Mar 20, 2006
யார் சொன்னது துக்ளக் நடுநிலையற்றது என்று? (20 Mar 06)
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 18 பின்னூட்டங்கள்
Mar 15, 2006
அனில் கும்ப்ளே - 500 (15Mar06)
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 8 பின்னூட்டங்கள்
Mar 7, 2006
மகளிர் தினம் - சிறப்புச் சிறுகதை March 8, 2006
மு கு: இந்த சிறுகதையும் நான் கேள்விப்பட்ட ஒரு உண்மைச்சம்பவத்தைத் தழுவியதே. ஒரு பெண் பார்வையில் கதையைச் சொல்வது கஷ்டமாக இருந்தாலும் முயற்சித்திருக்கிறேன். ரொம்ப நாட்களாக எழுதத்திட்டமிருந்த கதை, இன்று கூடிவரவும், மார்ச் 8 ஆக இருப்பதாலும் நேரடியாக வலைப்பதிவிலேயே ஏற்றிவிட தீர்மானித்தேன், அச்சுக்கு முயற்சிக்காமல்.
________________________________________________________
மகளிர் தினம் - சிறப்புச் சிறுகதை
"ராஜி ராதா கார்மெண்ட்ஸ்" பளபளப்பாய்த் தெரிந்தது போர்டு. தினமும் துடைக்கிறான் போல. வாட்ச்மேனுக்கு ஒரு ஐம்பது ரூபாய் இந்த மாதம் கூட்டி விட வேண்டும்.
உற்சாகமாக இருக்கிறது மனது. பூக்காரி கூடக் கண்டுபிடித்துவிட்டாள். "என்னம்மா ரொம்ப சந்தோஷமா இருக்கிறே?" என்றாள். ஏன் இருக்க மாட்டேன்? சாதாரணமான வெற்றியா கிடைத்திருக்கிறது? ஐந்து வருடப் போராட்டத்துக்குப் பின்.. எவ்வளவு தோல்விகள், காயங்கள்.. நினைக்காதே.. அதையெல்லாம் பற்றி நினைக்காதே.. இன்று நீ சந்தோஷமாக இருக்க வேண்டிய நாள்..
"வணக்கம்மா.. இன்னிக்கு சீக்கிரமாவே வந்துட்டீங்க?"
"கொஞ்சம் வேலை இருக்கு - அதான்" சம்பளத்தை அதிகப்படுத்துவதைப்பற்றி அப்புறம் சொல்லிக்கொள்ளலாம்.
கைப்பையில் துழாவி சாவியை எடுத்துக் கதவு திறக்கும் போதே டெலிபோன் மணி அடித்துக்கொண்டிருந்தது.
அவசரமாக பையை வைத்துவிட்டு போனை எடுத்து "ராஜேஸ்வரி ஸ்பீக்கிங்" என்றேன்
"ராஜியாம்மா? நான் வேதாசலம் பேசறேன், வாழ்த்துக்கள்மா"
"சார் நீங்களா? ரொம்ப நன்றி சார்"
" கம்பெனி ஆரம்பிச்சு ஒரு அஞ்சு வருஷம் இருக்குமாம்மா? சீக்கிரமே சாதிச்சிட்டேம்மா"
"எல்லாம் உங்க ஆசீர்வாதம் சார், எல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்ததுதானே?"
"சரி எத்தனை பேர் பழசையெல்லாம் நெனச்சு பாக்கறாங்க"
"உங்ககிட்டேயே போட்டின்றது வருத்தமா தான் சார் இருந்துது"
"அதிலே என்னம்மா இருக்கு.. இது பிஸினஸ். இதெல்லாம் சகஜம்தானே"
"காலையிலே முதல் போனே உங்ககிட்டே இருந்து. ரொம்ப சந்தோஷம் சார்"
"பெரிய காண்ட்ராக்டா இருக்கேம்மா.. எதாச்சும் பிரச்சினைன்னா தயங்காம என்கிட்டே பேசும்மா, வேத்தாளா நினைக்காதே."
