Dec 25, 2006

2006 வலைப்பதிவுகள் - பிரபலங்களின் பார்வையில்(25 Dec 06)

2006 முடியப்போவுது. சம்பிரதாயப்படி 2006 திரும்பிப் பார்க்கிறேன், முதுகைக்காண்கிறேன்னு ஒரு பதிவு போடலாம்னா அப்படி ஒண்ணும் கிழிச்சுடல! சரி மத்தவங்களையாவது கலாய்க்கலாமேன்னு "என் பார்வையில் 2006 வலைப்பதிவுகள்"னு போட்டா அதையும் கிண்டலடிக்க சில பேர் கிளம்பிட்டாங்க!

யோசிச்சேன். என் பார்வையிலே போட்டாதானே பிரச்சினை? சில பிரபலங்களின் பார்வையிலே கேட்டு வாங்கிப்போட்டா? புதுமைக்கு புதுமையாவும் இருக்கும், யாரும் நாக்கு மேலே பல்லைப்போட்டு பேசவும் முடியாது!

எதை எந்தப்பிரபலம் சொன்னாங்கன்னு சொன்னா உங்களைக் குறைவா மதிப்புப்போடற மாதிரி ஆயிடாது?

---------------------------------

2006இலே வலைப்பதிவுகள் என்ன கிழித்துக்கொண்டு இருந்தது என்று என்னைக்கேட்கிறீர்களே, வயதானவர் ஒருவர் குடுமபத் தொலைக்காட்சியிலே அறிக்கை விடுவதைத் தவிர வேறு எதுவும் செய்யாமல் இருக்கிறாரே அவரைக்கேட்க மாட்டீர்களா? சிக்குன் குனியாவினால் தமிழ்நாடே அலறிக்கொண்டிருந்தபோது இந்த வலைப்பதிவு பிருஹஸ்பதிகள்் என்ன தூங்கிக்கொண்யா இருந்தார்கள்? திட்டியோ வாழ்த்தியோ கலர் டிவிக்கு கொடுத்த விளம்பரத்தில் நூற்றில் ஒரு பங்கேனும் தாயுள்ளத்துடன் நான் அளிக்கத் திட்டமிட்டிருந்த கம்ப்யூட்டருக்குக் கொடுக்காத இவர்களா கம்ப்யூட்டரில் தமிழ் காக்கப்போகிறார்கள்?
மக்கள் - இல்லை இல்லை!

கேட்டுக்கொள்ளுங்கள்.

ஒரு ஊரில் ஒரு சிங்கம் இருந்ததாம். அதன் மேல் ஒரு கொசு உட்கார்ந்து இருந்ததாம். கொஞ்சநேரம் கழித்து அந்த கொசு சொல்லியதாம், "நான் உன்மேலின்ருந்து இறங்குகிறேன்" என்று! சிங்கம் கேட்டதாம், நீ என்மேலா இருந்தாய்? என்று.. அப்படி இருக்கிறது இந்தபதிவர்கள் கதை. மக்கள் என் பக்கம் இருக்கும்வரை வலைப்பதிவாளர்கள் என் பக்கம் இருந்தாலென்ன? இல்லாவிட்டால்தான் என்ன?
-----------------------

இதப்பாருங்க, தமிழ்நாட்டுலே மொத்தம் 7 கோடி ஜனங்க இருக்காங்க, அதில ஆம்பல மூணரை கோடி, தாய்க்குலம் மூணரைக்கோடி.. இதிலே கைநாட்டுக்காரங்க 4 கோடி, கம்ப்யூட்டர் தெரிஞ்சவங்க.. வெறும் ரெண்டு லட்சம்!

இந்த ரெண்டு லச்சத்திலே பதிவு போடறவங்க வெறும் 2000 பேரு! இவங்க போன வருசத்திலே போட்ட மொத்தப் பதிவுங்க - 4000! இதிலே தேமுதிகவுக்கு ஆதரவா எழுதறவன் - ஒண்ணோ ரெண்டோ கூட இல்ல! ஏன் இல்ல? யோசிச்சுப் பாருங்க! தேமுதிக ஆட்சிக்கு வந்தா தமிலன் அத்தனை பேருக்கும் வலைப்பதிவு நானே திறந்து தருவேன்!

ஏமிரா, எனக்கா வலைப்பதிவப்பத்தித் தெரியாது? நான் என் சொந்தச் செலவிலே கட்சி நடத்துறவன்.. சொந்தச் செலவிலே சூன்யத்த ஆரம்பிச்சவனே நாந்தாண்டா!

உழைக்கிற மக்களுக்காக நாங்க களத்தில இறங்கிப் பாடுபடறோம்.. உதவின்னு சொன்னா வரமாட்டீங்க, உதைக்குதான் பயப்படுவீங்கன்னா அதுக்கும் தயாராத்தான் வந்திருக்கேன்.

ப்ளாக் - எனக்கு இங்கிலிஷ்லே பிடிக்காத ஒரே வார்த்தை!

-----------------------

தண்ணிப்பிரச்சினைன்னா முல்லைப்பெரியாறு..
தமிழனுக்கு ஒரே தந்தை பெரியாரு..
வேர எதுவும் எழுதறதுக்கு இல்ல மேட்டர்!
எனக்கு இலக்கியா ஒரே ஒரு டாட்டர்!
இல்லாட்டிப் பண்ரான் நையாண்டி..
கிடைக்கறதோ ஊருக்கு இளைச்ச இந்த ஒரே ஆண்டி!
அதுவும் இல்லாட்டி மாட்றான் வல்லவன் சிம்பு..
டேய்.. அவன்கிட்ட வச்சுக்காதேடா வம்பு..
அவன் இல்லடா சாதா ஆசாமி..
அவங்கப்பன் இந்த வீராச்சாமி..

அம்மாக்கு இன்னொரு பேர் தாயாரு..
அடுக்குமொழித்தமிழுக்கு என்னிக்கும் இந்த டியாரு!
என்னப்பண்ணாதீங்்கடா கிண்டல்...
ஆகிப்போயிடுவீங்கடா பண்டல்!

ஏ டண்டணக்கா..டணக்கடி டண்டணக்கா!

---------------------------------

என் அன்பு வலைப்பதிவு உடன்பிறப்புகளே!

