May 23, 2006

மே 21 1991 - 2

மு கு: இங்கே பகுதி 1 இருக்கிறது, இது அதன் தொடர்ச்சி.
___________________________________________________________
 
ஆட்டோவில் ஏறும் முன்னரே தெருவில் சில வித்தியாசங்கள் தென்படத் தொடங்கிவிட்டன. எப்போதுமே பெரிய அளவில் வாகன நடமாட்டம் இருக்காது என்றாலும், இன்று மிகவும் குறைவாகவே இருந்தது. என் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்த அலுவலகக் கவலைகளில் இதை பெரிதாக கவனிக்கத் தோன்றவில்லை.
 
ஆட்டோக்காரனிடம் ரயில் நிலையத்துக்குச் செல்லச்சொன்னேன். ஆட்கள் ஏறினால் ஐந்து ரூபாய், தனியாகச் சென்றால் முப்பது ரூபாய் கொடுப்பது வழக்கம் (ஆமாம் அய்யா - ஆறு பேர் ஒரு ஆட்டோவில் ஏறுவார்கள்). வேறு ஆள் தென்படாததாலும், ரயிலுக்கு நேரமாகிவிட்டதாலும் முப்பது கொடுக்கச் சம்மதித்தேன்.
 
வழியில் கடக்க வேண்டிய ஒரு ஒற்றைப்பாலத்தில், எதிர்வரும் வண்டிகளுக்காக ஆட்டோ நிற்க வேண்டி வந்தபோதுதான் எதிரே இருபது முப்பது ஜீப்புகள் தொடர்ச்சியாகச் செல்வதைக் கவனித்தேன். ஏதோ சாலை மறியல் பண்ண கும்பலாகப் போகிறார்கள் போலிருக்கிறது.
 
"ஏம்பா ஆட்டோ, அந்தப்பக்கமா திருப்பி தரைப்பாலம் வழியா போயிடலாமே?" ஆனால் அந்த வழி 3 கி மீ அதிகம்.
 
"இன்னொரு பத்து ரூபாய் தர்றயா?" பத்து ரூபாய் என்பதை நூறாய்க்கொடுத்தால், இமயமலைக்கே கூட கொண்டு விடுவான்.
 
ரயில் நிலையத்தை நெருங்குகையில் ரயில் நிலையமும் அமைதியாக இருந்தது. ரொம்ப லேட்டாகும் என்று யாரும் வரவில்லையா, அல்லது ரயில் சென்றுவிட்டதா என்று ஊகிக்க முடியவில்லை.
 
டிக்கட் வாங்க கவுண்டர் பக்கம் சென்றேன். "சுரேஷ்" என்ற கத்தல் கேட்டது. சுபர்ணோவின் குரல்.
 
இவன் எங்கே இங்கே வந்தான்.. டீக்கடையில் பார்த்தபோதுகூட ராஞ்சி போவதாகச் சொல்லவில்லையே..
 
அவன் முகத்தில் பீதி இருந்தது. "சுரேஷ் - எப்படி வந்தே ரயில்வே ஸ்டேஷனுக்கு?"
 
"தரைப்பாலம் வழியாதான், மெயின் பாலம் ப்ளாக் ஆகி இருந்துது"
 
"சரி என் பைக்கிலே ஏறு - உனக்கு விஷயமே தெரியாதா?"
 
"என்ன ஆச்சு? நான் ராஞ்சி போகணுமே"
 
"ராஞ்சியெல்லாம் போக முடியாது. ராஜீவ் காந்திய கொன்னுட்டாங்களாம்"
 
"என்ன?"  அப்போது நான் ராஜீவ் காந்தி ரசிகன் என்பதால் செய்தி ஆழமாகவே என்னைத் தாக்கியது. நேற்றும் கூட, காங்கிரஸ் தோற்கும் என்றவருடன் தீவிரமாக வாதித்தேனே..
 
இரண்டொரு நிமிடங்களில் அதிர்ச்சி குறைந்து ராஞ்சி போக வேண்டியதில்லை என்ற சுயநல மகிழ்ச்சி வந்தது.
 
அப்போ சைட்டுக்கும் போகவேண்டாம், ரூம்லே நிம்மதியா ரெஸ்ட் எடுக்கலாம். "The Negotiator"-ஐ முடித்துவிடலாம்.
 
"சீக்கிரம் வண்டியில ஏறு. முதல்லே புஸ்ரூ போயிடலாம்" என்றான் சுபர்ணோ. புஸ்ரூ 10 கிமீ தொலைவில் இருந்த இன்னொரு நகரம்.
 
"எதுக்கு, நேரா ரூமுக்கே போயிடலாமே" என்றேன்.
 
