Jun 18, 2006

டா கில்லி கோட் - பாகம் 2

 
அத்தியாயம் 3
"நீ எங்கே இங்கே வந்தே கருப்பாயி? உங்க தாத்தாக்கும் உனக்கும்தான் பேச்சு வார்த்தை கிடையாதே.." என்றார் இன்ஸ்பெக்டர் வீராச்சாமி.
 
"அந்தாளு எக்கேடு கெட்டா எனக்கென்னா? நான் உங்களுக்கும் சாருக்கும் டீ கொணாந்தேன்"
 
'உனக்கு எதாசும் புரியுதாய்யா?" ராமசாமியைக்கேட்டார் இன்ஸ்பெக்டர்.
 
"நாக்காலே மூக்கைத் தொடறது சில சினிமாலே பார்த்திருக்கேன். நாக்குக்கும் மூக்குக்கும் கில்லிக்கும் சம்மந்தம் இருக்கு.(பாகம் 1 பார்க்க) கில்லியைப்பத்தி தான் எதோ சொல்ல வந்திருக்காரு"
 
சொல்லிக்கொண்டிருக்கும்போதே வீராச்சாமியின் முகம் மாறியது. "எனக்கு வயித்த கலக்குது, பெவிலியன்ல டாய்லெட் இருக்கும், அங்கே போறேன்" என்று அவசரமாக ஓடினார்.
 
கருப்பாயி ராமசாமியைப்பார்த்தாள். "நீதான் ராமசாமியா? எங்க தாத்தன் உன்னப் பத்தி அடிக்கடி சொல்லும். உன்னை இந்த போலீஸ்காரனுங்க அமுக்கப் பாக்கறானுங்க, அதுனாலேதான் அந்த இன்ஸ்பெக்டருக்கு டீயிலே பேதி மாத்திரை கலந்து அவன அப்பீட் பண்ணினேன்"
 
"உங்க தாத்தாவுக்கும் உனக்கும் பேச்சு வார்த்தை கிடையாதா?"
 
"நான் ஒரு நாள் எங்க தாத்தாவை மோசமா பாத்துட்டேன்.. அதுலேர்ந்து அந்தாள் கூட பேசறது கிடையாது"
 
"என்ன பார்த்தே?"
 
"அந்த ஆள் சின்னப்பசங்க கூட சேர்ந்து கில்லி ஆடறதப் பாத்துட்டேன். இந்த வயசுலே கில்லியா கேக்குது கிழவனுக்கு?"
 
"சரி உன் தாத்தா என்னவோ சொல்ல்த் தான் இப்படி கோடு எழுதியிருக்காரு. எதாச்சும் புரியுதா?"
 
"ஒண்ணு மட்டும் புரியுது. 3 X டூஸ்கொயர் னா 12 தானே வரும்? அந்த ஆள் எந்நேரமும் 12ஆம் நம்பர் சாராயக்கடையிலேதான் இருப்பாரு. அதத்தான் எழுதியிருப்பார்"
 
"சரி வா உடனே அங்கே போலாம்"
 
12 ஆம் நம்பர் சாராயக்கடைக்கு போனதும் அங்கே ஒரு ஆள் - "நீ கருப்பாயிதானே? ரங்கம்பேத்தி?"
 
"ஆமாம்"
 
"உன் தாத்தா இதை உன் கையிலே கொடுக்கச் சொன்னாரு" என்று ஒரு பொட்டலத்தைக் கொடுத்தான்
 
தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த ராமசாமி "ஆ.. பிடிச்சுட்டேன்! ரதணின்னா என்னான்னு கண்டுபிடிச்சுட்டேன்!"
 
அத்தியாயம் 4
 
துபாயில் ஐ சி சி தலைமையகம்.
 
"சார், நல்ல வேளை சார், ரங்கன் செத்துட்டான். அவன் மட்டும் பயமுறுத்தின மாதிரி விஷயத்தை எல்லாம் வெளிப்படுத்தி இருந்தான்னா!"
 
" கவலைப்படாதே, நம்ம பக்கம் இப்போதைக்கு ஸ்ட்ராங் தான்."
 
