Jan 27, 2010

காபரே கருத்துகள்

தாய்லாந்து சென்றிருந்தேன் குடும்பத்தோடு. வேண்டாம், அந்தக்கேள்வியைக் கேட்காதீர்கள், ஆயிரம் முறை பதில் சொல்லியாகிவிட்டது.

புன்னகை தேசம் என்று விமானநிலைய வரவேற்புப்பலகை சொல்கிறது. உண்மை. இருபது ரூபாய்க்கு மாங்காய் வாங்கினாலும் விற்பவர் சொல்லும் கணக்கில்லாத கபுன்கா (நன்றி :-))வுடன் புன்னகைகள் இலவசம்; 1000 கிலோமீட்டருக்குள் கடல் மலை அருவி காடு என எல்லா இயற்கையையும் பார்க்க நீந்த குளிக்க களிக்க - பதப்படுத்தி வைத்திருக்கும் சுற்றுலாத்துறை -- மிக நிறைவான பயணம். விரிவாக எழுதினாலும் எழுதுவேன். 1000 ஃபோட்டோக்கள், 5 மணிநேர வீடியோ இருப்பதால் எதை எழுத எதை விட என்று தெரியாமல் இருக்கிறேன் இப்போதைக்கு.


ஆனாலும், இந்த விஷயத்தைப் பற்றி உடனடியாக எழுதியே ஆகவேண்டும். ஒரு காபரே ஷோ பார்த்தேன்.


காபரே என்றதும் எனக்கும் கச்சடாவான எண்ணங்கள்தான் வந்துகொண்டிருந்தன, ஸ்பெயினில் ஒரு வருட ஆரம்ப காபரேவைப் பார்க்கும்வரை - பத்தாண்டுகளுக்கு ஒரு பாடலை எடுத்துக்கொண்டு நூறாண்டுகளின் இசை ரசனை மாற்றத்தை நடனத்தோடு சொன்ன காபரேதான் கண்ணைத்திறந்தது - சிஐடி சகுந்தலா ஆடுவது காபரே அல்ல என்று.

தாய்லாந்து காபரேவும் ஏறத்தாழ இதேபோலத்தான். பல பாடல்களுக்கான நடனங்களை லூஸாக ஒரு கதையை வைத்துத் தொகுத்தது. கடவுள் நவரத்தினங்களை அறிமுகப்படுத்துகிறார் - ஒன்பது மிக அழகிய பெண்கள், அவர் ரத்தினத்துக்கான நிறத்தில் ஆடை அணிந்து, க்ரூப் டான்ஸர் புடைசூழ ஆடி அறிமுகமாகிறார்கள். உடனே சாத்தானின் வேலையால் நவரத்தினங்களும் உலகின் பல்வேறு திசைகளிலும் பந்தாடப்பட, அடுத்த காட்சியில் இருந்து ஒவ்வொரு ரத்தினமும் தான் சேர்ந்த நாட்டின் கலாச்சார நடனம் ஆட (ஒரு ரத்தினம் தாய்லாந்து, அமெரிக்கா, ப்ரான்ஸு, இந்தியா, சீனா, ஜப்பான் - எல்லா நாட்டு நடனங்களும்) பின் சேர்கிறார்கள். வைரம்தான் நவரத்தினத்துக்கும் தலை, டிஃபானிதான் வைரத்தின் அத்தாரிட்டி என்று முடிக்கும்போதுதான் ஒன்றரை மணிநேரமும் விளம்பரம் என்று உரைக்கிறது.


