Jul 12, 2017

நா முத்துக்குமார்

2013 ல் நாலுவரி நோட்டுக்காக எழுதியது:

படிமங்கள் என்று சொன்னால் பெரிய வார்த்தையாக இருக்கும் (குறைந்தபட்சம் எனக்கு). ஒரு வரியைக் கேட்கும்போது, எழுதியவர் என்ன சொல்ல வந்தாரோ அந்தச் சூழலை படிப்பவரும் உணரவேண்டும். அதற்கு பத்திபத்தியாக விளக்காமல் சிறு எளிய வரிகளில் சொல்லிச் செல்வது சாதாரண விஷயம் இல்லை. தமிழ்த் திரைப்பாடல்களில் தத்துவத்தை அழகாகச் சொன்ன கவிஞர்கள் நிறைய. ஆனால் இந்த விஷயத்தில் என்னுடைய சிற்றறிவுக்கு, நா முத்துக்குமார்தவிர வேறெந்தப்பெயரும் ஞாபகம் வரவில்லை.

எல்லா இசையமைப்பாளர்களிடமும் பாடல் எழுதி இருக்கிறார், நிறைய மீட்டர் வரிகள் உண்டு என்றாலும் திடீரெனப் பளிச்சிடும் சில அபூர்வமான வரிகளே இவருடைய அடையாளமாக இருக்கிறது.

கூவும் செல்ஃபோனின் நச்சரிப்பை அணைத்து, கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பைக் கேட்போம் - எங்கும் சந்தம் பிறழவில்லை, ஆனால் எளிமையாக நேற்றைய வாழ்க்கைக்கும் இன்றைய வாழ்க்கைக்குமான வித்தியாசத்தை உடைத்துப்போட்டு விடுகிறார்.

அவர் மனம் உணர்ந்த விஷயங்களை நமக்குக் கடத்தும் சில என்னைக்கவர்ந்த வரிகளை மட்டும் சுட்டுகிறேன்..

ஒரு வண்ணத்துப்பூச்சி என் வழி தேடி வந்தது, அதன் வண்ணங்கள் மட்டும் என் விரலோடு நின்றது.. பாட்டை கவனித்துக்கேட்டால் என் விரல் நுனியில் வண்ணத்துப்பூச்சியின் பிசுபிசுப்பை உணர்கிறேனே, அதுதான் எழுதியவரின் வெற்றி.


பசி வந்தா குருவி முட்டை; தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை; புழுதி தான் நம்ம சட்டை

என்று வெயிலைப் பொருட்படுத்தாது ஓடும் சிறுவர்களை, எந்தக் காட்சிப்படுத்தலும் தேவைப்படாமலேயே புரிந்துகொள்ள முடிகிறதே, அதுதான் படிமம்.

பறவை பறந்தபிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே - ஆடும் இலை உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை?

தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்குச் சொந்தமில்லை - என்று படிமத்தையும் தத்துவத்தையும் சேர்த்துவைத்தும் ஆட்டம் போடுகிறார்.

இது என்ன காற்றில் இன்று ஈரப்பதம் குறைகிறதே, ஏகாந்தம் பூசிக்கொண்டு அந்திவேளை அழைக்கிறதே.. தினமும் பார்க்கும் விஷயம்தான், சாயங்கால வேளை கடல்காற்று.. அங்கே நம்மை அழைத்துப்போக இரண்டே வரிதான் தேவைப்படுகிறது இவருக்கு.

கையை மீறும் ஒரு குடையாய், காற்றோடுதான் நானும் பறந்தேன் - மழைக்காற்று மனசுக்குள் வீச வைக்கிறார்.

சொல்லிக்கொண்டே போகலாம் என்றாலும்

1 பின்னூட்டங்கள்:

Unknown said...

arumaui

https://sankarsubramanian.blogspot.in/

 

blogger templates | Make Money Online