தம்பி தயாநிதி மாறனின் தொலைநோக்குச் சிந்தனையில் அகலப்பாட்டை கண்ட தமிழ் ஆர்வலர்களே! கணினித் தமிழில் வலைப்பதிவுகளைக்கண்டதும் என் மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது என்பதை உளமாறச்சொல்கிறேன் என்றால் அது மிகையாகாது. பகுத்தறிவுப்பகலவனின் ஆவி என்னிடம் மட்டுமன்றி பல பதிவர்களிடமும் பேசிவருகிறது என்பதில் உள்ளபடியே பேருவகை அடைகிறேன். ஆனால், வள்ளுவப் பெருந்தகயார் சொன்னதுபோல் "நகுதற் பொருட்டன்று நட்பு" அல்லவா? ஓரிரு உள்ளக்குமுறல்களையும் உன்னிடம் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

எதைப்பற்றிப் பேசினாலும் முதலில் என்னை எள்ளி நகையாடுவதில்தான் ஆரம்பிக்கிறார்கள் சில பதிவாளர்கள். போகட்டும்.. பொதுவாழ்விலே இதைப்போன்ற பல முட்பாதைகளைக் கடந்து வந்தவன் தான் இந்தக்கருணாநிதி. ஆனால், ஏகடியம் பேசும் எத்தர்களுக்கு உரிய பதில் அளிப்பதில் நாம் ஏன் குறை வைத்திருக்கிறோம்? "பொறுத்தது போதும், பொங்கியெழு" என்று அன்று நான் மனோகராவிற்கு எழுதிய உரையாடல் இன்றும் பொருந்திவரும் நிலையே இன்று பதிவுகளில் நிலவுகிறது என்றால் அது மிகையாகாது.

பைனரிக்காட்டுக்குள்ளே ஓடும் சிறுநரிகளை அடையாளம் காணத் தாமதியாதே உடன்பிறப்பே.

-----------------------------

தமிழ்ப்பதிவுகளில் கவிதை..

"வா
னில் நட்
சத்திரங்கள்
கண் சிமிட்டுகின்றன"

என
உடைந்து கிடக்கிறது கவிதை..
ஊசி கொண்டு அதைத் தை!

ஏனெனில்
அறிவியல் தமிழுக்கு
அதுவே விதை!

ஆறாம் விரலாய்ப் பேனா
கொண்ட எனக்கும்
இருப்பது இருகை...
உனக்கோபலகை..
தட்டச்சுப் பலகை!

இன்னும் எழுந்து..
மேலும் எழுது..
உனக்குத் தமிழ்ப்பால் கொடுத்த
அன்னைக்குக் கொடு நீ
கவிப்பால்.

---------------------------------

வலைப்பதிவுகளில் சிறுகதைகள் படிக்கிறீர்களா? என்று தசாவதாரம் ஷூட்டிங் நடுவே கமல் கேட்டதும் எனக்கு வியப்புத்தான் வந்தது. "கதை இருக்கவேண்டும், சின்னதா இருக்கவேண்டும்" என்று ழான் நாய்கோவ் (இத்தாலி - 1936-75) சொன்னதைப்பற்றி ஒரு வாரம் முன்னேதான் வசந்தபாலனிடம் பேசிக்கொண்டிருந்ததைச் சொன்னேன்.


வலைப்பதிவைப்பற்றிக்கேட்டதும் "எண்ட்லெஸ் ஈகோ ட்ரிப்" என்ற என் செல்லச் சித்தாந்தத்தை அவரிடம் சொன்னேன். மையமாகச் சிரித்தார்.

எந்த ஒரு கதைக்கும் ஆரம்பம், நடு, முடிவு என்று மூன்று பகுதிகள் வேண்டும். இதை ட்ரிமெண்டாரின் என்று சீன மொழியில் சொல்கிறார்கள்.

ஆரம்பத்தில் கதை ஆரம்பிக்கவேண்டும் என்று அவசியமில்லை, நடுப்பகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாதகமில்லை. முடிவை நாம் சொல்வதை விட வாசகனே புரிந்துகொள்ளவேண்டும். அறிவுரைகள் கூடாது.

இந்த சித்தாந்தம் பெரும்பாலான மேற்கத்திய ஆசிரியர்களின் கதைகளில் இருப்பதை "The Best Stories of 1921" என்ற பழைய புத்தகம் ஜப்பானிலிருந்து என் மகன் அனுப்பிவைத்திருந்ததில் கவனித்தேன்.


வலைப்பதிவில் வரும் எந்தச் சிறுகதையுமே இந்த அளவுகோலில் தப்பாது.

இரண்டாவது பைப்பாஸுக்குப் பிறகு வலைப்பதிவுகளைப் படிப்பதை நிறுத்தியதில் கொஞ்சம் ரத்த அழுத்தம் சீராக ஆகியிருக்கிறது.



எ பி ஹை:


குருடன்
பாடுகிறான்
கொட்டாங்கச்சியோடு.

-------------------------------------

போதுமா பிரபலங்களின் கருத்து? இன்னும் வேணுமா?

Dec 20, 2006

வெயில் (20 Dec 06)

Cliffhanger படம், சென்னையில் தூக்கப்படுவதற்கு ஓரிரு நாள் முன்னதாக தேவியில் பார்த்தேன். கூட்டம் குறைவாக இருந்தாலும், ஏஸி முழு அளவில் போடப்பட்டிருந்ததாலோ, படத்தின் காட்சிகள் முழுக்க முழுக்க பனிமலையில் இருந்ததாலோ தெரியவில்லை - மே மாத சென்னை வெக்கையையும் மீறி படம் பார்க்கையில் ஒரு குளிர் பரவி, பனிமலைக்குள் இருப்பது போல் உணர்ந்தேன்.

அதற்கு முழுக்க முழுக்க எதிர்மறையாக, குளிர்காலம் ஆரம்பித்துவிட்ட துபாயில், ஏழே பேர் திரையரங்கில் இருந்தும், வெயிலின் வெக்கையில் வேர்க்கும் அளவிற்கு காட்சிகளுக்குள் இழுத்துவிட்டார் வசந்தபாலன்.

வாழ்க்கையின் எல்லாப் பரிமாணங்களிலும் தோற்ற ஒருவனின் கதையை மிக இயல்பாக எடுத்துச் செல்கிறார் இயக்குநர். (கதையை விரிவாக சென்னைக்கச்சேரியார் சொல்லிவிட்டார்)

குறிப்பாக அந்த முதல் பாடலின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளமுடியவில்லை. திருட்டுச் சோளத்தைச் சுட்டுத் தின்பது, குட்டையில் ஒலிம்பிக் ஜம்ப் செய்து குளிப்பது, சூடுகொட்டையைத் தேய்த்து தூங்குபவனை எழுப்புவது, பம்பர விளையாட்டின் Ultimate insult -பிஸ்கட் எடுப்பது -- நான் அனுபவித்த எதையெல்லாம் இன்றைய குழந்தைகள் இழந்துவிட்டார்கள்? மிகமிக இயல்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் இன்னொரு சிறப்பம்சம் - இயல்பான பாத்திரப்படைப்புகள் - நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பிரிக்க முடியாமல் எல்லாப்பக்கமும் அவரவர் நியாயம் இருப்பதை உணர்த்தியிருக்கும் பாத்திரங்கள். திருட்டு சினிமா, திருட்டு பீடிக்கு கோபமடைந்த அப்பா வெயிலில் வாட்டியதால் வீட்டை விட்டு வெளியேறும் முருகேசனின் பார்வையிலேயே சொல்லப்பட்டிருந்தாலும் தீப்பெட்டி கம்பெனிக்கு அனுப்பாமல் கஷ்டப்பட்டாவது படிக்க வைத்த அப்பனின் ஆறாத கோபமும் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

தங்கைகள் தன்னை மதிப்பதில்லை என்று குமுறும் முருகேசனுக்கு வீட்டில் இருந்து கஷ்டப்பட்டுப் படிக்கவைத்த அண்ணனை விட, வீட்டைவிட்டு ஓடியவன்மேல் எப்படி பாசம் வரும் என்று நியாயமான கேள்வி வைக்கப்படுகிறது.