"எங்களால முடியும்னுதான் சார் நம்பறோம், உங்க வார்த்தையே பெரிய பலம் சார்"
போனை வைத்துவிட்டு சாமி படங்களுக்கு ஊதுபத்தி ஏற்றி நமஸ்காரம் செய்துவிட்டு அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் கையெழுத்திட்டிருக்கும்போது வெளியே சலசலப்பு ஆரம்பித்துவிட்டது. மணி பார்த்தேன் -ஏழேமுக்கால். சூப்பர்வைஸர் வந்துவிட்டிருப்பார். தையல் பெண்களும் வர ஆரம்பிக்கும் நேரம்தான்.
போனை எடுத்துச் சுழற்றி "கீதா இருக்காங்களா?"
கீதா வந்து "யாரு" என்றாள்.
" நான் தான் ராஜேஸ்வரி பேசறேன். ஸ்ருதி வந்து சேர்ந்துட்டாளா?"
"வந்துட்டாங்க, அப்புறம் ஒரு விஷயம்"
"சொல்லுங்க"
"ராத்திரி ஒன்பது மணிக்கு மேல லேட் பண்ணாதீங்க.. எங்க வீட்டுக்காரர் கத்தறாரு"
"தினமுமாம்மா அப்படி ஆகுது, இப்போ கொஞ்சம் அதிக வேலை அதுனாலதான் ஒரு வாரமா அப்படி ஆயிடுது"
போனை வைப்பதற்குக் காத்திருந்து உடனே மறுபடி அடித்தது.
"மிஸஸ் ராஜேஸ்வரி? வின்சென்ட்"
"சொல்லுங்க சார்"
"இன்னிக்கு பத்து மணிக்கு சைதாப்பேட் ஃபேமிலி கோர்ட், ஞாபகம் இருக்கில்ல?"
"கொஞ்சம் கஷ்டம்தான் இருந்தாலும் வந்துடறேன் சார். இன்னும் எவ்வளவு நாள்தான் சார் இந்தக்கேஸ் இழுக்கும்?"
"நான் தான் முன்னமே சொன்னேனே மேடம், எக்ஸ் பார்ட்டி செட்டில்மெண்டுக்கு ஒத்துகிட்டா போதுமுன்னு சொல்லறாங்க"
"ஆனா குழந்தையை அவர் வைச்சுக்க விட முடியாதுங்க"
"அப்ப ராகவன் வாய்தா வாய்தாவா இழுப்பார், வேற வழி இல்லை"
போனை வைத்தவுடன் "நீ யாருக்கு வக்கீல்" என்றேன்.
காபியைக் கொண்டுவைத்த பெண்ணிடம் "ராதா மேடம் வந்துட்டாங்களா? என்றேன்.
"இன்னும் வரலைம்மா"
இன்னுமா வரவில்லை? மணி பத்து ஆகிவிட்டதே.
மறுபடி போனைச்சுழற்றி "ராதா?"
" இல்லை நான் சிவா"
"நல்லா இருக்கீங்களா சார்? ரொம்ப நாளாச்சு பாத்து -- ராதா இன்னும் ஆபீஸ் வரலியே, கிளம்பிட்டாங்களா"
"ராதா வரமாட்டா"
"உடம்பு சரியில்லையா"
"இல்லை - நிரந்தரமாவே வரமாட்டா" ஜோக்கடிக்கிறாரா என்ன?
"என்ன சார் தமாஷ் பண்ணரீங்க?"
"தமாஷா? உன்கிட்டே எனக்கு என்ன தமாஷ்? சீரியஸ்ஸாதான் சொல்லறேன். இனி ராதா வரமாட்டா. நாளைக்கு காலையிலே வந்து கணக்கை பிரிச்சிக்கறோம்"
அடிவயிற்றில் குபீரென்றது. குரலில் கோபம்தான் தெரிகிறது. ஒருமையில் பேசமாட்டாரே..
"என்ன சார் இது திடீர்னு?"
"சொன்னா புரியாது? உன்கூட இருந்த டீலிங் எல்லாம் போதும். தனியா கம்பெனி ஆரம்பிக்கப் போறோம் - கணக்கையெல்லாம் சரி பண்ணி வை, நாளைக்கு வர்றோம்" போனை வைத்துவிட்டார்.