ஒவ்வொரு காட்சியிலும் விஸ்தாரமான ஒப்பனைகளுடனும் அழகோ அழகான உடை அலங்காரங்களோடு மிக மிக அழகான பெண்கள் அந்தந்த நாட்டிற்கேற்ப பிரம்மாண்டமான அரங்க அமைப்புகளில் ஆடுகிறார்கள். ஆட்டம் என்றால் என்ன ஆட்டம்! கலா மாஸ்டர் சொல்வதுபோல எல்லாம் ஹெவி ஸ்டெப்புகள் :-) பத்துபேருக்குக் குறையாத க்ரூப் டேன்ஸிலும் ஒரு ஸ்டெப் கூட தவறவிடாத துல்லியம்; சொன்னேனா? இந்தக் காட்சிகளுக்கு இடையே ஒரு நொடிகூட இடைவெளி இல்லை. அரங்கமாற்றம், ஒப்பனை, கேண்டீன் விற்பனை - எதற்கும் ஒருநொடியும் இடைவெளி இல்லை - அரங்கின் முன்பகுதியில் நகைச்சுவைக்காரர்கள் ஒரு பாட்டுக்கு ஆடி முடிக்கும்போது பின்பாதியின் அமைப்பு தயாராகிவிடுகிறது. ஆடிக்கொண்டே இடதுபக்கம் போகும் நடனக்காரி 20 நொடியில் வேறு ஒப்பனையில் வலதுபக்கம் தோன்றுகிறாள். மிக மிகத் துல்லியமான நேர ஒருங்கிசைவு.


அழகோ அழகான பெண்கள் என்றா சொன்னேன்? அழித்துவிடுங்கள். ஆடியது அத்தனை பேரும் ட்ரேன்ஸ் செக்ஸுவல்சாம். (திருநங்கை பொருந்திவருமா தெரியவில்லை) - சொல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் கண்டுபிடித்திருக்க முடியாது.

ஒரு நாளைக்கு மூன்று காட்சி ஓட்டுகிறார்கள், ஒரு நடுத்தர நகரத்திலேயே (பட்டாயா) இரண்டு ஷோக்கள் (அல் கஸார் ஷோ, டிஃபானி ஷோ) - அத்தனையும் அரங்கு நிறைகின்றன என்பதில், அதன் தரத்தைப் பார்த்ததும் ஆச்சரியம் ஏற்படவில்லை.

சொல்லவந்த முக்கியமான விஷயங்கள் இவைதான்:

இது போன்ற ஷோக்கள் மட்டுமின்றி நாட்டிலேயே பொதுவாக பல தொழில்களிலும் இது போன்ற பெண்கள் இருக்கிறார்கள், மிக சகஜமாக என்பதையும் பிறகு அறிந்துகொண்டேன். நம் ஊரில் மட்டும் இன்னும் இப்படிப் பிறப்பதையும் இருப்பதையும் குற்றமாக்கி, சக உயிரினமாகக் கூட மதிக்காமல் இருப்பதன் அசிங்கம் முழுமையாக உரைத்தது.

முதல் வரிசையில் அமர்ந்து பார்த்ததற்கு நான் செய்த செலவு சுமார் 800 இந்திய ரூபாய். காசைப்பற்றி சொல்வதற்கு காரணம், இதைப்போன்று இருமடங்கு செலவு செய்தாலும் தமிழ்நாட்டின் தியேட்டர்களில் நமக்குக் கிடைப்பது துணுக்குத் தோரணங்களே, இதுபோன்ற ஒரு பல்சுவை ஷோ இருக்கிறதா என்பதறியேன்.

பார்த்து பதினைந்து நாள் ஆனாலும் இன்னும் அந்த நிறைவான உணர்வை மனதில் உணர்கிறேன்.

Dec 26, 2009

நானும் நாவி, நீயும் நாவி, நினைச்சுப் பாத்தா எல்லாரும் நாவி!

அவதார் பார்த்துவிட்டேன். இந்தப்பதிவு விமர்சனம் அல்ல. நல்ல நல்ல விமர்சனங்கள் நிறைய இருக்கின்றன, கதையை முழுவதுமாகவும் படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் எனக்குத் தோன்றுவதை எழுதத்தானே என் பதிவு :-)

12 அடி உயர நீல நாவிகள் புதிதானவர்களாக இருக்கலாம் - ஆனால் மனிதனின் பொறுப்பற்ற விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்படும் உயர்வு மனப்பான்மையும் (சுருக்கமாகச் சொன்னால் கொழுப்பு) அதனால் மற்றவர்களை அடிமையாகவும் தாழ்ந்தவர்களாக்கும் எண்ணங்களும் வரலாற்றுக்குப் புதிதல்ல.

