May 31, 2006
தேன்கூடு - தமிழோவியம் போட்டி அறிவிப்பு (May-June 2006)
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 7 பின்னூட்டங்கள்
வகை பொது
May 30, 2006
Reservation குறித்து மூன்று கேள்விகள் (30 May06)
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 31 பின்னூட்டங்கள்
வகை உப்புமா
Reservation குறித்து மூன்று கேள்விகள்
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 5 பின்னூட்டங்கள்
வகை உப்புமா
May 26, 2006
நன்றி! (26 May 2006)
பொதுவாக என் மனசு தங்கம்..
ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்!
இணையத்தில், வலைப்பதிவுகளில் நான் கலந்து கொண்டதே மூன்று போட்டிகள்தான்.. அவை மூன்றிலும் (வெங்கட் நாராயணனின் 'நம்பிக்கை" கவிதைப்போட்டி, முகமூடியின் சிறுகதைப்போட்டி மற்றும் தேன்கூடு-தமிழோவியத்தின் தேர்தல்-2060 போட்டி) நானே முதல் பரிசு பெற்றிருப்பதை நினைத்தால்..
மன்னியுங்க.. அடங்குடா மவனேக்கு இன்னிக்கு லீவு:-))
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 44 பின்னூட்டங்கள்
May 25, 2006
மே 21, 1991 - இறுதிப்பாகம்
பாகம் 1, பாகம் 2, பாகம் 3
______________________________
இரண்டு நாட்கள் அப்படியே கழிந்தன. காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை ஏதெனும் சாப்பிடக்கொண்டு வந்துகொடுத்தான் சுபர்ணோ.
ஜன்னல் உடைந்த சம்பவத்திற்குப்பிறகு வேறு யாரும் வரவில்லை என்பதால் சற்று ஆசுவாசம் அடைந்து பத்திரிக்கைகளைப்படித்து கொலை பற்றிய முழு விவரங்களும் அறிந்தோம்.
(இங்கே ஒரு ஆச்சரியமான Coincidence: Negoitiator கதையில் பெல்ட்டில் குண்டு வைத்து அமெரிக்க அதிபர் மகன் இறந்த கட்டத்தைப் படித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் பெல்ட் குண்டினால் கொல்லப்பட்டார் ராஜீவ் என்ற தகவலை அறிந்தேன்!)
செய்தித்தாள்களில் கலவரம் பற்றிய பெரிய செய்திகள் எதுவும் இல்லை.
இரண்டு நாள் கழித்து, சுபர்ணோ சொன்னான்: "இனி தைரியமா வெளிய வரலாம், பிரச்சினை ஒன்றும் இனிமே வராது"
"ஏன், எப்படி ஆச்சு?"
"ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆளுங்க, தமிழர்களுக்கு ஆதரவா களம் இறங்கிட்டாங்க"
ஆறுதலாக இருந்தாலும் ஆச்சரியமாகவும் இருந்தது.
ஜா மு மோ பற்றி ஒரு சிறு குறிப்பு:
அன்றிருந்த பீஹாரின் கனிம வளங்களும், தொழிற்சாலைகளும் பெரும்பாலும் தெற்கு பீஹாரிலேயே இருந்தாலும், அதிகாரமையங்கள்(பாட்னா, சட்டசபை) , ஓட்டு வங்கிகள் ஆகியவை வடக்கில் மையம் கொண்டிருந்த காரணத்தால், வளர்ச்சிப்பணிகள், உள்கட்டுமானப்பணிகள் எல்லாம் வடக்கு பீஹாரில் பெரும்பான்மையாக நடந்தன. சோட்டாநாக்பூர் என்றும், ஜார்க்கண்ட் என்றும் அழைக்கப்பட்ட தெற்கு பீஹாரில் அரசாங்கத்தின் கடைக்கண் பார்வை விழவில்லை.
தனி மாநிலமாக தெற்கை ஆக்கினால் இந்நிலைக்கு விடிவு வரும் என்ற எண்ணத்தில், வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று கோஷமிட்டு தனி மாநிலம் கேட்டுப் பல போராட்டங்கள் நடத்தின சோட்டாநாக்பூர் பிராந்தியக்கட்சிகள். அதில் முக்கியமானது ஜா மு மோ.