முக்கியமான சிறப்பம்சம் - நடிப்பு.. பசுபதியின் திறமையை வேறு வகைகளில் விருமாண்டியிலும், மும்பை எக்ஸ்பிரஸிலும் பார்த்திருந்தாலும், இந்தப்படம் அவருக்கு ஒரு கிரீடச் சிறகு! தோல்வியடைந்தவன் என்பதை பாடி லேங்குவேஜிலேயே சொல்வதாகட்டும், அப்பா தங்கைகள் மதிக்காததற்கு குமுறுவதாகட்டும், தம்பியிடம் எப்படி அறிமுகப்படுத்திக்கொள்வது என்று திணறுவதாகட்டும் - அசத்தியிருக்கிறார். ஒன்றிரண்டு விருதுகள் நிச்சயம்.

பசுபதி மட்டுமல்ல, பரத்தின் நடிப்பும் குறிப்பிடப்படவேண்டியதுதான். காட்சிகள் குறைவாக இருந்தாலும் ஒரு கிராமத்து -கோபக்கார-பாசக்கார-துடிப்பான இளைஞனைக் கண்முன் நிறுத்துகிறார்.

அப்புறம் அந்த அப்பா - பேர் தெரியவில்லை - நடிக்கவில்லை.. வாழ்ந்திருக்கிறார்.

அம்மா டி கே கலாவின் ஒன்றிரண்டு மிகையை விட்டுப்பார்த்தால் எல்லாரும் நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

குறைகளே இல்லையா? நிறையவே இருக்கின்றன!

1. அளவுக்கதிகமான வன்முறை - வெயிலுக்குப் பதிலாக ரத்தம் என்றே வைத்திருக்கலாம் என்னும் அளவிற்கு! குடும்பப்படத்துக்கு இவ்வளவு ரத்தம் தேவையா? சண்டைக்காட்சிகள், வில்லன்கள் பட்டாளம் இல்லாமல் இந்தக்கதையைச் சொல்லியிருக்க முடியாதா?

2. பாவ்னாவைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று ஜொள்ளன் கூறினாலும், அந்தப்பாத்திரமோ, அதன் காட்சிகளோ திரைக்கதை நகர்வுக்கு உதவாமல் ஒட்டாமல் இருக்கின்றன - குறிப்பாக அந்த பெப்ஸி உமாவைக் கிண்டல் செய்யும் நகைச்சுவை(?) காட்சி- இன்னும் எத்தனை நாள்தாண்டா அதையே செஞ்சுகிட்டிருக்கப்போறீங்க? அதேபோல ஒவ்வொரு ப்ரேமிலும் யதார்த்தத்தைக்காட்டிய படத்தில் இவர்களின் டூயட் கேண்டீன் விற்பனையை அதிகரிக்கவா?

3. இசை! முதல் பாடல்கூட மனதில் ஒட்டவில்லை - காட்சி அமைப்புகள் மட்டுமே. பின்னணி இசை -இன்னும் எவ்வளவு நாள்தான் இளையராஜாவை எண்ணி ஏங்க மட்டுமே முடியுமோ?

4. திணிக்கப்பட்ட மெலோட்ராமாக்கள் - அதை இழுத்திருக்கும் இயக்குநர். வெயிலில் அம்மணமாக படுக்கப்போடும் தண்டனையையும், காதல் தோல்வியின் வேதனையையும், அப்பா அம்மா சந்தேகப்படுவதையும் இன்னும் சுருக்கமாகவே சொல்லியிருக்க முடியும் - ரசிகர்கள் மேல் நம்பிக்கைக் குறைவா?

5. விளம்பரக்கம்பெனி சம்மந்தமான வேலையில் ஒரு பாத்திரத்தை வைத்துவிட்டு படம் முழுக்க இன் லைன் அட்வர்டைஸ்மெண்டாக போட்டுத் தாக்கியிருக்கிறார்! இயக்குநர் ஷங்கர் இயக்கும் படத்துக்கு ஆகும் செலவில் 1/10 இல் முடித்திருக்கிறார்.. அதேபோல, பசுபதியின் காதலில் வரும் காட்சிகளுக்கு பின்னணி இசையாக இளையராஜாவும் தேவாவும் - பழைய திரைப்படக்காட்சிகளாக!

இருந்துட்டுப் போவுது! எந்தப்படம்தான் குறையே இல்லாம இருக்கு?

மொத்தத்தில் - நல்ல படம் - பார்க்கலாம், ரசிக்கலாம்.

Dec 16, 2006

சனிக்கிழமை - Promise fulfilled;-)

குறும்புன்னு ஒரு பிளாஷ் தயார் பண்ணா, பிளாக்கரும், பிளாஷும் போட்டோபக்கெட்டும் சேர்ந்து என்கிட்டே அடிச்ச குறும்பு தாங்க முடியல!

பட்டன் வொர்க் ஆகாததையே குறும்புன்னு நெனச்சு சிரிச்ச ஆவிங்க,
வேலைக்கு ஆவலை, சனிக்கிழமை கச்சேரி வச்சுப்போம்னு சொன்ன லக்கிலுக்,
போன் பண்ண ரெடியா இருந்த முத்துகுமரன்
இடைக்கால நிவாரணம் கொடுத்த கோபி, கஷ்டப்பட்டு பார்த்து பாராட்டிய சிறில், பொன்ஸ், நாமக்கல் சிபி,I H மற்றும் பலர்,
வெள்ளெழுத்து வந்துடிச்சான்னு அக்கறைப்பட்ட இ கொ,
எறும்பு ஊருது, ஒண்ணும் தெரியலேன்னு கஷ்டப்பட்ட உஷா,
மார்க்கை சுழிச்சுறவான்னு பயமுறுத்தின தருமி..

எல்லாரும் இப்ப பாருங்க!

முக்கியமான பிரச்சினை என்னன்னா, பிளாஷிலே கறுப்பு பின்புலம் கொடுத்துட்டு, பிளாக்கர்லே ஆரஞ்சு பின்புலம்னு தப்பா கொடுத்துட்டேன். அதனால, ஆரஞ்சு மேலே வெள்ளை என் உள்ளத்தைக் காட்டினாலும், உள்ளதைக்காட்டவில்லை;-))

மின்னஞ்சல் வேணும்னா கேளுங்க!


