கதை கவிதை என அனைத்து இலக்கிய வடிவங்களையும் முயன்று பார்த்துவிட்ட பினாத்தல், சரித்திரத்தை மட்டும் விட்டுவிடத் தயாராக இல்லை.
பாண்டுச்சோழன்
முன்னொருகாலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியில் பாண்டுச்சோழன் என்னும் மகாராஜா ஆண்டுவந்தார். இவருக்கு வலைகொண்டான், பன்மொழிப்புலவர், அனுபவ வித்தகர் என்ற பல பெருமைகளும் உண்டு. களம் பல கண்டு வெற்றிகண்ட இவர், வலையூரிலும் தன் கொடியை நாட்டிட முனைந்தார்.
இதே காலத்தில் சோழர்களின் ஆட்சி முறை பற்றி பலரும் விமர்சித்து வந்திருந்தனர். அவ்வாறு விமர்சித்தவர்களுள் ஒருவர் கீர்த்திவாசன். நேசநாட்டுக்கவிஞர் ஒருவர் பல்வேறு கலைஞர்களைப் பற்றிப் பாடிய பாடலில் கீர்த்திவாசன் ஒரு குறை கண்டார். பல்வேறு கலைஞர்களைப் பற்றிய பாடலாயினும், அனைத்தும் சோழர்களைப் பற்றியதாகவே உள்ளதே என்றார்.
இவ்வமயம் ஆங்கே வருகை புரிந்த பாண்டுச்சோழன், சோழர்களைப் பற்றிக் கூறியதில் தவறொன்றுமில்லை என வாதிட்டார். அப்போது கீர்த்திவாசனும் வெகுண்டு, நீர் எப்படிப்பட்ட சோழன் என்றும் பாண்டுச்சோழனைக்கேட்கத் தலைப்பட்டார். சோழர்கள் என்று இல்லை, எந்த மன்னருமே தன் வம்சத்தைப் பற்றிப் பெருமை கொள்ளல் ஆகாது என்றும் வாதிட்டார்.
வெளிப்படைக்கல்வெட்டுக்கள்
இதனால் மனக்காயம் அடைந்த பாண்டுச்சோழன், தன் வெளிப்படையான எண்ணங்களை கல்வெட்டாகப் பதிந்துவைத்தார். சோழர் அல்லாதவர்களுக்கும் சோழர்களுக்கும் உள்ள பிரிவினை இவர் அதிகப்படுத்திவிட்டார் எனக்கூறுவோரும் உண்டு.
மன்னர்கள் மீதும், குறிப்பாகச் சோழர்கள் மீதும் கோபம் அடைந்திருந்த கீர்த்திவாசன், இக்கல்வெட்டுக்கு எதிராக போர் புரிந்தார்.
மாறுவேடச் சோழன்
இந்நிலையில், மாறுவேடச் சோழன் என்று ஒருவன் முளைத்தான். இச்சரித்திர ஆசிரியருக்கு மாறுவேடச் சோழனின் பூர்வாசிரமத்தைப் பற்றிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
இம்மாறுவேடச்சோழன், நட்பு நாட்டரசர்களிடம் சென்று சோழன் கூறியதாக இல்லாததையும் பொல்லாததையும் கூற, முதலில் அவர்களில் சிலரும் நம்பத் தலைப்பட்டனர். சோழன் கூறியதாக எண்ணி பல சிறு போர்களும் நடைபெற்றன.
முத்திரை மோதிரம்
இதனால் பாதிக்கப்பட்ட பாண்டுச்சோழன், முத்திரை மோதிரம் இல்லாதவர்களை அரசியல் பேச்சுவார்த்தைக்கு அனுமதியாதீர் என்று அனைத்து அரசர்களுக்கும் அறைகூவல் விடுத்தார். பெரும்பான்மையான அரசர்கள், பாண்டுவின் நேர்மையான கோரிக்கைக்கு செவி சாய்த்தனர்.
மாறுவேடச்சோழன் சளைத்தவன் இல்லை. இவனும் பல போலி முத்திரை மோதிரங்களை உருவாக்கி, தன் அவதூற்றுப் பிரசாரத்தை நடத்தத் துவங்கினான்.