பெரும்பாலும் மலைவாழ்மக்கள், ஒடுக்கப்பட்ட இனத்தவர்களைக்கொண்ட ஜா மு மோவில் படித்தவர்கள், அரசியல் அனுபவம் பெற்றவர்கள் மிகக்குறைவே. அவர்களின் போராட்ட முறைகள் வன்முறையின் அடித்தளத்திலேயே விளைந்தவை. மரங்களை வெட்டி சாலை மறியல், போலீஸ் நிலையத்தைக் கொளுத்துதல், அரசாங்க பஸ்களைக் கொளுத்துதல் போன்று அவர்களின் போராட்டங்கள் அனைத்துமே பொதுமக்களுக்குத் தொந்தரவாகவே முடிந்தன. அரசாங்கம் பெரிதும் கண்டுகொள்ளவில்லை - ஜா மு மோ - பிற்காலத்தில் தேசியக்கட்சிகளுடன் கூட்டணி கொள்ளும் வரை. பிறகே சமீபத்தில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.
இந்தப்பின்னணியில், வன்முறைக்கு எதிராக, கலவரத்துக்கு எதிராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆதரவு ஆச்சரியத்தை அளித்தது.
ஆனால், காங்கிரஸ் தொண்டர்களின் வெறியாட்டம் அடங்கிவிடும் என்பது நிச்சயம். இந்தப்பகுதியில் ஜார்க்கண்டை எதிர்க்கத் துணிய மாட்டார்கள்.
மூன்று நாட்களுக்குப்பின் சுதந்திர மூச்சு விட்டோம்.
அதற்குப்பிறகும் பல நாட்கள் நிம்மதியாகத் தூங்க விடாத பயங்கள், இரவு நேர திடுக்கிட்ட விழிப்புகள் - ஏன் இன்னும் கூட சில நேரங்களில் இந்த நினைவுகள் படுத்துகின்றன.
முத்தாய்ப்பாக, சில மாதங்கள் கழித்து கிருஷ்ணாவைச் சந்திக்க நேர்ந்தபோது அவன் சொன்னான்..
"தலைவர் இறந்த அன்று உன்னைத் தேடிக்கொண்டிருந்தேன்"
நான் பயந்தது நியாயம்தான் போலிருக்கிறது..
"உன்னை எங்காவது பாதுகாப்பான இடத்துக்கு ஓடச்சொல்லி எச்சரிக்கை செய்துவிடலாம் என்றுதான் தேடினேன்"
"அந்த ஜீப் விவகரத்திறகாக நீ என்னைக்கொல்லத் தான் தேடினாய் என்று பயந்திருந்தேன்" சொல்லியே விட்டேன்.
"என்ன பேச்சு பேசுகிறாய்? உனக்கும் எனக்கும் தகராறு இருந்திருக்கலாம் - ஆனால் தெரிந்தவனைப் போய் கொல்வேனா? உனக்கு எந்தப் பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்றுதான் நினைத்தேன்"
மனித மனங்களைப் புரிந்து கொள்வது சாத்தியமற்றது என நினைத்தாலும் அவன் சொன்னதை நம்பினேன்.
தமிழர்களையெல்லாம் ஒழிக்க வேண்டும் என பத்து நிமிடம் முன் சொன்ன சுபர்ணோ என்னைக் காப்பாற்ற பெரிய அளவில் ரிஸ்க் எடுத்தான். கலவரம் ஏற்படுத்திப் பெயர் வாங்க நினைத்த அரசியல்வாதியும் தெரிந்தவர்களுக்கு ஆபத்து வரக்கூடாது என்று நினைத்திருக்கிறான்.
"இது என்ன மேட்டர்? ஒரு மூணு நாள் வீட்டுக்குள்ளே கிடந்தே, ஒரு அடியும் படாமதானே பொழைச்சே, இதைப்போய் நாலு பாகமா எழுதறியே" என்றும் இதைப்படிக்கும் சிலர் நினைக்கலாம். ஆனால் என் பயம் சத்தியம். பிழைத்ததால் மட்டும் நானும் பலியாவதற்கு இருந்த சாத்தியக்கூறுகள் இல்லாமல் போய்விட்டன என்று சொல்ல முடியாது.
அன்று எனக்கு 21 வயது. அதற்கு முன்பான 21 வருடங்கள் தராத அனுபவங்களையும், புரிதல்களையும் அந்தச்சம்பவம் தந்தது.
