Nov 5, 2007

பாடம் 2 - தயார் ஆகுங்க மக்களே - wifeology

கல்யாணம் பண்ணி வாழப்ப்போற பையா, பாவப்பட்ட பையா.. சில புத்திமதிகளைச் சொல்லப்போறார் ஐயா.. கேட்டுக்கோ மெய்யா..

எல்லாத்தையும் பாட்டாவே பாட முடியாதுங்கறதால, மேட்டருக்கு வரேன்.

இன்னிக்கு நம்ம பாடத்துல நாம பாக்கப்போற விஷயம் - கல்யாண்த்துக்கான முன்னேற்பாடுகள்.

ஒரு ஜோக் சொல்வாங்க, கல்யாணத்துக்கு முன்னால அவன் பேசினான், அவள் கேட்டாள், கல்யாணத்துக்கு அப்புறம் அவள் பேசினாள், அவன் கேட்டான், 10 வருஷம் கழிச்சு ரெண்டு பேருமே பேசினாங்க - ஊரே கேட்டுதுன்னு.. (நம்ம நிலைமையெல்லாம் எப்படி சிரிப்பா சிரிக்குது பாத்தீங்களா?)

அவன் பேசினதுக்கும் அவள் பேசினதுக்கும் இடையே ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி என்ன? ஏன் அப்படி ஆனது?

பெண் என்னும் ஜீவராசிகளுக்கென்றே சில அடிப்படை குணாதிசயங்கள் உண்டு. அவற்றைப் புரிந்து கொள்ளாததாலும், புரிந்துகொள்ள முயற்சி செய்யாததாலும்தான் இது நடக்கிறது.

சில அடிப்படைப்பாடங்களை கவனிக்கலாம்.

1. லாஜிக் தவிர். பெண்மை தவறேல்!

பெண்களுக்கு லாஜிக்கே இல்லைன்னு நான் சொல்லவரலை. இருக்கு. ஆனா, நமக்குப் புரியாம எங்கேயோ மூலையில மறைஞ்சுகிட்டு இருக்கு. இந்தப்பாடத்தை ஒரு உதாரணம் மூலமா விளக்கறேன்,

நம்ம பிரண்டு அப்பாவி கோயிந்து, மனைவியோட ஷாப்பிங் மால் போனார். 3 மணிநேரம் சுத்தினாங்க அம்மணி, ஒண்ணும் பெரிசா வாங்கலை. (சிறிசா வாங்கனதுலேயே பர்ஸ் பழுத்துடுச்சுன்னு வைங்க - அது கணக்குல வராது). ஒரு கடையில அரை மணிநேரம் செலவு பண்ணிட்டு வெளிய வராங்க, அப்ப தலைவர்
கேக்கறாரு:

"கடையிலெ எதாச்சும் வாங்கினயா? ஏன் இவ்வ்ளோ நேரம்?"

"ஒண்ணும் வாங்கலை! வாங்கினாத்தான தப்பு? வெறுமனே பாத்தா என்ன தப்பு?"

"இதுக்கா அரை மணி நேரம்"னு கேள்விய மனசுக்குள்ளே அடக்கிட்டு, அடுத்த கடைக்கு உள்ளே போகாம, வெளிப்பக்கமா ஒரு பென்சுல உக்கார்ந்துகிட்டு, கண்களுக்கு குளிர்ச்சி கொடுத்துகிட்டு இருக்கார். அம்மணி வராங்க, இவர் விடற லுக்கை லுக்கு விட்டுடறாங்க.

"என்ன கண்ணு அலைபாயுது?"

நம்ம கோயிந்து லாஜிக்லே புலியாச்சே.. புத்திசாலித்தனமா கேக்கறாராம்..

"தப்பா எதாச்சும பண்ணேன்? வெறுமனே பாத்தா தப்பில்லைன்னு நீதானே சொன்னே?"

என்னா ஆயிருக்கும் அவர் கதின்றத வாசகர்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

(இந்த மாதிரிக் கேள்விக்கு எப்படி பதில் சொல்றதுன்றதை பின்னால வர பாகங்கள்லே சொல்றேன்)

2. அர்த்தத்துக்கு அர்த்தம்

நவீன கவிதைகள் எல்லாம் வரதுக்கு ரொம்ப நாள் முன்னாலேயே அர்த்ததுகுள்ளே அர்த்தம் வச்சு பேசத் தெரிஞ்சவங்க நம்ம பெண்கள். தமிழ்ப்பதிவுகள் ஆரம்பிக்கறதுக்கு பலகோடி வருஷத்துக்கும் முன்னாலேயே வரிக்கு வரி உள்குத்து வச்சுப் பேசத் தெரிஞ்சவங்க!