"பைத்தியக்காரத்தனமா பேசாதே. 40 ஜீப்புல ஆளுங்க போனானுங்களே பாத்தியா? எல்லாரும் கிருஷ்ணா ஆளுங்க. (கிருஷ்ணா லோக்கல் காங்கிரஸ் வட்டம்.) ராஜீவ் காந்தி செத்தது தமிழ்நாட்டுலே.. தமிழனுங்க யாரையும் விடமாட்டேன்னு கருவிகிட்டு போறாங்க. நல்ல வேளை, நீ தரைப்பாலம் வழியா வந்தே. நீ மட்டும் மெயின் பாலத்துல வந்துருந்தே, முதல் போணியே நீதான்"
 
இப்போதுதான் நிலவரத்தின் தீவிரம் எனக்குப் புரிய ஆரம்பித்தது. சீக்கியர்களைத் தேடிக்கொன்ற இந்திரா காந்தி மரணச் செய்திகள் நினைவுக்கு வந்தன. கோர்வையாக யோசிக்கக்கூட முடியாமல் அடிவயிற்றில் பயப்பந்து.
 
"புஸ்ரூ ஏன் போகணும்?"
 
"கவனிக்கலையா? அவங்க எல்லாம் புஸ்ரூவிலிருந்துதான் வந்தாங்க.. அதே சைட் கொஞ்ச நேரமாவது திரும்ப மாட்டாங்க"
 
வண்டி சென்ற இடங்களில் கலவரத்தின் சுவடுகள் பாதி எரிந்த தீயாக. சாலையில் ஓரிடத்தில் இட்லியும் சாம்பாரும் கவிழ்ந்திருந்தன. எனக்கு காலை இட்லி கொடுக்கும் சண்முகத்தின் சைக்கிள் உருத்தெரியாமல் உடைக்கப்பட்டிருந்தது. சண்முகம் தப்பித்திருப்பானா? சுபர்ணோவிடம் கேட்டேன்.
 
"அவன் காட்டுக்குள்ளே ஓடிட்டானாம். நாலஞ்சு பேரு தொரத்திகிட்டு போயிருக்கானுங்க" சண்முகம் இங்கே வந்து 5 மாதங்கள்தான் ஆகிறது. ஊரில் மனைவி, பிள்ளை.
 
"பாவம்" என்று வாய்விட்டே சொல்லிவிட்டேன் போலிருக்கிறது.
 
"மொதல்லே உன் நிலைமையப்பாரு. அப்புறம் அடுத்தவனுக்குப் பரிதாபப்படலாம்."
 
ஆம். என் நிலைமை? எவ்வளவு நேரம் இவர்கள் கண்ணில் படாமல் தப்பிக்கப்போகிறேன்? நடுச்சாலையில் இருக்கிறேன்.. பலருக்குத் தெரியும் நான் தமிழனென்று. முக்கியமாக, கிருஷ்ணாவுக்குத் தெரியும். கிருஷ்ணா ஒருமுறை என் அலுவலக ஜீப்பை தன் உபயோகத்துக்குக் கேட்டபோது மறுத்திருக்கிறேன். தேவையில்லாத உரசல். அவன் விடாமல் என் மேனேஜரிடம் பேசி வாங்கிவிட்டான் என்றாலும் என் மேல் ஒரு கடுப்போடேயே இருந்தான்.
 
"அருண் எங்கே இருக்கான்?"
 
"அவனை ரூம்லேயே வைச்சுப் பூட்டிட்டேன். வெளிப்பக்கமா. உள்ளே சத்தம் போடாம இருன்னு சொல்லி வச்சுருக்கேன். நீயாவது பரவாயில்ல, புதுசா எவனாவது கேட்டா இந்தி பேசிடுவே. அவன் சுத்தமா மாட்டிக்குவான்."
 
"ஸேஃப்தானே?" என்றேன்.
 
"ஸேஃபா? எப்படியும் அவங்க ஹாஸ்டல் ரூமுங்களைப்பாக்காமல் மேலே போக மாட்டாங்க. கதவை உடைச்சாங்கன்னா பிரச்சினைதான்"
 
அருணுக்கு வந்த கொஞ்ச நாளிலேயே இப்படி ஒரு அனுபவம்.. "சுபர்ணோ.. வண்டியத் திருப்பு. புஸ்ரூ வேண்டாம். ரூமுக்கே போலாம்.. காட்டு வழியா"
 
"பைத்தியமா பிடிச்சுருக்கு? எவனாவது இப்போ அங்கே போவானா?"
 
"முதல்ல ஹாஸ்டல் வாசலுக்குப்போலாம். நிலைமையப்பாத்துகிட்டு உள்ளே போலாம். அருண் நிச்சயம் பயந்திருப்பான். அவனைத் தனியா விட்டுட்டு போக முடியாது. என்னையும் அங்கேயே உள்ள வச்சுப் பூட்டிடு."
 
