Sep 13, 2005

நன்றி..நன்றி..நன்றி..13 Sep 05

முதலில் நன்றி.

போட்டியை அறிவித்து, நெறிப்படுத்தி, தகுதி பெறுகிறதா என்று படித்துப் பார்த்து, அதை PDF ஆக மாற்றி, பரிசுத் தொகையை விடவும் முகமூடி செய்த வேலைகள் அதிகம். தமிழுக்கு இன்னும் ஒரு சில நல்ல கதைகளைப் பெறுவதில் அவருடைய ஆர்வம் தெள்ளெனத் தெரிகிறது.

கதையைத் தேர்ந்தெடுப்பதோடு நிற்காமல், கதையின் அம்சங்களை நன்கு ஆராய்ந்து காரணங்களோடு விளக்கி இருந்த மாலனின் அணுகுமுறை, புதிதாக எழுதத் தொடங்குவோர்க்கு பல குறிப்புகளையும் வழங்கியது.

என் கதையை எழுதும்போது கருத்தில் கொண்ட அத்தனை விஷயங்களையும் கதையைப்படித்தே பட்டியலிட்டிருப்பதில் அவருடைய அனுபவம் தெரிகிறது,பத்தி பத்தியாகப் பாயாமல் வரிவரியாகப் படித்திருக்கிறார் என்பதிலேயே எனக்கு ஒரு பெருமை!


என் கதையை படித்து, பாராட்டி, ஆதரித்து ஊக்குவித்த நண்பர்களுக்கு நன்றி. சிலருக்கு நினைவிருக்கலாம் - கொஞ்ச நாள் முன்பு நான் எனக்கு எழுத வரவில்லை என்று வலைப்பதிவை மூட இருந்தேன். அப்போது பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவரையும் நான் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன் - (இவங்க தான்ப்பா காரணம் - என்னை வுட்டுடுங்க!)

இப்போது கதையை பற்றி.

ஏற்கனவே இருமுறை சொல்லி இருந்தது போல, இது உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே, நான் செய்தது ஜன்னல் உடை அலங்காரம் (Window Dressing:-)) மட்டுமே. இத்ரீஸ், பஷீர் ராம்லால் ஆகியோரின் செய்கைகளுக்கு காரணம் என்ன, எந்த மாதிரியான உளவியல் இது எனப் புரியாமல் சில இரவுகள் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறேன்.


ராம்லாலுக்கு விபத்தில் அடிபடும் போது சக தொழிலாளி எனப் பார்க்க முடிந்த இத்ரீஸை கலவர சமயத்தில் மாற்று மதத்தான் என மட்டுமே பார்க்க முடிந்தததற்கு குழு மனப்பான்மை மட்டுமே காரணமா?

இத்ரீஸுக்கும் ராம்லாலுக்கும் இருந்த தொழில் ரீதியிலான (ஒரே வொர்க்-ஷாப், ஒரே நிலை - ஆனால் மேலதிகாரிகளிடம் இத்ரீஸுக்கு இருந்த நம்பிக்கை ராம்லால் மேல் இல்லை - இதை கதையிலும் கோடி காட்டி இருந்தேன்)போட்டி அந்த (மகனை வெட்டிய) நேரத்தில் வந்திருக்குமா இல்லை மதம் பிடித்த மூளைச்சலவை மட்டுமே காரணமா என்பதும் இன்னும் எனக்குப் புரியவில்லை.


யோசியுங்கள், யோசிக்கிறேன்!

Sep 6, 2005

வினாயகர் சதுர்த்தி 07 Sep 2005

களிமண்ணில் செய்த வினாயகர்தான் விசேஷமாம்..

துபாயில் எங்கே களிமண்ணைத் தேடுவது?

எனவே என் சொந்த மூளையை உபயோகித்தேன்!

குழந்தைகள் விளையாடும் வண்ணக் களிமண்ணை எடுத்தேன் - என் கைவண்ணத்தை அதில் காட்டினேன் -(இது என் முதல் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது)

Image hosted by TinyPic.com

இதைப் பார்த்து வியந்த (இவன்கிட்டே இருந்து இப்படி எதிர்பார்க்கலையே!) மனைவி, தன் நண்பர்கள் குழாத்தில் செய்தியை பறக்கவிட..

மாஸ் ப்ரொடக்ஷன் செய்யவேண்டியதாகிவிட்டது!

Image hosted by TinyPic.com

அனைவருக்கும் வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

மறுபடியும்..