Dec 14, 2006

ஆக வேண்டுமா வலைப்பதிவர் 2006? (குறும்பு - தேன்கூடு)(Repair version 2:-))

வலைப்பதிவர் ஆவதற்கு பெரிய கணினி அறிவு தேவையில்லை என்பதற்கு என் போன்றவர்களே உதாரணம். வலைப்பதிவை நடத்தவும் பெரிய விஷயஞானமோ ஆழ்ந்த சிந்தனையோ தேவையில்லை என்பதும் நான் அடிக்கடி நிரூபித்து வந்திருக்கும் விஷயமே.

ஆனால், எந்தத் துறைக்குச் சென்றாலும் அந்தத் துறை சார்ந்த அறிவு, அத்துறைக்கே உரித்தான கலைச்சொற்கள் (Jargon) தெரியாமல் ரொம்ப நாள் குப்பை கொட்ட முடியாது. தமிழ் வலைப்பதிவர் சூழலில் பிரசித்தமான சில வார்த்தைகளை பொதுவில் பேசினால் நம் மனநலன் கேள்விக்குள்ளாவது திண்ணம்!

இதற்குத்தான் கௌன் பனேகா கரோர்பதி ஸ்டைலில் ஒரு பிளாஷ் வடிவமைத்திருக்கிறேன். தமிழ் வலைப்பதிவராக உள்ளவரும், படிப்பவரும் மட்டுமே விடையளிக்கக்கூடிய 15 கேள்விகள்..இக்கேள்விகளுக்கு விடையளிக்க முடிந்தவர்தான் வலைப்பதிவர் 2006!

விளையாடுங்கள்.

பி கு 1: சில பதிவர் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறேன் - தவறான உள்நோக்கத்தோடோ அவதூறு நோக்கத்தோடோ இல்லை என்பது சொல்லாமலே தெரியும். இருந்தாலும் யார் மனமாவது புண்பட்டால், பெயர்களை மாற்றிவிடத் தயாராக இருக்கிறேன் - எனக்கு ஒரு பின்னூட்டம் மட்டும் போடுங்கள்.

பி கு 2: KBC இன் பார்மட்டை முழுதுமாகக் கொள்ளவில்லை - எனவே காபிரைட் பிரச்சினை வரக்கூடாது.

பி கு 3: தேன்கூடு போட்டிகள் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை கதை கட்டுரை தவிர்த்த வேறு வடிவமும் கொடுக்கலாம் என்றே சொல்லிவந்திருக்கிறார்கள் - இதுவரை யாரும் (நானும்) வேறு வடிவங்களில் பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை என்பது உறுத்தவே இதைத் தயாரித்தேன். இதை வெற்றிப்பெறச்செய்வது வேறு வடிவங்களிலும் முயற்சி செய்வதை ஊக்குவிக்கும்:-))

பி கு 4: கிடைத்த பரிசை பின்னூட்டமாகப் போட்டுச்செல்லுங்கள், ஆவன செய்வோம்.

பி கு 5: உபயோகப்படுத்தியுள்ள எழுத்துருக்கள்: TSCu_paranar, TSCVerdana.

பி கு 6: பிளாஷ் பிரச்சினைக்கு ஒரு இடைக்கால நிவாரணம்:
கோபிக்கு நன்றி நன்றி நன்றியுடன்..

மக்களே.. இப்போதும், நீங்கள் கோபி சொன்னது போல பார்க்க முடியும். எப்படீன்னா..பிளாஷ் வந்து "தொடர இங்கே அழுத்தவும்" வந்து நிக்கும்போது ரைட் கிளிக் செய்து ப்ளே எனத் தெரிவு செய்தால் கேள்விகளுக்குள் போய்விடலாம். அதற்குப்பிறகு பிரச்சினை இல்லை.பாத்துட்டு சொல்லுங்க, சனிக்கிழமை க்ளீனாச் சரி செஞ்சுடறேன். அவ்வளோதான்.



Dec 11, 2006

டிசம்பர் 11

1982ல் பாரதியாருக்கு நூற்றாண்டு வந்தபோது கல்கியில் ஒரு பரிசுப்போட்டி வைத்திருந்தார்கள் (கோகுலமா கல்கியா எனச்சரியாக நினைவில் இல்லை). பாரதியார் பாடல்களில் சில எண்களைக்கண்டுபிடிக்கச் சொல்லி. சில எண்கள் சுலபமாக இருந்தாலும் (முப்பது கோடி - முப்பது கோடி முகமுடையாள், அறுபது கோடி - அறுபது கோடி தடக்கைகளாலும் அறங்கள் கூட்டுவள் தாய்) சில எண்களுக்காக பலமுறை படிக்க வேண்டி வந்தது (நாற்பதாயிரம் - நலமோர் எத்துணையும் கண்டிலேன், இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன் - சுயசரிதை).

போட்டியில் பரிசு கிடைக்கவில்லை - ஆனால் பாரதியார் பாடல்களின் மீதும் தமிழின் மீதும் தீராத ஆர்வத்தை எனக்குள் உருவாக்கிவிட்டதற்காக அந்தப்போட்டிக்கு என்றும் என் நன்றிகள்.

ஆதர்சத்தை வீட்டில் உருவாக்குவது என்றும் மகிழ்ச்சியைத் தருவது.


பாரதியார்

பாரதியாருக்கு ஓட்டைப்பல் என்பதை சரித்திர ஆசிரியர்கள் மறைத்தது ஏனோ?

ஓட்டைப்பல் பாரதியார்

அவர் பாட்டை அவரே பின்பாட்டாய்ப் பாடுகிறார்.

Dec 9, 2006

இன்னும் ஒரு வித்தியாசமான விமர்சனம் (09 Dec 06)