காலையில் இருந்த உற்சாகம் மொத்தமாக வடிந்துவிட்டது. நெற்றியில் வியர்வை துளிர்க்கத் தொடங்கியது. "ஏன் ஏன் ஏன்?"
"ஏன் இப்போது? என்ன நடந்தது? எப்படி சமாளிக்கப்போகிறோம்" ஆயிரம் கேள்விகள். அடிமனத்தில் "எல்லாம் கனவு" என்று எழுந்திருக்கப்போகிறோம்.. இல்லை - உண்மைதான். என்னவோ நடந்திருக்கிறது. இதை வளரவிடக்கூடாது. உடனே சரி செய்ய வேண்டும்.
நிலைமையை சீர்தூக்கிப் பார்த்தேன்.
ராதா இப்போது விலகினால் பாதிக்கம்பெனியும் மெஷின்களும் அவளுடன் போய் விடும். இந்தக் காண்ட்ராக்டை முடிக்க நினைப்பது கனவுதான். முதலில் ராதாவே காண்ட்ராக்டையும் கேட்டாலும் கேட்கலாம். அவளுக்கும் நஷ்டம்தான் - ஆனால் அவளைத் தாங்க கணவர் இருக்கிறார். நான் விழுந்தால் எழ முடியாது.
என்ன நடந்திருக்கும்? நான் க்ரெடிட் எடுத்துக்கொண்டுவிடப்போகிறேன் என்ற பொறாமையா? யாருக்கு வெற்றி வந்தால் என்ன? லாபம் இருவருக்கும்தானே? சேச்சே பொறாமையாக இருக்காது..
எல்லா வேலையும் கிடக்கட்டும். உடனே அவள் வீட்டுக்குப் போகவேண்டும். சூப்பர்வைஸரைக்கூப்பிட்டேன்.
"எல்லாருக்கும் பீஸ் கொடுத்துட்டீங்களா?"
"ஆச்சு மேடம்"
"சரி கொஞ்சம் ராதா மேடம் வீடு வரை போயிட்டு, அப்படியே சைதாப்பெட் போகணும்.. ட்ரெயின்லே நேரமாயிடும், ஆட்டோக்கும் தூரம் அதிகம், கொஞ்சம் ராதா வீட்டுக்கு போயிட்டு அப்புறம் என்னை ரயில்வே ஸ்டேஷன்லே ட்ராப் பண்ணிடறீங்களா?"
ராதா வீட்டு வாசலில் அவள் கணவர்தான் நின்றுகொண்டிருந்தார்.
"எங்கே வந்தீங்க?"
"இல்லை ராதாவைப் பாத்து பேசிட்டு போகலாமுன்னு"
"உன்கிட்டே என்ன பேசறது - நீ அவளை ஏமாத்தி சுருட்டினது எல்லாம் பத்தாதா?"
நானா? சுருட்டினேனா! இது என்ன புதுக் குற்றச்சாட்டு?
"என்ன சார் சொல்லறீங்க? கணக்கை யெல்லாம் ராதாதானே பாத்துக்கறா?"
"அப்ப அவள் சுருட்டினான்னு சொல்லறயா?"
இது என்ன விதண்டாவாதம் பேசுகிறார்.. ஒன்று மட்டும் புரிந்தது. முடிவை எடுத்துவிட்டு காரணம் தேடுகிறார்.
"ராதாவைப் பார்க்கணும்"
"நீ மட்டும் உள்ளே வா"
சூப்பர்வைஸரை குற்ற உணர்வோடு பார்த்தேன்.
"நான் இங்கேயே இருக்கேன் மேடம், நீங்க பேசிட்டு வாங்க"
ராதா வீடுக்குள் சோபாவில் அமர்ந்து கொண்டிருந்தாள். அவள் பார்வையில் விரோதமும் குழப்பமும் கலந்திருந்தன. உட்காரச் சொல்லவில்லை.
"என்ன ஆச்சு ராதா? என்ன பிரச்சினை சொல்லு?"
