Feb 27, 2008

ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்!!

எதுவும் எழுதத் தோன்றவில்லை - மனம் வெறுமையாக இருக்கிறது.

பத்தாவது வகுப்பு படிக்கும்போது குமுதத்தில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள் - சுஜாதாவின் தொடரின் ஒரு பகுதிக்குள் அவர் நடை அல்லாத வேறு ஒரு பத்தி இருப்பதாகவும் அதை அடையாளம் கண்டுபிடிப்போர்க்கு பரிசு என்றும்.

மெலோட்ராமாத்தனமான அந்தப்பத்தியைக் கண்டுபிடிப்பது யாருக்குமே பெரிய விஷயமில்லை - தமிழில் கொஞ்சமாவது கதைகள் படித்த யாருக்குமே! (அந்தப்போட்டியில் நான் முதல் பரிசு பெற்றது வேறு விஷயம்). அந்தத் துடிப்பான நடையில் இப்படிப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் வரும் இவை வராது என வரையறுத்துவிட முடியாது என்றாலும் அந்த எழுத்துக்கும், அன்று அவருடைய சக எழுத்தாளர்களாகக் கோலோச்சிக்கொண்டிருந்த எழுத்து பேக்டரிகளுக்கும் ஒளி ஆண்டுகள் தூரம்.

புத்திசாலித்தனமான துப்பறியும் கதைகள் ஆகட்டும் (நிர்வாண நகரம்), ஆசிரியர் உரத்துப் பேசாமலே உணர்ச்சிகளைக் கொட்டவைக்கும் சமகாலக் கதைகளாகட்டும் (குருபிரசாத்), மாய உலகைச் சிருஷ்டித்து எதிர்காலத்தை நினைத்து பயப்படவைக்கும் அறிபுனைகளாகட்டும் (சொர்க்கத் தீவு), சரி அதையும்தான் விடுவானேன் என்ற வரலாறாகட்டும் (ரத்தம் ஒரே நிறம்) ஓ ஹென்றித்தனமாக கடைசிவரித் திருப்பங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்திய சிறுகதைகளாகட்டும் (விபா!) அல்லது இன்றைய வலைப்பதிவுகளின் வடிவுக்கு அன்றே கட்டியம் சொன்ன கடைசிப்பக்கங்கள் ஆகட்டும்- எந்த வகையையும் விட்டதில்லை - ஆனால் இவைகளினால் சுஜாதா எனக்கு ஆதர்சம் இல்லை.

ஒரு தேர்ந்த குருவைப் போல, இதெல்லாம் கூட இருக்குதப்பா தமிழில் என்று கைபிடித்துதான் எனக்கு கணையாழியை அறிமுகப் படுத்தினார். கவிதை என்பது செய்யுள் மட்டுமல்ல, கல்யாண்ஜியும் ஆத்மாநாமும் இப்படியெல்லாம் மரபுடைக்கிறார்கள் என்று ஹைப்பர்லிங்க் போட்டது சுஜாதாதான். பழமலய் அ கே ராமானுஜன் போன்ற பெயர்களைப் பரிச்சயப்படுத்தியது அவர் கதைகளூடாகத் தான். ஜேஜே சில குறிப்புகள், தோட்டியின் கதை என்ற பேரில் எல்லாம் கூட கதை எழுதுகிறார்கள் என்று அறிந்தது அவர் குறிப்புகள் மூலமாகத்தான்.

சிறுபத்திரிக்கைகளுக்கும் வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கும் பாலமாக அவர் செயல்பட்டது யாருக்கு உபயோகமோ தெரியவில்லை, அவர் எழுத்துக்களைப் படிக்காமல் இருந்திருந்தால் எனக்கு இவை தெரிந்திருக்காது, விகடன் கல்கி குங்குமத்தைத் தாண்டியும் சில பத்திரிக்கைகள் இருப்பதையோ, ராஜேஷ்குமார் சிவசங்கரியை விடவும் சிறந்த எழுத்தாளர்கள் தமிழில் இருப்பதையோ உணர்ந்திருப்பேனா என்பது சந்தேகம்தான்.