படத்தைப் பார்க்காமலே விமர்சனம் எழுதிவிட்டேன். புதுப்படத்துக்கென பிலிம் காட்டி பழைய படத்துக்கு விமர்சனம் எழுதிவிட்டேன். அந்த வகையில் இன்னும் ஒரு விமர்சனம்.
இன்னும் வெளியாகாத புத்தகத்துக்கு ஒரு விமர்சனம். "கரையைத் தேடும் ஓடங்கள்" புத்தகம் எழுதியவர் உங்களுக்குப் பரிச்சயமானவர்தான். விடை கடைசியில்.
பணத்தைத் தேடி ஓடும் ஓட்டம் ரிஸ்க் இல்லாததாக இருப்பதில்லை. ஆண்களுக்கு ஒருவகை பிரச்சினை என்றால் பெண்களுக்கு வேறு வகையான பிரச்சினைகள். அந்தப்பிரச்சினைகளையும் விடுபட வழியே இல்லாத நிலைமையையும் கதைக்களனாகக் கொண்டிருக்கிறது இந்த நாவல்.
குடும்பக் கடன்களுக்காக கிழவனை மணக்கச் சம்மதித்து, அவன் இறக்க, கொலை என்ற சந்தேகத்தில் சிறைக்கு சென்று மீளும் அமீரா,
ஓடிப்போன புருஷன், கைக்குழந்தைகள், சமாளிக்க வழி இல்லாமல் ஷேக் வீட்டு வேலைக்காரியாகும் ஆயிஷா,
காதலித்து மணம்புரிந்த கணவனின் துபாய் ஆசையில் அவசரப்பட்டு வேறு ஒரு ராக்கெட்டில் சிக்கி மயிரிழையில் தப்பிக்கும் இந்துமதி
ஆகிய கதாபாத்திரங்கள் சென்னைக்குத் திரும்புகையில் அறிமுகமாகின்றனர். பெரும் பிரச்சினையில் இருந்து மீண்டுவிட்டோம் என்ற எண்ணங்கள் சென்னையில் அவர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பில் தூள் தூளாகின்றன. நாளொரு பிரச்சினை, பொழுதொரு பொல்லாப்புடன் வாழ்க்கையைத் தொடர்வதில் சிக்கல்களை அதிகப்படுத்த, தற்கொலை முடிவெடுக்கும்வரை சென்று கடைசியில் உலகை எதிர்த்துப் போராட முடிவெடுக்கின்றனர்.
நாவலின் அமைப்பும் நடையும் அருமை. பெண்ணிய எழுத்தாக இருக்குமோ என்ற சிந்தனை ஆரம்பத்தில் வந்தாலும் கெட்டவர்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம் ஒதுக்கீடு கொடுத்து அந்த வசையிலிருந்து தப்பிக்கிறார் ஆசிரியர். உரையாடல்கள் - குறிப்பாக வட்டார வழக்குகள் இயல்பாக அமைந்து படிப்பதை சுவாரஸ்யப்படுத்துகின்றன.
இருந்தாலும், சில கேள்விகளைத் தவிர்க்க முடியவில்லை.
1. முன் சரித்திரம் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் வெவ்வேறு இடங்களில் வருவதால் கொஞ்சம் பெயர்க்குழப்பம் வருகிறது. மேலும் இரு முக்கிய பாத்திரங்களின் பெயர்கள் கிட்டே இருப்பதால் (ஆயிஷா, அமீரா) குழப்பம் வருகிறது.
2. ஆரம்பத்தில் நாவல் படிக்கிறோமா, சீரியல் பார்க்கிறோமா என்ற சந்தேகம் வரும் அளவிற்கு ஒரே அழுகை நெடி. (பார்ப்பது போல் காட்சியை அமைத்திருக்கிறார் ஆசிரியர் என்று பெருமையும் பட்டுக்கொள்ளலாம்)
3. இந்திய கான்ஸலேட்டால் தப்புவிக்கப்பட்ட பெண்கள் சி எம்மைச் சந்தித்து வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது, அவர்கள் தற்கொலை முடிவு வரை செல்லும்போது மறக்கப்பட்டிருக்கிறது ஒரு குறையே.
4. சுக முடிவுக்கான கிளைமாக்ஸ் திருப்பங்கள் செருகப்பட்டது போன்ற ஒரு தோற்றம்.
ஆனால், சொல்லப்பட்ட இந்தக்குறைகளைப் பார்த்து தவறாக முடிவெடுத்துவிடாதீர்கள். நல்ல நாவல், படிக்கப் பரிந்துரைக்கிறேன்.
கலைமகளில் எப்போ வருமோ என்று தெரியாது. பிறகு ஆசிரியர் தன் வலைப்பூவில் எழுதுவார் என்றே நினைக்கிறேன்.
ஆம்.. நுனிப்புல் உஷாவின் கலைமகள் பரிசு பெற்ற நாவலின் விமர்சனம்தான்.

Dec 6, 2006

மறுபக்கம் (குறும்பு போட்டிக்காக) (06 Dec 06)

ஒன்று

காலை எட்டரை:

"என்ன சார், வண்டி ஸ்டார்ட் ஆகலியா?"

"என்ன பண்றது? ரெண்டு தூறல் போட்டா இதுக்கு ஜலதோஷம் பிடிச்சுடுது"

"வித்துட்டு புது வண்டி வாங்கிக்க வேண்டியதுதானே?"

"காசு?"

"சார் கால்லே அடி பட்டிருக்கு பாருங்க, ரத்தம் வருதே! கொஞ்சம் இருங்க, டிங்சர் கொண்டு வரேன்"

"ஸ்டேண்ட் இடிச்சுடுச்சு போல! பரவாயில்லை, நான் பாத்துக்கறேன்"

காலை பத்தரை:

"என்ன ஞானசகாயம், இன்னும் போர்ஷனை முடிக்கலன்றீங்க?"

"என்ன பண்றது சார், இந்த வகுப்புலே பசங்க கொஞ்சம் மந்தம். படிப்பிலே ஆர்வமே இல்ல"

"இதை நான் இன்ஸ்பெக்ஷனுக்கு வர்றவங்க கிட்டே சொல்ல முடியுமா?.. எதோ கடமைக்கு வேகமா நடத்தி முடிங்க கே என்"

"அப்படி நடத்தறது என் தொழிலுக்கு மரியாதை இல்லை சார்"

"ஆமா! தொழிலுக்கு எல்லாம் மரியாதை கொடுங்க! ஹெட்மாஸ்டர் பேச்சை காத்திலே பறக்க விடுங்க! இன்ஸ்பெக்ஷன்லே நான் தெளிவா சொல்லிடுவேன். அப்புறம் நீங்களாச்சு, டி ஈ ஓ வாச்சு.. இந்தப்பழைய காலத்து ஆளுங்களோட ஒரே தொல்லை!"

காலை பதினொன்று:

"எனக்கு உண்மை தெரிஞ்சாகணும். யாரு இந்தப்படத்தை வரைஞ்சது?"

"...."

"பாடம் நடத்த முடியலே, சொன்னாப் புரிஞ்சுக்கறதுக்கு துப்பில்லே, வீட்டுப்பாடம் ஒருத்தனும் எழுதலே.. என்னைக் கிண்டல் செய்யறதுக்கும் படம் போடறதுக்கும் மட்டும் தெரியுதா? இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ளே யாருன்னு சொல்லாட்டி அத்தனை பேருக்கும் அடிவிழும்!"

"..."

"ராமு.. இங்கே வா.. எனக்கு உம்மேலேதான் சந்தேகம்..என்னடா வாய்லே! இப்படி நாருது? பீடியா?"

"இல்லே சார், கஞ்சா!"

"எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டேயே கூசாம சொல்லுவே! நீட்டுறா கைய"

பிற்பகல் மூன்று:

******குறும்பு*******

பிற்பகல் ஐந்தரை:

"இன்னும் எவ்வளவு நேரம்பா ஆகும்?"

"கார்புரேட்டரை கழட்டி சுத்தம் செய்யணும் சார். டயர் வேற கிழிஞ்சிருக்கு.. சைலெண்சர்லேயும் அடைப்பு இருக்கு.. நீங்க நாளைக்குக் காலையிலே எடுத்துக்கங்க சார்."