பெரும்பான்மையான அரசர்களுக்கு, உண்மையான பாண்டுச்சோழனுக்கும், மாறுவேடச்சோழனுக்கும் வித்தியாசம் தெரிந்துவிட, மாறுவேடச் சோழன் செல்லும் இடத்தில் எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டனர்.
மாறுவேடச்சோழன் அவதூறு
இதனால் வெகுண்ட மாறுவேடச்சோழன், தன்னை அலட்சியப்படுத்தியவர்கள் பெயரிலும் அவதூற்றைத் துவங்கினான். சில அரசர்கள் மாறுவேடச்சோழனைக் கையும் களவுமாகப் பிடித்தனர் என்ற ஒரு வரலாறும் உலவுகிறது. சிலர் அவதூற்றினால் பாதிக்கப் பட்டு ஆட்சியைவிட்டு சிறிது காலத்துக்கு சன்யாசமும் கொண்டனர்.
புலிக்குட்டிச் சோதனை
பாண்டுச்சோழனும், மேலும் எச்சரிக்கை கொள்ளத் துவங்கினார். புலிக்குட்டிச் சோதனையை அறிமுகப்படுத்தினார். மாறுவேடச் சோழன் மீது புலிக்குட்டியை ஏவினால், அவன் மாறுவேடமா அல்லது மெய்யான சோழனா என்று தெரிந்துவிடும் என்பதே அந்தச் சோதனை. பாண்டு செல்லும் இடமெல்லாம் தன் புலிக்குட்டியுடனே செல்லத் துவங்கினார்.
இரண்டாம் கல்வெட்டூர்
அதுமட்டும் இன்றி வேறு மன்னர்களுடன் பேசும் வார்த்தைகளையெல்லாம் கல்வெட்டாக மாற்ற ஒரு தனி ஊரையும் துவங்கினார். இந்த ஊர் மற்ற ஊர்களின் எல்லையில் இருந்ததால், மற்ற நாட்டரசர்களின் முக்கியமான கல்வெட்டுக்களையும் இந்த இரண்டாம் கல்வெட்டூர் ,மறைத்தது என்று ஒரு குற்றச்சாட்டு உலவியது.
இதனிடையில் மாறுவேடச்சோழனின் ஆட்டம், புதிய மன்னர்களின் நாட்டில் அதிகமாகியது. புலிக்குட்டிச் சோதனை, இரண்டாம் கல்வெட்டூர் பற்றி அறியாத புதிய மன்னர்கள் சிலர், மாறுவேடச்சோழனின் சதியில் சிக்கி, பாண்டுச்சோழன் மீதும், மாறுவேடச்சோழனின் பிற எதிரிகள் மீதும் சந்தேகம் கொண்டனர். அது உடனேயே தெளிவாகிவிட்டது என்றாலும், பாண்டுச்சோழனுக்கு கோபம் அதிகமாகிவிட்டது.
எல்லைப் பாதுகாப்புப் படை
இதற்கிடையில், எல்லா நாட்டு அரசாங்கங்களுக்கும் பொதுவாக எல்லைப் பாதுகாப்புப் படை ஒன்று துவங்கப்பட்டது. இதன்படி, நாட்டிற்கு வரும் அனைத்து விருந்தினர்களும், எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு, கடவுச்சீட்டு, புலிக்குட்டிச் சோதனை செய்யப்பட்ட பிறகே அவர்களை நாட்டிற்குள் அனுமதிக்கும்படிச் செய்ய இயலும்.
எல்லைப் பாதுகாப்பை சில நாட்டரசர்கள் விரும்பி ஏற்றனர். மாறுவேடம் தரித்தவர்கள், வெள்ளையர் ஊடுறுவல் ஆகியவற்றைத் திறம்படத் தடுக்க இயலும் என்றாலும், வேறு சில நாட்டரசர்களுக்கு இம்முறை ஒத்துவரவில்லை. எல்லைப்பாதுகாப்பிற்காகச் செலவிடவேண்டிய செலவு, நேரம் ஆகியவை மட்டுமின்றி, வந்தாரை வாழவைக்கும் தம் நாட்டின் மரபும் குலைந்துவிடும் என்பது அவர்கள் குற்றச்சாட்டு.