அவங்க எதாச்சும் பேசினாங்கன்னா நேரடியான அர்த்தம் மட்டும் எடுத்துக்காதீங்க!

உதாரணமா, "இன்னிக்கு என்ன தேதி"ன்னு கேட்டா அதுக்குள்ளே, "அடுத்த வாரம் என் பிறந்த நாள் வருது, கிப்ட் ரெடியா" என்ற கேள்வியோ, "சம்பளம்தான் வந்தாச்சு இல்ல, எங்கயாவது போயி அதை ஊதிவிட்டுட்டு வரலாமா?" என்ற கேள்வியோ உள்ளே பதுங்கி இருக்கும்!

சாப்பாடு விஷயத்துல கூட, "இன்னிக்கு டின்னர் என்ன பண்ணலாம், தோசையா, உப்புமாவா?" அப்படின்னு ஒரு கேள்வி வந்தா உடனடியா பதில் சொல்லிடக்கூடாது. எது பண்ரதால அவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையோ அதைச் சொல்லித் தப்பிச்சுடறதுதான் புத்திசாலித்தனம். அட்வான்ஸ்டு கணவர்கள், நேரடியா அவங்க ஆப்ஷன்ஸில முதல்ல என்ன சொல்றாங்களோ அதையே சொல்லிடுவாங்க. இல்லாட்டி, காலப்போக்குல, "இன்னிக்கு டின்னர் என்ன? தோசையா, வேறே எதாச்சுமா?" என்று அறிவுறுத்தப்படுவார்கள். இதுக்கும் திருந்தாதவர் ஒருத்தர் வீட்டுல நடந்த சம்பவம்:

"இன்னிக்கு டின்னர் வேணுமா?

"ஆப்ஷன்ஸ் என்ன?"

"யெஸ் ஆர் நோ"!

3. Omit your commitments

வரலாற்று ஆசிரியர்கள், ஞாபகசக்தி க்ராண்ட் மாஸ்டர்கள் என இருக்கும் எல்லாரின் ஞாபகசக்தியையும் சுலபமாக மிஞ்சும் ஒரு பெண்ணின் ஞாபகசக்தி. "நம்ம கல்யாணம் முடிஞ்ச நாலாவது நாள், அன்னிக்குக்கூட நான் அந்த ஊதாக்கலர் சல்வார் போட்டிருந்தேன், நீங்க சிவப்புல வெள்ளை ஸ்ட்ரைப்ஸ் டி ஷர்ட் போட்டிருந்தீங்க, நீங்க ஆபீஸ்லே இருந்து அரவிந் போனை அட்டெண்ட் பண்ணிட்டு வந்தப்போ நான் கேட்டேனே, அந்த GUCCI ஹேண்ட்பேக், அப்ப ஒத்துக்கிட்டீங்களே, மறந்துபோச்சா?" என்பது பொன்ற கேள்விகளைத் தவிர்க்க ஒரே வழி எதிலும் கமிட் ஆகாமல் இருப்பதுதான்.

எனவே, எண்ணிச் செய்க கமிட்மெண்ட், எண்ணாதார் உண்ணும் உணவும் பனிஷ்மெண்ட்!

இந்த ஞாபகசக்தி இருந்தாலுமே, நமக்கு அவங்க செய்த கமிட்மெண்ட்கள் செலக்டிவ் அம்னீஷியாவில் காணாமல் போவதும் லாஜிக்கை மீறிய விஷயம்தான். (அதாவது நம்ம லாஜிக்கை)

இதுவே ரொம்ப நீளமா போயிட்டதால, அடுத்த வாரமும் இதே சப்ஜெக்ட் தொடரும்.

வீட்டுப்பாடம்:

1. http://www.yoest.org/archives/shopping_male_female_gap_tom_peters.jpg

Nov 2, 2007

சாப்ட்வேர்காரர்கள் கிளப்பும் கலவரம்?

முதலில் டிஸ்கி: நான் ஒரு சாப்ட்வேர் ஆள் கிடையாது, வேலைக்குத் தேவையான தகவல்களைப் பெற மட்டுமே கணினியைத் தொடுபவன், மற்ற நேரங்களில் ஸ்பானரும் ஆயில் கிரீஸும்தான்!