இன்றைக்கு இன்னும் கொஞ்சம் படித்து, சுஜாதா கதைகளில் அது தெரிகிறது இது தெரிகிறது என்று சட்டமாக விமர்சித்தாலும், வந்த வழி நிச்சயம் சுஜாதா வழிதான். இது எனக்குமட்டுமல்ல - எனக்குத் தெரிந்தே பலருக்குப் பொருந்தும்.

கற்றதும் பெற்றதும் வரை கூட எனக்குப் பிடித்த கவிதைகளையும் கதைகளையும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பதற்கு அசாத்திய ஆர்வமும், தான் படித்ததை மற்றவரும் படிக்கச் செய்யும் ஆவலும், மற்றவர்களைப் போட்டியாக நினைக்காத தன்னம்பிக்கையும் வேண்டும்.

எல்லா விதங்களிலும் சுஜாதாவுக்குச் சமமான இன்னொரு தமிழ் எழுத்தாளரை நான் இன்னும் படிக்கவில்லை.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் கூட சந்திக்கத் துடித்த ஒரே பிரபலமாக இருந்தவர் - சமீப காலங்களில் அந்த அளவு வெறி இல்லாவிட்டாலும், இனி ஆசைப்பட்டாலும் முடியாது என்பது வருத்தத்தை அதிகரிக்கிறது.

அன்னார் ஆத்மா சாந்தி அடைவதாக!!

Feb 18, 2008

அவியல் - 18 Feb 08

ஞாநி குமுதத்தில் எழுதுவது எந்த விதத்தில் தவறு எனத் தெரியவில்லை. குமுதம், உரிமை பிரசுரிப்பாளருக்கே என்று சொன்னபோது எழுதிய வார்த்தைகள் இப்போதும் செல்லுபடியாகுமா என்பது எனக்குத் தெரியவில்லை.

குமுதத்தில் பிரசுரமான சுஜாதா கதைகள் புத்தகமாக வந்தபோது உரிமை எழுத்தாளருக்கே என்று பார்த்திருக்கிறேன்.

குமுதம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டதா? - ஆம் எனில் ஞாநி குமுதத்தில் எழுதுவதில் எந்தத் தவறும் இல்லை, தன் குத்திக்காட்டுதல் வெற்றி கொண்டதாகவே கொள்ளலாம் அவர். ஒருவேளை குமுதம் சுஜாதா ஞாநி போன்ற அறியப்பட்ட எழுத்தாளர்களுக்கு ஒரு கொள்கை, அறியப்படாத எழுத்தாளர்களுக்கு வேறு கொள்கை என்றிருந்தால் ஞாநி குமுதத்தில் எழுதுவது தவறே! யாரேனும் விஷயம் தெரிந்தவர்கள் விளக்க முடியுமா?

*******

ராஜ் தாக்கரே வாட்டாள் நாகராஜின் மராட்டி பதிப்பு போல இருக்கிறது. உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அரசியல் குளிர் காயும் இது போன்ற ஆட்களுக்கு எந்த தயவுதாட்சண்யமும் கூடாது. அமிதாப்பை ராஜ் தாக்கரே தாக்கியதன் பின்புலத்தில் அபிஷேக்-ஐஸ்வர்யாவின் திருமணத்துக்கு ராஜ் தாக்கரே அழைக்கப்படாததுதான் காரணம் என்று எங்கோ படித்தேன். (Investigative Journalism) அமிதாப்பும் ராஜ் தாக்கரேவும் நாளை கூடிக் குலாவிக்கொள்ளலாம்.. ஆனால் வேலையையும் வீட்டையும் விட்டு வெளியே துரத்தப்பட்ட பீஹாரிகள் - உபிக்காரர்கள்?