குஜராத்தில் துரத்தப்பட்ட முஸ்லீம்களையும், கல்கத்தாவில் கொல்லப்பட்ட இந்துக்களையும், ஹோசூருக்கு விரட்டப்பட்ட தமிழர்களையும், அதிரடிப்படையால் அச்சுறுத்தப்பட்ட மலைவாசிகளையும் - அவர்களின் துன்பங்களையும், வலியையும் புரிந்துகொள்ளும் மனப்பான்மையை என் முதல் 21 வருடங்கள் தந்திருக்கவில்லை.
எந்தப்பிரச்சினைக்கும் காரணம் ஒரு இனம், அவர்கள் ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற சிந்தனை என் மனத்தில் ஏறாததற்கு இந்த அனுபவங்கள் ஒரு முக்கியக்காரணம்.
என் பாட்டி தைரியமாக பாம்பும் பல்லியும் பேய்க்கதைகளும் உலாவும் இடத்துக்கு வெளிச்சம் இல்லாமல் போவதைப்பற்றிக் கேட்டபோது அவள் சொன்ன "பேய் பத்தி பயம் ஒன்னும் இல்ல, மனுசப்பேய்ங்களைப்பத்திதான் பயப்படணும்" என்று சொன்னதன் முழு அர்த்தமும் விளங்கியதும் இதனால்தான்.
என் விடலைத்தனம் விடைபெற்றதும் இந்தத் தருணத்தில்தான்.
படித்த அனைவருக்கும் நன்றி. கருத்துக்களைக் கூறுங்கள்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 20 பின்னூட்டங்கள்
வகை அனுபவம்
May 24, 2006
மே 21, 1991 - 3
முதல் பாகம் இங்கே:
இரண்டாம் பாகம் இங்கே:
படித்துவிட்டு வாருங்கள், மூன்றாம் பாகத்தை இங்கே படிக்க.
_____________________________________
எரிகின்ற குடிசையைப்பார்த்ததும் பயம் இன்னும் அதிகமானது இருவருக்கும். ஐந்து நிமிடம் அங்கேயே நின்றதில் வேறு யாரும் ஆட்கள் நடமாட்டம் கண்ணில் படவில்லை என்பது சற்றுத் தைரியத்தைக் கொடுத்தது.
"போய்ப்பாத்துடலாம?" என்றேன்.
"நீ இங்கேயே இரு. நான் போய்ப்பாக்கறேன், எவனாவது இருந்தாலும் என்னை ஒண்ணும் பண்ண மாட்டாங்க."
நான் அதை நம்பவில்லை. இவன் என்னுடன் சுற்றுவதை எல்லாரும் பார்த்திருக்கிறார்கள். நான் எங்கே என்ற கேள்வியை கிருஷ்ணா இவனைக் கொஞ்சிக்கேட்கப்போவதில்லை.தமிழனாகப் பிறந்ததற்காக நான் பயப்படுவது நியாயம்.. இந்தப் பெங்காலிக்கு என்ன வந்தது? எந்தச் சமூகத்திலும் எல்லாரும் குற்றவாளிகள் இல்லை. நிச்சயமாக எனக்காக இவன் எடுக்கும் ரிஸ்க் அதிகம்.
இருந்தாலும் எனக்கும் வேறு வழி தெரியவில்லை.
அவன் மெதுவாக குடிசை வரை போனான். இரண்டே நிமிடத்தில் திரும்பினான். "சீக்கிரம் இங்கே ஓடிவா"
ஓடினேன்.
"கிருஷ்ணா கும்பல் வரவில்லையாம்.. வேற யாரோ லோக்கல் கும்பல்தான் வந்திருக்காங்க. சும்மா பொழுது போகாம இந்தக்குடிசைய கொளுத்திப்போட்டிருக்கானுங்க"
அவர்க்ள் இன்னும் வரவில்லை என்றால் எப்போதும் வரலாம். காட்டுக்குள் சென்று விடலாமா? எவ்வளவு நேரம் காட்டில் இருக்க முடியும்?
"அதே ஐடியாதான் சொல்றேன். நீயும் ரூமுக்குள்ளே போய் இரு. நான் வெளியே பூட்டிடறேன். ரெண்டு பேரும் ஒண்ணா இருங்க (அருண் ஏற்கனவே உள்ளே இருக்கிறான்). கொஞ்சம் நிலைமை சரியான உடனே வெளியே வரலாம். நானும் எங்கேயாவது போயிடறேன்."
வேறு எதுவும் தோன்றவில்லை.
ரூம் கதவை பாக்கெட்டிலிருந்து சாவி எடுத்துத் திறந்தான்.