____________________________________________

இரண்டு

காலை நாலரை:

"இன்னுமா எழுந்திருக்கலே. எத்தனை முறைதான் எழுப்பறது?"

"இன்னும் ரெண்டு நிமிஷம்மா!"

"ரெண்டு ரெண்டு நிமிஷமாவே அரை மணிநேரம் ஓட்டிட்டே. நாளைக்கு புருஷன் வீட்டிலே போயி இப்படியா தூங்குவே?"

"அதுக்கு இருக்கும்மா இன்னும் பத்து வருஷம்"

"பத்தா! இப்பவே வயித்துலே நெருப்பைக் கட்டிக்கற மாதிரி இருக்கு. சும்மாவா சொன்னாங்க.. பெண் வளர்த்தியோ பீர்க்கங்காய் வளர்த்தியோன்னு"

"அவங்களேதான் சொன்னாங்கம்மா - தாய்க் கண்ணோ பேய்க்கண்ணோன்னும்"

"இதெல்லாம் பேசத் தெரியுது, காலையிலே எழுது வாசல் தெளிச்சு கோலம் போடத் தெரியலே"

காலை ஏழு:

"அம்மா இன்னிக்கு மத்தியானத்துக்கு என்ன?"

"பாம்பே மீல்ஸ் போதுமா? என்னடி இது கேள்வி, தயிர்சாதமும் ஊறுகாயும்தான்"

"அம்மா டிபன் பாக்ஸ் சரியாவே மூட மாட்டேங்குதும்மா. என் காலேஜ் புக்ஸ்லே எல்லாம் உன்னோட ஆவக்காய் வாசம் வீசுது. பசங்க கிண்டல் பண்றாங்கம்மா"

"சரி போயி சாமி விளக்கேத்து"

"இல்லேம்மா, நான் இன்னிக்கு கூடாது"

"சரியாப்போச்சு.. செய்றதே ரெண்டு மூணு வேலை.. அதுக்கும் லீவா? சரி எதையும் தொடாம ஓரமா நட!"

காலை எட்டரை:

"பாப்பா, வரயா, வண்டியிலே காலேஜ் போகலாம்"

"உன் வேலையப் பாத்துகிட்டுப் போடா"

"என்ன ப்ரியா, லேட்டாயிடுச்சி?"

"என்ன பண்ரது சொல்லு. காலையிலே எழுந்து தலைக்குக் குளிச்சு காயப்போடக்கூட நேரம் இல்லே. மண்டை இடிக்குது. வர வழியிலே தயிர் சாதம் மூடி வேற திறந்துகிச்சு. இதுலே டேட்ஸ் வேற! இத்தனையையும் தாங்கிக்கலாம். ரோட்ஸடி ரோமியோக்களோட தொல்லை! இவனுங்கள்லாம் அக்கா தங்கச்சிங்க கூட பொறக்கலியா?"

******குறும்பு*******

காலை பத்து:

"ப்ரியா! எத்தனை முறை கூப்பிடறது? ஒரு சின்ன கேள்விக்குக் கூட பதில் தெரியலே.. நீங்கள்லாம் காலேஜ் வரைக்கும் எப்படித்தான் வந்துடறீங்களோ!"

"..."

"அழுகை மட்டும் உடனே வந்துடுது!"

_____________________________

மூன்று

மாலை ஐந்து:

"எத்தனை முறைதான் வாசல்லே இருந்தே வேடிக்கை பார்ப்பீங்க? வாங்க உள்ளே போகலாம்"

"விலை அதிகமா இருக்கும்போல இருக்கே"

"தேவைன்னா விலையப் பாத்தா ஆகுமா?"

"சரி 200 ரூபாய்க்கும்தான் குளிர்கண்ணாடி கிடைக்குது"

"அதுவும் இதுவும் ஒண்ணாகுமா? இதுக்கு உள்ள நம்பகம் அதுக்கு வருமா? காசைப் பார்த்து கண்ணைக் கெடுத்துக்காதீங்க"

"சரி இப்ப இருக்கற நெலைமையிலே 3000 ரூபா அதிகமாப் படுதே"

"என்ன நெலைமை? நான் தரேன், வாங்கிக்குங்க"

"உனக்கு ஏது பணம்?" "நான் வாய்க்கட்டி வயித்தக்கட்டி பருப்பு டப்பாவிலே பாதுகாத்து வச்சிருந்தேன்"

"பருப்பு டப்பாவிலே மொளைச்சுதா? அதிக செலவுன்னு என்னை ஏமாத்தித் தானே வச்சிருக்கே?"

"என்னமோ.. நீங்க என்கிட்டே கொடுத்தப்புறம் அது என் பணம்தான். இந்த ப்ரேம் உங்களுக்கு அழகா இருக்கும், எடுத்துக்கங்க"

மாலை ஏழு:

"இந்த வீடுதானா?" "ஆமாம். வாசலே KB100 நிக்குதே, அவருதுதான்"

""சீனிவாசன்.. சீனிவாசன்"

"இது அவர் பிள்ளைதானே?"

"அப்பா! அப்பா யாரோ வந்திருக்காங்க"

"வாங்க சார், உக்காருங்க.. டேய், இது மதுவந்தி அப்பாடா, ஞாபகம் இல்லே? அன்னிக்கு பார்ட்டிக்குப் போயிருந்தோமே! அங்கிளுக்கு ஹாய் சொல்லு"

" ஹாய் அங்கிள்! அப்பாவோட ஆபீஸ்லேதான் வேலை செய்றீங்களா?"

"ஆமாண்டா கண்ணா.. உன் பேர் என்ன?"

"குரு, 3 A. அந்தக் குரங்கு மூஞ்சி மேனேஜர்தான் உங்களுக்கும் மேனேஜரா?"

"பையன் ரொம்பச் சூட்டிகை!"

"ஆமாம் சார்.. அறுந்த வாலு!"

"இதென்ன கண்ணாடி? ரஜினி மாதிரி பண்ணுவீங்களா? நான் பண்ணுவேனே!"

******குறும்பு*******

இரவு பத்து:

"வாரண்டி, கேரண்டி எல்லாம் நீங்க உடைச்சுட்டு வந்தா தர முடியாது சார். வொர்க்மேன்ஷிப்லே டிபக்ட் இருந்தா மட்டும்தான் அப்ளை ஆகும். வேணும்னா ஒண்ணு பண்ணலாம். இன்னொரு கண்ணாடி எடுத்துக்கங்க, 10% தள்ளுபடி தரேன்.

நீதி: எல்லாக் குறும்புகளும் எல்லாராலும், எல்லா நேரங்களிலும் ரசிக்கப்படுவதில்லை!

Dec 4, 2006

துபாய் பதிவர் சந்திப்பு - மேல் விவரங்கள் (04 Dec 06)

மாநாட்டுக்கான பில்ட்-அப் எல்லாம் மாநாடு கண்ட சாத்தான் குளத்தான் பதிவில் பார்த்துக்கொள்ளவும். இப்பதிவு, மாநாட்டின் நிகழ்ச்சித் துளிகள்.