வலைப்பதிவுகளுக்கு வரும் முன்னர் எழுதுவது என்பது மிகவும் சுலபமான விஷயம், நேரமின்மை ஒன்றே குறை, நேரம் மட்டும் இருந்தால் எழுதுவது எளிது என்றே நினைத்திருந்தேன்.

எழுதத் தொடங்கியபின்னர்தான் கோர்வையாக ஒரு சிறு கட்டுரையோ கதையோ எழுதுவதில் உள்ள சிக்கல்கள், வார்த்தை தேர்ந்தெடுப்பு, நடை, உள்ளடக்கத்தை மற்றவர் எப்படிப் புரிந்து கொள்வாரோ என்ற சுயம் விலக்கிய பார்வை, ஆங்கில தமிழ் மயக்கங்கள், சந்திப் பிழை தவிர்த்தல் என எவ்வளவோ பிரச்சினைகள் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இருந்த போதிலும், சிலருக்கு மட்டும் எழுதுவது என்பது பேசுவதைப் போல சுலபமாக இருப்பதையும் பார்க்க முடிகிறது.

முன்பெல்லாம் அவ்வாறு எழுதுபவர்களை வரம் பெற்றவர்களாய் கற்பிதம் செய்திருந்தேன்.

இப்போது புரிகிறது, அவர்கள் என் நிலையை வெகு நாட்களுக்கு முன்னாலேயே கடந்து விட்டவர்கள், முறையாக ஆர்வம் செலுத்தி, பயின்று இந்தக் கலையை கைவரப் பெற்றவர்கள் என்று.

ஒரு எழுத்தாளர் உருவாவது இவ்வளவு பயிற்சி தேவைப்படும் நிகழ்வாக இருக்கும்போது, எழுதுபவரை நிறுத்த வைப்பது எவ்வளவு சுல்பமாக இருக்கிறது!

கழிவறைச் சுவற்றில் உள்ள கிறுக்கல்களுக்காகவெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்று சொல்வது எளிது. நேரடியான தாக்குதலை எதிர்கொள்ளும் போதுதான் அதன் வலி தெரியும். ராமச்சந்திரன் உஷாவின் முடிவையும் அதன் பின்னால் உள்ள வலியையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

மற்றவர்களைக் கேவலப்படுத்தி அதில் குளிர் காயும் அநாமதேயரே,
உங்களுக்கு இன்னொரு வெற்றி. அதைக் கொண்டாடும் முன், ஒரு முறை சிந்தியுங்கள் -

உங்களால் இன்னொரு எழுத்தாளரை உருவாக்க முடியுமா?

பினாத்தல்களின் ஐரோப்பிய பயணம் 06 Sep 05

அலுவலக வேலை காரணமாக, வரும் 18ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை (செப்டம்பர் 2005) ஸ்பெயினில் மலாகா(MALAGA)விற்கும், மூன்று நாட்கள் பாரீஸில் ஊற் சுற்றிப் பார்ப்பதற்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது,

ஸ்பெயினிலோ, பாரீஸிலோ உள்ள வலைப்பதிவர்கள் பின்னூட்டம் இட்டால் சந்திக்க முயற்சிப்பேன்.

நன்றி

Sep 3, 2005

விகடனின் சமூக அக்கறை 03 Sep 05

இந்த வார ஜுனியர் விகடனில் "கவர்ச்சிக் கோடு - எல்லை தெரியாமல் தடுமாறும் தமிழ் சினிமா" என்ற விசேஷக் கட்டுரை வெளியாகி உள்ளது.. இங்கே.

தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரைப்பட வினியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள், சென்சார் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் பேட்டி கண்டு, ஆய்வுக்கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட கட்டுரை.

கட்டுரைக்குக் காரணமான சமூக அக்கறை வியக்க வைக்கிறது. விடலைகளும் அறியாதவர்களும் மன்ம் அலைக்கழிக்கப் பட்டுவிடக்கூடாது என்னும் தொலைநோக்குப் பார்வை புல்லரிக்க வைக்கிறது. அதை எல்லாம் விட, ஆபாசம் என்பது என்ன என எல்லோரும் தெரிந்துகொண்டு அதை ஒதுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் "மனம் நொந்த வண்ணம்" கொடுத்திருக்கும் புகைப்படங்கள், தெளிவாக "ஆபாசத்தை"வரையறுத்திருக்கின்றன.

இக்கட்டுரையைப் பற்றிய என் விமர்சனம் - 'சீ"

(நன்றி: பாய்ஸ் படத்துக்கு எழுதப்பட்ட விகடன் விமர்சனம் )

 

blogger templates | Make Money Online