உள்ளே கோழிக்குஞ்சு மாதிரி கட்டிலுக்கு அருகில் கலங்கிப்போய் உட்கார்ந்திருந்தான் அருண். சந்தர்ப்பம் தெரியாமல் எனக்கு சிரிப்பு வந்தது.
"சத்தம் வராம உள்ளேயே இருங்க - நான் அப்புறமா வரேன்." என்று கிளம்பினான் சுபர்ணோ. "சாவிய நீங்களே வெச்சுக்கோங்க, நான் கதவித் தட்டினா அடி வழியா சாவியத் தள்ளிவிடுங்க, நான் திறக்கிறேன்" கிளம்பும் முன், கையிலிருந்த சார்ம்ஸ் சிகரெட் பாக்கெட்டை என்சட்டையில் சொருகிவிட்டுத்தான் சென்றான். (என் பிராண்ட் இல்லைதான்). சுபர்ணோ மேல் பெரிய மரியாதை வந்தது.
"என்ன ஆச்சு எதாவது விவரம் தெரியுமா சுரேஷ்" அருண் நான் வந்தபிறகு இப்போதுதான் முதல் முறையாகப் பேசுகிறான்.
எனக்கே ஒன்றும் விவரம் தெரியாதே. "ராஜீவ் காந்திய கொன்னுட்டாங்களாம். ஸ்ரீபெரும்புதூர்ல மீட்டிங் பேசும்போது குண்டு எதோ வெடிச்சுதாம்."
"சரி அதுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்?"
"டெல்லியில இருந்த எல்லா சர்தாருமா இந்திரா காந்தியக்கொன்னாங்க? இதெல்லாம் நம்ம நாட்டு சாபக்கேடு"
"நம்ம ஊர்லே இது மாதிரியெல்லாம் எதுவுமே நடக்காதே"
"அது தவிர, இங்கே லோக்கல் காங்கிரஸ் ஆளுங்களுக்கெல்லாம், தலைவன் மேல உள்ள விசுவாசத்தக் காமிக்க இது ஒரு சுலபமான வழி. பீஹார்லே அரசியல்லே பெரிய ஆளுங்க எல்லாம், என்ன என்ன கலவரம் செஞ்சிருக்காங்கன்றதுதான் குவாலிபிகேஷன்! அவனுக்கு சொந்தப்பகை உள்ளவனுங்களை எல்லாம் போட்டுத்தள்ளவும் ஒரு சான்ஸு."
"போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி உள்ள இருந்துடலாமா? அது ஸேபா இருக்குமா?"
"போலீஸ் ஸ்டேஷன்லதான் கலவரம் எதா இருந்தாலும் ஆரம்பிக்கும். எல்லா போலீஸ்காரனும் வீட்டுக்குள்ளே இருப்பான்."
"எப்பதாங்க அடங்கும்?"
எனக்குப் புரியவில்லை. இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. வயிறு பசிக்க ஆரம்பித்துவிட்டது. வெளியே சென்றால்தான் சோறு. வெளியே சென்றால் ராஜீவ் காந்தியுடன் பேசத்தான் வாய்ப்பு கிடைக்கும்.
"சரி அமைதியா இரு. ஏதாவது புஸ்தகத்தைப்படி. சத்தம் வந்தா சந்தேகம் வரும்."
எந்தப்பொழுதுபோக்குச் சாதனமும் இல்லாமல், செய்ய வேலை எதுவும் இல்லாமல், காதை அடைக்கும் பசியுடன், சத்தம் போட முடியாமல் இரண்டு மணி நேரம் கடந்தது. எதை எதிர்பார்க்கிறேன் என்றே தெரியாமல், எதாவது நடந்து முடிந்தால்தான் இந்த நிலைமையிலிருந்து மாற்றம் வரும் என்பதால் கலவரக் கும்பல் வந்து போனாலே தேவலாம் என்றெல்லாம் ஓடுகிறது நினைப்பு.
ஐந்து மணிநேரம் அப்படியே கழிந்தது. தூக்கமா, பயம், பசியெல்லாம் கலந்த மயக்கமா என்று தெரியாமல் கழிந்த நேரம்.
கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. புலன்கள் விழித்தன.
"நான் தான் சுபர்ணோ.. சாவி கொடு"
ஒரு பிரெட் பாக்கெட்டை அவ்வளவு காதலுடன் அதற்கு முன்பு நான் பார்த்ததில்லை.