5 மணிக்கு ஆரம்பம் என்றால் 5 மணிக்கே வந்துவிடவேண்டும் என்ற கெட்ட பழக்கத்தோடு காத்திருந்த முத்துக்குமரன், இசாக் , கவிமதி மற்றும் தமிழன்பு ஆகியோர் தொலைபேசியில் விரட்ட, அடுத்த குழுவாக வந்தது பினாத்தல் மற்றும் லியோ சுரேஷ்கள். வாக்குக் கொடுத்த வாப்பாக்கள் கூட வரமுடியாத நிலைமையை மழை மற்றும் போக்குவரத்து உருவாக்கியிருக்க, வெளிநாட்டு போட்டுக்கொடுத்தலுக்கு ஆளாகிவிட்ட தோழர்கள் வர முடியாதுதான் போலிருக்கிறது என்று பேசிக்கொண்டோம். பதிவின் தலைப்பிலே உள்ள உள்குத்தை இப்போது அடையாளம் காண முடிகிறதா? (மேல் விவரங்கள் - பீமேல் விவரங்கள் இல்லை:-)). ஆசீப் பேரணியால் தாமதமாகவும், தம்பி நடந்தே வந்தும் ஏனோ தாமதமாகவும், நண்பன் அலுவலகம் முடித்துவிட்டும் வந்து சேர்ந்தார்கள். சுந்தரராமன்,செண்பகராஜ் போன்ற பதிவில்லா வாசகர்களும் கூட்டத்துக்கு சிறப்பு சேர்த்தார்கள்.

எதிர்பார்க்கப்பட்டவர்களில் லொடுக்கு மழையில் மாட்டிக்கொண்டதாலும், மகேந்திரன் அவர் பதிவில் உள்ள காரணங்களாலும், துபாய்வாசி தற்காலிகமாக அல் எய்ன் வாசியானதாலும், பொதக்குடியான் காரணம் (எனக்கு) தெரியாததாலும், சுல்தான் நேற்று காலை ஆசீப்பிடம் "எப்போது சந்திப்பு?" என்று கேட்டதாலும் வரவில்லை!

குறைந்த ஆட்கள் என்பதாலும், வேறு ஒரு காரணத்தாலும் (காரணம் பின்னர்)மாநாட்டுக்கு என்று ஏற்பாடு செய்யப்பட்ட மேடைக்கு செல்வதைத் தவிர்த்து உணவகத்திலேயே மேஜைகளை இணைத்து மாநாடு தொடங்கினோம். மற்ற காரணம் - உள்ளே நுழைந்தவுடன் உணவகப்பணியாளர் ஒருவர், மாநாட்டுக்காக இருவர் வந்து காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல, ஏதேனும் உளவுப்படையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழ, வேகமாக இடத்தை மாற்றி உளவுப்படையைக் குழப்பிவிட்டோம்.

லியோ சுரேஷ் சந்திப்பைத் தொடங்கிவைத்தார். அடுத்த சந்திப்பிலாவது, நேரம் காக்க வேண்டிய அவசியம், சந்திப்பின் இடமும் நேரமும் எல்லாருக்கும் வசதிப்பட வேண்டிய அவசியம் குறித்துப் பேசினார். தொடர்ந்தது, முத்துக்குமரனின் "பதிவுகள் அவசியமா" என்ற கட்டுரை வாசிப்பும் தொடர்ந்த விவாதங்களும். வாசிப்பு எனச் சொல்ல முடியாமல் நினைவிலிருந்தே நேரடியாகப் பேசினார்.

தொடர்ச்சியாக வந்த விவாதங்களில், பின்னூட்டங்களின் அவசியம் அல்லது அவசியமின்மை குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழன்பு, இசாக் ஆகியோரின் பொதுவான கருத்து பின்னூட்டங்கள் தேவையில்லை என்பதாகவே இருந்தது. "படைப்பாளி என்பவன் ஆறு போல, யார் குளிக்கிறார்கள், யார் கால் கழுவுகிறார்கள் என்று பார்த்தால் படைப்பைத் தொடர்வது அசாத்தியமாகிவிடும்" என்று உதாரணம் கூற, நான் "அது ஆறு போன்ற படைப்பாளிக்கு ஒத்து வரலாம், என்னைப்போன்ற சிறிய நீர்த்தொட்டியுடன் இணைக்கப்பட்ட குழாய்களுக்கு ஒத்துவராது" என்றேன். பின்னூட்டங்கள் சாட் பெட்டிகள் போல மாறும் அபாயத்தையும், விவாதங்களை திசை திருப்பும் அபாயத்தையும் நண்பன் சுட்டிக்காட்டினார். ஆசீப் விக்கிப்பசங்க போன்ற உபயோகமான பதிவுகளிலும் தெரியும் நையாண்டி பின்னூட்டங்களைக் குறித்து கவலை தெரிவித்தார்.

செண்பகராஜ், உள்ளூர்ச் செய்திகள் பெரிதும் எழுதப்படுவதில்லையே என்ற ஆதங்கத்தை தெரிவித்தார். அமீரகத்துக்கே உரிய சில நடைமுறைச் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. செண்பகராஜின் இன்னொரு ஆதங்கம் - துறை சார்ந்த பதிவுகள் பெரிதும் வராதது குறித்து. விக்கி பசங்களுக்கு ஒரு விளம்பரம் அளித்தேன். துறை சார்ந்த பதிவுகளுக்கான தேவைகள் தெரிய வரும்போது (கேள்விகள் மூலமாக) அப்படிப் பதிவுகளும் வரும் என்றேன்.

ரொம்ப சாதுவாக விவாதங்கள் சென்று கொண்டிருப்பதாக உணர்ந்ததால், சொ செ சூ வைக்க ஆரம்பித்தேன். அடுத்த கேள்வியாக நான் முன்வைத்தது:

கவிஞர்களே.. ஏன் கவிதை எழுதுகிறீர்கள்?
கவிப்பகைவர்களே.. ஏன் கவிதையை வெறுக்கிறீர்கள்?

அது அடுத்த பதிவில்..

அடுத்த பதிவுக்கு முன்னோட்டம்:

தம்பி ஏன் பேசவேயில்லை?
லியோ சுரேஷ் ஏன் பதிவு ஆரம்பிக்க பயப்படுகிறார்?
பினாத்தல் ஏன் வாயை மூடுவதேயில்லை?
இன்னும் பல.. காணத்தவறாதீர்!

Dec 3, 2006

வரலாறு பட விமர்சனம் (03 Dec 06)

என் கருத்துப்படி இப்படம்மிக அற்புதமான படம் என்பதில் சந்தேகமில்லை. இந்தப்படத்தின் திரைக்கதை என்னைப்பொறுத்தவரை நன்றாகவே இருந்தது - இப்படிப்பட்ட படங்கள் தயாரிப்பவர்கள், எப்படி எடுக்கவேண்டும் என்பதில் பல விதமான கருத்துகளும், சேர்க்கப்பட்ட சம்பவங்கள், நீக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து பலவிதமான கருத்துகளும் இருக்க வாய்ப்புகள் இருந்தாலும்!