"இல்ல சார். நெனச்சுப் பாக்கவே பயமா இருக்குது. அந்த உண்மைகள் மட்டும் வெளிய வந்திருந்தா.. வெஸ்ட் இண்டீஸ்லே வேர்ல்ட் கப் நடக்குமான்றதே சந்தேகம்.. இல்லையா?"
 
"ரங்கனை கவனிச்சது மட்டும் போதாது. ராமசாமின்னு ஒரு கில்லி எக்ஸ்பர்ட்டும் என்னவோ தேடறானாம். தகவல் வந்தது. அவன் கைக்கு எந்த ரகசியமும் கிடைச்சுறக்கூடாது"
 
"சரி சார் அவனையும் கவனிக்கச் சொல்லிடறேன்"
 
அத்தியாயம் 5
 
"ஆமா, ரதணினா என்ன?"
 
"திருப்பிப்போட்டுப் பாரு - ரதணி - தரணி - யாரு தரணி? கில்லி பட டைரக்டர்! கில்லி பத்திதான் எதோ சொல்ல வந்திருக்காரு உங்க தாத்தா; அவர் வயசாயும் கில்லி ஆடறாருன்னா அவர் கில்லி சங்கத்துலே முக்கியமான ஆளாத்தான் இருக்கணும். புனித கில்லி பத்தியும் அவருக்குத் தெரிஞ்சிருக்கலாம்!"
 
"புனித கில்லியா - அப்படீன்னா?"
 
"எல்லாத்தையும் ஒரே பாகத்துலே சொல்லி முடிச்சுட முடியுமா? அடுத்த பாகத்துக்கு மிச்சம் வைக்க வேணாமா?"
 
"அப்புறம் காலன்னா?"
 
"அதையும் திருப்பிப் போடு - லகான்! கிரிக்கெட் பத்திய படம்!  கில்லிக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்மந்தம் இருக்குன்னு சொல்ல வராரு!"
 
"சரி இந்த பேக்கட்லே என்ன இருக்குன்னு பாக்கலாமா?"
 
உள்ளே ஒரு கில்லி இருந்தது. அதன்மேல் MCC என்று எழுதியிருந்தது..
 
"எனக்கு எல்லாம் புரிஞ்சுபோச்சு!" என்றார் ராமசாமி
 
தொடரும்..
 
 

டா கில்லி கோட் பாகம் 1

டா கில்லி கோட் (புதினம்)
 
அத்தியாயம் 1
 
வகுப்பறையில் மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
 
"மச்சான், நேத்து புதுப்பேட்டை மக்கள்கிட்ட தோத்தது கூட பெரிசில்லடா, அவனுங்க கேவலமா லுக் வுட்டாங்களே அதத்தாண்டா சகிச்சுக்க முடியல"
 
"அதைப் பத்தியே நெனைக்காதே. இப்போ இண்டர்நேஷ்னல் கில்லி கிங் ராமசாமி லெக்சர் கேளு. அவர்கிட்டே கத்துகிட்டா எப்படியும் அடுத்தமுறை ஜெயிச்சுடலாம்."
 
ஆசிரியை உள்ளே நுழைகிறார், ராமசாமியுடன்.
 
"மாணவமணிகளே, ராமசாமியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சன் டிவி காமெடி டைம் உள்ளே வெளியேவில் பேட்டி காணப்பட்டவர். இரண்டு வாரங்களுக்கு முன் சேலம் தினத்தந்தியில் அவரைப்பற்றி வந்திருந்ததைப்படிக்கிறேன், கேளுங்கள்"
 
"கில்லி விளையாட்டில் சூரர், கில்லி தயாரிப்பதில் மன்னர் ராமசாமி - அவரைப்பேச அழைக்கிறேன்"
 
ராமசாமி கூச்சத்தில் நெளிந்துகொண்டிருந்தார்.
 
"கில்லி என்பது ஒரு விளையாட்டு மட்டும் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. 12 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் உருவான கில்லி விளையாட்டையே சற்று மாற்றி கோல்ப் என்றும், கிரிக்கெட் என்றும் வெளிநாட்டவர் விளையாடுகின்றனர்.
 