நிறைந்த கோப்பை கொண்ட மனிதர்களின் மனத்தில் வேற்று மக்களின் சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள் புரியாமல் போவதும், அவற்றை காட்டுமிராண்டித்தனமாகப் பார்ப்பதும் நிச்சயமாகப் புதிய விஷயமல்ல. அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் காலிக் கோப்பையாளர்களையும் கட்டம் கட்டி ஒழித்ததும் அதே நேரங்களில் நடந்தவைதான்.

இயற்கை கொடுத்த வளங்களைத் தங்கள் தனிப்பட்ட உரிமை என்று நம்பி,அதைப் பங்குபோட வரும் வேறெவரையும் எதிரியாக்கி, வில்-அம்புக்கு துப்பாக்கி, துப்பாக்கிக்கு வெடிகுண்டு என்று ஆயுதங்கள் வளர்த்த தொழில்நுட்பத்தால் எதிரிகளைப் பந்தாடி, இயற்கைக்கு நிரந்தர மாற்றங்களை - திரும்பமுடியாத மாற்றங்களை உண்டுசெய்து, வல்லான் வகுத்த வாய்க்காலில் யாரையுமே வாழவிடாமல் செய்வதும் மனிதர்களின் வழக்கம்தான்.

மனிதனின் இந்த இயற்கையான கேடுகெட்ட மனோபாவத்தை விண்வெளியில் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார் கேமரூன்.

மனிதனுக்கும் நாவிகளுக்குமான போராட்டத்தில் ஆரம்பத்தில் மனிதன் பக்கப் பார்வையே காட்டினாலும், போகப்போக மனிதவிமானங்கள் வீழ்வதைக் கொண்டாடவைக்கும் அளவுக்கு பார்வையாளனை மாற்றிய திரைக்கதை அபாரம்.

பண்டோராவின் வினோத மிருகங்களையும் பூச்சிகளையும் தொங்கும் மலைகளையும் (அல்லேலூயா மவுண்டன் - ஆம். Chomolungma என்று Everest ஐ சொன்னால் நமக்குப் புரியாமல் போனதை குத்திக்காட்டிய ஜெஃப்ரீ ஆர்ச்சரின் Path of Glory நினைவுக்கு வந்தது) பறவைகள் தேர்ந்தெடுக்கும் நாவிக்களையும் தொட்டுவிடும் தூரத்தில் இயல்பாக உலவவிட்ட முப்பரிமாணத்தையும் மீறி..

மனிதர்களை ஒற்றுமையால் வென்று சிறைப்படுத்தி உங்கள் பச்சை இல்லாத கிரகத்துக்கே திருப்பிப் போங்கள் என்று அனுப்பும் இறுதிக்காட்சியையும் மீறி..

இன்னொரு பத்தாண்டுகளில் இன்னும் பெரிய ஆயுதங்களோடு மனிதர்கள் போகத்தான் போகிறார்கள் பண்டோராவுக்கு, ஜெயிக்கத்தான் போகிறார்கள் என்ற வரலாற்று யதார்த்தம் சக நாவியான எனக்குத் தோன்றி வருத்தம்தான் தந்தது.

படம் - நிச்சயம் பாருங்கள், எல்லாரும் பாருங்கள்!

Dec 14, 2009

திருத்த வேண்டிய பதிவு

சரியோ தவறோ, என் நிலைப்பாட்டில் இருந்து மாறமாட்டேன் என்னும் கெட்ட எண்ணம் எனக்குக் கிடையாது. மாறியே ஆகவேண்டும் என்றால் அதைப் பொதுவாகச் சொல்வதில் கூச்சமும் கிடையாது; இதோ அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம். இது நான் முன்னால் (2007 மே) எழுதிய சிறுகதை, மாற்றத்தை வேண்டியது.

நம்பிக்கை

சட்டைப்பையில் இருந்த செல்போன் முனகி நான் இருக்கிறேன் எனக் காட்டியது.

எடுத்துப்பார்த்தால் பேட்டரி பவர் குறைவாம். இந்த சனியன் பிடித்த போனை முதலில் தலைமுழுக வேண்டும். அவனவன் கேமரா MP3 என ஜிகினா காண்பித்துக்கொண்டிருக்க என் கையில் மட்டும் ஆதிகால செல்போன். கருப்பு-வெள்ளையில் ஆறுமாதம் மட்டுமே ஓடும் பேட்டரி. பேசினால் ரெண்டு புள்ளி குறைந்துவிடும்.