இந்நிலையில் கீர்த்திவாசன், பன்னாட்டுக் கூட்டமைப்பிலிருந்து விலக்கிவைக்கப்பட, மாறுவேடச் சோழன் பன்னாட்டுக்கூட்டமைப்பின் தலைவர்கள் பெயரிலும் ஓலை கொண்டு சென்று அவதூறு செய்ய்த் துவங்கினான்
பன்னாட்டுக் கூட்டமைப்பின் சட்டங்கள்
பல்வேறு அழையா விருந்தாளிகளின் அவதூற்றுப் பிரசாரங்களினாலும், வெள்ளையர் ஊடுறுவலினால் முக்கியக்கல்வெட்டுக்கள் மறைந்ததாலும், மாறுவேடங்களின் குறிப்பிட்ட தாக்குதலினாலும், பன்னாட்டுக் கூட்டமைப்பின் சட்டங்கள் திருத்தப் பட்டன. எல்லைப் பாதுகாப்புப் படை செயல்படாத நாடுகளின் புதிய சீர்திருத்தங்கள் பன்னாட்டுக் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப் படாது என முடிவெடுக்கப்பட்டது.
பன்னாட்டுக் கூட்டமைப்புக்கு நன்றி தெரிவித்த பாண்டுச்சோழன், இம்முடிவைத் தன் வெற்றியாகக் காட்ட முனைந்தார் என்று கூருவோரும் உண்டு. மற்ற நாட்டரசர்கள் பாண்டுவின் கேள்வி மழை பொழிந்தனர். முத்திரை மோதிரம், புலிக்குட்டிச் சோதனை, எல்லைப்பாதுகாப்புப் படை, இரண்டாம் கல்வெட்டூர் எனப் பல பாதுகாப்புகளும் செய்துகொண்டுவிட்ட பாண்டுச் சோழனை விட, மாறுவேடச் சோழனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்ற நாட்டரசர்களே ஆவர். போரில் பங்கு கொள்ள முடியாத நிலையில் மாறுவேடச் சோழன் இருந்த நிலையிலும், தன் பல அறைகூவல்களினால் மாறுவேடச்சோழனைப் போருக்குத் தூண்டியதும் இவர்தான் என்றும் பலர் கூறியதாக வரலாறு.
போர் முடிவு
வரலாற்றின் எந்த ஆவணங்களிலும், பாண்டுச்சோழன் விடுத்த போர் யாது, அதில் வெற்றி பெற்றவர் யார் என்ற தகவல்கள் காணப்பெறவில்லை.
முடிவுரை
இந்த வரலாற்றைப் படித்தவர்கள், இதில் பினாத்தலுக்கு மேல் வேறு எந்த அர்த்தமும் கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
Feb 5, 2006
பாண்டுச்சோழன் சரித்திரம் - 04 Feb 06
Subscribe to:
Post Comments (Atom)
34 பின்னூட்டங்கள்:
ஹாஹாஹா.
சிரித்து முடித்து வயிறு வலி நின்றபின் விரிவாக எழுதுகிறேன்.
ஆரம்பிச்சிட்டாய்யா ஆரம்பிச்சிட்டான் இது எங்க போய் முடியுமோ :-))))))
//இந்த வரலாற்றைப் படித்தவர்கள், இதில் பினாத்தலுக்கு மேல் வேறு எந்த அர்த்தமும் கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
//
அறிவுரை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வரலாற்றிற்கு நன்றி. வரலாறு.காம் இற்கு அனுப்பி கவிதாவித்தகர், சிறுகதைச் செம்மல், எளக்கியவாதி ஆகிய பட்டங்களுடன் சேர்த்து வரலாற்றுத் திலகம் பட்டத்தையும் பெற்றுவிடலாமே.
அப்பு நல்ல பினாத்தல் அப்பு ;)
பினாத்தராயரின் இந்த ஓலைச்சுவடிகளைக் கண்டுபிடித்துக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி சுரேஷ்.