"உன்கூட இருந்தா நானோ என்கூட இருந்தா நீயோ முன்னேற முடியாதுன்னு தோணுது. அதனால பிரிஞ்சுடறதுதான் நல்லது"
"அதுக்கு சரியான நேரம் பார்த்தியே.. ஒரு ஆறு மாசம் பொறுத்துக்கோ. இந்த காண்ட்ராக்ட் முடிஞ்சதும் பிரிச்சிக்கலாம்"
"பிரியறதுக்கு முடிவெடுத்ததுக்கு அப்புறம் நேரமா பாக்க முடியும்? அது மட்டும் இல்ல.. அந்த காண்ட்ராக்டும் எங்க பங்குதான்" சிவாதான் பதில் சொல்கிறார். அவள் பேசவில்லை. என்னதான் நடக்கிறது?
"கெஞ்சிக்கேக்கறேன் ராதா.. ஒரு ஆறு மாசம்.."
"அவள் இருந்தான்ன, உனக்கு ஆபீஸுக்கு மட்டுமில்ல, கோர்ட்டுக்கும்தான் கூடவரவேண்டி இருக்கும்"
இப்போது புரிகிறது.. முடிவு இவருடையது..
என்ன செய்வது எனப்புரியவில்லை. இப்போது கோபப்பட்டாலோ, யோசிக்காமல் வார்த்தையை விட்டாலோ பிரச்சினையின் தீவிரம் அதிகமாகிவிடும். ஓரிரு நாள் ஆறப்போடலாம். பிறகு ராதாவிடம் தனியாகப்பேசிப்பர்க்கலாம்..
"இப்படி நட்டாத்துலே விட்டுட்டுப் போறது உனக்கே சரியான்னு யோசிச்சுப்பாரு" சொல்லி எழுந்தேன்.
என் பின்னாலேயே கதவு அறையப்படும் சத்தம் கேட்டது. எனக்கு அழுகை வராதது ஆச்சரியமாக இருந்தது. நிராகரிப்புகளும், ஏமாற்றங்களும் பழகிவிட்டன.
வெளியே வந்ததும்தான் கவனித்தேன். என் கைப்பை வீட்டுக்குள்ளேயே விட்டுவிட்டேன்.
கதவைத் தட்ட யத்தனிக்கும் முன்னே உள்ளே இருந்து பேச்சு கேட்டது.
"வேதாசலம் எப்படி மனுஷன்? சொன்னா சொன்னபடி செயாவாரா?"
"நானும் ராஜியும் அவர்கிட்டேதான முதல்லே வேலை பார்த்தோம்.. அதெல்லாம் கரெக்டா தந்துடுவாரு."
"அவர் சொன்னப்ப கூட நான் நம்பலைடி.. இப்போகூட அந்த சூப்பர்வைஸர் கூடவே வந்திருக்கான் பாரு"
"உங்களுக்கு என்னங்க, கூடவே இருந்த எனக்கே தெரியாது.. சேர்ந்து சேர்ந்து எல்லா இடத்துக்கும் போவாங்க, அப்படித்தான் எங்கேயோ வேதாசலம் பார்த்திருக்கணும்"
இப்போது எனக்கு அழுகை வந்தது.
_____________________________________________________#5
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 15 பின்னூட்டங்கள்
Mar 6, 2006
சன் டிவி - திமுக கூட்டணிக்கு பலமா? (05 Mar 06)
பெற்ற முதலிடத்தைத் தக்க வைத்துக்கொள்வது ஊடகங்களின் அடைபட்ட சுழற்சியில் சுலபமே. (நிறைய பேர் பார்க்கிறார்கள் - அதிக விளம்பர வருவாய் - அதிக செலவில் நிகழ்ச்சிகள் - நிறைய பேர் பார்க்கிறார்கள்--)
சாதாரண நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, செய்திகளில் கூட தமிழ்த் தொலைக்காட்சிகளில் சன்டிவியே அதிகப் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது (TRP).
பெரும்பான்மைத் தமிழ்நாட்டிற்கு பொழுதுபோக்கும் செய்திகளும் வழங்குவதால், அரசிய்லிலும் மிகப்பெரிய சக்தியாக இருந்திருக்க வேண்டிய சன் டிவி, திமுக கூட்டணிக்கு பெரிய பலவீனமே என்றே நான் கருதுகிறேன்.
