Oct 8, 2005

எங்கள் வீட்டுக் கொலு

நாங்களும் இந்த முறை கொலு வைத்திருக்கிறோம். அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

கொலுவிற்கு முன்னேற்பாடாக ஊரிலிருந்து பொம்மையே கொண்டு வராத காரணத்தால், இங்கேயே கிடைத்த சைனா பொம்மைகளை வைத்து மூன்று படி ஒப்பேற்றி இருக்கிறோம்.

Image hosted by TinyPic.com

படி வாரி விவரங்கள்


முதல் படி - சாமிகளும் ஆசாமிகளும் - அம்மன் கலசம், நேயர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான வினாயகர், ஒட்டகம் மேய்த்த களைப்பாறும் பெடோ, நமது சின்னம் "வாத்து"க்கள்

Image hosted by TinyPic.com

இரண்டாம் படி - உலகம் பெரியது -கரடிகள், சைனப் பேரழகி, ஈஃபில் டவர், உலக உருண்டை

Image hosted by TinyPic.com


மூன்றாம் படி - வயிற்றுக்கும் சிறிது - பழங்களும் சில மிருகங்களும்..

Image hosted by TinyPic.com

இந்தப் படத்தில் அதிகப்படியாக உள்ள இரு பொம்மைகளின் விருப்பத்திற்காகவே கொலு!

Image hosted by TinyPic.com

பி கு சில நாட்களாகவே என் பதிவுக்கு வழக்கமான அளவிற்கு பின்னூட்டங்கள் வருவதில்லை. ப்ளாக்கர் பின்னூட்டத்தில் ஏதும் பிரச்சினை இருந்தால் உங்கள் கருத்துக்களை sudamini at gmail dot com க்கு எழுதவும்

Oct 6, 2005

ப ம க வின் போராட்ட அறிவிப்பு 06 oct 05

துபாய், 06 அக்டோபர் 2005

ப ம க

வலைப்பதிவு மக்களின் முன்னேற்றத்தைக் காரணம் காட்டி வெகு வேகமாக வளர்ந்து வரும் கட்சி பச்சோந்தி மக்கள் கட்சி. இதுவரை எந்தத் தேர்தலிலும் பங்கு பெறவில்லை என்றாலும், நூற்றுக்கணக்கான அறிக்கைகள் வெளியிட்டு, உலகளாவிய முறையில் பல தொண்டர்களையும் பெற்று வரும் கட்சி இது.


போராட்டம்

இதன் மூத்த இணை துணைப் பொதுச் செயலாளர், அஞ்சாசிங்கம், புரட்சிப்பினாத்தலார் அவர்கள் நமது பத்திரிக்கைக்கு அளித்த சிறப்புப் பேட்டி பின் வருமாறு:

கே:நீங்கள் ஏன் திடீரென போராட்டத்தில் குதிக்கிறீர்கள்?ப: ப ம க கொண்ட கொள்கைக்காக உயிர்விடக் கூடிய கோடானு கோடித் தொண்டர்கள் கொண்ட கட்சி என்றாலும், அறவழியிலேயே கட்சி நடாத்தி வந்திருக்கிறோம்.

என்றபோதிலும், நடுநிலையற்ற ஏடுகளும் தொலைக்காட்சிகளும் எங்கள் கட்சியைக் குறித்து செய்திகள் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்கின்றன.

மயிலிறகை வைத்து மார்ச் மாத சூரியனை மறைத்துவிட முடியுமா?கோழிகள் கூடி கோவிலின் புனிதத்தை குறைத்துவிட முடியுமா?

தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் காக்க எங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழக்க சித்தமாக இருக்கிறோம் என்பதை இந்த உலகிற்கு வெளிக்காட்டவே போராட்டத்தில் குதிக்கிறோம்.

போராட்டம்

கே: எதற்காக இந்தப் போராட்டம்?

ப: தமிழுணர்வு உள்ள எவனும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிடத் துணிந்திட மாட்டான். நீங்கள் ஆங்கிலப் பத்திரிக்கையிலிருந்து வருவதால் விளக்கமாகச் சொல்கிறேன்.

இற்றைத் தினம், சூரியத் தொலைக்காட்சியிலே கோலங்கள் என்ற பெயரிலே ஒரு மெகாத்தொடர் வந்து கொண்டிருக்கிறது. அதில், தீபா வெங்கட் எனும் நடிகை ஏற்கும் கதாபாத்திரம், தன் திருமணத்திற்கு முன்பாகவே சூலுற்றிருப்பதாக கதை சொல்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை நாம் கண்டோ கேட்டோ இராத அசிங்கங்கள் இத்தொடர் மூலமாக அள்ளித் தெளிக்கப்படுகின்றன என்றால் அது மிகை ஆகாது.

ஒருத்திக்கு ஒருவன் (கவனிக்கவும் - ஒருவனுக்கு ஒருத்தி அல்ல), கற்புடைப் பெண்டிரைக் கோவிலாகவே கருதி வரும் தமிழ்நாட்டில் இப்படிப் பட்ட அவலங்கள் இனியும் தொடரத்தான் வேண்டுமா?