முந்தி நான் இப்பிடித்தான் எழுதிக்கிட்டு இருந்தேன். மாரப்பன் அரசகுமாரைக் கடத்திய கதையெல்லாம் இப்பிடி எழுதுனேன்.
ஒரு சின்ன சாம்பிள். ஏதாவது புரியுதான்னு பாருங்க.
=====================================
செந்நாட்டை அன்புச்செல்வர் என்ற மன்னர் நீண்ட நெடுங்காலமாக ஆட்சி செய்து வருகிறார். அந்த மன்னர் சிலப்பதிகாரம் என்னும் தெய்வத் தமிழ் மொழி இலக்கியம் யாத்த சேர அடிகளான இளங்கோவின்பால் மிகுந்த ஈடுபாடு மிக்கவர். அதனால் தனது இளைய மகனே தனக்குப் பிறகு பட்டத்திற்கு வரவேண்டுமென்று விரும்பி அந்த மகன் மாயனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினார். அவனுக்குத் தலைநகர் பாதுகாப்புப் பொறுப்பும் கொடுத்தார். மாயனும் நகரத்தையும் நகர மக்களையும் தந்தைபோல் பார்த்து வரலானான்.
கருநாட்டை யாதவன் என்ற மன்னன் இப்போது ஆண்டு வருகிறான். செந்நாட்டைப் போல் பரம்பரை ஆட்சியுமில்லாமல் மக்களாட்சியுமில்லாமல் போட்டி ஆட்சி நடந்து வருகிறது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஊர் நடுவே குத்துச் சண்டைப் போட்டி வைத்து அதில் வெற்றியடைகின்றவரையே மன்னராக ஏற்றுக்கொண்டனர் கருநாட்டு மக்கள். இரண்டு ஆண்டுகள் முடியும் முன்னர் யாரும் போட்டிக்கு அழைத்தால் மன்னர் அதில் கலந்துகொண்டு வெற்றி பெறவேண்டும். இல்லையேல் போட்டிக்கு அழைத்தவர் மன்னராகி விடுவார்.
இரண்டு நாட்டு மக்களும் ஆடல் பாடல்களில் ஈடுபாடு கொண்டிருந்தார்கள். முக்கியமாக செந்நாட்டில் அவர்கள் ஆடாமல் வேற்று நாட்டவரை அழைத்து வந்து ஆட வைப்பார்கள். சிறப்பாக ஆடினால் கோவில் கட்டி பொங்கல் வைக்கும் வழக்கம் செந்நாட்டு மக்களிடையே இருந்து வருகிறது. சிறப்பாக ஆடுகின்றவர் தலைமையில் கூட்டமாகக் கூடி திருமணம் செய்துகொள்ளும் முறையும் அங்கு உண்டு. தங்கள் கவலைகளை மறக்கவைக்கும் ஆட்டக்காரர்களை தங்கள் துன்பம் துடைக்கும் கடவுளாகவே எண்ணுகின்றனர் செந்நாடர். கருநாட்டில் ஆடற்கலை சிறப்பாக இல்லை என்றாலும் அவர்களுக்குத் தக்கவாறு ஆடிக்கொண்டனர். செந்நாட்டு ஆடல் பார்க்கும் வழக்கமும் ஆரியக் கூத்து பார்க்கும் வழக்கமும் கருநாட்டினருக்கு உண்டு. இதில் மற்றொரு சிறப்பு உண்டு. கருநாட்டில் ஆடற்கலை சிறப்பாக இல்லையென்றாலும் செந்நாட்டில் சிறந்து விளங்கும் ஆடற்கலைஞர்கள் பெரும்பாலும் கருநாட்டிலிருந்து வந்தவர்களாகவே உள்ளனர். அப்படி வந்தவர்களில் மக்கள் செல்வாக்கோடு மன்னரானவர்களும் ஆக விரும்புகின்றவர்களும் உண்டு.
=====================================
இன்னும் கொஞ்சமே கொஞ்சம்.