இதில் மிஸ்டு கால் வேறு. ரம்யாதான். வேறு யார் எனக்கு மிஸ்டு கால் கொடுக்கப்போகிறார்கள்? சார்ஜரில் போனைச் சொருகி ரம்யாவை அழைத்தேன்.

"யப்பா! 2 மணிநேரம் கழிச்சு கால் பண்றியே" என்றாள்.

"நீ பேசியே இருக்கலாமில்ல? நான் கொஞ்சம் வேலை பார்த்துகிட்டிருந்தேன். இப்பதான் மிஸ்டு கால் பாத்தேன்"

"நான் எப்படி பேச முடியும்? என் வீட்டு நிலைமை தெரியுமில்ல?"

"எல்லாம் சரிதான். எனக்கு மட்டும் என்ன கோடிகோடியாவா கிடைக்குது?"

"பணம் பேச்சு எடுக்காத! அப்புறம் நீ டல்லா ஆயிடுவே, எதுவும் பேச முடியாது"

"சொல்லு. வேற என்ன விஷயம்?"

"நேத்து எதிர்வீட்டு ராமசாமி நம்மளைப் பார்த்திருப்பானோன்னு பயந்தோம் இல்ல? அவன் பாக்கலை போலிருக்கு. இன்னிக்கு அப்பாகிட்ட 2 மணிநேரம் கதையடிச்சுகிட்டிருந்தான், இதைப்பத்தி ஒண்ணுமே சொல்லல. பாத்திருந்தா லீவு போட்டு வந்து போட்டுக்கொடுத்திருப்பான். அவங்கபேசும்போது எனக்கு திக்கு திக்குனு இருந்திச்சு"

"அந்த சோடாபாட்டிலா? அவனுக்கு பகல்லேயே பசுமாடு தெரியாது. அவனப் பாத்து ஏன் பயப்படறே?"

"எவ்ளோ நாள்தான் கோபி இப்படியே ஓட்ட முடியும்? அப்பாகிட்டே வந்து பேசு!"

"இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்க. இப்ப மூணு அப்ளிகேஷன் போட்டிருக்கேன். எதாவது ஒண்ணு க்ளிக் ஆனா உடனே வந்துடறேன்"

ஞாபகம் இருக்கும்போதே போன் செய்துவிடலாம். அப்ளிகேஷன் போட்டால் மட்டும் போதாது. பாலோ-அப்பும் செய்யவேண்டும்.

"ஹலோ, மிஸ்டர் சிவப்பிரகாசம் இருக்காருங்களா?"

"நான் தான் பேசறேன். கோபிதானே?"

"ஆமாம் சார்"

"உன் ஞாபகம் எனக்கு இருக்குப்பா. நீ போன் பண்ணவேண்டிய அவசியமே இல்லை. ஒரு சின்ன ப்ராப்ளம், அதான் உன் வேலை முடியாம இழுத்தடிக்குது"

"ப்ராப்ளமா சார்?"

"பெரிசா ஒண்ணும் இல்லை, இப்ப என் கம்பெனியில ஓவர்ஸ்டாப்னு சொல்லி ரெக்ரூட்மெண்ட் நிறுத்தி வச்சுருக்காங்க. எச் ஆர் கிட்ட பேசி ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கணுமாம். அந்த ஆள் வெளிநாடு போயிருக்கான். வந்தவுடனே முடிச்சுடறேன். உனக்கு வேலை நிச்சயம், கவலைப்படாதே"

"எப்ப சார் அவர் திரும்பி வருவார்?"

"இன்னும் ரெண்டு வாரத்தில வந்துடுவார்"

ரெண்டு வாரம் ஒத்திப்போட்டுவிட்டார். அதுவரை இவரிடமும் பேசமுடியாது.

சரி கொஞ்சம் வேலையாவது பார்க்கலாம்.

"முத்து, இங்கே ஒரு டவுட்டுப்பா.. தகராறுக்கு எந்த ர முதல்லே வரும்?"

"சின்னத் தகராறுன்னா சின்ன ர போடு, பெரிய தகறார்னா பெரிய ற போடு"

"கடிக்காதே. நீதானே இங்கே தமிழ்ப்புலவர்"

"ஐஸெல்லாம் வேணாம். சின்ன ர முதல்லே அடுத்து பெரிய று."