கில்லியினுடைய அளவையும், தாண்டலுடைய அளவையும் ஒப்பீடு செய்து பாருங்கள் - உங்கள் மூக்கிறகும் நாக்கிற்கும் உள்ள வித்தியாசமும் அதுவும் ஒன்றாக இருக்கும். இது ஒன்றே போதாதா, கில்லி தெய்வத்தின் விளையாட்டு என்று சொல்ல?
 
சொல்லிக்கொண்டிருக்கும்போதே, B4 போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வீராச்சாமி உள்ளே நுழைந்தார்.
 
"ராமசாமி, உங்களுக்கு சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்டு க்யூரேட்டர் ரங்கனைத் தெரியுமா?"
 
"நல்லாத் தெரியுமே, இன்னிக்கு ராத்திரி குவார்ட்டர் அடிக்கறதுக்குக் கூட வரச் சொன்னாரு"
 
"ஒரு அவசரமான விஷயம் - வாங்க கிரவுண்டுக்குப் போகலாம்"
 
அத்தியாயம் 2
 
சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்டின் பிரபல D ஸ்டேண்டு வழியாக உள்ளே சென்றார்கள்.
 
"என்ன ஆச்சு சார், ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க"
 
"உங்க ரங்கனை யாரோ கொன்னுட்டாங்க!"
 
"இதுல என்ன சார் ஆச்சரியம், அவன் யாரப்பாத்தாலும் கடன் வாங்குவான் - திருப்பிக் கொடுக்க மாட்டான். எவனாச்சும் கடங்காரன் வெறுப்பேறி போட்டுத் தள்ளிட்டிருப்பான்"
 
"இல்லை - அவன் சாகும்போது பிட்சோட செண்டருக்கு வந்து என்னவோ எழுதியிருக்கான்"
 
செத்துக்கிடந்த ரங்கனைப்பார்த்தான் ராமசாமி. நாக்கால் மூக்கைத் தொட்டுக்கொண்ட வண்ணம் செத்திருந்தான் - கீழே பிட்சில் எழுதியிருந்தது.
 
"ரதணி -காலன் - 3 X  டூஸ்கொயர் "
 
"இதுக்கு என்ன அர்த்தம் சார்"
 
"அதத் தெரியாமதான் உன்னக்கூட்டிவந்திருக்கோம். வேற யாரும் குற்றவாளியா மாட்டலேன்னா, உன்னை லாடம் கட்டி ஒத்துக்க வச்சுடுவோம்"
 
ராமசாமி பயந்துகொண்டிருந்தபோது, ரங்கனின் பேத்தி கருப்பாயி உள்ளே நுழைந்தாள்.
 
தொடரும்..
 
ஐடியாவுக்கு நன்றி: சந்தோஷ் பக்கங்கள் கொடுத்த படம், SK கொடுத்த பின்னூட்டம்
 
பயப்படாதீர்கள் - இன்னும் ஒன்னோ, ரெண்டோதான்:-)

 

Jun 13, 2006

தமிழோவியத்தில் பினாத்தல்கள்

பினாத்தல்களில் மட்டுமே பினாத்தி வந்த உங்கள் அன்புப் பினாத்தலார், தேன்கூடு - தமிழோவியம் போட்டி வெற்றியைத் தொடர்ந்து தன் வேலையை (பினாத்தலைத் தாங்க!) தமிழோவியத்திலும் காட்ட ஆரம்பித்துவிட்டார்.
 
கீழே உள்ள உரல்களைத் தொடர்ந்து, படித்து, பாக்கியம் அடையுங்கள்:-) கருத்தை அங்கேயோ, இங்கேயோ எங்கும் சொல்லலாம். (இதுதாண்டா கருத்துச் சுதந்திரம்:-)) - ஆனால் சொல்லியே தீர வேண்டும்!
 
  1. தமிழோவியத்தில் பினாத்தல்
  2. அந்தக்காலம்
  3. தமிழ் வலைப்பதிவுகளில் நல்ல நகைச்சுவை எங்கு கிடைக்கும்?
  4. டா வின்ஸி கோட் - ஜெயித்தது என்ன?
  5. அமீரகத்தின் குரல் - ஒரு கேள்வி, நான்கு பதில்கள்
  6. தேர்தல் 2060 - சிறுகதை
எச்சரிக்கை: வலைவாழ்வில் முதல்முறையாக பினாத்தலார் தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால், இதயம் பலவீனமானவர்கள் மற்றும் குழந்தைகள் ஜாக்கிரதையுடன் பார்க்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். 

