Oct 3, 2011

நித்யஸ்ரீ @ துபாய்


துபாயில் இரண்டாவது தமிழ்ப் பொருளாதார மாநாடு நடைபெறுவதாக செய்தி வந்தது.. எனக்கு பொருள் இருப்பதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லாததால், அது வெறும் செய்தியாகவே முடிந்துவிடும் என்றுதான் நினைத்தேன்.

ஆசிஃப் மீரான் சொன்னார், நித்யஸ்ரீ கச்சேரி இருப்பதாக. மேலும் சொன்னார்: தகவல் மட்டும்தான், டெலிகேட் ஃபீஸ் கட்டினவர்களைத்தவிர வேறு யாரையும் உள்ளே விடமாட்டார்கள்.

நான் சாஸ்திரீய இசையைப் பொறுத்தவரை ஔரங்கசீப்பின் ரசிகன். அப்படி இருக்கும்போது, நான் இதற்குப் போவேனா? நிச்சயம் போவேன். ஏன்? நான் ஔரங்கசீப்பாக இருக்கும் பட்சத்தில், என் உற்ற பாதி அதற்கு மாறாகத்தானே இருந்தாக வேண்டும்? அப்படி இருக்கும்போது போகாமல் இருக்க முடியுமா?

கடைசி நேரத்தில் அனுமதிக்க வாய்ப்பிருக்கிறது என்று ஆசீப் செய்தி அனுப்ப, சென்றோம், பார்த்தோம், கேட்டோம், ஒரு மணிநேரம் இசையில் அமிழ்ந்தோம்.


வினாயகரில் ஆரம்பித்து, அங்கயற்கண்ணி, சிவன், முருகன், அபிராமி, மீனாட்சி, கண்ணன் என்று சுவாமிகளை கிரமப்படி ஆறு பாடல்கள் பாடிமுடித்தபின், துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் மீட்டினார். ஓம் சக்தி ஓம் சக்தி என்று வேகமெடுத்து உச்சம் சென்று, விமானத்துக்கு நேரமானதால் ”எங்கள் நாட்டுக்கு எந்த நாடு ஈடு” என்று முடித்தார்.

எட்டு அருமையான பாடல்கள், எல்லாம் தமிழ்ப்பாடல்கள், அருமையான அரங்கத்தில், நல்ல ஒலி அமைப்பில், கணீர்க் குரலில் - எங்கே இருக்கிறோம் என்றே புரியாத ஒரு நிலைக்கு இட்டுச்சென்றதென்னவோ நிஜம். நான் கூட மாறிவிடுவேனோ என்றே தோன்ற ஆரம்பித்து விட்டது.

நல்ல மாலை, நன்றி ஆசிஃப்!

1 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் said...

மறு பாதி ஏன் எதிர்மறையாக இருக்கவேண்டும்? (பெரும்பான்மை)-கட்டிய பிறகு மாறுகிறோமா அல்லது ஜாதகத்தில் தெளிவாக தெரிந்து ஒத்துக்கொள்கிறோமா?

 

blogger templates | Make Money Online