"என்ன நடக்குது வெளியில?" என்றேன், வயிற்றின் குமுறல் தணிந்தபின்.
"இவங்க ஜரண்டியிலே ரெண்டு மூணு குடிசைய எரிச்சானுங்களாம். இந்தப்பக்கம்வர மறந்துட்டாங்க போலிருக்கு. ராஞ்சியில மெட்ராஸ் ரெஸ்டாரண்ட்ட எரிச்சிட்டாங்களாம், எப்படியும் ஒரு ஏழெட்டு உயிர் போயிருக்கும்"
ஒரு விசித்திரமான ஆறுதல் ஏற்பட்டது. 400 - 500 என்றெல்லாமல் போகாததில் கலவரம் கட்டுக்குள்தான் இருக்கிறது என்று.
"சரி நான் கிளம்பறேன். முடிஞ்சா ராத்திரி வரேன். வராட்டி கோபிச்சுக்காதே"
கோபமா? இவன் மேலா?
வெளியே சென்று கதவைப்பூட்டி சாவியை உள்ளே தள்ளினான்.
அவன் வெளியே சென்று ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். நான் எதிர்பார்த்திருந்த - பயந்திருந்த சப்தம் கேட்டது.
"எவனாச்சும் தமிழாளுங்க இங்கே இருக்காங்களாடா"
கண்ணாடிகள் உடையும் சப்தம். எதோ மேஜையை உருட்டி இருக்கிறார்கள்.
செக்யூரிட்டியின் குரல் கேட்டது. "எஜமானுங்களா.. இங்கே யாருமே இல்லீங்களே.. காலையிலே எல்லாரும் ஊருக்கு ஓடிட்டானுங்க"
எல்லா ரூம்களின் கதவையும் பளீர் பளிரென்று உதைக்கும் சப்தமும் கேட்டது.
அருணிடம் மிக மெல்லிய குரலில், "கட்டிலுக்குக் கீழே போ
- அந்தக்கம்பளியை மேலே இருந்து போட்டு மறை"
ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. என் கையருகில் கல் வந்து விழுந்தது.
மூச்சு விடக்கூட மறந்திருந்தோம்.
பத்து நிமிடமா, பத்து யுகமா எனத்தெரியாத நேரம்..
சப்தங்கள் கொஞ்சம் குறைந்தன.
தொடர்ச்சியான அமைதி நிலவியும் வெளியே வரத் தோன்றவில்லை. வியர்வை மூக்கை நனைத்தது.
செக்யூரிட்டி கதவைத் தட்டினான் "சாப் ஓ லோக் சலே கயே (அவர்கள் போய் விட்டார்கள்)"
கொஞ்சம் நிம்மதியுடன் வெளியே வந்தோம்.
அருண் எதுவும் பேசாமல் துடைப்பத்தை எடுத்து கண்ணாடிச்சில்லுகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.
கண்ணாடி இல்லாத ஜன்னல் ஆபத்து. வெளியிலிருந்து எல்லாம் தெரியும். எதாவது பழைய பேப்பர் எடுத்து ஒட்டலாம்..
எடுத்த பேப்பரில் அழகாக்ச் சிரித்துக்கொண்டிருந்தார் ராஜீவ் காந்தி.
_______________________________
--நாளை கடைசிப்பாகம்--
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 3 பின்னூட்டங்கள்
வகை அனுபவம்
ஹய்யா, என் பேரு மதுமிதா புத்தகத்துல வரப்போவுதே (24 May06)
வலைப்பதிவர் பெயர்: பினாத்தல் சுரேஷ்
வலைப்பூ பெயர் : பினாத்தல்கள்
உர்ல் : http://penathal.blogspot.com
ஊர்: ஷார்ஜா
நாடு: ஐக்கிய அரபு அமீரகம்
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: சுயம்பு. வலையில் தடுமாறி, தடம் மாறி இடம் தேடி இன்னும் அலைகிறேன்.
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : அக்டோபர் 15, 2004
இது எத்தனையாவது பதிவு:150ஐத் தாண்டிக்கொண்டிருக்கிறது
இப்பதிவின் உர்ல்: http://penathal.blogspot.com/2006/05/24-may06.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என் எண்ணங்களை வெளியிட, என் திறமை(?1)யைப் பறைசாற்ற.
சந்தித்த அனுபவங்கள்: நிறைய!
பெற்ற நண்பர்கள்: நிறைய!
