எழுத்தாளர்களில் இருவரும்

மற்றும் பலரும் (இப்படிப் போடறதும் சம்பிரதாயம்தான்) கலந்து கொண்டனர்.

என்ன விவாதித்தோம்?

1. வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது எப்படி?

2. தீபாவளி ஆரியர் பண்டிகையா?

3. குஷ்பூவுக்கு ஆதரவு அளிப்பவர்கள் பெண்ணியவாதிகளா?

4. செம்மொழித் தமிழை எவ்வாறு மேம்படுத்தலாம்?

5. இலக்கியம் என்பதின் இலக்கு யாது?

என்றெல்லாம் ஜல்லி அடிக்காமல், பொதுவான விஷயங்களை மட்டும் பேசிவிட்டு, பேச்சில் கலந்து கொள்ளாதவர்கள் வீட்டுக்கு செல்லும் நேரம் ஆவதில் கோபம் காட்டக்கூடிய சாத்தியக்கூறு இருந்ததால் ஒன்றரை மணி நேரத்தில் ஜூட் விட்டு விட்டோம் - இனி அடிக்கடி சந்திக்க முயலுவோம் என்ற வாக்குறுதியுடன்.

Nov 1, 2005

தீபாவளி - ரமலான் நல்வாழ்த்துக்கள்

என் இனிய வலைப்பதிவாளர்களே..

பினாத்தல்களை மட்டுமே படைத்துக்கொண்டிருந்த சுரேஷ்,இன்று
என்னோடும், என் மண்ணோடும் உறவாடிய அன்பு நெஞ்சங்களுக்கு
தீபாவளி நல்வாழ்த்துக்கள் சொல்ல வந்திருக்கிறான்.

தீக்குச்சியால் தீபம் மட்டும் ஏற்றுவோம்.

வெடிமருந்தை அளவாய்க்கட்டி பட்டாசாக மட்டும் ஆக்குவோம்.

நல்லுறவை விதைப்போம், நல்லுறவைப் பறிப்போம்.

இன்ஷா அல்லாஹ் நாளை மலரும் ரமலானைக்கொண்டாடும் உடன்பிறப்புகளுக்கும் வாழ்த்துக்கள்.

 

blogger templates | Make Money Online