சன்டிவி திமுக கட்சியின் பிரச்சார பீரங்கியா? இதை ஒரு அடிமட்ட திமுக தொண்டன் ஒத்துக்கொள்வானா? கலைஞர் தவிர்த்து சன்டிவியில் காட்டப்படும் திமுக (இரண்டாம் நிலை) தலைவர்களின் பெயர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மு க ஸ்டாலினையே எப்போதாவதுதான் கண்டுகொள்கிறார்கள் எனும்போது, துரைமுருகனும், பொன்முடியும் புலம்பிப் பிரயோஜனமில்லை.
தயாநிதி மாறனின் அனைத்து நிகழ்ச்சிகளும் காட்டப்படும்போது கலைஞர் பங்குபெறாத மாநில மாநாடுகளும் ஒருவரிச்செய்தியாகவும் இடம்பெறாமல் போவதை திமுக தொண்டர்கள் கவனித்துக்கொண்டுதான் இருப்பார்கள். இதுபோன்ற நிகழ்வுகள், திமுக ஒரு குடும்பக்கட்சி மட்டும்தான் என்ற தோற்றத்தை கடைநிலைத் தொண்டனுக்கும் ஏற்படுத்தி விடுவதால், கட்சி உணர்வு குறையத்தான் செய்யுமே அன்றி கூடப்போவதில்லை.
கூட்டணிக்கட்சிகளைப் பொறுத்தவரை, சன்டிவி வைகோ மனத்தில் ஒரு ஆறாத வடுவாகவே இருந்து வந்திருக்கிறது. அணி மாறிய நேற்றைய செய்திகளில் வைகோ 2002-இல் பேசியது, 2004-இல் பேசியது என்று அடுக்கி 15 நிமிஷம் காண்பித்தையெல்லாம், அந்த 2002இலும் 2004-இலும் அரை நிமிஷம் காட்டியிருந்தால் கூட அவரைத் திருப்தி செய்திருக்க முடியும். (கூட்டணி மாற்றம் இதனால்தான் என நான் கூற வரவில்லை)
பா ம க வின் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் சந்தித்த, சந்திக்கும் மிகப்பெரிய கேள்வி - சன்டிவியை மட்டும் ஏன் தார் பூசாமல் விட்டுவைத்திருக்கிறீர்கள் - நிச்சயம் அவர்களுக்கு சன்டிவியால் தர்மசங்கடம்தான்; அவர்களின் கொள்கைக்கு பின்னடைவுதான்.
சன் செய்திகளுக்கு, விளையாட்டுச் செய்திகள் என்றாலே சச்சின் மட்டும்தான் (சமீப காலமாக சானியா மிர்ஸா). அதேபோல, ஜெயலலிதாவைத் திட்டாத வரையில் காங்கிரஸ் என்றால் சோனியா மட்டும்தான். அதுசரி, காங்கிரஸில் வேறு யார் பெயரைத் தெரிந்துவைத்டுத்தான் என்ன ஆகப்போகிறது?
சரி கட்சிகளை விட்டுவிடுவோம், சாதாரண, கட்சி சாராத பொது மக்களைப் பார்ப்போம். (என்னைப்போன்ற ஒரு ஜந்து). மதுரை மாவட்டத்தில் டி கல்லுப்பட்டிக்கு அருகிலிருக்கும் சிற்றுரில் தண்ணீருக்காக மக்கள் (சுமார் 5 பேர்) திடீரென (சன் காமெராவைப்பார்த்ததும்) சாலை மறியலில் ஈடுபட்டதை செய்தி என்றே வைத்துக்கொள்வோம்.. இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் பரபரப்பு நிலவியது எனும்போது, அந்த ஊருக்கு அருகிலேயே இருக்கும் எனக்கு ஏன் பரபரபரப்பு வரவில்லை என்ற கேள்வி என் மனத்தில் எழாதா? நிஜமான போராட்டத்துக்கும் நிஜமான பரபரப்புக்கும் மரியாதை குறைந்ததுதான் மிச்சம்.
கலைஞர் கைது விவகாரம் நிச்சயமாக ஒரு அனுதாப அலையாக உருவெடுத்திருக்க வேண்டிய விஷயம். ஆனால் அந்த 2 நிமிட ஒளித்துணுக்கை இதுவரை குறைந்தபட்சம் 2000 முறையாவது ஒளிபரப்பி செய்திகளுக்கு முன் காண்பிக்கப்படும் கடிகாரம் ரேஞ்சில் ரிபீட் செய்து அந்த அஸ்திரத்தைப் பயனிழக்கச் செய்ததுதான் நடந்தது.
