Mar 6, 2006

சன் டிவி - திமுக கூட்டணிக்கு பலமா? (05 Mar 06)

தமிழ்த் தொலைக்காட்சிகளில் சந்தேகத்துக்கு இடமின்றி முதலிடம். எப்படிப்பெற்றது என்பதற்கு தூர்தர்ஷனின் அரசாங்க சோம்பேறித்தனத்திலிருந்து சுமங்கலி கேபிள் விஷனின் அத்துமீறிய உதவிகள், தொலைத்தொடர்புத்துறையின் நெருங்கிய தொடர்புகள் என எந்தக்காரணம் இருந்தாலும் முதலிடம்தான், அதை மறுக்க முடியாது.

பெற்ற முதலிடத்தைத் தக்க வைத்துக்கொள்வது ஊடகங்களின் அடைபட்ட சுழற்சியில் சுலபமே. (நிறைய பேர் பார்க்கிறார்கள் - அதிக விளம்பர வருவாய் - அதிக செலவில் நிகழ்ச்சிகள் - நிறைய பேர் பார்க்கிறார்கள்--)

சாதாரண நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, செய்திகளில் கூட தமிழ்த் தொலைக்காட்சிகளில் சன்டிவியே அதிகப் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது (TRP).

பெரும்பான்மைத் தமிழ்நாட்டிற்கு பொழுதுபோக்கும் செய்திகளும் வழங்குவதால், அரசிய்லிலும் மிகப்பெரிய சக்தியாக இருந்திருக்க வேண்டிய சன் டிவி, திமுக கூட்டணிக்கு பெரிய பலவீனமே என்றே நான் கருதுகிறேன்.

சன்டிவி திமுக கட்சியின் பிரச்சார பீரங்கியா? இதை ஒரு அடிமட்ட திமுக தொண்டன் ஒத்துக்கொள்வானா? கலைஞர் தவிர்த்து சன்டிவியில் காட்டப்படும் திமுக (இரண்டாம் நிலை) தலைவர்களின் பெயர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மு க ஸ்டாலினையே எப்போதாவதுதான் கண்டுகொள்கிறார்கள் எனும்போது, துரைமுருகனும், பொன்முடியும் புலம்பிப் பிரயோஜனமில்லை.

தயாநிதி மாறனின் அனைத்து நிகழ்ச்சிகளும் காட்டப்படும்போது கலைஞர் பங்குபெறாத மாநில மாநாடுகளும் ஒருவரிச்செய்தியாகவும் இடம்பெறாமல் போவதை திமுக தொண்டர்கள் கவனித்துக்கொண்டுதான் இருப்பார்கள். இதுபோன்ற நிகழ்வுகள், திமுக ஒரு குடும்பக்கட்சி மட்டும்தான் என்ற தோற்றத்தை கடைநிலைத் தொண்டனுக்கும் ஏற்படுத்தி விடுவதால், கட்சி உணர்வு குறையத்தான் செய்யுமே அன்றி கூடப்போவதில்லை.

கூட்டணிக்கட்சிகளைப் பொறுத்தவரை, சன்டிவி வைகோ மனத்தில் ஒரு ஆறாத வடுவாகவே இருந்து வந்திருக்கிறது. அணி மாறிய நேற்றைய செய்திகளில் வைகோ 2002-இல் பேசியது, 2004-இல் பேசியது என்று அடுக்கி 15 நிமிஷம் காண்பித்தையெல்லாம், அந்த 2002இலும் 2004-இலும் அரை நிமிஷம் காட்டியிருந்தால் கூட அவரைத் திருப்தி செய்திருக்க முடியும். (கூட்டணி மாற்றம் இதனால்தான் என நான் கூற வரவில்லை)

பா ம க வின் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் சந்தித்த, சந்திக்கும் மிகப்பெரிய கேள்வி - சன்டிவியை மட்டும் ஏன் தார் பூசாமல் விட்டுவைத்திருக்கிறீர்கள் - நிச்சயம் அவர்களுக்கு சன்டிவியால் தர்மசங்கடம்தான்; அவர்களின் கொள்கைக்கு பின்னடைவுதான்.