சாப்ட்வேர்காரர்களின் அதிக சம்பளத்தால் சமூகத்தில் பாதிப்பேற்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு நேரடியான விடை - ஆம் ஆகத்தான் இருக்கும்.

சென்னையில் 80களிலும் கூட தி நகர், மாம்பலம் போன்ற பகுதிகளில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு  நடுத்தர வர்க்கத்தினர் வாங்கக்கூடிய விலைக்குள் இருந்தது,  90களில் ஆதம்பாக்கம், வில்லிவாக்கம் போன்ற பகுதிகள் நடுத்தர வர்க்கத்தினரின் சரணாலயமாக இருந்தது.ஆனால், 2000 - 2007ல், இது வேகமாக ஓடி, இப்போது சிங்கப்பெருமாள் கோயில் மதுராந்தகம் போன்ற இடங்கள் கூட மத்யமரின் வாங்கும் சக்திக்குள் இல்லை. இந்த மாற்றம் அதிவேகமாக நடந்ததனால், முன்னாளில் கௌரவம் எனக் கருதப்பட்ட சர்க்கார் உத்தியோகஸ்தன் கூட, ஒரு அடுக்குமமடியின் பொந்து கூட வாங்க முடியாமல் தவிக்கிறான்.

இதற்குக் காரணம், சந்தேகமே இல்லாமல் சாப்ட்வேரில் புழங்கும் அதிகப் பணம்தான். ட்ரீட் கொடுத்து, 500 ரூபாய் ஆம்னிபஸ்ஸில் பயணம் செய்தபின்னும் மிஞ்சுவது, மேற்படி சர்க்கார் உத்யோகஸ்தனின் முழுச்சம்பளத்தைவிட சில மடங்குகள் அதிகமாக இருப்பதே.

அப்பாவை விட அதிகச் சம்பளம் என்பது பையனுக்குப் பெருமையாகவும், கர்வமாகவும் இருக்கலாம். ஆனால் அப்பாவுக்கு? அப்படிப்பட்ட பையன்கள் இல்லாத ஆயிரக்கணக்கான அப்பாக்களுக்கு?

அதிகப்பணம் எங்களுக்கு மட்டும்தானா? அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கவில்லையா? சினிமாக்காரர்கள் கோடிக்கணக்கில் வாங்கவில்லையா என்ற கேள்விகளும் அர்த்தம் அற்றவையே! அரசியல்வாதிகளும், சினிமாக்காரர்களும் நடுத்தர வர்க்கத்தினரின் தினப்படி செயல்பாடுகளில் போட்டிக்கு வந்ததில்லை, அவர்களின் ஜனத்தொகையும் பொதுமக்களின் ஜனத்தொகையில் 1 சதவீதத்தைத் தாண்டியதில்லை.

விலையேற்றம் என்பது சகஜம்தான். அந்த காலத்துல 5 பைசாவுக்கு கைநிறைய பொரிகடலை கிடைச்சுது என்று சொல்வது அபத்தம். ஆனால், Burning platform என்பது இப்படிப்பட்ட திடீர் நிகழ்வுகளால் வேகமாவது, அந்த வேகத்தில் கூடச்சேராத மக்களைப் பாதிக்கத்தான் செய்யும். இங்கே பிரச்சினை விலையேற்றம் அல்ல - அதன் வேகம்!

பிரச்சினை பணம் சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல. வாழ்க்கைத்தரம் பற்றிய அளவுகோல்கள் வேகமாகத் திருத்தப்படுவது! இது அங்கே ஒரு அரசியல்வாதி, இங்கே ஒரு வியாபாரி என்றில்லாமல், பொது ஜனத்தொகையில் 15-20 சதமாக இருப்பதால் மிச்சமுள்ள, பேண்ட் வேகனில் ஏறமுடியாதவர்கள் 80% ஆக இருப்பதும், அவர்களின் அந்தஸ்து சடாலெனக் குறைவதும், நேற்றுவரை அவர்கள் கைக்குள் இருந்த வசதிகள் இப்போது பகட்டாகவும் ஆடம்பரமாகவும் மாறிவிட்டதுதான்.