கலவரத்தைக் கிளப்புவது பெங்களூருவில்தான் மிகச்சுலபம் என்று நினைத்தேன். மொழி, மதம், வருமானம் என உணர்ச்சிகளை உசுப்பேத்தி விடுவது, சமச்சீரற்ற எந்த ஊரிலுமே சுலபம்தான் என்று நிரூபித்திருக்கிறது மஹாராஷ்ட்ரா. ராஜ் தாக்கரே போன்றவர்களுக்கு சிறை தண்டனை மட்டும் போதாது - அரசியல் அனாதைகளாக்கப்பட வேண்டும். மஹாராஷ்டிரத்தின் மற்ற அரசியல் கட்சிகள் ராஜ் தாக்கரேவின் கட்சியோடு எந்த நாளும் கூட்டு வைக்கமாட்டோம் என அறிவிக்கவேண்டும். கலவரம் எவ்வளவு பெரியதோ அதைக் கிளப்பினவன் அவ்வளவு பெரிய ஆள் என்று நினைக்கும் நம் நாட்டில் சாத்தியப்படாத கனவுகள்!

******

ராஜ் தாக்கரே செய்ததற்கும் விகடன் செய்து கொண்டிருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை - என்ன, விகடன் கொஞ்சம் நாசூக்காகச் செய்கிறது!

ஜெயமோகன் தன் வலைப்பக்கத்தில் கிண்டலாக சிவாஜி எம்ஜிஆர் பற்றி எழுதியிருப்பது தனிநபர் தாக்குதலா, அங்கதமா என்ற பிரச்சினையே வேண்டாம். தன் வலைப்பூவில் எதையும் வெளியிட அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் விகடன் அதை ஸ்ட்ராடஜிக் காபி பேஸ்ட் செய்து, கவர் ஸ்டோரியாக வெளியிட்டிருப்பது நிச்சயமாக உள்நோக்கம் கொண்ட செயலே. விகடனையே சிலர் எரித்தார்கள் என்பது, அவர்கள் நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது. கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு அட்வாண்டேஜ்காக ஜெயமோகனை பலியாடாக்கி இருப்பது நிச்சயம் கண்டிக்கவேண்டிய செயல்.

******

பொல்லாதவன் படம் ரொம்ப லேட்டாக பார்த்தேன். பாட்டுக்கள் (எங்கேயும் எப்போதும் தவிர்த்து) படத்தில் ஒட்டவில்லை, தனுஷ் 10 பேரைப் பந்தாடுவது நம்பமுடியவில்லை போன்ற சில்லறைக் குறைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் மிக நல்ல படம் என்றே சொல்வேன். சுர்ரென்று பத்திக்கொள்ளும் திரைக்கதை, நாயகன் / வில்லன் பார்வையில் மாறி மாறிச் சொன்னாலும் குழப்பாத காட்சிகள், குறிப்பாக டேனியல் பாலாஜியின் நடிப்பு, மிக இயல்பான சென்னைத் தமிழ் வசனங்கள் - நல்ல படம்.

*******
எங்களூர் நாராயணி பீடத்துக்குச் சென்று எதோ உதவி வாங்கி வந்திருக்கிறாராம் கலைஞர். அதில் ஒன்றும் தப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஆன்மீகம், அறிவியல் இரட்டைக் குழந்தைகள் என்றெல்லாம் பேச வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. நாத்திக இயக்கத்தின் அடிநாதத்தையே சமரசம் செய்கிறதே இந்தப்பேச்சு - அவருக்கு ஆதரவாக இருப்பவர்களை தர்மசங்கடப்படுத்துவதைத் தவிர இந்த மாதிரி பேச்சினால் வேறு உபயோகம் இருப்பதாகத் தெரியவில்லை.

*******
ரங்கமணி முன்னேற்றக் கழகத்தில் இன்று ஒரு புதிய ஆள் சேர்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்பதில் பேருவகை கொள்கிறோம்.
*****

Jan 28, 2008

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 11

 
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 11
 
கார்த்திக்கின் புகைப்படம் அமெரிக்கா சுரேஷின் உள்ளத்துக்குள் ஆயிரம் நினைவலைகளைக் கொண்டு வந்தது.
 
"டேய் சின்னப்பையனாடா நீ?"
 
"இல்லீங்க.. இருந்தாலும் இதெல்லாம் வேணாம்னு.."
 