Jun 10, 2006

Fanaa - behind the scenes - கற்பனை.

ஆமீர் கான் தன் அறையில் அமர்ந்திருக்கிறார், குணால் கோஹ்லியும், யஷ் சோப்ராவும் உள்ளே வருகின்றார்கள்.
 
ஆமிர் கான்: வாங்க வாங்க.. நானே ரொம்ப கஷ்டத்துலே இருக்கேன், ஒரு படம் எடுக்கலாம்னு உங்களைக்கூப்பிட்டேன்.
 
யஷ்: என்ன கஷ்டம் ஆமிர்?
 
ஆமிர்: என்ன, வழக்கம் போலத்தான். உப்பு விக்கப் போனா மழை பெய்யுது, மாவு விக்கப்போனா காத்தடிக்குது.
 
யஷ்: என்ன ஆமிர், ரங் தே பஸந்தி நல்லாத்தானே ஓடிச்சு..
 
ஆமிர்: வருஷக்கணக்கா கஷ்டப்பட்டு மங்கள் பாண்டே பண்ணா, பாக்ஸ் ஆபீஸ் மங்களம் பாடிடுச்சி! ரங் தே பஸந்திலே ரெண்டு சின்னப்பசங்கள உள்ளே விட்டேன் - அவனுங்களே எல்லாப்பேரும் தட்டிட்டுப் போயிட்டானுங்க! இதுலே வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம, மேத பட்கர்க்கு ஆதரவா பேசப்போயி, குஜராத்லே உள்ளே விடமாட்டேன்னு அடம் புடிக்கறானுங்க!
 
யஷ்: உங்களுக்கு அந்தஸ்டைல் படம் எல்லாம் இப்ப லாயக்குப் படாது. என் ஸ்டைலுக்கு வாங்க!
 
ஆமிர்: என்ன பெரிய ஸ்டைல்? ரெண்டு ஹீரோ ஒரு ஹீரோயினா இல்ல ஒரு ஹீரோ ரெண்டு ஹீரோயினா? இத மட்டும்தானே நீங்க படத்துக்குப் படம் மாத்துவீங்க?
 
யஷ்: இப்போ ஒரு புது மெத்தட்லே கதை சொல்லப்போறேன். ஒரே ஹீரோ, ஒரே ஹீரோயின்!
 
ஆமிர்: என்ன சார் ஆச்சு உங்களுக்கு? இவ்வ்ளோ வித்தியாசமா சிந்திக்க ஆரம்பிச்சுட்டீங்க?
 
குணால் கோஹ்லி:  அவரை மாத்தறதுக்குள்ளே நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும்!
 
ஆமிர்: சரி என்ன கதை?
 
குணால் கோஹ்லி: இன்னும் அந்த அளவுக்கு அவரை மாத்த முடியலே. இப்பவும் வழக்கம் போலத்தான் படம் எடுப்பேன்னு ஒரே அடம்!
 
ஆமிர்: சரி உங்களத் திருத்த முடியாது! என்ன ஐடியா சார்?
 
யஷ்: இப்போ உங்களுக்கு இந்துத்துவா விரோதிங்க குஜராத்லே இருக்காங்க இல்லையா? அதனாலே முஸ்லீம் கேரக்டராப் போட்டா, எப்படியும் தடை அது இதுன்னு கொஞ்ச நாளாச்சும் ஓட்ட முடியாதா?
 
ஆமிர்: சரி, முஸ்லீம் கேரக்டருங்க, ஓக்கே, அப்புறம்?
 
யஷ்: நம்ம பழைய கால சக்ஸஸ் பார்முலாவே எடுத்துக்குவோம்! ஊர் சுத்திப்பாக்க வர பொண்ணு, கைடு பையன்.. எப்படி?
 
குணால்: சூப்பர் சார்! ரொம்ப யுனிக்கா இருக்கு!
 
ஆமிர்: (குணாலை முறைக்கிறார்) அப்புறம்? ட்விஸ்ட் எங்க வருது?
 