=====================================
மாரப்பனும் யாரும் அறியாவண்ணம் தன் குழந்தைகளை வந்து வந்து பார்த்து வரலானன். இந்த விவரம் அறிந்த படைவீரர்கள் கண்டகண்ட நேரத்திலெல்லாம் ஊருக்குள் புகுந்து மாரப்பனைத் தேடுவதாகக் கூறி ஊராக்கு ஊறு விளைவிக்கலானர்கள். அது பொறுக்காத ஊரில் உள்ள இளைஞர்கள் சிலர் காட்டிற்குச் சென்று மாரப்பனுடன் சேர்ந்து கொண்டனர்.
காட்டிற்குச் சென்ற வீரர்கள் வழி தவறி மாண்டனர். அல்லது மாரப்பனிடம் சிக்கி உயிரை விட்டனர். மாரப்பனைப் போலவே பெரிய தாடியை உடைய செந்நாட்டுத் தளபதி ஒருவர் மாரப்பனைப் பிடித்தே தீருவேன் என்று வீரஸபதம் செய்து தேரேறி காடு நோக்கிச் சென்றார். வழியில் தேர் மரத்தில் மோதியதால் இடுப்பு உடைந்து ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தார். இந்தச் சூழ்நிலையில் ஊரிலிருந்த நடக்க மாட்டாத கிழவர்கள் ஐம்பது பேரை கருநாட்டு வீரர்கள் பிடித்துச் சென்று மாரப்பனுக்கு உதவினார்கள் என்று பொய்க்குற்றம் சாட்டி சிறையிட்டனர். கடலை உரிப்பது ஊசியில் நூல் கோர்ப்பது போன்ற அவர்கள் வயதிற்கு கடுமையான தண்டனைகளைக் கொடுத்து வாட்டினர். அவர்களும் தீராத் துன்பத்தில் உழன்றனர். இந்தச் செய்தி காட்டிலிருந்த மாரப்பனுக்கு எட்டியது.
=====================================
யார் அங்கே!
இவ்வரலாற்றுச் செய்தியை மக்கள் நலன் பொருட்டு பெனாத்தியவரை வலையூரின் 'ஆஸ்தான பெனாத்துவார்' ஆக்க பரிந்துரைக்கப் படுகிறது.
பயங்கரமான டைலமா.. இருதலைக்கொள்ளி எறும்பாய்த் தவிக்கிரேன்..
மேட்டர் ஒன்னும் இல்லை.. ஒவ்வொண்ணா பதில் சொல்லலாமா, கும்பலா நன்றி சொல்லலாமான்னுதான்..
சரி, இப்போதைய ட்ரெண்ட் படி தனித்தனியாவே சொல்லிடறேன்.
கொத்தனார், காத்துகிட்டிருக்கேன்.
உஷா, பார்ப்போம், இன்னும் மேட்டர்லே சம்பந்தப்பட்ட யாரும் பாக்கலை போல இருக்கு.
ராம்ஸ்,
நமக்கு நாமே திட்டத்தின் கீழே, ஒரு பெரிய விழா அறிவிப்பு, அப்பாலே வரலாற்று நாயகன் பட்டம் கொடுக்கறதா ஏற்பாடு பண்ணிக்கலாமா?
நன்றி மணிகண்டன்.
ராகவன், நல்லா இருக்கே.. கொஞ்சம் பழசாயிடுச்சி.. அப்டேட் பண்ணி வலை ஏத்திடுங்க..
அந்த செந்நாட்டுத் தளபதி பேர் திருவாசகமா திருமந்திரமா?
கைப்புள்ள,
நான் ஆஸ்தான பெனாத்துவார் ஆவேன்னு கனவுலே கூட நெனச்சுப்பாக்கலீங்க.. உங்களுக்கு என்ன பட்டம் வேணும்னு சொல்லிட்டீங்கன்னா, டீல் ஃபைனல் பண்ணிடலாம்.
// ராகவன், நல்லா இருக்கே.. கொஞ்சம் பழசாயிடுச்சி.. அப்டேட் பண்ணி வலை ஏத்திடுங்க..//
இப்ப வேண்டாங்க...ரொம்பப் பழசு...