"தப்பா நெனைக்காதே.. இதெல்லாம் இங்கே சகஜம்"
 
"வேணாங்க.. பழக்கமில்லீங்க"
 
வற்புறுத்தல் என்று தெரியாமலேயே அவனை கொஞ்சம் கொஞ்சமாகக் குட்டிச்சுவர் ஆக்கியது ஞாபகம் வந்தது.
 
"என்ன ஆச்சு சார் கார்த்திக்குக்கு?" நடுக்கம் தெரியாமல் சமாளிக்க பெரும்பாடு பட்டுவிட்டான்!.
 
"யாருக்குத் தெரியும்?  திடுதிப்புனு ஒரு நாள் ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டுத் தொங்கிட்டான் - என்னையும் அன்னிலே இருந்து நடைப்பிணமாக்கிட்டான்!" ப்ரொபஸரின் குரல் உடைந்து..
 
"லெட்டர்லே என்ன எழுதியிருந்தான்"
 
"சார் போலீஸ்லே நீங்க இன்பார்ம் பண்ணீங்களா?" ராகவன் காக்கிச்சட்டையை மறக்கவில்லை.
 
"போனவன் போயிட்டான். தற்கொலைன்னு தெளிவாத் தெரியுது.. எதுக்கு போஸ்ட் மார்ட்டம் அது இதுன்னு .. கமுக்கமா முடிச்சுட்டோம்.. எங்களுக்கும் அதிக உறவினர்கள் கிடையாது இல்லையா?"
 
"என்ன சார் படிச்சவரு- கதை எழுதறவரு-- மனோதத்துவ நிபுணர் -- நீங்களே இப்படிப்பண்ணா எப்படி சார்? இது கிரிமினல் அபென்ஸ் - உங்களுக்குத் தெரியாதா சார்?"
 
"வாஸ்தவம் தான் ராகவன்.. அப்புறம் அந்த டெசிஷனை பலமுறை யோசிச்சுப் பாத்தேன். நான் பண்ணது தப்புன்னு தெளிவாத் தெரியுது.. இப்ப வேணா ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்துடட்டுமா?"
 
"சரி அதை அப்புறம் பாக்கலாம், லெட்டர்லே என்ன எழுதியிருந்தது?"
 
"அந்த லெட்டரே வச்சுருக்கேன்.. பாக்கறீங்களா?"
 
A5 சைஸுக்கு வெட்டப்பட்டு மக்கி யிருந்தது அந்தக்காகிதம்.
 
"சுரேஷின் இந்த முடிவுக்கு சுரேஷே காரணம். வேறு யாரைப் பொறுப்பாக்க முடியும்? - கார்த்திக் சுரேஷ்"  இவ்வளவுதான் எழுதியிருந்தது.
 
ராகவன் போலிஸ்காரப்பார்வையுடன் தடயத்தைப் பார்த்தவண்ணம் கேட்டான். "இது அவன் கையெழுத்துதானா? உறுதியாத் தெரியுமா?"
 
"அதில சந்தேகமில்லை"
 
"வழக்கமா என் முடிவுக்குன்னு தானே எழுதுவாங்க.. இதென்ன பேரைப்போட்டு எழுதியிருக்கான்?"
 
"அதைக்கூட யோசிக்காம இருப்பேனா? அவன் என்கிட்டே சின்ன வயசிலிருந்தே பேசும்போது நான்னு சொல்லமாட்டான்.. சுரேஷ்னுதான் தன்னை சொல்லிக்குவான்"
 
"ஒரு நிமிஷம்.. வீட்டுல பென்சில் இருக்கா?" பென்சில் வந்தவுடன் அதன் கிராபைட்டை பொடியாக்கி அந்த லெட்டரின் பின்புறம் தூவினான். "வேற பேப்பர்லே எழுதும்போது இதைக் கீழே வச்சு எழுதியிருந்தான்னா அதிர்ஷ்டவசமா சில எழுத்துக்கள் தெரியலாம் - அட.. இதைப்பாருங்க!"
 
புதிதாக சில எழுத்துக்கள் தெரிய ஆரம்பித்தன..
 