காபிக்கான இடைவேளை நேரம் வரை வேலை முழுங்கியது. நேரத்தை நினைவுபடுத்தியது அம்மாவிடமிருந்து வந்த அழைப்பு.

"தம்பி, தரகர் வந்திருந்தாருப்பா"

"என்ன சொல்றாங்களாம்?"

"15க்கு குறைவா ஒத்துக்கமாட்டாங்களாம். இவர் எவ்வளவோ பேசிப்பாத்துட்டாராம்"

"15ஆ! தங்கம் விக்கிற விலையிலே 10க்கே நான் எவ்வளவு கஷ்டப்படறேன்னு
உனக்குத் தெரியாதாம்மா?"

"5 பவுனுக்காக பாக்கவேணாமுன்னு சொல்றாருப்பா இவரு. இதைவிட நல்ல வரன் கிடைக்கறது கஷ்டம்!"

சிவப்பிரகாசம் கம்பெனியில் வேலைகிடைத்தால் எப்படியாவது சமாளித்துவிடலாம்.

"சரி பாக்கறேன். வேற எதுவும்?"

"சின்னவன் ஸ்கூலுக்கு வரச்சொல்லியிருக்காங்க, முடியுமா?"

"மறுபடியும் வம்பு வலிச்சிருக்கானா? இதுக்காக எல்லாம் கிராமத்துக்கு வரமுடியாதும்மா. சனிக்கிழமை வர்றதே சந்தேகம்"

"சரி நான் பாத்துக்கறேன். நீயும் உடம்பைப் பாத்துக்கப்பா"

சலிப்பாக இருந்தது. எத்தனை கவலைகளைத்தான் தாங்குவேன்? ரம்யா வீட்டுக்கு போகவேண்டும் என்ற நினைப்பே பயமுறுத்தியது. இதில் தங்கை தம்பி பிரச்சினைகள்.

ஆனால், நம்பிக்கை இருக்கிறது. சிவப்பிரகாசமோ அல்லது மிச்சம் ரெண்டு பேரோ யாராவது கண்திறந்தால் எல்லாம் சரியாகிவிடும். கவலையைப் புறம் தள்ளினேன்.

"முத்து, கேண்டீன் வர்றயா?"

ஏசிக்காக அடைத்திருந்த கதவைத் திறந்தபிறகுதான் ஏதோ தீயும் வாசனை மூக்கை அடைந்தது. வெளியே சத்தமும் அமளியும். பெரிய ற வாகத்தான் தெரிந்தது. எதோ பிரச்சினை. ஓடிவிடலாமா என்ற யோசனை பூர்த்தி அடைவதற்குள் பத்து குண்டர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

"என் தலைவனையா கேவலப்படுத்தறீங்க?" என்று குண்டாந்தடியை ஓங்க,

நான் பார்த்த கடைசிக்காட்சி அதுதான்

கேண்டீன் போகும் வழியில் பெட்ரோல் கேனைப் பார்த்தேன். முத்துவும் பார்த்தான். சிரித்துக்கொண்டோம்.

”ஓக்கேதானே?” என்றேன்.

”பின்ன?”

பெட்ரோல் கேனை எடுத்து அவன் என் மேல் சாய்த்தான். நான் அவன்மேல்.

”நெருப்புப் பெட்டி இருக்கா?” மூன்றாமவன் தன் சட்டைப்பையில் இருந்து லைட்டரை எடுத்தான்.

தீ தீ தீ. ஜகஜோதி ஜோதி ஜோதி..

****

முன்னர் கேள்விப்பட்ட விஷயங்களின் படி எழுதிய சிறுகதை. கேள்விப்பட்டது எல்லாமே தவறு என்று நீதிமன்றமே சொன்னபிறகும் என் தவற்றைத் திருத்திக்கொள்ளாமல் இருப்பது அநியாயம்.



Nov 2, 2009

பினாத்தல் வரலாற்றில் முதல் முறையாக!

முதல் முறையாக அச்சில் ஒரு சிறுகதை.