சன் செய்திகளுக்கு, விளையாட்டுச் செய்திகள் என்றாலே சச்சின் மட்டும்தான் (சமீப காலமாக சானியா மிர்ஸா). அதேபோல, ஜெயலலிதாவைத் திட்டாத வரையில் காங்கிரஸ் என்றால் சோனியா மட்டும்தான். அதுசரி, காங்கிரஸில் வேறு யார் பெயரைத் தெரிந்துவைத்டுத்தான் என்ன ஆகப்போகிறது?

சரி கட்சிகளை விட்டுவிடுவோம், சாதாரண, கட்சி சாராத பொது மக்களைப் பார்ப்போம். (என்னைப்போன்ற ஒரு ஜந்து). மதுரை மாவட்டத்தில் டி கல்லுப்பட்டிக்கு அருகிலிருக்கும் சிற்றுரில் தண்ணீருக்காக மக்கள் (சுமார் 5 பேர்) திடீரென (சன் காமெராவைப்பார்த்ததும்) சாலை மறியலில் ஈடுபட்டதை செய்தி என்றே வைத்துக்கொள்வோம்.. இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் பரபரப்பு நிலவியது எனும்போது, அந்த ஊருக்கு அருகிலேயே இருக்கும் எனக்கு ஏன் பரபரபரப்பு வரவில்லை என்ற கேள்வி என் மனத்தில் எழாதா? நிஜமான போராட்டத்துக்கும் நிஜமான பரபரப்புக்கும் மரியாதை குறைந்ததுதான் மிச்சம்.

கலைஞர் கைது விவகாரம் நிச்சயமாக ஒரு அனுதாப அலையாக உருவெடுத்திருக்க வேண்டிய விஷயம். ஆனால் அந்த 2 நிமிட ஒளித்துணுக்கை இதுவரை குறைந்தபட்சம் 2000 முறையாவது ஒளிபரப்பி செய்திகளுக்கு முன் காண்பிக்கப்படும் கடிகாரம் ரேஞ்சில் ரிபீட் செய்து அந்த அஸ்திரத்தைப் பயனிழக்கச் செய்ததுதான் நடந்தது.

மொத்தத்தில், ஒரு பிரம்மாஸ்திரமாக இருந்திருக்கவேண்டிய சன்டிவி, முனை மழுங்கிய குண்டூசியாகத்தான் இப்போதைக்கு இருக்கிறது.

உங்கள் கருத்து?
 
((republish))

11 பின்னூட்டங்கள்:

பினாத்தல் சுரேஷ் said...

Geetha Sambasivam has left a new comment on your post "சன் டிவி - திமுக கூட்டணிக்கு பலமா? (5 Mar 06)":

In a way it is brainwashing the people by giving false news looking like true.People used to think when it is forecasting in SunTV headlines it seems to be true and did not even think to go for original news.They simply satisfied with the SunTv news.

பினாத்தல் சுரேஷ் said...

ஏன் வேற யாருமே பின்னூட்டமிடலே? படிக்கலையா அல்லது பிடிக்கலையா - அல்லது பின்னூட்டமிடுவதில் ஏதும் பிரச்சினையா?

மகேஸ் said...

சன் டீவி குறித்த என் பதிவையும் பாருங்கள்

சாதாரணன் said...

ஒருதலைபட்சமான செய்திகளை மட்டுமே சன்டிவி தருகிறது என்பது உண்மை. இப்போதெல்லாம் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பது கடினம்தான் போலும்.

சாதாரணன் said...

ஏன் பிளாக்ஸ்பாட் வைத்திருப்பவர்கள் மட்டுமே பின்னூட்டம் இடும் வகையில் இருக்கிறது?

Jsri said...

