May 14, 2008

ஜெய்ப்பூரும் நானும்

வங்கதேசத்துப் புயல் லட்சம் பேரைக் காவுகொண்டது, சீனத்து நிலநடுக்கம் ஆயிரங்களைத் தாண்டுகிறது.. ஜெய்ப்பூரில் 60 -80 பேர்தான் பலி என்று நிம்மதியா அடைய முடிகிறது?
 
எண்ணிக்கையாகவே எல்லாச்சாவுச் செய்திகளையும் படித்துவிடமுடிகிறதா?
 
என்னால் முடிவதில்லை.
 
இயற்கைச் சீற்றங்களையும், சரக்கடித்த நேஷனல் பர்மிட் லாரி நெடுஞ்சாலையில் மல்லாந்து பலிகொள்வதும் விதி என்ற ஒற்றைச்சொல்லில் மறக்கடிக்கப்படலாம். ஆனால் மனிதன் உருவாக்கும் விபத்துகள்?
 
சைக்கிள்களில் அலாரம் கடிகாரங்களை டெட்டொனேட்டர்களாக வைத்து,  பயங்கொள்ள எந்தக் காரணமும் இல்லாத மக்கள் கூடும் இடங்களில் பொருத்தி, அதிகமாகக் கூடும் நேரம் பார்த்து, ஒரு வெடிப்பில் சுதாரித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இன்னொரு இடத்தில் இன்னொரு இடத்தில் என்று 20 நிமிடங்களில் 6 இடங்களில் வெடிக்கவைத்து, வெடிப்பின் விஸ்தீரணம் கூட தோட்டாக்களை வைத்து தூரமாக நின்று வேடிக்கை பார்ப்பவன் என்ன கடவுளா? யார் விதியை யார் எழுதுவது? அவன் பக்கம் உள்ள நியாயம் (நியாயமாகவே இருந்தாலும்)கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையில் நிர்ணயிக்கப் படுகிறதா? மதம் கொடுத்த உரிமை, உரிமை மறுப்பு கொடுத்த கோபம் என்று இவற்றை நியாயப்படுத்த முடியுமா?
 
ஆலமரம் விழுந்ததால் கூட புற்களும் விழுந்தாகவேண்டும் என்று வாக்காளர் அடையாள அட்டையுடன் ஒரு இனத்தையே அழித்தொழிப்பு செய்தார்களே, அதை நியாயப்படுத்த முடியுமா?
 
தலைவியே சிறைக்குச் செல்கிறாள், பேருந்தில் மாணவிகள் இருந்தாலென்ன, எரித்தே தீருவோம் என்றார்களே, அதை நியாயப்படுத்த முடியுமா?
 
ரயிலை எரித்தார்கள் என்று எரித்த இனத்தையே சுத்திகரிக்க முனைந்தவர்களை நியாயப்படுத்த முடியுமா?
 
எங்கேயோ யாரோ யாரையோ அழிக்கிறார்கள் என்பதை உலகுக்கு உணர்த்த 9 மணி பாஸ்ட் பாசஞ்சரைப் பிடித்தவர்களை வெடிக்கவைத்ததை?
 
அண்ணனுக்கு ஆதரவில்லை என்று சொன்னவனின் கீழ் வேலை பார்த்தவர்களை எரித்ததை?
 
யார் கொடுத்தார் உனக்கு இந்த உயிரெடுக்கும் உரிமை? மதம் கொடுத்ததா? வேறு வழியின்றி உனக்கு விழும் வாக்குகள் கொடுத்ததா? ஆட்சி உன் பக்கம் என்ற ஆணவம் கொடுத்ததா? கும்பலில் உன்னைத் தனித்து அடையாளம் காணமுடியாது என்ற பாதுகாப்பு கொடுத்ததா?
 
இந்தச் சாவுகளை வெறும் எண்ணிக்கையாகப் பார்க்க என்னால் முடிவதில்லை.
 
சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வெளிவரும் ஒற்றைத் துளி ரத்தத்தையும் பார்க்கமுடியாமல் முகம் திருப்புகிறேனே, சாலையில் செத்துக்கிடக்கும் பூனையின் ரத்தம் பார்த்தும் வாந்தி கக்குகிறேனே, குழந்தைக்குச் சிறு கீறல் ஏற்பட்டு ரத்தம் சிந்தினால் மயக்கம் வருவதாக உணர்கிறேனே, நான் இப்படி பூஞ்சையாக இருந்ததில்லை - என் 22 வயதுவரை.
 