அன்றைய தேதிக்கு விலைபோகும் படிப்பைப் படித்து, அன்றைய தேதியின் நல்ல வேலையில் சேர்ந்து, சரியான பணி உயர்வுகளும் சம்பள உயர்வுகளும் பெற்றுவரும் ஒரு ஆள், கோட்டின் மற்ற பகுதி திருத்தப்படுவதால் வாழ்க்கைத்தரம் குறைவதின் வலி, அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

சம்பள ஏற்றத்தாழ்வு என்பது இன்று நேற்று வந்த பிரச்சினையில்லை. ஆனால் இன்று அது உச்சத்தில் இருப்பதற்கும், பேசுபொருளாக ஆகியிருப்பதற்கும் காரணம் திடுதிப்பென மாறும் சமூக அளவுகோல்கள்.  10000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு, நகர மத்தியில் 2000 ரூபாய் வாடகை வீட்டில் இருந்துகொண்டு, கைனடிக் ஹோண்டா வைத்துக்கொண்டு பந்தாவாக வலம் வந்தவன், அந்த 2000 ரூபாய் வாடகைக்கு நகரத்திலிருந்து 30 கிமீ தூரம் அனுப்பப்படுகிறான், கைனடிக் ஹோண்டாவா? ஹோண்டா சிவிக்டா என்கிட்ட என்று வார்த்தைகள் இல்லாமல் நக்கல் அடிக்கப்படுவதாக உணர்கிறான். சமூகத்தின் ஆரம்பப்படிகளில் இருந்தவன், இப்போதுக்கு கீழிருந்து சில படிகள் மட்டுமே மேல் இருக்கிறான். 

மூன்றாம் வகுப்பு மாணவர்களை ஒரு கட்டுரை எழுதச்சொன்னாராம் ஒரு பள்ளி ஆசிரியர். ஒரு பணக்காரக் குழந்தை எழுதினாளாம்: Once upon a time, there was a very poor family, everybody in the house were poor, the parents were poor, the housemaid was poor, the gardener was poor, the car driver was poor, everybody was poor":  என்று! சாப்ட்வேர்காரர்கள் எழுதும் கட்டுரைகளுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தென்படவில்லை. வாங்கற சம்பளம் ட்ரீட் கொடுத்து, ஐ மாக்ஸில படம் பாத்து, 500 ரூபா ஆம்னிபஸ்ஸில போயி, மிஞ்சவே மாட்டேங்குது என்பது போன்ற தன்னிலை விளக்கங்கள் முன் பத்தியில் சொல்லப்பட்ட ஆளுக்கு எப்படிப்பட்ட எரிச்சலைத் தரும்?

ஆனால்!

இந்தப்பிரச்சினைக்கு சம்பளம் வாங்குபவர்களைக் காரணமாகச்சொல்வது எந்த விதத்தில் சரியாகும்?

ரஜினியை வைத்து 50 கோடிக்கு படமும் 10 கோடி சம்பளமும் கொடுக்கிறார்கள் என்றால் அந்தப்பணத்தை வசூலித்துவிடமுடியும் என்ற நம்பிக்கைதானே காரணம்?

சாப்ட்வேரை விற்றால் பணம் வராது என்ற நிலையில் 2000த்தின் ஆரம்பங்களின் டாட்காம் வீழ்ச்சியிலும் பின்னர் 2002லும் கூட எத்தனை சாப்ட்வேர் மக்கள் வேலை இழந்தார்கள்? அப்போது, மற்றவர்கள் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை சாப்ட்வேர்காரர்களுக்குத் தந்தார்களா? சாப்ட்வேர் படித்தவர்கள் அத்தனை பேருமா கோடியில் கொழிக்கிறார்கள்? (சிவாஜி பவுண்டேஷன் ஆரம்பிக்கிறார்கள்:-)) அனுமதிக்கப்பட்ட விலக்குகள் (வீட்டுக்கடன், சேவைகளுக்குத் தரும் நன்கொடை) நீங்கலாக அவர்கள் கடமையான வருமான வரியிலிருந்து தப்பிக்கவோ ஏய்க்கவோ முடியாமல் சோர்சிலேயே கழிக்கப்படுகிறது. மிச்சப்பணத்தை எப்படிச் செலவழிப்பது என்பது அவரவர் சௌகரியம் - அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது.