என் கதை அச்சாகவேண்டும் என்று வெறியாய் நான் என்றும் செயல்பட்டதில்லை. பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதி, பலமைல்தூர அஞ்சலில் போட்டு மறந்து, ஆரம்ப ஆர்வங்கள் எல்லாம் காணாமல் போய், வரவில்லையா சரி என்று சமாதானப்படுத்திக்கொண்டதும் பலமுறை அல்ல - இரண்டோ மூன்றோதான் எழுதினேன்.

பின் வலைப்பதிவுக்கு வந்தபின் பதிவின் உடனடிப் பதிப்பும் அதைவிட உடனடி விமர்சனமும் அச்சிற்கான காத்திருத்தலை தேவையற்றதாக்கியது.

இருந்தாலும் உள்ளுக்குள் அந்த ஏக்கம் ஒரு மூலையில் தொக்கிக் கொண்டே இருந்தது.

அச்சுக்கு கதை அனுப்புவது என்பது வேறு ஒரு வகை. அதற்காகச் செய்யப்படவேண்டிய ஜிகினாக்கள் வேறு என்று சொல்லிக் கொடுத்து அதைச் சாத்தியப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி.

குங்குமம் 02-11-2009 தேதியிட்ட இதழில் “கைவண்ணம்” என்ற பெயரில் அச்சாகியுள்ளது. அதன் நகலை இங்கே குங்குமத்துக்கு நன்றியுடன் கொடுத்துள்ளேன்.

Oct 29, 2009

படுக்கை - சிறுகதை

படுக்கையில் கிடந்தான் கிழவன். எவ்வளவு நாள் ஆசைப்பட்டிருப்பேன் இவனை இப்படிப்பார்க்க.

”தேவா”

கவனிக்கவில்லை. அவனை இந்தப்பெயர் சொல்லி யாரும் அழைப்பதில்லை.

“தேவா.. கண்ணைத் திறந்து பாரு”

புரண்டு படுக்க முயற்சித்தான். குத்தல் வலியில் முகம் அஷ்டகோணல் ஆனது. இந்த நிலையில் இருப்பவனைப் பார்த்து மகிழ்ச்சி அடைவது தவறுதான். இருந்தாலும் என்னால் மகிழ்ச்சியை மறைக்கமுடியவில்லை.

“நீயா? இப்ப திருப்தியா இருக்கணுமே”

“திருப்தி? அதை நான் இழந்து பல ஜென்மம் ஆச்சு.”

“இன்னுமா உன் கோபம் அடங்கல?”

“அவ்வளவு சுலபமா? உன் வீரத்தை என்கிட்ட எத்தனை முறை காமிச்சிருக்கே? இப்பதானே நான் ஆட ஆரம்பிச்சிருக்கேன்!”

வலியிலும் கிழவனுக்கு சிரிப்பு வந்தது,

“நீயா? இப்ப ஆடறியா? நீ ஜெயிச்சிட்டதா நினைக்கிறயா?”

”தெரியும் தெரியும். இப்பவும் எதாச்சும் சொல்லுவே. இப்படி நீ படுக்கையா கிடக்கறதுக்கு நான் காரணம் இல்லன்னு சொல்லுவே”

”நீ நம்பமாட்டே. ஆனாலும் சொல்றேன். நீ இல்லை!”

அதே சிரிப்பு. பலவருடங்கள் முன்பு எரிச்சலை ஏற்படுத்திய அதே சிரிப்பு.

தேவா அப்போது மரத்தடியில் உட்கார்ந்திருந்தான். அப்போதும் என்னைப்பார்க்கையில் கிழவன் தான்.

நான் பயணத்தில் களைத்துப் போயிருந்தேன். ஏமாற்றங்களில் அடிபட்டிருந்தேன்.

”திரும்ப வந்துட்டியா? போன வேலை?” உண்மையான கனிவோடு கேட்பவன் போலவே கேட்டான்.

தலையை ஆட்டினேன். கண்ணீர் அவனுக்கு கதை சொல்லியிருக்கும்.

”என்ன பண்ணப்போறே?”

எச்சிலை விழுங்கிக்கொண்டேன். இவனிடம் எப்படிச் சொல்வது?

“நீங்க..” வார்த்தை திக்கியது.

“நான்?” தேவாவின் முகம் குழப்பமானது.

“நான் உங்களை..”