யஷ்: ஹீரோவ நெகடிவ் கேரக்டரா ஆக்கிடலாம். அவன் ஒரு தீவிரவாதி! பார்லிமெண்டுக்கு குண்டு வைக்க வந்தவன், ஆனா கவித பேசியே ஹீரோயினக் கவுத்துடறான்! இவங்க கவித பேசறதையே வச்சி இண்டர்வல் வரைக்கும் ஓட்டிடலாம். அப்பால கடமை ஞாபகம் வந்து குண்டு வைக்கிறான்.
 
ஆமிர்: பாகிஸ்தான் தீவிரவாதியா?
 
யஷ்: பொழப்பக் கெடுத்துடுவீங்க போல இருக்கே! வேர்ல்டுவைட் ரிலீஸ் பண்ணனும் இல்ல? பாகிஸ்தான்னு சொல்லிட்டு பாதி மார்க்கெட்ட டவுன் பண்ணிடுவீங்க போல இருக்கே!
 
குணால்: ஒரு ஐடியா சார். இந்த தீவிரவாதி இந்தியா - பாகிஸ்தான் ரெண்டு பேருக்கும் கஷ்டம் கொடுக்கற ஒரு நியூட்ரல் தீவிரவாதியா காட்டலாமா?
 
ஆமிர்: தீவிரவாதி - நியூட்ரலா? எங்கய்யா பாடம் படிச்சே நீ?
 
குணால்: அப்படி இல்ல சார்.. இவன் சுதந்திர காஷ்மீர் கேக்கற பார்ட்டி. பாகிஸ்தான்லேயும் குண்டு வைப்பான், இந்தியாவிலேயும் குண்டு வைப்பான்.
 
ஆமிர்: தியேட்டர்லே குண்டுன்னு ஒரு பய வரப்போறதில்ல!, சரி, இது அவன் காதலிக்குத் தெரியுமா?
 
யஷ்: தெரியாது, அப்படி இருந்தாத்தான் தேசபக்தியா நாலஞ்சு டயலாக் வுட முடியும்.கடைசியிலே அந்த நாள் படம் ரேஞ்சுக்கு ஹீரொவை நாட்டுக்காக சுட முடியும்.
 
ஆமிர்: அப்புறம் இண்டர்வல்லுக்கு மேலே ஹீரோயின் கிடையாதா?
 
குணால்: அது எப்படி? சார் பட்ஜெட் ரொம்பக்கம்மியாதான் கொடுத்திருக்கார். ஹீரோ, ஹீரோயின் தவிர வேற யாருமே படத்துலே கூடாதுன்னு சொன்னார், நான் பேரம் பேசி, ரிட்டயர்டு ரிஷி கபூரைச் சல்லிசா பேசி சேர்த்திருக்கேன்.
 
ஆமிர்: ஹீரோயினுக்கு ஹீரோ தீவிரவாதின்னு தெரிஞ்சுட்டா உடலே சுட்டுட மாட்டாளா?
 
யஷ்: அதுக்குதான் ஒரு ஐடியா பண்ணப்போறேன். ஹீரோயினுக்கு கண்ணு தெரியாது.
 
ஆமிர்: அப்புறம் எப்படி ஹீரோவை சுடுவாங்க?
 
யஷ்: காதல் படமே பாத்ததில்லயா நீங்க? காதலின் மகத்துவம் தெரியாம பேசறீங்க! காதலன் உண்மையா ஆசப்பட்டா கண்ணு வந்திராதா?
 
ஆமிர்: சரிதான்.. அப்போ ப்ளாக் மாதிரியெல்லாம் கிடையாதா?
 
குணால்: எங்க வந்து என்ன கேக்கறீங்க சார்?
 
ஆமிர்: கதை எப்படி மூவ் ஆவும்?
 
யஷ்: எங்க மூவ் ஆவும்? அதே இடத்துலே நிக்கும்! பஸ்ட் ஹாப் புல்லா கவிதை பாடியே கழுத்தறுப்போம். செகண்ட் ஹாப்லே கொஞ்ச நேரம் காஷ்மீர், பனிப்புயல்னு சுத்திட்டு, மறுபடியும் கவிதையிலே வந்து செட்டில் ஆயிடுவோம்.
 