அவர்கள் பொறுப்பில்லாமல் செலவழிப்பது மட்டுமே விலையேற்றங்களுக்குக் காரணம் என்பதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. வியாபாரிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பதுதான் முக்கியமே ஒழிய, எப்படிப்பட்ட சம்பாத்தியம் என்பதெல்லாம் முக்கியம் கிடையாது. சென்னையில் பிரம்மச்சாரிகளுக்கு வீடுகிடைக்காத நிலை மாறி, பிரம்மச்சார்களுக்கு மட்டுமே வீடு கிடைக்கும் நிலை வந்திருக்கிறது என்றால், இரு பக்கமுமே குற்றமில்லை - காலம் செய்த குற்றம்தான்.

இந்த நிலையைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குத் தான் இருக்கிறது. சாப்ட்வேர் வேலைகளைப் பரவலாக்குதல், சேலம், சத்தி போன்ற நடுததர ஊர்களிலும் மென்பொருள் பூங்காக்களை அமைத்தால், சென்னையில் 100 பேர் என்பது சென்னையில் 50 மற்ற ஊர்களில் 10 - 10 என்று பிரியும், சுபிட்சம் பரவலாகாவிட்டாலும், ஓரிடத்தில் குவிக்கப்பட்டதாக இருக்காது. அதிக வரிவிதிப்பு போன்ற முறைகள் எல்லாம் அநியாயம்தான்.

சாப்ட்வேர் இளைஞர்கள் ஒரு விஷயத்தை உணரவேண்டும். தங்கள் உரிமைகள், சமூக அந்தஸ்து பறிக்கப்பட்டதாக உணரும் மக்கள்தான் பெரும்பான்மை. அதிலும், உணர்ச்சிகளுக்கு வடிகால்கள் இல்லாத, வன்முறைக்கு ஏங்கும் ஒரு இளைய தலைமுறையும் அதில் அடக்கம். அவர்கள், தங்கள் வலிக்குக் காரணமாக உங்களை நினைக்கிறார்கள் - சரியா தப்பா என்று என்னைக் கேட்காதீர்கள் - நான் தப்பு என்றுதான் சொல்வேன். இவர்கள் ஒரு ஊதுபொறிக்காகக் காத்திருக்கின்றனர். பெங்களூருவில் எதுடா சாக்கு என்று கலவரம் கிளம்புவதைக் கவனித்திருக்கலாம். உங்கள் பகட்டு இதற்குக் காரணமாகிவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

"கற்றது தமிழ்" போன்ற படங்கள் (படம் பார்க்கவில்லை), பலர் மனதுக்குள் எரிந்துகொண்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்கு தூபம் போட்டு பணம் பார்க்கும் முயற்சியாகவே கருதுகிறேன். அரைகுறை சைக்கோவாக இருப்பவர்களில் ஒருவர் இது போன்ற படங்களால் தூண்டப்பட்டாலும் அந்த இயக்குநர் பொறுப்பேற்கவேண்டும் என்றும் கருதுகிறேன்.

Oct 29, 2007

பாடம் ஒன்று: ஏன் திருமணம்? (M Sc Wifeology - 1)

இந்தக்கேள்விக்கு நேரடியான விடையே கிடையாது. கண்ணதாசன் சொன்ன மாதிரி, நான் மாட்டின காரணத்தை நானே அறியும் முன்னே நீயும் வந்து ஏன் கேட்கிறாய்னுதான் கேட்கணும்.
 
"everybody should be married.. in fact, happiness is not everything" னு சொன்ன அறிஞரோட விடைதான் கொஞ்சம் கிட்டக்கிட்ட வருது.
 
ரொம்ப யோசிச்சா, இந்த மாதிரி சில காரணங்களைத் தேடிப் பிடிக்கலாம்.
 
1. நாளைக்கு வயசாயி உடம்பு சரியில்லாம போனா பாத்துக்க ஒரு ஆளு வேணாம்? (மனைவி வேணுமா நர்ஸ் வேணுமான்னு தெரியாத ஆளுங்க! - நாளைக்கு உனக்கு வயசாகும்போது அவங்களுக்கும் வயசாகாதா? வெளிய சொல்லிக்கறத நாம நம்பவா முடியும்??)
 
2. வம்சம் விளங்க வேணாமா? (பெரிய ராஜ ராஜ சோழன் வம்சம்!)
 
3. எத்தனை நாள்தான் இப்படி வாழ்க்கையில பிடிப்பே இல்லாம ஓட்ட முடியும்? (மவனே இருக்குடீ உனக்கு! வாயுப்பிடிப்பு., சதைப்பிடிப்பு, சம்பளப்பிடிப்பு எல்லாம் கிடைக்கும் கவலையே படாதே!)
 