ஆர்க்குட் வெப்ஸைட்.. யூஸர்: AAMBAL, pw: suresh.......................... கூடவே பெரிய கோபமான எழுத்துக்களில்..
 
KILL SURESH..............
*********************************
ஆம்பல்

மலர்ந்தது:24/2/2000
உதிர்ந்தது:3/1/2006

 
புகைப்படத்தின் மீது கொஞ்சம் க்ளீனிங் லிக்விடைப் போட்டுத் துடைத்துக்கொண்டிருந்தான் அவன்.
 
"கவலைப்படாதேம்மா.. நம்ம ப்ளான் எல்லாம் கரெக்டா வொர்க் அவுட் ஆகுது.. ஒவ்வொருத்தனா வரானுங்க.. அவளுங்களும் வந்துட்டாளுங்கன்னா மொத்தமா போட்டுத் தள்ளிடலாம். எப்படியும் உன் பிறந்த நாளுக்குள்ள பழி தீத்துடுவேன்"
 
கிழிந்த உடை.. நீண்ட தாடி.. அடையாளமே தெரியாமல் இருந்தவனின் கண்களில் பனித்திருக்கும் நீர்த்துளிகளை ஒதுக்கிவிட்டுப்பாருங்கள் -- கார்த்திக் தெரிவான்!
***************************
 
பி கு: ஆளாளுக்கு கொத்துப் பரோட்டா போட்டுவிட்டு கதையை மறந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு சரியான முறையில் தண்டனை கொடுப்பது எப்படி?  அவர்கள் ஆரம்பித்து எங்கெங்கோ வளர்ந்துவிட்ட கதையையும் கதாபாத்திரங்களையும் அவர்களிடமே திருப்பிக் கொடுத்து, "இந்தா டாமேஜையெல்லாம் சரி பண்ணு"ன்னு கொடுப்பதை விடச் சரியான தண்டனை இருக்கிறதா? எனவே, இப்போதுமுதல் இந்தக் கதை ரிவர்ஸ் கியரில் செல்லும். நான் வாங்கிய குத்துப்பாட்டையும் குமரன் பாட்டாகப் பார்க்கும் ஆன்மீகச் செம்மல் கண்ணபிரான் ரவிஷங்கரிடம் இந்த ஜோதியைத் திரும்பக்கொடுக்கிறேன், இனி அவர் பாடு. ஏற்கனவே இதை எழுதிய நண்பர்கள் உஷார்!

Jan 24, 2008

பொங்கல்தான் புத்தாண்டா?

ஏப்ரல் 14 ஆம் தேதி வரும் புத்தாண்டு புதிய சமஸ்கிருத ஆண்டையே துவக்கி வைக்கிறது, அதற்கும் தமிழுக்கும் எந்தச் சம்மந்தமும் கிடையாது என்பதால் தமிழ்ப் புத்தாண்டாக பொங்கல் திருநாளைக் கொண்டாடவேண்டும் என்ற கருத்தில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.

சொல்லப்போனால் எந்த நாளையுமே புத்தாண்டாகக் கொண்டாடலாமே.. எங்கோ படித்தேன், வருடத்தின் 365 நாளையுமே புத்தாண்டாக உலகின் எதோ ஒரு மூலையில் எதோ ஒரு பிரிவினர் கொண்டாடி வருகின்றனர் - என்று!

புத்தாண்டு என்பதை ஒவ்வொரு மதமும் தனித்தனியாக வகுத்தாலும், புத்தாண்டுக்கொண்டாட்டங்களின் ஆரம்பம் எங்கே துவங்கி இருக்கும்? ஒரு வருடத்தின் எல்லாப்பருவங்களும் முடிந்து மீண்டும் முதல் பருவம் தொடங்கும் நாளைத்தானே புத்தாண்டாகக் கொண்டாடத் துவங்கி இருப்பர்? அப்படி இருக்கும் போது சித்திரை கோடைக்காலத்தின் ஆரம்பம் என்பதால் லாஜிக்கலாக பொருந்துகிறதே.