ஆமிர்: சரி, யாரு ஹீரோயின்?
 
யஷ்: உங்க பேரச் சொன்னாலே இளவட்ட ஹீரோயினுங்க எல்லாம் பதுங்கிடறாங்க. அதனால, இன்னொரு ரிட்டய்ர்டு பார்ட்டிய பேசி முடிச்சுட்டேன். கஜோல்!
 
ஆமிர்: ஆமாம், எனக்கும் ஒரு திருஷ்டிப்பரிகாரம் தேவைதான்! ஆனா கஜோல் நல்ல நடிகையாச்சே!
 
குணால்: அதை என்கிட்டே உடுங்க! எப்படியாச்சும் கஷ்டபட்டு அவங்கள சாதாரண நடிகையாக்கிடறேன்!
 
ஆமிர்: யார் சார் படம் பாப்பாங்க?
 
யஷ்: அதுக்கு இருக்கானுங்க.. கோடிக்கணக்கில இளிச்சவாயனுங்க.. பினாத்தல் சுரேஷ் மாதிரி!
 

Jun 7, 2006

ஆத்தா நான் பாஸாயிட்டேன்!

மூன்று வருடங்கள் விட்டு விட்டுச் செய்த விடா முயற்சிக்கு இன்று பலன் கிடைத்தது!
 
எந்தப் பரீட்சையிலும் பெயிலாகாமல், கல்லூரியை விட்டுக்கூட அரியர்ஸ் இல்லாமல் வந்தவன் தான்.
 
அதற்குப்பிறகும் கூட, எழுதியபரீட்சைகளில், சென்ற நேர்முகத் தேர்வு எதிலும் தோற்றதில்லை என்ற பெருமையும் அடித்துக்கொண்டவன் தான்.
 
எல்லாப்பெருமைகளும், அமீரகத்தின் ஓட்டுநர் உரிமம் பெறும் முயற்சிகளில் காற்றோடு கரைந்தன.
 
வந்த ஆறு மாதங்களில் இருந்தே முயற்சி செய்ய ஆரம்பித்தேன். தனிப்பட்ட பயிற்சியாளர்களிடம் போய், பணத்தை அழுது, ஒவ்வொரு முறை தோற்கும்போதும் என் கார்க்கனவுகள் இன்னும் இரண்டு மாதம் தள்ளிப்போடப்பட்டு, இரண்டு மாதம் கழித்தும் தோற்று - என இரு வருடங்கள் போயின. இரண்டு மாதத்துக்கொருமுறை காரைத் தொட்டு, ஐந்தே நாட்களில் அவர்கள் எதிர்பார்த்த அசகாயசூரத்தன ஓட்டுநராக மாறமுடியவில்லை!
 
பிறகு அரசாங்க பயிற்சிப்பள்ளியில் இணைந்து, எட்டு மாதங்கள் காத்திருப்பு, பிறகு இரண்டு மாதங்கள் தொடர் பயிற்சிக்குப் பிறகு இரண்டு பரீட்சைகள் - இறுதியாக இன்று வெற்றி.
 
வெளியே சொல்லவே அவமானமாய் இருந்தது - வெறுப்பின் விளிம்பை எத்தனையோ முறை தொட்டிருப்பேன்! தோல்வி என்பதை பெருமையாக சொல்லிக்கொள்ளவா முடியும்?  இருந்தாலும் வேறு துறைகளில் - இல்லம், அலுவலகம், வலை என்று எல்லா இடங்களிலும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியைப் பெற்றிருந்தாலும், இந்தத் தோல்விகள் எந்த வெற்றியையுமே முழுமையாகக் கொண்டாட முடியாமல் செய்துவிட்டது.
 
இதை ஒரு அல்ப விஷயமாகக் கருதாதீர்கள்! ஆசீப்பின் பதிவில் நான் மட்டுமின்றி, வளைகுடா நாடுகளில் வாழும் அனைவரும் புலம்பிய புலம்பல்களையும், என்னை அவர் தேற்றியதையும் (குல்லா போட்டுகிட்டுப் போங்க!) படியுங்கள்! குல்லா எதுவும் போடாமலேயே:-) வெற்றி பெற்றுவிட்டேன்!
 

 

blogger templates | Make Money Online