4. வீட்டுக்கு விளக்கேத்த ஒரு பொண்ணு வேணுமே! (ஸ்விட்சுன்னு ஒண்ணு எதுக்கு கண்டுபிடிச்சிருக்காங்களாம்?)
 
5.சாப்பாட்டுக்கு கஷ்டப்பட வேணாம் இல்லையா? (இது கரெக்டு.. எப்படியும் சமைக்கக் கத்துக்கத்தான் போறே!)
 
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன அப்ப்டின்னு சொல்லும்போதே தெரிய வாணாம்? மவனே உனக்கு சாவுமணிதாண்டான்னு!
 
கல்யாணம் ஆனவங்களோட பொறாமை மற்றவர்களோட திருமணத்துக்குக் காரணமாகி விடுவது உளவியல் அறிஞர்கள் ஆராய வேண்டிய விஷயம்.  "என்னங்க, நம்ம சித்தப்பா பொண்ணுக்கு உங்க பிரண்டு சரவணனைக் கேக்கலாமா" என்ற கேள்விக்கு, சரி என்று சொல்லும் முன், "நான் மட்டும் என்ன முட்டாளா?" என்ற எண்ணமும் "எஞ்சாய் பண்றாண்டா" என்ற பொறாமையும் இருப்பது திண்ணம்.
 
பெரியோர் நிச்சயித்த கல்யாணத்துக்கும், காதல் திருமணத்துக்கும் கொலைக்கும் தற்கொலைக்கும் ஆன வித்தியாசம்தான் என்று சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.
 
ஆனால், மத்தவங்க என்ன சொன்னாலும், வேறு சில சிற்றின்பக் காரணங்களுக்காக, "கல்யாணத்துக்கு என்ன அவசரம்? நாலஞ்சு நாள் போகட்டும்" என்று சொல்லும் மாப்பிள்ளைதானே முதல் குற்றவாளி?
 
சிற்றின்பம்னு சொன்னதும் இந்தப்பதிவுக்கு ஏ சர்டிபிகேட் கொடுத்துடாதீங்க! நான் சொல்ல வர சிற்றின்பம், பெரியோர் ஆசீர்வாதத்துடன் சைட்டடிப்பது, நாம என்னவோ ஆணழகன் மாதிரி எந்த போட்டோ வந்தாலும் "Forehead ஆ இது? Four Head மாதிரி இருக்கே!" "பொண்ணு கிளி மாதிரின்னு சொன்னாங்களே? மூக்கை மட்டும்தான் சொன்னாங்களா?" என்று வர்ஜ்யா வர்ஜ்யம் இல்லாமல் கமெண்ட் அடிப்பது, திடுதிப்பென்று கிடைக ்கும் எலுமிச்சை வெளிச்சம் போன்ற சிற்றின்பங்களைச் சொல்றேன்.
 
ஆனா ஒண்ணு.. கல்யாணம் பண்ணாம நிம்மதியா இருக்கறது 1 - 2% ஆளுங்கதான். ஆடை இல்லாத ஊரிலே கோவணம் கட்ட முடியாதவங்க எப்ப்டி கல்யாணத்துக்கு தயார் ஆவது எப்படின்னு அடுத்த திங்கள் சொல்றேன்.
 
வீட்டுப்பாடம்: இந்த யூ ட்யூப் வீடியோவைப் பார்க்கவும்: http://www.youtube.com/watch?v=pSWTVXh_Yns
 
ஒரு டிஸ்கிளெய்மர்:
 
பிரச்சினையில்லாத திருமண வாழ்வை இந்த வகுப்புகள் வழங்கும் என்ற உடோபியக்கனவுகளை நம்பவேண்டாம். அது ஒரு மாயை.  இதன் ஆசிரியர்களின் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களின் மீள்பார்வையில் Retrospective  சிந்தனைகளின் விளைவே இந்த வகுப்புகள். இது ஒரு Exact Science உம் கிடையாது. மனைவிகள் என்னும் பிரகிருதிகளுடான உளவியலில் Scienceக்கும் எந்த இடமும் கிடையாது, Exact கும் எந்த இடமும் கிடையாது. இந்த வழிமுறைகளை முயற்சிப்பவர்கள் தத்தம் சொந்தப் பொறுப்பின் பெயரிலேயெ செயல் படுபவர்கள் ஆவார்கள். மீறி ஏற்படும் வீக்கங்களுக்கும் ரத்தகாயங்களுக்கும் கல்லூரி பொறுப்பேற்காது.