“என்னை?” வார்த்தைகளுக்கு இடையிலான இடைவெளி அவனைத் துன்புறுத்தியது போல.

“நீங்க என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறீங்களா” சொல்லியே விட்டேன். இந்தக் கிழவனைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொல்லும் அளவுக்கு விதி என்னைக் கொண்டு விட்டதை நினைத்து இலக்கில்லாத கோபம் வந்தது. விதியா? இவனா? இல்லை என் கோபத்தின் இலக்கு இவன் தான்.

உடனே பதில் வரவில்லை. என்னை ஏற இறங்கப் பார்த்தான். என் அழகு பருவத்தின் உச்சத்தில் இருந்த நேரம் அது. சம்மதித்து விடுவான். எங்கே போகிறான். கல்யாணம் மட்டும் ஆகட்டும். இவன் எனக்குச் செய்த கொடுமைக்கெல்லாம் அவனைப் பழி தீர்த்துக்கொள்ளலாம். வட்டியும் முதலுமாக.

இந்த வயதில் இவ்வளவு அழகான பெண் கிடைத்திருக்கிறாள். முதலில் அவன் கண்ணில் தெரிந்தது ஆசைதான். ஆனால் கொஞ்ச நேரம்தான். நடைமுறைச் சிக்கல்களை நினைத்திருப்பான் போல. ஆசை போய் ஏமாற்றம் வந்தது.

“என்ன பேத்தறே? உன் வயசென்ன என் வயசென்ன? இந்தக் கிழவனை ஆசையா படறே?” அவன் குரலில் அது உண்மையாக இருந்துவிடக்கூடாதா என்ற ஆசை இருந்தது.

“நான் பொய் சொல்ல விரும்பல. ஆனா எனக்கு வேற வழி இருக்கா?”

உண்மை சுட்டிருக்கவேண்டும். கோபமாக எழுந்தான்.

“உனக்கு வேற வழி இருக்கான்னு தெரியாது. எனக்கு வேற வழி இருக்கு. நீ எக்கேடு கெட்டுப்போனா எனக்கென்ன?”

ஒருவேளை பொய் சொல்லியிருந்தால் கிழவன் அன்றே மசிந்திருப்பானோ என்று பலமுறை பிறகு யோசித்திருக்கிறேன். எவ்வளவு சுலபமாக முடிந்திருக்கவேண்டிய பழிவாங்கல். எத்தனை வருடங்கள் இழுத்துவிட்டது. ஆனால்.. இன்றாவது முடிந்ததே. கிழவனை திருப்தியாகப் பார்த்தேன். முனகிக்கொண்டுதான் இருந்தான்.

“நான் அன்னிக்கே உன்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டிருப்பேன். ஆனா ரொம்ப சீக்கிரமா படுக்கையில விழுந்திருப்பேன். உன்னோட ஆசையும் அதுதான்னு எனக்கும் தெரியும்” தேவா ஒவ்வொரு வார்த்தை பேசும்போதும் வலி தெரிந்ததில் என் வெறி தணிந்தது.

“உன்னோட ஆசை மட்டும் இல்ல.. என்னோட ஆசையும் அதுதான். சொல்லப்போனா அன்னிக்கு உன்னை ஏன் வேண்டாம்னு சொன்னேன்னு என்னை நானே திட்டிக்காத நாளே கிடையாது.”

சாகும் நேரத்தில் பேசுகிறான். ஒருவேளை உண்மையாக இருக்குமோ?

“பாழாப்போன கௌரவர்கள், பாண்டவர்கள்.. அவங்க நல்லதை நினச்சு பிரம்மச்சரியம் பேசியே என் வாழ்க்கையை கெடுத்துகிட்டேன். உன் வாழ்க்கைய சர்வநாசம் செஞ்சிட்டேன். சால்வன் உன்னை திருப்பி அனுப்புவான்னு எதிர்பார்க்கவே இல்லை. அம்பா.. என்னை மன்னிச்சுடு..” அம்புகள் புரள ஆசைப்பட்டபோதெல்லாம் குத்தியதில் புதிதாக ரத்தம் பீரிட்டது.

“இப்ப என் பேர் அம்பா இல்லை. சிகண்டி” திரும்பினேன் நான்.
***

 

blogger templates | Make Money Online