Oct 31, 2011

Vintage (சவால் சிறுகதை-2011)

அந்த அறை க்ளைமாக்ஸ் சண்டை போடும் இடம் போல கலந்து கட்டி இருந்தது. ஒட்டுப்போட்ட டேபிள் மேல் கம்ப்யூட்டர், காஃபி கப், பழையகாலத்து ஏர்கூலர் ஒன்று டிவியின் சத்தத்துக்கு மேல் இறைந்துகொண்டு, பெட் மேல் சார்ஜர்கள், செய்தித்தாள், ஒரு ஹேர் ஆயில் பாட்டில் திறந்து கொட்டிக்கொண்டு இருந்தது. சேரில் இருந்த வாழைப்பழத் தோலை நகர்த்திவிட்டு அமர்ந்தான் ராம். 

"எனக்கு எவ்ளோ கிடைக்கும்?" என்றான் ராம்.

"அதுக்குள்ள பங்கு பிரிக்க முடியுமா? முதல்ல எவ்வளவு தேறுதுன்னு பாக்கலாம்." விஷ்ணு சட்டைக்கு மேல் ஜாக்கட்டை அணிந்துகொண்டான். 

"சரி, அமவுண்ட் வேண்டாம், பர்சண்டேஜாவது சொல்லு"

"ரிஸ்க் மொத்தம் எனக்குதாண்டா. உனக்கு என்ன வாழுது.. எதாவது பாத்துப் போட்டுக் கொடுக்கறேன்"

"நான் என்ன ஆட்டோவா ஓட்டறேன்? பாத்துப் போட்டுக் கொடுக்க? உன் மொத்த ப்ளானுமே என் வேலைலேதான் இருக்கு."

"சரிடா. பாத்துக்கலாம். நான் கிளம்பறேன். அவனுங்களுக்குத் தெரிஞ்சா ப்ராப்ளம் ஆயிடும்"

"சார் ஆளுங்களுக்கா?"

"சாரோ, கோகுலோ.. எவன் ஆளுகிட்டயும் மாட்டக்கூடாது.. ப்ளான் சரியா முடியற வரைக்கும்.." விஷ்ணு சன்கிளாஸஸை அணிந்துகொண்டான். ஷூவ்வுக்கு உள்ளே காலை நுழைத்து, வெளியேறினான்.

ராம் கையில் இருந்த உறையைப் பிரித்தான். ஒரு செல்பொன் குதித்தது. அதைக் கீழே விழாமல் பிடித்து மேஜையில் வைத்தான். கதவு டமாரென்றது.

"சொல்ல மறந்துட்டேன். நான் ஈமெயில் அனுப்பிட்டு கால் பண்ணுவேன். பிரிண்ட் எடுத்துக்கோ. அடுத்த கால் வந்தவுடனே  மெசேஜை அனுப்பிடணும்" விஷ்ணு பாதிக்கதவைத் திறந்து சொன்னான். சொன்ன வேகத்தில் காணாமல் போனான்.

ராம் ஃபோனை எடுத்துப் பார்த்தான். ஸ்மார்ட் ஃபோன்! ஒண்ணும் இல்லாட்டியும் இதையாவது லவட்டிட வேண்டியதுதான்!

***
விஷ்ணு தெருவுக்கு வந்தான். மார்க்கெட் கூட்டம் அவனை வரவேற்றது. எப்படித்தான் இருக்கிறானோ ராம் இந்தத் தெருவில்.

ஃபோன் அடித்தது. இப்போது எடுக்கக்கூடாது. கூட்டசத்தம் காட்டிக்கொடுத்துவிடும். எடுத்துப்பார்த்தான். கோகுல். இரண்டு கடைகளுக்கு நடுவில் இருந்த ஒரு சந்தில் நுழைந்தான். 

"எஸ் பி சார்.. நானே கூப்பிடறதா இருந்தேன். இன்னும் தகவல் வரலை. வந்ததும் அனுப்பிடறேன்"

"டைம் ஆயிட்டிருக்கு விஷ்ணு.. இன்னிக்கு ஈவனிங்தானே கைமாத்தப்போறாங்க?"

"அப்படிதான் சார் கேள்விப்பட்டேன்..சரி சார்.. யாரோ வராங்க.. பேச நேரமில்லை.."