உத்தரப்பிரதேசத்தில் உள்ளமைந்த நிலக்கரிச் சுரங்கங்களுக்கு ரயில் பயணமாக பாபர் மசூதி இடித்த மறுதினம் சென்ற போதும் இப்படி ஆகவில்லை.
 
தமிழகத்தில் செத்தார் ராஜீவ் காந்தி என்ற ஒரே காரணத்தால் தமிழர்களைத் தேடித் தேடி பீகார் காங்கிரஸார் அடித்த போதும்கூட பூஞ்சையாய் மாறவில்லை.
 
உடன் வேலை செய்த மெக்கானிக் மதம் காரணமாக வெட்டிப்போடப்பட்ட போதும் கூட இந்த  ரத்த போபியா வரவில்லை.
 
இவை நடந்தபோதெல்லாம் கலவரத்தை வாய்மொழியாக மட்டுமே கேட்டிருந்தேன், விளைவுகளை மட்டுமே பார்த்திருந்தேன் - தாக்கத்தை உண்டுசெய்தனதாம், ஆனால் நிரந்தர மாற்றத்தை உண்டு செய்யவில்லை. நிரந்தர மாற்றத்தை உணர்ந்த நாள் தெளிவாகவே நினைவிருக்கிறது.
 
ஒரு இளங்காலை நேரம், பணியிடத்துக்கு நடந்து செல்லும்போது எதிர்ச்சாரியில் எந்த வண்டியும் செல்லாதது வியப்பாக இருந்தாலும் புதிதாக இல்லை - அடிக்கடி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அறிவிக்கும்  "ஆர்த்திக் நாகாபந்தி" (சாலை மறியல்) பழகிவிட்டிருந்தது. ஆனால் பணியிடத்திலும் சலசலப்பு இல்லாதது, ஆட்கள் யாருமே கண்ணில் படாதது புதிதுதான்.
 
என் வேலையைப் பற்றி ஒரு வரி: நிலக்கரிச் சுரங்கம் நடத்துவது அரசாங்கம், அதற்கு இயந்திரங்கள் வழங்கிய தனியார் நிறுவனத்தில் என் பணி.  இயந்திரங்கள் பராமரிப்பையும், மராமத்தையும் மேற்பார்வை பார்த்து, உத்தரவாத நேரத்துக்குள் பழுதேற்பட்டால் அதைப் பரிசீலித்து என் நிறுவனத்துக்குத் தகவல் அளித்து சரிசெய்யும் செலவை ஏற்கவைக்கவேண்டியது என் பொறுப்பு.
 
யாரும்தான் இல்லையே, சரி இயந்திரங்களின் வேலைசெய்த நேரத்தைக் காட்டும் எண்ணை மட்டும் குறித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிவிடலாம் என்று வண்டிகள் மேல் ஏறத் தொடங்கினேன்.  ஏறும்போது யாரும் கண்ணில் படவில்லை.. இறங்கும்போது ஒரு கும்பல் எனக்காகக் காத்திருந்தது. காட்டுவாசிகள்.
 
20 - 30 பேர் இருப்பார்கள். எதிரில் நான் தனியன். அவர்கள் கையில் உருட்டுக்கட்டைகள், வில் அம்பு - விஷம் தோய்த்த அம்பு. தலைவன் போலிருந்தவன் மிரட்டினான் - புரியாத பாஷை. நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டு. பதில் சொல்லக்கூட நா எழும்பவில்லை. அதிகமான பயத்தில் உடலில் பல மாற்றங்கள்,   வாந்தி வருவது போலிருந்தது. ஒருவன் வில்லை நாணேற்றத் தொடங்கினான்.
 