மொத்தத்தில், ஒரு பிரம்மாஸ்திரமாக இருந்திருக்கவேண்டிய சன்டிவி, முனை மழுங்கிய குண்டூசியாகத்தான் இப்போதைக்கு இருக்கிறது.
உங்கள் கருத்து?
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 9 பின்னூட்டங்கள்
Mar 1, 2006
தேர்தலுக்குத் தயாராகிறது ப ம க (01Mar06)
ப ம க பொதுக்குழு நேற்று இரவு சற்றேறக்குறைய இரண்டு மணிக்கு அனைவரும் தூங்கியிருந்த நேரத்தில் கூடியது. நாட்டு நிலவரம் பற்றியும், வரவிருக்கும் தேர்தலில் எதுபோன்ற அணுகுமுறையைக் கையாண்டு ஆட்சியைக்கைப்பற்றுவது போன்ற பல விஷயங்களும் விவாதிக்கப்பட்டன.
இ து பொ செ: தலைவரே, நம்ம கட்சி இந்தத் தேர்தல்லே போட்டியிடப்போகுதா இல்லியா? நேத்து ஆரம்பிச்ச கட்சியெல்லாம் கூட இரண்டில் ஒரு கூட்டணியிலே ஐக்கியம் ஆயிடுச்சி. ஆனா நம்ம நிலைமைய பாருங்க.. வலை மக்களுக்கே நம்ம கொ ப செ யாருன்னு தெரியாத அளவுக்கு கட்சியை மறக்கடிச்சுட்டோம்..
நிறுவனர் - தலைவர்: அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க, நாம லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்..
இ து பொ செ: (முணுமுணுப்பாக) ஆமா.. இந்த ரஜினியத்தான் சொல்லணும்.. இப்படி ஒரு டயலாக்க பிரபலப்படுத்தி, சோம்பேறிங்களை வளர்த்து விட்டுட்டாரு. (சத்தமாக) சரி நாம எந்தக்கூட்டணியிலே சேரப்போறோம்?
த: நமக்கு இதுவரை எந்தக்கூட்டணியிலிருந்தும் அழைப்பே வரவில்லையே. "கதவுகள் திறந்துதான் இருக்கின்றன"ன்னு அறிக்கை கூட விட்டுப்பாத்துட்டோம்..
இ து பொ செ: நாம இந்த மாதிரி பெரிய கட்சி ரேஞ்சிலயெல்லாம் பேசலாமுங்களா? நம்ம பலத்தை பத்தி நமக்கே தெரிய வேணாம்? ஒரு தொகுதியிலயாவது டெபாஸிட்டை வாங்க முடியுமா நம்மாலே?
த: நம்ம கட்சியைப்பற்றி இவ்வாறு பேசினால் கட்டம் கட்டிவைக்கப்படுவீர்கள் என எச்சரிக்கிறேன்.
இ து பொ செ: அட நமக்குள்ளேதானே தலைவரே.. அவன் அவன் பத்துத் தொகுதி என் பாக்கெட்டுலே, அஞ்சு தொகுதி என் லாக்கெட்டுலேன்னு ராக்கெட்டுலே பறந்துகிட்டிருக்கான்.. நாம என்ன சொல்றது..
த: நாம நிச்சயமா ஜெயிக்கக்கூடிய தொகுதின்னு இல்லாட்டியும், 234 தொகுதியிலயும் வெற்றி வாய்ப்பை நிர்ணயம் பண்ணப்போறது நாமதானே..
இ து பொ செ: அதெப்படிங்க?
த: எல்லாத்தொகுதியிலயும் பரவலா நமக்கு ஒரு நாலு - அஞ்சு ஓட்டு இருக்குதுன்னு வச்சுக்குவோம். தேர்தல் முடிவுலே 4 - 5 ஓட்டு வித்தியாசம் வந்தா அந்த முடிவை நிர்ணயம் பண்ணது நாமதானே.. இப்பவே பாருங்க, இந்த வார வலைத் தேர்தல்லே நம்ம வாய்ஸ் கொடுத்ததால்தானே ரோஜா அணிக்கு அமோக வெற்றி..