வியர்த்ததைத் துடைத்துக் கொண்டான். டூவீலர்களின் நீஈண்ண்ட வரிசையில் வண்டியைத் தேடிக்கண்டுபிடித்தான். சார் வீட்டுக்கு இன்னும் ஐந்து நிமிடத்தில் போய்விடவேண்டும்.

சார் வீட்டில் திருவிழா போல கார்கள் இருந்தன. அந்தக்காலத்து ஓட்டை மாடல்கள் பளபளப்பாக நின்று கொண்டிருந்தன. ஒரு ஆள் வேக்ஸைத் தேய்த்து பாலிஷ் போட்டுக்கொண்டிருந்தான்.

ஆள்படைகளைத் தாண்ட "சார்தான்பா வரச்சொன்னாரு" "தெரியுமாடா இவனை" அட விடுப்பா நம்மாளுதான்" எல்லாம் தேவைப்பட்டது. வராந்தாவில் பழங்காலத்து பெரிய ஈசிசேர் ஒன்றில் அதனோடேவே பிறந்தாரோ என்று யோசிக்க வைக்கும் ஆகிருதியில் இருந்தார் சார்.

"வாடா.. என்ன லேட்டு?"

"சாப்டுட்டு வந்தேன் சார்"

"இன்னிக்கு சாயங்காலம் வேலை ஆயிடணும் தெரியுமா?"

"ஆயிடும் சார்.."

"அந்த எஸ்பி?"

"அந்தக் கவலையை விடுங்க சார்..அந்தாளைக் கொழப்பி விட்டுடறேன்"

"போலீஸைக் குழப்பறவண்டா நீ.. நீயா இன்ஃபார்மர்?"

"அது ஒரு காலம் சார்.. இப்ப எல்லாம் உங்களுக்கு மட்டும்தான் இன்ஃபார்மர்"

"உன்கிட்ட இருந்து தகவல் வந்தவுடனே ஆள் அனுப்பிடுவேன்"

அதுக்குள்ள நான் எங்கேயோ பறந்துடுவேன். "சரி சார்.. கிளம்பறேன். ஆஃபீஸ்லே கொஞ்சம் வேலை இருக்கு"

***
தூங்கத் தொடங்கி விட்டிருந்த ராமை அடித்து எழுப்பியது மொபைல் சத்தம். விஷ்ணு இன்ஃபார்மர் என்றது திரை. "படிச்சு வாங்கின பட்டம் மாதிரி போட்டுகிட்டிருக்கான் பாரு."

"மெயில் வந்ததா?"

"இருடா பாக்கறேன்.."  கம்ப்யூட்டருக்கு எலியசைத்து உயிர் கொடுத்தான்.

"ரெண்டு மெசேஜ் அனுப்பி இருக்கியே"

"ஆமாம். முதல் மெசேஜ் எஸ் பி கோகுல்நாத்க்கு ரெண்டாவது சார்க்கு"

"அவங்க நம்பர்?"

"ஸ்டோர் பண்ணி வச்சிருக்கேன்.. அதனாலதானே என் மொபைலை உன் கைலே கொடுத்தேன்"

"என்னடா கோட் இது? இப்படியே அடிக்கணுமா?"

"ஆமாம்.."என்ற விஷ்ணு ஒரு வினாடியில் சிரித்தான்.."அவசியமில்லை. ரெண்டு பேருக்கும் உண்மையான கோட் போகப்போறதில்லை!"

"அப்ப?"

"உண்மையான நம்பர் என்கிட்ட வந்துடுச்சு.. இன்னும் பத்து நிமிஷத்துல வேலை முடிஞ்சுடும்"

"இதை நீயே அனுப்பி இருக்கலாமேடா.. எனக்கு ஏன் வேலை கொடுக்கறே?"

"நான் ஊரை விட்டு ஓடினப்புறம்தான் அவங்களுக்கு மெசேஜ் போகணும். அதனாலதான் உன்னைப் பிடிச்சேன்."

"எப்ப அனுப்பணும்?"

"ராத்திரி எட்டு மணிக்கு..எதுக்கும் நான் கால் பண்றேன்.. மெசேஜ் அனுப்பின உடனே ரெண்டு பேரும் கால் பண்ணுவாங்க.. சிம்மைத் தூக்கிடு"

***
ரெட்டி கடை வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்.

"வாடா விஷ்ணு.. நம்பர் கெடைச்சுதா?"