மூன்றாவது வரிசையில் இருந்த ஒரு ஆளுக்கு என்னை அடையாளம் தெரிந்திருந்தது. முன்வரிசைக்கு முந்தி வந்தான். பளாரென ஒரு அறை விட்டான். ஹிந்தியில் பேசினான். " இன்னிக்கு பந்த் னு தெரியாது? வீட்லேயே இருக்க வேண்டியதுதானே.. ஓடிப்போயிரு.." அவர்களிடம் திரும்பி.. "இவன் அரசாங்கம் இல்ல.. தனியார் கம்பேனி.. தெரியாம வந்துட்டான்.. ஓடச்சொல்லுங்க"  கண்ணில் குரோதத்துடன் கும்பல் வழிவிட மூன்று கிலோமீட்டர் எந்தப்பக்கமும் பார்க்காமல் ஓடியே வீடு வந்து சேர்ந்தேன்.
 
மரணம் தொட்ட அந்தக் கணத்தில் இருந்துதான் இப்படிப்பட்ட செய்திகளின் வீரியம் என்னைத் தாக்கத் தொடங்கியது என்று நினைக்கிறேன். மனிதனால் உருவாக்கப்படும் கலவரங்கள், குண்டுவெடிப்புகள் எந்தச் செய்தியும் குறைந்தபட்சம் மூன்றுநாட்களாவது மனநிம்மதியைக் குலைக்கிறது.
 
இதை எழுத எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது - ஒருவேளை இப்படிப்பட்ட மரணங்களுக்குக் காரணமான யாராவது ரத்தம் சிந்தினால் அதைப்பார்த்து எனக்கு வாந்தி மயக்கம் வராமலும் இருக்கலாம்.
 
ஒவ்வொரு கலவரமும் குண்டுவெடிப்பும் கொண்டுசெல்லும் உயிர்களைத் தவிர்த்தும் இப்படி வாழ்நாள் முழுக்கப் பாதிப்புடன் வளைய வரும் என்னைப் போன்ற எத்தனை பேரை உருவாக்குகின்றதோ! இலங்கையில் ஈழத்தில் பாலஸ்தீனத்தில் ஈராக்கில் எத்தனை பேர் நாள்தோறும் இப்படிப் பாதிக்கப்படுகின்றார்களோ! ஜெய்ப்பூரில் இன்று எத்தனை என்போன்றோர் உருவானோர்களோ..
 
எதுவும் செய்ய முடியா இயலாமை.. கோபம் கொள்வதைத் தவிர நான் வேறென்ன செய்ய முடியும்?
 
பி கு: ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புச் செய்திகள் வெளிவந்த நேரத்தில் இலவசக்கொத்தனாருடன் மின்னரட்டையில் இருந்தேன், நாளை காலை ஒரு பதிவிடுவேன் என்று சொன்னேன். அவர் கேட்டார்.. எப்போ குண்டு வெடிச்சாலும் ஒரு கடமையாவே இதைச் செய்யறீங்களே..  எனவே காரணமான சொந்தக்கதையும் சொல்லியிருக்கிறேன்.

May 7, 2008

அவியல் (அ) உள்ளேன் அய்யா (அ) ஆல் இன் ஆல் கருத்து சொல்வோமில்ல! (07 May 08)

ஐபிஎல்லுக்காக சொத்தை அடமானம் வைத்து கேபிள் கனெக்ஷன் வாங்கினேன். 6 கோடி விலைபோன அற்புத டோனியின் செண்டிமெண்ட் அல்வா தாங்க முடியவில்லை. ஹேடனோடு ரன் போம், ஹஸ்ஸியோடு பீல்டிங் போம், ஓரம் ஓடு பவுலிங் போம் என்று காலி பெருங்காய டப்பாவாக ஆடிக்கொண்டிருக்கின்றார்கள். 5 பவுலர் மட்டும் உபயோகப்படுத்துவது, எக்ஸ்பெரிமெண்ட் செய்யாமை, ஒரு மேட்ச் சுமாரா ஆடிய வித்யுத்தை காவுகொடுத்து ஸ்ரீகாந்தின் தவப்புதல்வனை உள்ளே நுழைத்தது, ஜோகிந்தர் ஷர்மா கடைசி ஓவர் செண்டிமெண்ட் என்று கேனத்தனமான கேப்டன்ஷிப். (ஜோகிந்தர் எந்த ஓவர் போட்டாலும் அதிலே பாக்கி இருக்கும் அத்தனை ரன்னையும் அடித்து ஆட்டத்தை முடித்துவிடுவதால் அந்த செண்டி வொர்க் அவுட் ஆகிறது).. நான் ராஜஸ்தானுக்கு மாறிட்டேன்!