// அந்த செந்நாட்டுத் தளபதி பேர் திருவாசகமா திருமந்திரமா? //
பக்கத்துல வந்துட்டீங்க....தே-ல தொடங்கும். வாரத்துல முடியும். :-))))
கைப்புள்ள பெருசா என்னத்தங்க கேட்டுட போறான்? நமக்கு புடிச்சது விதூஷகன்(காமெடியன்)வேஷம்/பட்டம்...அதுவும் உதை வாங்கற மாதிரின்னா நமக்கு அல்வா சாப்பிடற மாதிரி இல்ல?
ராகவன், மீண்டும் வருகைக்கு நன்றி..
கைப்புள்ள, அடிமடியிலேயே கை வைக்கிறீங்களே.. நானும் அந்தப்பதவிக்குதானே போட்டி போடறேன்!
:-)))))) அதானே பார்த்தேன்.. பெனாத்தலில் வரலாறா?
பெனாத்தராயரின் இந்த கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ள சில வரலாற்றுக் குறிப்புகள் தொடர்பாக தகடூர் நாட்டைச் சேர்ந்த ப்ருந்தாவனனுக்கு கிடைத்த ஓலைச் சுவடிகளில் இருந்த சில குறிப்புகள்:
1) ஒரு முறை மற்ற சில கோட்டைகளை உடைத்ததாய் மாறுவேட சோழன் சொன்ன போது கொசப்பேட்டையை ஆண்ட கேவிராஜன் "முடிந்தால் தம் இரு கோட்டைகளுள் ஒன்றை உடைத்துப் பார்" என்று பகிரங்க சவால் விடுத்தாகத் தெரிகிறது.
2) மாறுவேட சோழன் ஒருவர் அல்ல அது மாறுவேட சோழர்கள் குழு என்று சிலர் கல்வெட்டுக்களில் குறிப்பிட்டுள்ளனர்.
ராகவன்,
உங்க மாரப்பன் வரலாறு அருமை. மாரப்பன் காலம் முடிந்துவிட்டதால் முழு வரலாறையும் தனிப்பதிவாக வெளியிடுங்கள்
பிருந்தாவனர் கல்வெட்டுக்களை பினாத்தராயரும் உறுதி செய்துள்ளதும் சரித்திரத்தின் ஏடுகளில் காணக்கிடைக்கின்றது.
மாறுவேடச்சோழன் குழுவாக இருக்கலாம் என்பதை பல கல்வெட்டுகள் கூறியுள்ளன - இருப்பினும் அறுதியான ஆதாரம் கிடைக்கப்பெறவில்லை.
அப்புறம் கோபி, உங்களுக்கும் ஜி ராகவனுக்கும் ஒரு ஒற்றுமை - இருவரும் தங்கள் குழந்தைப்பாருவ போட்டோவை ப்ரொபைலில் போட்டுள்ளீர்கள். (ராகவன் அடிக்க வர்றதுக்குள்ள வுடு ஜூட்!)
சுரேஷ், ஜோக்ஸ் அபார்ட் இது உண்மையிலேயே நன்றாக உள்ளது.
நீங்கள் எடுத்திருப்பதாக நான் நினைத்த பொசிஷன் இதில் காட்டப்படவில்லை.
சரித்திர ஆவணம்(?) என்பதால் எந்த கருத்தையும் ஏற்றாமல் எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
மீண்டும் அருமை என்று பாராட்டி ஜகா வாங்கிக்கிறேன்
நன்றி முத்து,
ஒரே ஒரு விஷயம்.. எனக்கு எந்த விஷயத்திலும் ஸ்ட்ராங்கான பொஸிஷன் என்று ஒன்றும் கிடையாது.. ஓப்பனாக இருந்து எல்லாக்கருத்துக்களையும் கேட்டே முடிவுக்கு வருவது என்பதே என் கொள்கை..
எனவே,
நான் எந்த பொசிஷன் எடுத்திருப்பதாக நீங்கள் நினைத்தீர்கள்?
மட்டுறுத்தலுக்கு ஆன நீண்ட தாமதத்தையும் மன்னிக்கவும்.
மிக்க அருமை பெனாத்தல் சுரேஷ் அவர்களே.