"நம்பர் இல்லை ரெட்டி.. கோட் வார்ட்."

"நாம என்ன தங்கமா கடத்தறோம்? கோட் வார்ட் எல்லாம் வச்சுக்க? ஏலத்துல பழைய கார் வாங்கப்போறோம், அவ்ளோதானே?"

"சாதாரணமா சொல்லாதீங்க ரெட்டி..இதுக்கு எவ்ளோ போட்டி தெரியுமா? வாங்க உள்ளே போய் ஏலம் கேக்கலாம்"

ஏலக்கடையில் ஐட்டம்களைக் கூவிக்கொண்டிருந்தார்கள். "லண்டன் கார்..ஆரம்ப விலை.."

"இப்ப கேளுங்க ரெட்டி" என்ற விஷ்ணு ஃபோனில் ராமை அழைத்தான்.
***

ராம் இரண்டு ப்ரிண்ட் அவுட்களையும் பார்த்துக்கொண்டிருந்தபோது ஃபோன் அடித்தது. விஷ்ணு இன்ஃபார்மர் என்றது ஃபோன்.

ஃபோனை எடுத்து "அனுப்பிச்சுடறேன்" வைத்துவிட்டான்.
***
ரெட்டி வாயெல்லாம் பல்லாக வெளியே வந்தார். "அப்பாடா.. அந்தக் காரை முடிச்சுட்டோம்.. இல்லாட்டி ப்ரச்னை ஆயிருக்கும்"

"என்ன ரெட்டி.. ஆசைக்குதானே கார் வாங்கறேன்னீங்க"

"அது உன்னை ஏமாத்த. போலீஸ் எஸ்பி கோகுல்க்குதான் ஆசை. அவர்தான் உன்னை காண்டாக்ட் பண்ணச் சொன்னாரு"

விஷ்ணு அதிர்ந்தான். காட்டிக்கொள்ளாமல் "அவருக்கு ஏனாம் இந்தக் காரு?"

"அவருக்கும் வேணாமாம். சார் தெரியுமில்ல? அவருக்காகத்தான் கோகுல் வாங்கறேன்னாரு"
 
விஷ்ணுவுக்கு எந்தப்பக்கம் ஓடுவது என்று தெரியவில்லை.
______________________________________________________10 பின்னூட்டங்கள்:

ஷைலஜா said...

///அவருக்கு ஏனாம் இந்தக் காரு?"
"அவருக்கும் வேணாமாம். சார் தெரியுமில்ல? அவருக்காகத்தான் கோகுல் வாங்கறேன்னாரு" விஷ்ணுவுக்கு எந்தப்பக்கம் ஓடுவது என்று தெரியவில்லை. ______________________________________________________
////

கடசில இப்படியா?:) ரசிச்சேன் வெற்றிக்கு வாழ்த்து!

Unknown said...

நல்ல இருக்கு....வாழ்த்துக்கள்.
அப்படியே என்னோட கதையையும் படிச்சுடுங்க..
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

இராஜராஜேஸ்வரி said...

"நாம என்ன தங்கமா கடத்தறோம்? கோட் வார்ட் எல்லாம் வச்சுக்க? ஏலத்துல பழைய கார் வாங்கப்போறோம், அவ்ளோதானே?"

வெற்றிக்கு வாழ்த்து!

Vijayashankar said...

Nice! வாழ்த்து!

middleclassmadhavi said...

நல்லாயிருக்கு கதை! வாழ்த்துக்கள்

நம்பிக்கைபாண்டியன் said...

நல்ல கதை, இப்பொழுதுதான் படிக்க முடிந்தது, வெற்றி பெற்றதற்கு இனிய வாழ்த்துக்கள்!

Unknown said...

வாவ்.....வாழ்த்துக்கள்.....
தொடரட்டும் வெற்றிகள்.

Asiya Omar said...

வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

சற்றும் எதிர்பாராத முடிவு. நல்லா இருக்குங்க. பரிசு பெற்றதற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

seenuguru.blogspot.in/2012/03/blog-post_26.html said...

//கம்ப்யூட்டருக்கு எலியசைத்து உயிர் கொடுத்தான்// . intha line romba superb boss...screen play nice...nala naration....

 

blogger templates | Make Money Online