கற்றவை: பல இருந்தாலும், முக்கியமான ஒன்று மட்டும்: நான் அப்ப்டி ஒன்றும் பெரிய முட்டாளில்லை, புத்திசாலியாய் நினைத்தவர்கள் எந்நேரமும் புத்திசாலியும் இல்லை.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: வானளவு இருந்தாலும், அடுத்த ஆளுக்கும் அந்த வானத்தில் இட உரிமை இருப்பதை மதிக்கிறேன்.
இனி செய்ய நினைப்பவை: தொடர்வேன் என் பினாத்தலை.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: தமிழ்மணம் நட்சத்திரத்துக்காக எழுதியது இங்கே:
பெயர் இரா.சுரேஷ் பாபு
வயது பத்திலிருந்து ஐம்பது வரை - இடத்துக்கு ஏற்றவாறு மாறும்.
தொழில் கனரக வாகனங்கள் சார்ந்த பொறியியல் - உபயோகிப்போருக்கும் பராமரிப்போருக்கும் அவற்றின் தொழில்நுட்பம் பற்றி விளக்கும் ஆசிரியர்.
வலைப்பதிவு பினாத்தல்கள
அனுபவச் சிதறல்கள் என எழுத ஆசைதான் - ஆனால் அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே!
ஏன் வலைப்பதிகிறேன்? எனக்குப் பெரியதாக எந்தக் கொள்கையும் கிடையாது - அப்படியே இருந்தாலும் அவற்றோடு காதலும் கிடையாது.
அனுபவஸ்தர்கள் லாஜிக்கோடு கூறினால் எதையும் ஏற்றுக்கொள்வேன் - இதனாலேயே கேட்டுக்கொள்வதில் என் தகுதி அதிகமாகி, நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை. என் கருத்துக்களை நான் எங்கேதான் கொண்டு கொட்டுவது?
இலக்கற்று வலை மேய்ந்த காலத்தில் ஏதொ ஒரு கீவேர்ட் (தெய்வ சித்தம்?) என்னை காசியின்"என் கோடு உன்கோடு யூனி கோடு" தொடருக்குள் கொண்டு சேர்த்தது.. தமிழில் எழுதுவது அவ்வளவு கஷ்டம் இல்லை என அத்தொடர் உணர வைக்க..மற்றவை வரலாறு..(இப்படி பெரிய எழுத்தாளர்கள் மட்டும்தான் பீலா விடலாமா என்ன?)
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 3 பின்னூட்டங்கள்
வகை பொது
May 23, 2006
மே 21 1991 - 2
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 6 பின்னூட்டங்கள்
வகை அனுபவம்
May 22, 2006
மே 21, 1991 - 1
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 2 பின்னூட்டங்கள்
வகை அனுபவம்
May 9, 2006
தேர்தல் 2060 - சிறுகதை
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 22 பின்னூட்டங்கள்
May 8, 2006
என்ன சொல்லப்போகிறது தேர்தல் முடிவுகள்? (08 May 06)
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 16 பின்னூட்டங்கள்
வகை அரசியல்
May 7, 2006
தேர் நிலைக்கு வரட்டும் (07May06)
சட்டங்கள் செய்ததும்
விடியும் பொழுது.
கிளம்பும் பரபரப்பில்
சற்று ஓய்வு.
வெற்றியை எட்டியவனுடன்
எதிர்ப்பவனின் தோல்வியைப்
பேசி நடப்போம் வேலைக்கு.
யதார்த்தத்தின் பரிச்சயம் சற்று
வேலை நேரத்தில்.
நோபல் எழுத்தாளனும்
நோபாலில் சிக்ஸ் அடித்த பேட்ஸ்மேனும்
உடன்வரத் திரும்புவோம்.
அறைக்கதவடியில்
செய்தித்தாள்
என் சாதனைகளை
சாதித்தவனைப்பாராட்டும்.
நனவை மறக்க
மீண்டும் இரண்டாம் உலகில்
நான்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 5 பின்னூட்டங்கள்
வகை அரசியல்
May 6, 2006
மு க ஸ்டாலின் அதிமுகவில் இணைந்தார் (06May06)
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 16 பின்னூட்டங்கள்
வகை அரசியல்
May 3, 2006
நானும் கவிப்பகைவனும் மற்றும் முத்துவின் நாயும்
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 21 பின்னூட்டங்கள்
May 1, 2006
குழப்பமும் உரத்த சிந்தனையும் -1 (01 May 06)
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 10 பின்னூட்டங்கள்
வகை அரசியல்