Oct 25, 2007

முதுகலை இல்லறத்தியல் - வகுப்புகள் ஆரம்பம் (1)

M.Sc Wifeology (முதுகலை இல்லறத்தியல்) படித்த படிக்காத அன்பர்களே!
 
கல்யாணம் கட்டிக்கிட்டு கஷ்டப்படும் கட்டிளங்காளைகளே!
 
இன்னும் திருமணம் நடக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் மிதப்பாகத் திரியும் இளைஞர்களே! (இன்னிக்கு நான், நாளைக்கு நீ என்ற எளிய சூத்திரம் புரியாதவர்களே)!
 
கணவனை அன்பாக நடத்தும் 0.0000000000000001% மனைவிகளே!
 
மிச்சம் உள்ள சாதாரண ரக மனைவிகளே!
 
இது உங்களுக்காகவே ஆரம்பிக்கப்படும் புத்தம் புதிய வகுப்பு.
 
இந்த வகுப்புகளைப் பற்றி சில அ கே கே (FAQ)
 
என்ன சொல்லித் தரப்போகிறேன்?
 
  • திருமண வாழ்வில் பிரச்சினை கிளப்பக்கூடிய நிகழ்வுகள் யாவை, அவற்றைச் சமாளிப்பது எங்ஙனம்?
  • மனைவிகளைக் கண்டு பயப்படாமல் வாழ்வது எப்படி?
  • உங்கள் சுதந்திரத்தைப் பறிகொடுக்காமல் இல்வாழ்வை நல்வாழ்வாக மாற்றுவது எப்படி?
  • வீட்டு வேலைகளிலிருந்து தப்பிப்பது எப்படி?
  • மனைவி கேட்பதை வாங்கித்தராமலே அடிவாங்கா வாழ்க்கை வாழ்வது எப்படி? 
 
இப்படிப்பட்ட
 
  • How to survive Matrimony  என்பதைப் பற்றிய எளிய பாடங்கள் 
  • வாழ்க்கைத் தேர்வில் எளிதாய் வென்றிட ஏற்றமிகு கருத்துகள்
 நான் யார்? எனக்கு என்ன தகுதி இருக்கிறது?
 
M.Sc Wifeology யில் பட்டம் பெற்ற மாணவன், பின்னூட்டங்களில் முனைவர் பட்டத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டவன். கடுமையான சூழலுக்கு நடுவே ஏறத்தாழ பத்து ஆண்டுகள் களப்பணி செய்து வருபவன்.
 பாடத்தில் சொல்லப்போவதையெல்லாம் நான் கடைப்பிடிக்கிறேனா?
 
கிரிக்கெட்டில் பேட்டிங் சொல்லிக்கொடுக்கும் கோச் அவர் பேட் செய்கையில் அவுட்டே ஆகாதவரா? ஆனால் தன் / பிறரின் தவறுகளில் இருந்து பாடம் கற்பவர். அப்படித்தான் நானும். எனக்கும் வீங்கிய கன்னங்கள், சிராய்ப்புகள், விழுப்புண்கள் இருந்திருக்கின்றன. (இதைச் சொல்ல என்ன வெட்கம் - அதுவும் நமக்குள்ளே)
 யார் யார் பாடம் எடுக்கப்போகிறார்கள்?
 
நீங்களும் நானும்தான். உங்கள் பங்களிப்பும் மிக அவசியம். நிகழ்வுகளைக் கூறினால் அதற்கு துறை ஆசிரியர் குழு நடக்கவேண்டிய முறைக்கு பரிந்துரைகள் வழங்குவார்கள்.அவ்வப்போது How to survive Matrimony என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்து, காணாமல் போன புத்தகத்தின் நினைவில் இருக்கும் பக்கங்களும் விஸிட்டிங் ப்ரொபசராக வரும்.
 படிப்பின் முடிவில் என்ன பட்டம் வழங்கப்படும்?
 