இ து பொ செ: அதை அவங்க ஒத்துக்கணுமே.. எங்களை ஆதரித்த மு மு க, க ச க, ய ப க, ப ம க, ஜ ஜ க மற்றும் கோ கு கவுக்கு நன்றின்னு கலைஞர் ரேஞ்சிலே அறிக்கை விட்டாங்கன்னா?
த: சரி அதை அப்ப பாத்துக்கலாம். புதிய ப ம க நம்ம கூட்டணியிலேதானே இருக்கு..
இ து பொ செ: அவ்ரு கட்சி ஆரம்பிச்சதே உங்களை எதிர்த்துத்தானே.. அவர் எப்போ வேணும்னாலும் வெளிய போயிடுவாரு.
த: நீங்க என்ன நெகடிவ்வா பேசறதுதான் நேர்மைன்னு நெனச்சுகிட்டிருக்கீங்களா? அதெல்லாம் அவர் போக மாட்டார், நான் சென்டிமெண்டலா பேசி கரெக்ட் செய்துடறேன்.
இ து பொ செ: நீங்க சென்டியா பேசுங்க, அவர் நம்மள மெண்டலாக்கிட்டு போயிடுவாரு. அவரை நிறுத்தி வைக்கணும்னா ஒரே வழி, சின்ன முகமூடிய கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்க.
த: நானும் பாத்துகிட்டுத்தான் இருக்கேன், உங்களுக்கு தைரியம் அதிகமாகிகிட்டே வருது. கூட்டணிக்கட்சிக்காரங்க தியாகம் பண்ணாட்டாலே எனக்குக் கோபம் வரும்.. நீங்க நம்ம கட்சியிலே இருந்துகிட்டே இப்படிப்பண்றீங்கன்ன உங்களுக்கு என் இதயத்துலே இடம் குடுக்கறதைத் தவிர வேற எதுவும் பண்ண முடியாது.
இ து பொ செ: அப்புறம் நீங்க புத்தம் புதிய ப ம கவையும் எதிர்நோக்கவேண்டியிருக்கும். சரி சரி நமக்குள்ளே எதுக்கு பிரச்சினை. நம்ம அணுகுமுறையை சொல்லுங்க.
த: அப்படிக்கேளுங்க, நம்ம திட்டங்களை சொல்றேன். முதல் திட்டம், மகாபாரதக்கட்சின்னு ஒன்னு இருக்காமே, அது கூடக் கூட்டணி வைக்கணும். அப்புறம், ராமயணக்கட்சி, ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கட்சி, தென்கச்சி சுவாமிநாதன் கட்சி இதையெல்லாம் நம்ம கூட்டணியிலே வளைச்சிப் போடணும்.
இ து பொ செ: எதுக்கு?
த: தெரியலையா, அதுனாலதான் நான் தலைவன்! எலக்ஷன் நேரத்துலே எல்லாப் பேச்சாளர்களும் குட்டிக்கதை சொல்லுவாங்க இல்லையா?
இ து பொ செ: ஆமாம்,
த: எதிலே இருந்து சொல்லுவாங்க? ராமயணம், மகாபாரதம், பரமஹம்ஸர் விட்டா தென்கச்சி - இங்கே இருந்துதான அவங்க கதைய சொல்ல முடியும்?
இ து பொ செ: அதனாலே?
த: நம்ம கூட்டணியிலே இந்தக்கட்சியெல்லாம் இருக்கரதாலே, நாம எலக்ஷன் கமிஷன்கிட்டே சொல்லி வேற யாரையும் குட்டிக்கதை சொல்ல முடியாம தடுத்தடலாம் இல்லயா? அவங்களோட பிரசார உத்தியை தவிடுபொடி ஆக்கிடலாமே!
இ து பொ செ: அது சரிதான். மத்த பிரசார உத்தியெல்லாம்?
(மற்றப் பிரசார உத்திகளை பொதுக்குழுவில் இருந்த மற்ற தோழர்கள், தலைவர் ஆகியோர் தொடர்வார்கள்)
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 7 பின்னூட்டங்கள்