கோரிக்கைகள்

கே: போராட்டத்தின் கோரிக்கைகள் யாது?

ப: 1. கோலங்கள் தொடரின் பெயரை அலங்கோலங்கள் என மாற்றிவைக்க வேண்டும்.
2. அந்தக் கதாபாத்திரம் இந்தி பேசுவதாக மாற்றவேண்டும்.
3. இன்னும் சில பாகங்களுக்குப் பிறகு அந்தக் கதாபாத்திரத்தை உத்தரப் பிரதேசத்துக்கு அனுப்பி அந்தப் பகுதியை முடித்து வைக்க வேண்டும்.

கொடும்பாவி

கே: இந்தப் போராட்டத்தை எவ்வாறு நடத்தப் போகிறீர்கள்?

ப: முதலில் கொடும்பாவி எரித்தல், இந்தியாவின் எல்லா மூலைகளிலும் உள்ள 275 நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்தல் என அறவழியில் நடத்தவே முயற்சிப்போம்.

அவ்வாறு முடியாத நிலையில், ஸ்பானர்கள், சுத்தி, ஸ்க்ரூ ட்ரைவர்கள் ஆகியவற்றை விகடன் தொலைக் காட்சி நிறுவனத்தின் முன் காட்டி பணியவைப்போம்.

உதிர்வது நாமாக இருப்பினும் வளர்வது தமிழ்ப் பண்பாடாக இருக்கட்டும்.

தலைவர்

கே: போராட்டத்திற்கு தலைவரின் ஒப்புதல் இருக்கிறதா?ப: தலைவருக்கு இப்போராட்டத்தைப் பற்றி இன்னும் தெரியாத நிலையிலும், இதற்கு எதிராகக் கருத்து கூறும் அளவிற்கு தமிழ் உணர்வு இல்லாதவர் அல்ல எங்கள் தலைவர்.

இவ்வாறு புரட்சிப் பினாத்தலார் அறிவித்தார்.

Oct 4, 2005

First.. கண்ணா.. First - republished

அம்ருதாஞ்சன், டார்டாய்ஸ் போன்ற பொருள்களின் பெட்டிக்குள்ளே 22 மொழிகளில் ஒரு செயல் விளக்கம் இருக்கும்.. தீவிர புத்தக நேசர்களே தவிர்க்கும் அந்த அச்சடித்த காகிதத்தின் சர்குலேஷன் அம்ருதாஞ்சன் விற்பனைக்கு சமம்!

Fair & Lovely, sachet shampoo போன்ற உள்ளிட்ட பல பொருள்களின் உதவியோடும் சன் TVயின் இடையறாத விளம்பரங்கள் -- சாதித்துவிட்டது - ஒரு மில்லியன் சர்குலேஷன்..

நான் குங்குமம் வாங்கி படித்த யாரையும் நேரில் பார்த்ததில்லை.. நீங்கள் பார்த்ததுண்டா?

தொடரட்டும்-- இவர்களின் இலக்கிய (?!) சேவை!

அடுத்த வாரம் குங்குமம் - Preview:

டாப் டென் ட்ராலி பாய்ஸ் - அவர்கள் வாங்கும் சம்பள விவரம்.
ரஜினி மகளுக்கும் ஜெயம் ரவிக்கும் தொடர்பா?
கலைஞர் எழுதும் "மஞ்சள் துண்டு" காவியம்.
குங்குமம் - போயிங் இணைந்து வழங்கும் வாரம் ஒரு எலிகாப்டர்.
இது மட்டுமல்ல-- அரை கிலோ சர்ஃப், சக்தி மசாலா வழங்கும் கங்காரு கறி மசாலா, மற்றும் விண்டோஸ் 3.1 Installation Diskette.

தாங்க முடியலடா சாமி!

*******************************************************************
இந்தப் பதிவு, நான் வலை உலகிற்கு வந்த புதிதில் (20 Oct 2004) பதிந்தது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் - ரஜினி மகளுக்கும் ஜெயம் ரவிக்கும் தொடர்பா?

யாருக்கும் தோன்றும் முன்னரே, தெரியும் முன்னரே தன் ஞானக்கண்ணால் கிசுகிசுக்களை அறியும் திறன் படைத்த பி. சுரேஷ் பற்றி தங்கள் கருத்து யாது?

Oct 2, 2005

சத்திய சோதனை 02 Oct 05

சுதந்திரம் என்பதற்கான அர்த்தம் மறுக்கப்படும்போதுதான் தெரியவரும் என்கிறது தமிழ் வட்டத்தின் இந்தப் பதிவு.