******************
 
இந்தியர்கள் அதிகம் சாப்பிடுவதால்தான் விலைவாசி ஏறுகிறது என்று புஷ் சொன்னாரோ இல்லையோ தெரியாது. கர்நாடக அரசியல்வாதிகள் தண்ணீர்ப்பஞ்சத்துக்கு தமிழர்கள் மீது பழிபோட்டு நடத்தும் அரசியல் அமெரிக்கா வரை சென்றுவிட்டது. சரி, இதைச் சொல்வதால் பசி அடங்குமா, விலைவாசி குறையுமா?
 
******************
 
சிவாஜிக்கு 1 வருஷம் முன்னாலேயே ப்ளாஷ் செய்தேன், 1 மாசம் முன்னாலேயே விமர்சனம் எழுதினேன்.. தசாவதாரத்துக்கு அப்படியெல்லாம் ஒன்றும் செய்யும் யோசனை இல்லை. ரஜினி ஷங்கர் கூட்டணி என்ன கிழித்துவிடப்போகிறார்கள் என்று தெரியாதா? ஆனால் கமல் ஆச்சர்யங்களை உள்ளே வைத்திருப்பவர். சாகேதராமன் கற்பனை ஆனாலும் நிஜத்துக்கு மிக அருகே வந்தவன் - ரங்கராஜ நம்பி (?) கடலுக்குள் போனாரா, அவரை கடலில் தள்ளிவிட்டவர்கள் சைவரா அசைவரா, பூணூல் சரியாகப் போட்டிருந்தார்களா போன்ற கேள்விகள் படம் ரிலீஸ் ஆகும்வரை காத்திருப்பதில் பிரளயம் வந்துவிடாது. வரட்டுமே, அப்புறம் கிழிக்கலாம் - மும்பை எக்ஸ்பிரஸைக் கிழித்தது போல! ஆனால் பாட்டெல்லாம் அடிக்கும் ஹிந்திவாடையும், 10 வேஷமா.. பேஷன் பரேட் போல வரப்போகிறார்களோ என்ற பயமும் ஆர்வத்தைக் குறைத்திருப்பது உண்மை.
 
*************************
 
இன்று அக்ஷய திருதியையாம். கோல்டு குவெஸ்ட்டில் காசு போட்டால் மும்மடங்காகத் திரும்பி வருமாம். இன்னும் இரண்டு ஆளை இன்றே சேர்த்து வைத்தால் அந்தமான் தீவுகளை உங்கள் பேரில் எழுதிவைத்துவிடுவார்களாம். இது சீன பெங் சுயி படியும் நாஸ்ட்ராடமஸ் வாக்கின் படியும் சத்தியமான உண்மையாம். கேக்கறவன் கேனையா இருந்தா...

இதுபோன்ற மோசடிகளில் பணம் எடுப்பவன், ஏமாற்றுகிறோம் என்று தெரிந்து செய்பவன் மட்டும்தான். மற்றவனுக்கு ஆசை ஏமாறும் வரை இருக்கிறது. வயாகராவிலிருந்து நைஜீரியாவரை ஒரு நாளைக்கு குறைந்தது பத்து மெயில் அனுப்பி எவனாச்சும் ஏமாறுவானா என்று பார்த்துக்கொண்டிருக்கும் கூட்டம் வேகமாக அதிகரிக்கிறது. பாடுபட்டுப் பணத்தைச் சேர்த்துவைக்கும் வல்னரபிள் மானிடரே கவனம்!