எனவே, ஏப்ரல் 14 ஐத் தமிழ்ப் புத்தாண்டாக பல வருடங்களாகக் கொண்டாடி வரும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை மீதும் எனக்குக் கேள்விகள் இல்லை.

ஏன், எனக்கு வேலை கிடைத்த நாளைக்கூட நான் வருடாவருடம் புத்தாண்டாகக் கொண்டாடலாம்!

ஆனால் பிரச்சினை அதுபற்றி அல்ல. கவர்னர் உரையில் பொங்கலைப் புத்தாண்டாக "அரசாங்கம்" அறிவித்திருப்பது பற்றியது.

இதில் கிளம்பும் கிளைக்கேள்விகள் ஆயிரம்.


1. இனி சித்திரை முதல் நாள் விடுமுறை கிடையாதா? மத ரீதியான சடங்குகள் செய்ய விருப்பமுள்ளோர் தங்கள் சொந்த விடுப்பில் அவற்றைச் செய்யவேண்டுமா?

2. இனி சித்திரை முதல் தேதியைக் கொண்டாடக்கூடாதா? அப்படிக் கொண்டாடுபவர்கள் (பிறந்த நாள் கொண்டாடும் சன் டிவி, தமிழ் சினிமா ரிலீஸ்காரர்கள் உள்பட) தமிழ்த் துரோகியாக "அரசால்" அடையாளம் காட்டப்படுவார்களா?

3. தமிழ் மாதங்கள் சித்திரை வைகாசி எனத் தொடங்குமா? தை மாசி எனத் தொடங்குமா? பாடப்புத்தகங்கள் மாற்றப்படுமா? அடுத்த அரசாங்கம் இதை மாற்றாமல் இருக்குமா?

4. மேற்படி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் முந்தைய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் தகவல் வித்தியாசம் இருக்குமே?

5. திமுக என்னும் கட்சியின் இந்தச் சித்தாந்தம் (அதுவும்கூட காலம் காலமாக வந்த சித்தாந்தமாகத் தெரியவில்லை) மக்களிடம் பிரசாரம் செய்யப்பட்டதா? மக்களின் ஒருமித்த கருத்து அறிய எதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

6. இதே போல தீபாவளி கார்த்திகை போன்ற பண்டிகைகளும் அரசால் மாற்றி அமைக்கப்படுமா?

7. இவ்வாறு மாற்றி அமைப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி எதேனும் ஆராயப்பட்டதா?

8. இந்துமதச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் மக்களுக்கு நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் எதிர்ப்பாளர்களாய் இருக்கலாம் - அரசாங்கம் இருக்கலாமா?
 
தமிழ் பேரைச் சொன்னால் மேல்கேள்வி கேட்கக்கூடாது, இந்துமத சடங்குகள் அசிங்கமானவை - அவற்றைக் கொண்டாடுவது தமிழனுக்கு இழுக்கு -- என்றெல்லாம் பலர் சொல்லக் காத்திருக்கிறார்கள் என்பதை அறிந்தே இப்பதிவை இடுகிறேன். உங்கள் கருத்தைச் சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் இதைக் கொண்டாடு இதைக் கொண்டாடக்கூடாது என்றெல்லாம் சொல்ல அரசாங்கத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதிலும் தெளிவாக இருக்கிறேன். திமுக கட்சி இப்படி ஒரு பிரசாரம் செய்து அதன்மூலம் மக்களே சித்திரை முதல் தேதிக்கு எந்த மரியாதையும் கொடுக்காமல் விட்டாலோ, பொங்கலன்று புத்தாண்டு வாழ்த்துகள் பரிமாறிக்கொண்டாலோ யாருக்கும் எந்த ஆட்சேபமும் இருக்கப்போவதில்லை. ஆனால் அதையே அரசாங்கம் வற்புறுத்தினால் அது சர்வாதிகாரம்தான் என்பதிலும் சந்தேகமில்லை.

Jan 17, 2008

காமா சோமா பீமா!

பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ -- நீண்ட நாட்களுக்குப் பிறகு! ஆனால் என்னவோ தனிப்பட்ட பிரிவியூ மாதிரிதான் இருந்தது கூட்டம் - வேலை நாள் மதியம் என்பதாலும் வரலாறு காணாத மழை துபாய் ஷார்ஜாவை ஆட்டி இப்போதுதான் அடங்கியதால் கூட இருக்கலாம்.
 
கதையா? உப்புமாதான் கிண்டி இருக்காங்க!
 
சத்யா (ஹிந்தி) படத்தின் திரைக்கதையை அப்படியே சுட்டு, அதில் கொஞ்சம் தளபதி, கொஞ்சம் புதுப்பேட்டை அதன் மேல் கொஞ்சம் தாராளமாக நாயகன் அள்ளித்தெளித்து, தீபாவளி சரவெடி மாதிரி எந்நேரமும் துப்பாக்கி சப்தம் போட்டு தாளித்து (துப்பாக்கி இல்லாத வேளைகளில் கத்தியும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் - ஆனால் ரத்தம் முக்கியம்) ரௌடிக் கதைகளாக வரும் நேரத்தில் இறக்கி இருக்கவேண்டிய படம், இறக்கும் நேரம் தவறிவிட்டதால் சூடு ஆறிப்போய் பரிமாறி இருக்கிறார்கள்.
 
சத்யா கதைக்கும் பீமா கதைக்கும் ஒரே வித்தியாசம்தான். அதில் நாயகன் வேறு வழியில்லாமல் ரௌடி ஆவான். இதில் கம்பெனியின் க்ரெடின்ஷியல் எல்லாம் தெளிவாகத் தெரிந்துகொண்டு, வாக் இன் இண்டர்வியூ போல ரௌடிக் கும்பலுக்குத் தேவையான ஆளை பேக் செய்து வேலையில் சேர்கிறான்! கஷ்டம்! விக்ரமின் உழைப்பும் நடிப்பும் அனாவசியத்துக்கு வீணாகி இருக்கின்றன!
 
நாயகிக்கு நாயகன் மேல் காதல் ஏற்பட ஒரே காரணம் அவன் கூரையைப் பிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்ததுதான். ஏன் வில்லன்களுக்கு இப்படிப்பட்ட டெக்னிக் தெரிவதில்லை? டூயட் நேரத்துக்கு கடனாக வந்து அழகாகப் போகிறார் திரிஷா.. சும்மா சொல்லக்கூடாது, பேட்டிகளில் மறக்காமல் சொல்லும் கெமிஸ்ட்ரி (அதை ஏன் வரலாறு புவியியல் என்றெல்லாம் சொல்வதில்லை?) நன்றாகத்தான் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. 
 
பிரகாஷ்ராஜ் நல்ல ரௌடியாம், ரகுவரன் கெட்ட ரௌடியாம். ரெண்டு கூட்டமுமே யாரையாவது சுட்டுக்கொண்டும் வெட்டிக்கொண்டும்தான் திரிகிறது.. என்ன நல்லதோ கெட்டதோ!
 
லிங்குசாமியின் முந்தைய படங்களில் ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் இடைவேளைக்குச் சற்றுமுன் வரும்.. இந்தப்படத்தில் அது காத்திருந்து காத்திருந்து கிளம்பப்போகும் வேளையில் படம் முடிய 5 நிமிஷத்துக்கு முன் மட்டுமே வருகிறது.. பொறுமை செத்துப் போய்விடுகிறது!
 
நல்ல விஷயங்கள் ஒரு கைவிரலைத் தாண்டவில்லை - பிரகாஷ்ராஜ் நடிப்பு, விக்ரமின் உழைப்பு, திரிஷாவின் அழகு..பல பழைய பாடல்களை நினைவுபடுத்தினாலும், காதைப் படுத்தாத பாடல்கள்..அப்புறம்.. அப்புறம்.. ஒன்றுமில்லை!
 
கடைசி 5 நிமிஷம் நன்றாகத்தான் இருக்கிறது-- அதற்காக 2 மணி 55 நிமிஷத்தைப் பொறுத்துக்கொள்ள விரும்பினால் தாராளமாகப் பார்க்கலாம்.

 

blogger templates | Make Money Online