கதை நாயகனின் தந்தையைக் காண்பித்து படம் ஆரம்பிக்கிறது. இரு மகன்கள், ஒருவனுடன் ஆரம்பத்திலேயே போட்டி போட வேண்டிய நிர்ப்பந்தம் தந்தைக்கு. அதில் அவர் பெருமைப்படுவதுடன் படம் ஆரம்பிக்கிறது.

ஏழை விவசாயி மாடசாமியை ஏய்த்து, அவன் சொத்தைப் பிடுங்க ஆசைப்படும் வெள்ளைக்காரனின் புரோக்கர் சார்பாக தந்தையும், மாடசாமி சார்பாக மகனும் ஆஜராகி, மகன் வெல்வதைப் பார்த்து புளகாங்கிதமடைகிறார் தந்தை. பெரும் பணக்காரராக இருந்தாலும், சம்பாதிப்பதில் ஆசை வைக்கச் சொல்லும் தந்தையின் பேச்சை நிராகரித்து, தன் நண்பர்களுடன் சேர்ந்து தேசிய விடுதலைப்போரில் ஈடுபடும் மகன் வ உ சிதம்பரமாக சிவாஜி கணேசனும், மாடசாமியாக ஜெமினி கணேசனும், நண்பர்கள் பாரதியாக எஸ் வி சுப்பையாவும் சுப்பிரமணிய சிவாவாக _______உம் வாழ்ந்திருக்கிறார்கள். (சு சிவாவாக நடித்த நடிகர் பெயர் யாருக்காவது தெரியுமா, பின்னூட்டுங்களேன்).

வாழ்க்கை வரலாற்றைப் படம் பிடிப்பதில் உள்ள எல்லாச்சிக்கல்களையும் பந்துலுவும் சந்தித்திருப்பார். எந்தச் சம்பவங்களைச் சேர்ப்பது, எதை விடுப்பது, எவை சுவாரஸ்யத்தைக் கூட்டும், எவை கருத்தை வலியுறுத்தும் என்பது போன்ற சிக்கல்கள். மங்கள் பாண்டேவின் வாழ்க்கையில் பதிந்த விவரங்கள் மிகச்சிலவே என்பதால் சம்பவங்களால் அமீர்கான் குழுவால் சுவாரஸ்யத்தைக் கூட்ட முடியவில்லை. உயர்வு நவிற்சியாக சொல்லப்போனதால் நிகழ்வுகள் பெரிதுபடுத்தப்பட்டுவிட்டன என்பது வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்குக் கிடைத்த விமர்சனம்.

இந்தச் சிக்கல்களோடு பார்க்கையில், கப்பலோட்டிய தமிழன், இவ்விரண்டு எல்லைகளையுமே தொட்டுவிடாமல், பதியப்பட்ட விஷயங்களை மட்டுமே பேசி இருக்கிறது. தன் சொத்தையெல்லாம் விற்று கப்பல் வாங்குதல், தொழிலாளர் போராட்டத்துக்காக குழந்தைகள் அணிகலன் வரை இழத்தல், சிறையில் பட்ட இன்னல்கள், நோய்வாய்ப்பட்டு இறத்தல் என்ற சிதம்பரனாரின் வாழ்க்கை நிகழ்வுகள் மட்டுமின்றி, அரிசிக்குக் காசில்லாதபோதும் குருவிகளுக்கு இறைத்து வேடிக்கை பார்க்கும் பாரதியார், வீராவேசமாகப்பேசி, சிறையில் தொழுநோய் பெற்று ஒடிந்துபோகும் சிவா, ஆங்கிலேயக் கப்பலுக்கு வெடிவைக்கத் துணியும் மாடசாமி, மணியாச்சியில் ஆஷைச் சுட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளும் வாஞ்சிநாதன் போன்ற சமகால கதாபாத்திரங்களையும் தொட்டுச் சென்று, சுவாரஸ்யம் குறையாமல் செல்கிறது திரைக்கதை.

பாடல்கள் படத்தின் மிகப்பெரிய பலம். எல்லாம் பாரதியார் பாடல்களே என்றாலும், காட்சிகளுக்குத் தக்கவாறு சரியாகத் தேர்ந்தெடுத்ததில் இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும் பாராட்டுகள் உரித்தாகின்றன. காதல் வேளையில் "காற்று வெளியிடை", கப்பல் வெள்ளோட்டத்தின்போது "வெள்ளிப்பனிமலையின் மீதுலாவுவோம்", செக்கிழுத்து கஷ்டப்படும் வேளையில் "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்", சுதந்திரம் பெறாமலே இறக்கும் வேளையில் "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" - அருமையான தேர்வுகள். மெட்டுகளும் காட்சிகளின் உணர்ச்சியோடு இழைந்திருக்கின்றன. குறிப்பாக கடைசிப்பாடலில் "பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?" என்று சோகக்குரலில் வரும் வரிகள் உள்ளத்தைத் தொடுகின்றன.

நடிப்பைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். முதல் பாதியில் அதிக ஸ்கோப் இல்லையென்றாலும், சேரிச்சிறுவனை வீட்டுக்கழைத்து வருகையில் அவர் பேசும் வசனங்கள், ஒரே கோர்ட் காட்சியில் வாதாடும் பாங்கு, ஒரு செல்வந்தர் + தேசப் போராட்ட வீரர் இரண்டும் கலந்த மிடுக்குடன் கூடிய பாடி லேங்குவேஜ் - அசத்துகிறார். இரண்டாம் பாதியில், சிறை சென்று மீண்ட வேதனையுடன், தொழுநோயால் பாதிக்கப்பட்ட சிவாவைச் சந்திக்கும் காட்சி, கப்பலுக்காக விற்ற உப்பளமும், கப்பலும் ஆங்கிலேயனால் விழுங்கப்பட்டதைப் சோகத்தோடு பார்க்கும் காட்சி - தொழில்நுட்பங்கள் காட்சிக்கு அதிக அழகு வேண்டுமானால் சேர்க்கலாம், ஆனால் ஆதாரமாக நல்ல நடிகன் தேவை என உணர்த்தும்.

தலைப்பில் ஒரு பிழை - வரலாறு பட விமர்சனம் என்பதற்குப் பதிலாக வரலாற்றுப்பட விமர்சனம் எனப்படிக்கவும்.

அஜித் நடித்த வரலாறுக்கும் இதற்கும் ஒரே தொடர்புதான் - அந்தப்படத்தைப்பார்க்க ஆரம்பித்து மூன்றாம் சீனில் வெறுத்து, மீண்டும் ஒருமுறை கப்பலோட்டிய தமிழன் பார்க்க ஆரம்பித்ததுதான்:-)

 

blogger templates | Make Money Online