இதுவும் தனது தனிப்பட்ட கல்வெட்டில் போடப்படும் என்று பாண்டு சோழன் தெரிவிக்கிறார். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
அன்புடன்,
பாண்டு சோழன்
நன்றி பாண்டு சோழன் அவர்களே.
புலிக்குட்டிச் சோதனை, முத்திரை மோதிரம், இரண்டாம் கல்வெட்டூர் அனைத்தும் வெற்றிகண்ட கல்வெட்டு இது!
// அப்புறம் கோபி, உங்களுக்கும் ஜி ராகவனுக்கும் ஒரு ஒற்றுமை - இருவரும் தங்கள் குழந்தைப்பாருவ போட்டோவை ப்ரொபைலில் போட்டுள்ளீர்கள். (ராகவன் அடிக்க வர்றதுக்குள்ள வுடு ஜூட்!) //
சுரேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்! என்ன துணிச்சல். யாரங்கே! சேவகர்களைக் கூப்பிடுங்கள். என்னுடைய ஆறு மாதத்தைய ஓவியத்தை ஆறு வருடத்தில் வரைந்த ஓவியம் என்று பினாத்துவார்! இவரை உப்பு கலந்த நீர் மோர்க் குளத்தில் மூழ்கிக் காய வைத்து வற்றல் போடுங்கள்.
// ராகவன்,
உங்க மாரப்பன் வரலாறு அருமை. மாரப்பன் காலம் முடிந்துவிட்டதால் முழு வரலாறையும் தனிப்பதிவாக வெளியிடுங்கள் //
கோபி, அது பெரிய தொடர்கதை. பதினேழோ பதினெட்டோ அத்தியாயம். அத இப்பப் போட்டா அவ்வளவா நல்லா இருக்காது. எனக்கு ஒரு மயிலத் தட்டி விடுங்க. gragavan at gmail dot com கதைய உங்களுக்கு பார்சல் அனுப்புறேன்.
ஓஹோ.. அது ஆறு மாதத்தியதா? நான் எப்படியும் அஞ்சு ஆறு வயசுலே எடுத்திருப்பீங்கன்னு நெனச்சேன்.. அப்பக் குறைஞ்சது ஒரு 40 - 50 வருஷம் முந்திய படமா? அப்பவே கலர் படம் எடுத்திருக்கீங்க - பெரிய ஆள்தான்.
சுரேஷ்,
மிக அருமை. :-))).
///
எனக்கு ஒரு மயிலத் தட்டி விடுங்க. gragavan at gmail dot com கதைய உங்களுக்கு பார்சல் அனுப்புறேன்.////
ராகவன்,
மாரப்பன் கதை சில அத்யாயத்தை தமிழ்மன்றத்தில் படித்திருக்கிறேன். முழுவதும் படிக்கவில்லை. முடிந்தால் tamilkathai at yahoo.com -க்கு ஒரு பார்சல் கட்டி அனுப்புங்களேன்.
நடத்துங்க!
நான் எப்போதும் ஹிஸ்டரில 48க்கு மேல் வாங்கியதில்லை! ஆனா இந்த வரலாறை பரிச்சைக்கு வைச்சா 100க்கு 110தான்! :)
ஆமா.... ஏன் உங்க பின்னூட்டங்கள் மட்டும் டப்பா டப்பாவா தெரியுது?! Add Comment click பண்ணாத்தான் ஒழுங்கா தெரியுது!!!
பஞ்சாயத்து கலையுர நேரத்துல என்ன இது minutes of பஞ்சாயத்தா ?
நல்ல நகைச்சுவை. அதிலும் புலிக்குட்டிச் சோதனைக்கு சிரிப்பை நிறுத்த நிமிடங்கள் ஆயின.
super comedy. waiting for other valaipathivar's history also.It is an wonderful satire.
நன்றி.. anurajesh
நன்றி.. muthu
நன்றி.. dRaj
நன்றி.. ilavanjsi
நன்றி.. mugamoodi
நன்றி.. joLLuppaandi
நன்றி.. geetha sambasivam..
Post a Comment