சில நாடுகளில் இன்னும் இரண்டாம் நிலைக் குடிமகன்களாகவே மதிக்கப் படுகிறோம் என்ற எண்ணம் நம்மில் பலருக்குண்டு. குறிப்பாக வளைகுடா நாடுகளிலும், சிங்கப்பூரிலும் குடியுரிமை பெற்றோருக்கும், முதல் தலைமுறை புலம் பெயர்ந்தோருக்கும் உள்ள சட்ட ரீதியிலான இடைவெளியை சந்திக்க நேரும்போதெல்லாம் கேட்க நேரும் வார்த்தைகள் இவை,

இருப்பினும், 1895 - 1900 காலகட்டத்து இங்கிலாந்து ஆளுகைக்குட்பட்ட இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றின் நிலைமையை சத்திய சோதனை மூலமாக அறிந்துகொள்ளும் போதுதான் இன்றைய நிலைமையின், சுதந்திரத்தின் உண்மையான அர்த்தம் புரிகிறது. தலைப்பாகை கட்டுவதிலிருந்து, தெருவில் நடப்பது, முதலாம் வகுப்பில் பயணம் செய்வது, வேலைக்கு தலைவரி கட்டவேண்டியது என எல்லா நிலைகளிலும் காட்டப்பட்ட ஆளுமை வெறி, நிற வெறி ஆகியவற்றைப் படிக்கும்போதே கடந்த ஒரு நூற்றாண்டில் மனிதகுலம் எவ்வளவோ சாதித்திருக்கிறது என்பது தெரிகிறது.

இன்னும் கடக்க வேண்டிய தூரம் இருக்கலாம் - ஆனால் அதையும் கடந்து விடுவோம் என்ற நம்பிக்கையும் மனதுள் துளிர்க்கிறது.

என் மனதில் பட்டதை எந்தத் தயக்கமும் இல்லாமல் கூற வாய்ப்பளித்தோரில் முக்கியரான மஹாத்மா காந்திக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!

Sep 29, 2005

மலாகா சுற்றுப்பயணம், பண்பாடு இன்ன பிற! 28 Sep 05

சுற்றுப்பயணத்தை முடித்து வீடு திரும்பிவிட்டேன்.

ஆப்பிரிக்கக் கண்டமும் ஐரோப்பியக்கண்டமும் ஒட்டிக்கொள்ளும் ஜிப்ரால்டருக்கு அருகில், மத்தியத் தரைக்கடலோரம் கடற்கரையாலும், வெயில் காயும் "சன் பாத்" பகுதி என்பதாலும் சுற்றுலாத்தலமான மலாகாவில் ஆறு நாட்கள்..

உடலை மறைக்க உடை என்ற ஸ்பானிய பண்பாட்டை மறந்து, குடும்பத்தோடும், காதலனோடும் தனியாகவும் வெயில் காயும் வனிதையருக்கு மத்தியில் புதுமைப்பித்தன் சிறுகதைகளை மொத்தமாகப் படித்தேன்.

சில பார்வைகள்:

1. உடையே அணியாதவர்களைக் கூட வெறித்துப் பார்க்க ஏன் கூட்டம் கூடுவதில்லை? கோவாவில் வெயில் காய்பவர் 10 சதவீதம் என்றால், வேடிக்கை பார்ப்பவர் 90 சதவீதமாக இருப்பதை அந்த 90ல் இருந்து பார்த்திருக்கிறேன். இங்கே வேடிக்கை பார்ப்பவர் என்பது இல்லவே இல்லை என்றே கூறிவிடலாம். மேலும், 5 நிமிடத்துக்க் மேல் வேடிக்கையும் அலுத்து விடுகிறது:-)

2. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு(?) இல்லைதான் என்றாலும் யாரும் யாருடனும் என்ற வெட்கக்கேடும் இல்லை! கூட்டம் கூடிய இடங்களிலும் இடிமன்னர்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

3. காபரே என்பது சென்னை மற்றும் பான்டிச்சேரியின் சில நிழலான இடங்களில் நடைபெறும் ஆடை அவிழ்ப்பு நடனம் என்றே கருதியிருந்தேன். சுத்தமான மேலை சாஸ்திரீய நடன வகையை எப்படி கொச்சைப்படுத்தி இருக்கிறோம் நாம்.. மூன்று ஷோக்கள் பார்த்தேன் - நடனமும், வழங்கிய விதமும் - அருமை!

4. டிவி விளம்பரங்களை ஒரு அளவுகோலாக வைத்துப் பார்த்தால், நம் மக்கள் அறிவாளிகள்தான். பெரும்பாலான ஐரோப்பிய விளம்பரங்கள் நேரிடையானவை, நகைச்சுவை அற்றவை.

5. புதுமைப்பித்தன் ஏன் மரணத்தைப் பற்றி அதிகக் கதைகள் எழுதி இருக்கிறார்? யாராவது ஆராய்ந்திருக்கிறார்களா?

பாரிஸ் பற்றி பிறகு எழுதுகிறேன்.

குஷ்பூ தங்கர் தமிழ் பண்பாடு பற்றி பதிவு போடுவதாக இல்லை. பின்னூட்டம் மட்டும்தான் (யார் கேட்டார்கள் என்கிறீர்களா?)

 

blogger templates | Make Money Online