சுபர்ணோவுக்கும் என்ன செய்வது என்று சரியாகப் புலப்படவில்லை. புஸ்ரூ போவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்குமா, அதனால் பிரச்சினை தீருமா என்ற சந்தேகங்கள் அவன் மனத்திலும் எழுந்திருக்க வேண்டும்.
 
"சரி உன் இஷ்டம். காட்டு வழியா நீ வா, நான் வண்டிய ஓட்டிகிட்டு போறேன்."
 
"கிருஷ்ணா உன்னைப்பார்த்தா நிச்சயம் என்னைப்பத்திக்கேப்பான். நீயும் காட்டு வழியாவே வா"
 
அடர்ந்த காடு என்றில்லாவிட்டாலும், கல்லும் முள்ளும் சிலநேரங்களில் சிறுத்தைகளும் காணப்படும் காட்டு வழியில் 2 கிமீ நடந்து ஹாஸ்டல் கண்ணில் பட்டபோது செக்யூரிட்டியின் குடிசை எரிவது கண்ணில் பட்டது.
__________________________________________________
நாளை அடுத்த பாகம்
 
 
 
 
 
 
 
 


 

6 பின்னூட்டங்கள்:

மணியன் said...

இது என்ன பைத்தியக்காரத் தனம் என்று தெரியவில்லை ? நானும் அன்றையதினம் ஹைதராபாத்தில் ஒருபுறநகர் விருந்தினர் விடுதியில் சிறைப்பட்டிருந்தேன். அந்த அனுபவத்திற்குப் பிறகே குற்றம் செய்தவர் ஒரு சமூகத்தை சேர்ந்தவர் என்றால் அந்த சமூகத்தினரையே குற்றவாளிகளாக பார்ப்பதை விட்டொழித்தேன். அந்தவகையில் இலண்டன் குண்டுவெடிப்பு போது ஆங்கிலேயர் எத்தனை கட்டுப்பாடுடன் இருந்தனர் என்பதை வியக்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணியன்.

வாஸ்தவம்,சம்மந்தமில்லாத நிகழ்வுகளால் பாதிக்கப்படுவது, அதுவும் நம் இருப்பிடத்தை விட்டு வெளியே இருக்கும்போது என்பது பெரிய கொடுமை.

பினாத்தல் சுரேஷ் said...

test

manasu said...

நல்ல பதிவு சுரேஷ்.

முதல் பகுதியின் நகைச்சுவை ரெம்ப நல்லா இருந்தது.

Geetha Sambasivam said...

சுரேஷ்,
அந்தச் சமயம் நாங்கள் ஜாம் நகரில் இருந்தோம். குறிப்பாக அன்று அஹமதாபாத் போக வேண்டி வந்து, நான், என் கணவர் மற்றும் பையன் மூவரும் குஜராத் ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் பஸ்ஸில் ஏறிப் போனோம். என் பையன் பக்கத்தில் இருந்த ஒருத்தர் எங்களைப் பார்த்ததுமே, "ஆப் லோக் மதராஸி ஹோ? ஆஜ் க்யூம் பாஹர் நிகலா"என்று கேட்டார். எங்களுக்கு நிலைமையின் தீவிரம் புரியவில்லை. வழியில் சில காங்கிரஸ்காரர்கள் பஸ்ஸை நிறுத்திச் சோதனை போட்டார்கள். அப்போது என் கணவரின் அலுவலக அடையாள அட்டை இருந்ததால் எங்களை ஒன்றும் கேட்கவில்லை. இருந்தாலும் "க்யூம் மாரா, ஹமாரா ஆனேவாலே பிரதான் மந்த்ரி கோ" என்று கேட்டார்கள். நாங்கள் சொன்னது, "எங்களுக்கும் தெரியாது. அவர் எங்களுக்கும் தலைவர் தான். மேலும் யாரோ ஒருத்தர் கொன்றதற்கு எங்களை ஏன் கேட்கிறீர்கள்" என்றோம். என்ன நினைத்தார்களோ ,"டீக் ஹை" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்கள். அதைத் தவிரப் பெரிய அளவில் கலவரம் ஏதும் நடக்காவிட்டாலும் என் பையன் பள்ளியில் வெகு நாட்கள் வரை அவனிடம் "ஏன், ராஜீவ் காந்தியைக் கொன்றீர்கள்" என்று கேட்பார்கள். அவர் பிறவியிலேயே மக்கள் தலைவர் ஆக இருந்திருக்கிறார். அதனால் தான் இத்தனை வருடங்கள் சென்றும் அதன் தாக்கம் எல்லாரிடமும் இருக்கிறது.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மனசு.

நன்றி கீதா. நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் ராஜீவ் காந்திக்காக கலவரம் நடக்கவில்லை என்பது என்னவோ உண்மைதான். ஆனால், பீஹாரில், கலவரம் எப்போதென்று காத்துக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில்.. இதுவும் ஒரு சாக்கு.. அவ்வளவுதான்.

 

blogger templates | Make Money Online