சுரேஷ், இந்த விஷயத்தில் ஜெயா டிவியும் அப்படி இல்லை என்று சொல்லமுடியுமா?ஜெ'யைத் தவிர வேறு யாராவது அந்தக் கட்சியிலோ ஆட்சியிலோ இருக்கிறார்களா? உண்மையிலேயே அதிமுகவின் அடுத்தக்கட்ட தலைவர்கள் பிரமுகர்கள் யார் யார் என்று (குறைந்தபட்சம் எனக்குத்) தெரியவில்லை.


யாருக்காவது விருதுகள் கொடுத்தால் கூட கொடுக்கப்பட்டவர்கள் படம் டிவியில் வருவதில்லை; கொடுத்தவர் படம்தான் வருகிறது.

Local authority, அதன் தேர்தல், Municipal Committee, Municapal corporation, Gram Panchayat அவற்றின் கடமைகள் என்று பெண்ணுக்கு கதறுகதறென்று கதறி சொல்லிக்கொடுத்துவிட்டு செய்திகளுக்கு ஜெயாவைப் போட்டால், ஒரு சப்பை பூங்காவை சுத்தபடுத்த "அம்மா உத்தரவிட்ட"தாக இடிகுரலில் சொல்கிறார்கள். (நல்லவேளையாக என் பெண்ணுக்கு ந்யூஸ் தமிழ் எல்லாம் புரியாது என்று வைத்துக் கொள்ளுங்கள்.) அம்மா சாதாரணமாகப் பேசினாலே, "நான் ஆணையிட்டிருக்கிறேன்" என்றுதான் சொல்கிறார். அடப்பாவமே!

இருக்கிற நிலைமையில் நான் தமிழ்நாடு வந்தால் சுவாசிக்கவே அம்மா உத்தரவு இருந்தால்தான் முடியும்போல் இருக்கிறது.

என்ன ஒரு வித்தியாசம், ஒரு டிவியில் தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும். இன்னொன்றில் பிரளயம் வந்து உலகம் அழியும் தருவாயில் இருக்கும். வீட்டுநலன் கருதி அபசகுன வார்த்தைகளைத் தவிர்க்கும் பொருட்டு பாலாறு ஓடும் சேனலையே பார்ப்பது உத்தமம் என்று என்னைப் போல் சிலர் இருப்பார்கள். :)

ஆக இந்த விஷயத்தில் ரெண்டுமே கேவலம்தான். எல்லா சேனலையும் பார்த்துவிட்டு மையமாக ஒரு செய்தியை நாமே எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். இவ்வளவு வலைப்பதிவுகள் படித்துவிட்டே தெளிவாக இருக்கிறோம். :)) இது முடியாதா? இதனால் எல்லாம் கட்சி மதிப்பிழக்கும் என்று தோன்றவில்லை. உணர்ச்சி வசப்படும் தொண்டர்கள் எப்போதும்போல் அப்படியேதான் இருப்பார்கள். அதைத் தவிர்த்த ஓரளவு சாதாரண பொதுஜன மக்களுக்கு இந்த அரசியல் எல்லாம் புரிந்தே இருக்கிறது.

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி மகேஸ், முருகா, ஜெயஸ்ரீ.

உங்கள் பதிவைப்படிக்கிறேன் மகேஸ்.

முருகா, சன் டிவியின் சார்புத்தன்மை என்பதை சகஜமாகவே அனைவரும் எடுத்துக்கொள்கிறோம். அறிவாலயத்துக்குள் இருந்துகொண்டு நடுனிலைச்செய்தியா வெளியிட முடியும்? ஆனால், திமுக சார்பாகவே இருந்தாலும், அதனால் கூட்டணிக்கு பெரிய பயன் ஏதும் இல்லை என்பதுதான் என் கருத்து.