உங்கள் திறமை, கற்றுக்கொள்ளும் திறன் ஆகியவற்றை வைத்து M B A (Marriage - Beginner's Approval), B.L (Beginner's Licence), M Tech (Marriage Technologist), PHD (Problem-free Household Doctorate), MBBS (Bachelor of Marriage and Bachelor of Solutions) ஆகிய பட்டங்கள் வழங்கப்படும்.
 
bcom, ca, cwa போன்ற பட்டங்களை சேர்க்காமல் விட்டது கணக்குப் பண்ணாதீங்கடா என்ற உள்குத்தின் காரணமாகவே. இது போன்ற பல மறை பாடங்கள் இருக்கும். ஆகவே ஆழ்ந்து படிக்கவும்.
 மனைவிகளை ஏன் இவ்வகுப்பில் அழைக்கிறேன்?
 
கீழ்க்கண்ட அரை டஜன் காரணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்:
 
  1. எதிரியின் நுணுக்கங்களை அறிந்துகொள்வது ராஜதந்திரம்.
  2. களவும் கற்று மற என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
  3. கணவன்மாரின் பார்வையில் இஷ்டம் எது கஷ்டம் எது என்பதை அறிந்துகொண்டால், நமக்குத் தேவையானதுபோல செய்ய முடியும்.
  4. அழைக்கவில்லையென்றால் ஈயம் பித்தளை என்று என்னையும் கட்டம் கட்டிவிடுவீர்கள்.
  5. பாடத்தில் ரோல்ப்ளே போன்ற கட்டங்கள் வரும்போது, நல்ல இயல்பான நடிகர்கள் தேவைப்படுவார்கள்
  6. நாலு முட்டா பசங்க மேடையேறி பேசினா வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் வருமே. வரப் போற கூட்டத்தை வாங்கன்னு கூப்பிட்டுடலாமேன்னுதான்
 வகுப்புகளுக்கு என்ன கட்டணம்?
 
இப்போது ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணம் ஒரு பின்னூட்டம். பின்னர் அனைத்து வகுப்புகளுக்கும் குறைந்தபட்சம் ஒரு பின்னூட்டம். பின்னூட்டம் என்பது வருகைப் பதிவு மட்டுமல்ல, அதில் கேள்விகளும் விடையும் கலந்த ப்ராஜக்ட் வொர்க்கும் உண்டு.
 வகுப்புகள் எப்போது ஆரம்பம்?
 29 அக்ட் திங்கள் முதல்.

Oct 21, 2007

கனவிலும் வரக்கூடாத தமிழ்மணம் (22 Oct 07)

மைலாப்பூர் எம் எல் ஏ என்று ஒரு வலைப்பதிவு வந்திருக்கிறதாம் - இட்லிவடை பதிவில் பார்த்தேன்! தெலுங்குப்படம் இல்லையாம் - நெஜமாவே மைலாப்பூர் தொகுதி எம் எல் ஏ எஸ் வி சேகர்தான் நடத்தறாராம்.

யோசிச்சுப்பார்த்தா மனசுக்குள்ளே கலவரம். இப்படியே ஒவ்வொருத்தரா ஆரம்பிச்சா, வலைப்பதிவை மட்டுமே நம்பிப் பொழைப்பு நடத்தற நம்மையெல்லாம் வெளியே தள்ளிட்டு இந்த அரசியல்வாதிகள், சினிமாக்காரங்க எல்லாம் ஜகஜ்ஜோதியா விளையாட ஆரம்பிச்சிடுவாங்களே! (ஆமாம், ஒரு டவுட்டு - எஸ் வி சேகர் சினிமாக்காரரா? அரசியல்வாதியா?)

இப்படி ஒரு காலம் வரக்கூடாதுன்னு நீங்க நம்பற ஆண்டவனையோ இயற்கையையோ வேண்டிகிட்டு, நெருப்புன்னா வாய் வெந்துடாதுன்றதால கீழே இருக்க கற்பனையைப்பாருங்க! Shift+ click பண்ணீங்கன்னா தனியா பெரிசா தெரியும்.


அதையும் மீறி படிக்க முடியலைன்னா எனக்கு ஒரு மெயில் தட்டி விடுங்க, வெள்ளெழுத்து ஸ்பெஷல் அனுப்பறேன் :-)

PDF கோப்பாக இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். அல்லது, படத்தின் மேல் ரைட் க்ளிக்கி, உங்கள் கணினியில் சேமித்து வைத்துக்கொண்டால், பிக்சர் எடிட்டர் மூலம் பெரியதாக்கி பார்த்துக்கொள்ளலாம்.

 

blogger templates | Make Money Online