*****************************
 
தமிழ்மணம் புதுவடிவம் எனக்குப் பிடித்துதான் இருக்கிறது. முழு ஓடையும் கொடுப்பது உப்புமா கிண்டுபவர்களுக்கு சரியான அடியாக இருந்திருக்கும் :-) முழு ஓடையும் கொடுத்து, சீக்கிரமாகவும் தரவிறங்கினால் அதொன்றும் தப்பில்லை என்றே நினைக்கிறேன். நான் புழங்கும் அத்தனை பக்கங்களும் ஒரே பக்கத்தில் வைத்திருப்பதும் வசதியாகத்தான் இருக்கிறது. கூகுள் ரீடர் சில பதிவுகள் (20 அதிகபட்சம்) மட்டும் இருக்கும்வரை உள்ள எக்ஸ்பிரஸ் வேகம், ஓப்பன் ஓடைச் சங்கமத்தின் 430 ஐயும் சேர்த்தவுடன் பாசஞ்சராகி கூட்ஸ் ஆகி நின்றே போனது.. வேறு வழியில்லாமல் அத்தனையும் அழித்தேன். தமிழ்மணத்துக்கு கூகுள் ரீடர் மாற்று இல்லவே இல்லை!
 
**************************
 
"உத்தபுரத்தில் பாதையும் வேண்டும்; மற்ற பிரிவினருக்கு பாதுகாப்பும் வேண்டும்; அதற்குரிய நடவடிக்கையை எடுங்கள் என்று சொன்னேன். அதன்படி அந்த நீண்ட உயர்ந்த சுவரில் ஒரு பெரிய நுழைவாசலை உருவாக்கி வழியை ஏற்படுத்தி அந்த வழியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று உருவாக்கியிருக்கிறோம்." என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் முதல்வர். மற்ற பிரிவினரின் பாதுகாப்பு அந்த வழியினால் பாதிக்கப்படுவது உண்மைதானா? மற்ற சமூகத்தினரின் பாதுகாப்பு  குறிப்பிட்ட சமூகத்தினரால் மட்டுமே அச்சுறுத்தலுக்கு ஆளாகிறது என்று சொல்வது ஒருவகைத் தீண்டாமை அல்லவா? பாதுகாப்பைச் சுவர் தந்துவிடுமா?  பெரிய பூனை போக பெரிய கதவும், சின்ன பூனை போக சின்ன கதவும் வைத்த மேதாவி கற்பனை அல்ல என்று நிரூபிக்கிறார் முதல்வர். சமீபகாலத்தில் ஏறத்தாழ எல்லாச் செயல்பாடுகளிலுமே தெரியும் வழவழ கொழகொழ பாணியை இதிலும் முதல்வர் கடைப்பிடித்திருப்பது அநியாயம். வெளிப்படையான தீண்டாமையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டாமா? அதே போல சன் ஜெயா கலைஞர் மூன்று செய்திகளிலுமே, சுவரைக் கட்டியவர்கள் என்ன ஜாதி என்பதைக் குறிப்பிடாமல் இருந்தது தற்செயல் என்று தோன்றவில்லை. இதிலும் ஓட்டு பார்த்தால் யாராலும் ஜாதிக்கொடுமையை தீர்க்க முடியாது. அசிங்கம்!
 
****************************
சினித்துளி!
  • யாரடி நீ மோகினி பார்த்தேன். டுபாக்கூர். கதை திரைக்கதை செல்வராகவனாம்! அடப்போங்கய்யா!
  • பொம்மரில்லு படம் வசனம் புரியாமல் பார்த்தேன், வசனம் புரிந்திருந்தால் ரசித்திருப்பேனோ என நினைத்ததைப் பொய்யாக்கியது ப்ரேம்-பை-ப்ரேம் ரீமேக் சந்தோஷ் சுப்ரமணியம். ஹ ஹ ஹாசினி மாதிரி ஒரு கேனைக் காதலியை வைத்துக்கொண்டு சந்தோஷ் எப்படித்தான் குப்பை கொட்டப் போகிறானோ பாவம்!
  • நேபாளி திரைக்கதை நன்றாக இருந்தது. பழைய கதையையும் சொல்லும் விதத்தில் சுவாரஸ்யப்படுத்தி இருந்தார்கள். பார்த்ததற்கு வருந்த வைக்கவில்லை.
  • குருவி இனிமேல்தான் பார்க்கவேண்டும் (நான் ஒரு மசாக்கிஸ்ட்). ஆனால் விமர்சனம் போக்கிரிக்கு எழுதியதே பொருந்தும் எனத்தோன்றுகிறது பா ராகவன் விமர்சனத்தைப் பார்த்தால்.

 

 

blogger templates | Make Money Online