ஜெயஸ்ரீ, ஜெயா டிவியை நான் போட்டிக்கு எடுத்துக்கொள்ளவே இல்லையே.. அது ஜெயா செய்திகள் -- ஜெயா பற்றிய செய்திகள் மட்டுமே என்பதை தெளிவாகவே அவர்களே கூறிவிடுவதால், அங்கு வேறெதையும் எதிர்பார்ப்பது சிக்கன் பிரியாணிக்காக சரவண பவனில் காத்திருப்பது போலத்தான். தமிழக அமைச்சர்களில் ஒன்று போலதான் ஜெயா டிவியும் இயங்குகிறது.

ஆனால், சன் டிவி, திறமை(?)யான -disguise உடன் செய்திகளை சுவாரஸ்யமாக வழங்குவதால் அதனால் கூட்டணிக்கு சாதகம் ஏற்படும் என்னும் கருத்தையே நான் refute செய்கிறேன்.

Jsri said...

///ஆனால், சன் டிவி, திறமை(?)யான -disguise உடன் செய்திகளை சுவாரஸ்யமாக வழங்குவதால்..///

அப்படியா? அப்படி அவர்களே எங்காவது சொல்லி இருக்கிறார்களா? நீங்களே சொல்கிறீர்களா? அவரவர் ஊடகங்கள் அவரவர் புகழ் பாடவும், எதிரணிக்கு பதிலடி கொடுக்க/திரித்து சொல்லவுமே இருந்துவருகிறது.

இந்தத் தேர்தலில் ஒருவேளை ஆட்சி மாறினால் நானும் சுபசகுனச் செய்திகளுக்காக சேனலை மாற்றுவேன். :)

தருமி said...

இரவு 8 மணி சன் செய்தித் தொகுப்பைத் தவறாது பார்த்து வந்தேன். சுனாமி நிகழ்வுக்குப் பின் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது.

ஆயினும் எனக்கு ஜெயா டிவியை விட சன் பல மடங்கு பரவாயில்லை என்றே தோன்றுகிறாது. 'எங்கும் எதிலும் அம்மா' அப்டிங்கிறது தாங்க முடியறதில்லை. உதாரணமா, வீர பாண்டியனின் நேர்காணலுக்கும், ரபி பெர்னார்டின் நிகழ்ச்சிகளுக்கும் உள்ள பார தூர வித்தியாசம்.the latter used to stink a lot though he was doing a wonderful job in Sun TV once.
ஒருவேளை அதிமுக/எம்ஜிஆர்/ஜெயலலிதா - இவைகளின் மேல் எப்போதும் எனக்குள்ள ஒரு வெறுப்பினால் இப்படி தோன்றலாம்; தெரியவில்லை.

தகடூர் கோபி(Gopi) said...

பினாத்தலாரே,

நலமா?

I have tagged you here

Please continue the chain if you have time.

பினாத்தல் சுரேஷ் said...

ஜெயஸ்ரீ,
//அவரவர் ஊடகங்கள் அவரவர் புகழ் பாடவும், எதிரணிக்கு பதிலடி கொடுக்க/திரித்து சொல்லவுமே இருந்துவருகிறது.// இதை நான் எங்கேயும் மறுக்கவில்லையே. ஆனால் சன்டிவி, தன் செய்திகளுடனும், வியூவர்ஷிப்புடனும் உயர்ந்த நிலையில் இருந்தாலும், அது தேர்தல் வெற்றிக்கு பலன் தராது என்பதுதான் இப்பதிவின் மையக்கருத்தே.

தருமி,

இந்த இரண்டு டிவிக்களுக்கும் நாம் அனைவரும் நன்றி சொல்லியே ஆகவேண்டும். செய்திகள் என்பது உண்மையாகத்தான் இருக்கும் எனக் கண்மூடித்தனமாக நம்பிக்கோன்டிருந்த அனைவரின் கண்களைத் திறந்துவிட்டதே இவைதானே?

கோபி, பார்த்தேன், (தருமி, துபாய்வாசி - உங்களுக்கும்) அழைப்புக்கு நன்றி, எழுதத் தோணவில்லை.. யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

 

blogger templates | Make Money Online